மகாராசன் மாணவராயிருந்த பொழுதே கருத்தியல் களமாடியவர். ஈழம் குறித்தக் கரிசனமும் அடித்தள விளிம்புநிலை ஆய்வுப் பார்வையும் மீதூரப் பெற்றவர். கவிதை, திறனாய்வு, ஆய்வு, பண்பாட்டுச் செயல்பாடு, இதழியல், கல்வி எனப் பன்முக ஆளுமையாக மிளிர்பவர். கலாநிதி கா.சிவத்தம்பி வார்த்தைகளில் சொன்னால் பண்பாட்டுச் செயற்பாட்டாளர். மகாராசனின் அண்மைக் கவிதைத் தொகுப்பு 'நிலத்தில் முளைத்த சொற்கள்'.
இவரின் முதல் கவிதைத்தொகுப்பு 'சொல் நிலம்' (2017). இவருக்கு நிலம் தான் எல்லாமும். நிலத்தின் மக்கள் குறித்த அக்கறையும் ஆதங்கமுமே இவரின் கவிதைகள். பிரபஞ்சத்தின் ஆதித்தாய் நிலம். உயிர்களும் பயிர்களும் இவற்றின் இயங்கு நிலையும் நிலத்திலேயே கால்பாவி நிற்கின்றன.
இந்தக் கவிதைகள் யாவும் எளியவைதாம். எனினும் வலியவை. நேர்கோட்டுக் கவிதைகள் என்றாலும் கிடைமட்ட, செங்குத்துப் பார்வைக் கோணங்களைக் கொண்டவை.
நீரும் நிலமும் ஆதிப் பொது அதிசயங்கள். இவை அதிகாரத் தூண்டில்களுக்கு அகப்பட்ட வரலாற்றை, உரிமையுடைய மனிதர்கள் அகதிமையாக்கப்பட்ட வரலாற்றை இந்த நிலத்தில் முளைத்த சொற்கள் சித்திரப்படுத்துகின்றன.
"அண்டத்தின் ஆதியை உணர்ந்து / மூதாதைகளின் தொன்மங்களைத் தேடி / தொல் நிலத்தில் வேர்கள் பாய்ச்சி / உறவுக் கிளைகள் சேர்த்து / பேரிசைப் பண்கள் பாடி / மூச்சுக்காற்றை நிறைத்து / ஐந்திணைகளின் காமம் சுவைத்து / வழியெங்கும் கால் தடம் பதித்து / நீர்மையாய் வழிந்தோடும் / சொற்களால் நனைந்து நனைந்து / பசப்படித்தது நிலம் / கருப்பம் கொண்ட / பிள்ளைத்தாய்ச்சியாய் / உயிர்த்தலைச் சுமக்கின்றன/ நிலம் கோதிய சொற்கள்" எனத் தொடங்கி நிலத்தின் பன்முகப் பரிமாணங்களைக் கவிதைகளாகத் தருகிறார். இனம், மொழி, சாதி, பால், வர்க்கம் ஆகியவற்றை நிலத்தினொடு நிறுத்தி விவாதிக்கின்றன இக்கவிதைகள்.
'மண் மீட்டிய வேர்களின் இசை' என்றும், 'நிழலை அள்ளிப் பருகிக் கொண்டது உச்சி வெயில்'' என்றும், 'நீர் முலைத் தாய்ச்சிகள்' என்றும், செம்மூதாய்த் தொல் நிலம்' என்றும், 'ஒற்றைச் செம்போத்தின் நெடுங்கூவல்' என்றும், 'மழைக்காலத்தின் களவுப்பூ' என்றும் நிலத்தின் சொற்கள் விதவிதமாய் விரிகின்றன.
கருத்தியல் தெளிவும் அழகியல் நளினமும் அரசியல் கூர்மையும் மகாராசனின் கவிதையியலாக அமைகிறது.
மலைத்தாய்ச்சி, நிலத்தாய்ச்சி, கடல்தாய்ச்சி, மரத்தாய்ச்சி.. என்றெல்லாம் மிக இயல்பாக இவர் எழுதிச் செல்கிறார். மனிதர்களை மட்டுமல்ல சக உயிர்களோடு உயிரற்ற இயற்கைப் படைப்புகளையும்கூடத் தாயாக, உயிராகப் பார்க்கும் இந்த உயிர் நேயம் தமிழர் தொல்மரபின் நீட்சி.
தொகுப்பு முழுக்க உழுகுடிகளின் உயிர் அசைவு நுணுக்கமாகப் பதிவாகி உள்ளது.
'உழுகுடிப் பாதங்களின் கொப்புளங்கள் / நிலமெனும் ஆத்மாக்களின் / அழுகைத் துளிகள் / கால்கள் நோகவும் / கொப்புளங்கள் பூக்கவும் / அரத்தம் கசியவும் நடந்த பாதங்கள் / பசி தீர்க்கும் ஒளி நிலங்கள் / உயிர் நோகும் நிலத்தின் அழுகையை / கால் தோய நடந்து நடந்து / நைந்து போயிருக்கும் / உயிர்ச்சாமிகள்'.
நிகழ் வாழ்வின் பெரும் சிக்கல்களையும் இவரின் கவிதைகள் கவனப்படுத்துகின்றன.
"ஊருக்குள்ளிருந்த மச்சு வீட்டையும் / சேரிக்குள்ளிருந்த குச்சுக் குடிசையையும் / வாரிச் சுருட்டிக் கொண்டு / ஊரையும் சேரியையும் / ஒன்றாக்கி விட்டுப் போயிருக்கிறது / இந்நிலத்துப் புயல் மழை'.
"கண்களில் பூத்திருந்த / மகரந்தத் தூள்களை அப்பிக்கொண்ட / பூஞ்செடி இதழ்களில் தேன் பருகி / திக்குகளில் பறந்து திரிந்தன / வண்ணத்துப் பூச்சிகள் / கீகாட்டுப் பூக்களும் / மேகாட்டுப் பூக்களும் / அணைத்து மணத்துக் கூடிக் கிடந்தன / வனப்பேறிய வாஞ்சையோடு / பிஞ்சுகளை ஈனுகின்றன / நிறைசூலிப் பூக்கள்.
விதை நெத்துக்களின் காலடியில் / மக்கிக் குவிந்திருக்கிறது / மனித வாழ்வின் சாதி ஆணவம்". இந்தக் கவித்தெறிப்பு மகாராசனின் மானிட நோக்கை உணர்த்தும்.
மருதநில மக்கள் வாழ்வை மட்டுமல்ல, மனித குலத்தின் ஒட்டுமொத்த வாழ்வையும் நிலத்தின் சொற்களில் கவிச்சித்திரங்களாக்கி உள்ளார். மொழியின், இனத்தின் வலியை, வாழ்வை, வதையை, வளத்தை, வலிமையை நிலத்தில் வேரூன்றி விதைச் சொற்களாக்கி விடுகிறார்.
முனைவர் இரா.காமராசு,
பேராசிரியர் மற்றும் தலைவர்,
நாட்டுப்புறவியல் துறை,
தமிழ்ப் பல்கலைக்கழகம்,
தஞ்சாவூர்.
*
நன்றி:
*
நிலத்தில் முளைத்த சொற்கள்,
மகாராசன்,
யாப்பு வெளியீடு,
பக்கங்கள் - 112,
விலை: ரூ100/-
(அஞ்சல் செலவு உட்பட).
புத்தகம் தேவைக்கு
பேச : 9080514506
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக