செவ்வாய், 10 நவம்பர், 2020

தமிழ் கற்றல் - வேர் அறியும் தடம்:- மகாராசன்

எழுதப் படிக்கத் தெரியாத எளிய பாமரத் தமிழர்கள் பேசுகிற தமிழில் அச்சு அசலான மொழியின் இலக்கணம் இருக்கிறது. இலக்கணப்படி தான் பேசுகிறார்கள் என்று சொல்வதைக் காட்டிலும், அவர்கள் பேசுவதில்தான் மொழியின் இலக்கணம் இருக்கிறது என்பதே சரியானது. 

நாம் பேசுகிற மொழியில் என்னென்ன மாதிரியெல்லாம் இலக்கணம் இருக்கிறது என்பதைத் தான் இலக்கண நூலார் வரையறை செய்தார்கள். மொழியை ஆளாளுக்கு ஒரு மாதிரியாகவும் வேறாகவும் கையாளாமல், மொழியைத் தரப்படுத்தவும் நிலைப்படுத்தவும் உகந்த இலக்கணம் பேருதவி புரிகிறது. சமூகமாகக் கூடி வாழும் மனிதர்களுக்குப் பொதுவான மொழி வரம்பு தேவை. 

மொழி ஒழுங்கு, சமூக ஒழுங்கையும் மனித நடத்தை ஒழுங்கையும் வடிவமைக்கக் கூடியது. அவ்வொழுங்கு முறையைப் பள்ளிக் குழந்தைகள் கற்பது வெறும் எழுத்து, சொல், யாப்பு என்ற நிலையினதாக மட்டும் சுருக்கிப் பார்ப்பது கூடாது. 

வேறெந்த மொழியினரும் அந்த மொழியின் இலக்கணத்தை ஏன் பள்ளியில் படிக்க வேண்டும் என்கிற கேள்வியை எழுப்பவே மாட்டார்கள். நாம் தான் இப்படிக் கேட்டுக் கொண்டே இருக்கிறோம். மொழி வெறும் மொழி என்பதாக மட்டும் பார்த்தல் கூடாது.

ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவுறுத்தப் பாடியது - எனும் குறிப்பில் உள்ள 'தமிழ்' எனும் சொல்லானது, வெறும் மொழியை மட்டுமே குறிக்கவில்லை. 

தமிழ் எனும் சொல்லானது, மொழி எனும் அடையாளத்தோடு களவு, கற்பு எனும் வாழ்நெறியைக் குறிக்கும் அறத்தையும், அதன் மறத்தையும், அறத்தோடும் மறத்தோடும் கூடிய தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட இனத்தையும், தமிழ் மொழியும் தமிழ் இனமும் வாழ்கிற தமிழர் நிலத்தையும் குறிக்கிறது. 

மேலும், இவற்றையெல்லாம் எண்ணத்திலும் எழுத்திலும் பேச்சிலும் செயலிலும் வெளிப்படுத்துகிற அறிவு மரபையும் கலை மரபையும் தொழில் மரபையும் குறிக்கிற ஒரு குறியீட்டுச் சொல்லாகத்தான் பன்மைப் பொருண்மையை அடைகாத்து வைத்திருக்கிறது தமிழ் எனும் சொல்.

மொழியானது வெறும் பேச்சுக் கருவி மட்டுமல்ல; அம்மொழி பேசுவோரின் அடையாளம், வரலாறு, பண்பாடு, அறிவு, அறம், அரசியல், அழகியல், படைப்பாக்கம் எனப் பன்முக வேர்களையும் கொண்டிருப்பது. மொழியே ஓர் இனத்தின் வேர். வேரை மறுக்கிற, மறந்த, இழக்கிற, இழந்த எந்தவொரு மரமும் செடியும் கொடியும் நிலைத்திருப்பதில்லை என்பதே இயற்கை விதி.

ஆக, ஒரு குழந்தை அல்லது மாணவர் இலக்கணத்தைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பது அதன் வேரை உணர வேண்டும் என்பதே.

இந்நிலையில், ஒரு சாபக்கேடு என்னவெனில், இலக்கணத்தைப் பயமுறுத்தும் பூச்சாண்டி போல கற்றுக் கொடுக்கும் முறையினால்தான், இலக்கணம் என்பது மாணவர்களிடமிருந்து அந்நியப்பட்டுக் கிடக்கிறது. 

ஆக, கோளாறு என்பது இலக்கணத்தில் அல்ல; இலக்கணம் பயிற்றுவிக்கும் முறையில் தான் இருக்கிறது.

*

ஏர் மகாராசன்

10.11.2020

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக