செவ்வாய், 1 மார்ச், 2016

புதைகாட்டில் மறைந்திருக்கும் தொல்லியல் தடயங்கள்: கல்வட்டங்கள், தாழிகள் குறித்த கள மேலாய்வுப் பதிவும் இலக்கியக் குறிப்புகளும் :- மகாராசன்

                                     







மதுரை அருகே கி.மு 3ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 1ஆம் நூற்றாண்டுக்கு இடையிலான பழங்கால முதுமக்கள் தாழிகள் புதைந்திருக்கும் ஈமக்காடு கண்டறியப்பட்டுள்ளது.

  மதுரை மாவட்டம், தெற்கு வட்டம், அயன்பாப்பாகுடி உட்கிடையில் அமைந்திருக்கும் சின்னஉடைப்பு எனும் சிற்றூரின் கண்மாய் அருகே பழங்கால ஈமச் சின்னங்களான முதுமக்கள் தாழிகள் புதைந்திருப்பதைக்  கள மேற்பரப்பாய்வு மேற்கொண்ட மக்கள்தமிழ் ஆய்வரண் நிறுவனர் முனைவர் மகாராசன் கண்டறிந்துள்ளார். அதன் கள ஆய்வுப் பதிவறிக்கை பின்வருமாறு:
   மதுரையிலிருந்து 10 கி.மீ தொலைவில் உள்ள மதுரை வானூர்தி (விமான) நிலையம் அருகே அமைந்திருக்கும் ஊர் சின்னஉடைப்பு ஆகும்.  இவ்வூரின் கண்மாய் அருகே பழங்கால முதுமக்கள் தாழிகள், ஈமச் சின்னங்கள் நிறைந்த ஈமக்காடு எனப்படும் புதைமேடு கண்டறியப்பட்டுள்ளது.  
இறந்தவர்களின் உடல்களை மண்ணுக்குள் புதைப்பது அல்லது எரியூட்டுவது என்ற முறையில் அடக்கம் செய்யும் வழக்கம் நம் சமூகத்தில் இருந்து வருகின்றது.  ஆனால், பழங்காலத்தில் இறந்தவர்களின் உடல்களை மண்ணுக்குள் புதைக்கும் முறையே பெருவழக்காக இருந்திருக்கிறது.  இதனைத் தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் நடைபெற்ற ஈமச்சின்னங்கள் குறித்த அகழாய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.  தற்போது சின்னஉடைப்பில் கண்டறியப்பட்டுள்ள ஈமச்சின்னங்களும் இறந்தவர்களின் உடல்களைப் புதைக்கும் வழக்கத்தைக் கொண்டிருக்கின்றன.
இறந்தவர்களின் உடல்களைப் புதைக்கும் பண்பாட்டு வழக்கம் மிகப் பழமையான காலத்திலிருந்தே காணப்படுகின்றது.  இறந்தவர்களின் உடல்களைப் புதைப்பதற்குப் பல முறைகள் கையாளப்பட்டுள்ளன.  அவற்றுள் குறிப்பிடத்தக்க ஒன்று, ‘தாழி’ என்பதற்குள் இறந்தவர்களின் உடல்களை வைத்துப் புதைக்கும் பண்பாட்டு வழக்குமுறை ஆகும்.  இது தமிழ்நாட்டின் பல பகுதிகளில் பரவலாகக் காணப்பட்டுள்ளது.
 ‘‘தாழியை ‘முதுமக்கள் தாழி’ எனவும் குறிப்பர்.  இத்தகைய முதுமக்கள் தாழியைத் தரை மட்டத்திற்கு மேல் எவ்வித அடையாளமும் இல்லாமல் நிலத்திற்குக் கீழே புதைத்து வைக்கும் வழக்கத்தைப் பழங்கால மக்கள் மேற்கொண்டிருக்கின்றனர்.  தாழியை மண்ணுக்கடியில் வைப்பதற்கு முன்பாக அதன் உருவத்திற்குச் சிறிதளவு பெரியதாக ஓர் ஆழமான குழியைத் தோண்டிய பின்னர் தாழியை உள்ளே வைத்து, அதன் பின்னர் குழியின் அரைப்பாகத்திற்குக் கீழே தாழியைச் சுற்றிலும் ஈமப் பொருட்கள், இறந்தவர்கள் பயன்படுத்திய புழங்கு பொருள்கள், அணிமணிகள், கருவிகள், இன்னும் சில இதர பொருட்களையும் வைத்ததற்குப் பின்பாகத் தாழி வெளியே தெரியாமல் மண்ணால் மூடப்படும்.  சிலவகையான தாழிகளில் மண் நிரப்பப்படுவதற்கு முன்பாகவே எலும்புகளும் மற்ற வகையான ஈமப் பொருட்களும் வைக்கப்படுவதுண்டு. இவ்வாறாக ஈமப் பொருட்கள் வைக்கப்பட்ட பின்னர், குழியில் குழிக்காகத் தோண்டிய மண்ணைக் கொண்டோ அல்லது வேறு இடத்திலிருந்து கொண்டு வந்த மண்ணைக் கொண்டோ குழி தரைமட்ட அளவிற்கு நிரப்பப்பட்டிருக்கும்.   இதைத்தான் தாழி அல்லது முதுமக்கள் தாழி எனச் சொல்லப்படுகிறது.
நிலத்தைத் தோண்டி ஓர் ஆழமான குழியை ஏற்படுத்தி, அக்குழிக்குள் தாழியுடன் ஈமப்பொருட்களை வைத்ததற்குப் பின்பாக மண்ணைக் கொண்டு மூடி, தரைமட்டத்திற்கு  மேலே மண்ணைக் குவியலாகக் குவித்து வைப்பர்.  இதனையே மண்குவைப் புதைமேடு என்பர். 
 தாழியை நிலத்திற்குள் புதைத்து மூடியதற்குப் பின்பாக மண்குவியலுக்குப் பதிலாகச் சல்லிக்கற்களைக் குவித்து வைப்பர்.  இதனைக் கற்குவைப் புதைமேடு என்பர்.
  இவையில்லாமல், ஒரு தாழியையோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட தாழிகளையோ நிலத்துக்கடியில் புதைத்துவிட்டு அதனைச் சுற்றிலும் வட்டமாகக் கற்களைக் கொண்டு நடுவர்.  இதனைக் கல்வட்டங்கள் அல்லது கல்திட்டைப் புதைமேடு என்பர்.  இவ்வாறான கல்வட்டங்கள் நடுவே அடையாளக் கல் வைக்கும் வழக்கமும் இருந்திருக்கிறது. அடையாளக் கல் இல்லாமலும் கல்வட்டப் புதைமேடுகள் அமைக்கப்படுவதுண்டு. 
இறந்தோரைப் புதைப்பது தமிழர் மரபு. அவ்வாறு தமிழரைப் புதைத்த இடங்கள் பல அகழாய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றை ஈமக்குழிகள் என்பர். இவற்றைக் கற்பாறைகளைக்கொண்டு மூடிவைத்துப் பாதுகாக்கும் வழக்கம் இருந்துள்ளது. மூடப்படும் கல்லின் அளவு, மூடப்பட்ட விதம் ஆகியவற்றைக்கொண்டு இவற்றைக் கல்படை, கல் அறை, கல்குவை, கற்கிடை, கல்வட்டம், கல்திட்டை என்ற பெயர்களால் அழைக்கின்றனர். ஒருவகையில் இறந்தோர் உடலைப் பதுக்கி, மறைத்து, புதைத்து வைப்பதால் இவற்றைப் பதுக்கைகள் என்று பொதுப்பெயரால் சுட்டினர். கல்லால் பதுக்கப்பட்டதால் கல்பதுக்கை, கற்பதுக்கை என்றனர்.
பதுக்கைகள் பெருகிய பின்னர் அல்லது அவற்றில் புதர் மண்டுவதால் அவை இருந்த இடம் பற்றிய தெளிவுக்காக, அடையாளத்துக்காகப் புதிய பதுக்கைகளைத் தோற்றுவிக்கும்போது அவற்றின் அருகில் உயர்ந்த செங்குத்தான கல்லினை நிறுத்தினர். இதனை நெடுகல் என்றனர். ஒன்றோ ஒன்றுக்கு மேற்பட்டோ நெடுகல் நிறுத்தும் வழக்கம் இருந்துள்ளது” எனத் தொல்லியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.  
இறந்தவர்களின் உடல்களைத் தாழிக்குள் வைத்துப் புதைத்த பின்பு மண்குவை அல்லது கற்குவை அல்லது கல் வட்டங்கள் அமைக்கும் பண்பாட்டு வழக்கம் கி.மு.3ஆம் நூற்றாண்டு முதல் கி.பி.1 ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த மக்களிடம் காணப்பட்டதாக வரலாறு மற்றும் தொல்லியல் ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.  இன்னும் குறிப்பாகச் சொல்வதானால், வரலாற்றில் பெருங்கற்காலம் எனப்பெறும் காலகட்டத்தில் வாழ்ந்த மக்களின் பண்பாட்டு வழக்கமாகக் கல்வட்டப் புதைமேடுகள் அமைந்திருக்கின்றன.  இத்தகையப் புதைமேடுகளை வரலாற்றுக்கு முற்பட்ட நிலப்பகுதி (pre Historical Site) எனக் குறிப்பிடுகிறது இந்தியத் தொல்லியல் பரப்பாய்வுத்துறை. அவ்வகையில், பெருங்கற்கால மக்களின் வாழ்வியல் வழக்காறுகளையும் பண்பாட்டையும் வரையறுப்பதற்கான தொல்லியல் சான்றுகளைக் கொண்ட வரலாற்றுக்கு முற்பட்ட நிலப்பகுதியாக இங்கு கண்டறியப்பட்டுள்ள புதைமேடு அமைந்திருக்கிறது.
சிறியதும் பெரியதுமான மண்குவை அல்லது கற்குவை அல்லது கல்வட்டங்களைக் கொண்ட புதைமேடுகள் பெரும்பாலும் நீர் நிலைகளை ஒட்டிய நிலப்பரப்பிலேயே அமைக்கப்பட்டிருக்கின்றன.  ஆற்றுப் படுகைகள், கண்மாய் ஓரங்கள், ஓடை மருங்குகள் என நீர் நிலைகளை ஒட்டியே தாழிகள் புதைக்கப்பட்டுள்ளன.  சில பல பகுதிகளில் தாழிகள் புதைக்கப்பட்ட இடங்களைச் சுற்றிலும் கல் குவியல் அல்லது மண் குவியல் அல்லது கல் வட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தற்போது சின்னஉடைப்பு அருகே கண்டறியப்பட்டுள்ள முதுமக்கள் தாழிகள், கல் வட்டங்கள் மற்றும் கற்குவியல் நிறைந்த புதைமேடானது, நீர் நிலைகளை ஒட்டியே அமைக்கப்பட்டிருக்கிறது.  சின்னஉடைப்பு கண்மாயின் மறுகால் வடிநிலப்பகுதி, அய்த்திரும்புக் கண்மாய் ஓடையின் வடிநிலப் பகுதி, கூடல் செங்குளம் கண்மாயின் மேட்டுப் பகுதி என மூன்று நீர்நிலைகள் சூழ்ந்த ஒரு மேட்டுப் பகுதியில்தான் இத்தகையப் புதைமேடு அமைந்திருக்கிறது.  குறிப்பாக, இந்நிலப்பகுதி முழுவதும் செம்மண் நிரம்பியதாய்க் காணப்படுகின்றது.  
இப்புதைமேடானது, வைகையாற்றுப் படுகையிலிருந்து 10 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது. இவ்விடத்திலிருந்து 10 கி.மீ தொலைவில்தான்  திருப்பரங்குன்றம் மலையும், மீனாட்சி கோயிலும் அமைந்திருக்கின்றன. இவ்விடத்தின் அருகாமைத் தொலைவில்தான் பழங்கால நகரம் புதையுண்டிருக்கும் கீழடி என்னும் சிற்றூர் அமைந்திருக்கிறது.
வரலாற்றுப் பழமையும், பண்பாட்டு வளமையும், கலை இலக்கியச் செழுமையும், நாகரிக வாழ்வியலையும் கொண்ட பேரூராய் மதுரை திகழ்ந்து வருகின்றது.  தொன்மையின் உறைவிடமாகத் திகழும் மதுரையின் வரலாற்றை வலுப்படுத்தும் சான்றுகளுள் ஒன்றாக இங்கு கண்டறியப்பட்டுள்ள புதைமேடு திகழவிருக்கிறது. 
மதுரையின் பல பகுதிகளில் தொல்லியல் அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.  தே.கல்லுப்பட்டி(1976-77), அனுப்பானடி(1887), மாடக்குளம் கோவலன் பொட்டல்(1980), துவரைமான்(1887), பறவை(1887) ஆகிய ஊர்களில் தொல்லியல் அகழாய்வுகள் பல்வேறு காலங்களில் பல அறிஞர்களின் முயற்சியால் நடைபெற்றுள்ளன.இப்போது கீழடி(2015-16)யிலும் அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.  இவ்விடங்களில் கண்டெடுக்கப்பட்ட அகழாய்வுப் பொருட்கள் யாவும் பெருங்கற்கால மக்களின் வாழ்வியல் நிலைமைகளை எடுத்துரைக்கும் சான்றுகளாய் அமைந்துள்ளன.  அந்தவகையில், தற்போது இங்கு கண்டறியப்பட்டுள்ள ஈமக்காடு எனும் புதைமேடும், இப்பகுதியில் சிதைந்த நிலையில் வெளித்தெரியும் முதுமக்கள் தாழிகளும் பெருங்கற்கால வரலாற்றை அறிய உதவும் தரவுகளைப் புதைத்து வைத்திருக்கும் வாய்ப்புகளை அதிகம் கொண்டுள்ளன.  ஏற்கனவே அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்ட நிலப்பகுதிகளும், தற்போது கண்டறியப்பட்ட புதைமேட்டு நிலப்பகுதிக்கு அண்மைத் தொலைவுகளில்தான் அமைந்திருக்கின்றன.  ஆகையால், அந்நிலப்பகுதி வரலாற்றோடு இந்நிலப்பகுதியின் வரலாறும் நெருங்கிய தொடர்பு கொண்டிருப்பதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு.  
சின்னஉடைப்பில் கண்டறியப்பட்டுள்ள ஈமக்காட்டில் அகழாய்வுகள் மேற்கொள்வதின் மூலமாகத்தான் இதன் வரலாற்றைத் திட்டவட்டமாக வரையறுக்க இயலும்.  எனினும், கல்வட்டங்கள் கொண்ட ஈமக்காடானது பெருங்கற்காலத்தைச் சார்ந்தது என உறுதியாகக் கூற இயலும். ஏனென்றால், கல்வட்டப் புதைமேடு அமைக்கும் வழக்கம் பெருங்கற்கால வகையைச் சார்ந்தது எனத் தமிழ்நாட்டின் கல்வட்டப் புதைமேட்டு அகழாய்வுகள் தெரிவிக்கின்றன.
   சின்னஉடைப்பில் கண்டறியப்பட்டுள்ள ஈமக்காடு மற்றும் தாழிகள் குறித்து இப்பகுதி மக்களிடம் கேட்டபோது, இந்நிலப் பகுதியைத் ‘தால வைத்தான் காடு’ எனவும், ‘தாட வைத்தான் காடு’ எனவும் குறிப்பிடுகின்றனர்.  இவை ‘தாழி வைத்தான் காடு’ அல்லது ‘தடம் வைத்தான் காடு’ அல்லது ‘தடயம் வைத்தான் காடு’ என்பதன் திரிபாக இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு.  இம்மேட்டுப் பகுதிக்கு ஆடுமாடுகள் மேய்க்கச் செல்லும்போது ஆந்தைகள் மட்டுமே கள்ளி மரங்களில் அலறிக் கொண்டிருக்கும் எனவும், இந்தப் பகுதிக்கு ஆட்கள் வருவதற்கே அஞ்சுவர் எனவும் குறிப்பிடுகின்றனர்.  சின்ன உடைப்பில் வாழும் சில முதியவர்கள் ‘இந்தப் பகுதியில் பெரிய குளுமைகளில் (தாழி போன்றே இருக்கும் தானியக் குதிர்) உணவுத் தானியங்கள் இருந்ததாகவும், அவற்றை வீட்டிற்கு அள்ளி வந்ததாகவும், நிறைய ஓட்டைக் காசுகளைப் பொறுக்கி வந்ததாகவும் இளவயது அனுபவங்களை வெளிப்படுத்தினர்.

   ஒன்றிரண்டு கல்வட்டங்களைக் கொண்டிருக்கும் ஈமக்காட்டு அகழாய்வுகளின் மூலமே ஏகப்பட்ட தொல்லியல் பொருட்களை வெளிக்கொணர்ந்துள்ளனர் ஆய்வாளர்கள்.   தற்போது இங்கு கண்டறியப்பட்டுள்ள முதுமக்கள் தாழிகள் புதைந்துள்ள ஈமக் காடானது 50க்கும் மேற்பட்ட கல்வட்டங்களைக் கொண்ட பெரும்பரப்பாய் அமைந்திருக்கிறது.  கிட்டத்தட்ட 40 முதல் 60 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கும்  இப்புதைமேடானது, அரசு புறம்போக்கு நிலத்திலும், தனியார் நிலத்திலும் பரவியிருக்கிறது.  இப்புதைமேட்டின் ஓரத்தில்தான் மதுரை-கன்னியாகுமரி நெடுஞ்சாலை அமைந்திருக்கிறது.  இந்நிலப்பகுதியின் பெரும்பாலான பரப்பும் இதனைச் சுற்றியுள்ள மற்ற பெரும்பரப்பும் மனையிடப் பகுதிகளாக ஆக்கப்பட்டுள்ளன.  பல கல்வட்டங்களும் தடயங்களும் அகற்றப்பட்டுள்ளன. 
     இந்நிலப்பகுதியின் தொல்லியல் தடயங்கள் குறித்து அயன்பாப்பாகுடி கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர், மதுரை தெற்கு வட்டாட்சியர் ஆகியோரிடம் முறையாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது.அவர்களும் இந்நிலப்பகுதிக்கு வருகை தந்து கள நிலைமைகளைப் பார்வையிட்டுச் சென்றனர்.ஆயினும், இந்நிலப் பகுதியைப் பாதுகாப்பதற்கான நிர்வாக நடவடிக்கைகள் இதுநாள்வரையிலும் வெளிப்படவில்லை.
  புதர்களும் இண்ட முள்மரங்களும் கள்ளிகளும் சூழ்ந்த இவ் ஈமக்காடு, பெருங்கற்காலத் தொன்மையின் அடையாளப் பதிவாய் அமைந்திருக்கிறது.  மழைநீர் அரிப்பால் பத்துக்கும் மேற்பட்ட தாழிகளின் மேற்பகுதி வாய்ப்பகுதிகள் வெளித்தெரிகின்றன; சிதைவுகளுக்கும் உள்ளாகி வருகின்றன. இந்நிலப்பகுதி மனையிடப்பகுதிகளாக மாற்றப்பட்டுக்கொண்டிருப்பதால் பெரும்பாலான கல்வட்டத் தடயங்களும் முதுமக்கள் தாழிகளும் அப்புறப்படுத்தப்படுகின்றன.வரலாற்றுத் தடயங்கள் கண்முன்னே அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதுபோன்ற தொல்லியல் தடயங்கள்தான் வரலாற்று வளமையைப் பறைசாற்றக் கூடியவை  ஆகையால், வரலாற்றுத் தொல்லியல் நிலப்பகுதியாய் இதனைக் காக்க வேண்டியதும், இங்கு அகழாய்வு மேற்கொண்டு தொல்லியல் சான்றுகளை வெளிக் கொணர வேண்டியதும் அவசியமாகும். 
 நடுவண் அரசின் தொல்லியல்துறையும், தமிழ்நாடு அரசின் தொல்லியல்துறையும் இந்நிலப் பகுதியில் அகழாய்வுகள் மேற்கொள்ள வேண்டும் என, மக்கள்தமிழ் ஆய்வரண் சார்பாக நாளிதழ்ச் செய்தியறிக்கை வாயிலாகக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 
        கள மேற்பரப்பாய்வின் வழியாகக் கண்டறியப்பட்டுள்ள இப்புதைகாடும், இதில் காணலாகும் கல்வட்டங்களும், முதுமக்கள் தாழிகளும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நிலவிய பண்பாட்டு அடையாளப் பதிவுகளாகும். இவைபோன்ற பண்பாட்டு அடையாளப் பதிவுகளைப் பழந்தமிழ் இலக்கியங்கள் புலப்படுத்தியுள்ளன.
       வீழ்ந்தோர் வம்பப் பதுக்கை
       திருந்துசிறை வளைவாய்ப் பருந்து இருந்து உயவும்
       உன்ன மரத்து துன்அருங் கவலை ( புறநானூறு 3 )  
இரும்பிடத்தலையார் இயற்றிய மேற்குறித்த பாடலில், போர்க்களத்தில் பலியான வீரர்கள் புதைக்கப்பட்ட இடத்தில் கற்குவியல்களால் அமைக்கப்பட்ட பதுக்கை பற்றிய குறிப்பு காணப்படுகிறது. அதேபோல,
வெண்நுனை அம்பின் விசைஇட வீழ்ந்தோர்
எண்ணு வரம்பு அறியா உவல்இடு பதுக்கை (அகநானூறு109 )
என,கடுந்தொடைக்காவினார் பாடிய பாடலிலும் பதுக்கை பற்றிய குறிப்பு காணப்படுகிறது. 
        இடுமுள் நெடுவேலி போலக் கொலைவர்
கொடுமரந் தேய்த்தார் பதுக்கை நினைத்த  (கலித்தொகை 12)
என, இடுமுற்களால் வேலிபோலச் சூழப்பட்டிருக்கும் ‘பதுக்கை’ பற்றிய குறிப்பைப் புலப்படுத்துகிறார்  பெருங்கடுங்கோ.

   சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் குறித்து ஐயூர் முடவனார் பாடிய புறப்பாடலில் தாழியைப் பற்றிய விரிவான பதிவுகள் காணப்படுகின்றன. தாழிகள் செய்யும் குயவரைப் பார்த்து
       கலம்செய் கோவே கலம்செய் கோவே
இருள்திணிந்தன்ன குரூஉத்திரள் பரூஉப் புகை
அகல் இருவிசும்பின் ஊன்றும் சூளை
நனந்தலை மூதூர்க் கலம்செய் கோவே
       ..........................
       கொடி நுடங்கு யானை நெடுமா வளவன்
       தேவர் உலகம் எய்தினன் ஆதலின்,
அன்னோன் கவிக்கும் கண்ணகன் தாழி
வனைதல் வேட்டனை ஆயின், எனையதூஉம் 
இருநிலம் திகிரியாப் பெருமலை
மண்ணா, வனைதல் ஒல்லுமோ, நினக்கே. (புறநானூறு 228)
என்கிறார் அப்புலவர். இப்பாடலில், கிள்ளிவளவன் இறந்த பிறகு அவ்வுடலைத் தாழியில் கவித்துப் புதைத்த பண்பாட்டு மரபைப் புலவர் பதிவு செய்கிறார்.   
       அக்காலத்தே இறந்த மக்களை நிலத்தில் புதைக்குமிடத்து அவர்மேல் பெரிய தாழியைக் கவித்துப் புதைப்பது மரபு.  கிள்ளிவளவனையும் தாழியில் கவித்து வைத்தனர். புலவரின் மனக் கண்ணில் கிள்ளிவளவனுடைய புகழைத் தாங்கிய உடலானது, நிலவுலகு முழுதும் பரந்து வானளாவ உயர்ந்து நிற்பதாய்த் தோன்றிற்று. அதற்கேற்ற தாழி வேண்டின் நிலவுலகை ஆழியாகவும் மேருமலையை மண் திரளாகவும் கொண்டு பெரியதொரு தாழி செய்ய வேண்டும் என எண்ணினார்.  குயவரை நோக்கி இவ்வாறு ஒரு தாழி செய்ய இயலுமோ என்பார்போல் இந்தப்பாட்டைப் பாடியுள்ளார். இப்பாடல், ஓர் அரசனைக் குறித்த விவரிப்பாய் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. 
        அரசர்கள் இறந்தால் தாழியைக் கவித்துப் புதைத்த அதேவேளையில், போர்க்களத்தில் இறந்த வீரர்களையும் தாழி கவித்தே புதைத்திருக்கிற வழக்கத்தைத் தனிமகள் புலம்பிய முதுபாலை எனும் புலவர் பாடிய பாடலில் காணமுடிகிறது.
       கலம்செய் கோவே,  கலம்செய் கோவே
அச்சுடைச் சாகாட்டு ஆரம் பொருந்திய 
சிறுவெண் பல்லிபோலத் தன்னொடு 
சுரம்பல வந்த எமக்கும் அருளி
வியன்மலர் அகன்பொழில் ஈமத்தாழி 
அகலி தாக வனைமோ
நனந்தலை மூதூர்க் கலம்செய் கோவே (புறநானூறு 256)
“தனிமகள் ஒருத்தி, தன் காதல் கொழுநனுடன் சுரத்திடை வந்துகொண்டிருக்கையில், கொழுநன் ஆண்டு உண்டாகிய போரின்கண் விழுப்புண்பட்டு உயிர் கொடுத்துப் புகழ் கொண்டான். அதனால் தனிமையுற்றுக் கொழு கொம்பிழந்த கொடிபோல் வருந்தும் அவள், கலம் செய்யும் ஊர்க்குயவனை நோக்கி “வேட்கோவே, சிறப்புண்டாகப் போரிடை மாண்டாரை ஈமத்தே தாழி கவித்து வைப்பது குறித்து வேண்டும் தாழியாகிய கலத்தைச் செய்பவனாதலின் நின்பால் வேண்டுவதொன்றுண்டு. இப்போது என் கொழுநனைக் கவித்தற்குத் தாழியொன்று வேண்டியுள்ளது. நின்பால் இருப்பது ஒருவரைக் கவித்தற்குரிய அகலமுடையது. சக்கரத்தினுள்ள ஆர்க்காலைப் பொருத்தியிருக்கும் பல்லியொன்று அவ்வார்க்காலை நீங்காமல் பற்றிக் கொண்டு வருவதுபோல யானும் என் கொழுநனைத் தொடர்ந்து வந்துள்ளேன்.  என்னையும் சேர்த்து ஒருங்கே கவிக்கக்கூடிய அகலமுடையதாக என்பால் அருள்கூர்ந்து செய்வாயாக” என வேண்டுவதாகத் தனிமகள் புலம்பிய முதுபாலை எனும் பெண் புலவரின் கூற்றால் அப்பாடல் அமைந்திருக்கிறது.
       பாடியவர் பெயர் குறிப்பிடாத நற்றிணைப் பாடலொன்று தாழி கவித்தல் பற்றி பின்வருமாறு குறிப்பிடுகிறது.
மலைவிரி நிலவிற் பெயர்புபுறங் காண்டற்கு
மாயிருந் தாழி கவிப்பத்
தாவின்று கழிகஎற் கொள்ளாக் கூற்றே.   (நற்  271.)
“விரிந்த நிலவிலே சென்று பின்னே போய்க் காணும்படியாகவிட்ட இதற்கு முன்னாலேயே, என்னைப் பெரிய கரிய தாழியிலிட்டுக் கவிக்கும்படி என்னுயிரைக் கொண்டு போகாத கூற்றமானது,   தான் வலியிழந்து தன்னை அந்தத் தாழியிலிட்டுக் கவிக்கும்படி இறந்தொழியக் கடவதாக’’ என நற்றாய்ப் புலம்பலாக அமைந்திருக்கிறது அப்பாடல். 
       தலைவனோடு உடன்போக்கு மேற்கொண்ட தலைவியாகிய தன் மகளை நினைத்துப் புலம்பித் தவிக்கும் நற்றாய், தலைவியின் உடன்போக்கை மனதுக்குள் ஒருவாறு ஏற்றுக்கொண்டாலும் ஊராரின் பழிசொற்களுக்கு அஞ்சுகிறார்.  ஏதிலார் கூறும் பழிமொழி பொறாளாய் மயங்கி,  முன்னமே என்னுயிரைக் கொண்டு போகாது இப்பொழுது ஏதிலாளன் பின்சென்ற என்மகளைப் பின் சென்று தேடி அலர்கூறுதலை யான் கேட்டிருக்குமாறு என்னை இதுகாறும் விட்டொழிந்த கூற்றும் தானே கெடுவதாக என்று மருண்டு கூறுவதாக பாடப்பட்ட பாடலில் மேற்குறித்த குறிப்பு காணப்படுகின்றது. மனிதர்கள் மட்டுமல்ல, மரணம் என்னும் கூற்றம்கூட தாழி கவித்துப் புதைந்து போகவேண்டும் என்கிறது அப்பாடல். 
       ஆக, அரசர் இறந்தாலும் சரி, வீரர்கள் இறந்தாலும் சரி, குடிமக்களுள் பெண் இறந்தாலும் சரி, ஆண் இறந்தாலும் சரி, அக்காலத்திய மனிதர்கள் எவர் மாண்டாலும் தாழி கவித்தே புதைத்த பண்பாட்டு மரபு வழக்கம் நிலவியிருப்பது மேற்குறித்த மூன்று பாடல்களின் புலப்பாடுகளிலிருந்தும் தெரிய வருகின்றது.
       கொடைத் தன்மை குறித்தத் தமிழ் விவரிப்புகளில் கடையேழு வள்ளல்கள் பற்றிய பதிவுகளே முதன்மை பெறுகின்றன. அவர்களுள் பறம்பு மலைப் பாரி குறிப்பிடத்தக்கவராக விளங்குகிறார். பற்றிப் படர்வதற்கு எந்தப் பற்றுக்கோடும் இல்லாமல் ஏதுமின்றித் தவித்த முல்லைக் கொடிக்குத் தம் தேரை நிறுத்திச் சென்றார் பாரி.  கொடை மடத்திற்கு இவரும் ஒரு சான்று. இத்தகைய குறுநில மன்னனான பாரியைப் பேரரசப் படைகள் போர்க்களத்தில் கொன்றுவிடுகின்றன. பறம்புமலைச் சுற்றத்து உறவுகள், உடைமைகள், உற்றார், தாய் தந்தையர், அதிகாரம், படைகள்,எதிர்காலம் என அத்தனைகளையும் இழந்து தவித்து,
         அற்றைத் திங்கள் அவ்வெண் நிலவின்
         எந்தையும் உடையேம் எம்குன்றும் பிறர்கொளார்
         இற்றைத் திங்கள் இவ்வெண் நிலவின்
         வென்றுஎறி முரசின் வேந்தர் எம் 
         குன்றும் கொண்டார் யாம் எந்தையும் இலமே (புறநானூறு 112 )
என,நாட்டையும் வீட்டையும் உறவுகளையும் பறிகொடுத்துத் துடித்தழுத அங்கவை சங்கவை என்போரின் தந்தையர்தான் பாரி. படர்வதற்குப் பற்றுக்கோடு இல்லாமல் தவித்த முல்லைக்குக்கூட இரக்கப்பட்டார் பாரி.  ஆனால், வாழ்வதற்கான எந்தப் பற்றுகோடும் இல்லாமல் தனியர்களாய் ஏதிலிகளாகப் பாரிமகளிர் நின்றபோது இரக்கப்பட எவருமில்லை. மாறாக, கபிலர் எனும் புலவர் மட்டும்தான் இரக்கப்பட்டுத் துணை நின்றார். 
      பாரியின் பிரிவால் துயர்கொண்ட கபிலர் வடக்கிலிருந்து உயிர்நீக்கத் துணிந்து அவ்வாறே உயிர் நீத்தார் என்றே கருதப்படுகிறது. பாரியை நினைந்து நினைந்து கபிலரின் நெஞ்சம் துயரத்தால் புண்பட்டிருக்கிறது.  ‘வடக்கிருத்தலை மேற்கொண்டு உண்ணா நோன்பால் உயிர் துறந்து மறுமை உலகில் அவனைக்கண்டு கூடிப் பண்டேபோல் நட்புக் கிழைமையால் நல்வாழ்வு வாழ்தல் வேண்டுமென அவர் எண்ணினார். தென்பெண்ணையின் நட்டாற்றுத் துருத்தியில் ஓரிடங்கண்டு வடக்கிருக்கலானார்.  இன்றும் கோவூர்க்கருகில் தென்பெண்ணையாற்றில் கபிலக்கல்லென ஒரு கல்லிருந்து, கபிலர் வடக்கிலிருந்த செய்தியை நினைவுறுத்திக் கொண்டு நிற்கிறது என்கிறார் ஔவை துரைசாமி. இதுபோன்ற கற்களை நெடுகற்கள் என இலக்கியங்கள் குறிக்கின்றன.
        ஏறுடை இனநிரை பெயர, பெயராது
        செறிசுரை வெள்வேல் மழவர் தாங்கிய
        தறுகணாளர் நல் இசை நிறுமார்
        பிடி மடிந்தன்ன குறும்பொறை மறுங்கின்
        நட்ட போலும் நடாஅ நெடுங்கல் ( அகநானூறு 269 )
மதுரை மருதன் இளநாகனாரின் மேற்காணும் பாடலில் நெடுகல்லைப் பற்றிய குறிப்பு காணப்படுவதைப் போலவே, எயினந்தை மகன் இளங்கீரனார் பாடலிலும் காணப்படுகின்றது.
       சிலை ஏறட்ட கணைவீழ் வம்பலர்
       உயர்பதுக்கு இவர்ந்த அதர்கொடி அதிரல்
       நெடுநிலை நடுகல் (அகநானூறு 289 )
என்கிறது அப்பாடல். தாழிகள் புதைக்கப்பட்ட நிலத்தில்-பதுக்கையைச் சுற்றியோ அல்லது அதன் நடுவிலோ நடப்படும் இந்நெடுகல் நடப்படும் வழக்கத்திலிருந்தே நடுகல் வழிபாட்டு மரபு கிளைத்திருக்க வேண்டும். 
        பரலுடை மருங்கின் பதுக்கை சேர்த்தி
        மரல்வகுந்து தொடுத்த செம்பூங் கண்ணியொடு
        அணிமயில் பீலிசூட்டி பெயர் பொறித்து
        இனி நட்டனரே கல்லும் ( புறநானூறு 264 )
என்ற இளம்பொன் வாணிகனார் பாடல், பதுக்கையில் நடப்பட்ட நெடுகல்லை நடுகல்லாய் வழிபடும் மரபைச் சுட்டுகிறது. இக்காலத்திய வழக்கிலுள்ள குலசாமிகள் மற்றும் பட்டசாமிகள் வழிபாட்டு மரபுகளும், சுமைதாங்கிக் கற்களும் நடுகல் வழிபாடு எனும் பண்பாட்டு மரபின் நீட்சியாகத்தான் இருக்க  வேண்டும்.இறப்புக்குப் பின்பான மனித வாழ்வியலின் இருப்பை இவைபோன்ற தொல்லியல் தடயங்கள்தான் வரலாறாய் எடுத்துரைக்கின்றன.
      தாழிகள் பதைக்கப்பட்ட ஈமக்காடு அல்லது புதைமேட்டைப் ‘பெருங்காடு’ எனக்குறிக்கிறார் கூகைக் கோழியார் எனும் புலவர்,
நிலம்பக வீழ்ந்த அலங்கல் பலவேர்
முதுமரப் பொத்தின் கதுமென இயம்பும்
கூகைக் கோழி ஆனாத் 
தாழிய பெருங்காடு எய்திய ஞான்றே ( புறநானூறு 364)
என்கிறார்.  அதாவது, முதுமரப் பொந்திலிருந்து கூகைக்கோழி கூவும் இடுகாட்டின் இயல்பை விவரிக்கிறது இப்பாடல்.அதேவேளையில், ஈமக்காட்டை முதுகாடு எனக் குறிக்கிறது தாயங்கண்ணனாரின் பாடல்.
        களரி பரந்து கள்ளி போகி
        பகலும்கூவும் கூகையொடு பிறழ்பல்
        ஈம விளக்கின் பேஎய் மகளிரொடு
        அஞ்சுவந் தன்று இம்மஞ்சுபடு முதுகாடு (புறநானூறு 356 )
என்கிறது அப்பாடல். அதேபோல, இப்பெருங்காட்டைப் பற்றிய குறிப்பைப் பரணர் கூறும்போது
மன்னர் மறைத்த தாழி
வன்னி மன்றத்து விளங்கிய காடே ( பதிற்றுப்பத்து 44)
என்கிறார். இறப்புக்குப் பின்புகூட மனிதர்கள் வாழ்கிறார்கள் எனும் நம்பிக்கையையே இவைபோன்ற புதைகாட்டுத் தடயங்கள் புலப்படுத்துகின்றன. 
    புதைகாட்டைப் பற்றிய மேற்குறித்த பாடல்கள் விவரிக்கும் அதே சூழல்தான், சின்ன உடைப்பு கண்மாய் அருகே அமைந்திருக்கும் புதைகாட்டிலும் இன்றும் நிலவிக்கொண்டிருக்கிறது. காலம் இதன் தடயங்களையும் வரலாற்றையும் வெளிக்கொணரும் எனும் நம்பிக்கை மட்டும்தான் இப்போதைக்கு இருக்கின்றது.

கட்டுரையாக்கத்திற்குத் துணை நின்றவை:

1. புறநானூறு மூலமும் உரையும், ஔவை சு.துரைசாமி, கழக வெளியீடு, சென்னை, மறுபதிப்பு,1962.
2. பதிற்றுப்பத்து மூலமும் உரையும், ஔவை சு.துரைசாமி, கழக வெளியீடு, சென்னை, இரண்டாம் பதிப்பு,1955.
3. நற்றிணை நானூறு மூலமும் உரையும், பின்னத்தூர் அ.நாராயணசாமி, கழக வெளியீடு, சென்னை, முதல்பதிப்பு,1952.
4. கலித்தொகை மூலமும் உரையும்,  நச்சினார்க்கினியர், கழக வெளியீடு,   சென்னை, மூன்றாம் பஆதிப்பு,1949.
5.  அகநானூறு மூலம், மர்ரே அண்டு கம்பெனி, சென்னை, முதல் பதிப்பு,1958.
6.  திரு.தங்கதுரை (காப்பாட்சியர், தஞ்சை மாவட்ட   அருங்காட்சியகம்)  அவர்களின் நேர்முகத் தரவுகள்.
7.  வாழ்வியல் களஞ்சியம், தொகுதி   , தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், முதல் பதிப்பு,
8.   கள ஆய்வில் வாய்மொழித் தரவுகள் மற்றும் உதவி: திருவாளர்கள் 
   நா.பாலன்,                                          சு.மகாலிங்கம், கூ.சின்னச்சாமி, நா.புசுபம், பெ.மூக்குச்சாமி,                    மு.பாலசுப்பிரமணியன் - சின்ன உடைப்பு, மதுரை.

நன்றி 
தினமலர் நாளிதழ்
தி இந்து தமிழ் நாளிதழ்






2 கருத்துகள்:

  1. சரியான மிக ஆழமான பதிவு. உடனெ வெளிப்படுத்தி கீழடிக்கு பிறகு இதை ஆய்வு செய்ய வைக்க வெண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் பார்வைக்கும் பகிர்வுக்கும், கருத்தாடல்களில் கைகோர்த்தமைக்கும் நன்றி.தொடர்ந்து பயணிப்போம்.

      நீக்கு