செவ்வாய், 30 ஜனவரி, 2018

நா.வானமாமலையின் பள்ளுப்பாட்டு ஆராய்ச்சி நூல் வெளியீடு

தமிழ்ச் சமூகப் பண்பாட்டு வரைவியலைப் பொருள் முதல்வாதக் கண்ணோட்டத்தில் வளப்படுத்திய மார்க்சியத் தமிழியல் ஆய்வறிஞர் நா.வானமாமலையின் நூற்றாண்டு நினைவுக்கு சின்னஞ்சிறு கைமாறு ஒன்றையாவது செய்திட வேண்டும் என்கிற உள்ளுணர்வு ஊறிக் கொண்டே இருந்தது. கூடவே, நா.வாவின் கருத்தாடல்களை மீளவும் பரவலாக்க வேண்டும் என்கிற விருப்பும் இணைந்து கொண்டது. இதைச் செயலாக்கும் ஒரு முயற்சி தான் எனது தொகுப்பில் வெளிவந்திருக்கும் நா.வானமாமலையின் பள்ளுப் பாட்டு ஆராய்ச்சி எனும் நூல்.

இந்நூலின் வெளியீட்டு விழாவைத் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் வாஞ்சையுடனும் தோழமையுடனும் நிகழ்த்திக் காட்டியது.

இவ்வமைப்பின் 5ஆவது மாநிலப் பண்பாட்டுப் பயிற்சி முகாம் இராசபாளையத்தின் நீர் காத்த அய்யனார் கோயில் வனப்பகுதியில் உள்ள சிவானந்தா ஆசிரம வளாகத்தில் கடந்த 27.01.18 மற்றும் 28.01.18 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்றது.

உலக இலக்கியம், தமிழ்க் கவிதை மரபு, நாட்டுப்புற வழக்காறுகள், பண்பாட்டுச் சிக்கல்கள் போன்ற பல பொருண்மைகளில் கருத்துரைப்புகள் நடைபெற்றன. தோழர் மீரான் மைதீன் அவர்கள் இயக்கிய எழுத்தாளர் பொன்னீலன் அவர்களைக் குறித்த ஆவணப் படம், திருவண்ணாமலைத் தோழர்கள் தயாரித்த அறம் செய்யப் பழகு என்கிற குறும்படம் போன்றவையும் திரையிடப்பட்டன. பாட்டு, கவிதை எனத் தோழர்களின் படைப்பு வெளியும் பகிர்ந்து கொள்ளப்பட்டது.

இந்த முகாமில் நா.வானமாமலையின் பள்ளுப் பாட்டு ஆராய்ச்சி நூலுக்கான வெளியீட்டு அரங்கமும் சிறப்புற அரங்கேறியது.

தமிழ்ப் பல்கலைக்கழகப் பேராசிரியர் முனைவர் இரா.காமராசு அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், தோழர் எசு.கே.கங்காதரன் அவர்கள் நூலை வெளியிட, தோழர்கள் சொக்கலிங்கம் அவர்களும் தோழர் கண்மணிராசா அவர்களும் முதல் இரு படிகளைப்பெற்றுக் கொண்டார்கள்.

நூல் வெளியீட்டுரை நல்கிய தோழர் எசு.கே.கங்காதரன் அவர்கள், நா.வாவோடு எவ்வகையிலும் நேரடித் தொடர்பு இல்லாத ஒருவர், நாவாவின் எழுத்துகளைத் தேடிப் பிடித்து அவற்றின் ஊடாகத் தமது எழுத்தைக் கொண்டு செலுத்தும் மகாராசன் அவர்களை, நாவாவின் எழுத்துலக வாரிசுகளின் தொடர்ச்சியாகவே பார்க்கிறேன். நாவாவோடு நேரிடையாகவும் ஆய்வுகளோடும் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ள எங்களைப் போன்றவர்கள் செய்திடாத ஒரு காரியத்தை நா.வானமாமலையின் பள்ளுப் பாட்டு ஆராய்ச்சி நூல் வழியாகச் செய்து காட்டியிருக்கிறார். உழவுத் தொழில் மரபினரான பள்ளர்களும் பள்ளிகளும் தான் இந்தச் சமூகத்தின் ஆதார சுருதிகள் என்பதை நா.வா அவர்களின் இந்தக் கட்டுரைகள் பேசியுள்ளன. நா. வாவின் தொடக்க கால ஆராய்ச்சி இந்தப் பள்ளுப் பாட்டிலிருந்து தான் தொடங்கி இருக்கிறது. உழவர்களைக் குறித்த உரையாடல்களுக்கு இந்நூல் பெருந்துணை செய்யும். மிக அழகான நேர்த்தியான வடிவமைப்போடு இந்நூல் வெளிவந்திருக்கிறது. இந்தக் காரியத்தைச் செய்திருக்கும் மகாராசனுக்கும் ஆதி பதிப்பகத்திற்கும் வாழ்த்துகள் பல. இது போன்று நிறைய நூல்களை வெளியிட வேண்டும் எனப் பேசியது நெகிழ்ச்சியாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது.

இந் நூலை நான் வெளிக்கொண்டு வந்தமைக்காகப் பேராசிரியர் முனைவர் ந.முத்து மோகன் அவர்கள், நூலாடை போர்த்திப் பாராட்ட, இறுதியாய்ச் சின்னதோர் ஏற்புரை வழங்கினேன்.

தமிழ்த் தேசியத்தின் இரு பெரும் அறிவு ஆளுமைகளாகத் திகழும் பாவாணர் மற்றும் நா.வானமாமலை ஆகியோரின் எழுத்துகளே எனது எழுத்துகளுக்கான முன்னத்தி ஏர்கள். தமிழ்ச் சமூகத்தைப் புரிந்து கொள்ளவும், தமிழ்ச் சமூகத்தைப் புனரமைக்கவுமான பண்பாட்டுக்களத்தில் இவ்விருவரின் எழுத்துகள் தவிர்க்க முடியாதவை. இவர்களைத் தவிர்த்துவிட்டு தமிழ்ச் சமூகத்தில் எந்தப் புரட்சியையும் செய்ய முடியாது. அந்த வகையில், நா.வாவின் நூற்றாண்டுக்கு என்னால் ஆன ஒரு தளுகையே இந்நூல். இந்த முயற்சிக்கு வாஞ்சையுடனும் அன்புடனும் மதிப்புடனும் ஒரு வெளியீட்டு நிகழ்வை நிகழ்த்தியிருக்கும் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் தோழர்கள் அனைவருக்கும் எனது அன்பும் நன்றியும் மதிப்பும் எப்போதும் உண்டு எனப் பேசி முடித்தேன்.

முன் பின் அறிமுகமே இல்லாத தோழர்களின் இந்த முயற்சியும் ஏற்பாடும் இன்னும் எழுதுவதற்கான தெம்பைத் தந்திருக்கின்றன. இந்த நூல் வழியாக நிறைய தோழர்களின் அறிமுகமும் அன்பும் கிடைத்திருக்கிறது.

இரு நாள் முகாமை ஒருங்கிணைத்தும் விருந்தோம்பல் பண்பை உயிர்ப்பித்தும் காட்டிய தோழர்கள் கண்மணிராசா, அமீம் முசுதபா, செல்வக்குமார், செந்தழல், ஆனந்தி, சரவணன் உள்ளிட்ட தோழர்களின் உழைப்பு மதிக்கத் தக்கவை.

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்திற்கும் தோழர்களுக்கும் எனது அன்பும் நன்றியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக