செவ்வாய், 22 ஜனவரி, 2019

கல்விப்புல ஆய்வரங்கில் சொல் நிலம் : மு.செல்லமுத்து




மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தமிழியற்புலத்தின் தமிழியல்துறை முனைவர் பட்ட ஆய்வாளர் திரு மு.செல்லமுத்து அவர்கள், எனது கவிதைத் தொகுப்பான சொல்நிலம்  நூல் அறிமுகத்தை முன்வைத்துப் பேசியதன் சாரம்.

ஏர் மகாராசன்  மதுரைக்கு அருகிலிருக்கும் சின்ன உடைப்பு என்னும் சிற்றூரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். வேளாண்மை. கல்வி, கலை, இலக்கியம், பண்பாடு, தொல்லியல்,சூழலியல், தமிழியல், மாற்று அரசியல், எளிய மக்களின் வாழ்வியல் அசைவுகள் எனப் பல்வேறு பரிமாணங்களில் பணியாற்றுகிறவர். தொன்மை பாதுகாப்பு மன்றம், மக்கள் தமிழ் ஆய்வரண், ஏர் இதழ் போன்று ஈடுபாட்டோடு சிவகங்கை மன்னர் துரைசிங்கம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வருகை உதவிப்பேராசிரியராகவும், தற்போது ஒரு பள்ளியின் ஆசிரியராகப் பணியாற்றுவதாகவும் இந்நூலாசிரியர் குறித்த அறிமுகத்தை முதலில் தெளிவுபடுத்தினார். பின்னர், இந்நூலாசிரியர் குறிப்பிட்டிருந்தது போல்,

“நனவிலும் கனவிலும்
 பாடாய்ப் படுத்தும்
 நினைவுகள்,
 இப்படியான
 கவிதைகளில் தானே
 செழித்து நிற்கின்றன”
என்ற வரிகளை நினைவுகூர்ந்தார்.

 இந்நூலில் கருச்சொல், நிழல் வனம், கூதிர்காலம், அகக் கண்ணர்கள், அலை நிலத்து அழுகை, கெடுநகர், நிலப்படுகொலை, இதுவும் ஓர் ஆணவப் படுகொலை, மனங்கொத்தி, அழுகைத்தமிழ், ஆயுட்காலம், அறத்தீ மனிதர்கள், ஈழப்பனையும் குருவிகளும், உறவுக்கூடு, துயர்ப்படலம், ஆழிமுகம், செந்நெல் மனிதர்கள், பாழ்மனம், ஈசப்பால் போன்ற பல்வேறு பாடுபொருளில் தலைசிறந்த 52 கவிதைகள் இடம்பெற்றுள்ளதாகவும், இந்நூலாசிரியர் மானுட சமூகம் எதிர்கொள்ளும் சமகால பிரச்சனைகள் பலவற்றைக் கவிதைகளாக்கியுள்ளார் எனவும் குறிப்பிட்டார்.

"செங்காட்டில்
 ஏரூட்டி உழுகிற
 கருத்த மேனிக் கண்களில்
 முளைகட்டிக் கிடக்கிறது
 பசி ஒளி.

அழுது கொண்டிருந்தாலும்
உழுது கொண்டே இருவென்று
காலில் விழுந்து கிடக்கிறது
நிலம்."
என்கிற கவிதை வரிகளைக் கோடிட்டுக்காட்டி, விவசாயத்தை தன் குலத்தொழிலாக ஏற்று தன் மண்ணையும் அதுசார்ந்த மக்களையும் பெரிதும் நேசிப்பவராக வாழ்கிறார் எனவும், சமூகத்தின் மீதான தனது சிந்தனைகளை மார்க்சியம் வலியுறுத்தும் பொதுவுடைமைக் கொள்கையில் நின்று பேசியுள்ளார் எனவும் குறிப்பிட்டார்.

சொல்நிலம் என்கிற இக்கவிதைத் தொகுப்பனாது பல்வேறு பார்வையில் ஆய்வுக்குட்படுத்த வேண்டிய ஓரு நல்ல இலக்கியப்படைப்பு எனவும் குறிப்பிட்டார்.

        எந்தவொரு படைப்பாளியும் தன் படைப்பில் அடையவேண்டிய உச்சநிலையை நோக்கியே பயணப்படுவர். இலக்கியவாசிப்பில் பெரும் ஈடுபாட்டோடு செயல்படும் வாசகர்களின் மனங்களில் அவ்வாறான படைப்புகளே பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன எனவும் கூறினார்.

 தொல்காப்பியம், சங்கஇலக்கியம், நவீனவாசிப்பு போன்ற பல்வேறு தமிழிலக்கியங்களை நன்கு கற்றுணர்ந்து இந்நூலாசிரியர் தனது படைப்பின் பாடுபொருளை திட்டமிட்டு கவிதைகளாக்கியுள்ளார் எனத் தாம் உணர்ந்ததாகவும் அவையில் குறிப்பிட்டார். தான் பிறந்த சிவகங்கை மாவட்ட வட்டார வழக்கிலும் கவிதைகள் புனையப்பட்டுள்ளன என்றும், இவரது கவிதைகள், வாசிக்கும் வாசகனுக்கு புதிய புதிய விளக்கங்களைத் தருவதால் இப்படைப்பு நிச்சயம் காலம்கடந்தும் பேசப்படும் எனவும் குறிப்பிட்டார்.

 எண்ணற்ற பதிப்புக்களைக் கண்ட ‘கண்ணீர்ப் பூக்கள்’ என்ற கவிதைத்தொகுப்பில் கவிஞர் மு.மேத்தா,

 “இந்த பூமி உருண்டையை
 புரட்டிவிடக்கூடிய
 நெம்புகோல் கவிதையை
 உங்களில் யார் படைக்கப்போகிறீர்கள்”

என்ற வினாவை எழுப்பியிருந்ததாகவும், ‘சொல்நிலம்’ என்ற கவிதைத்தொகுப்பின் வழி கவிஞர் ஏர் மகாராசன் அதைச்செய்ய முயன்றுள்ளார் எனத் தான் கருதுவதாகவும் குறிப்பிட்டார். எனவே, இந்நூல் முயற்சி பாராட்டத்தகும் என்கிற அடிப்படையில் இவரது நூல் அறிமுகம் அமைந்திருந்தது.

எண்ணற்ற கலந்துரையாடலோடு இறுதிவரை அரங்கமும் இன்புற்றிருந்தது. திட்டமிட்டவாறு நிகழ்வும் இனிதே நிறைவடைந்தது.

சனி, 12 ஜனவரி, 2019

உழைப்பின் உற்பத்தியே மொழி : மகாராசன்


அய்வகை வெளிகள் சூழ்ந்த உலகத்தில் மனிதர்கள் வாழ்கிற நிலப்பகுதியிலே சமூகவெளி அமைந்திருக்கிறது. இச்சமூக வெளியானது முற்றுமுழுதான ஒருமித்த கூறுகளால்  ஆனதல்ல. எண்ணற்ற இனக்குழுக்களும், பல்வேறு தேசிய இனங்களும் தமக்கான எல்லைக்  கோடுகளை வகுத்துக்கொண்டு தனித்த அடையாளங்களோடு திகழ்கின்றன. இவ்வாறான வெவ்வேறுபட்ட கூறுகளைக் கொண்டதாகச் சமூகவெளி அமைந்திருப்பினும், மொழி அல்லாமல் சமூக வெளியின் இயக்கம் இல்லை; சமூகவெளி அல்லாமலும் மொழியின் இயங்குதல் இல்லை. ஆக, சமூகத்திற்கும் மொழிக்கும் இயங்குதல் நிலையில் பிணைப்பு உண்டு.

சமூகத்தில் மொழியின் தோற்றம் என்பது தற்செயல் நிகழ்வல்ல. மொழிக்கும் நீண்ட நெடிய வளர்ச்சிக் கட்டங்கள் இருக்கின்றன. ஆயினும், மனிதகுலத்தைத் தவிர்த்த தனியான வளர்ச்சியல்ல. மனிதகுல வரலாற்றோடு மொழியின் வரலாறும் பிணைந்து கிடக்கின்றது. மொழியின் இயங்கியல் என்பது மனிதகுல வரலாற்றோடு சேர்ந்த இருகோட்டுப்பாதையாக அமைந்திருக்கிறது. மனித சமூகத்தில் புழங்கிவரும் மொழியின் தோற்றம் குறித்துப் பல்வேறு விவரிப்புகள் உள்ளன.

மொழி குறித்து நிலவும் இவ்விவரிப்புகளில் இருவகைப் போக்குகள் காணப்படுகின்றன. அதாவது, மனிதர்களுக்கிடையில் கருத்தைப் பரிமாறிக்கொள்ளப் பயன்படும் ஒரு கருவியாக  மட்டுமே  மொழியைக் கருதும் நிலையும், உயிரோடும் உணர்வோடும் தொடர்புபடுத்தப்பட்டு அதீதப் புனிதத்தோடு மொழியைக் கருதுவதும் சமூகத்தில் இருந்து  கொண்டிருக்கின்றன. இந்நிலையில், மொழி குறித்த அறிவியல் வழிப்பட்ட சமூகவியல்  சிந்தனைகள் இதுவரையிலும் நிலவுகிற மொழி குறித்தக் கருத்துப் படிமங்களிலிருந்து  வேறுபட்டுக் காணப்படுகின்றன.

ஒரு சமூகத்தின் இயங்கியல் என்பது மனிதர்களை மய்யமிட்டுத்தான் அமைந்திருக்கின்றது. அதனால்தான், ‘மனித வரலாற்றின் முதல் நிபந்தனையாக உயிருள்ள தனி மனிதர்கள் இருக்க வேண்டும்’ என்கின்றனர் மார்க்சும் எங்கெல்சும். மனிதகுலத்தின் தோற்றம் குறித்து இருவேறு கருத்துருவங்கள் நிலவுகின்றன. நம்பிக்கை சார்ந்த மெய்ப்பிக்க இயலாமற்போகிற கருத்து முதல்வாதச் சிந்தனைகள் ஒரு புறமும், அறிவியல்வழி மெய்ப்பிக்கப்பட்ட / மெய்ப்பிக்க ஏதுவாக உள்ள பொருள்முதல்வாதச் சிந்தனைகள் இன்னொரு புறமுமாக விரிந்த அளவிலே விவரிப்புகளை முன்வைக்கின்றன.

பூமியை மய்யமாகக் கொண்டுதான் சூரியன் உள்ளிட்ட அனைத்துக் கோள்களும் சுழல்கின்றன எனும் ‘பூமி மய்யக் கொள்கை’ பதினாறாம் நூற்றாண்டு வரையிலும் சமூகத்தில் நிலவி வந்தது. இக்கொள்கைக்கு மாற்றாகக் ‘கதிர்மய்யக் கொள்கை’யை  ‘வானக்கோள்களின் சுற்றுகள்’ (Derevolutionibus oribum conelestum) எனும் நூலின் வழியாக அறிவித்தவர் கோபர்  நிக்கஸ் எனும் இயற்பியல் அறிஞர்.

‘பூமி உருண்டையானது; அது தன்னையும் சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றி வருகிறது’ எனச் சொன்ன கோபர் நிக்கசின் கதிர்மய்யக் கொள்கையானது, இயற்கை விஞ்ஞானம் தனது சுதந்திரத்தைப் பிரகடனம் செய்த புரட்சிகரமான செயலாக இருந்தது என்பார் எங்கெல்ஸ்.

இதைப்போலவே, ‘ஒரு செல் உயிரியிலிருந்து பல செல் உயிரிகளாகப் பரிணமித்துத் தாவரங்களும் விலங்குகளும் தோன்றுகின்றன’ என்பதை விளக்கும் வகையில் ‘இயற்கைத் தேர்வின் மூலம் இன வகைகளின் தோற்றம் பற்றி ’ எனும் நூல் சார்லஸ் டார்வின் எனும் அறிஞரால் முன் வைக்கப்பட்டது. டார்வின் விளக்கிய அப்பரிணாமக் கோட்பாடானது, பரிணாமக் கருத்துகளின் வளர்ச்சியை நிறைவாக்குவதாகவும் நவீன உயிரியலின்  அடித்தளமாகவும் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மனிதர் விலங்குலகிலிருந்து, குறிப்பாக மனிதக் குரங்கிலிருந்து தோன்றினர் எனும் டார்வினின் கண்டுபிடிப்பானது, பத்தொன்பதாம் நூற்றாண்டு காலத்தில் நிலவிய கருத்துகளின் மீது மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதனால்தான், டார்வின் போதனை அக்காலத்தில் மனிதன் தோற்றம் பற்றி நிலவிய கருத்துகளில் ஒரு புரட்சியைக் குறித்தது என்கிறார் இ.லி.அந்திரேயெவ்.

மனிதகுலத் தோற்றம் குறித்து நிலவிய கருத்து முதல்வாதச்   சிந்தனைகளுக்கு நடுவே, டார்வின் தத்துவமானது இயக்கவியல் பொருள்முதல்வாதச் சிந்தனைகள் உருக்கொள்வதற்கான இயற்கை அறிவியல் காரணிகளில் ஒன்றாகவும் அமைந்திருந்தது. குரங்கினத்திலிருந்து மனித இனம் தோன்றிய பரிணாம வளர்ச்சிக்கு இயற்கைக் காரணிகள் வழிகோலியிருக்கின்றன. குரங்கிலிருந்து மனிதராக மாறிய இடைநிலையில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்வதற்குப் பல இலட்சக்கணக்கான ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. வேறெந்த வெளிச்சக்திகளின் தலையீடும் இல்லாமல் தாவரங்களும் விலங்குகளும் தோன்றியிருக்கின்றன. இத்தகைய ‘தாவரங்களும் விலங்குகளும் வாழ்வதற்கு உகந்த வகையில் போதுமான அளவுக்குப் பூமி குளிர்ச்சியடையப் பத்து கோடி ஆண்டுகளுக்கும் சிறிது அதிகமாகவே கடந்துள்ளன’ என்கிறார் வில்லியம் தாம்சன் எனும் இயற்பியல் அறிஞர். ஆகவே, குரங்கிலிருந்து மனிதக் குரங்கிற்கும், மனிதக் குரங்கிலிருந்து மனிதராகவும் தோன்றுவதற்கு இலட்சக்கணக்கான ஆண்டுகள் கடந்து சென்றிருக்க வேண்டும்.

நீண்ட நெடிய காலகட்டத்தின் மிக முக்கியமான படிநிலை வளர்ச்சியாக முதல் தாவரங்களும் முதல் விலங்குகளும் தோன்றியதை அடுத்து, ‘முதல் விலங்குகளிலிருந்து பிரதானமாகப்  பின்வந்த வேறுபாடுகளினால் அனேக வகைகள், வரிசை முறைகள், குடும்பங்கள், வம்சங்கள், இனங்களான விலங்குகள் தோன்றி வளர்ந்தன. கடைசியாக நரம்பு மண்டலம் முழுவளர்ச்சி பெற்ற முதுகெலும்புள்ள விலங்குகளும் தோன்றின. இவைகளின் மத்தியிலிருந்து இறுதியாக இயற்கை தன்னைத்தானே உணரும் சக்தி பெற்ற முதுகெலும்புள்ள விலங்கான மனிதனும் தோன்றினான்’ எனும்போது, மனிதத் தோற்றம்  என்பது  திடுதிப்பென்ற தோற்றமாகக் கருத முடியாது. மனிதர் பல்வேறு வரலாற்று வளர்ச்சிக் கட்டங்களைக் கடந்தே தோற்றம் கொண்ட உயிரி என்பதாகத்தான் சமூக வரலாற்றுத் தரவுகள் மெய்ப்பிக்கின்றன.

மனிதக் குரங்கினத்திலிருந்து மனிதர்கள் தோன்றினார்கள் என்பதற்காக, மனிதக் குரங்கினத்தையும் மனித இனத்தையும் ஒரே மாதிரியாக வரையறுக்க முடியாது. குரங்கினத்திற்கும் மனித இனத்திற்கும் வேறுபாடுகள் நிறையவே இருக்கின்றன. ‘உழைப்பில்தான் மனித சமூகத்திற்கும் குரங்குகளின் கூட்டத்திற்கும் இடையிலான வேறுபாடு அடங்கியுள்ளது’. மனிதக் கூட்டத்தைப் போலவே குரங்கினங்களும் உயிர் வாழ்கின்றன. ஆனால், உயிர் வாழ்வுக்குத் தேவையானவற்றைக் குரங்கினங்கள் உற்பத்தி செய்வது கிடையாது. இயற்கை வழங்கியுள்ளவற்றில் தமக்குத் தேவையானதைக் கண்டடைந்தோ அல்லது தேடியலைந்தோ எடுத்துக் கொள்ளும் அவ்வளவுதான். குரங்கினங்கள் இனப்பெருக்க உற்பத்தியைத் தவிர வேறெந்த உற்பத்தி நடவடிக்கைகளிலும் ஈடுபடுவதில்லை. இதனாலேயே மனித இனம் குரங்கினத்திலிருந்து வேறுபட்டு நிற்கிறது. அதாவது, மனித இனம் குரங்கினத்திலிருந்து விலகி ‘நிமிர்ந்து நேராக நடப்பதற்கு மாறியதுதான் உயிரியல் ரீதியாக முதன்மையான அம்சமாகும்’எனலாம்.

நிமிர்ந்து நடக்கும் தன்மையைப் பெற்றதன் காரணமாகவே தனக்குத் தேவையான உணவு ஆதாரங்களைத் தேடியும், தன்னைச் சுற்றியுள்ள இயற்கை சார்ந்த பொருட்களின் மீது கவனத்தைச் செலுத்தியும் மனித இனம் உயிர் வாழ்கின்றது. மேலும், ‘பாதத்திலிருந்து கை வேறுபாடு அடைவது என்பதும், நிமிர்ந்த நடை என்பதும் தோற்றம் பெற்றதால் மனிதக் குரங்கிலிருந்து மனிதன் வேறுபட்டு நின்றான்’. ஆக, குரங்கினத்திற்கும் மனித இனத்திற்குமுள்ள வேறுபாடுகளில் ஒன்று, நடப்பதற்குப் பயன்பட்ட முன்னங்கால்கள் மனித  இனத்திற்குக் கைகளாக ஆகியிருப்பதுதான்.

இந்தக் கைகள்தான் மனித ‘வாழ்க்கைக்குத் தேவையானவற்றைத் தேடிக் கண்டுபிடிக்கும் சாதனமாகவும், பற்களுக்கு அடுத்தபடியாக முதல் இயற்கை உழைப்புக் கருவியாகவும் பயன்படுத்தும் வாய்ப்பு ஏற்பட்டது’. கைகள்தான் மனித சமூக வளர்ச்சியின் முதல் கட்டமாகும். இந்தக் கைகளே உழைப்பைச் செலுத்துவதற்குத் தோற்றுவாயாக அமைந்தன.

கையின் வளர்ச்சியுடனும் அதன் உதவியுடனும் இயற்கை மீது வினைபுரியத் தொடங்கும் போதுதான் உழைப்பு தொடங்குகிறது. இதனால், ‘இயற்கையின் மீது ஆளுகை கொள்வது தொடங்கியது; ஒவ்வொரு புதிய முன்னேற்றத்தோடும் மனிதனுடைய அறிவெல்லை விரிவாகி வந்தது. இயற்கைப் பொருட்களின் அதுவரை அறியப்படாமல் இருந்த புதிய பண்புகளைத் தொடர்ந்தாற்போல அவன் கண்டுபிடித்துக் கொண்டிருந்தான். மற்றொருபுறம், பரஸ்பர ஆதரவு, கூட்டுச்செயல் என்பதற்கான வழக்குகளைப் பெருக்கியும்; ஒவ்வொரு தனிநபருக்கும் இவ்விதக் கூட்டுச்செயலின் நல்லாதாயத்தைத் தெளிவுபடுத்தியும் சமூக உறுப்பினர்கள் நெருங்கிக் கூடிவர உழைப்பின் வளர்ச்சி அவசியமாகவே உதவி புரிந்தது’. ஆக, மனித இன அறிவு வளர்ச்சிக்கும் கூட்டுணர்வுக்கும் அடித்தளமாக இருப்பது உணவு ஆதாரங்களுக்காக மேற்கொண்ட உழைப்புதான். இவ்வுழைப்புதான் குரங்கினத்திலிருந்து மனிதரை வேறுபடுத்திக் காண்பிக்கிறது எனலாம்.

மனித சமூக வாழ்நிலைக்கு, குறிப்பாக உணவு ஆதார நிலைகளுக்கு அடிப்படையாக இருப்பது உழைப்புதான். கற்களைப் பயன்படுத்தி விலங்குகளை வேட்டையாடுதலும், நெருப்பை உண்டாக்குதலும், கூர்நகங்களையும் பற்களையும் பயன்படுத்தலும் உழைப்பின் ஆரம்ப வடிவங்கள் எனலாம். இந்த ‘உழைப்பின் ஆரம்ப வடிவங்களிலேயே கூட்டு நடவடிக்கை, கூட்டுறவு இன்றி உழைப்பு சாத்தியமில்லை’.  ஏனெனில், இயற்கைச் சீற்றங்களில் இருந்தும்,  கொடிய விலங்குகளிடமிருந்தும் தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்கு   மட்டுமல்லாமல், தனக்குத் தேவையான உணவு ஆதாரங்களை வேட்டையாடுவதற்கும் பிற மனிதர்களின் கூட்டுறவு தேவைப்படுகிறது. இதனால் தன்னை ஒத்த மனிதர்களுடன் ஒத்துழைத்துச் செயல்படும் குணத்தால் மனிதர்கள் ஒருங்கிணைகிறார்கள்.

ஆக, ‘மனிதனாக மாறுவதற்கும் மனிதனாக இருப்பதற்கும் செயற்கைக் கருவிகளை வைத்திருப்பது மட்டும் போதாது. அவனுக்கு மற்ற மனிதர்கள் தேவை. அவர்களுக்கும் அவன் தேவை. இதுதான்  உழைப்பிற்கான கண்டிப்பான முன் நிபந்தனை’ என இருக்கும்போது, மனிதக் குழுக்களும் கூட்டுகளும் தோன்றுவது தவிர்க்க முடியாத ஒன்றாக ஆகிப்போகிறது. இவ்வாறாக, ‘உருவாகிக் கொண்டிருந்த மனிதர்கள், ஒருவருக்கொருவர் சொல்லிக் கொள்வதற்கு ஏதோ ஒன்று உள்ளவர்களாகிற நிலையை எய்தினர். தேவை என்பது ஓர் உறுப்பைப் படைத்தது. மனிதக் குரங்கின் வளர்ச்சியுறாத குரல்வளை மெதுவாக, ஆனால் நிச்சயமாகச் சுரபேதத்தின் (Modulation) மூலம் இன்னும் கூடுதலான வளர்ச்சி பெற்ற சுரபேதத்தை உற்பத்தி செய்ய மாற்றியமைக்கப்பட்டது. வாயின் உறுப்புகள் படிப்படியாக ஓர் தீர்க்கமான ஒலிக்குப்பின் மற்றொன்றாக உச்சரிக்கக் கற்றுக்கொண்டன’. இந்நிலையில், சக மனிதர்களை இணைப்பதற்கும், தங்களின் அனுபவங்களைப் பரிமாறிக் கொள்வதற்கும், தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்துவதற்கும்,  தமக்கு ஏற்படும் உணர்ச்சிகளை வெளிக்காட்டுவதற்கும் ஏதோ ஒன்று  தேவைப்பட்ட நிலையில் பேச்சுதான் அவர்களுக்குக் கை கொடுக்கிறது.

ஆக, விலங்குகளுக்கு வாய்க்காத இப்பேச்சு வடிவம்தான் மனிதர்களாக இணைக்கும் தன்மையைக் கொண்டிருக்கிறது எனலாம். இந்த மிக முக்கியமான வளர்ச்சிக் கட்டம் குறித்து எங்கெல்சு குறிப்பிடுகையில், முன்னங்கால்கள் கைகளாகவும் குரல்வளை பேசும் உறுப்பாகவும் மாறியதுதான் மனிதப் படிமலர்ச்சியில் ஏற்பட்ட முதல் புரட்சி என்கிறார்.

பேச்சு மனிதரோடு இணைந்த ஒன்று. இந்தப் பேச்சு என்பது தேவையிலிருந்துதான் தோன்றுகிறது. ஏனெனில், ‘உணர்வு போன்றே மொழி மற்ற மனிதர்களுடன் உறவு கொள்வதன் தேவையிலிருந்தே; இன்றியமையாமையிலிருந்தே தோன்றுகிறது’. ஏதோ ஒரு வகையில் மனிதத் தேவைதான் மனிதர்களிடம் பேச்சை உருவாக்குகிறது. உணவு ஆதாரங்களைச் சேமிப்பதற்கும், வேட்டையாடுவதற்கும், கருவிகளைப் பயன்படுத்துவதற்கும் மனிதக் கூட்டு என்பது அவசியமானதாக அமைந்து போனதோடு, அம்மனிதர்களிடையே அனுபவப் பகிர்வுகளை மேற்கொள்வதற்கும் ‘பேச்சு’ என்பது தேவையாகி நிற்கிறது.

மனிதக் கூட்டின் மூலமாக நடைபெறக்கூடிய இன்னொரு வினை உற்பத்திச் செயல்பாடு. உழைப்பின் மூலம் வெளிப்படும் உற்பத்திச் செயல்பாட்டை மேற்கொள்கிறபோது மனிதப்பேச்சு என்பதும் தவிர்க்க முடியாத வினையாகவும் ஆகிறது. ‘உழைப்பு மனிதனையே படைத்தது என்று நாம் கூற வேண்டிய அளவுக்கு அது மானுட வாழ்வு முழுவதற்கும் முதன்மையான அடிப்படை நிபந்தனையாக’ இருப்பதைப்போல, பேச்சு என்பதும் தவிர்க்க முடியாத அடிப்படை நிபந்தனையாகவும் அமைந்திருக்கிறது. பேச்சை வெளிப்படுத்தும் மனிதர்களின் இச்செயலானது, இயற்கை வாழ்நிலைத் தேவைகளுக்கு மட்டுமின்றி, சமுதாய வாழ்நிலைக்கும் அடிப்படையான தேவையாகவும் முன்நிற்கிறது.

மனிதக் குரலாய் வடிவெடுக்கும் பேச்சு உருவானதற்கு முன்பே மனிதர்களிடையே பரிமாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. அதாவது, உணர்ச்சிகளை - தேவைகளை - தாம் நினைப்பதையெல்லாம் முகபாவனைகள், சைகைகள் வழியாகவும், போலியாக நடித்துக் காட்டுவதன் வாயிலாகவும், பிறருக்கு உணர்த்த வேண்டியதைக் கிறுக்கியும் வரைந்தும் காண்பித்து ஏதோ ஒருவகையில் பரிமாற்றத்தை நிகழ்த்தியிருக்கிறார்கள். இப்பரிமாற்ற நிகழ்வுகளில் புரிந்து கொள்வதிலும் - புரிய வைப்பதிலும் போதாமைகள் ஏற்படும்போது, அப்போதாமைகளை ஈடுசெய்வதன் தேவையிலிருந்தும் ‘பேச்சு’ உருவாகியிருக்க வேண்டும். ஆக, மனிதத் தொடர்புக்கு அவசியம் பேச்சு. இப்பேச்சின் வழியே மனிதக்கூட்டு ஏற்படுகிறது. மனிதக் கூட்டின் செயல்பாடு உழைப்பு; உழைப்பின் வெளிப்பாடு உற்பத்தி நடவடிக்கை என்றாகிறது.

‘முதலில் உழைப்பு, அதன் பின்னரும், பிறகு அத்துடன் சேர்ந்தும் பேச்சு - இந்த மிக முக்கியமான இரண்டு தூண்டுகைகளின் செயலாட்சியினால் மனிதக் குரங்கின் மூளை படிப்படியாக மனிதனுடைய மூளையாக மாறியது. மனித மூளை மனிதக் குரங்கின் மூளையை  ஒத்ததாக இருந்த போதிலும், மனிதக் குரங்கின் மூளையைவிட இன்னும் பெரிதாகவும் இன்னும் நேர்த்தியாகவும் இருந்தது. மூளையின் வளர்ச்சியுடன் கைகோர்த்துக் கொண்டு அதனுடைய மிக உடனடியான கருவிகளான புலன்களின் வளர்ச்சியும் சென்றது. பேச்சின் படிப்படியான வளர்ச்சியுடன் ஒத்த வகையில் கேட்கும் உறுப்பும் செம்மையடைவது என்பது தவிர்க்க முடியாமல் தொடர்ந்ததைப் போலவே, மூளையின் வளர்ச்சி முழுவதையும் தொடர்ந்து எல்லாப் புலன்களும் செம்மையடைந்தன’. ஆக, உழைப்பும் பேச்சும்தான் மனிதப் புலன்களின் வளர்ச்சிக்கும் மூளையின் படிப்படியான வளர்ச்சிக்கும்  காரணமாக அமைந்திருக்கின்றன எனலாம்.

மேலும், ‘மூளை, அதன் பணியாட்களான புலன்கள், மேலும் மேலும் தெளிவு பெறும் பகுத்தறிவு, பொதுமைப்படுத்தவும் முடிவு காணவும் உள்ள திறன் ஆகியவற்றின் வளர்ச்சி, உழைப்பின் மீதும் பேச்சின் மீதும் ஏற்படுத்திய எதிர்ச் செயல்பாடு, உழைப்பு - பேச்சு இவற்றின் கூடுதலான  வளர்ச்சிக்குத் திரும்பத் திரும்பத் தூண்டுகைகளை அளித்து வந்தது’ எனலாம்.

மனிதர்களும் சமுதாயமும் தோன்றியது ஒரே நிகழ்ச்சிப் போக்காக அமைந்திருப்பதைப் போலவே, மனித உழைப்பு நடவடிக்கையும் பேச்சும்  ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்க இயலாத இயங்கியல் கூறாக அமைந்திருக்கிறது. பேச்சு மனிதக் கூட்டின் செயல்பாடுகளுக்கு உதவுகிறது. அம்மனிதக் கூட்டின் பரிமாற்றத்திற்கு மட்டும் பேச்சு உதவுவதில்லை. அதற்கும் மேலாக, தொழிலில் - உற்பத்தியில் - உழைப்பில் மனிதர்கள் ஈடுபடும்போதும் உதவுகிறது.

‘மனிதன் தொழிலில் ஈடுபடாது கருவிப் பிரயோகம் பற்றிய அனுபவமில்லாது, மொழியை இயற்கையின் அநுகரணமாகவும் நடவடிக்கைகளையும் பொருட்களையும்  குறிக்கும் சின்னமாகவும் கருத்து நிலையில் தோற்றுவித்திருக்க முடியாது. ஆற்றல் மிக்க ஒன்றிலிருந்து மற்றது வேறுபட்டதான சொற்களை மனிதன் தோற்றுவித்ததற்குக் காரணம், அவன் வருத்தம், மகிழ்ச்சி, ஆச்சர்யம் முதலிய மெய்ப்பாடுகளுக்கு ஆட்படுபவன் என்பதால் மாத்திரமன்று, அவன் தொழில் செய்யும் உயிரினம் என்பதாலுமாகும்’ என ஏண்ஸ்ற் ஃபிஷர் கூறுவதிலிருந்து, உழைப்புடன் மனிதர்கள் கொண்டுள்ள இன்றியமையா உறவின் காரணமாகவே மனிதப்பேச்சு உருவாகிறது எனலாம்.

மனிதர் வெளிப்படுத்தும் பேச்சும், அப்பேச்சு வெளிப்படுத்தும்போது உடன் பிறக்கும் சிந்தனையும்தான் மனிதரைத் திட்டவட்டமாக வேறுபடுத்திக் காட்டின. ஆக, பேச்சு என்பது மனித உயிர்களுக்குத் தவிர்க்க முடியாத ஒன்றாக ஆகிப்போகிறது. மனித உயிர்களின் இயல்பூக்கங்களாக உள்ள பசித்தேவைக்கும், பாலுறவுத் தேவைக்கும், தூக்கம் போன்றவற்றிற்கும் பேச்சு என்பது அவசியப்படாது. ஆனால், ஒரு மனித உயிர் பிற மனித உயிர்களுடன் உறவுபடுத்திக் கொள்ளவேண்டிய நிலையில் பேச்சு அவசியமாகிறது. அதாவது, மனித உயிர்கள் சமூகமாக மாறும் நிலையில் பேச்சு தேவைப்படுகின்றது. மனிதர் தனித்து ஒதுங்கி வாழ முடியாத சூழலுக்குத் தள்ளப்பட்ட நிலையில், சமூக மனிதர்களோடு கலந்து கொள்வதற்குப் பேச்சைப் பயன்படுத்தியிருக்க வேண்டும்.

மனித உயிர்கள் சமூகமாக மாறும் வளர்ச்சிக் கட்டங்களில், மனித உயிர்களால் வெளிப்படுத்தப்பட்ட பேச்சொலிகளும் சைகைகளும் அர்த்தம் கொள்ளத் தொடங்குகின்றன. இந்த அர்த்தப் புலப்பாடுதான் ‘மொழி’ எனப்படுகிறது. அதாவது, ‘வளர்ந்து வந்த மனிதப் பேச்சொலிகளிலிருந்து சமிஞ்ஞைகளைத் தேர்ந்தெடுத்ததன் மூலமும், பொருட்கள் மற்றும் சைகைகளின் உதவி கொண்டு இவற்றிற்கு அர்த்தத்தை அளித்ததன் மூலமும்தான் மொழி பிறந்தது’. மொழி என்பதற்கு அடிப்படை பேச்சொலி என்றாலும்கூட, எல்லாப் பேச்சொலிகளும் மொழி என்றாகி விடுவதில்லை. முறைப்படுத்தப்படுகிற பேச்சொலிகளே மொழி வரம்பிற்குள் வரமுடிகிறது. இதைக்குறித்து ஜமாலன் கூறும்போது, மொழி என்பது அடிப்படையில் ஒழுங்கமைக்கப்பட்ட சப்தம் அல்லது ஓர் உடலில் இருந்தோ பொருளில்  இருந்தோ உருவாகும் ஒரு சப்த ஆற்றல் (ஒலி ஆற்றல் / Sound energy). இந்தச்  சப்தம் குறியீடுகள் வழியாக அடையாளப்படுத்தப்படும் வண்ணம் பெயரிடுதல் என்பதாக ஒழுங்கமைக்கப்படும்போது மொழி உருவாகிறது என்கிறார்.

மனிதர்கள் வெளிப்படுத்திய பேச்சொலிகளுக்கும், எதிர்கண்ட பொருட்களுக்கும் குறியிட்டுப் பெயரிடுவதன் விளைவாக மொழி உருவாகிறது; சொல்லாடல்கள் உருவாகின்றன. குகைகளிலும் பாறைகளிலும் பொறிக்கப்பட்ட அடையாளங்களும் குறியீடுகளும் எழுத்துருவம் கொள்கின்றன. எழுத்துருவங்களும் பேச்சொலிகளும் சேர்ந்து ‘மொழி’ என்பதாகத் தோற்றம் கொள்கிறது. இவ்வாறாக,  மனித உழைப்பிலிருந்தும் அதனுடைய தொடர்ச்சியான மாற்றப் படிநிலைகளில் இருந்தும்தான் மொழியின் தோற்றம் அமைந்திருக்கிறது எனலாம்.

சமுதாய உறுப்பினர்களிடையேயான பொருளுடைய பேச்சு மூலமே கருத்துப் பரிமாற்றம் நடைபெறுகிறது. பொருளுடைய பேச்சில் சொற்கள் வாக்கியங்களாகக் கட்டமைக்கப்படுகின்றன. இவ்வாறு தமக்கிடையே கருத்துப் பரிமாற்றம் செய்துகொள்ளக்கூடிய அனைத்துத் தனி நபர்களையும் சமூகம்  உள்ளடக்கியுள்ளது. பொதுவானதொரு பேச்சு வடிவம் இருப்பதாலேயே இவர்களால் கருத்துப் பரிமாற்றம் செய்துகொள்ள முடிகிறது. ஆதி நிலைமைகளில், ஒவ்வொரு சமூகமும், அது எவ்வளவு சிறியதாக இருந்தாலும், தனக்கென ஒரு சொந்த மொழியையோ அல்லது குல வழக்கையோ கொண்டிருக்கிறது. இந்த மொழி அல்லது குல வழக்கு அந்த சமூகத்தின் பரிணாம வளர்ச்சியோடு சேர்ந்து படிப்படியாக வளர்ச்சி அடைந்ததாகும் எனக் குறிப்பிடும் ஜார்ஜ் தாம்சன், எழுத்துக் கலையின் கண்டுபிடிப்பு பேச்சின் பரிணாம வளர்ச்சியில் ஏற்பட்ட ஒரு புதிய கட்டமாகும் என்கிறார்.

மேலும், எழுதப்பட்ட பேச்சு என்பது வாய்மொழிப் பேச்சைப்போல அப்போதைக்கப்போது தன்னியல்பாக வெளிப்படுவதல்ல. மாறாக, முன் தயாரிப்போடு செய்யப்படுவதும், அந்தந்த நேரத்தில் பேசவேண்டிய  உடனடித் தேவையிலிருந்து விடுபட்டு நிதானமாகச் சிந்தித்துக் கருத்துகளைக் கூறுவதற்குப் பயன்படுவதாயும் உள்ளது. எழுதப்பட்ட பேச்சு, வாய்ப்பேச்சுப் போல வாய், காது ஆகிய புலன்சார்ந்த அம்சத்தைக் கொண்டதல்ல. அந்தப் புலன் சார்ந்த அம்சத்திலிருந்து பிரித்து எடுக்கப்பட்டு ஒரு உயர்ந்த மட்டத்திலான அருவத்தன்மையைப் பெறுகிறது. எழுத்துமுறை கண்டுபிடிக்கப்பட்டதற்குப் பிறகுதான் மனிதன், பேச்சு என்பது அதற்கே உரிய விதிகளுக்குக் கட்டுப்பட்டு இயங்கும் ஒரு புற யதார்த்தமாக இருப்பதை உணர்ந்தான். பின்னர், அந்த விதிகளை இலக்கண விதிகளாக முறைப்படுத்தத் தொடங்கினான். எழுத்தறிவு பேச்சார்ந்த கலைகளுக்குப் புதிய தன்மையை வழங்கியதுடன் அறிவியல் பகுத்தாய்வுக்கான இன்றியமையாத சாதனமாகவும் அமைந்தது என எழுத்து மரபின் தோற்றச் சூழல் குறித்தும் விவரிக்கிறார் ஜார்ஜ் தாம்சன்.

அதாவது, மனிதர்கள் தோன்றிய காலத்தில் தம்முடைய செயல்களை மற்றவர்களுக்குத் தெரியப்படுத்த சைகைகளைப் பயன்படுத்தினார்கள். காலப்போக்கில் ஒலிகள் மூலம் குரல்களை வேறுபடுத்திக் காட்டிய அவர்கள், தமது செயல்பாடுகளையும் கருத்துகளையும் தமக்குப் பின்னால் வரும் தலைமுறையினரும் அறிந்து கொள்ளும் வகையில் அனைவருக்கும் பொதுவான குறியீடுகளைப் பயன்படுத்திக் கற்களிலும் பாறைகளிலும் பொறித்து வைக்கும் வழக்கத்தைப் பயின்று வந்திருக்கிறார்கள். இவ்வழக்காறே மொழிக்கு எழுத்து வடிவம் ஏற்பட்டதின் தொடக்கமாக இருந்திருக்க வேண்டும்.

தமிழகத்தின் புதிய கற்கால மற்றும் பெருங்கற்கால கட்டங்களைச் சார்ந்த  முதுமக்கள் தாழிகள், ஓவிய வரைவுகள், மண்பாண்டங்கள், காசுகள், அணிமணிகள், முத்திரைகள், கல்வெட்டுகள் போன்றவற்றில்கூட ‘குறியீடுகள்’ இடம்பெற்றுள்ளதைத் தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். தமிழகக் குறியீடுகளில் பல, பண்டைக்கால சுமேரிய, எகிப்திய, சீன, கிரேக்க, ஜப்பான் நாட்டுக் குறியீடுகளோடும், முக்கியமாக சிந்து வெளிக் குறியீடுகளோடும் ஒப்புமை கொண்டிருப்பதாகவும் கருதுகின்றனர்.

இந்நிலையில், தமிழ் மொழியின் வளர்ச்சியில் குறியீடுகளின் பங்களிப்பு தனிச் சிறப்பிற்குரியதாகவும், எழுத்துச் சான்றுகளாக மாற்றம் பெருவதற்கு முன்னர் வலுவான வரைவுடன் கூடிய தகவல் தொடர்புச் சாதனமாகவும் குறியீடுகள் திகழ்ந்தன. குறியீடுகளின் எண்ணிக்கைகளும் பயன்பாடும் மிகுதியாக இருக்கும் காலத்தில் எழுத்துகளின் பொறிப்பு குறைவாகவும், எழுத்துப் பொறிப்பு மிகுதியாகும் பொழுது குறியீடுகளின் பொறிப்பு குறைந்தும் அமைகின்றன. குறியீடுகளை முதலில் ஒலி எழுத்துகளாகவோ, பொருள் வெளிப்பாட்டு வரைவுகளாகவோ அக்காலத்தில் பயன்படுத்தி வந்துள்ளனர். மேலும், இக்குறியீடுகளின் வளர்ச்சி தந்த பங்களிப்புதான், எழுத்துருவாக்கமும் மொழியாக்கமும் என்பதோடு, தமிழகப் பெருங்கற்காலத்து மட்பாண்டக் குறியீடுகள்தான் தமிழ் எழுத்துத் தோற்றத்தையும் அதன் வளர்ச்சிக் கூறுகளையும் அறிய உதவும் அடிப்படைச் சான்றுகளாக உள்ளன என்கிறார் இராசு.பவுன்துரை.

மொழியைப் பற்றி எடுத்துரைக்கும் எஸ்பெர்ஸன், மனிதன் முதலில் தான் கண்ட பொருளுக்குப் பெயர் வைக்கத் தெரியாத விலங்கு நிலையில் இருந்தான்; தன் இனத்தவருடன் பேச இயலாதவனாக இருந்தான்; பின்னர் நாளடைவில் அறிவையும் அனுபவத்தையும் பிறரிடம் சொல்வதற்காக அப்பொருளின் உருவத்தினைச் சித்தரித்துக் காட்டினான்; அதன் பிறகு பொருளின் பண்புகளைத் தன் செய்கையால் அறிவித்து அதனைப் பெற்று வந்தான்; மூன்றாவதாகக் குறுக்கெழுத்துப்போல ஒரு பொருளுக்கு ஓர் எழுத்து இட்டு வழங்கினான்; அடுத்து எழுத முடியாமல் பேச்சு வகையால் சொற்றொடர்களைக் குறித்த அடையாளம் தந்தான். இங்ஙனம் மொழியானது உருப்பெறுகிறது என, எழுத்தின் வரலாற்றுப் பின்புலத்தை விளக்கமாகக் கூறியுள்ளார்.

மொழியின் தோற்றத்தையும் தொன்மையையும் எடுத்துரைக்கும் பரிதிமாற்கலைஞர், உலகின் கண்ணே மக்கள் ஒருங்குகூடி வாழவேண்டியவராதலின், அவர்கள் அடிக்கடி தங்கள் கருத்துகளை ஒருவருக்கொருவர் வெளியிட்டுக்கொள்வது அவசியமாயிற்று. ஆகவே, அவர்கள் கை, வாய் முதலிய உறுப்புகளால் பலவிதச் சைகைகள் செய்துகாட்டித் தங்கள் கருத்துகளை வெளியிடுவாராயினர். இத்தகைய கருத்து வெளியீட்டுக் கருவியாகிய சைகையை இயற்கை மொழி என்பர். இவ்வியற்கை மொழி, முதலில் காட்சியளவில் நின்று, பின்னர்க் கேள்வி அளவிலும் பரவிற்று. அதாவது, சில ஒலிகளும் ஒலிக்கூட்டங்களும் கருத்து வெளிப்பாட்டிற்குக் கருவியாகி அச் சைகைகளுடன் கூடின. அவ்வொலிகளும் ஒலிக்கூட்டங்களும் மூவிதப்படும். அவைதாம், போறல் வகையானும், சுவை வகையானும், அறிகுறிவகையானும் எழுந்தனவாம் என்கிறார்.

இம்மூவகை குறித்து விவரிக்கும் அவர், ஆதித் தமிழ் மக்கள் வேட்டையாடினதனால் பலவகைப்பட்ட மிருகங்களின் ஒலி வேறுபாடுகளையும் நன்குணர்ந்து தமக்குள்ளே அவற்றை அறிந்து கொள்ளுமாறு அவ்வொலிகளினின்றும் குறிப்பு மொழிகள் பல வகுத்தனர். ஒன்று பிறிதுபோல் கத்திய ஒலியினின்றும் உற்பத்தியான சொற்களைப் போறல் வகையால் எழுந்தன. மக்கள் சுவை உடையவர் ஆதலின், அவற்றுக்குத் தகுந்த மெய்ப்பாடுகள் விளைக்கத்தக்க பொருள்கள் எதிர்ப்பட்டனவெல்லாம் சுவை வகையால் உண்டாகிய சொற்களாம். அறிகுறி வகையால் எழுந்த பகுதிகள் நாவின் சைகை என்பதனடியாகப் பிறந்தன. நாவின் சைகையும் கைச்சைகையின் உதவிக்காக வந்து, அதனைச் சிலநாள் பாதுகாத்துப் பார்த்தும் அது கருத்து வெளியீட்டுத் தொழிலை நன்கு நடத்தாமையால், அதனைத் தள்ளிவிட்டுத் தானே அத்தொழிலை மேற்கொண்டு நடாத்தப் புகுந்தது. இவ்வாறு நடாத்தினதால் சொற்கள் பல உண்டாயின என்கிறார்.

மொழியின் தோற்றம் குறித்தும், அதன் ஒலி மற்றும் வரி வடிவங்கள் குறித்தும் ஆய்வுகள் இன்னும் நடந்த வண்ணமே உள்ளன. மொழியானது காலந்தோறும் மாறும் இயல்புடையது. ஒவ்வொரு காலகட்டத்திலும் மொழி எவ்வாறு வடிவமைந்துள்ளது என விளக்கி, காலப்போக்கில் அம்மொழி அடைந்த வளர்ச்சியையும் மாற்றங்களையும் ஆராய்வது மொழியியலின் ஒரு பிரிவு ஆகும். இதுவே மொழி வரலாறு எனப்படுகிறது. அவ்வகையில், மொழி வரலாற்றின் தொல்லியல் சார்ந்த அடையாளங்கள் நிரம்பிக் கிடப்பதே எழுத்தின் வரலாறாகும்.

மகாராசன் எழுதிய
தமிழர் எழுத்துப் பண்பாட்டு மரபு
நூலில் இருந்து..

ஆதி பதிப்பகம் வெளியீடு.

செவ்வாய், 8 ஜனவரி, 2019

தமிழர் எழுத்துப் பண்பாட்டு மரபு


பண்டைக் காலத் தமிழகத்தில் எழுத்துக் குறிகளைப் பயன்படுத்தி ஓலைச் சுவடி, நடுகல், கல்வெட்டு, செப்பேடு ஆகியவற்றில் தமிழ்மொழி எழுதப் பெற்று வந்துள்ளது. இவற்றில் காலத்தால் முற்பட்ட தாழை மடல்கள், ஓலைச் சுவடிகள் கிடைக்கப்பெறவில்லை. அண்மைக் காலத்தைச் சார்ந்த ஓலைச் சுவடிகளே  கிடைத்துள்ளன. ஆயினும், பல்லாயிரம் மற்றும் பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கல்வெட்டுகளும் செப்பேடுகளும் கிடைத்துள்ளன. அவற்றில், தமிழ் மொழியை எழுதப் பயன்படுத்திய வெவ்வேறு எழுத்து வடிவங்களைக் காணமுடிகிறது.

எழுதுவதாகிய வரிவடிவங்கள் காலம்தோறும் சிறிது சிறிதாகவும் வெவ்வேறாகவும் மாற்றம் அடைந்து வந்திருக்கின்றன. இத்தகைய எழுத்து வடிவங்கள் பற்றிய எடுத்துரைப்பைத் தொல் வரி வடிவவியல் என்பர் தொல்லியலார்.
தொல் வரி வடிவவியல் சார்ந்த விவரிப்புகள் தமிழ் எழுத்து வரிவடிவங்களுக்கும் இருக்கின்றன. தமிழ் மொழியின் தொன்மையான எழுத்து வடிவங்களைத் தமிழகத்தின் குகைக் கல்வெட்டுகள் வழியாக அறிய முடியும். இக்கல்வெட்டுகளில் எழுதப் பெற்றுள்ள எழுத்து வடிவங்களுக்குப் பெயரிடுவதில் பல்வேறு கருத்து நிலைகள் நிலவுகின்றன.

கி.மு.மூன்றாம் நூற்றாண்டில் இந்தியாவின் வடபகுதியில் மௌரியப் பேரரசர் அசோகர் ஆட்சிக் காலத்தில்  எழுத்து வடிவங்கள் பயன்படுத்தப் பெற்றுள்ளன. பாறைகளிலும் தூண்களிலும் பிராகிருத மொழியில் பொறித்து மக்கள் அறியும்படியாகச் செய்திருக்கிறார் அசோகர். கி.மு.மூன்றாம் நூற்றாண்டைச் சார்ந்த அசோகரின் பாறைக் கல்வெட்டில் உள்ள எழுத்து வடிவைப் பிராமி என முதன் முதலாகப் பெயரிட்டுக் கூறியவர் பியூலர் ஆவார். பிராமி எனும் எழுத்து வடிவம்தான் இந்திய ஒன்றிய நிலப்பகுதியின் எழுத்து முறைக்குத் தாயாகவும், தொன்மையான எழுத்து வடிவச் சான்றாகவும் சொல்லப்படுகிறது.

தமிழகக் குகைக் கல்வெட்டுகளும் இதே காலத்துக்கு உரியவையாகக் கருதப்படுகின்றன. இந்தக் குகைக் கல்வெட்டு எழுத்து வடிவங்களுக்கும் வடநாட்டில் பயன்படுத்தப்பெற்ற பிராமி எழுத்து வடிவங்களுக்கும் சிற்சில ஒற்றுமைகள் இருந்ததினால், பிராமி என்னும் பொது எழுத்து வடிவில் இருந்து தமிழ்நாட்டில் குகைக் கல்வெட்டு எழுத்துகள் உருவாகின என்பர். இக்கருத்தின் அடிப்படையில் வடபிராமி, தென்பிராமி என்று பெயரிட்டு அழைப்பதும் உண்டு. தமிழகக் குகைக் கல்வெட்டு எழுத்துகளைப் பிராமி வரிவடிவத்தின் தென்னக வகை என அழைக்கிறார் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்.  அதேவேளையில், தமிழகக் குகைக் கல்வெட்டு எழுத்து வடிவங்களைத் தமிழ் பிராமி என்று பெயரிட்டு அழைப்பார் ஐராவதம் மகாதேவன்.

பொதுவாகவே, பிராமி எழுத்திலிருந்தே தமிழ் எழுத்துகள் உருவாகி இருக்க வேண்டும் எனும் கருதுகோள்தான் பெரும்பாலும் நிலவுகின்றது. தமிழகக் குகைக் கல்வெட்டெழுத்துகளைத் தமிழ் பிராமி எனக் குறிப்பது தமிழின் தனித் தன்மையை ஏற்க மறுக்கும் நோக்கம் கொண்டதாகக் கருதும் நடன.காசிநாதன், தமிழ் பிராமி என்று அழைப்பதற்கு அவர்கள் கூறும் காரணம் தமிழ் மொழிக்காக உருவாக்கப்பெற்ற பிராமி எழுத்து என்றும், அசோகன் பிராமி அல்லது மௌரியன் பிராமியில் இருந்து இவ்வெழுத்து தோன்றியதே எனினும் அதில் இருந்து வேறுபட்டது என்றும் கூறுகின்றனர். அவ்வாறு எனில், பிராகிருத மொழிக்காக எழுதப்பெற்ற எழுத்தைப் பிராகிருத பிராமி என்று அழைப்பதுதானே சரியாகும். மேலும், அப் பிராமி எவ்விடத்திலிருந்து தோன்றியது? திடீரென்று அவர்கள் உருவாக்கிக் கொள்கையில், மற்ற பகுதிகளில் குறிப்பாகத் தமிழ் மன்னர்கள் தங்களுக்கு என ஒரு எழுத்தை உருவாக்கிக்கொண்டு இருக்க மாட்டார்களா? அவ்வாறு தங்களுக்கு உருவாக்கிக்கொண்ட எழுத்துதான் தமிழ் எழுத்து என, தமிழின் தனித்ததோர் எழுத்து மரபு தனித்து இயங்கியிருப்பதற்கான வாய்ப்புகள் குறித்து விளக்கியுள்ளார்.

தமிழ் மொழியில் எழுதும் வடிவ முறையினைப் பிராமியாகவும், அவ்வெழுத்து வடிவம் வடக்கிருந்து பெறப்பட்ட ஒன்றாகவுமே பெரும்பாலும் கருதப்பட்டது. ஆனால், அசோகர் காலத்திய கல்வெட்டுகளுக்கு முன்பாகவே தமிழ்நாட்டில் தமிழ் எழுத்துகள் வழக்கில் இருந்துள்ளதையும், அவை முறையாக வளர்ச்சி அடைந்து வந்திருப்பதையும் தொல்லியல் வரலாற்றுச் சான்றுகளின் வழியாக அறிய முடிகிறது.

கி.மு.முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த பாலி மொழியில் எழுதப்பட்ட ‘சமவயங்க சுத்தா’ (சமவாயாங்க சூத்திரம்), ‘பன்னவயன சுத்தா’ என்னும் சமண நூல்களில் அக்காலத்தில் வழங்கி வந்த எழுத்து வகைகளுள் 18 வகையான எழுத்துகள் சொல்லப்பட்டுள்ளன. அந்தப் பட்டியலில் பிராமி எழுத்து வகையும் குறிக்கப்பட்டுள்ளது. பிராமி என்பதே பம்பி என்ற பெயராலும் அழைக்கப்படுகின்றது.

மேற்குறித்த சமண நூல்கள் எடுத்துரைக்கும் அதே பட்டியலில்தான் தமிழி எழுத்து வகையும் குறிக்கப்படுகின்றது. தமிழ் எழுத்தைப் பிராகிருத மொழியில் தாமிழி என்று குறிக்கப்பட்டுள்ளது. தமிழ் என்பதை அக்காலச் சமணர் தம்ளி என்றே ஒலித்துள்ளனர். அதன் காரணமாகவே பண்டையத் தமிழ் எழுத்தின் பெயர் தமிழி என ஆகியது. அவ்வகையில், தமிழி மற்றும் பிராமி என்னும் இவ்விரண்டு எழுத்து வகைகளும் ஒரே காலத்தைச் சேர்ந்தவை; தமிழியும் பிராமியும் வேறு வேறானவை  எனத் தெரிகின்றது.

உலகில் உள்ள எழுத்து வடிவங்கள் யாவும் கடவுள் என்பதன் படைப்பு என நம்பப்படுகிறது.  எழுத்து கடவுளின் ஒரு தோற்றம் என்றும், கடவுளே அதைத் தோற்றுவித்தார் என்றும் உலகின் பல பகுதிகளில் வாழ்ந்த பண்டைய மக்கள் கருதினர். எகிப்தியர் தோத் என்ற கடவுளால் எழுத்து தோற்றுவிக்கப்பட்டது எனக் கருதினர். பாபிலோனியர் நேபோ என்னும் தெய்வத்தாலும்; யூதர்கள் மோசஸ் என்பவராலும்; கிரேக்கர்கள் ஹெர்மஸ் என்னும் தெய்வத்தாலும் தோற்றுவிக்கப்பட்டது என்று கருதினார்கள்  என்கிற குறிப்பைத் தருகிறார் இரா.நாகசாமி.

இந்நிலையில், பிராமி எழுத்து வடிவமும் கடவுள் என்பதன் படைப்பு என நம்பப்படுகிறது. அதாவது, பிரமனால் இவ்வெழுத்துக்கள் உண்டாக்கப்பட்டதாகக் கருதப்பெற்றதால் பிராமி எழுத்துக்கள் என்று பெயராயிற்று என்றும், பிராமணரிலிருந்து பிராமி எனும் பெயர் பெற்றது என்றும் கூறுவர். அதேபோல, சமண சமயத்தின் முதல் தீர்த்தங்கரரின் மகள் பெயரான பம்பியிலிருந்தே பிராமி வந்தது என்பர். ஆக, பிராமி எழுத்து வடிவம் சமயம் / சாதி சார்ந்த அடையாளத்தையே பின்புலமாகக் கொண்டிருக்கிறது. அதேவேளையில், பண்டையத் தமிழி எழுத்து வடிவத்திற்கு எந்தவகையான சமய / சாதி அடையாளப் பின்புலங்கள் எதுவும் புலப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பண்டைக் காலத்தில் தமிழ் எழுத்துகளை எழுதப் பயன்படுத்தப்பட்ட எழுத்து முறைமையே தமிழி எனக் குறிக்கப்படுகிறது. அதாவது, தமிழகக் குகைக் கல்வெட்டு எழுத்துகள் வடஇந்தியப் பிராமி எழுத்துகளில் இருந்து சிற்சில நிலைகளில் வேறுபடுகின்றன. அவ்வேறுபாடுகள் தமிழின் தனித்தன்மைக்கு உரியவை ஆகும். இந்த வேறுபாட்டைக் கருத்தில் கொண்டு தமிழி என்று தனிப்பெயர் இடுதலே சிறப்புடைத்து என்பார் இரா.நாகசாமி.

பிராமிக்கும் தமிழிக்கும் பலவகை வேறுபாடுகள் நிறைய இருப்பினும், சில அடிப்படையான வேறுபாடுகளும் இருக்கின்றன. அதாவது, அசோகர் காலத்துப் பிராமியைப்போல் பண்டையத் தமிழியில் கூட்டெழுத்துகள் கிடையாது. மேலும், அசோகப் பிராமியில் காணப்படாத தமிழுக்கே உரிய நான்கு எழுத்துகள் தமிழியில் உள்ளன. அவை ற, ன, ள, ழ என்கிற எழுத்துகள் ஆகும். இந்நான்கு எழுத்துக்களும் அசோகப் பிராமியையும் தமிழியையும் வேறுபடுத்த உதவுகின்றன. அக்காலத்திய இந்த எழுத்து முறைமையைத் தனித்தமிழ் எழுத்து முறைமை எனவும் கூறப்படுகிறது.

குகைப் படுக்கைகள், நடுகற்கள், மட்கல ஓடுகள், முதுமக்கள் தாழிகள், நாணயங்கள், முத்திரை அச்சுக்கள், மோதிரங்கள், இன்னும் இதரப் புழங்கு பொருட்கள் ஆகியவற்றிலிருந்தும் தமிழி எழுத்துகள் கண்டறியப்பட்டுள்ளன. தமிழ்நாடு, கேரளம் இலங்கை, எகிப்து, தாய்லாந்து போன்ற இடங்களிலும் தமிழி எழுத்துப் பொறிப்புத் தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

தமிழியும் பிராமியும் வேறு வேறு எழுத்து வடிவங்கள் எனினும், பிராமி எழுத்து வடிவம் வழங்கி வந்த கி.மு மூன்றாம் நூற்றாண்டைச் சார்ந்ததே தமிழியின் காலமும் ஆகும் எனப் பொதுவாய்க் கருதப்படுகிறது. அதாவது, பிராமியிலிருந்தே தமிழ் எழுத்து வடிவம் உருக்கொண்டது என்பதற்காகவே தமிழ் பிராமி என்கிற சொல்லால் தமிழி எழுத்து வடிவம் குறிக்கப்படுகிறது. இவ்வாறு குறிப்பது, தமிழியைப் பிராமி எழுத்து வடிவத்தின் உள் வடிவமாக அடையாளப்படுத்துவதாகவே அமைந்திருக்கிறது.

அதேபோலவே, பிராமியின் காலமும் தமிழியின் காலமும் ஒரே காலகட்டமாகக் கணிப்பதிலும் இருக்கிற நோக்கம் என்பதெல்லாம், பிராமிக்கு முந்தியதாகத் தமிழி இருந்துவிடக் கூடாது என்பதுதான். ஆனாலும், பிராமி எழுத்து வடிவத்திற்கு முந்திய எழுத்து வடிவமே தமிழி ஆகும். இவ்வரலாற்று உண்மையைத் தமிழகத்தில் நடைபெற்ற தொல்லியல் அகழாய்வுகள் புலப்படுத்தியுள்ளன.

மகாராசன் எழுதிய
தமிழர் எழுத்துப் பண்பாட்டு மரபு
நூலில் இருந்து...
ஆதி பதிப்பகம் வெளியீடு / 2019.