எளிய மக்களின் வெள்ளந்தியான சமூகப் பொருளாதார வாழ்வியல் சூழலில், இளைய தலைமுறையின் கல்வித் தாகத்தைத் தணித்து, அதன் எதிர்காலச் சமூக வாழ்வுக்குக் கலங்கரை விளக்காகத் திகழ்ந்து கொண்டிருப்பது அரசுப் பள்ளிகள் மட்டுமேதான். வசதிகள் இன்றித் தவிக்கும் எளியோரின் குழந்தைகளுக்குக் கல்விக்கான புற வாய்ப்புகளை அரசாங்கம் உள்ளிட்ட இந்தச் சமூகம் ஏற்படுத்திக் கொடுத்தாலும், மாணவர்களின் அகத்தெழுச்சி சார்ந்த படைப்புத் திறன்களை அடையாளப்படுத்துவதிலும் வளர்த்தெடுப்பதிலும் பள்ளிக் கூடங்களுக்குப் பெரும் பங்கு இருக்கின்றது. அதிலும் குறிப்பாக, மாணவர் சார்ந்த கல்விச் செயல்பாடுகள் மட்டுமல்லாமல், வகுப்பறைக்கு வெளியேயும், பாடப் புத்தகங்களுக்கு அப்பாலுமாக மாணவர்களின் படைப்புத் திறன்களை உயிரோட்டமாக வெளிக்கொண்டு வருவதில் ஓர் ஆசிரியரின் பங்கு மிக மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
ஒவ்வொரு கல்வியாண்டிலும் ஒரு தலைமுறையானது பள்ளிக்குள் உயிரோட்டமாய் உருவுடன் உலவிக்கொண்டிருக்கும் சூழலில், அந்தந்தத் தலைமுறையை வெறுமனே பாடங்களைக் கற்கும் எந்திரங்களாக முழுவதுமாகப் பாவிப்பதைத் தவிர்த்துவிட்டு, ஒரு தலைமுறையைச் சார்ந்த மாணவர்கள் என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும்.
அந்தந்தத் தலைமுறை மாணவர்கள் நிறைய நிறையப் படைப்புத் திறன்களை வெளிப்படுத்தும் கவிஞர்களாக, கதை சொல்லிகளாக, கட்டுரை எழுதுபவர்களாக, பேச்சாளர்களாக, ஓவியர்களாக, ஆடல், பாடல், நடிப்பு உள்ளிட்ட நிகழ்த்துக் கலைஞர்களாக, இயல், இசை, நாடகம் எனும் முத்தமிழ் வகைக்குள் தென்படும் இன்னும் பல கலை இலக்கியத் திறமையாளர்களாகவும் ஆவதற்குரிய அறிகுறிகளைக் கொஞ்சம் கொஞ்சமாய் வெளிப்படுத்தும் முதல் பெருங்களம் பள்ளிக்கூடம்தான் என்பதை இந்தச் சமூகம் முழுவதுமாய் உணரும்போதுதான் பாடத்துறை சார்ந்த அறிவாற்றலோடு படைப்பாளுமை மிக்க நல் மாணவத் தலைமுறையை உருவாக்க முடியும். அந்த உணர்வின் வெளிப்பாடுதான் தமிழ்க் கழனி எனும் இந்த இதழாய் உருக்கொண்டு வெளிவருகின்றது. தேனி மாவட்டம், பெரியகுளம் நகரில் வரலாற்றுச் சிறப்புமிக்க பள்ளியாகத் திகழ்ந்துவரும் விக்டோரியா நினைவு அரசு மேல்நிலைப் பள்ளியில் இயங்கி வரும் தமிழ் மன்றமானது, மாணவர்களின் படைப்பாற்றலை வெளிப்படுத்துவதற்கான ஊடகமாகத் தமிழ்க் கழனி இதழைக் கொண்டு வருகிறது.
அரசுப் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களின் படைப்பு முயற்சிகளுக்கு வடிவம் கொடுக்கும் வகையில், அரசுப் பள்ளி மாணவர் மற்றும் ஆசிரியத் தரப்பின் எளிய முயற்சியும் கூட்டுப் பயிற்சியும்தான் தமிழ்க் கழனி இதழாய் விளைந்திருக்கிறது. தமிழ்க் கழனிக்கு அறத்துணையாய் வழிநடத்தும் பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு கோபிநாத் அவர்களுக்கு மிகுந்த நன்றி. இதழுக்கு ஒத்துழைப்பு வழங்கும் ஆசிரியப் பெருமக்களுக்கும் மாணவர்களுக்கும் கனிவான நன்றி. தமிழ் மரபின் அடையாளத்தோடு புதுமைப் பாய்ச்சலைத் தொடங்கும் தமிழ்க் கழனி இதழில் தங்கள் ஓவியங்களைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கிய ஓவியர்கள் இரவி பேலட், நித்யன் ஆகியோருக்கு அன்பு நன்றி. ஓர் அரசுப் பள்ளியிலிருந்து வெளிவரும் இதழாகத் "தமிழ்க் கழனி" பெருமிதம் கொள்கிறது.
தோழமையுடன்
முனைவர் மகாராசன்,
தமிழ்க் கழனி இதழ் ஆசிரியர்.
04.02.2020.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக