செவ்வாய், 8 ஜனவரி, 2019

தமிழர் எழுத்துப் பண்பாட்டு மரபு


பண்டைக் காலத் தமிழகத்தில் எழுத்துக் குறிகளைப் பயன்படுத்தி ஓலைச் சுவடி, நடுகல், கல்வெட்டு, செப்பேடு ஆகியவற்றில் தமிழ்மொழி எழுதப் பெற்று வந்துள்ளது. இவற்றில் காலத்தால் முற்பட்ட தாழை மடல்கள், ஓலைச் சுவடிகள் கிடைக்கப்பெறவில்லை. அண்மைக் காலத்தைச் சார்ந்த ஓலைச் சுவடிகளே  கிடைத்துள்ளன. ஆயினும், பல்லாயிரம் மற்றும் பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கல்வெட்டுகளும் செப்பேடுகளும் கிடைத்துள்ளன. அவற்றில், தமிழ் மொழியை எழுதப் பயன்படுத்திய வெவ்வேறு எழுத்து வடிவங்களைக் காணமுடிகிறது.

எழுதுவதாகிய வரிவடிவங்கள் காலம்தோறும் சிறிது சிறிதாகவும் வெவ்வேறாகவும் மாற்றம் அடைந்து வந்திருக்கின்றன. இத்தகைய எழுத்து வடிவங்கள் பற்றிய எடுத்துரைப்பைத் தொல் வரி வடிவவியல் என்பர் தொல்லியலார்.
தொல் வரி வடிவவியல் சார்ந்த விவரிப்புகள் தமிழ் எழுத்து வரிவடிவங்களுக்கும் இருக்கின்றன. தமிழ் மொழியின் தொன்மையான எழுத்து வடிவங்களைத் தமிழகத்தின் குகைக் கல்வெட்டுகள் வழியாக அறிய முடியும். இக்கல்வெட்டுகளில் எழுதப் பெற்றுள்ள எழுத்து வடிவங்களுக்குப் பெயரிடுவதில் பல்வேறு கருத்து நிலைகள் நிலவுகின்றன.

கி.மு.மூன்றாம் நூற்றாண்டில் இந்தியாவின் வடபகுதியில் மௌரியப் பேரரசர் அசோகர் ஆட்சிக் காலத்தில்  எழுத்து வடிவங்கள் பயன்படுத்தப் பெற்றுள்ளன. பாறைகளிலும் தூண்களிலும் பிராகிருத மொழியில் பொறித்து மக்கள் அறியும்படியாகச் செய்திருக்கிறார் அசோகர். கி.மு.மூன்றாம் நூற்றாண்டைச் சார்ந்த அசோகரின் பாறைக் கல்வெட்டில் உள்ள எழுத்து வடிவைப் பிராமி என முதன் முதலாகப் பெயரிட்டுக் கூறியவர் பியூலர் ஆவார். பிராமி எனும் எழுத்து வடிவம்தான் இந்திய ஒன்றிய நிலப்பகுதியின் எழுத்து முறைக்குத் தாயாகவும், தொன்மையான எழுத்து வடிவச் சான்றாகவும் சொல்லப்படுகிறது.

தமிழகக் குகைக் கல்வெட்டுகளும் இதே காலத்துக்கு உரியவையாகக் கருதப்படுகின்றன. இந்தக் குகைக் கல்வெட்டு எழுத்து வடிவங்களுக்கும் வடநாட்டில் பயன்படுத்தப்பெற்ற பிராமி எழுத்து வடிவங்களுக்கும் சிற்சில ஒற்றுமைகள் இருந்ததினால், பிராமி என்னும் பொது எழுத்து வடிவில் இருந்து தமிழ்நாட்டில் குகைக் கல்வெட்டு எழுத்துகள் உருவாகின என்பர். இக்கருத்தின் அடிப்படையில் வடபிராமி, தென்பிராமி என்று பெயரிட்டு அழைப்பதும் உண்டு. தமிழகக் குகைக் கல்வெட்டு எழுத்துகளைப் பிராமி வரிவடிவத்தின் தென்னக வகை என அழைக்கிறார் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்.  அதேவேளையில், தமிழகக் குகைக் கல்வெட்டு எழுத்து வடிவங்களைத் தமிழ் பிராமி என்று பெயரிட்டு அழைப்பார் ஐராவதம் மகாதேவன்.

பொதுவாகவே, பிராமி எழுத்திலிருந்தே தமிழ் எழுத்துகள் உருவாகி இருக்க வேண்டும் எனும் கருதுகோள்தான் பெரும்பாலும் நிலவுகின்றது. தமிழகக் குகைக் கல்வெட்டெழுத்துகளைத் தமிழ் பிராமி எனக் குறிப்பது தமிழின் தனித் தன்மையை ஏற்க மறுக்கும் நோக்கம் கொண்டதாகக் கருதும் நடன.காசிநாதன், தமிழ் பிராமி என்று அழைப்பதற்கு அவர்கள் கூறும் காரணம் தமிழ் மொழிக்காக உருவாக்கப்பெற்ற பிராமி எழுத்து என்றும், அசோகன் பிராமி அல்லது மௌரியன் பிராமியில் இருந்து இவ்வெழுத்து தோன்றியதே எனினும் அதில் இருந்து வேறுபட்டது என்றும் கூறுகின்றனர். அவ்வாறு எனில், பிராகிருத மொழிக்காக எழுதப்பெற்ற எழுத்தைப் பிராகிருத பிராமி என்று அழைப்பதுதானே சரியாகும். மேலும், அப் பிராமி எவ்விடத்திலிருந்து தோன்றியது? திடீரென்று அவர்கள் உருவாக்கிக் கொள்கையில், மற்ற பகுதிகளில் குறிப்பாகத் தமிழ் மன்னர்கள் தங்களுக்கு என ஒரு எழுத்தை உருவாக்கிக்கொண்டு இருக்க மாட்டார்களா? அவ்வாறு தங்களுக்கு உருவாக்கிக்கொண்ட எழுத்துதான் தமிழ் எழுத்து என, தமிழின் தனித்ததோர் எழுத்து மரபு தனித்து இயங்கியிருப்பதற்கான வாய்ப்புகள் குறித்து விளக்கியுள்ளார்.

தமிழ் மொழியில் எழுதும் வடிவ முறையினைப் பிராமியாகவும், அவ்வெழுத்து வடிவம் வடக்கிருந்து பெறப்பட்ட ஒன்றாகவுமே பெரும்பாலும் கருதப்பட்டது. ஆனால், அசோகர் காலத்திய கல்வெட்டுகளுக்கு முன்பாகவே தமிழ்நாட்டில் தமிழ் எழுத்துகள் வழக்கில் இருந்துள்ளதையும், அவை முறையாக வளர்ச்சி அடைந்து வந்திருப்பதையும் தொல்லியல் வரலாற்றுச் சான்றுகளின் வழியாக அறிய முடிகிறது.

கி.மு.முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த பாலி மொழியில் எழுதப்பட்ட ‘சமவயங்க சுத்தா’ (சமவாயாங்க சூத்திரம்), ‘பன்னவயன சுத்தா’ என்னும் சமண நூல்களில் அக்காலத்தில் வழங்கி வந்த எழுத்து வகைகளுள் 18 வகையான எழுத்துகள் சொல்லப்பட்டுள்ளன. அந்தப் பட்டியலில் பிராமி எழுத்து வகையும் குறிக்கப்பட்டுள்ளது. பிராமி என்பதே பம்பி என்ற பெயராலும் அழைக்கப்படுகின்றது.

மேற்குறித்த சமண நூல்கள் எடுத்துரைக்கும் அதே பட்டியலில்தான் தமிழி எழுத்து வகையும் குறிக்கப்படுகின்றது. தமிழ் எழுத்தைப் பிராகிருத மொழியில் தாமிழி என்று குறிக்கப்பட்டுள்ளது. தமிழ் என்பதை அக்காலச் சமணர் தம்ளி என்றே ஒலித்துள்ளனர். அதன் காரணமாகவே பண்டையத் தமிழ் எழுத்தின் பெயர் தமிழி என ஆகியது. அவ்வகையில், தமிழி மற்றும் பிராமி என்னும் இவ்விரண்டு எழுத்து வகைகளும் ஒரே காலத்தைச் சேர்ந்தவை; தமிழியும் பிராமியும் வேறு வேறானவை  எனத் தெரிகின்றது.

உலகில் உள்ள எழுத்து வடிவங்கள் யாவும் கடவுள் என்பதன் படைப்பு என நம்பப்படுகிறது.  எழுத்து கடவுளின் ஒரு தோற்றம் என்றும், கடவுளே அதைத் தோற்றுவித்தார் என்றும் உலகின் பல பகுதிகளில் வாழ்ந்த பண்டைய மக்கள் கருதினர். எகிப்தியர் தோத் என்ற கடவுளால் எழுத்து தோற்றுவிக்கப்பட்டது எனக் கருதினர். பாபிலோனியர் நேபோ என்னும் தெய்வத்தாலும்; யூதர்கள் மோசஸ் என்பவராலும்; கிரேக்கர்கள் ஹெர்மஸ் என்னும் தெய்வத்தாலும் தோற்றுவிக்கப்பட்டது என்று கருதினார்கள்  என்கிற குறிப்பைத் தருகிறார் இரா.நாகசாமி.

இந்நிலையில், பிராமி எழுத்து வடிவமும் கடவுள் என்பதன் படைப்பு என நம்பப்படுகிறது. அதாவது, பிரமனால் இவ்வெழுத்துக்கள் உண்டாக்கப்பட்டதாகக் கருதப்பெற்றதால் பிராமி எழுத்துக்கள் என்று பெயராயிற்று என்றும், பிராமணரிலிருந்து பிராமி எனும் பெயர் பெற்றது என்றும் கூறுவர். அதேபோல, சமண சமயத்தின் முதல் தீர்த்தங்கரரின் மகள் பெயரான பம்பியிலிருந்தே பிராமி வந்தது என்பர். ஆக, பிராமி எழுத்து வடிவம் சமயம் / சாதி சார்ந்த அடையாளத்தையே பின்புலமாகக் கொண்டிருக்கிறது. அதேவேளையில், பண்டையத் தமிழி எழுத்து வடிவத்திற்கு எந்தவகையான சமய / சாதி அடையாளப் பின்புலங்கள் எதுவும் புலப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பண்டைக் காலத்தில் தமிழ் எழுத்துகளை எழுதப் பயன்படுத்தப்பட்ட எழுத்து முறைமையே தமிழி எனக் குறிக்கப்படுகிறது. அதாவது, தமிழகக் குகைக் கல்வெட்டு எழுத்துகள் வடஇந்தியப் பிராமி எழுத்துகளில் இருந்து சிற்சில நிலைகளில் வேறுபடுகின்றன. அவ்வேறுபாடுகள் தமிழின் தனித்தன்மைக்கு உரியவை ஆகும். இந்த வேறுபாட்டைக் கருத்தில் கொண்டு தமிழி என்று தனிப்பெயர் இடுதலே சிறப்புடைத்து என்பார் இரா.நாகசாமி.

பிராமிக்கும் தமிழிக்கும் பலவகை வேறுபாடுகள் நிறைய இருப்பினும், சில அடிப்படையான வேறுபாடுகளும் இருக்கின்றன. அதாவது, அசோகர் காலத்துப் பிராமியைப்போல் பண்டையத் தமிழியில் கூட்டெழுத்துகள் கிடையாது. மேலும், அசோகப் பிராமியில் காணப்படாத தமிழுக்கே உரிய நான்கு எழுத்துகள் தமிழியில் உள்ளன. அவை ற, ன, ள, ழ என்கிற எழுத்துகள் ஆகும். இந்நான்கு எழுத்துக்களும் அசோகப் பிராமியையும் தமிழியையும் வேறுபடுத்த உதவுகின்றன. அக்காலத்திய இந்த எழுத்து முறைமையைத் தனித்தமிழ் எழுத்து முறைமை எனவும் கூறப்படுகிறது.

குகைப் படுக்கைகள், நடுகற்கள், மட்கல ஓடுகள், முதுமக்கள் தாழிகள், நாணயங்கள், முத்திரை அச்சுக்கள், மோதிரங்கள், இன்னும் இதரப் புழங்கு பொருட்கள் ஆகியவற்றிலிருந்தும் தமிழி எழுத்துகள் கண்டறியப்பட்டுள்ளன. தமிழ்நாடு, கேரளம் இலங்கை, எகிப்து, தாய்லாந்து போன்ற இடங்களிலும் தமிழி எழுத்துப் பொறிப்புத் தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

தமிழியும் பிராமியும் வேறு வேறு எழுத்து வடிவங்கள் எனினும், பிராமி எழுத்து வடிவம் வழங்கி வந்த கி.மு மூன்றாம் நூற்றாண்டைச் சார்ந்ததே தமிழியின் காலமும் ஆகும் எனப் பொதுவாய்க் கருதப்படுகிறது. அதாவது, பிராமியிலிருந்தே தமிழ் எழுத்து வடிவம் உருக்கொண்டது என்பதற்காகவே தமிழ் பிராமி என்கிற சொல்லால் தமிழி எழுத்து வடிவம் குறிக்கப்படுகிறது. இவ்வாறு குறிப்பது, தமிழியைப் பிராமி எழுத்து வடிவத்தின் உள் வடிவமாக அடையாளப்படுத்துவதாகவே அமைந்திருக்கிறது.

அதேபோலவே, பிராமியின் காலமும் தமிழியின் காலமும் ஒரே காலகட்டமாகக் கணிப்பதிலும் இருக்கிற நோக்கம் என்பதெல்லாம், பிராமிக்கு முந்தியதாகத் தமிழி இருந்துவிடக் கூடாது என்பதுதான். ஆனாலும், பிராமி எழுத்து வடிவத்திற்கு முந்திய எழுத்து வடிவமே தமிழி ஆகும். இவ்வரலாற்று உண்மையைத் தமிழகத்தில் நடைபெற்ற தொல்லியல் அகழாய்வுகள் புலப்படுத்தியுள்ளன.

மகாராசன் எழுதிய
தமிழர் எழுத்துப் பண்பாட்டு மரபு
நூலில் இருந்து...
ஆதி பதிப்பகம் வெளியீடு / 2019.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக