தமிழ் இனத்தின்
விடுதலைப் பசிக்கு,
தன்னுயிரை
மெல்ல மெல்லத்
தின்னக்கொடுத்து,
ஈழக் கனவை
நிலத்தில் விதைத்து,
சொட்டு நீரும் அருந்தாமல்
உண்ணா நோன்பிருந்து
உயிர் நீத்து,
அறத்தையும் மறத்தையும்
காண்பித்துப் போன
ஈகத்தின் பெருஞ்சுடர்
தமிழ்ச் சமூகத்தின் அறிவுச்செயல்பாட்டுத் தளத்தில் மிகத்தீவிரமாக இயங்கியவர்களுள் அறிஞர் தொ.பரமசிவன் குறிப்பிடத்தக்கவர். தமிழின் செவ்வியல் மரபுகளில் காணலாகும் பண்பாட்டுப் பொருண்மைகளைத் தமிழியல் ஆய்வுகளாக எடுத்துரைக்கும் போக்கிலிருந்து அறிஞர் தொ.பரமசிவன் அவர்களது பேச்சுகளும் எழுத்துகளும் வேறாகவே இருந்தன.
அதாவது, நாட்டுப்புற வழக்காற்றியல் மரபுகளில் பொதிந்திருக்கும் பண்பாட்டு அசைவுகளின் அழகியலையும், அவற்றின் நுண் அரசியலையும், அதனதன் வேர்த் தடங்களையும் எடுத்துரைக்கும் ஆய்வுத் திசைவெளிகளையும் வழிமுறைகளையும் தொ.ப அவர்களின் அறிவுச்செயல்பாடுகள் காண்பித்திருக்கின்றன. குறிப்பாக, தமிழ்ச் சமூகத்தின் பன்மைப் பண்பாட்டுக் கோலங்களைப் பண்பாட்டியல் தமிழியலாகக் கட்டமைக்க வேண்டியதன் தேவையை உணர்த்தியிருக்கின்றன.
தமிழர்களின் நாட்டுப்புறப் பண்பாட்டு மரபுகள் நிறுவனப்படுத்தப்பட்டிருக்கும் செவ்வியல் மரபுகளைப் போல அல்லாமல், நாட்டுப்புறத்துத் தமிழர்களைப் போலவே மிக எளிமையானவை; வெள்ளந்தியானவை; பாசாங்கற்றவை. ஆனாலும், செவ்வியல் மரபுகளிலிருந்தும் - வைதீக ஆரிய மரபுகளிலிருந்தும் மிகமிக வேறுபட்டதும் எதிரானதுமான பண்பாட்டு உயிர்ப்பை நாட்டுப்புற மரபுகள் கொண்டிருக்கும் பாங்கை மிக எளிதாகவும் நுணுக்கமாகவும் எடுத்துரைத்ததில் தொ.ப அவர்கள் தனித்துவமான புலப்பாட்டு நெறிகளையே கொண்டிருந்தார்.
தமிழ்ச் செவ்வியல் மரபுகளை வைதீக ஆரிய மரபுகள் மெல்லமெல்ல தன்வயப்படுத்திக்கொண்டிருக்கும் சூழலில், நாட்டுப்புற மரபுகளில் எஞ்சி நிற்கும் பண்பாட்டு வடிவங்களில் காணலாகும் வைதீக ஆரிய மரபுகளுக்கெதிரான கூறுகளைத் தக்கவைப்பதும் மறுகட்டமைப்பு செய்வதுமான பண்பாட்டு அரசியல் செயல்பாட்டை அறிவுத்தளத்திலும் வெகுமக்கள் தளத்திலும் பரவலாக முன்னெடுக்க வேண்டியதன் தேவையைத் தமிழ்ச் சமூகத்தில் பரவலாக்கியவர்களுள் முதன்மையானவர் தொ.ப அவர்கள்தான்.
தமிழியல் ஆய்வுகளிலும், தமிழ்ப் பண்பாட்டியல் ஆய்வுகளிலும் பல அறிஞர் பெருமக்கள் தத்தமது அறிவுச் செயல்பாட்டுப் பங்களிப்பைச் செவ்வனே செய்திருக்கின்றனர். ஆனாலும், அவரவர் ஆய்வுத் தடங்களில் - அறிவுச் செயல்பாட்டுத் தளங்களில் அடுத்தடுத்த இளம் தலைமுறையினரைப் பங்கேற்க வைத்ததில் நிறைய போதாமைகள் இருந்திருக்கின்றன. அதேவேளையில், பண்பாட்டுத் தமிழியலின் அறிவுச் செயல்பாட்டுத் தளத்திற்குள் மிகப்பெருவாரியான இளம் தலைமுறையினரை அடுத்தடுத்துப் பங்கேற்கச் செய்ததிலும், அவர்களுக்கெல்லாம் மிக ஈடுபாட்டோடு வழிகாட்டி ஊக்கப்படுத்தியதிலும் தொ.ப அவர்களின் பங்களிப்பு மிக அதிகப்படியாகவே இருந்திருக்கிறது. தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டியல் ஆய்வுகளை மிகப் பலரும் இப்போது முன்னெடுத்துக்கொண்டிருப்பதற்கான உந்துதலைத் தொ.ப அவர்களிடமிருந்தே பெற்றிருக்கக் கூடும். அந்தளவுக்கு இளம் தலைமுறையினரோடு பண்பாட்டு உரையாடல்களைத் தொடர்ச்சியாக முன்னெடுத்து வந்திருக்கிறார் தொ.ப.
திராவிட இயக்கங்களின் அரசியல் செயல்பாடுகளோடும், பெரியார் அவர்களின் கருத்தியல் செயல்பாடுகளோடும் தொ.ப அவர்கள் பற்றுதலோடு பயணித்து வந்திருந்தாலும், அதன் அரசியலை ஆதரித்து வந்திருந்தாலும், திராவிட இயக்கங்களின் அரசியல் கண்ணோட்டத்திலிருந்தும் - பெரியாரியக் கண்ணோட்டத்திலிருந்தும் வேறுபட்டதான - முரண்பட்டதான கண்ணோட்டத்தைக் கொண்டிருந்தவர்தான் தொ.ப.
தமிழர்களின் பண்பாட்டு மரபுகளை - பன்மைப் பண்பாட்டுக் கோலங்களுக்குள் நிலவுகிற சமூக அசைவியக்கங்களைச் செவ்வியல் மரபுக் கண்ணோட்டத்திலிருந்தும் வைதீக ஆரிய மரபுக் கண்ணோட்டத்திலிருந்தும் வேறுபடுத்திக் காட்டும் அதேவேளையில், திராவிட இயக்கங்களின் - பெரியாரியக் கண்ணோட்டங்களிலிருந்தும் வேறுபடுத்திக் காட்டியதிலும், தமிழர்களின் பண்பாட்டு அசைவியக்கங்கள் குறித்த திராவிட இயக்கங்களின் - பெரியாரியத்தின் கண்ணோட்டப் போதாமைகளையும் தொ.ப அவர்கள் எடுத்துரைக்கவும் தவறவில்லை.
வைதீக ஆரிய மரபுகளின் அதிகாரப் பரவலாக்கத்திற்கு எதிராகவும், தமிழர்களின் பண்பாட்டு மரபுகளைத் தன்வயப்படுத்திச் சிதைக்கும் வைதீக ஆரிய மரபுகளுக்கு எதிராகவுமான தமிழ்ச் சமூக அரசியல் செயல்பாட்டுக் களங்களுள் திராவிட இயக்கங்களையும் - பெரியாரியச் செயல்பாட்டுக் களங்களையும் பெரும் நம்பிக்கையுடன் அணுகி வந்திருக்கும் தொ.ப அவர்களின் அறிவுச் செயல்பாடுகள், திராவிட இயக்கங்களின் - பெரியாரியத்தின் அறிவுச் செயல்பாடுகளையும் அரசியல் செயல்பாடுகளையும் விமர்சிக்கத் தவறியதுமில்லை. திராவிட இயக்கங்களைக் கலைத்துவிட வேண்டும் என்று தொ.ப அவர்கள் கூறுவது கூட, திராவிட இயக்கங்கள் அரசியலாய் நீர்த்துப்போயிருப்பதனால்தான்.
அதேவேளையில், தமிழ்ச் சமூகத்தில் வலுப்பெற்றுக்கொண்டிருக்கும் தமிழ்த் தேசிய அரசியல் செயல்பாடுகளையும், தமிழ்த் தேசியத்திற்கான அறிவுச்செயல்பாடுகளையும் மிகத் தீவிரமாக ஆதரித்தே வந்திருக்கிறார். தமிழ்த் தேசிய அறிவுச் செயல்பாட்டுக்கான பல்வேறு வழிகாட்டல்களையும் அளித்துக்கொண்டேதான் இருந்திருக்கிறார். அதாவது, தமது பண்பாட்டியல் ஆய்வுகளின் மூலமும், பண்பாட்டு உரையாடல்களின் மூலமும் தமிழ்த் தேசியப் பண்பாட்டியல் வரைவுக்கான அறிவுச்செயல்பாட்டுப் பங்களிப்பைத் தந்தபடியேதான் இருந்திருக்கிறார்.
அறிஞர் தொ.ப அவர்களோடு நிகழ்ந்த உரையாடல்கள் யாவும், அறிவுச் செயல்பாட்டுத் தளத்திற்கான - பண்பாட்டு அரசியலுக்கான மிக எளிதான நுண்திறப்புகளைக் கொண்டிருக்கக் கூடியவை. அந்தவகையில், அன்புத்தோழரும் ஊடகவியலாளருமான தயாளன் அவர்கள், அறிஞர் தொ.ப அவர்களுடன் நிகழ்த்தியிருக்கும் ஓர் உரையாடல் சந்திப்பை நேர்காணல் வடிவத்தில் நூலாக்கம் செய்திருக்கிறார்.
தொ.ப அவர்களின் இறுதிக் காலப்பகுதியில் அவரோடு நிகழ்த்தப்பட்டிருக்கும் இந்த உரையாடல்கள், தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டு அரசியலையே மிக அழுத்தமாக வலியுறுத்துகின்றன. குறிப்பாக, வைதீக ஆரிய மரபுகளுக்கு எதிரான குரலையே உரக்கப் பேசுகின்றன. அதோடு, சாதியற்ற தமிழ்ச் சமூகம் உருவாக வேண்டும்; உருவாகும் என்கிற வேட்கையையும் வெளிப்படுத்தியிருக்கின்றன.
தமிழ்ப் பண்பாட்டு வரைவியலின் முன்னத்தி ஏரான அறிஞர் தொ.ப அவர்களோடு நிகழ்த்திய இவ்வுரையாடல்களை நூலாகக் கொண்டுவருகிற தோழர் தயாளன் அவர்களுக்குத் தமிழ்ச் சமூகம் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறது. இந்நூலைப் பதிப்பித்துச் சிறப்பித்திருக்கும் யாப்பு வெளியீடு செந்தில் வரதவேல் அவர்களுக்குப் பாராட்டுகள்.
தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டு அரசியல் உரையாடல்களுக்கு இச்சிறு நூலும் உதவும் என்றே பெரிதும் நம்புகிறேன்.
தோழமையுடன்
முனைவர் ஏர் மகாராசன்,
மக்கள் தமிழ் ஆய்வரண்.
*
சாதியற்ற சமூகம்
உருவாகுமென நம்புகிறேன்: அறிஞர் தொ.பரமசிவன் நேர்காணல்,
தயாளன்,
யாப்பு வெளியீடு, சென்னை,
முதல் பதிப்பு, செப்தம்பர் 2022,
விலை: உரூ 50/-
நூல் வேண்டுவோர்
தொடர்புக்கு:
செந்தில் வரதவேல்
90805 14506.