“தனது நிலத்தையும் இனத்தையும் மொழியையும் பாடாத கவிதை என்பதெல்லாம் வேர்கள் இல்லாத மரம் போன்றது, கூடு இல்லாத பறவை போன்றது என்கிறார் இரசியக் கவிஞர் இரசூல் கம்சதோவ். அதனால் தான், மகாராசனின் மொழி வேர்களைத் தேடிப் பயணிக்கின்றது; கூடுகளைத் தேடி உறவாடுகிறது.” என சொல் நிலத்தின் முன்னத்தி ஏராக அமைந்துள்ளது.
மகாராசனின் ‘சொல் நிலம்’ கவிதைப் படைப்புலகில் ஆதிப்புள்ளி. கீழிருந்த எழுகின்ற வரலாறு, பெண் மொழி இயங்கியல், ஏறு தழுவுதல், தமிழ் நிலமும் வன்குடியாதிக்க எதிர்ப்பும், மொழியில் நிமிரும் வரலாறு, தமிழர் எழுத்துப் பண்பாட்டு மரபு, பண்பாட்டு அழகியலும் அரசியலும் எனும் நூலாக்கங்களின் வழியாக கருத்துலகில் சஞ்சரித்த இவர், சொல் நிலத்தின் மூலமாக படைப்புவெளியில் உலாவ அடியெடுத்து வைத்துள்ளார்.
ஏர் வெளியீடாக இந்நூல் வந்துள்ளது. 52 பொருண்மைகளில் அமைந்துள்ள கவிதைகள் யாவும் வேளாண் சமூகப் பண்பாட்டு அரசியலை முன்வைக்கின்றன. ஆற்றுப்படை நூல்களில் ஏர்க்களம் பாடும் பொருநன், போர்க்களம் பாடும் பொருநன், பரணி பாடும் பொருநன் எனும் வகைப்பாட்டில் பாடிய கவிமரபின் நீட்சியாகவே ஏர்க்களம் பாடும் பொருநனாக மகாராசன் ‘சொல் நிலம்’ வழியாக அடையாளப்படுகிறார். கவிதைகள் முழுக்க விவசாய வாழ்வியலைப் படைப்பாளரின் சிறுவயதிலிருந்தே பெற்ற அனுபவத்தை சமகாலப் பின்னணியில் வேளாண் சமூகத்தின் இருப்பையும் இயலாமையையும் கவிதைகள் பதிவு செய்துள்ளன.
கூதிர் கால நிலம் பச்சை உடுத்தி / பனி போர்த்தி / பஞ்சு நிறம் காட்டுகின்றன / அருகும் கோரையும் நெத்தையும் / வயல் நீர் பாய்ச்சும் / பின்னிரவுப் பொழுதில் / வரப்பில் நடக்கையில் / சில்லிடுகின்றன கால்கள் (2017:ப. 30) உணர்தலின் வழியாக மெய் சிலிர்க்கும் உடல் பசுமையான பொழுதுகளும் வாழ்வுகளும் நினைவில் மட்டும் வாழ்கின்றன. கனவிலும் நனவிலும் கூதிர்காலத்து நினைவுகள் பாடாய்ப் படுத்துகின்றன. இப்போதெல்லாம் கவிதைகளில் மட்டுமே செழுமை நிற்கின்றன என இயற்கையின் மாறுபாட்டை அதன் வழியான கவிமனம் கனவிலும் நனவிலும் உழல்கின்ற சூழலை அகவெளியில் மனம் உழல்வதும் புறவெளியில் மெய்சிலிர்ப்பதும் பசுமை மனம் கொள்வதுமான தன்மையில் கூதிர்காலம் கவிதை எடுத்தியம்புகிறது .
எரிமலைக் குழம்பின் தாக்கத்தை முதலாளி வர்க்கத்தின் எச்சிலோடு பொருத்திப் பார்த்திருப்பது, முதலாளி வர்க்கத்தின் வன்மத்தை எரிமலைக் குழம்போடு உவமைப் படுத்தியிருப்பது, அதிகார வர்க்கத்தைத் தோலுரிக்கின்றது. செம்புலம் கவிதை சிறுவயதில் செம்மண் புழுதி படர்ந்த மேனியாக குளத்தில் குளிப்பதும் சிறு விளையாட்டுத்தனம் சண்டையில் முரண் நீக்கி சிரித்து மகிழ்ந்த வாழ்க்கையைக் காட்டுகிறது. பெயல் நீர் சுவைத்துப் / பசப்பை ஈன்றது / செவல் காடு (மேலது. ப. 77) எனும் சூழலியல் சார்ந்த கவிதை, சங்க மரபுக் கவிதையான ‘செம்புலப் பெயல் நீர் போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே’ எனும் கவிதை மரபை மறுவாசிப்பு செய்துள்ளதைப் பார்க்க முடிகிறது. இக்கவிதையில் நீரில் இருந்து நிலத்தைப் பார்ப்பது ஒரு வகை; நிலத்தின் வழியாக நீரைப் பார்ப்பது இன்னொரு வகை. மேலே குறிப்பிட்டுள்ள சங்கக் கவிதை நீரின் வழியாக நிலத்தை பார்ப்பதுமாகவும், மேலிருந்து நோக்குவதாகவும் அமைந்துள்ளது. இக்கவிதையோ நிலத்தின் வழியாக நீரைப் பார்ப்பதுமான கீழிருந்து பார்க்கப்பட்டிருப்பது சங்க மரபிலிருந்து மாற்றுத்தளத்தில் செம்புலப் பெயல் நீர் கருத்தாடல் அமைந்துள்ளது.
உழைப்பின் சுரண்டலை பேசும்பொழுது உரத்த சொல்லாடலாக வெளிப்பட்டுள்ளது. விவசாயத்தின் மீதான பற்று கவிதையில் உயிர்பெற்று இருப்பதைப் போல தாய்மை, காதல், மொழி இவைகளின் மீதான பற்றுக்கோடுகள் கவிதையின் சொல்லுருக்களாக வெளிப்பட்டுள்ளன. நிலம் உற்பத்தியின் விளைவால் மகசூல் கிடைப்பதைப் போல வேளாண் வளமைக்கான மொழி தவிப்பின் விளிம்பில் ஈரம் சுரக்கும் தாய்நிலத்தின் மொழியின் குவிமையத்தைத் தாங்கி நிற்கின்றன சொல்நிலம் கவிதைகள். அன்பின் உயிர் முடிச்சை மொழியின் வழி விதைத்தவள் என்று கூறுவது, அன்பு வயப்பட்ட தாய்மையும் அன்பு வயப்பட்ட மொழியையும் ஒப்புநோக்கி இருப்பதைப் பார்க்க முடிகிறது.
“உழைப்புச் சொற்களால் / நிலத்தை எழுதிப்போன / அப்பனும் ஆத்தாவும் / நெடும்பனைக் காடு நினைத்தே / தவித்துக் கிடப்பார்கள் / மண்ணுக்குள். ” ;(மேலது, ப. 87) எனக்கூறுவது, சங்கக்கவி மரபில் உள்ள கையறுநிலைப் பாடலின் தொனிப்பொருளைப் பெற்றுள்ளது இக்கவிதை. பொற்றோரும் நிலமும் இல்லாத தவிப்பின் இருத்தலைக் காட்டுகிறது. விளைநிலத்தை நம்பியே தம் வாழ்நாளின் முழுவதும் காலம்கழித்த விவசாயப் பூர்வீகத்தை தன்னிலைசார்ந்த படைப்பாக்கத் தன்மையை சொல்நிலத்தின் வழியாக அவதானிக்க முடிகிறது.
வேளாண் நிலத்தின் வலி மொழி :
வடுக்களோடும் வலிகளோடும் / வயிற்றுப்பாட்டோடும் / நெருப்பையும் சுமந்து / சாம்பலாகிப் போனார்கள் / வெண்மணி வயலின் / செந்நெல் மனிதர்கள் (மேலது, ப. 25) விவசாயக் கூலித் தொழிலாளர்களின் வாழ்வியல் இன்றைய சூழலில் பல்வேறு நிலைகளில் வஞ்சிக்கப்பட்டு வருவதைப் பார்க்க முடிகின்றன. கூலி உயர்விற்குக்காகப் போராடிய கீழவெண்மணி தொழிலாளர்களைக் காவு வாங்கிய அதிகார மையத்தை ‘உயிர் அறுப்புகள்’கவிதை, கடுமையாகச் சாடுகிறது. நிலமே கதியென்று / உழைத்துக் கிடந்தவர்களின் / கையளவுக் காணிகளை / அதிகாரக் களவாணிகள் / களவாடிய பின்பும் / குத்தகை வாரத்துக்கும் / கொத்துக்கும் கூலிக்குமாய் / உழைத்துமாய்ந்திடத் / தஞ்சமடைந்த ஆவிகள் / தொப்பூள்க்கொடிகள் / வியர்வை வழிந்த நிலத்தையே தான் / சுற்றிக் கிடந்தன. (மேலது, ப. 79) நிலம் வைத்திருந்த உழைப்பாளிகள் இடத்தில் கையளவு காணிகளையும் கூட இழந்து அடிமைகளாய் வேலை செய்யும் ஒடுக்கப்பட்ட மக்களின் உழைப்புச் சுரண்டலை உயிர் அறுப்புகள் கவிதை எடுத்தியம்புகிறது. தொப்பூள்க் கொடி உறவுதேடும் தன்மை, பஞ்சமி நிலமீட்பு தேடுகின்ற கவிதையாக முடிகிறது. ஈரம் கோதிய சொற்கள், பாழ்மனம், இனம் அழுத நிலம் எனும் கவிதைகள் தமிழ்நிலத்தின் வலிமொழியின் சொல்லாக்கங்களாகும். திணைமயக்கம் கவிதை வேளாண்நிலத்தின் தொன்மத்தைத் தேடிச் செல்கிறது.
குலைகள் பூத்து / உதிர்ந்த விதைகள் / வரலாறு படித்தன / வடுக்களே / விதைகளாகும் காலம் முளைக்கிறது / கூடுகள் இழந்து / காயங்கள் சுமந்த / தூக்கணாங்குருவிகள் / மீண்டு மீண்டும் வரும். (மேலது, பக். 56-57)
அழுது கொண்டே இருந்தாலும் / உழுது கொண்டே இருவென்று / காலில் விழுந்து கிடக்கிறது / நிலம் (மேலது, ப. 19)
சாதிய வெறியும் / நிலவுடைமைச் சதியும் / சகதி மனிதர்களைச் / சாவடிக்கக் காத்துக் கிடக்கின்றன. (மேலது, ப. 24)
ஆத்தாளின் வலியை / இப்போது / நிலத்தாயும் / சுமந்து கிடக்கின்றன. (மேலது. ப. 62) எனும் கவிதைகள் உழைப்பாளிகளின் வலியினையும் இழிவுகளும் மனிதர்களை இறப்பின் விளிம்பில் அமிழ்த்துகின்றன. கழுநிலம் எனும் கவிதை கையறுநிலை ஒப்பாரிப்பாடலைப் போன்று வலிமிகுந்ததாய் அமைந்துள்ளது. பச்சிளம் குழந்தைகளைப் கொலை செய்யும் ஆம்குழாய் கிணறுகளை, உயிரை உறிஞ்சிச் சாகடிக்கும் / கொத்துக் குழிகள் / நிலப் படுகொலையின் / படு களங்கள் (மேலது, ப. 64) என நிலப் படுகொலை கவிதை காட்டுகிறது. நிலத்தடிநீரை உறிஞ்சும் அதிகாரத்திமிரின் படுகளமாக நிலமாகிவிடுகின்றதை எண்ணி கவிமனம் கலங்குகின்றது.
கவிதையின் உவமையாக்கம் :
சொல்நிலம் கவிதைகளனைத்தும் வாழ்வின் வலியை உணர்வுப்பூர்வமாக ஒப்புமைப் படுத்தப்பட்டுள்ளதைப் பார்க்கமுடிகின்றன. இந்த ஒப்புமையாக்கமனைத்தும் வேளாண்மை சார்ந்ததாகவே அமைந்துள்ளது. உலகைப் போர்த்தும் / கதிர் போல / ஒளியாய் / நுழைந்தவள்(மேலது, ப. 11) தன்னிருப்பை வளமையாய் அணுகுவதும் வாழ்வினைச் செழுமை சேர்ப்பதற்கும் தாய்நிலத்தின் பரிசத்தை இன்பம்கொள்ளும் மனநிலை கவிதையில் வெளிப்பட்டுள்ளது. நிலத்தின் வளர்ச்சிபோல கைத்தளம் பற்றிக்கொள்கிறது கவிமனசு. சொல் நிலக் கவிதையாக்கம் மகிழ்வில் விளிம்பிலும், துன்பத்தின் விளிம்பிலும் உலவும் இருவேறு நிலையைப் பெற்றுள்ளதைப் பார்க்க முடிகிறது.
வயல் நீர் வற்றி / பசுந்தாளெல்லாம் / பறித்து நின்ற / நெற்கதிர் அடுத்து / களம் சேர்த்த / கருத்த மனிதர்களின் கவலைகள் / ஊமணி எழுப்பிய ஓசை போல் / ஊருக்கு கேட்காமலே / ஒட்டிக் கிடந்தன வாழ்வில். (மேலது, ப. 23) உழைப்பாளிகளின் உடலை கருத்த மனிதர்கள் கூறியதோடு அவர்களின் கவலை வாய் பேசாதார் எழுப்பும் ஓசை போல கேட்காமலே போனதாகக் கூறுகிறத இக்கவிதை.
பாழ் நிலம் நினைத்துத் / தவிர்த்து கிடைக்கும் / கலப்பை போல் / தனித்து போனது யாவும். (மேலது, ப. 27) காதலின் பால் ஆட்பட்டுத் தனிமையில் தவிக்கும் மனத்தினை பாழ்நிலத்தோடு ஒப்புமைப் படுத்தப்பட்டுள்ளது.
விழுகின்ற மழைநீரில் / கலந்து விட்ட கண்ணீர் / காணாது போலவே / அவர்களின் கனவும் / கலைந்து போனது / பல காலமாய் (மேலது, ப. 31) உழைப்பாளிகளின் கனவும் களைந்து போகின்றன. வாழ்வில் கண்ணீர் மட்டுமே எஞ்சி நிற்கின்றது.
தன்னை அழித்து / முளைக்கும் விதை போல் / உயிர்த்தீ விதைத்து, / தம்மை கொளுத்தி / இனத்தின் விழிப்பை / சாவுகளில் உயிர்ப்பித்து / முளைக்க செய்த / அறத்தீ மனிதர்களின் / தாகம் தணியும் ஒரு நாள். (மேலது, ப. 42) இயற்கைச் சீற்றத்தாலும், கைட்ரோ கார்பன் திட்டத்தாலும், உயர்மின் கோபுரம் உருவாக்கத்தாலும், பன்னாட்டுத் தொழிலின் விரிவாக்கத்தாலும் விளைநிலம் அழிக்கப்படுவதை எண்ணி வேளாண் தொழிலாளிகள் தன்னுடலில் தீயிட்டுக் கொளுத்திக் கொள்வதை மண்ணில் அறத்திற்காக விதைக்கப் படுகிறார்கள் எனக் கவிதையின் அர்த்தம் வெளிப்படுகிறது. எல்லாக் கவிதைகளும் எவ்வித பூடகமற்ற அர்த்தத்தளத்தில் பயணிக்கின்றன.
இயற்கையின் வளமையைக் கொண்டாடுதல் :
வேளாண் சமூக வளமைசார் வாழ்வில் மகிழ்ச்சி சார்ந்ததாக இருப்பதோடு வளமைசார் சடங்கினை மையப்படுத்துவதோடு இயற்கையை நேசிப்பின் தன்மை கவிதைகளில் தொனிப்படுகின்றது. மழைநீர் வேளாண்மைக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. ஆனால் அம்மழை வெள்ளமாகப் பெருக்கெடுக்கும்போது அழிவையும் தருகிறது. மழை வளக்கானதாகவும் வளமை அழிப்பிற்கானதாகவும் இருமை எதிர்வுத்தன்மை கொண்ட மழையை, கண்ணீரோடு ஒப்புமையாக்கம் செய்துள்ளார் மகாராசன். குறுணி மழை, ஈரம் கோதிய சொற்கள், மழைக்காலம், ஈசப்பால், செம்புலம், உயிர்க்கொடி, பன்முகம், ஈழப் பனையும் குருவிகளும் எனும் கவிதைகள் இயற்கையையும் வேளாண் வளமையையும் கொண்டுதலைக் காட்சிப்படுத்துகின்றன.
இரவில் ஒழுகும் / மழை நீர் போல / மனம் அழுது அழுகின்றது இன்னும் / உசிரப்பிடுச்சி வச்சிருந்த / உனை நினைத்து (மேலது, ப. 47)
பச்சை உடுத்தி / பனி போர்த்தி / பஞ்சு நிறம் காட்டுகின்றன / அருகும் கோரையும் நெத்தையும். (மேலது, ப. 30)
பன்னீர் பூக்கள் / முகம் சிரித்துச் / செந்தரையில் / கிடப்பதைப் போல / கூட்டமாய் சலசலத்து / குரல் சிந்திய கூட்டிசை / காற்றில் கரைந்து / செவியில் நுழைந்து / செல்லத் துள்ளலாய்க் / கண்ணில் மணக்கின்றன / பூனை குருவிகள். (மேலது, ப. 61)
வானத்தில் உழுது விதைத்த / ஒற்றை விதையைப் போல, / வெறிச்சோடி கிடந்தாலும் ஒளியாய் துளிர்விடுகிறது / நிலா. (மேலது, ப. 72)
ஒரு மழைக்காலத்தில் / மண் தளர்த்தி / முளை விடுவதைப் போல / பச்சையம் பூக்கிறது / மனம். (மேலது)
மண்ணில் அருவிபோல் / முன்டியடித்துப் பூத்து / சட்டென மேலே பறந்து / இறக்கை உதிரக்/ கீழே விழுந்து / அம்மணமாய் ஊர்ந்து திரிந்தன (மேலது, ப. 76)
ஈரக்காற்றில் மஞ்சள் மஞ்சள் இதழ் படுக்கை பீர்க்கம்பூ,
மூக்குத்தி பூத்தேடி / பயணித்த பாதங்களைக் / குத்திகுத்திச் சிரிக்கிறது / நெருஞ்சி. (ப. 84)
பால்வடியும் மரங்களில் / பொட்டலங்களுக்குள் / உறங்கிக் கிடக்கின்றன / ஈத்துக் கொடிகள். (மேலது, ப. 80)
ஈச்ச மர இலைகள் கிள்ளி / உள்ளங்கைகளில் / சுருட்டி ஊதிய பீப்பிகள் / இசை கற்றுத் தந்து போயின. / அலைந்து திரிந்த வெயிலில் / நிழல் அள்ளி பருகிய போது / இனித்து கிடந்தது / வாழ்க்கை. (மேலது, ப. 67)
ஈசல் வயிற்றுப் / பால் சவுச்சியில் / கசிந்து கிடந்தது / நிலத்தாளின் முலைப்பால். (மேலது, ப. 76)
நெல்லை விதைத்தவர்கள் / சொல்லை விதைத்தார்கள் / கூடவே தன்மானத்தையும் (மேலது, ப. 24) எனும் கவிவரியின் வழியாக, நெல்-சொல் இரண்டினையும் ஓர்மைப்படுத்தப் பட்டுள்ளதைப் பார்க்க முடிகிறது. மேற்காணும் சொல் நிலக் கவிதைகள் யாவும் இயற்கைப் புனைவினை மையப்படுத்திய சொல்லாக்கங்கள் சங்க இலக்கிய இயற்கைப் புனைவினைப் போன்று அமைந்திருப்பது சிறப்புக்குரியதாகும்.
இருண்மை எனும் கட்டுப்பாடுகளிலிருந்து விடுபட்டு கவிதையின் பாடுபொருள் திறந்த மனதுடன் வாசிப்பிற்குள் உள்நுழையும்போது சொல் நிலக்கவிதைகள், இயற்கையைப் பிரதியாக்கம் செய்வதாகவும் இயற்கையின் ஊடாக மனித வாழ்வைப் பொருத்திப் பார்ப்பதும், உலகமயச் சுழலால் இழந்து வரும் வாழ்வாதாரத்தையும், வேளாண் தொழிலாளர்களின் வலி நிறைந்த வாழ்வையும் கவிதைகள் தாங்கி நிற்கின்றன. கவிதை உருவாக்கத்தில் இயற்கைப் பருப்பொருட்கள் ஆளுமை செலுத்துகின்றது. படைப்பாளுமைக்கும் இயற்கைக்குமான உறவுநிலை கவிதையாக்கத்திற்குத் துணையாக நிற்கின்றது. படைப்பு மனம் இயற்கை, இயற்கை மாற்றம், ஒவ்வொரு இயற்கைப் பொருளையும் தன் கவிதைவெளிக்குள் கொண்டு வருவது என்பது இயல்பான படைப்பு மனத்தின் செயலாக்கம் சொல் நிலத்தில் வெளிப்பட்டுள்ளது. சொல் நிலத்தில் இயற்கையைப் புனைவாக்கத்தோடு வேளாண் நிலத்தின் வலி மிகுந்த வாழ்வினை உணர்ந்து படைப்பாக்கம் செய்தல் தன்னிலை சார்ந்து நிகழ்ந்திருக்கின்றது. நவீனக் கவிதைகள் உருவாக்கச் சூழலில் வேளாண் பண்பாடு சார்ந்த தளத்தில் பல பொருண்மையை நோக்கி நகர்கிறது ‘சொல் நிலம்'.
- ம.கருணாநிதி,
உதவிப் பேராசிரியர்,
தமிழ்த் துறை,
அருள் ஆனந்தர் கல்லூரி, கருமாத்தூர் - 625514.
நன்றி:
கீற்று மின்னிதழ்
அருமை
பதிலளிநீக்குநன்றி
நீக்கு