வியாழன், 18 ஜனவரி, 2018

எனதூர்த் தல புராணம்.

கல்லடுக்குகளின் செதில்களில் வேர்களை நுழைத்தபடி
கோபுர நிழல் மறைப்பில்
வேவு பார்த்துக் கொண்டிருக்கிறது இச்சிச் செடி.

பசப்பூறிய பூசனத்தின் ஈரத்தில்
நீந்தத் தவித்து
சுற்றுக்கல் புடைப்புகளில்
ஒட்டிக் கிடக்கின்றன
கெண்டை மீன்கள்.

திரிகள் நனைத்து
வளையொலி இசைத்த
உள்ளங்கைக் கோடுகளில்
கரி அப்பிக் கிடக்கின்றன
நெய் கசிந்த மாடக்குழிகள்.

முகமற்ற குறிகள்
புணர்ந்து கிடந்த கருவறைக்குள்
மெல்ல நுழைந்து பார்த்த
சிற்றொளிக் கோடுகள்,
கரைந்து போன
காலடித் தடங்களைத்
தாவியோடி அணைத்திட
சுவர்களில் முட்டி மோதி
அழுது கிடக்கின்றன.

வளர்பிறையும் தேய்பிறையும்
காலத்தில் கரைந்து போனதைத்
தோல் உரித்துக் காட்டியிருக்கிறது
கருநாகத்தின் சட்டையொன்று.

களவு போன கலசத்தைப் பேசியபடியும்,
நஞ்சையும் புஞ்சையும் பறிகொடுத்து
காணிகளில் உழுதவர்கள்
கண்ணீர் மல்க ஊர் விட்டுப் போன திசை வெறித்துத் தவித்தும்,
தொன்மங்களின் பூச்சுகள் கரைய
உயிர் வழியும் கண்களால்
சுதைகள் சுற்றி நிற்கின்றன
கோபுரத்தைச் சுற்றியபடி.

மனிதத் தழுவுதல் வேண்டியும்
ஒற்றையாய் மண்டியிட்டு
வெளியே கிடக்கிறது எருது.

கோயிலுக்குச் சாற்றிய காணிகளும் களவு போயின இப்போதும்.

கருவறைக்குள்
ஒளிந்து கிடக்கும் தெய்வம்
வெளிவருவதாய்த் திட்டம் இல்லை
இப்போதும்
எப்போதும் போலவே.

1 கருத்து: