மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் எழுதிய நூல்கள் அனைத்தையும் மீள் பதிப்பாக்கம் செய்து, பாவாணரியல் எனும் கோட்பாடாய் முன்வைக்கும் பெருமுயற்சியை உலகத் தமிழ்க் கழகம் முன்னெடுத்தது. பாவாணரியல் நூல்கள் முன் வெளியீட்டுத் திட்டத்தையும் அறிவித்திருந்தது.
தமிழ்ச் சமூகத்தின் தலைநிமிர்வுக்கு, பாவாணரியமே கோட்பாட்டு அறிவாயுதம் என்பதை உணர்ந்திருந்த யாம், அத்திட்டத்திற்குப் பலரின் பங்களிப்பைப் பெற்று, உரூ மூன்று இலட்சம் தொகையை நூல் பதிப்பாக்கத்திற்கு வழங்கினேன். கிட்டத்தட்ட 50 பேர் வரையிலும் முன் வெளியீட்டுத் திட்டத்தில் இணைத்திருந்தேன். பதிப்பாக்கத்தின் போது சில பல காரணங்களால் நூல்கள் வெளிவருவது காலத்தாழ்வானது. எனினும், காலத்தாழ்வைப் பொறுத்துக்கொண்டனர் அன்பர்கள். கடந்த ஒரு மாதமாக, முன்வெளியீட்டுத் திட்டத்தில் தொகை செலுத்தியவர்கள் அனைவருக்கும் நூல்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.
உலகத் தமிழ்க் கழகம் பதிப்பித்த பாவாணரியல் நூல்கள் வெளியீட்டு விழா, மதுரையில் பாவாணர் மணிமண்டபத்தில் 18.06.2023இல் நடைபெற்றது. நிகழ்வில், நூல் பதிப்பாக்கத்தில் பெருந்துணை புரிந்தமைக்காக எம்மைப் பாராட்டி நினைவுப் பரிசை வழங்கியது உலகத் தமிழ்க் கழகம். சூலூர் பாவேந்தர் பேரவைத் தலைவர், புலவர் செந்தலை கவுதமன் அய்யா அவர்கள் நினைவுப் பரிசு வழங்கினார். பாவாணரியல் நூல்களை அறிஞர் பெருமக்களுடன் சேர்ந்து வெளியிடும் வாய்ப்பையும் உலகத் தமிழ்க் கழகம் தந்தது.
இவ்வாய்ப்பை வழங்கிய உலகத் தமிழ்க் கழகத் தலைவர் அய்யா நிலவழகன், பொதுச்செயலர் அய்யா இளந்திரையன் மற்றும் உதக பொறுப்பாளர்கள் அனைவருக்கும் பேரன்பும் நன்றியும். பாவாணரியல் நூலாக்கப் பணியில் துணை நின்ற அனைவருக்கும் மிக்க நன்றி. பாவாணரியல் நூல் வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொண்ட அன்பர்கள் அனைவருக்கும் பேரன்பு நன்றி.
பாவாணரியல் கற்போம்.
ஏர் மகாராசன்
*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக