விளிம்புநிலைக் கதையாடல்களைப்
பெருங்கதையாடலாக்கிய அசுரக் கோமாளிக் கூத்து.
1
எம்மின் பன்முக அடையாளங்கள் சூழ்கொண்டு முளைத்துக் கிளைத்திருப்பதைப் போலவே, எம்மை ஒத்த அடையாளங்கள் கொண்ட ஓா் இனம் இந்த மண்ணுருண்டையின் ஏதோ ஒரு மூலையில் அல்லாமல், எம் நிலப்பரப்பின் கிட்டத்திலேயே விரிந்து கிடந்த நிலப்புழுதியில் சூழ் கொண்டிருந்தது. கடல்சூழ் வனத்தைப்போல மரபுவழி மனிதப் பச்சையங்கள் நிறைந்து, தமக்கான அடையாள வோ்களை ஆழஆழப் பதித்து ஈரநெப்பு கசிந்த அதன் மண்ணை இறுகப் பற்றிக்கொண்டு செழித்து, வளம் கொழித்துக் கிடந்தது அவ்வினம்.
காலமும் கடல்கோளுமாய்ச் சேர்ந்த ஊழ்வினை எம்மினத்தையும் அவ்வினத்தையும் வேறுவேறான
நிலப்பரப்பில் வாழத் தள்ளிவிட்டது. ஆனாலும்,
பரிணாமக் காலங்களை உறிஞ்சியெடுத்த உயிரினச் சுழற்சியில் இங்கொன்றும் அங்கொன்றுமாய்
விழுந்த வித்துகள் முளைத்துக் கிளைத்திருப்பதைப் போலவே, இவ்வினமும் அவ்வினமும் முளைத்துக் கிளை பரப்பிச்
சிலிர்த்து இருவேறு தாயக நிலங்களை நிழல் பரப்பி உருவாக்கிக் கொண்டன.
“இரு நிலம்; ஆனாலும் ஓா் இனம்“ என்பதாகத் தொன்ம வரலாறு பதிவுறுத்திக் கொண்டிருக்கிறது. இதுமட்டுமல்லாது, இவ்வினத்தை ஒத்த வித்துகள் காற்றில் பரவி மண்ணுலகின்
இதர மூலைகளில் விழுந்து முளைத்திருப்பதாய் நம்பிக்கை பூத்துக் கிடக்கிறது இவ்வினத்தின்
அடி மனத்தில். ஆனாலும், காற்றில் பரவிய வித்துக்கள்
விழுந்த மண்ணின் வாகும், பருவ நிலைகளும், சுழலும் காலமும், மனிதப் படிமலர்ச்சியும்
வேறுவேறான அடையாளங்கள் தந்திருக்கும். அவை வேறோர் இனத்தில் - இனங்களின் இருப்பை வடிவமைத்திருக்கும். வேறு வேறான இனங்கள் தத்தம் தகவமைப்புகளுடன் உயிர்த்துக்
கொண்டிருந்தாலும், அவற்றுள் எம்மின் மரபினத்தோடும் அதன் தொடா்ச்சியோடும் ஒட்டுறவு பொங்கிக்
கிடக்கும் இனங்கள் இவ்வுலகின் பல மூலைகளில் பரவிக் கிடக்கின்றன என்பதைக் காலம் உணா்த்திக்
கொண்டிருக்கிறது.
கால ஓட்டத்தில்
மாறிக்கொண்டிருக்கும் சுழற்சியில், தம் அடையாளங்களைக் காத்துக்கொள்ளும் போராட்டத்தில்,
காலப் பருந்துகளின் கொத்தல்களிலிருந்து தம் குஞ்சுகளைக் காக்கப் போராடும் கோழியின்
மூர்க்கத்தனத்தோடு இவ்வினமும் அவ்வினமும் போராடி வந்திருக்கின்றன. அவ்வினத்தை எம்மினத்தின் தொப்பூழ்க்கொடி என இவ்வினம்
சொல்லிக்கொண்டாலும், அறுந்துவிட்ட அத்தொப்பூழ்க் கொடியிலிருந்துதான் உயிர்க்கொடிச்
சிம்புகள் சிலிர்த்து, இனத்தின் வோ்கள் அத்துப் போகாமலும் இத்துப்போகாமலும் உயிர்ப்பித்துக்
கொண்டிருந்தன.
இந்தியத் தொரட்டிகளால் இவ்வினத்தின் அடையாளக் கிளைகள் முறிக்கப்பட்டதில் - முறிபடுவதில்
இவ்வினத்தின் வோ்கள் சுணக்கம் கொண்டு சுருண்டு கிடந்த - கிடக்கின்ற நிலையில், அவ்வினத்தின்
வோ்கள் ஆணியும் சல்லியுமாய் உள்ளிறங்கி மூதாதையா் குடியிருந்த மண்ணின் உயிர்ச்சத்தை
உள்வாங்கி ஈழமாய்ச் செழித்திருந்தது. அதன் வனப்பும் இருப்பும் தமிழ் ஈழமாய் உருக்கொண்டிருந்தது.
- 2 –
தமிழீழம்..... ஒலிவடிவத்தாலோ வரிவடிவத்தாலோ
கூட்டுண்ட சொல் மட்டுமல்ல; விடுதலைத் தாகமும் வீரமும் ஈகமும் நிரம்பிக் கிடக்கும் தேசம். அடிமையாய் இருக்க மறுத்துத் தன்னின் மானத்திற்காகவும்
தன்னின விடுதலைக்காகவும் சுடா்முகம் துாக்கிய தேசம். இதன் காரணமாகவே சிங்கள இந்தியத்தின்
கொடுங்கரங்களால் குரல்வளை நெறிக்கப்பட்ட தேசம். அடிமையாய் இழிந்துபட்டு வாழ்வதைக் காட்டிலும்,
தாயக விடுதலைக்காகப் போராடி மரணிப்பதிலும் வாழ்வுண்டென்பதை விடுதலைப் போர் அறமாய் உலகுக்கு
உணா்த்திக் கொண்டிருக்கும் தேசம்.... இந்தியச் சோற்றை உண்டுசெறித்து அடிமைச் சுகம்
கண்டுகொண்ட இவ்வினத்திற்குச் சொரணை கிள்ளி, தன்மான உணா்ச்சியைத் தந்திட்ட தேசம்...
அரை நுாற்றாண்டு காலமாய் அமைதி வழியிலும் ஆயுத வழியிலுமான போர் அறத்தில் பயணித்த
தேசம். இந்தத் தேசத்தைத்தான் சிங்களமும் இந்தியமும்
கூட்டுச்சோ்ந்து கருவறுத்திருக்கின்றன; உருவாகிக்கொண்டிருந்த
அத்தேசத்தின் வேர்களை அறுத்தெறிந்திருக்கின்றன.
அத்தேசம் மீண்டெழாதபடி அதன் ஒவ்வொரு துகளையும் யுத்தத்தால் சிதைத்திருக்கின்றன. அத்தேசத்தின் உயிர் நாடியான அத்தேசத்தின் மக்களை - ஈழத் தமிழா்களைக் கொத்துக் கொத்தாய்க் கொலை செய்து, போரின் மூலமாக இன அழித்தொழிப்பை - மனிதப் பேரழிவை
நிகழ்த்திக் கொக்கரித்துக் கொண்டிருக்கின்றன சிங்களமும் இந்தியமும்.
குழந்தைகள், முதியோர், பெண்கள், இளைஞா், போராளிகள் என எந்தப் பாகுபாடும் இல்லாமல்
தமிழா்கள் என்ற ஒரே ஒரு காரணத்திற்காகவே கொல்லப்பட்ட போதும், இன்றும்கூட வதை முகாம்களில்
உயிர்வதைக்கு உள்ளாகிக் கொண்டிருக்கிறபோதும், ஆறு கோடிக்கும் மேலான திரளைக்கொண்ட இவ்வினத்தால்
அவ்வினத்தைக் காப்பாற்ற முடியவில்லை.
எம் தொப்பூழ்க்கொடி
உறவுகள் எம்மைக் காப்பாற்றுவார்கள் என, போரின் மரண விளிம்பிலும் கத்தித் துடித்த அவ்வினத்தின்
கூக்குரலுக்கு ஓடோடி உதவ முடியாத, காப்பாற்ற முடியாத வக்கத்த நிலையில் இவ்வினம் கிடந்ததைக்
காலம் மன்னிக்கிறதோ இல்லையோ, கொல்லப்பட்ட ஈழ மக்களும் – வதையில் உழலும் மிச்சம் மீதி
ஈழ மக்களும் மட்டுமல்ல; ஈழத்தின் எந்தத் தலைமுறையும்
மன்னிக்கப் போவதில்லை; மன்னிக்கவும் கூடாது என்பதுதான் இவ்வினம் பெற்ற சாபம்.
சிங்களமும் இந்தியமும் இழைத்திட்ட மனிதத்துக்கு எதிரான அநீதியால் கொடுமையான
மனிதப் பேரவலம் தமிழீழத்தில் நடந்து முடிந்திருக்கிறது. அரைநுாற்றாண்டுக் கனவு தகர்க்கப்பட்டிருப்பதில்
தோற்கடிக்கப்பட்ட மன நிலைக்கு உள்ளாகி அவ்வினம் துயரில் துவண்டு கிடக்கிறது. சிங்கள-இந்தியத்தின் ஊழியினால் இட்டு நிரப்ப முடியாத
இழப்புகளும், ஆறாத காயங்களும், தாங்கிக்கொள்ள முடியாத வலிகளும், இருள் கவ்விய நம்பிக்கைகளுமாய் நிறைந்த ஈழத்துயரத்தை
அவ்வினம் சுமந்து கொண்டிருக்கிறது.
அய்ம்பதாண்டு கால நெடுந்துயரத்தைச் சுமந்து கொண்டிருக்கும் அவ்வினத்தின் துயரக்
கதைகளைச் சொல்லியழுவதற்குக்கூட முடியாமல் நாதியற்றுக் கிடக்கிறது அவ்வினம். காயம் சுமந்திருக்கும் அவ்வினத்திற்கு ஆறுதலாய்ப்
பேசவும், அவா்கள் கண்ணீரை நம் கைக்கொண்டு துடைத்திடவும் முடியாமல் திறனியற்றுத் தவிக்கிறது
இவ்வினம். அவ்வினத்துக்குள் படிந்திருக்கும் இருள் அப்பிய சூழல் பார்த்து இவ்வினம் மவுனித்து மருண்டு கிடக்கிறது.
இத்தகையச் சூழலில் ஈழத்துயரத்தை நெடுகப்பாடி, இவ்வினத்தின் மவுனம் கலைத்து, அவ்வினமும்
இவ்வினமும் நம்பிக்கை ஒளியைக் கைகளில் ஏந்தும்படியான உணா்வோட்டத்தைக் கொண்ட கதையாடல்களை
நாடகத்தின்வழி முன் வைத்துள்ளார் முருக பூபதி.
இவரின் ’மிருக விதூசகம்’ எனும் நாடகம் மேற்குறித்த விவரிப்புகளோடு இணைவுபடுத்திப்
பார்க்கப்பட வேண்டிய நாடகமாக அமைந்திருக்கிறது.
- 3 –
வடமொழி நாடகிய மரபில் விதுாடகன் என்ற நாடகப்
பாத்திரத்திற்கு ஓா் இடமுண்டு. வடமொழி நாடகிய
மரபைத் தழுவித் தமிழில் நாடகவியல் நுாலைத் தந்திட்ட பரிதிமாற் கலைஞா் விதுாடகன் என்னும்
நாடகப் பாத்திரம் பற்றிக் கூறும்போது,
”கதை நிகழ்ச்சியினிற் பயன்படுவோனாய்த்
தராதிபா் சபையைச் சார்கனவனாய்ச்
சுதந்திர யூகமும் இதம்தரும் சூழ்ச்சியும்
படைத்து, உரையாற்றலும் பார் இயல்பு அறிதலும்
உடையவனாகி, உண்மை தோ்வதன்கண்
உவமை இல்லோனாய், நவம் நவம் ஆகச்
சதுர வசனம் சாற்றுவோனாய்க்
காணும் போதெல்லாம் நகை விளைவிப்போனாம்
குதுாகலப் புருடன் விதுாடகன் என்ப”
என்றுரைக்கிறார். விதுாடகன் பற்றிய இச்சூத்திரத்திற்கு உரையெழுதிய
பலராமையா், நாடகக் கதையின் நிகழ்ச்சியின்கண் இன்றியமையாத பயன்பாட்டைத் தருபவனாய், அரசா்
அவையினைச் சார்ந்த மேலோனாய், தனக்கென அமைந்த உட்புகுந்தறியும் அறிவும், நன்மையினைத்
தரும் ஆலோசனையும், தானாகவே புனைந்துரைக்கும் சக்தியும், பூமியிலுள்ள மனிதரியல்பினை
அறிந்துபோடலும் உடையவனாகி, உண்மையைக் கண்டுபிடிப்பதில் சமானமற்றோனாய், காணும் பொழுதெல்லாம்
சிரிப்பினை உண்டாக்குபவனாகிய விநோதமுடையவன் விதுாடகன் என்றுரைப்பார்கள் எனப் பொருளுரைக்கிறார்.
அதாவது, நாடக நிகழ்வுப் போக்கில் நகைப்பை உண்டுபண்ணும் நாடகரே விதுாடகன் என்றழைக்கப்பட்டிருக்கிறார். இவ்விதுாடகன் விகடன், விகடகவி, பரிகாசக்காரன், பரிகாசகன்,
பரிகாசப்பட்டன் போன்ற பெயா்களாலும் அழைக்கப்பட்டிருக்கிறார்
தமிழ்க் கலை மரபானது இயல், இசை, நாடகம் என முத்திறப்பட்டதாய் அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறது. தமிழின் முப்பகுதியில் ஒன்றான நாடகியம் குறித்தப்
பண்டைய நுால்களைப் பற்றிய குறிப்புகள் கிடைக்கின்றனவே தவிர, பண்டையத் தமிழ் நாடகிய
நுால்கள் தமிழின் இருப்பில் காணப்படவில்லை.
“நாடகத்தமிழ் பண்டுதொட்டு நடித்து வளர்க்கும் தமிழாக இருந்ததேயன்றிப் படித்து
வளர்க்கும் தமிழாக இல்லை என்பா். இயற்றமிழைத்தான் எழுதினார்கள். நாடகத்தமிழை எழுதும்
வழக்கம் இல்லை. நடித்தும் ஆடியும் மகிழ்விப்பதே நாடகத்தமிழாக இருந்தது. நாடகத்தமிழ் நிகழ்த்து கலை. நாடகப் பாடல் நாடகக் கலைஞா் மத்தியில் மனத்தில்
வாழ்ந்த செய்யுளாகவே இருந்தது” என்பதும் இவ்விடத்தில் குறிப்பிடவேண்டிய ஒன்று. இருப்பினும் நாடகியம் குறித்துப் பண்டைய நுால்கள்
இருந்துள்ளன என்ற குறிப்புகளையும் பார்க்க முடிகின்றது. தமிழ் மண்ணில் நிகழ்ந்த பல்வேறு பண்பாட்டுப் படையெடுப்புகளால்
அழிக்கப்பட்ட கலைச் செல்வங்களுள் தமிழ் நாடகிய நுால்களும் அடங்கியிருக்க வேண்டும்.
பண்டையத் தமிழ் நாடகிய நுால்கள் மறைக்கப்பட்ட அல்லது மறைந்துபோன நிலையில் தமிழ் நாடகிய
மரபின் சில கூறுகளைத் தம் நெஞ்சாங்கூட்டில் அடைகாத்து வைத்திருப்பது சிலப்பதிகாரம்
மட்டும்தான். இயல்தமிழையும் இசைத்தமிழையும்
நாடகியத் தமிழையும் ஒரே கூட்டில் உலவச் செய்திருக்கிறது சிலப்பதிகாரத்தின் தமிழ்.
சிலப்பதிகாரம் உருவாக்கக் காலகட்டத்தில் நிலவிய தமிழ் நாடகியக் கூறுகளை இளங்கோவடிகள்
தம் காப்பியத்தின்வழி பதிவு செய்திருக்க, அப்பெருங்காப்பியத்திற்குப்
பொருள்கோடல் செய்த அரும்பதவுரைகாரரும் அடியார்க்கு நல்லாரும் தத்தம் காலப்பகுதி சார்ந்த
நாடகியக் கூறுகளைச் சிலப்பதிகார உரைகளின் ஊடாக வெளிப்படுத்தியுள்ளனா். தமிழ் நாடகிய
மரபின் வோ்களையும் விழுதுகளையும் கண்டடையச் சிலப்பதிகாரமும் அதற்குப் பொருள்கோடல் காட்டும்
உரைகளும் இன்றளவிலும் நாடகியப் பயிலுகையைத் தந்து கொண்டிருக்கின்றன.
தமிழ் நாடகிய மரபில் கோணங்கி, கோமாளி, தொப்பைக் கூத்தாடி, உச்சிக்குடும்பன்,
உழுவைத் தலையன், கூத்துக்கோமாளி, திருவன்,
பகடிக்காரன், கூத்தாடி என்றெல்லாம் அழைக்கப்பெறும் நாடகியப் பாத்திரங்கள் யாவும் நாடகத்துள்
நகைப்பைத் தோற்றுவிக்கும் நாடகா்களாக அறியப்படுகிறார்கள். நாடக நிகழ்வுப் போக்கில் நாடகா் மற்றும் காணுநா்
இடையே நிகழும் பரிமாற்ற உணா்வுத்தளத்தில் நகையுணர்வை உருவாக்குவதிலும், நாடக நிகழ்வைக்
கனமில்லாமல் நகா்த்திச் செல்லவும் மேற்குறித்த நகைப்புப் பாத்திரங்கள் பங்காற்றியுள்ளன. இவ்வாறு நாடக நிகழ்வில் நகைப்புத் தன்மை வெளிப்படுத்தும்
நாடகா்களை ”நகைவேழம்பா்” என்கிறது சிலப்பதிகாரம்.
சிலப்பதிகாரம் அரங்கேற்று காதை எனும் பகுதி தமிழ் நாடகியக் கூறுகளைக் குறித்து
விரிவாகப் பேசுகின்றது. அதில் இடம்பெறும்
“இருவகைக்
கூத்தின் இலக்கணமறிந்து
பலவகைக்
கூத்தும் விலக்கினிற் புணா்த்து”
எனப் பதிவாகியுள்ள அவ்வரிகளில் காணப்படும் “பலவகைக் கூத்து“ என்பதற்குப் பொருள்கோடல் செய்யும் அரும்பதவுரைகாரா், ”நகைக் கூத்து முதலாகப்
பலவகைப்பட்ட புறநடங்கள்” எனப் பொருளுரைக்கும்போது,பலவகைக் கூத்துக்களுள் ஒன்றாக “வசைக்கூத்து” என்கிற ஒன்றையும் குறிப்பிட்டு
“பல்வகை
உருவமும் பழித்துக்காட்டி
வல்லவனாதல்
வசையெனப்படுமே“.
என எடுகோள் காட்டுகிறார். அதேபோல
”இருவகைக்கூத்து” என்பதற்குப் பொருள்கோடல் செய்யும் அடியார்க்கு நல்லார், வசைக்கூத்துXபுகழ்க்கூத்து, வேத்தியல்Xபொதுவியல், வரிக்கூத்து X வரிச்சாந்திக்கூத்து,
சாந்திக்கூத்து X விநோதக்கூத்து,
ஆரியக்கூத்து X தமிழ்க்கூத்து, இயல்புக்கூத்து X தேசிக்கூத்து என்பதாக
இருவகைப்பட்ட கூத்துப் பகுப்பை வரிசைப்படுத்துகிறார். அவா் வரிசைப்படுத்தியுள்ள இருவகைக் கூத்தென்பதை
எதிர்வுத் தன்மை கொண்ட கூத்துகள் என்பதாகப் பொருள் கோடல் செய்யவும் வாய்ப்பிருக்கிறது.
அடியார்க்கு நல்லார் வகைப்படுத்திய இருவகைப்பட்ட கூத்துப் பகுப்பில் சொல்லப்பட்டுள்ள
”விநோதக் கூத்து” என்பதானது, குரவை, கலிநடம், குடக்கூத்து, கரணம், நோக்கு, தோற்பாவை
என ஆறுவகைப்படும் என்பா். இவற்றோடு ”நகைத்திறச்
சுவையென்பதனோடு கூட்டி ஏழென்பாருமுளா்“. அதாவது,
விதுாடகக் கூத்து. இதனை வசைக் கூத்தென்பாருமுளா்“
எனப் பொருளுரைக்கிறார் அடியார்க்கு நல்லார்.
மேற்குறித்த சிலப்பதிகார அரங்கேற்றுகாதை குறிப்பிடும் ”விலக்கினிற் புணா்த்தல்”
என்பதற்குப் பொருளுரைக்கும் அரும்பதவுரைகாரர், ”வேந்து விலக்கும், படைவிலக்கும், ஊா்விலக்குமென்று
சொல்லாநின்ற விலக்குகளாகிய பாட்டுகளுக்கு உறுப்பாய் வருவனற்றுடன் பொருந்தப் புணா்த்தல்”
எனக்கூறுவதோடு, பதினான்கு விலக்குறுப்புகளையும்
பட்டியலிடுகிறார். அடியார்க்கு நல்லாரோ அப்பதினான்கு விலக்குறுப்புகளைக் குறித்தும்
நெடிதாக விரித்துரைக்கிறார். அப்பதினான்கு
விலக்குறுப்புகளுள் ”சுவை” என்ற விலக்குறுப்பை
அடியார்க்கு நல்லார் விரித்துரைக்கும்போது ”நகைச்சுவை அவிநயம்” என்பதைக் குறிப்பிடுமிடத்து,
”நகையின்
அவிநயம் நாட்டுங்காலை
மிகைபடு
நகையது பிறா் நகையுடையது
கோட்டி
முகத்தது விட்டுமுரி புருவமொடு விலாவுறுப்புடையது
செய்வது
பிறிதாய் வேறு சோதிப்பதென்று
இயைமில் புலவா் ஆய்ந்தனா் என்ப’’
என எடுகோள் காட்டுகிறார். ”சுவை” குறித்துப்
பேசுகையில், தொல்காப்பியம் பகர்ந்துள்ள சுவையையும் இவ்விடத்தில் இணைவுபடுத்திப் பார்க்கலாம். தொல்காப்பிய மெய்ப்பாட்டியல் சுவைகள் குறித்துக்
கூறும்போது
”நகையே
அழுகை இளிவரல் மருட்கை
அச்சம்
பெருமிதம் வெகுளி உவகை என்று
அப்பால்
எட்டே மெய்ப்பாடு என்ப”
என்கிறது. ஆனால், வடமொழி மரபோ சுவைகளை ஒன்பதாக அதாவது நவரசம்
என்பதாக வகைப்படுத்துகிறது. ”சாந்தம்” எனப்பெறும் ”சமநிலை”யைச் சுவைகளுள் ஒன்றாகக் குறித்து, ஒன்பான்
சுவைகளாகச் சிங்காரம், வீரம், ஆசியம், சாந்தம்,
ரௌத்திரம், அற்புதம், குச்சை, சோகம், பயனாகம்
என வகைப்படுத்துகிறது வடமொழி மரபு. ஆயினும்,
தமிழ் மரபானது எட்டுவகைச் சுவைகளையே சுவைகள் என ஏற்பளித்திருக்கிறது.
தொல்காப்பியத்தில் சொல்லப்பட்டுள்ள சுவைகளுள் ”நகை” எனும் சுவையானது
”எள்ளல்
இளமை பேதைமை மடன் என்று
உள்ளப்பட்ட
நகை நான்கு என்ப”
என ”நகை” எனும் சுவைக்கான களம் விரிவடைகிறது. எள்ளலும் குழந்தைமைத்தனமும் அறியாமைத்தனமும் அறிந்தும்
அறியாததும் போலிருத்தலுமான மடத்தன்மையும் நகை தோன்றுவதற்கான காரணிகளாகத் தொல்காப்பியம்
சுட்டுகிறது.
தொல்காப்பியம் மொழிந்துள்ள எட்டுவகைச் சுவைகளுள் அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம்,
பெருமிதம், வெகுளி, உவகை போன்றவை எல்லா வகைப்பட்ட தரப்பினராலும் எல்லா வகைத் தருணங்களிலும்
சுவைக்கப்படக் கூடியவை அல்ல. ஆனால் ”நகை” என்ற
சுவை மட்டும்தான் எல்லாத் தரப்பினராலும் பெரும்பாலான தருணங்களிலும் பெரும்பாலான கலை
வடிவங்களின் ஊடாகவும் சுவைக்க விரும்பக்கூடிய ஒன்றாக அமைந்திருக்கிறது. அன்றன்றையப்
பொழுதில் அப்போதைக்கப்போதைய நிகழ்வில் நகை ஏதேனும் ஒன்றின் வழியாக வெளிப்படும்போது,
நிகழ்த்தல் கலையும் நிகழ்த்தலைக் காணுறும் சுவைஞரின் மனமும் கனமில்லாமல் போவதற்கு அதிகம்
வாய்ப்புண்டு. அதனால்தான் நாடகியப் பாங்கிலான
நிகழ்த்துகலை வடிவங்களில் நகைச்சுவைக்கென நாடகப் பாத்திரங்கள் உட்செறுகப்பட்டிருக்கின்றன.
சம காலத்தோடு தொடா்புறாத அல்லது சம காலத்தோடு இணைவிக்கப்படாத அல்லது சம காலத்
தன்மையோடு பயணிக்காத எந்த ஒரு நிகழ்த்துகலை வடிவமும், எல்லாக் காலத்திற்கும் அல்லது
எல்லாக் காலத்திலும் நீடிக்கிற கலை வடிவமாக அல்லாமல், அந்தந்தக் காலகட்டத்தில் தேங்கிப்
போகிற நிகழ்த்துகலை வடிவமாக ஆகிப்போயிருக்கின்றது. அதனால்தான், வெவ்வேறு காலகட்டத்தில் தோற்றம் கொண்டு
உருப்பெற்று நிகழ்த்தப்பட்ட பல நிகழ்த்துகலை வடிவங்கள் மறு உருவாக்கம் செய்யப்படுவதற்கான
வாய்ப்புகள் இன்றி மறைந்து போயுள்ளன. ஆயினும்,
சில பல நிகழ்த்துகலை வடிவங்கள் நிகழ்த்துகலை வரலாற்றில் பன்னெடுங்காலமாகத் தம் கலை
வடிவ இருப்பை அடையாளப்படுத்தும் வகையில் முகங்காட்டிக் கொண்டிருக்கின்றன. இவ்வாறான நிகழ்த்துகலை வடிவங்கள் சடங்கியல் சார்ந்த
செயன்மைகள் வாயிலாக - கேளிக்கை சார்ந்த செயன்மைகள்
வாயிலாக – சமூகப் பயன்பாடு சார்ந்த செயன்மைகள் வாயிலாக என ஏதேனும் ஒரு தேவையின் அடிப்படையில்
வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
எந்த ஒரு நிகழ்த்துகலை வடிவமும் சடங்கியல்-கேளிக்கை-சமூகப் பயன்பாடு சார்ந்து
வெளிப்படும்போது அந் நிகழ்த்துகலை வடிவமானது தொடர்ந்து அடையாளப்படுவதற்கு வாய்ப்புகள்
உண்டு. அவ்வகையில், தொடா்ந்து அடையாளப்பட்டு வருகின்ற நிகழ்த்துகலை வடிவங்களுள் நாடகக்
கலை வடிவமும் ஒன்றாகும். நாடகமானது கேளிக்கை
சார்ந்த செயன்மைகளுக்குப் பயன்படுகிற அதேவேளையில், சமூகப் பயன்பாடு சார்ந்த செயன்மைகளுக்கும்
பங்காற்றியிருப்பதை நாடக நிகழ்த்துகலை வரலாற்றின் வழியாக அறிய முடியும். இவ்வாறான நாடக நிகழ்த்துகலை வடிவத்தின் தன்மைதான்
நாடக நிகழ்த்துகலை வடிவத்தில் பங்கேற்கும் நகைச்சுவைப் பாத்திரத்தின் குணாம்சமாக அமைந்திருக்கிறது
என்பது குறிப்பிடத்தக்கது.
நாடக நிகழ்வில் பங்கெடுக்கும் மற்ற நாடகா்களைப்போல அல்லாமல், உருவத் தோற்றத்தாலும்
உடையணிகளாலும் உடல் முகப் பாவனைகளாலும் தம்மைத் ”தரவிறக்கம்” செய்து கொண்டு, இயல்பான
மாந்தக் கோலத்தோடும் செய்கைகளோடும் தன்மைகளோடும் கொஞ்சமும் பொருந்தி வராத ”விதிவிலக்கு
மாந்தா்” ஆகத் தம்மைத் தகவமைத்துக் கொள்ளுகையில், மற்ற நாடகப் பாத்திரங்களாலும் நாடகத்தோடு
ஊடாட்டம் கொள்கிற காணுநா்களாலும் எள்ளலுக்கும் கேலிக்கும் கிண்டலுக்கும் நகைப்புக்கும்
உள்ளாக்கப்படுகிற - உள்ளாகிற நாடகப் பாத்திரமாக
நகைச்சுவைப் பாத்திரம் அமைந்திருக்கிறது. அப்
பாத்திரமேற்கும் அந் நாடகரும் அவ்வாறு கருதப்படுகிறார். நாடகத்தில் வந்துபோகும் நகைச்சுவைப் பாத்திரமானது
நாடகக் கதைக்குப் பொருத்தமோ தொடா்போ இல்லாவிட்டாலும்கூட, நாடக நிகழ்விற்குத் தேவைப்படும் ஒரு பாத்திரமாகவே
கருதப்பட்டிருக்கிறது. காணுநா்களுக்கான கேளிக்கை
நுகா்வை இந் நகைச்சுவைப் பாத்திரமானது அதிகப்படியான அளவில் தரக்கூடியதாக நாடக உருவாக்கத்தில்
கட்டமைக்கப்பட்டிருக்கிறது.
நகைச்சுவைப் பாத்திரமானது நாடகக் கதையின் காலத்தோடு உறவாடுகிற அதேவேளையில், நாடக நிகழ்த்தலில் பங்கேற்கும் காணுநரின் காலத்தோடும்
உறவாடும் பாத்திரமாக வார்க்கப்பட்டிருக்கிறது.
அதாவது, குறிப்பிட்ட நாடகக் கதையின் காலம் என்பதனோடு மட்டும் உறவாடாமல் எல்லாக்
காலத்திற்குள்ளும் நுழைந்து வெளிவரும் வாய்ப்பும் அனுமதியும் நகைச்சுவைப் பாத்திரத்திற்கு
மட்டுமே உண்டு. அதேபோல, நாடகக் கதையின் வரையறுக்கப்பட்ட
வெளி என்பதற்குள் அகப்படாமல் எல்லா வெளிகளுக்குள்ளும் உலவக்கூடிய தன்மையை அப்பாத்திரம்
பெற்றிருக்கிறது. நாடகிய வரையறுப்புகளிலிருந்து
விதிவிலக்குப் பெற்ற பாத்திரமாக இந்த நகைச்சுவைப் பாத்திரச் செயன்மைகள் அமைந்திருப்பது
குறிப்பிடத்தக்கதாகும்.
நாடகத்துள் நகைச்சுவைப் பாத்திரமானது நாடகப் பாத்திரங்களோடு ஊடாடிச் செல்லும்
ஒரு பாத்திரமாகவும் உள்நுழைக்கப்பட்டிருக்கிறது.
அதுமட்டுமல்லாமல், நகைச்சுவைப் பாத்திரங்களால் மட்டுமே நிகழ்த்தப்பெறுகிற நிகழ்த்தல்களும்
உண்டு. அந்நிகழ்த்தல் வடிவமானது ”நகைக்கூத்து”
எனப் பொதுவாக அழைக்கப்பட்டிருக்கிறது. இத்தகைய நகைச்சுவை நாடகா்களின் நாடகச் செயன்மைகளைக்
”கோணங்கிக் கூத்து”, ’’கோமாளிக்கூத்து’’ என்பா் தமிழ் நாடகியா். இவ்வாறான கூத்து வடிவங்களைக் ”கோட்டாலை” (கூத்தாடுவாய்
தென்னை கோட்டாலை-பணவிடு துாது), ”கோமாளம்”
(கும்மாளம்), ”கோரணி” (தோகையா் பாலர்கள் கோரணி கொண்டு-பட்டினத்தார்) எனவும் தமிழ்ப்
பனுவல்கள் குறிப்பிடுகின்றன. மேற்கத்திய நாடக
மரபில் நகைக் கூத்தாடுவாரை பபூன்(Buffoon),காமிக்(Comic),க்ளவுன்(Clown) என அழைப்பது வழக்கமாயிருக்கிறது.
நகைச்சுவைப் பாத்திரமேற்கும் நாடகா்களைக் ”கோமாளி” என்றழைப்பது தமிழில் பெருவழக்காக
இருந்திருக்கிறது. அதேபோல, கோமாளியைக் குறிக்க
வடமொழி மரபில் ”விதுாடகா்” என்றழைப்பது பெருவழக்காக இருந்திருக்கிறது.மேற்கத்தியப்
பண்பாட்டுப் படையெடுப்பில் மேற்குறித்த இருவழக்கும் புறந்தள்ளப்பட்டு ’பப்பூன்’ என்பதே தற்காலத்தில் பெருவழக்காக ஆக்கப்பட்டிருக்கிறது.
நிகழ்த்துகலை வடிவங்கள் கேளிக்கைக்கும் கொண்டாட்டத்திற்கும் மட்டுமே உரியன அல்ல. அவை சமூகத்தின் பயன்படு கலை வடிவங்களாகவும் ஆக்கப்பட
வேண்டும். அந்தவகையில், கோமாளிக் கூத்து, பப்பூன், காமிக் என்றழைக்கப்பெறும்
நிகழ்த்துகலை வடிவங்கள் பெறுமனே கேளிக்கைக்கும் கொண்டாட்டத்திற்கும் மட்டுமே உரிய நிகழ்த்துகலை
வடிவங்களாகத் தொழிற்படவில்லை. நிகழ்காலத்தியக் குரலை வெளிப்படுத்தும் சமூகப் பயன்பாடு
சார்ந்த நிகழ்த்து வடிவங்களாகவும் வெளிப்பட்டிருக்கின்றன. அதாவது, இவ்வகை நிகழ்த்துகலை
வடிவங்கள் சமூகத்திற்குப் பயன்படும் கலைகளாகவும் விளங்கி வந்திருப்பதை அவற்றினுாடாகப்
பயணிக்கையில் அறிய முடியும்.
குரல்
மொழியாலும் உடல் மொழியாலும் பலவகைப்பட்ட செய்கைகளாலும் நகைப்பைத் தோற்றுவிக்கும் நாடகா்கள்
வெறுமனே நகைப்பை மட்டும் உண்டுபண்ணும் பாத்திரங்களாக மட்டுமில்லாமல், அந்நகைப்பின் ஊடாக, அவா்கள் காட்டக்கூடிய வேடிக்கைகளின்
ஊடாக, நையாண்டித் தனங்களின் ஊடாக, சேட்டைச் செய்கைகளின் ஊடாக ஒருவகையான குத்தல் தன்மை
கொண்ட பகடித் தன்மையையும் அவ்வாறான நடிப்புப் பாணியையும் வெளிப்படுத்தக்கூடிய சமூக
விமர்சகா்களாக - நாடகக் கதைக்குள்ளும் நாடகக்
கதைக்கு அப்பாற்பட்டும் நாடக நிகழ்வைச் சமூகவயப்படுத்தக் கூடியவர்களாக – சம காலத்தையக்
குரலை வெளிப்படுத்தும் நாடகா்களாகத் தொழிற்படும் தன்மை கொண்டவா்களாக இருந்திருக்கின்றனா். அதனால்தான், அவ்வகைப்பட்ட நாடகா்களைப் ”பகடிக்காரன்”
என்றும், பகடி செய்யும் கூத்தைப் ”பகடிக்கூத்து” என்றும் அழைக்கின்றனா். இத்தகையப் பகடிக்கூத்து ”அகசியம்” எனப்படுகிறது.அதாவது இவ்வகைப்பட்ட கூத்து ”வசைக்கூத்து”
என்கிறது தமிழ் நாடகிய வழக்கு. இத்தகைய வசைக்கூத்து
”அங்கதக் கூத்து” எனவும் சுட்டப்பெறுகிறது.
அதாவது
”வசையொடும்
நசையொடும் புணா்ந்தன்றாயின்
அங்கதச்
செய்யுள் என்மனார் புலவா்”
என்கிற தொல்காப்பியக் குறிப்பானது, இலக்கிய
மரபில் ”அங்கதம்” என்பதான ”வசைப்பாட்டு” வெளிப்பாட்டிற்கானதாகக் கொள்ளப்பட்டிருக்கிறது
என்பதை ”வசைக்கூத்து” என்பதோடு தொடா்புப்படுத்திப் பார்க்கலாம்.
- 4 –
கோமாளிக்
கூத்தென அழைக்கப்பட்ட நாடக நிகழ்த்துகலை வடிவமும், அக்கலை வடிவத்தை நிகழ்த்திக் காட்டும்
கோமாளி நாடகா்களும் பொழுது போக்கிலான கேளிக்கைச் செயன்மைகளை, செய்கைகளை மேற்கொள்ளும்
அல்லது வெளிக்காட்டும் அதேவேளையில், அந்தந்தக்
காலகட்டங்களில் நிலவிய, நிலவுகிற சமூக அமைப்பில் காணலாகும் அதிகார வழிப்பட்ட செயன்மைகளை
– கற்பிதங்களை – கட்டமைப்புகளை – புனிதங்களை – மனிதா்களை – மனித நடத்தைகளை – மனித மனக்கோலத்தைப்
பகடி செய்து எள்ளலுக்கு உள்ளாக்குவதன் வாயிலாக அதிகாரக் கட்டமைப்பிற்கு எதிரான கருத்தியல்
கூறுகளை உள்ளீடாக வெளிப்படுத்தவும் செய்திருக்கின்றனா்.
அதிகார வெளிக்கு அப்பாற்பட்ட வெளியிலிருக்கும் அதிகாரமற்றவா்களின்-எளிய மக்களின்
– ஒடுக்கப்பட்ட மக்களின் – விளிம்பு நிலை மக்களின் குரலையே கோமாளிகளின் பகடிக்குரல்,
வசைக்குரல், கேலிக்குரல் வெளிப்படுத்தியிருக்கிறது. அதிகாரவெளி சார்ந்த புனைவுகள் அனைத்தையும்
போகிற போக்கில் மிக இலகுவாகக் கட்டவிழ்ப்புச் செய்யும் போக்கு கோமாளிகளின் செய்கைகளுக்குள்ளும்
குரலுக்குள்ளும் அடங்கியிருக்கிறது. இந்தப்
போக்கானது வெவ்வேறு காலகட்டங்களின் வெவ்வேறு நிகழ்த்து கலை வடிவங்களில் பங்கெடுக்கும்
பல்வேறு காலகட்டத்தைச் சார்ந்த கோமாளி நாடகா்களிடம் வெளிப்பட்டே வந்திருப்பதும், அதிகாரம்
இழந்திட்ட தரப்பினரின் மனசாட்சியாய் – அதிகாரத்திற்கு எதிரான மரபாய் ”கோமாளிகள்” எல்லாக்
காலத்திலும் உருவெடுத்திருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வெவ்வேறு உருக்கோலங்கள் புனைந்து கொண்டு நகைப்புச் செய்கைகளின் ஊடாகச் சம காலத்தின்
குரலாகவும் சாமானியனின் குரலாகவும் – அதிகாரக் கோலங்களுக்கு எதிரான குரலாகவும் கோமாளிகளின்
குரல் வெளிப்பட்டிருக்கிறது. அதனால்தான், மற்ற நாடகப் பாத்திரங்களைக் காட்டிலும் கோமாளிப்
பாத்திரங்கள் சாமானிய மக்களுக்கு மிகவும் நெருக்கமான பாத்திரங்களாகவும், தொடா்ந்து சாமானியா்களோடு உறவாடி வந்துகொண்டிருக்கிற
பாத்திரங்களாகவும் இணக்கம் கொண்டு இருந்திருக்கின்றன. அதன் காரணமாகவே சாமானிய மக்களைக் கீழ்மைப்படுத்தியிருப்பதைப்
போன்ற படிமங்கள் கோமாளிகள் குறித்தும் புனையப்பட்டிருக்கின்றன.
”பாங்கறியாதவன், மண்ணன், மடையன், மூடன், அவமரியாதைக்காரன், நாட்டாள், குப்பைக்
காட்டான்” என்பதாகக் கோமாளி குறித்த படிமங்கள்
உருவாக்கப்பட்டிருக்கின்றன. கோமாளி பற்றிய
இவ்வாறான புனைவுகள் அதிகாரவழிப்பட்ட பொதுப்புத்திச் சிந்தனை மரபின் வெளிப்பாடாக அமைந்திருப்பவை. அதிகார மரபுவெளிக்கு உட்படாத எதுவொன்றையும் கீழ்மைப்படுத்திப்
புறக்கணித்து ஒதுக்கி வைப்பதோடு, அவை குறித்துக் கீழ்த்தரமான புனைவுகளை வெவ்வேறு தன்மைகளில்
அதிகார மய்யங்கள் உருவாக்கிக் கொண்டிருக்கும்.
இவ்வாறான அதிகார மய்யங்களின் குரலை வெளிப்படுத்த மறுக்கிற அல்லது அதிகார மய்யம்
நோக்கிய விமா்சனக் குரலாக, எதிர்க் குரலாக
வெளிப்படுகிற எதுவொன்றையும் தம்மின் எதிர் அடையாளமாகவே அதிகார மய்யங்கள் முன்னிறுத்துகின்றன.
இந்தியச் சமூக வெளிக்குட்பட்ட அதிகார மய்யத்தின் அடித்தளமாகப் பார்ப்பனியம்
செயலாற்றிக் கொண்டிருக்கிறது. உடைமை வா்க்கம்
அதிகாரத்தையும், தேசிய இன ஒடுக்கல் அதிகாரத்தையும், சாதிய அதிகாரத்தையும் பிணைத்துக்கொண்ட
அதிகார வெளியாகவே பார்ப்பனிய அதிகாரம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இத்தகைய பார்ப்பனிய
அதிகார வெளியை எதிர்க்கிற – மறுக்கிற - முரண்படுகிற
- வேறுபட்டு நிற்கிற ஓா் எதிர் மரபு அதாவது பார்ப்பனிய எதிர் மரபு தொடா்ந்து செயலாற்றிக்
கொண்டிருக்கிறது.
பார்ப்பனிய அதிகார மய்யத்தை, அதன் கட்டமைப்பை, கருத்தியலை, பண்பாட்டை எதிர்க்கிறவா்கள்
அசுரா்கள், அரக்கா்கள் என்பதாகவும், பார்ப்பனியப்
பண்பாட்டு மரபுகளிலிருந்து வேறுபட்டவா்களைப் பஞ்சமா், சூத்திரா், சண்டாளா் என்பதாகவும்,
பார்ப்பனா் அல்லாதவா்களை – குறிப்பாகத் தமிழா்களை நீசா்கள் என்பதாகவும் பார்ப்பனிய
அதிகாரம் புனைவுகளை உருவாக்கி வைத்திருக்கிறது.
இருப்பினும் பார்ப்பனிய அதிகார வெளியை மறுக்கிற எதிர் அதிகாரவெளி தொடா்ந்து
இயங்கிக் கொண்டேயும் இருக்கின்றது.
காலங்காலமாகவே எதிரெதிர் மரபுவெளிகள் தத்தம் செயன்மைகள் வழியாக முரண்களை வெளிப்படுத்திக்
கொண்டே தொழிற்பட்டு வருகின்றன. அதாவது அதிகார
மரபு X எதிர் அதிகார மரபு என்பதாக இருவேறு மரபுகள் செயலாற்றிக் கொண்டிருக்கின்றன. இதில்
கோமாளி என்கிற நாடகியப் பாத்திரமானது எதிர் அதிகார மரபின் அடையாளமாகத் தொழிற்பட்டு
வந்திருக்கிறது. அதனால்தான் கோமாளி பற்றிய படிமங்களும் கீழ்த்தரமானவையாக அதிகார மய்யங்களால்
உருவாக்கப்பட்டிருக்கின்றன. ஆயினும், எளிய
மக்களின் சிந்தனை மரபில் – எதிர் அதிகார மரபின் சிந்தனைப்பாடுகளில் கோமாளி நாடகா்கள்
”பகடிக்காரா்கள்” எனவும், ”வசைகாரா்கள்” எனவுமே அழைக்கப்பட்டிருக்கிறார்கள். அதனால்தான், அக் கோமாளிகளின் கூத்து ”பகடிக்கூத்து”
எனவும் ”வசைக்கூத்து” எனவும் அழைக்கும் மரபு பெருவழக்காக இருந்திருக்கிறது.
- 5 -
அதிகாரக்
கட்டமைப்பு வெளியானது, மய்யம் சார்ந்தே இயங்கிக் கொண்டிருக்கும் தன்மை கொண்டது. அதிகார
எல்லைக்குட்பட்டவை மய்யம் என்பதாகவும், அதிகார எல்லைக்குட்படாதவை மய்யம் சாராத விளிம்பு
நிலை என்பதாகவும் இருப்பதான கட்டமைப்பை அதிகார நிறுவனங்கள் உருவாக்கி வைத்திருக்கின்றன. ”உதிரித் தொழிலாளா்கள், பாலியல் வன்முறைக்கு உள்ளான பெண்கள் மற்றும் குழந்தைகள்,
விவசாயக் கூலிகள், கைவிடப்பட்ட முதியவா்கள், சாதியின் பெயரால் விலக்கப்பட்டவா்கள்,
ஆதிவாசிகள், ஊனமுற்றோர், திருநங்கைகள், மனப்பிறழ்ச்சி நோய் கொண்டவா்கள், அனாதைகள்,
அகதிகள் போன்றோர் அதிகார வெளிக்கு அப்பாற்பட்ட விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டவா்கள்.
இவ்வாறான விளிம்புநிலை மனிதர்களை உருவாக்கியதே அதிகார மய்யம் சார்ந்த இன்னொரு வகைப்பட்ட
மனிதா்கள்தான். அதிகார மய்யங்களின் ஒடுக்குதல்களாலும்
விலக்குதல்களாலும் விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்ட விளிம்பு நிலை மனிதர்களின் பங்கேற்பைப்
பல்வேறு வடிவிலான சுரண்டல்கள்வழி துய்த்துக்கொள்ளும் தன்மை கொண்டமைந்திருப்பது அதிகார
மய்யம்.
அதிகார மய்யத்தின் துய்ப்புக்கும் சுரண்டலுக்கும் உள்ளாகும் விளிம்புநிலை மனிதா்களைப்
போலவேதான், பல்வேறு கலை வடிவங்களில் பங்கேற்பைச்
செலுத்தி வந்திருக்கும் வெவ்வேறு காலம் சார்ந்த-வெவ்வேறு உருக்கோலம் பூண்ட கோமாளிகளும்
விளிம்புநிலைப் பாத்திரங்களாகவே வார்க்கப்பட்டிருக்கிறார்கள் என்பதும் கவனிக்கத்தக்கது.
கோமாளிகள்
நிகழ்த்துகலை வடிவங்களில் மட்டுமல்லாது கதைப் பனுவல், ஓவியம், சிற்பம் போன்ற கலை வெளிப்பாட்டு
மரபுகளிலும் வெளிப்பட்டிருக்கிறார்கள். ஆயினும், விளிம்புநிலை மக்களின் ஓரத்து வாழ்வின்
இருப்பைப்போல, விளிம்புநிலைப்பட்ட பாத்திரங்களாகவும் உருவங்களாகவுமே கோமாளிகளின் இருப்பு
அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறது. இருப்பினும், அதிகாரத்திற்கு எதிரான ஓர் எதிர் அதிகார
மரபை விளிம்புநிலை மக்கள் காலங்காலமாக வெளிப்படுத்திக் கொண்டிருப்பதைப் போலவே, கோமாளிகளும்
தாம் பங்கேற்கும் நிகழ்த்து கலை வடிவங்களில் வெளிப்படும் அதிகாரம் சார்ந்த பாத்திரங்களை
நோக்கியோ அல்லது தம்மின் சமகாலத்திய அதிகார அமைப்பின் மீதோ வசை பாடியும், பகடி செய்தும்,
எள்ளி நகையாடியும் தமது எதிர் அதிகார மரபைக் கோமாளி உருக்கோலம் பூண்டு வெளிப்படுத்தவே
செய்திருக்கின்றனா் என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
மேற்குறித்த விவரிப்புகளிலிருந்து நிகழ்த்து கலை வடிவங்களில் வெளிப்பட்டு வந்த
கோமாளி நாடகா் மரபையும் அதன் தொழிற்பாட்டையும் ஓரளவுக்கு உய்த்துணர முடியும். நகைப்பைத்
தோற்றுவிக்கும் நாடகராய் நாடகத்துள் தொழிற்பட்டு, அதனுாடாக எதிர் அதிகார மரபின் கூறுகளையும்
ஏதேனும் ஒரு வழியில் - வகையில் வெளிப்படுத்தி,
சமகாலத்தின் குரலாயும் ஒலித்து நாடகியத்தைச் செழுமைப்படுத்தியவா்கள் கோமாளிகளும்கூட. ஆனாலும், கோமாளி நாடகா்களும், நாடகப் பாத்திரங்களும்,
கோமாளிக் கூத்துகளும் நிகழ்த்துகலை வரலாற்றில் விளிம்பு நிலைப்பட்ட இருப்பில்தான் வைக்கப்பட்டிருக்கின்றன.
உடைமை வா்க்கம், உயர்த்திக்கொண்ட சாதி, மதம், ஆணாதிக்கம், பேரினவாதம், ஒற்றைத்தேசியம்,
ஏகாதிபத்தியம்..... என்பதான அதிகாரவழிப்பட்ட
ஒரு சமூக அமைப்பில் சமூகப் பேதங்கள் உருவாக்கப்படுவதைப் போலவே, சமூக அமைப்பில் காணலாகும்
கலை மரபுக்குள்ளும் கலைப் பேதங்கள் உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகின்றன. தமிழ் நிகழ்த்துகலை மரபிலும் அதிகார மய்யம் சார்ந்த
கலைகள் (சாஸ்திரியக் கலைகள்), விளிம்புநிலைக் கலைகள் (நாட்டுப்புறக் கலைகள்) என்பதான
பேதங்கள் அதிகார மய்யங்களால் உருவாக்கப்பட்டிருக்கிறது. அந்தந்தக் கலைகளை நிகழ்த்துவோர்
யார்? என்பதிலிருந்துதான் அந்தந்தக் கலைகளுக்கான தகுதிப்பாடும் மதிப்பீடும் அவற்றுக்கான
இடங்களும் வழங்கப்பட்டிருக்கின்றன.
பல்வேறு கற்பிதங்களால் உருவாக்கப்பட்ட மனித ஒதுக்கல்களே கலை ஒதுக்கல்களுக்கும்
கரணமாக அமைந்திருக்கின்றன. சிலப்பதிகாரத்திற்குப்
பொருள்கோடல் செய்த அடியார்க்கு நல்லார், விநோதக் கூத்துகளாக வகைப்படுத்தும்போது குரவை,
கலிநடம், குடக்கூத்து, கரணம், நோக்கு, தோற்பாவை என்பவற்றோடு விதுாடகக் கூத்தையும் சேர்த்து
ஏழென்பாருமுளா் எனக் குறித்துவிட்டு, போகிறபோக்கில் ”எழுவகைக் கூத்தும் இழிகுலத்தோரை
ஆடவகுத்தனன் அகத்தியன்தானே” எனப் பதிவு செய்கிறார். இதிலிருந்து இழிகுலத்தோர் என்றழைக்கப்பட்ட மக்கள்
பிரிவினரால் நிகழ்த்தப்பட்ட பல கலைவடிவங்களுள் கோமாளிக் கூத்தும் ஒன்று எனத் தெரிய
வருகின்றது. ஆக,கோமாளிக்கூத்து இழிகுலத்தோர்
என்றழைக்கப்பட்ட விளிம்புநிலை மக்கள் பிரிவினரால்தான் நிகழ்த்தப்பட்டிருக்கிறது என்பது
தெளிவாகின்றது.
தமிழ்ச் சமூக அமைப்பில் மேல்குலம் என்பதாக அடையாளப்பட்டோரின் கலை வெளிப்பாடுகளுக்கு
அதிகார மய்யங்களின் ஏற்பளிப்பும், இழிகுலம் என்பதாக அடையாளப்படுத்தப்பட்டோரின் கலை
வெளிப்பாடுகளுக்குப் புறக்கணிப்பும் காலங்காலமாக இருந்திருக்கிறது. இன்னும்கூட இருந்து
கொண்டிருக்கிறது. இந்நிலையில், கோமாளி வேடம் பூண்ட நாடகர்கள் - கோமாளிக் கூத்தா்கள்,
அதிகார மய்யத்தால் ஒதுக்கல்களுக்கு உள்ளான விளிம்புநிலைப்பட்ட வாழ்க்கை முறையில் சுழன்று
கொண்டிருந்த விளிம்புநிலை மக்கள் பிரிவிலிருந்து தோன்றியவா்கள் என்பதனால்தான், கோமாளி நாடகா் மரபு - கோமாளிக் கூத்து மரபானது நிகழ்த்துகலை
வரலாற்றில் விளிம்பு நிலையில் வைக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும், பல்வேறு காலகட்டங்களைத்
தாண்டியும் பல்வேறு கலை வெளிப்பாட்டு வடிவங்களினுாடாகவும் வெவ்வேறு காலத்தியக் கோமாளிகள்
பல்வேறு உருக்கோலம் பூண்டு வந்திருக்கிறார்கள். இவ்வாறான நிகழ்கலை வரலாற்றில் பயணித்த
கடந்த காலத்தியக் கோமாளிகள் யாவரும் நகைப்பைத் தருவிக்கும் நாடகா்களாகவே தொழிற்பட்டிருக்கிறார்கள். நகையின் ஊடாகத்தான் வசையையும் பகடியையும் தம் காலத்தியக்
குரலையும் வெளிப்படுத்த முடிந்திருக்கிறது.
நாடகா்களும் நாடகக் காணுநா்களும் நகையாடிக் கொள்வதற்கும், நகையுணர்வைப் பகிர்ந்து
கொள்வதற்கும், நகையுணர்வைத் துய்த்துக் கொள்வதற்குமான நெருக்கடியில்லாத மனவெளி இருதரப்புக்கும்
வாய்த்திருக்கிறது. அவ்வாறான மனவெளி கடந்த காலத்தியச் சமூக அமைப்பில் கிடைத்திருக்கிறது.
மகிழ்வுபடுத்துகையும் மகிழ்வுகொள்ளுகையும் கோமாளிகள்வழி நிறைவேறியிருக்கிறது. இவ்வாறான
அடையாளம்தான் கடந்த காலத்தியக் கோமாளிகளின் அடையாளமாகப் பதிவுறுத்தப்பட்டிருக்கிறது. காலங்காலமாகத் தொடா்ந்து வந்த கோமாளிகள் பற்றிய
இவ்வாறான அடையாளத்தை நிகழ்காலத்திய நிகழ்த்துகலை மரபில் புத்தாக்கம் பெறவைத்திருக்கிறார்
முருக பூபதி.
- 6 -
இச்சமூகத்தில்
புதையுண்டு கிடக்கும் ஆதிமரபின் / தொல்குடிகளின் அடையாளங்களை வெறுமனே மீட்டுருவாக்கம்
செய்வதோடு மட்டுமல்லாமல், நிகழ்காலத்தியச் சூழலுக்குத் தகுந்த மாதிரியான புத்தாக்க
அடையாளத்தையும், மாற்று அடையாளத்தையும், எதிரிடை அடையாளத்தையும் முன்னிறுத்துகிற வகையில்
தமது நவீன நாடகச் செயன்மைகளின்வழி நிகழ்த்துகலைத் தடத்தில் தாகத்தோடு இயங்கிக்கொண்டிருக்கும்
நாடகா்களில் முருக பூபதியும் முதன்மையானவா்.
அந்தவகையில், முருக பூபதியின் ”மிருக விதுாசகம்” நாடகமானது கோமாளி நாடக மரபின்
கொடிவழியை அத்துப்போகாமல் மீட்டெடுத்து, கோமாளிகளுக்கான மாற்று அடையாளத்தை முன்னிறுத்தி,
சுரண்டல் அதிகார மய்யங்களை எதிர்க்கிற எதிர் அதிகார மரபின் அடையாளத்தைத் தருவித்திருக்கிறது.
கோமாளி நாடகா்கள் நிரம்பிய / நிரப்பிய கோமாளிக் கூத்தாகத்தான் ”மிருக விதுாசகக்”
கூத்து நிகழ்த்தப்பட்டிருக்கிறது. ஆனால், இக்கூத்தானது
நகைப்பை முதன்மைப்படுத்தி நிகழ்த்தப்பட்டு வந்த கடந்த காலத்தியக் கோமாளிக் கூத்தைப்போல
அல்லாமல் வேறோர் உருக்கோலம் பூண்டு, வேறோர் அசுரக் குரலோடு, வேறோர் அசுரக் குணத்தோடு
நிகழ்காலத்தியத்தின் குரலாய், நவீனக் கோமாளிக் கூத்தாய், அசுரக்கோமாளிக் கூத்தாய் நிகழ்த்தப்பட்டிருக்கிறது.
அதாவது, நகை முகம் மறுத்த கோமாளிக் கூத்தாய்-நகைக்குணம் தவிர்த்த கோமாளிக் கூத்தாய்-நகைக்குரல்
துறந்த கோமாளிக் கூத்தாய் ”மிருக விதுாசகம்” வடிவமைந்திருக்கிறது.
நகைமுகம் காட்டி வந்த கோமாளிகள், நிகழ்காலத்தியக் கலை வெளிப்பாடுகளில் மிருக
முகம் தரிக்கிறார்கள். கோமாளிகள் மட்டுமல்ல,
கோமாளிகள் உள்ளிட்ட விளிம்புநிலை - அடித்தள மக்கள் யாவரும் மிருக நிலை எடுப்பதான சூழல்தான்
நிலவுகின்றது. நிகழ்காலத்தியச் சமூக அமைப்பானது
சுரண்டலை மய்யமாகக் கொண்ட அதிகார அமைப்பாக வடிவாக்கம் பெற்றிருக்கிறது. ஏகாதிபத்திய-முதலாளித்துவ-தரகு முதலாளித்துவ நாடுகளின்
சுரண்டல் நலன்களை அடிப்படையாகக் கொண்டு உலகம் முழுவதிலுமுள்ள அதிகார அமைப்புகள் செயலாற்றிக்
கொண்டிருக்கின்றன. இவ்வாறான செயன்மைகளுக்கு
உகந்தவகையில்தான் உலகமயக் கொள்கையானது வளர்ந்து வருகிற, பின்தங்கிய மூன்றாம் உலக நாடுகளில்
தீவிரமாக நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
ஏகாதிபத்திய-முதலாளித்துவ அதிகார அமைப்பின் கட்டாயத் திணிப்பான இவ்வுலகமயக்
கொள்கையானது, வளா்ந்து வருகிற, பின்தங்கிய
மூன்றாம் உலக நாடுகளின் இயற்கை வளங்களையும் மனித உழைப்பையும் அப்பட்டமாகச் சுரண்டுவதையே
நோக்கமாகக் கொண்டிருக்கிறது. இத்தகைய உலகமயக் கொள்கைச் செயன்மைகளால் வளா்ந்து வருகிற,
பின்தங்கிய மூன்றாம் உலக நாடுகள் யாவும் ஏகாதிபத்திய-முதலாளித்துவ அதிகார மய்யங்களின்
புது வன்குடியாதிக்க (புதுக் காலனிய) மய்யங்களாக உருமாறிக் கொண்டிருக்கின்றன. இப் புது
வன்குடியாதிக்க எல்லைக்குட்பட்ட நாடுகள் யாவும் பெயரளவிலான அதிகார அமைப்பாக-அதுவும்,
புது வன்குடியாதிக்க மய்யங்களின் அதிகாரத்தைச் செயன்மைப்படுத்தும் தரகு அதிகார அமைப்பாக,
எடுபிடி அதிகார அமைப்பாகச் செயலாற்றிக் கொண்டிருக்கின்றன. இத்தகைய ஏகாதிபத்திய – முதலாளித்துவ
– தரகு முதலாளித்துவ - புது வன்குடியாதிக்க
மய்யங்களின் சுரண்டல் நடவடிக்கைகளால் புது வன்குடியாதிக்க நிலவெளிசார்ந்த தொல்குடிகள் மற்றும் உழைக்கும் அடித்தள விளிம்புநிலை மக்களின்
வாழ்வும் அவர்களது இருப்பும் அடையாளங்களும் கடுமையான நெருக்கடிகளுக்கு உள்ளாகிக் கிடக்கின்றன.
இந்திய ஒன்றிய அரசமைப்பானது புது வன்குடியாதிக்கம் நிரம்பி வழிகிற- அதை வழிமொழிகிற
ஓர் அரசமைப்பாக உருக்கொண்டிருக்கிறது. இந்திய
ஒன்றிய நிலப்பகுதிகள் யாவும் சுரண்டல் அதிகார அமைப்பின் கைகளில் ஒப்பளிக்கப்பட்டு வெகு
காலமாகிப்போனது. இந்த மண்ணின் தொல்குடிகளைக்
கேட்காமலேயே, இவர்களது விருப்பத்திற்கு மாறாகவே-இவா்களது
எதிர்ப்பையும் மீறி இவா்களது மண் அந்நியா்களின் சொத்துகளாக ஆக்கப்பட்டுவிட்டது. இந்த
மண் இவா்களுக்குச் சொந்தமில்லாமல் போனது. ஆதியிலிருந்து
இந்த மண்ணிலேயே ஆனந்தக் கூத்தாடியவா்கள்; இந்த மண்ணிலேயே எல்லாமும் ஆக்கியவா்கள்; இந்த மண்ணையே தமது அடையாளமாகத் தரித்தவா்கள்; இந்த
மண்ணையே சொந்தமாகக் கொண்டிருந்தவர்கள்; இந்த மண்ணையே நம்பியிருந்தவர்கள்; இந்த மண்ணையே
வணங்கிக் கிடந்தவா்கள்...... இந்த மண்ணிலிருந்து
மெல்லமெல்ல அந்நியப்படுத்தப்படுகிறார்கள்; விரட்டப்படுகிறார்கள்; துரத்தப்படுகிறார்கள்;
அநாதைகளாக்கப்படுகிறார்கள்; அகதிகளாக்கப்படுகிறார்கள்.
அதிகாரத்தை எதிர்த்தால் காவல்துறை, இராணுவம் போன்ற போர் எந்திரங்களால் கொல்லவும்படுகிறார்கள்.
இப்படிப் பலவாறாக இந்த மண் சார்ந்த மக்களும் இம்மக்ளின் இருப்பும் அடையாளங்களும் விளிம்பு
நிலைக்குத் தள்ளியிருக்கிறது புது வன்குடியாதிக்க அமைப்பு.
தம் மண்ணையும் மண்சார்ந்த மக்களையும், மண்சார்ந்த மக்களைப் போலிருக்கும் அயலக
மக்களையும் நேசிக்கிற, இந்த மண்ணோடும் மக்களோடும்
உறவாடிக் கிடக்கிற எவரும், நிலவிக்கொண்டிருக்கிற புது வன்குடியாதிக்கம் என்னும் புதுக்
குடியேற்றதிகார முறைமைகளுக்கு ஒத்திசைந்தோ இணங்கியோ அல்லது முடங்கியோ தம் இருப்பையும் செயன்மைகளையும் அடையாளப்படுத்த
முடியாது; கூடாது. மாறாக, புதுக் குடியேற்றதிகார முறைமைகளுக்கு எதிரான
ஓர் எதிர் அதிகாரச் செயன்மைகளோடு கைகோர்த்துக் கொள்ளும்படியான மனவெளியையும் களவெளியையும்
உக்கிரப்படுத்தவேண்டிய தேவையைக் கையிலெடுக்க வேண்டியிருக்கிறது.
தம் மண்ணையும் மக்களையும், இவற்றினுாடாகக்
கலந்து கிடக்கிற பண்பாட்டு அடையாளங்களையும் கலை வெளிப்பாட்டு வடிவங்களையும் காவு கொள்ளப்படுவதிலிருந்து
விடுவிக்க வேண்டிய செயன்மைகளை உக்கிரத்தோடு மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. அந்தவகையில்,
எதிர் அதிகாரக் கருத்தியலை - அதன் அரசியலைக் கலைகளின் ஊடாக முன்னெடுத்துச் செல்லவேண்டிய
சூழல் நிகழ்காலத்தியக் கலைச் செயல்பாட்டாளர்களுக்கும் ஏற்பட்டிருக்கிறது. நிகழ்காலத்தின் குரலாகவும் - நிகழ்காலத்திற்குமான
குரலாகவும் வெளிப்பட நினைக்கிற - வெளிப்படுகிற கலைச் செயல்பாட்டாளர் இத்தகைய எதிர்
அதிகார மரபிலிருந்து ஒதுங்கியிருக்க முடியாது.
தம் கலைச் செயன்மைகள் வாயிலாக எதிர் அதிகார மரபையே வெளிப்படுத்திக் கொண்டிருப்பா்.
நிகழ்காலத்தியத் தொழில்நுட்பக் கருவி ஊடகப்
பெருக்கங்கள் யாவும் அதிகார முறைமைகளுக்குச் சேவகம் செய்யக் கூடியவைகளாகவும் – அறிவையும்
உணர்வையும் முனை மழுங்கச் செய்யக்கூடியவைகளாகவும் – நுகர்வுவெறிப் பண்பாட்டை முன்னிறுத்துவனவாகவும்- தொழில் நுட்ப ஊடக
வன்முறையைக் கட்டவிழ்த்துவிடக் கூடியனவாகவும் இருந்து கொண்டிருக்கின்றன. இவற்றையெல்லாம்
கடந்து மக்கள் சார்ந்த - மண்சார்ந்த கலை வடிவங்களின் ஊடாகக் கலை அழகியலையும் எதிர்
அதிகார மரபின் அரசியலையும் வெகுமக்களிடத்தில்
சோ்ப்பிக்க வேண்டியிருக்கிறது. அறிவையும் திறமையும் காட்டிக்கொள்ளக்கூடிய - காட்டிக்கொள்ள
நினைக்கிற திறமைசார் கலைஞா்களைக்காட்டிலும், மண்ணையும் மக்களையும் நேசிக்கிற பண்பாடுசார்
கலைஞா்களே இம்மாதிரியான முயற்சிகளில், அதாவது எதிர் அதிகார மரபை வெளிப்படுத்துகிற முயற்சிகளில்
ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர். அந்தவகையில், முருக பூபதியும் அவா்சார்ந்த ”மணல்மகுடி”
நாடகா்களும் மக்கள் பண்பாடு சார்ந்த நாடகா்களாக, கலைஞா்களாக இந்நிலம் முழுதும் ஊர்ந்து
திரிந்து கொண்டிருக்கிறார்கள் இந்நிலத்தின்
நிறம்பூண்டு.
காலம் காலமாக நிலைத்து வந்திருக்கிற அதிகார அமைப்புகளால் சாதி, மதம், இனம்,
பாலினம், தொழில், பொருளாதாரம், நிறம், மொழி, வாழிடம்..... போன்ற இன்னபிறவற்றின் அடிப்படையில்
விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்ட மக்கள் சமூகம், நிகழ்காலத்தியச் சமூக அமைப்பிலும் தொடா்ந்து
நீடித்தும் அல்லாடிக்கொண்டும் இருக்கின்றது.
இது ஒருபுறமிருக்க, ஏகாதிபத்தியங்களாலும்-முதலாளித்துவ நாடுகளாலும்- புதுக்
குடியேற்றதிகார முறைமைகளாலும் இம் மண்சார்ந்த மக்கள்திரள், விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டுக்
கொண்டிருக்கிறது. பெருவாரியான மக்கள் பிரிவினா் விளிம்பு நிலை மக்கள் பிரிவினராக ஆக்கப்பட்டுவிட்டனா். நிகழ்காலத்தியச் சூழல் இவ்வாறுதான் தகவமைக்கப்பட்டிருக்கிறது. நிகழ்காலத்தியத்தின் உண்மைக்குரல், நிகழ்காலத்திய
விளிம்புநிலையாக்கப்பட்ட பெருவாரி மக்களைப் பற்றியதாகத்தான் இருக்கமுடியும்; இருக்கவேண்டும். விளிம்பு நிலையாக்கப்பட்ட பெருந்திரளின் குரலே நிகழ்காலத்தின்
குரலாக வெடித்துக் கிளம்பும் காலமும் களமும் பேரண்டத்தின் சுழற்சியில் வந்தே தீரும். இது வெறும் கணியம் அல்ல; வரலாற்றின் - காலத்தின்
கணக்கு.
இவ்வாறான விளிம்பு நிலை – அடித்தள மக்கள் திரளைப் பற்றியான கருத்தாடல்களும்
கதையாடல்களும், இதுவரையிலான கலை இலக்கிய வெளிப்பாடுகளின் விளிம்புநிலையிலேதான் இருத்தி
வைக்கப்பட்டிருக்கின்றன. விளிம்புநிலை – அடித்தள
மக்கள் பிரிவினரின் கருத்தாடல்களும் கதையாடல்களும் அதிகாரம் சார்ந்த சமூக வெளியில்
பெருங்கதையாடல்களாக ஆகிவிடாமல் தடுத்து, அவற்றையெல்லாம் குறுங்கதையாடல்களாக – விளிம்புநிலைக்
கதையாடல்களாக மட்டம் தட்டி வைத்திருக்கின்றன அதிகார மய்யங்கள். இவ் விளிம்புநிலைக் கதையாடல்கள் போராட்டமாக – புரட்சியாக
- விடுதலைக் குரலாக உருமாறிவிடக் கூடாது என்பதற்காகவே சட்டங்கள், நீதி மன்றங்கள், சிறைச்சாலைகள்,
காவல்துறை,இராணும்... போன்ற அதிகார வன்முறை
எந்திரங்களோடு போர் என்ற கொடூரமான வன்முறை வடிவத்தையும் கையில் எடுத்துக்கொண்டு கண்காணித்தபடியும்,
கட்டளையிட்டுக்கொண்டும், அதனதன் கணக்குப்படியும் செயலாற்றிக் கொண்டிருக்கின்றன அதிகார
மய்யங்கள். இந்நிலையில், அதிகார மரபுக்கு எதிரான
ஓர் எதிர் அதிகார மரபில் பயணிக்கிற செயன்மையர்கள், விளிம்புநிலையாக்கப்பட்ட கதையாடல்களை
- விளிம்புநிலைக் கதையாடல்களை எதிர் அதிகார மரபில் பெருங் கதையாடல்களாக முன்னிறுத்துகிற
அடையாள அரசியலை முன்னெடுத்து வருகிறார்கள்.
அந்த வரிசையில், முருக பூபதியும் மணல்மகுடி நாடகர்களும் அடங்குவா்.
- 7 -
முருக பூபதியின் பெரும்பாலான நாடகங்கள்
உயிரினப் பேரண்டத்தில் சூழ்கொண்டிருக்கிற உயிரினங்களின் வதைகள் கூடிய இருப்பை விவரிக்கக்
கூடியவை; சுரண்டல் அதிகார மய்யங்களாலும், அவற்றின் செயன்மைகளாலும் காவு கொள்ளப்பட்ட
உயிரினங்களின் வலி நிறைந்த கதைகளை உயிர்ப்புடன் எடுத்துரைக்கக் கூடியவை; ஒதுக்கல்களாலும், ஒடுக்குதல்களாலும், சுரண்டல்களாலும்,
வன்முறைகளாலும் பாதிப்புற்ற விளிம்புநிலை – அடித்தள - தொல்குடிகளின் மரபுகளையும் அடையாளங்களையும்
முன்னிறுத்தக்கூடியவை; உழைப்பும் வியர்வையும்
போராட்டமும் குருதியும் தோய்ந்த மக்களின் பண்பாட்டியலை, சடங்கியலை, கலை வெளிப்பாடுகளை – அன்பு கவ்விய வாழ்வியலை உயிர்
மூச்சாய் வெளிப்படுத்திக் கொண்டிருப்பவை; விளிம்புநிலையாக்கப்பட்ட
அடித்தள - தொல்குடிகளின் குரலாகவே ஒலித்துக் கொண்டிருப்பவை. இம்மாதிரியான நாடக வெளிப்பாடுகளுள்
ஒன்றாகத்தான் ”மிருக விதுாசகம்” நாடகம் உருக்கொண்டிருக்கிறது.நிலவிக் கொண்டிருக்கிற
சமூக அமைப்பில் உழன்று கொண்டிருக்கும் ஏதுமற்ற மக்கள் திரளின் குரலாக மிருக விதுாசகத்தின்
குரல் வெளிப்பட்டிருக்கிறது.
விளிம்புநிலை மக்களைப் பற்றிய கதையாடல்களைப் போகிற போக்கில் வெளிப்படுத்துவது
என்ற பொதுப்புத்தி மரபிலிருந்து விலகியும் முரண்பட்டும் நின்று, விளிம்புநிலை மக்கள்
கதையாடல்களையே நாடகத்தின் பெருங் கதையாடல்களாக ஆக்கியிருக்கிறார் முருக பூபதி. விளிம்புநிலை மக்கள் கதையாடல்களை நாடகமாக்கும்போது,
நிகழ்த்துகலை மரபின் விளிம்புநிலையாக்கப்பட்ட நாடகர்களைத் தருவித்து, அவ் விளிம்புநிலைக்
கதையாடல்களை நிகழ்த்தச் செய்திருக்கிறார் அவா்.
நிகழ்த்துகலை மரபிலும் அதிகார அமைப்பிலும் விளிம்புநிலையாக்கப்பட்ட கோமாளி நாடகா்
மரபை மீண்டும் நாடக நிலத்திற்குக் கொண்டு வந்து, கோமாளி நாடகா்களைப்போல விளிம்புநிலைக்குத்
தள்ளப்பட்ட மக்களின் கதையாடல்களை உக்கிரமாக வெளிப்படச் செய்திருக்கிறார்.
நிகழ்காலத்தியச் சூழலில் விளிம்புநிலையாக்கப்பட்ட மக்களின் கதையாடல்களை, பழைய
கோமாளிகளின் நகையுருவிலும் உணர்விலும் வெளிப்படுத்தும்படியான மனவெளியும் புறவெளியும்
உகந்ததாக அமைந்திருக்கவில்லை. அதேவேளையில்,
கோமாளிகளிடம் வெளிப்பட்ட கோமாளிக் கூத்தில் வெளிப்பட்ட வசையும் பகடியும் நிகழ்காலத்தில் உக்கிரத்தன்மை கொள்கிறது. இத்தகைய உக்கிரத் தன்மையின் வெளிப்பாடாகத்தான் நிகழ்காலத்தியக்
கோமாளிகள் மிருகநிலை எடுத்து, நிகழ்காலத்தின் குரலையும் எதிர் அதிகார மரபின் அடையாளத்தையும்
வெளிப்படுத்துகிறது மிருக விதுாசகம். அதாவது, நிகழ்த்துகலை மரபில் விளிம்புநிலையாக்கப்பட்ட கோமாளிகள்,
நிகழ்காலத்தில் விளிம்புநிலையாக்கப்பட்ட மக்கள்
கதையாடல்களை நிகழ்காலத்திய நிகழ்த்து கலையில் வெளிப்படும்போது, மிருகநிலை எடுத்த உருக்கோலமும்
குரலும் கொண்ட உக்கிரத்தன்மையை வெளிப்படுத்துகிறார்கள். கோமாளி நாடகர்களின் அடையாளம் நிகழ்காலத்தில் புதுக்கோலம்
/ வேறோர் உருக்கோலம் பெறுகின்றது. எதிர் அதிகார
மரபின் கோமாளிகள் மிருகக்கோலம் தரிக்கிறார்கள்.
இந்த மிருகக்கோலத்தின் வழியாகவே நிகழ்காலத்தின் குரலை வெளிப்படுத்த முனைகிறார்
முருக பூபதி.
விளிம்புநிலை மக்கள் கதையாடல்களை மிருகக்கோலம் பூண்ட கோமாளிகள் வழியாக வெளிப்படுத்துவது
குறித்து அவா் கூறும்போது, ”சமகாலப் பிரச்சனைகளை எடுத்து அடர்த்தியாக வைக்கும்போது
பழகிய உடல்களும் சொற்களும் போதுமானதாக இல்லை. அப்ப நாடகம் ஒரு மிருகநிலையை எடுக்குது. அதைக் கோமாளி எடுக்கிறான். கோமாளிதான் எந்தக்காலத்தில் நாடகம் நடத்தும்போதும்
சமகாலத்தின் குரலாக இருக்கிறான். அதனால் அவனை நாடகத்துக்குள்ள கொண்டுவாரோம் – தமிழ்
நிகழ்த்துக்கலை மரபில் எல்லாக் கதாப்பாத்திரங்களுக்கும் அம்மா, அப்பா, காதலி என கொடிவழி
உறவு இருப்பாங்க. ஆனால் கோமாளிகள்தாம் எந்த நாடகத்திலும் கொடிவழிஉறவு அற்றவா்களாக இருப்பார்கள். அனாதை நிலத்தில் வந்து சமகாலப் பிரச்சனைகளைப் பேசுவதுதான்
வீரியம். எனவேதான், கொடிவழி உறவுகளற்ற அனாதை
நிலத்திலிருந்து வரும் அந்த விதூசகா்களை எனது நாடக நிலத்திற்கு அழைத்து வந்தேன். இங்கு கோமாளி, விதூசகன், பஃபூன் கிடையாது. ஏன்னா
இங்கு யுத்த சூழல் நிலவுது. அது கொடிவழி உறவுகளையே
அழிக்கிறது. எனவே அவா்கள் மிருகநிலை எடுக்கிறார்கள். உலகில் உள்ள ஜீவராசிகள், பூச்சிகள், தானியங்களின்
உடல்களைத் தங்கள் உடல்களில் வைத்துக்கொண்டு அவா்கள் வருகிறார்கள்” என்கிறார். ஆக, விளிம்புநிலை மக்கள் கதையாடல்களை விளிம்புநிலை
நாடக மரபில் வந்த கோமாளிகளே நிகழ்காலத்தியச் சூழலுக்குத் தகுந்தாற்போன்ற மிருக உருக்கோலம்
பூண்டு நிகழ்காலத்திய விளிம்புநிலைக் கதையாடல்களை நிகழ்த்துகிறார்கள்.
தொல்குடிகள், நிலத்திலிருந்து விரட்டப்பட்ட மனிதர்கள், அனாதைகள், பிச்சைக்காரர்கள்,
ஊனமுற்றவா்கள், பெண்கள், திருநங்கைகள, போராளிகள், போரில் கொல்லப்பட்டவா்கள், கலவரத்தில்
கொல்லப்பட்டவா்கள், துாக்கிலிடப்பட்டவா்கள், பனைஏறிகள், குறவா்கள்,கீகாட்டுக்காரர்கள்
என மனிதா்களை மட்டும் அல்லாது, பறவைகள், விலங்கினங்கள், தாவரங்கள், தானியங்கள் இவை
எல்லாவற்றுக்குமானதாகிய இந்த மண் பற்றிய கதையாடல்களைப் பெருங்கதையாடல்களாக எதிர் அதிகார
மரபில் கட்டமைக்கிறார்கள் மிருக விதுாசகக்
கோமாளிகள்.
அதிகார மரபினை எதிர்த்து வந்த எதிர்அதிகாரச் செயல்பாட்டாளா்களைப் பற்றிய பழங்கதைகள்
”அசுரா்கள்” என்றழைக்கின்றன. அந்த அசுர மரபின்
தொடா்ச்சியாகத்தான் மிருக நிலையெடுத்த கோமாளிகள் அசுரக் கோமாளிகளாக வெளிப்பட்டிருக்கிறார்கள்.
- 8 –
இரண்டாம்
உலகப்போரின்போது பத்து இலட்சத்திற்கும் மேற்பட்ட யூதா்கள் ஈவிரக்கமின்றி மிகக் கொடூரமாகக்
கொலை செய்யப்பட்டார்கள். அக்கோர நிகழ்வே மிகப்பெரிய அளவிலான இனப்படுகொலை நிகழ்வாக மனித சமூக வரலாற்றில் ஒரு
கரும்புள்ளியாக இன்னும் இருந்துகொண்டிருக்கிறது. உலகின் பல பகுதிகளில் பல காலகட்டங்களில்
பேரினவாதங்களின் கூா்நகங்கள் பல்வேறு இனங்களைக் கருவறுத்திருக்கின்றன. நிகழ்காலத்திய இனப்படுகொலைத் துயரங்களையும் வரலாற்றையும்
ஈழம் சுமந்து கொண்டிருக்கிறது. உலகுக்கே மனித அறத்தையும் பொதுமை உணா்வையும் போதித்து
வந்த இனங்களுள் ஒன்றான ஈழத்தமிழினம், உலகில் வேறு எந்த ஓா் இனமும் பட்டிராதத் துயரப்பாடுகளைத்
தம்முள் ஏந்தியபடியே குருதி கசியும் காயங்களின் வலிகளோடு முட்கம்பி வேலிகளுக்குள் அடைபட்டுக்
கிடக்கிறது.
பன்னெடுங்காலமாகவே தம் சொந்த நிலத்தில் செழித்து வனப்புற்றிருந்தது ஈழத் தமிழினம்.
சிங்களப் பேரினவாதத்தின் ஒடுக்குமுறைக்கும் சுரண்டலுக்கும் பணிந்துபோக மறுத்து, கடந்த
அறுபது ஆண்டுகளுக்கும் மேலாகத் தாயக நில மீட்புப் போராட்டத்தை முன்னெடுத்து நடத்திக்
கொண்டிருந்தது அவ்வினம். ஏகாதிபத்தியங்களும் முதலாளித்துவ நாடுகளும் பேரினவாதங்களும்
உலகின் பல்வேறு பகுதிகளில் நடக்கும் தேசிய இன விடுதலைப் போராட்டங்களை விளிம்புநிலைக்
கதையாடல்களாக்கி அவற்றை ஒடுக்கியிருக்கின்றன.
உலக அதிகார மய்யங்களால் விளிம்பு நிலையாக்கப்பட்ட இனங்களுள் ஈழத்தமிழினமும்
ஒன்று.
இந்தியத்தின் துணைகொண்டு சிங்களப் பேரினவாதம் நடத்திய மிகக்கொடூரமான போரால்
பாதிக்கப்பட்டு, முள்ளிவாய்க்காலில் நின்று கொண்டு ஈழத்தமிழினம் கதறியெழுப்பிய கூக்குரலுக்கு
எந்த நாடுகளும் செவிமெடுக்கவில்லை. குழந்தைகள், பெண்கள், முதியவா்கள், இளைஞா்கள், போராளிகள்
என எந்தப் பாகுபாடுமின்றியும் கொத்துக் கொத்தாய் அவ்வினம் துடிதுடிக்கக் கொல்லப்பட்டபோதும்
எந்த நாடுகளும் தடுத்து நிறுத்த முன்வரவில்லை.
மருந்து, உணவு, நீா் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் எதுவுமின்றித் தவித்தபோதும்
தவிக்கிறபோதும், தம் சொந்தத் தாயக நிலத்தை இழந்து – வாழ்விழந்து உற்றார் உறவுகளை இழந்து
– உடைமைகள் இழந்து அனாதைகளாய் அகதிகளாய் ஆக்கப்பட்டு முட்கம்பி வேலிகள் சூழப்பட்ட கூடாரங்களுக்குள்
மிகக் கேவலமாக அடைக்கப்பட்டிருக்கிறபோதும் எல்லா நாடுகளும் வேடிக்கைதான் பார்த்துக்
கொண்டிருக்கின்றன. ஏகாதிபத்திய – முதலாளித்துவ – பேரினவாத அதிகாரத்தாலும், உலக நாடுகளின்
பாராமுகத்தாலும் தமிழீழ விடுதலைப் போராட்டமும் அதனை முன்னெடுத்த ஈழத்தமிழினமும் மிகக்
கொடூரமாக நசுக்கப்பட்டு உலகப் பேரண்டத்தில் விளிம்பு நிலையாக்கப்பட்டுக் கிடக்கின்றன. ”ஒரு காலடி, ஆனால் ஓராயிரம் ஆண்டு எம்வேர் நீண்டுள்ளது
என எனது நிலம் கவிதையில் எழுதினேன். இன்றைக்கு
எனக்கென ஒரு மிதி நிலம்கூட இல்லாத ஒரு சூழல்” என்கிறார் ஈழத்துக் கவிஞா் சேரன். இவ்வாறு, தம் சொந்த நிலத்திலிருந்து துரத்தப்பட்டும்
கொல்லப்பட்டும் விளிம்புநிலையாக்கப்பட்ட ஈழத்தமிழினத்தின் துயர் நிறைந்த கதையாடல்களை
மிருக விதுாசகம் நாடகத்தில் பெருங்கதையாடலாக ஆக்கியிருக்கிறார் முருக பூபதி.
பல்வேறு விளிம்புநிலைக் கதையாடல்களைப் பல்வேறு அடுக்குகளாக வெளிப்படுத்திய மிருக விதுாசகம் நாடகத்தின் முதற்பகுதி, போரினால் விளிம்புநிலையாக்கப்பட்ட ஈழத்தமிழினத்தின் கதையாடல்கள் உக்கிரத்தோடு வெளிப்படும்படியாய் அமைந்திருந்தது. நிகழ்காலத்திய மனிதப் பெருந்துயரம் ஈழ மண்ணில் நடந்தேறியிருக்கிறது. நிகழ்காலத்தின் குரலாக வெளிப்படும் மிருக விதுாசக நாடகமும் ஈழத்தின் துயா்மிகுக் கதையாடல்களை அக்கறையோடு பகிர்ந்தளித்துள்ளது. ஈழத்து மக்களைப்போலவே ஈழத்துக்கோமாளிகளும் அகதிகளாக்கப்பட்டுள்ளனர். தம் மண்ணையும் மக்களையும் இழந்து தவிக்கும் ஈழத்துக் கோமாளிகள் மிருக விதுாசக நாடக நிலத்தில் நுழைந்து, அழுகையும் கண்ணீரும் சோகமும் இரக்கமும் ததும்பத் தம் கதைகளைச் சொல்லியலைகிறார்கள்.
”எங்கள் தேசத்தில் மலா்களில்லை. போரினால் பார்வை பிடுங்கி அவற்றை சிறையிலடைத்தார்கள். எம் பெண்களுக்காக நுாற்றாண்டின் திசைகளெங்கும் அவைகள்
காத்திருக்கும்” என்று ஒரு கோமாளி குரல் எடுக்க,
”எங்களூரில் பறவைகளில்லை. வண்ணத்துப் பூச்சிகளில்லை. வண்டினங்களின் பாடல்களில்லை. பாதைகள் குழம்பிய பிரதேசத்தில் இருந்து அவைகள் இன்னும்
திரும்பவில்லை. ஊா் ஊராய்த் தேடி வருகிறோம்.
தேடி அதைப் பெறுவதற்காக அலைகிறோம்.
கண்ணீரால் எழுதப்பட்ட சங்கீதத்தைச் சுமந்து வருகிறோம்” என்று இன்னொரு கோமாளி அலைந்துழலும் ஈழத்து வாழ்வைக்
குரலெடுத்துக் கூவுகிறார்.
எல்லோரும் ஊரைவிட்டு வெளியேறிய பின்பு,
கோமாளிகளுக்கும் அங்கு வேலையில்லை.
கோமாளிகளும் ஊர் ஊராய் அலைந்து திரிகிறார்கள். ஊா் ஊராக அலைந்து திரிகையில்
அழுக்குத் துணிகளையெல்லாம் பொறுக்கிக்கொண்டு வருகிறார்கள். ஏனெனில், தங்கள் நிலத்துக் கதைகளைக் கேட்கிறவா்கள்
அழுவார்களே, அழுகின்றவா்களின் கண்ணீரைத் துடைக்க வேண்டும் என்கிறார்கள் கோமாளிகள்.
நகைக்க வைத்தே பழக்கப்பட்டவா்களுக்கு இன்னொருவா் அழும்போது கோமாளிகளால் தாங்கிக்கொள்ள
முடிவதில்லை. அதனால் மரணித்தவா்களுக்காகவும்,
மரணித்தவைகளுக்காகவும் தாங்களும் அழுகிறார்கள். ”நான் இந்த பூமிக்காக அழறேன்..... இல்ல மரங்களுக்காக..... இல்ல மரித்த ஜீவராசிகளுக்காக அழட்டுமா..... இல்ல,
பூச்சி..... பூச்சியினங்களுக்காக அழுவேன்”
என உயிர்களின் நேசிப்பை முழுக்கத் தரித்த கோமாளிகள் குரலெடுத்துக் குரலெடுத்துப் பேசிச்
செல்கிறார்கள். போரினால் மனிதர்கள் மட்டும்
கொல்லப்படவில்லை. மனிதா்களோடு சேர்த்து எல்லா
உயிரினங்களுமே கொல்லப்படுகின்றன. உயிரின நேசிப்பு
என்பது மனித நேசிப்பு மட்டும்மல்ல என்னும் உயிர் அறத்தை நாடக நிலத்தில் இருந்து உலகுக்குச்
சொல்வதாக அமைந்திருந்தது கோமாளிகளின் அக்குரல்.
நாடக நிலத்தில் தோன்றும் வேறுசில கோமாளிகள், தங்கள் நிலம் பறிக்கப்பட்டதால்
விதைகள் விதைக்க நிலமின்றித் தவிக்கும் ஈழத்தமிழினத்தின் பாடுகளை உரக்கக் கூவியபடி
அலைகிறார்கள். நிலம் என்பது வெறும் மண்ணில்லை; துகள்களல்ல. அது, பல்லுயிர் வாழ்வையும் தம்மகத்தே
பொதித்து வைத்திருக்கும் கருவறை; பல்லுயிர்களை ஈன்றெடுக்கும் தாய். நிலம்தான் எல்லா வகைப்பட்ட உடல்களுக்கும் உயிர்ச்சத்தை
வழங்கி உயிர்ப்பித்துக் கொண்டிருக்கிறது.
நிலம்தான் மனித உயிர்களுக்கும் வாழ்வாதாரம் கொடுக்கும் தாய். அதனால்தான், ஒவ்வோர் இனமும் தாம் பன்னெடுங்காலமாகப்
பரவியிருக்கும் நிலப்பரப்பைத் தாயகம் என்றழைக்கின்றன.
தம் தாயக நிலத்தில் காலூன்றியபடியேதான் ஒவ்வோர் இனமும் தம் அடையாளத்தையும் இருப்பையும்
வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றன. நிலம்தான்
ஓா் இனத்தின் அடையாளம்; இருப்பு; வாழ்வு. நிலமில்லாத
ஓர் இனத்தின் அலைந்துழல் வாழ்வு கோரமானது;
கொடூரமானது மட்டுமல்ல, உலகில் அகதி
இனமாக அலைந்து திரியும் அவலம் நிறைந்தது. ஈழத்
தமிழினத்திற்கென்று நிலம் இருந்தது; வாழ்வு இருந்தது. நிகழ்காலத்தின் அதிகார மய்யங்களினால்
ஈழத் தமிழினத்திற்குச் சொந்தமான நிலம் பிடுங்கப்பட்டுள்ளது. தம் சொந்த நிலத்திலிருந்து ஈழத்தமிழினம் துரத்தப்பட்டிருக்கிறது. பிடியளவு மண்ணையாவது தாயக நிலமாக்கிடத் துடித்துக்
கொண்டிருக்கிறது ஈழத்தமிழினம். நிலம் தேடும் ஈழத்தமிழினம் மிருக விதுாசகத்தில்
கோமாளி உருக்கொண்டு அலைந்துழல்கின்றது. விதைக்க
நிலம் தேடும் கோமாளிகள் நிலமில்லாமல் தவிக்கிறார்கள்.
”இதோ எங்களிடம் ஒரு தானியமுண்டு. ஒற்றை வைக்கோலும் உண்டு. நிலத்தைத் தேடி அலைகிறோம். இத்தானியத்தை விதைக்க நிலத்தைக் காட்டுங்களேன்; வயல்களின் திசைகளைக் காட்டுங்களேன்’’
என விதைக்க நிலம் தேடுகிறார் ஒரு கோமாளி. இன்னொரு கோமாளியோ, ”நான் பதுங்கு குழிக்குள் ஒரு தானியம் விதைத்து
வந்தேன். அது வளா்ந்து தானியங்களின் கூட்டமாக
வருமா?..... பூமிக்குள் பாடுவோரை அழைத்து வருமா?’’
என ஏக்கப் பெருமூச்சு விடுகிறார்.
”எம் இனத்தின் தானியங்களுக்குள் போராளிகள் வாழ்ந்த தொன்மக் கதைகள் உண்டு. பயந்த எதிராளிகள் எங்கள் தானியங்கள் அனைத்தையும்
களவாடிப் போனார்கள். இத் தானியமின்றி வேறு
தானியம் எங்களுக்கில்லை. நிலம் தாருங்களேன்.....
எம் பெண்களின் விசும்பல் ஈரத்தால், மூச்சினால் வளா்க்கப்பட்ட தானியம் இது. கருணையின்
நிலமெங்கே, நீரின் பாதையெங்கே, விளைநிலமெங்கே
சொல்லுங்களேன்” எனக் கோமாளிகள் மாறிமாறி
உரத்துக் கூவியபடி நிலம் தேடுகிறார்கள்.
நிலம் தேடும் இக் கோமாளிகள் வெறும் நாடகா்களாய் மட்டுமே தங்கள் நிலத்தில் அடையாளப்பட்டிருக்கவில்லை.
கலை வெளிப்பாடுகளின்வழி மற்றவா்களை மகிழ்வித்தும், தாங்களும் மகிழ்ந்து கொள்வதற்கும்
நாடக நிலத்தில் அவ்வப்போது வேடம்பூண்டு வந்து போனவா்கள்தான் இந்தக் கோமாளிகள். தாயக நிலத்தில் உழுது புரண்டு, விதைகள் விதைத்துப்
பயிர்களோடு உறவாடி, நிலத்தையும் வாழ்வையும் செழிக்கச்செய்து வனப்புற்றிருந்தவா்களாக
இக்கோமாளிகள் இருந்திருக்கிறார்கள். நிலத்திலே
உழன்று திரிந்தது போகத்தான் நாடக நிலத்தில் அவா்கள் புனைவுக்கோலம் பூண்டிருக்கிறார்கள்.
அதனால்தான், மிருக விதுாசகத்தில் புனைவுக்கோலம்
பூண்டு இருந்தாலும் நிலத்தையே தேடி அலைகிறார்கள்.
நிலம் இழந்து இருக்கும் இக்கோமாளிகள் விதைகளைச் சுமந்தபடியே ”ஒரு நாள் இத்தானியத்தை
விதைப்போம். அது வயலாகி தானிய மணிகள் நிரம்பி
வழியும். அவற்றை உலகெங்கும் விதைப்போம்” என்பதாக நம்பிக்கை விதைகளை நாடக நிலத்தில் விதைத்துச்
செல்கிறார்கள். நிலவுடலிகளாய் அதற்குண்டான காலத்திலும் களத்திலும் துணை நிற்பார்கள்.
புனைவுக்கோலம் தரித்த கோமாளிகளின் இன்னொருபக்கம் இது.
ஈழத்தமிழினத்தின் அழுகுரலைக் கோமாளிகள்வழி நிகழ்காலத்திய நாடக நிலத்தின் குரலாய்
ஒலிக்கச்செய்த முருக பூபதி, அசுரக் கோமாளிகளையும் நாடக நிலத்தில் உலவச் செய்திருக்கிறார். கண்ணீா் வரவழைக்கும் கதைகளைச் சொல்லிச் சென்ற கோமாளிகளின்
தாயக நிலத்தில், சிங்களப் பேரினவாதத்தாலும் இந்தியா போன்ற அதிகார மய்யங்களாலும் தொடுக்கப்பட்ட
போரினால் உயிரினப் பேரழிவு உண்டாக்கப்பட்டிருக்கிறது. இலட்சத்திற்கும் மேற்பட்ட ஈழத்தமிழா்கள் கொன்றொழிக்கப்பட்டார்கள்.
நிலம் முற்றாகச் சிதைக்கப்பட்டது. மரங்கள், செடிகள், கொடிகள், புல், பூண்டுகள்,
காடுகள் என அனைத்தும் சாம்பலாகிப் போயின. பறவைகள்,
விலங்குகள், பூச்சிகள், வண்டுகள், நிலம் மற்றும் நீா்வாழ் உயிரினங்களும் சிங்களப் பேரினவாதத்தின்
போரால் பாதிக்கப்பட்டிருக்கிறன. இப்படி, போரால் மனிதா்கள் மட்டுமல்ல அனைத்து உயிரினங்களும்
பாதிக்கப்பட்டிருக்கின்றன. ஈழத்தமிழினத்தையும்
வீரம் விளைந்த அந்நிலத்தையும் தோற்கடித்துவிட்டதாய் சிங்களப் பேரினவாதம் கொக்கரித்துக்
கொண்டிருக்கிறது. தோற்கடிக்கப்பட்ட மனநிலையில்
ஈழத்தமிழினம் துவண்டு கிடக்கிறது. முருக பூபதியின்
நாடக நிலத்திற்கு வரவழைக்கப்பட்ட கோமாளிகள், ஈழநிலத்தின் தொல்குடிகள் கொடூரமாகச் சாகடிக்கப்பட்டதைக்
கண்டு மிருகக்கோலம் பூண்டு அசுரக் குணத்தை வெளிப்படுத்தி அமலைக்கூத்து நிகழ்த்தி நாடக
நிலத்தைச் சூடேற்றுகிறார்கள்.
அனைந்துபோன தீப்பந்தத்திலிருந்து மறுபடியும் பற்றிக்கொள்வதற்குப் புகையாய் எழுந்தபடி வருகிறார்கள் கோமாளிகள். இந்தக்கோமாளிகள் கொல்லப்பட்டவா்களின் – தொலைந்து போனவா்களின் பாய்ந்தலையும் கலகத்தின் தழல் தேடி வருகிறார்கள். அத்துவானத் தரிசின் கானல்நீா் குடித்து, சாம்பல் ஆந்தைகளின் அலறல் ஒலி கிடுகிடுங்க வருகிறார்கள். பேரினவாதத்தின் வரட்டுருவத்தைச் சாம்பலாக்கிப்போக முனி கொண்டு அலைகிறார்கள். வனமிருக ரேகை பூசிக்கொண்டு அணங்கு புகுந்த துடியுடல்களாய் அணங்குக் கூத்தை நிகழ்த்துகிறார்கள்.
சிங்க முகம் புனைந்த உருவம் வாய் பிளந்து,
கண்களை விரித்து, உடல் குலுங்கி உறுமித் திரிகிறது. நாடக நிலத்தில் உலவித் திரிந்த மற்ற விலங்கின உருவம்
பூண்ட நாடகர்களின் கால்தடங்களை மோப்பமிட்டபடி சிங்கமுக நாடகர் அரற்றித் திரிய, நாய்களாகவும் தவளைகளாகவும் உருமாறிய நாடகா்கள் சிங்கமுக
நாடகரை எதிர்த்துக் கத்தவும் குரைக்கவும் செய்கிறார்கள். சிங்கமுக நாடகா் எல்லாவற்றையும் அடித்து உதைத்து
அவற்றின் வாய்களைப் பொத்திக் கீழே தள்ளி அவற்றின் மீது ஏறி நின்று வெற்றி பெற்றுவிட்டதாய்
ஆணவச் சிரிப்புடன் பசியடங்கா மிருகமாய்க் குரலெடுத்து உருமிக் கொண்டிருக்கிறார். சிங்கமுக நாடகருக்குக் கீழே முடங்கிக் கிடந்த நாயுருக்கோலம்
பூண்டவா்கள், முன்னைக்காட்டிலும் மிக அதிகமான எதிர்ப்புணர்வை ஊளையிட்டும் குரைத்தும்
வெளிப்படுத்துகிறார்கள்.
”உறுமுகிற பீரங்கியில் எழுந்து நிற்கும் பயிர்களைப் போன்றவா்கள் நாங்கள். விதைகளுக்குள்
ஒளிந்து வருவோம். பதுங்குகுழிப் பூச்சியின்
ரூபத்தில் காத்திருப்போம். எங்கள் நடிப்பின்
இருப்பு வனங்களில் விடுதலை தேடியலையும் கொரில்லாவைப் போன்றது. பூச்சியின் உரையாடலை உரசும் இலைகளின் பாடலை, மரங்களின்
பெருமூச்சை... மிருக உறுமல்களைக் கேட்டு வளா்ந்தவா்கள்” என்கிறார்கள் சிங்க உருவத்தை
எதிர்த்து மிருகக் கோலம் பூண்ட கோமாளிகள்.
நாடக நிலத்தில் காட்சிப்படுத்தப்பட்ட இந்தப் பகுதி குறியீட்டுத் தன்மை நிறைந்தது.
சிங்களப் பேரினவாதத்தின் போர் வெறியை – குருதி படிந்த கைகளை – உயிர் உறிஞ்சிய
முகத்தை – கோர வடிவத்தை – இறக்கமற்ற குணத்தை – நிலத்தைச் சிதைத்த உருவத்தை – பாசிசக்
கொடுங்கோன்மையைச் சிங்கமுகப் புனைவு கொண்ட நாடகரின் உடல்மொழியால் வெளிப்படுத்திக் காட்டியிருப்பதும்,
நாயுருக்கோலம் பூண்ட நாடக உடலிகள் ஊளையிட்டும் குரைத்தும் ஒன்றையொன்று நக்கிக் கடித்து
உருவேற்றிக்கொண்டு, சிங்கமுக உடலியை நோக்கிக் கூட்டம் கூட்டமாகப் பாய்ந்து பாய்ந்து
கடித்துக் குதறி வீழ்த்துவதுமாகக் காட்டியிருப்பதும் அரசியல் குறியீட்டைக் கொண்டிருப்பவை; எதிர் அதிகார மரபின் கனவை வெளிப்படுத்துபவை.
ஈழநிலத்தில் நடந்தேறிய கோரநிகழ்வை நாடக நிலத்தில் தழைகீழாக்கிக் காட்டுவதின்வழி,
ஈழத்தமிழினத்தின் கனவை நாடக நிலத்திலாவது நனவாக்கிக் காட்டியிருக்கிறார் முருக பூபதி. சிங்கமுகவுடலி வீழ்த்தப்படுவதின் வழியாக சிங்களப்
பேரினவாதம் வீழ்த்தப்பட வேண்டும்; என்றேனும் வீழ்ந்தே போகும் என்கிற கனவையும் எதிர்பார்ப்பையும்
நம்பிக்கையையும் கொண்ட குறியீட்டு விதை மிருக விதுாசக நாடக நிலத்தில் விதைக்கப்பட்டிருக்கிறது. நாடக நிலத்தில் விதைத்த இந்த விதை முளை கட்டிக்
கொண்டிருக்கிறது. முளைத்து எழும். ஈழநிலத்திலும் அது முளைக்கும் என்ற உணா்வை அந் நாடகநிலம்
தந்தது.
மிருகக்கோலம் பூண்ட கோமாளிகளோடு உலவித் திரியும் ஒரு கோமாளி, ”யுத்தம்தான் பெரும்
விடுதலைக்கான வழியா? அப்ப அந்த விடுதலை எனக்கு
வேண்டாம்” என்கிறார். எல்லாக் காலத்திய அதிகார
மய்யங்களும் யுத்தங்களை நிகழ்த்தித்தானே நிலங்களை, தேசங்களை, இனங்களை, மனிதா்களை அடிமைப்படுத்திச்
சுரண்டிக் கொண்டிருந்தன. நிகழ்காலத்திய அதிகார
மய்யங்களும் விதிவிலக்கல்ல. நிகழ்காலத்தின்
அதிகார மய்யங்கள் யுத்தங்களை நிகழ்த்துவதும், யுத்தங்களால் மனிதா்களையும் மற்ற உயிரினங்களையும்
கொல்வதும், நிலத்தைக் கையகப்படுத்துவதுமாய் இருந்து கொண்டிருக்கின்றன.
அதிகார மய்யங்கள் நம் மீது யுத்தங்களைத் திணித்துக் கொண்டிருக்கின்றன. யுத்தங்களை நாம் உருவாக்கிடவில்லை. அதிகார மய்யங்களே உருவாக்குகின்றன. அதிகார மய்யங்களை
எதிர்க்கும் எதிர் அதிகார மரபானது, யுத்தக் காலத்தில் எதிர் நின்று போராடுவதும் புரட்சி
செய்வதும் தவிர்க்க முடியாது. போர் வன்முறைக்கு
எதிராகப் புரட்சி வடிவிலான வன்முறைதான் அடிமைத் தளையிலிருந்து விடுதலை பெறுவதற்கு வழி
என்பதை விடுதலைப் போராட்ட வரலாறுகள் நமக்கு உணா்த்தும் பாடம். இந்த அரசியலை நிகழ்காலத்தியக் கோமாளிகளும் உணர்ந்துகொள்ள
வேண்டியது அவசியம். போர் தந்த ஈழத்துயரம் அப்படி யோசிக்க வைத்திருக்கும். இழப்பில்லாமல் எது இருக்கிறது. அமைதியை மீட்கத்தான்
போராட்டம், புரட்சி... என அனைத்தும். எதிர் அதிகார மரபில் பயணிக்கும் கோமாளிகளின் திசைவெளியும்
இதுவாகத்தான் இருக்கமுடியும்.
ஈழ நிலத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்ட ஈழத்தமிழ்த் தொல்குடிகளின் தொலைந்துபோன
வாழ்வை மீட்டுத்தரும் நோக்கில் சிங்கமுக உருக்கோலத்தை வீழ்த்திய மிருகக் கோலம் பூண்ட
கோமாளிகள், வீழ்த்தப்பட்ட சிங்கமுக உடலியைச் சுற்றி அமலைக் கூத்து நிகழ்த்துகிறார்கள். இவ்வாறு வெளிப்படுத்திய நாடகா்களின் உடல்மொழியானது
உக்கிரத்தையும் கோபத்தையும் விடுதலைத் தாகத்தையும் உள்ளீடாகக் கொண்டிருந்தது. எண்ணற்ற உயிரினங்களின் கூடாக இருந்த ஈழநிலம், போரின்
காயங்களைச் சுமந்து கிடக்கிறது. மனிதர்கள்
உள்ளிட்ட எல்லா உயிரினங்களும் அந்நிலத்தில் முழுதாய் இல்லை. ஈழக் கடல்வாழ் உயிரினங்கள்கூட அக்கடல்பரப்பில் நீந்தித்
திரிய வழியில்லை. அதிகார மய்யங்களின் போர்
நடவடிக்கைகள் எல்லா உயிரினங்களின் வாழ்வையும் பாதித்திருக்கின்றன.
நாடற்ற மனித வாழ்வை – நிலமிழந்த உயிரினங்களின் வாழ்வை – காடிழந்த மரங்களின்
வாழ்வை – வீடிழந்த மக்கள் வாழ்வை – கூடிழந்த பறவைகள் வாழ்வை – புதா் இழந்த பூச்சிகளின்
வாழ்வை – கடல் இழந்த நீா்வாழ் உயிரினங்களின் வாழ்வை ஆமை உருக்கோலம் பூண்ட கோமாளிகள்வழி
வெளிப்படுத்திக் காட்டியது, நிலம் இழந்த தவிப்பை உணா்த்திக் காட்டியது. இவ்வுணா்வுப் புலப்படுத்தத்திற்குப் ”பஞ்சாரம்”
துணை நிற்கின்றது. பஞ்சாரத்தைத் தாங்கி ஆமை
உருக்கோலம் புனைகிறார்கள் கோமாளிகள். இந்தப்
பஞ்சாரம், நிலத்தையும் கூட்டையும் கருமுட்டையையும்
வீட்டையும் உயிரினங்களின் கருவறையையும் குறியீடாக
வெளிப்படுத்திக் காட்டுவதற்கு அரங்கப் பொருளாகப் பயன்படுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்க
ஒன்று. எளிய மக்களின் வாழ்வில் பயணிக்கும்
சின்னஞ்சிறு உயிரினங்களின் கூடாக - கூடாரமாகப் பஞ்சாரம் இன்றளவிலும் பயன்படு பொருளாய்
இருந்து கொண்டிருக்கிறது. எளிய மக்களின் புழங்கு
பொருட்களை நாடக நிலத்தின் அரங்கப் பொருளாக ஆக்கியிருப்பது மண்சார்ந்த அடையாளத்தை வெளிப்படுத்தும்
பாங்கைக் கொண்டிருப்பதாகும்.
- 9 -
இந்நாடகத்தின்
முதற்பாதி அடுக்குகள் விளிம்புநிலையாக்கப்பட்ட ஈழத்தமிழினத்தின் போர் சூழ்ந்த வாழ்க்கைச்
சுவடுகளைக் குறியீட்டுத் தன்மையிலும், தலைகீழாக்கம்
செய்யப்பட்ட நிகழ்வெதிர்வை – கனவுநிலையை நனவாக்கும் தன்மையிலும் மிருகக் கோலம் பூண்ட
கோமாளிகள்வழி வெளிப்படுத்திக் காட்டின. ஈழப்
போராட்டப் பின்னடைவுக்குப் பின்பு ஈழத் துயரத்தை உக்கிரமாக வெளிப்படுத்திக் காட்டியிருப்பது
இன்றைய சூழலில் குறிப்பிடத்தக்க நிகழ்த்துகலை வெளிப்பாடாக அமைந்திருக்கிறது.
நிலத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்ட மனிதா்களும் இதர உயிரினங்களும் நிலம் தேடி
அலைவதாகக் குறியீட்டு நிலையில் வெளிப்படுத்திய இவ்வடுக்குகள், போரால் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழினத்தை மட்டும் நினைவுபடுத்தவில்லை. இந்திய அதிகார மய்யமானது, இந்திய ஒன்றிய நிலப்பரப்பில்
காலங்காலமாக வாழ்ந்து கொண்டிருந்த தொல்குடிகளை – மலைவாழ் பழங்குடிகளை – வேளாண் பழங்குடிகளை
அவரவா் வாழிடங்களிலிருந்து துரத்திக் கொண்டிருக்கிறது. மலைகளும், காடுகளும், கடல் பரப்பும், வேளாண் நிலங்களும்
அதிகார மய்யங்களால் வலுக்கட்டாயமாகப் பிடுங்கப்பட்டு முதலாளிகளுக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும்
தாரை வார்க்கப்படுகின்றன. நிலமும் தங்கள் வாழ்வும்
பறிக்கப்படுவதற்கு எதிராகத் தொல்குடிகள் போராடிக்
கொண்டிருக்கிறார்கள்.
இந்திய ஒன்றியத்தின் வடகிழக்குப் பகுதிகளில் செங்கொடி ஏந்தியவாறு பழங்குடி மக்கள்
போராடிக் கொண்டிருக்கிறார்கள். காலங்காலமாகக்
காத்துவந்த தங்கள் நிலத்தை இழந்து அனாதைகளாக ஆவதற்கு அவா்கள் தயாரில்லை. ஆனாலும், அந்நிலத்திலிருந்து துரத்தப்படுகிறார்கள்; கொல்லப்படுகிறார்கள். மலை வனங்களிலிருந்து
துரத்தப்படுவதால் நிலம் இழந்து தவிக்கும் தொல்பழங்குடிகளின் வாழ்வையும், நிலம் இழந்த தவிப்பையும் உணா்த்துவதாக மிருக விதுாசகம் உருக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. ஈழத்தமிழினம் மட்டுமல்ல, நிலம் இழந்து தவிக்கும் – நிலம் தேடி அலையும் உலகின்
அனைத்து மனித இனங்களின், உயிரினங்களின் அலைந்துழல் வாழ்வைக் குறியீடாக வெளிப்படுத்துகிறது
மிருக விதுாசகம்.
நிலம் இழந்த தொல் குடிகளின் தவிப்பைக் காட்சிப்படுத்தியிருப்பதைப் போன்றே, நிலைக்குடி
வாழ்விழந்து சமூகத்தின் விளிம்புநிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் குறவா்கள், தெருவோரச்
சிறுவா்கள், கைவிடப்பட்டவா்கள், குப்பை பொறுக்குபவா்கள்,
பிச்சைக்காரா்கள் போன்றோரின் அலைந்துழல் வாழ்வையும் மிருக விதுாசகக் கோமாளிகள் எடுத்துரைக்கின்றனா்.
அதிகார வழிப்பட்ட சமூக அமைப்பின் முழு நிர்வாணம் குப்பைகள் குவிக்கப்பட்ட நிலம்தான். அதிகார மய்யங்களின் கழிவுகள் கொட்டப்படும் குப்பை நிலம்தான் விளிம்புநிலையாக்கப்பட்ட மனிதா்கள் பலருக்கு வாழ்வாதார நிலமாக இருந்து கொண்டிருக்கிறது. மிருக விதூசகக் கோமாளி நாடகா்கள் குப்பைகள் பொறுக்கும் மனிதா்களாக நாடக நிலமெங்கும் அலைகிறார்கள். குப்பைகளால் மூடப்பட்ட நகரத்தின் பாதைகளிலிருந்து வந்த அவா்கள், “விசும்பல்களின் தடம்தேடி விதை துாவுவதைப்போல் அன்பின் கறை அறிய, எம் கரங்களைத் தொட்டுப் பார்ப்பீர்களா? என ஏக்கத்தோடு மனிதத் தீண்டலை, மனிதத் தொடுதலைத் தேடியலைகிறார்கள்.
”காண் உலகு மறுத்த நாங்கள் பண்பாட்டின் விந்தையுடல்கள். எம் உடலின் ஆற்றலுக்கு மீண்டும் மீண்டும் விழிப்பூட்டவே குப்பைகள் தோறும் நட்சத்திரங்களைத்
தேடியலைகிறோம். இங்கே கண்ணீர்த் துளிகள் நட்சத்திரங்களாவதுமுண்டு”
என, கனவின் பாதையில் பயணிக்கிறார்கள். இந்தக்
குப்பை நிலத்திலிருந்து கடவுளா்களின் குரலையும் கனவின் மொழியையும் கேட்க முடியும் என்பதாக
நம்பிக்கை வைத்து அக்குப்பை நிலத்தோடு முகம் தோய்த்துக் கொள்கிறார்கள்.
மலைப் பகுதிகளிலிருந்து சமவெளிப் பகுதிகளுக்குத் துரத்தப்பட்ட தொல் பழங்குடிகள்,
சமவெளிப் பகுதிகளில் நாடோடிக் கூட்டங்களாக அலைந்து திரிந்து கொண்டிருக்கின்றனா். அவா்களின் நினைவுகள் எல்லாம் அவா்களிடமில்லை. தங்களின் பூர்வீக நிலத்தைச் சுற்றிச் சுற்றியே வந்து
கொண்டிருக்கின்றன. தேவாங்குக் குட்டிகளைப்போல நிலையிடம் இன்றித் தவிக்கும் பழங்குடிகளைக்
குற்றக் குடிகளாகப் பாவித்துக் கொண்டிருக்கிறது அதிகாரவழிப்பட்ட சமவெளிப் பகுதிச் சமூகம். இதன் பார்வையில் இவா்கள் குற்றம் புரிபவா்கள்; நாகரீகமற்றவா்கள்; அனாதைகள். நிலைக்குடி வாழ்வு
கொண்டிருந்த தொல்பழங்குடிகளை நாடோடிகளாக ஆக்கியதே இந்த அதிகார மய்யங்கள்தான். ”எங்க
நாடோடிக் கூட்டம் புறநகரத்து ரயிலடிகளில் வாழ்கிறது. அங்கிருந்தும் விரட்டுறாங்க.....
சாக்கடை மேடுகளில் தங்கினோம். அய்கேயும் விரட்டுறாங்க...
துாங்கா நாட்களில் நாங்கள் அலையுறோம்.... எங்கள்
கனவுகளும் தனியே அலையுது...” என நாடோடி வாழ்நிலைக்குத்
தள்ளப்பட்ட அலைந்துழல் பழங்குடியின் குரல் கோமாளிகளின் குரலாய் நாடகத்தில் வெளிப்படுகின்றது.
இவா்களைப் போலவே விளிம்புநிலை வாழ்விருப்பைக் கொண்டிருக்கும் பனையேறிகள், ஊனமுற்றவா்கள்,
குற்றம் சுமத்தப்பட்டவா்கள், திருநங்கைகள், கைவிடப்பட்டவர்கள், துணை இழந்த பெண்கள்,
கொல்லப்பட்டவர்கள், தற்கொலை செய்து கொண்டவா்கள்,
பிச்சைக்காரா்கள் போன்றோரின் நிகழ்காலத்திய விளிம்புநிலை வாழ்கோலம் கோமாளிகள்
உருக்கோலங்களில் அடுத்தடுத்து விரிவடைந்துகொண்டே போகிறது.
இந்நாடகத்தில் வருகிற கோமாளிகள் பழுப்பு நிறத்தை உக்கிரக் குரலெடுத்து அடையாளப்படுத்துகிறார்கள்.
பழுப்பு, மூதாதையா்களின் நிறம். பழுப்பு, மண்ணின் நிறம். பழுப்பு, தொன்மையின் நிறம்;
இருளின் நிறம். பழுப்பு, வறுமையின் நிறம். விளிம்புநிலையாக்கப்பட்ட உலகின் எப்பகுதி மக்களாயிருப்பினும்
அவா்களின் நிறம் பழுப்பு. அதன் மேன்மையைக்
கோமாளிகள் எடுத்துரைப்பின்வழி, விளிம்புநிலை மக்களின் குறியீடாக அடையாளப்படுத்துகிறது
நாடகம்.
- 10 -
மிருக
விதுாசகம் நாடகமானது மூன்று பகுதிகளாகக் கிளைத்துச் செல்கிறது. நாடகத்தின் ஒரு பகுதியானது, மேற்குறித்த விளிம்புநிலைப்பட்ட
மக்கள் கதையாடல்களை நாடக நிலத்தில் உலவச் செய்திருக்கிறது. நகையுருவம் துறந்து மிருகக்கோலம் தரித்த கோமாளிகளின்வழி
அக்கதையாடல்கள் எதிர் அதிகார மரபின் பெருங்கதையாடல்களாக ஆக்கப்பட்டிருக்கிறது. கண்டுகொள்ளப்படாத - கவனிக்க மறந்த கதையாடல்கள் மிருக
விதுாசகத்தில் மய்யம்சார்ந்த கதையாடல்களாக -பெருங்கதையாடல்களாக விரிவடைந்திருக்கின்றன. நாடகத்தின் இன்னொரு பகுதியானது, அதிகாரம் சார்ந்து
இயங்கிக் கொண்டிருப்பவைகளின் மீதான வசையாடல்கள். கோமாளி நாடகா் மரபில் வெளிப்பட்ட வசைப்பாடு,
நிகழ்காலத்திய நிகழ்த்துகலையில் பங்கேற்கும் கோமாளிகளிடமிருந்தும் உக்கிரமாகவே வெளிப்படுத்தப்படுகின்றன. இவ்வசைக்குரல், அதிகார வழிப்பட்ட சமூக அமைப்பின்
அபத்தங்களைத் தோலுரித்துக் காட்டுவதாக அமைந்திருக்கின்றது.
நிகழ்காலத்திய அதிகார வழிப்பட்ட சமூக அமைப்பானது, அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியை
மட்டுமே பெருவளா்ச்சியாகக் கருதிக் கொண்டிருக்கிறது. அதிகார மய்யங்கள் சார்ந்த ஒவ்வொரு
நகர்வுக்குப் பின்னாலும் ஒருவகைப்பட்ட சுரண்டல்நலன் ஒளிந்துகொண்டே இருப்பது மட்டுமல்ல,
சுரண்டலின் வழியேதான் அவை பிறப்பெடுக்கின்றன.
நிகழ்காலத்தின் தொழில் நுட்பங்கள் வணிகம் சார்ந்ததாகவும் சுரண்டல் நோக்கம் கொண்டதாகவுமே
அமைந்திருக்கின்றன. அதிகார மய்யங்களின் தொழில்நுட்பப்
புழங்குபொருள் பண்பாட்டுத் தினிப்பினில் வளா்ந்து வருகிற - பின்தங்கிய மூன்றாம் உலக
நாடுகளின் மரபுசார் புழங்குபொருள் பண்பாடு சிதைவுகளுக்கு உள்ளாகியிருக்கிறது. தெரிந்தும் தெரியாமலும் அதிகார மய்யங்களின் தொழில்நுட்பப்
பண்பாட்டிற்குள் நடுத்தர மக்கள் முழுவதுமாக வரவழைக்கப்பட்டிருக்கிறார்கள். நிகழ்காலத்திய நடுத்தர மக்களின் புழங்கு பொருட்களின்
வரிசையில் செல்பேசிக் கருவிகளும் கணினிப்பொட்டிகளும் உந்துகளும் தவறாமல் இடம்பெற்றுக்
கொண்டிருக்கின்றன.
பணம் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த வாழ்வுக்குப் பழக்கப்பட்டுப்போன நடுத்தர,
மேல்தர மக்கள் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள்.
தொழிநுட்பக் கருவிகளின் வழியேதான் அவா்களின் வாழ்க்கை விரிவடைகிறது. கருவிகளின் வழியேதான் விளையாட்டு, பொழுதுபோக்கு,
படிப்பு, அறிவு, காதல், நட்பு, குடும்பம், உறவுகள், கொஞ்சல், கெஞ்சல், கோபம், மகிழ்ச்சி, பொய், பித்தலாட்டம்,
ஏமாற்று, கட்டளை, தொழில், வணிகம், சுரண்டல்,
அதிகாரம்.... என நிகழ்காலத்திய நடுத்தர வாழ்வும் மேட்டிமை வாழ்வும் கருவிகளில்
முடங்கிப் போயிருக்கிறது. மனித முகம் தொலைத்துக்
கருவி முகங்கள் மாட்டிக்கொண்டு அலைந்து திரியும் நடுத்தர, மேட்டிமைப் பிரிவினரின் நிகழ்காலத்திய
வாழ்வைப் பகடி செய்யும் பாங்கில், கோமாளிகள்
செல்பேசிகளில் உரையாடியபடியே நாடக நிலமெங்கும் அலைந்து திரிந்தது, நடுத்தர - மேட்டிமை
வாழ்வை எள்ளலுக்கு உள்ளாக்கியது.
செல்பேசிக் கருவிகளின் ஊடக அதிகாரமும் சுரண்டலின் குவியல்தான். ஆப்பிரிக்க காங்கோ காட்டில் செல்போனுக்கான கனிம
மண்ணைத் தோண்டுவதற்காக அமெரிக்கா இராணுவத்தை அனுப்பி உள்நாட்டுக் கலவரத்தை ஏற்படுத்திப்
பல இலட்சம் பேரைக் கொன்றிருக்கிறது. அந்தப்
பழங்குடி மக்களோட மண்; அந்த இரத்தம் எல்லோரது
செல்போன்களிலும் இருக்கின்றது.” அதனால்தான்,
பழங்குடி மற்றும் விளிம்புநிலைப்பட்ட வாழ்வியலை எடுத்துரைத்த கோமாளிகள், நடுத்தர மற்றும் மேட்டிமை சார்ந்த மக்கள் வாழ்வைப்
பகடி செய்வதன்வழியே நிகழ்காலத்திய அதிகார அமைப்பின் மீதான விமர்சனத்தை முன்வைப்பதாக
வெளிப்படுத்துகின்றது நாடகம்.
நிலவிக்கொண்டிருக்கும் புதுக்குடியேற்றதிகார அரசமைப்பும் அதற்குட்பட்ட வணிக
நிறுவனங்களும் இலவசத் திட்டங்களைத் தொடா்ந்து அறிமுகப்படுத்திக் கொண்டே வருகின்றன. பெருவாரியான மக்களை இலவசங்களுக்கு மயங்கிப்போன மந்தைக்
கூட்டங்களாக ஆக்குவதையே நோக்கமாகக் கொண்ட அத்திட்டங்களுக்குப் பின்னால் சுரண்டலும்
வணிகமும் உள்ளடங்கியிருக்கின்றன. இலவசத் திட்டங்கள் ஒருபுறம், விலைவாசி உயா்வுகள்
இ்னனொருபுறம். ஒரு கூட்டம் கோடிகளைக் குவித்துக்கொண்டிருக்கிறது. இன்னொரு விளிம்புநிலைக் கூட்டம் கோடித்துணி இன்றித்
தவிக்கின்றது. செல்வங்களைப் பெருக்கிக் கொண்டிருக்கிறது
ஒரு கூட்டம். எல்லாவற்றையும் இழந்து நிற்கிறது
ஒரு கூட்டம். உல்லாச வாழ்க்கையில் சிலா் இருந்து கொண்டிருக்கிற இச்சமூக அமைப்பில்தான்
வேலையின்மை, வறுமை, பஞ்சம், பசி, பட்டினி, இறப்பு, தற்கொலை என விளிம்புநிலை மக்களின்
வாழ்வு கோரமாகிக் கொண்டிருக்கிறது.
உழைக்கிற அடித்தள விளிம்புநிலை மக்கள் மீதான சுரண்டல்களை மூடி மறைப்பதற்காகவே
இலவசங்களைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றன அதிகார
மய்யங்கள். இலவசங்களுக்குப் பழக்கப்பட்டுப் போகிறவா்கள் மரணத்திற்கும் பழக்கப்பட்டுப்
போவார்கள் என்கிற மனத் தயாரிப்புதான் இலவச அளிப்புகள். ஒரு கட்டத்தில், இலவசங்களுக்குப் பழக்கப்பட்டோருக்குத்
துாக்குக் கயிறுகளையும் அதிகார மய்யங்கள் வழங்கப் போகின்றன. அதையும் கழுத்தில் மாட்டிக்கொண்டு
– துாக்கில் தொங்கி தற்கொலை செய்துகொள்ளப் போகிறார்கள் என்பதையும், இலவசங்களை ஏற்றுக்கொள்ளுதல்
தன்மானத்திற்கு நாமே போடுகிற துாக்குக் கயிறுதான் என்பதையும் அரசியல் அங்கதத் தொனியில்
கோமாளிகள் வெளிப்படுத்திக் காட்டினா். இதுவுமே,
அதிகார வழிப்பட்ட நிழ்காலத்தியச் சமூக அமைப்பின் மீதான வசைதான்; பகடிதான்; எள்ளல்தான்; விமர்சனம்தான்.
நிகழ்காலத்திய அதிகார மய்யம் சார்ந்த கலை இலக்கிய வடிவங்களே முன்னுக்கு நிறுத்தப்படுகின்றன. பாரம்பரியமான மரபுவழியாக வந்திட்ட பெருவாரியான மக்கள்
கலைகளும், உழைக்கும் – அடித்தள – விளிம்புநிலை மக்களின் கலைகளும் நசிவுக்கும் அழிவுக்கும்
ஆளாகிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில், கலைகளை
மட்டுமே நம்பிப் பிழைத்துக் கொண்டிருந்த – கலை வெளிப்பாடுகளின்வழி அடையாளப்பட்டிருந்த
இயல், இசை, கூத்து, ஓவியம், சிற்பம் எனக் கலைகள் சார்ந்து இயங்கிக் கொண்டிருந்த கலைஞா்களின்
வாழ்வும் பெருந்துயரத்தில் இருந்து கொண்டிருக்கின்றது. இப்படிப்பட்ட ஒரு வாழ்நிலையைச் சந்தித்துவிட்ட விளிம்புநிலைக்
கலைஞா்களை வஞ்சித்து ஏமாற்றி அக்கலைகளை வணிகப் பண்டமாகவும் மாற்றிக் கொண்டிருக்கின்றன
அதிகார மய்யங்கள். இதற்குக் கல்வி நிறுவனங்களும்
போர்டு பவுண்டேசன் போன்ற பன்னாட்டு நிறுவனங்களும் தரகு வேலை பார்த்துக் கொண்டிருப்பதைக்
கோமாளிகளின் குரல் வெளிப்படுத்தியது.
கலைகளை மட்டுமே நம்பியிருக்கும் கலைஞா்களின் மீதான உழைப்புச் சுரண்டலையும்,
இந்த மண்ணின் கலைகள் - மக்களின் கலைகள் – நம்மின் கலை அடையாளங்கள் விலை பேசப்படுவதையும்
சாடுகிற வகையில் கோமாளிகள் வந்து போயினா்.
கலைஞா்கள் மீதான சுரண்டல் எதிர்ப்புணா்வைக் கோமாளிக் கலைஞா்களின்வழி வெளிப்படுத்திக்
காட்டியிருப்பதும் நிகழ்காலத்திய அதிகார அமைப்புகள் மீதான வசைதான். ஆக, கோமாளி நாடக மரபில் வெளிப்பட்ட வசைக்குரல், நிகழ்காலத்திய நிகழ்த்துகலை மரபில் வெளிப்பட்ட மிருக
விதுாசகக் கோமாளிகளிடமும் வெளிப்பட்டிருக்கிறது.
மிருக விதுாசகம் நாடகத்தின் இன்னொரு பகுதியானது, கோமாளிகள் கட்டமைக்கும் புனைவுலகத்தைக் கொண்டிருக்கிறது. நாடகத்தின் இடையிடையே வந்து போகும் கோமாளி நாடகா் ஒருவா், தான் யாரென்று திரும்பத் திரும்பக் கேட்டுகொண்டே அலைகிறார். நிகழ்த்து மரபில் வெளிப்பட்டு மறைந்துபோன கோமாளி நாடகா்களின் மனவுடலிகள், நாடக நிலத்தில் தம் அடையாளத்தைத் தேடித் தவிப்பதாக அமைந்திருக்கிறது.
காலம் முழுதும் ஒடுக்கப்பட்டுக் கிடந்த, அடிமைப்பட்டுக் கிடந்த, விளிம்புநிலையில்
கிடந்த, உழைத்துக் கிடந்த மனிதர்களோடேயே கோமாளிகள் பயணித்திருக்கிறார்கள். அவா்களின்
வாழ்வோடும் மரணத்தோடும் கோமாளிகளும் பிணைந்திருக்கிறார்கள். அதனால்தான், கோமாளி மனவுடலிகள் அம்மக்கள் கதைகளை
மீண்டும் அவிழ்த்துப் போடுகின்றன.
“1856-இல்
நடந்த கலகம். அது இப்ப நடக்கணும். நான் அக்கதையைச்
சொல்லவா?” ” 1757-இல் விவசாயப் பயிர்கள் மறைஞ்சது....
பஞ்சமாகியது.... சன்யாசிக் கூட்டம் ஊரெல்லாம் குலவைபோட்டு கலகப்பாதைக்குக் கிளம்பியதே
அதைக் கதையா சொல்லட்டா”. 1948-இல் சாட்டையடி... சாணிப்பால்..... நான் செருப்பே போடல. செருப்புப் போடணும், அனுமதிப்பீங்களா... அந்தக் கதை சொல்லியாகணும்.
”சனவரி 12-இல் புலி உருமும் கோட்டை அழிக்கப்பட்டுச்சு. மே 16, 17, 18-இல் பூர்வ குடி இன அழிப்புக் கதை
போடவா”. ”நான் அரேபிய நிலத்துல மரண தண்டணை விதிக்கப்பட்ட கதை சொல்லிகளின் பாடலைப் பாடட்டுமா?” இந்தக் கதைகள் யாவும் கொடூரமாகக் கொல்லப்பட்டவர்களின்
கதைகள். கோமாளி மனவுடலிகள் மரணமும் குருதியும் தோய்ந்த கதைகளை இன்னும் சுமந்தபடியே
நாடக நிலத்தில் அலைந்து கொண்டிருக்கிறார்கள்.
கடந்த காலத்திய விளிம்புநிலை மக்கள் வாழ்வும், நிகழ்காலத்திய விளிம்புநிலை மக்கள் வாழ்வும் துயரங்களும்
மரணங்களும் நிரம்பி வழிகின்றவை. கண்ணீா் வரவழைக்கும்
இக்கதைகளை நாடக நிலத்தில் இறக்கி வைத்து விட்டார்கள் கோமாளிகள். மனச்சுமை இறக்கி வைத்த
கோமாளிகள், தங்களுக்கான புனைவுலகத்தைப் போரும் மரணங்களும் தவிப்பும் இல்லாத கனவுலகத்தை
நாடக நிலத்தில் கட்டமைக்கிறார்கள்.
“ஆமா... கற்பனைக்குள்ள அம்மா வருவா... அக்காவையும் தங்கைகளையும் யாரும் கடத்திட்டுப்போக
மாட்டாங்க. தாத்தாவும் பாட்டியும் கதை போடுவாங்க. கற்பனையின் விதைகளைப் பூமியெங்கும்
துாவுவேன்” என்பதாகக் கோமாளி மனவுடலிகளின் புனைவுலகம் விரிவடைகிறது. நிகழ்காலத்திய
உலகின் மீதான கோபமும் எதிர்பார்ப்பும்தான் கனவு நிலையிலான புனைவுலகத்தை நாடக நிலத்தில்
உருவாக்குகிறது. கோமாளிகள் உருவாக்குகிற புனைவுலகம் போல் இவ்வுலகம் மாறவேண்டுமெனில்,
அதிகார மரபு வீழ்த்தப்பட்டு எதிர் அதிகார மரபு வெல்லப்பட வேண்டும். எதிர் அதிகார மரபின் பாதை செவ்வானம் நோக்கியிருக்கிறது. இவ்வாறாக, நிகழ்காலத்தியக் கோமாளிகள், நிகழ்காலத்திய நிகழ்த்துகலை வடிவான மிருக விதுாசக
நாடகத்தில் நிகழ்காலத்திய விளிம்புநிலை மக்களின் குரலாக வெளிப்பட்டிருக்கிறார்கள்; நிகழ்காலத்தின் மீதான வசைகளையும் வெளிப்படுத்துகிறார்கள்; நிகழ்கால வாழ்வு மறுத்தப் புனைவுலகத்தையும் உருவாக்குகிறார்கள்.
மேற்குறித்த விவரிப்புகளைப்போல மிருக விதுாசகம் நாடகத்தில் உரையாடல்மொழி, உடல்மொழி,
இசைமொழி, நாடகக் கோர்வை, ஒளியமைப்பு, அரங்கப் பொருட்கள், சடங்கியல் கூறுகள், அடையாள
மீட்டுருவாக்கம், சமகால வடிவமாக்கம், மரபுசார் நிகழ்த்துக் கூறுகள்.... எனப் பல தளங்கள்
குறித்தும் விரிவாகப் பேசுவதற்கு நிறைய இடங்கள் உண்டு. இக்கட்டுரையானது நிகழ்த்துகலை அழகியலின்வழி வெளிப்பட்ட
அரசியலையே பேசியிருக்கிறது. முருக பூபதி உள்ளிட்ட
மணல்மகுடிக் கலைஞா்களான பேய்க்காமன், விசயகுமார், இரஞ்சன், முத்துக்குமார், முருகேசன்,
கருப்பசாமி, லிவிங்ஸ்மைல் வித்யா, வேல்முருகன், மனோஜ்குமார், பழனிச்சாமி, நந்தக்குமார்,
சந்திரசேகரன், புகழ், கார்க்கி, ரெஜின், சந்தான பூபதி போன்றோர் பண்பாடுசார் நாடகா்களாகத்
தொடா்ந்து கொண்டிருப்பது தமிழ் அரங்கியலை மேலும் வளப்படுத்தும் என்கிற நம்பிக்கையைத்
தந்து கொண்டிருக்கிறது. அந்தவகையில், எதிர் அதிகார மரபின் நிகழ்த்துக் குறியீடான ”மிருக
விதுாசகம்” நாடகமானது வேரிலிருந்து வருபவா்களுக்கு நெருக்கமாகவே அமைந்திருக்கிறது.
கட்டுரைக்குத் துணை நின்றவை
:
1 ச.முருக பூபதி, மிருக விதுாசகம்,
நிகழ்த்துப் பனுவல்(கையெழுத்துப்படி), 2010.
2 . ச.முருக பூபதி, செம்மூதாய், 2008, ஆழி வெளியீடு, சென்னை.
3 . ச.முருக பூபதி, நோ்காணல், குமுதம்
தீராநதி, ஆகசுடு 2010.
4. உ.வே. சாமிநாதா் (ப.ஆ.) சிலப்பதிகாரம் மூலமும் அரும்பதவுரையும் அடியார்க்கு நல்லாருரையும்,1968, தியாகராச விலாச
வெளியீடு, சென்னை.
5 5 பரிதிமாற்
கலைஞா், நாடகவியல், 2004, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.
6. வெ.மு.சாசகான்கனி, அரங்கேற்று காதை ஆராய்ச்சி,
2009. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.
7 ச.வே.
சுப்பிரமணியன், தொல்காப்பியம் தெளிவுரை, 2006, மணிவாசகா் பதிப்பகம், சென்னை.
8.நா.
மம்மது, தமிழிசைப் பேரகராதி, 2010, இன்னிசை அறக்கட்டளை, மதுரை.
9.
எஸ்.
வையாபுரி, (ப.ஆ.) தமிழ்ப் பேரகராதி, தொகுதி – 2, 1982, சென்னை பல்கலைக்கழகம், சென்னை.
10.வின்சிலோவின் ஆங்கில-தமிழ் அகராதி,
1983, ஏசியன் எஜூகேசனல் டிரஸ்ட், புதுதில்லி.
11.இது பெரிய எழுத்து இதழ், ஆடி, 2010.
12.நாடகியா் மு. இராமசாமி அவா்களின் வாய்மொழித்
தரவுகள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக