செவ்வாய், 31 ஜூலை, 2018

மகாராசனின் பெண் மொழி இயங்கியல் நூலைக் குறித்து :- அரங்க மல்லிகா


மேலை இலக்கியத்திறனாய்வு இந்திய இலக்கிய வளர்ச்சியில் ஒரு திருப்புமுனை. நவீனக்கோட்பாடுகளின் அறிமுகத்தால் பிரதிகளின் அர்த்தக் களம் விசாலமாகியுள்ளது. அமைப்பியல், பின் அமைப்பியல், நவீனத்துவம், பின் நவீனத்துவம், பெண்ணியம், தலித்தியம் என்ற கோட்பாடுகளை, இலக்கியத்திறனாய்வை இந்தியச் சூழலில் பல்வேறு மொழிசார்ந்த பண்பாட்டுத் தகவமைப்புகளினூடே பொருத்திப்பார்க்கும் சூழலால் பண்பாட்டுத் தகர்ப்பு நிகழ்ந்திருக்கிறது. இலக்கியக்களத்தில் நடைபெற்றிருக்கிற நவீனப்புரட்சி யுகங்கள்தோறும் புனிதங்களின் மீது கட்டப்பட்டுள்ள கருவிகளற்ற வன்முறையை விசாரணைக்குட்படுத்தியிருக்கின்றது. இதனால் இதுவரையில் எழுதப்பட்ட, பாதுகாக்கப்பட்ட, ஆவணப்படுத்தப்பட்ட யாவும் கலை இலக்கிய ஊடகத்தைப் புரட்டிப் போட்டுள்ளன. குறிப்பாக, பின்காலனித்துவ இலக்கியங்கள் விடுதலை சார்ந்த சிந்தனைகளைக் கூர்மைப்படுத்தும் களமாகியுள்ளன. படைப்புகள், அடிமைப்பட்ட சமுதாயத்தை, அடிமையானதன் வரலாற்றை மீளாய்வு செய்வதற்கான தேடல்களை எங்கிருந்து தொடங்குவது என்பது குறித்த ஆய்வு வளர்ந்து வருகிறது. விடுதலை அரசியல், ஆணின் இயங்குதளத்தைக் கட்டுடைக்கின்றது. இது இயக்கமாக வேண்டிய ஒரு நெருக்கடியை இலக்கியங்கள் புனருற்பத்திச் செற்கின்றன.  எழுதப்பட்டவை விவாதக்களமாகின்றன. மொழி அதன் உந்துசக்தி. ஒருவரோடு ஒருவர் செய்திகளைப் பரிமாறிக் கொள்ளும் ஊடகமாகி, மொழி தனது இருப்பை அர்த்தப்படுத்துகின்றது.  மனிதப் பரிணாமம் மொழியின் மூலமாகப் பெரிய வீச்சை அடைந்துள்ளது. ஓர் ஆணிண் பார்வையில் அடைபடும் எதார்த்தங்கள் ஒரு பெண்ணின் பார்வையில் வேறான அடையாளத்தை அர்த்தப்படுத்துகிறது. ஆணின் அன்பு என்பது அதிகாரம், பரிவு, கொடுத்தல் தன்மையுடையதாகவும், பெண்ணின் அன்பு தாய்மை, அதிகாரத்தைப் பெற்றுக் கொள்ளும் பண்புசார்ந்ததாகவும் தீர்மானிக்கப்பட்டு மொழி அதற்குரிய ஓடுகளமாக அமைந்திருக்கிறது.
மொழி, மனிதனின் இருப்பையும் அடையாளத்தையும் உற்பத்தி செய்கிறது. மனித இயக்கம் உடலியங்கியலை உள்ளீடாகக் கொண்டது. இது பொருள்சார்புடையது. குடும்பம் இதன் மையம். இது ஆணின் எல்லைக்குரியதாக இருக்கிறது. இதில் பெண்ணின் சுவாசம் கட்டுக்குரியதாகிறது. தொல் சமூகத்தில் பெண்ணின் வாழ்வு உழைப்போடு தொடர்புபடுத்தப்பட்டிருந்தது. பின்னர் வீடும், உழைப்பும் பிரிக்கப்பட்டு எவ்வித அறிவிப்புமின்றி அவர்களின் உழைப்பை ஆண்கள் நிர்வகிக்கத் தொடங்கினர். தொழில்மயம், நவீனகால விஞ்ஞானம் ஆகிய யாவும் பெண்ணின் பங்கு நிலைப் பரிணாமத்தைக் குறைத்தே மதிப்பிட்டன.
ஆண்வழிச் சமூக முறைமையில் காணலாகும் பெண்மீதான அதிகாரத்திற்கும் பிற செயல்களுக்கும் ஆண்களே காரணம் எனப் பெண்மையச் சிந்தனையாளர்கள் கருதுகின்றனர். பெண்ணுக்கும் ஆணுக்குமான பால் வேறு பிரிவினையே உண்மையான வர்க்கப் பிரிவினை; இதன் காரணமாகத்தான் பெண்ணின் அந்தரங்கம் பகிரங்கமானது. பெண்ணின் உடல் பாலியல் இருப்பு ஆணதிகாரத்திற்கு எதிரானதாக நிறுத்தப்பட்டது. ஒருபால் சேர்க்கை ஆதரிக்கப்பட்டது. பெண் உடல் கவர்ச்சிக்குரியதான சந்தைக் கலாச்சாரம் எதிர்க்கப்பட்டது. இலக்கியத்தில் மொழி பாகுபடுத்தப்பட்டு ஆண்மொழி, பெண்மொழி என அறியும் முயற்சி வளர்ந்தது. எனினும் பெண்மொழியை அறிமுகப்படுத்துவதில் ஆண் படைப்பாளர்களின் எதிர்க்குரலைத் தவிர்க்க முடியவில்லை.
பெண்ணியம், பெண்ணை மையமிட்ட ஆய்வு பெண்மைநிலை ஆய்வாகவும், பெண் உடலரசியல் ஆய்வாகவும் (பெண் மையம்), அந்தரங்கத்தை அரசியல்படுத்தும் பெண்நிலை ஆய்வாகவும் புரிந்துகொள்ளப்பட வேண்டும். அவ்வாறல்லாமல், பெண் பற்றி எழுதியிருக்கக் கூடிய எல்லாவற்றையும் பெண்ணியமாகப் பார்க்கும் பார்வை வளர்ந்து வருகிறது. ஏனென்றால் காலந்தோறும் பெண்மைநிலை சார்ந்த புனைவுகள், ஆண்களுக்குக் கிளர்ச்சியூட்டுவன. பெரும்பாலான ஆண் எழுத்தாளர்களின் எழுத்துக்கள் காமத்தின் உச்சம் தொடுவன. காமத் தனிவிற்குப்பிறகு பெண்உடல் தீட்டு எனக் குப்பைத் தொட்டியாய் ஒதுக்கப்படுவது உண்டு. இந்தப் போக்கு மகாராசனின் “பெண்மொழி இயங்கியல்” என்ற நூலில் இல்லை. பெண்ணை, பெண்ணின் வலியை வரலாற்று நோக்கோடும், பெண் நோக்கோடும் ஆராய்ந்து, மூன்றாம் நபராக, நடுநிலை ஆய்வாளராக, பெண்ணியத்தை உட்செரித்துக் கொண்டிருப்பதை நூல் முழுக்க உணரமுடிகிறது. 
இந்நூல் பெண் உடலரசியலை மையமிட்டது. சங்க இலக்கியம் தொடங்கி நவீன இலக்கியம் வரை மிக நேர்த்தியாகப் பெண் உடலரசியல் / பெண்மொழி ஆய்வுக்குட்பட்டிருக்கிறது. பெண் உடல் தீட்டானது, பெண் தீட்டானவள் என்ற இந்து மதக் கற்பிதத்தை இரண்டு பெண் கவிஞர்கள் மிகத் தீவிரமாக எதிர்த்துள்ளனர். பெண்ணின் உடலனுபவத்தைக் கலைத்துப்போடுவது பெண்மொழி என்ற புரிதல் தொடர்கிறது. உடலனுபவக் கலைப்போடு மனதைப் பகுத்தறிவோடு கலைக்க வேண்டிய தேவையையும் பெண்மொழி முன்வைக்க வேண்டும். இதை ஆவுடையக்காள், உத்தரநல்லூர் நங்கைக் கவிதைகளில் காணமுடிகின்றது.  ஆவுடையக்காள், பெண்ணும் ஆணும் கடவுளாய் வாழ்வதை அறியாதவரே தீட்டை நடைமுறைப்படுத்துவார்கள் எனச் சாடுகிறார்.
தீட்டென்று மூன்று நாள் வீட்டை விட்டு  விலக்கி 
திரிந்து விட்டு சித்கனத்தை மறந்து மதியிழந்து
நாலாநாள் உதயத்தில் நன்றாயுடல் முழுகி 
நடுவீட்டில் வந்திருப்பாய் நான்சுகி என்றுரைத்து 
தீட்டென்றும் பெண்ணினுடைய தேகத்துக்குள்ளிருக்க
தேகமேல் முழுகிவிட்டால் தீட்டோடிப் போமோ
ஆசாரமாச்சுதென்று ஐந்தாநாள் முழுகி
அகத்திலுள்ள பொருள்தொடுவாய் அகத்தீட்டு போச்சோ?
என்ற பாடல்,  பெண், ஆண் ஆகிய இருவரும் மனத்தில் அழுக்கில்லாத மனிதத்தை முன்னிறுத்துகிற கலகக் கலாச்சார உணர்ச்சி உள்ளடக்கிய உயிரினமாகப் பார்க்கப்பட வேண்டிய தேவையை முன்மொழிகிறது.
இப்படிப்பட்ட புரிதலை உள்ளடக்கிய பெண்ணிய ஆய்வுகள் வரவேண்டிய தேவையை மகாராசனின் ‘பெண்மொழி இயங்கியல்’ நூல் பிரகடனப்படுத்துகிறது. பாலியல் என்பது இயக்கம். சுலாமித் ஃபயர்ஸ்டோன் தனது பாலியல் இயங்கியல் என்ற நூலில் பெண் பாலியக்கம் அரசியலானது எனத் தெளிவுபடுத்துகிறார். மனித இயக்கம் உயிரியல் பாங்கில் அமைந்த உள்ளுணர்வின் வெளிப்பாடான பாலியலை மையமாகக் கொண்டது. சமூக-பண்பாட்டு ஒழுக்கவியலைத் தீர்மானித்த ஆணின் ஒழுக்க வரையறைகளால் கட்டுப்படுத்தப்படுகிறது. இதனால் ஆண் பெண் வேறுபாடு ஓர்மை மன நிலையோடு பொருத்திப் பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக, தன்னிலை கட்டமைக்கப்படுகிறது.  இது ஆணுக்கும் பெண்ணுக்குமான விருப்பம், இலட்சியம் ஆகியவற்றை வேறுபடுத்திக் காட்டுகிறது. பெண்கள் பாலியல் உந்துதலாகப் பார்க்கப்படுவது ஊடகவெளியில் உச்சம் பெற்றுள்ளது. ஆண்கள் இந்த உச்சத்தை மடைமாற்றுச் செய்துகொள்ள முனைகிறார்கள். ழாக் லக்கான் , மார்க்யூஸ்  மற்றும் வில்ஹெம் ரீச்  போன்ற உள, பின் நவீனத்துவப் பெண்ணியலாளர்கள் பாலியல் இயக்கம் எவ்வித அமுக்கத்திற்குள்ளாகாமல் இயல்பாக நடைபெறும்போது, பெண் ஒடுக்குமுறை நிகழாது எனக் கூறுகின்றனர்.
பெண் ஒடுக்குமுறை நிகழும் இடம் குடும்பம். இதை, அரசின் அமைப்பும் கருத்தியலும் வார்க்கப்படுகின்ற ஓர் ஆலைதான் குடும்பம் என ரெய்ச் கூறுகிறார். இதை, குழந்தைப் பருவத்திலே தொடங்கிவிடுவதாகக் குற்றம் சாட்டுகிறார். எனவே, பெண் சுதந்திரமானவளாக இயங்க, பாலியல் உந்துதல்கள் சுதந்திரமாக வெளிப்படவேண்டும் என்றும் கூறுகிறார். இத்தகைய பெண்ணியச் சிந்தனைகள்  உத்தரநல்லூர் நங்கைக் கவிதையில் வெளிப்பட்டுள்ளன.
ஓரினம் இயற்கையானதாகவும் நிரந்தரமானதாகவும் சார்பானதாகவும் இருப்பது இயல்பானதல்ல என்ற விளக்கத்தை உள்ளடக்கிய ‘பாலினம்’ என்ற கருத்தியல் அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பேசப்படுகின்றது; எழுதப்படுகின்றது. இச்சூழலில் பெண்ணும் ஆணும் சமம் என்ற புரிதலை உலகளாவியதாக்க வேண்டிய தேவையை விசாலப்படுத்தியுள்ளது மகாராசனின் இந்நூல்.
பாலியம், சமத்துவமின்மை, பால்வேறுபாடு, அதிகார வேறுபாடு, சார்புநிலை சார்ந்த அரசியல் மற்றும் வரலாற்றுப் பார்வையோடு விளிம்பு நிலையிலுள்ள தலித்துகள், திருநங்கைகள் ஆகியோரின் பாலிய இயக்கம் பேசப்பட வேண்டியதன் அவசியத்தை நவீனத் தமிழ்க் கவிதைகள் கவனப்படுத்துகின்றன. ஆண் உருவாக்கி வைத்திருக்கும் சட்டங்களைக் கேள்விக்குட்படுத்தி ஆண் சமூகத்தையும் குறிப்பாக, பேதமையோடு வாழும் பெண் சமூகத்தையும் வெள்ளிவீதியார், ஔவையார், காரைக்காலம்மையார், ஆண்டாள் பிற்காலத்தில் ஆவுடையக்காள், உத்தரநல்லூர் நங்கை ஆகியோர் பெண்நிலைக் கலக அரசியலை, பெண்ணிய அரசியலைக் கவனப்படுத்தியுள்ளது அவதானிக்கத்தக்கது.
20-ஆம் நூற்றாண்டின் இறுதியில் அறிமுகம் ஆகும் பெண் கவிஞர்கள் ஔவையாரை, வெள்ளிவீதியாரைத் தங்கள் கவிதைக்குள் சுவாசித்துள்ளனர். சங்க இலககியத்தை நவீனக் கவிதைக் களத்திற்கு நகர்த்தியுள்ளனர்; அழகியலை நவீனப்படுத்தியுள்ளனர். தூய்மை இல்லாத துணி தூமை என அழைக்கப்படுவது கிராமியச் சொலவடை என்றாலும்,  தூய்மை என்ற கருத்தாக்கத்தின் மீதான இந்துத்துவ எதிர் மனோபாவம் கலகமாகியிருப்பதை  வெள்ளிவீதியார், ஔவை, உத்தரநல்லூர் நங்கை, ஆவுடையக்காள், ஆகியோரின் கவிதைகளிலிருந்து உணர்ந்துகொள்ளலாம்.
தமிழில் நவீன இலக்கிய உலகில் குறிப்பிட்ட நான்கு பெண் கவிஞர்களின் கவிதைகள் மட்டும்தான் பெண் வெளியை, பெண்மொழியைப் பேசுவன என்ற புரிதலில் அறிவு ஜீவிகள்(?) கிடைக்கின்ற கருத்தரங்க மேடைகளிளெல்லாம் அவர்களின் விளம்பரதாரர்களாகின்றனர். மாறாக, உத்தரநல்லூர் நங்கை, ஆவுடையக்காள் கவிதைகள் முந்தைய காலகட்ட பெண் கலகக் காரர்களாகிறார்கள் என்பதை இந்நூல் எடுத்துக் கூறுவதன் மூலம் மகாராசனின் நூலகத் தேடலை உணரமுடிகிறது, தேடல் தொலைந்து போனதில் இல்லை; தொலைவில் என்பதை அவரின் முயற்சி அறிவிக்கிறது. தமிழ் இலக்கிய வரலாற்றில் சாதிய எதிர்ப்புச் சிந்தனையோடு பகுத்தறிவை எடுத்து இயம்பிய உத்தரநல்லூர் நங்கை மறைக்கப்பட்டிருக்கிறார் என்ற புதுத்தகவலை மகாராசன் முதன் முதலாகப் பதிவு செய்கிறார்.  “பாய்ச்சலூர் பதிகம்” என்ற பதிகத்தில் ஆற்றங்கரையில் மாடுமேய்க்கும் உத்திரநல்லூர் நங்கைக்கும் வேதம் ஓதிச் செல்லும் பார்ப்பன இளைஞனுக்கும் உறவு ஏற்படுகின்றது. சாதிக்கலப்பு நிகழஇருப்பதைச் சமூகத்தார் எதிர்க்கின்றனர். அவர்களின் உறவு குறித்து
மகங்கொண்ட தேகந்தன்னில் மற்றொரு சுத்தம் காணீர்
அகங்கொண்டு புறமும்கண்டு அவனுக்கே தாரமானேன்
சுகங்கண்டு துக்கங்கண்டு சுக்கில வழியே சென்று
பகங்கொண்ட தேனோ என்னில் பாய்ச்சலூர் கிராமத்தாரே
என்று வினவுகிறார். ஒடுக்கப்பட்ட சமூகத்தின் மொத்த அனுபவத்தையும் இணைத்த நிலையில் அவரின் எதிர்ப்புக் குரல் இருப்பதாக மகாராசன் சுட்டிக்காட்டுகிறார்.
குலங்குலம் என்பதெல்லாம் குடுமியும் பூணுநூலும்
சிலந்தியும் நூலும் போலச் சிறப்புடன் பிறப்பதுண்டோ?
நலந்தரு நான்கு வேதம் நான் முகம் படைத்ததுண்டோ?
பலந்தரு பொருளுமுண்டோ பாய்ச்சலூர் பதிகத்தாரே.
என்றும், சாதியத்தை வேதங்கள் காப்பாற்றுவதைச் சாடுகிறார்.
ஒருபனை இரண்டு பாளை ஒன்று நுங்கு ஒன்று கள்ளு
அறிவினில் அறிந்தவர்க்கு அதுவுங்கள் இதுவுங்கள்ளே
ஒருகுழை உயர்ந்த தேனோ ஒரு குழை தாழ்ந்த தேனோ
பறையனைப் பழிப்பதேனோ?
என்ற பகுத்தறிவுக் கேள்வி உத்தரநல்லூர் நங்கையின் அறிவின் முதிர்ச்சி என உணர்வதைக் காட்டிலும் பெண் ஒடுக்குமுறை என்பது தலித் பெண் ஒடுக்குமுறையோடு கண்டிப்பாக எண்ணிப்பார்க்க வேண்டிய அவசியத்தை 16-ஆம் நூற்றாண்டிலே ஏற்படுத்தியிருக்கிறார். மனித உரிமை என்பது தலித்துகளின் உரிமை  என வலியுறுத்தும் காலம் இது. இதற்கான விவாதங்கள் அரசியலாகி வருகின்றன. பெண்ணியம் பேசுபவர்கள் அம்பேத்கரின் தீண்டாமை பற்றிய கட்டுரை, சாதிகளின் தோற்றம் பற்றிய கட்டுரைகளை எல்லாம் வாசிக்க வேண்டிய தேவையை நங்கையிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம். 
வேதாந்தங்கள் குறித்த ஆவுடையக்காள் கவிதைகள் சமத்துவத்தை வலியுறுத்துகின்றன எனக் கூறுகிறார்.
  ஜாதிவர்ண குலகோத்திர ஆசிர மாதிகள் பொய்யடா
ஜாதிவர்ணாசிரமம் போச்சே ; வேதசாஸ்திரம் வெறும் பேச்சே.
சாதிய வர்க்கப் பிரிவினைக்கு வேதங்கள் சாத்திரங்கள்தான் ஆதாரம். அவை களையப்படவேண்டும் எனத் துணிச்சலுடன் பதிவு செய்துள்ளார். பெண்ணின் முலை, தூய்மைத் துணி, பட்டாம்பூச்சியாய்ப் பறக்கும் யோனி, அலாதி உடல், அடர்மயிர்க்காட்டில் வழியும் காமம் என்பனவாக, பெண் மொழிப் பதிவை உணர்த்தியுள்ள பெண்கவிஞர்கள், பெண் சார்பு எழுத்தாளர்கள் உடலின் வினைகளை உடல்சார்ந்த சமூக மூடக்கட்டுகளைக் கட்டவிழ்க்கும் ஆவுடையக்காள், உத்தரநல்லூர் நங்கை ஆகியோரையும் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதை இவர்கள் கவிதையிலிருந்து அறியலாம் எனப் பெண் பார்வையில் ஆணாக இருந்து அலசியிருக்கிறார் மகாராசன். காமம் பெண்ணுக்கு நிறைவேறப்படாதபோது அது கடவுள்பால் மடைமாற்றுச் செய்யப்பட்டிருப்பதை ஆண்டாள், காரைக்கால் அம்மையார் கவிதைகள் இயம்புகின்றன. சாதி எதிர்ப்பும், பெண் அடிமை ஒழிப்பும் பெண்மொழிக் களத்தை விரிவுபடுத்தியிருப்பதை ஓர் ஆண், படைப்பாளனாகவும், விமரிசனனாகவும் நின்று பெண்மொழியை உட்செரித்துக் கொண்டிருப்பது பெண்ணிய ஆய்வுலகில் ஒரு மைல் கல்லாகும்.
ஆண் ஆய்வாளர்கள் பெண்ணியத்தை ஆய்வாகத் தந்துள்ளனர்; கட்டுரைகள் எழுதியுள்ளனர். பெண்ணியத்தை, தலித்தியத்தைத் தமிழகத்தில் அறிமுகப்படுத்தியவர்கள் இன்று சட்டமன்ற உறுப்பினர்களாகவும் உள்ளனர். ஆனால், பெண்மீதான இவர்களின் பார்வை கேள்விக்குட்படுகிறது. பெண்ணியத்தைப் பலவிருதுகளுக்குச் சொந்தக்காரரான எழுத்தாளர் ஜெயகாந்தன் பெண்ணீயம் எனச் சாடுவதை மறந்துவிட முடியாது. இத்தகையச் சூழலில் பெண்ணியம் பெண்ணீயமாக அறிவுக்கிறுக்கர்களால் புரிந்து கொள்ளப்படும் தமிழ்ச் சூழலில், பெண் மொழியின் மையச்சரடைப் பிடித்திருக்கிறார் மகாராசன்.
பெண்ணிய ஆய்வுகளில் மிகக் குறிப்பிடத்தக்க ஆய்வாக இது இருக்கிறது. இவர், சங்க இலக்கியப் பெண்கவிஞர்களின் கவிதையோடு நவீனப்பெண் கவிஞர்களின் கவிதைகளையும் ஒப்பிட்டு, ஆண் அதிகாரப் பாலியல் செயல்பாடுகளில் பெண் உடல் நுகர்பொருளாகியிருக்கும் உலகமயச் சூழலை மொழி நேர்த்தியோடும், கருத்துத் தெளிவோடும் அறிவியல் பார்வை, சமூக அக்கறை யாவும் மகாராசனின் வாசிப்பு அரசியலை முன்மொழிகின்றன. பெண் விடுதலையை ஆண் நல்கிடஇயலாது. உணர்ந்து கொள்ள இயலும், ஆனால் உணர்த்துவது கடினம். அப்படியே பெண் விடுதலையை ஆண் பேசுவது என்பதும் உண்மையாக இருக்காது என்ற விவாதம் பொய்யாகிறது மகாராசனின் பெண்ணிய வாசிப்பில். இதுவரையில் எழுந்துள்ள ஆய்வுகள் யாவும் மேல்கட்டுமானத்திலிருந்து எழுதப்பட்டிருக்க, மகாராசனின் ‘பெண்மொழி இயங்கியல்’ என்னும் இந்நூல் மற்றும் ‘கீழிருந்து எழுகின்ற வரலாறு’ ஆகிய நூல்கள் கீழ்க்கட்டுமானத்திலிருந்துதான் விடுதலை பிறக்க வேண்டும் என்ற தத்துவத்தைச் சொல்கின்றன. ‘அரவாணிகள்: உடலியல் உளவியல் வாழ்வியல்’ என்ற இவரது தொகுப்பு நூல் விளிம்புநிலையில் வாழும் திருநங்கைகளின் வாழ்வியற் பதிவாகும்.மேலும் இவரது தொகுப்பில் வெளிவந்துள்ள ‘ஈழத்தில் சாதியம்: இருப்பும் தகர்ப்பும்’ என்ற நூல், ‘ஒரு கோப்பைத் தண்ணீர்த் தத்துவமும் காதலற்ற முத்தங்களும்’ என்ற நூலும்  ‘மார்க்சியமும் மொழியியல் தேசிய இனப் பிரச்சனைகளும்’ என்ற நூலும் விடுதலை வேட்கையையும் சமூகம் பற்றிய தெளிவான பார்வையையும் அறிந்து கொள்ள உதவுகின்றன. இவர் மாணவப் பருவத்திலேயே ‘ஏர்’ என்ற பத்திரிகை நடத்தியிருப்பதைச் சுட்டிக்காட்டாமல் இருக்க முடியாது.
மகாராசனின் முகவரியைத் தமிழ்த் தேசியவாதியாகவும் பெண்ணியவாதியாகவும் தமிழ்மொழிப் புலமையாளராகவும் அடையாளப்படுத்தலாம். இன்றைய ஆய்வாளர்கள் ஒரு குறிப்பிட்ட தலைப்பில் தனது எல்லையைச் சுருக்கிக் கொண்டு அதற்கான தேடல் முயற்சியில் சுருங்கிப்போன காய்களைப்போல இருக்கும் சூழலில், தமிழில் அதிகமான நூல்களைக் கட்டிட இடிபாடுகளில் சிக்குண்டு கிடக்கும் மனித மீட்பாளரைப்போல, பழைய கட்டிட நூலகங்களில் செல்லரித்துப் போயிருக்கும் நூல்களைத் தூசுடன் சுவாசித்துக் கொண்டு வாசித்து வாசித்து, தெளிந்த மொழிநடைக்கு உரிமையாளராக மிடுக்குடன் நடக்கிறார் மகாராசன். ஆய்வுக் களத்தில் நிமிர்ந்த ஞானச் செருக்குடன் நடைபோட என் மூலாதாரத்திலிருந்து வார்த்தைகளைக் குவித்து வாழ்த்துகின்றேன். என் சிந்தனையை உரசிப்பார்க்க இந்நூல் சவாலாக அமைந்திருந்தது என்று கூறுவதைவிட அவரது மொழியாளுகையில் தெளித்த சிந்தனைகளோடு பயணிக்கிறேன் என்ற பெருமிதத்துடன் அவரது தமிழ்ப்பணி, பெண் விடுதலைப் பயணம் தொடர வாழ்த்துகிறேன்.
வாழ்த்துக்களுடன்
முனைவர் அரங்க மல்லிகா
பேராசிரியர், தமிழ்த்துறை,
எத்திராஜ் கல்லூரி, சென்னை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக