செவ்வாய், 22 ஜனவரி, 2019

கல்விப்புல ஆய்வரங்கில் சொல் நிலம் : மு.செல்லமுத்து




மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தமிழியற்புலத்தின் தமிழியல்துறை முனைவர் பட்ட ஆய்வாளர் திரு மு.செல்லமுத்து அவர்கள், எனது கவிதைத் தொகுப்பான சொல்நிலம்  நூல் அறிமுகத்தை முன்வைத்துப் பேசியதன் சாரம்.

ஏர் மகாராசன்  மதுரைக்கு அருகிலிருக்கும் சின்ன உடைப்பு என்னும் சிற்றூரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். வேளாண்மை. கல்வி, கலை, இலக்கியம், பண்பாடு, தொல்லியல்,சூழலியல், தமிழியல், மாற்று அரசியல், எளிய மக்களின் வாழ்வியல் அசைவுகள் எனப் பல்வேறு பரிமாணங்களில் பணியாற்றுகிறவர். தொன்மை பாதுகாப்பு மன்றம், மக்கள் தமிழ் ஆய்வரண், ஏர் இதழ் போன்று ஈடுபாட்டோடு சிவகங்கை மன்னர் துரைசிங்கம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வருகை உதவிப்பேராசிரியராகவும், தற்போது ஒரு பள்ளியின் ஆசிரியராகப் பணியாற்றுவதாகவும் இந்நூலாசிரியர் குறித்த அறிமுகத்தை முதலில் தெளிவுபடுத்தினார். பின்னர், இந்நூலாசிரியர் குறிப்பிட்டிருந்தது போல்,

“நனவிலும் கனவிலும்
 பாடாய்ப் படுத்தும்
 நினைவுகள்,
 இப்படியான
 கவிதைகளில் தானே
 செழித்து நிற்கின்றன”
என்ற வரிகளை நினைவுகூர்ந்தார்.

 இந்நூலில் கருச்சொல், நிழல் வனம், கூதிர்காலம், அகக் கண்ணர்கள், அலை நிலத்து அழுகை, கெடுநகர், நிலப்படுகொலை, இதுவும் ஓர் ஆணவப் படுகொலை, மனங்கொத்தி, அழுகைத்தமிழ், ஆயுட்காலம், அறத்தீ மனிதர்கள், ஈழப்பனையும் குருவிகளும், உறவுக்கூடு, துயர்ப்படலம், ஆழிமுகம், செந்நெல் மனிதர்கள், பாழ்மனம், ஈசப்பால் போன்ற பல்வேறு பாடுபொருளில் தலைசிறந்த 52 கவிதைகள் இடம்பெற்றுள்ளதாகவும், இந்நூலாசிரியர் மானுட சமூகம் எதிர்கொள்ளும் சமகால பிரச்சனைகள் பலவற்றைக் கவிதைகளாக்கியுள்ளார் எனவும் குறிப்பிட்டார்.

"செங்காட்டில்
 ஏரூட்டி உழுகிற
 கருத்த மேனிக் கண்களில்
 முளைகட்டிக் கிடக்கிறது
 பசி ஒளி.

அழுது கொண்டிருந்தாலும்
உழுது கொண்டே இருவென்று
காலில் விழுந்து கிடக்கிறது
நிலம்."
என்கிற கவிதை வரிகளைக் கோடிட்டுக்காட்டி, விவசாயத்தை தன் குலத்தொழிலாக ஏற்று தன் மண்ணையும் அதுசார்ந்த மக்களையும் பெரிதும் நேசிப்பவராக வாழ்கிறார் எனவும், சமூகத்தின் மீதான தனது சிந்தனைகளை மார்க்சியம் வலியுறுத்தும் பொதுவுடைமைக் கொள்கையில் நின்று பேசியுள்ளார் எனவும் குறிப்பிட்டார்.

சொல்நிலம் என்கிற இக்கவிதைத் தொகுப்பனாது பல்வேறு பார்வையில் ஆய்வுக்குட்படுத்த வேண்டிய ஓரு நல்ல இலக்கியப்படைப்பு எனவும் குறிப்பிட்டார்.

        எந்தவொரு படைப்பாளியும் தன் படைப்பில் அடையவேண்டிய உச்சநிலையை நோக்கியே பயணப்படுவர். இலக்கியவாசிப்பில் பெரும் ஈடுபாட்டோடு செயல்படும் வாசகர்களின் மனங்களில் அவ்வாறான படைப்புகளே பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன எனவும் கூறினார்.

 தொல்காப்பியம், சங்கஇலக்கியம், நவீனவாசிப்பு போன்ற பல்வேறு தமிழிலக்கியங்களை நன்கு கற்றுணர்ந்து இந்நூலாசிரியர் தனது படைப்பின் பாடுபொருளை திட்டமிட்டு கவிதைகளாக்கியுள்ளார் எனத் தாம் உணர்ந்ததாகவும் அவையில் குறிப்பிட்டார். தான் பிறந்த சிவகங்கை மாவட்ட வட்டார வழக்கிலும் கவிதைகள் புனையப்பட்டுள்ளன என்றும், இவரது கவிதைகள், வாசிக்கும் வாசகனுக்கு புதிய புதிய விளக்கங்களைத் தருவதால் இப்படைப்பு நிச்சயம் காலம்கடந்தும் பேசப்படும் எனவும் குறிப்பிட்டார்.

 எண்ணற்ற பதிப்புக்களைக் கண்ட ‘கண்ணீர்ப் பூக்கள்’ என்ற கவிதைத்தொகுப்பில் கவிஞர் மு.மேத்தா,

 “இந்த பூமி உருண்டையை
 புரட்டிவிடக்கூடிய
 நெம்புகோல் கவிதையை
 உங்களில் யார் படைக்கப்போகிறீர்கள்”

என்ற வினாவை எழுப்பியிருந்ததாகவும், ‘சொல்நிலம்’ என்ற கவிதைத்தொகுப்பின் வழி கவிஞர் ஏர் மகாராசன் அதைச்செய்ய முயன்றுள்ளார் எனத் தான் கருதுவதாகவும் குறிப்பிட்டார். எனவே, இந்நூல் முயற்சி பாராட்டத்தகும் என்கிற அடிப்படையில் இவரது நூல் அறிமுகம் அமைந்திருந்தது.

எண்ணற்ற கலந்துரையாடலோடு இறுதிவரை அரங்கமும் இன்புற்றிருந்தது. திட்டமிட்டவாறு நிகழ்வும் இனிதே நிறைவடைந்தது.

2 கருத்துகள்:

  1. மகிழ்ச்சி அண்ணா. தங்கள் கைவண்ணத்தில் உருவான சொல்நிலம் கவிதைத்தொகுப்பு குறித்து எம் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் மற்றும் தமிழ் ஆய்வாளர்கள் மாணவர்கள் தமிழார்வலர்களோடு உரையாடவும் கலந்துரையாடவும் வாய்ப்பு கிடைத்தமைக்கு மகிழ்வுற்றேன். முதிர்ந்த எழுத்தாளரின் சொல்வளத்தினை சொல்நிலம் பெற்றுள்ளது. இப்படைப்பின் ஒவ்வொரு கவிதையும் விமர்சிக்கப்பட வேண்டியவை அண்ணா. விரைவில் இந்நூல் குறித்து ஆய்வுக்கட்டுரை எழுதத் திட்டமிட்டுள்ளேன். அன்பும் நன்றியும் வாழ்த்துக்களும்.

    பதிலளிநீக்கு
  2. மிக்க நன்றி தம்பி. விரைவில் சந்திக்கிறேன். அருமையாய் இருந்தது உங்களது மதிப்புரை.

    பதிலளிநீக்கு