செவ்வாய், 3 நவம்பர், 2020

பெண்ணைக் குறித்த கற்பிதங்களும் மதங்களின் ஐக்கியப்பாடும் : மகாராசன்


பெரும்பாலான மதங்களும் சாதியமும் ஆண் வழிச் சமூக மதிப்பீடுகளையே தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கின்றன. இந்தியச் சமூகத்தில் நிலைகொண்டிருக்கும் மதங்களும் சாதியமும் ஒன்றுக்கொன்று பிணைப்பு கொண்டிருப்பவை. சாதியப் படிநிலை ஏற்றத்தாழ்வுகளை வழிமொழிவதாகவே இந்தியச் சூழலில் நிலவுகிற பெரும்பாலான மதவாதச் செயல்பாடுகள் அமைந்திருக்கின்றன. 


இவ்வாறான சாதிய மதவாத அடிப்படைக் கருத்தாக்கங்கள் யாவும் பெண்ணைப் பற்றிய நிலைப்பாடுகளில் மிகக் குறுகலானதும் குறிப்பானதுமான நெறிமுறைகளை முன்வைத்தும், கட்டுப்பாடுகளை இயற்றியும், அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான வழிமுறைகளையும் கொண்டிருக்கின்றன. இத்தகைய சாதிய மதவாதப் படைப்புகளை வெளிப்படுத்துவதாகவே ஆண் வழிச் சமூக அதிகார மையங்களும் அவை வழிப்பட்ட மரபுகளும் இயங்கிக் கொண்டிருக்கின்றன.

எல்லா மதங்களுமே பெண்ணை அடிமைப்படுத்துவதிலேயே குறியாய் இருக்கின்றன. இந்தியச் சமூகச் சூழலில் நிலவுகிற வைதீக, கிறித்துவ, இசுலாமிய, பௌத்த, சமண மதங்களும் தத்தமது வழிகளில் பெண்களை ஒடுக்குவதில் கவனம் செலுத்தி இருக்கின்றன.

ஆரிய வைதீக மதத்தின் அடிப்படை ஆதார நூலாகக் கருதப்படும் மனுதர்ம சாத்திரம், பெண்களுக்கு உரிய கடமைகளாகப் பின்வருவனவற்றைச் குறிப்பிட்டிருக்கிறது.

"எந்தப் பருவத்தினள் ஆயினும், தனது இல்லத்திலேகூட எந்தப் பெண்ணும் தன்னிச்சைப்படி எச்செயலும் இயற்றல் ஆகாது (அத். 5:147); இளமையில் தகப்பன், பருவத்தில் கணவன், விதவையான பின் மக்கள், இவர்கள் காவல் அன்றிப் பெண்கள் தம்மிச்சையாக இயங்கல் ஆகாது(அத்.5:148); தகப்பன், கணவன், மக்கள் இவர்களைத் தவிர்த்துத் தனித்து இருக்க விரும்புதல் கூடாது. அப்படித் தனித்து இருப்பின் பிறந்தகம் புக்ககம் ஆகிய இரு குலங்களுக்கும் நிந்தை உண்டாக்குவாள்(அத்.5:149); இழி நடத்தை, பரத்தையர் நட்பு, நற்குணம் இன்மை இவற்றை உடையனவன்ஆயினும், கற்பினால் ஆன பெண், தன் கணவனைத் தெய்வமாகப் பேணுக(அத்.5:149); கைம்மையில் காய், கனி, கிழங்கு இவற்றால் சிற்றுணவு கொண்டு காலம் தள்ளலும், மற்றொருவன் பெயரை நாவால் கூற விரும்பாமையும் வேண்டும்(அத்.5:157); கைம்மையினள் தன் காலம் உள்ளளவும் பொறுமை, தூய்மை, உடல் கலப்பின்மை, கள் புலால் கொள்ளாமை, மேன்மையான கற்பிலக்கணம் இவை பொருந்தக் கடவள்(அத்.5:158); மனம், சொல், புலன் இவற்றை அடக்கி நெறி தவறாமல் இருப்பவள், கணவன் இருக்கும் லோகத்தை அடைவதுடன், கற்பரசி என்றும் கொண்டாடப்படுவாள்(அத்.5:165)." மேற்கண்டவாறு மனுதர்ம சாத்திரம் பெண்ணின் கடமைகளாக வரையறுத்துள்ளது.

கிறித்துவத்தின் பழைய மற்றும் புதிய பைபிளில் எபெ.5.22இல், "மனைவிகளே! கர்த்தருக்குள் கீழ்ப்படிகிறது போல, உங்கள் சொந்த புருஷருக்கும் கீழ்ப்படியுங்கள்". எபெ.5.23இல், "கிறிஸ்து தலையாய் இருக்கிறது போல, புருஷனும் மனைவிக்குத் தலையாய் இருக்கிறான். அவரே சரீரத்திற்கும் இரட்சகராக இருக்கிறார்". எபெ.5.24இல், "சபையானது கிறிஸ்துவுக்கு கீழ்ப்படிகிறது போல, மனைவிகளும் தங்கள் சொந்த புருஷர்களுக்கு எந்தக் காரியத்திலேயும் கீழ்ப்படிந்து இருக்க வேண்டும்". எபெ.5.23இல், "மனைவியும் புருஷன் இடத்தில் பயபக்தியாக இருக்கக் கடவது" என்ற கிறிஸ்துவின் வசனங்கள் ஊடாக, பெண் ஆணுக்குக் கீழ்ப்படிந்து, ஆணைச் சார்ந்து வாழ வேண்டும் என்கிறது கிறித்துவ மதம்.

இசுலாமிய மத நூலான திருக்குர்ஆனும், பெண்ணை ஆணின் உடமையாகப் பார்க்கிறது. திருக்குர்ஆன் அத்.2 .222.223இல், "மாதவிடாய்க் காலத்தில் பெண்களை விட்டு விலகி இருங்கள். தூய்மை அடைந்து விட்டால், அல்லாஹ் உங்களை ஏவிய முறைப்படி அவர்களிடம் செல்லுங்கள். உங்கள் மனைவியர் உங்களுக்குரிய விளைநிலங்கள் ஆவர். எனவே, நீங்கள் விரும்பும் முறையில் உங்களுக்குரிய விளை நிலங்களுக்குச் செல்லுங்கள். மேலும், உங்களுடைய வருங்காலத்திற்காக முன்கூட்டியே ஏதாவது செய்து கொள்வதில் அக்கறை காட்டுங்கள்".
அத் 4.34.35இல், "ஆண்கள் பெண்களை நிர்வகிப்போர் ஆவர். இதற்குக் காரணம், அல்லாஹ் அவர்களில் சிலருக்குச் சிலரைவிட உயர்வை அளித்திருக்கிறான் என்பதும், ஆண்கள் தங்களுடைய செல்வத்திலிருந்து செலவு செய்கிறார்கள் என்பதும் ஆகும். எனவே, ஒழுக்கமான பெண்கள் கீழ்ப்படிந்தே நடப்பார்கள். மேலும், ஆண்கள் இல்லாதபோது (அப் பெண்கள்) அல்லாஹ்வின் பாதுகாப்பிலும் கண்காணிப்பிலும் இருக்கின்ற காரணத்தால் அவர்களின் உரிமைகளைப் பேணுவார்கள். மேலும், எந்தப் பெண்கள் குறித்து அவர்கள் (தன் கணவர்கள்) மாறு செய்வார்கள் என்று அஞ்சுகின்றீர்களோ, அந்தப் பெண்களுக்கு நல்லறிவு புகட்டுங்கள்; படுக்கைகளிலிருந்தும் அவர்களை ஒதுக்கி வையுங்கள். மேலும், அவர்களை அடியுங்கள்" என்கிறது திருக்குர்ஆன். பெண் மீதான வன்முறையை ஆண் நிகழ்த்திக் கொள்வதற்கான அங்கீகாரத்தைத்தான் இசுலாமிய மதம் வழங்கியிருக்கிறது.

அவைதீக மதங்களான பௌத்தம், சமணமும் துறவறத்தை வலியுறுத்துவதன் மூலம், பெண்கள் மீதான வெறுப்புணர்வையே வெளிப்படுத்தியுள்ளன. "ஆண் மெய் என்பது சகலரையும் ஆண்டு இரட்சிக்கப்படும் புருஷர் எனப்படுவான். பெண் மெய் என்பது சகலரையும் இச்சிக்கக்கூடிய ஸ்திரீ எனப்படுவாள்" என்கிறது அதிவேத சங்கங்களின் ஸ்தாபன உரை. பௌத்த, சமண மதங்கள்கூட பெண்ணை வெறுக்கத்தக்க ஒன்றாகவே பார்க்கின்றன.

இவ்வாறாக, எல்லா மதங்களுமே பெண்ணுக்கு எதிரான கருத்துக்களையே முன் வைத்திருக்கின்றன. இத்தகைய மதவழிபட்ட கருத்துகளே ஆண் வழிச் சமூகத்தின் அங்கீகரிக்கப்பட்ட மரபுகளாக இருந்து கொண்டிருக்கின்றன. ஆண் வழிச் சமூகக் கலாச்சாரமும், அதனை ஒட்டிய அதிகாரமும் நிலைநிறுத்துவதற்கு இவ்வகைப்பட்ட மதக் கருத்துக்களே முக்கியக் கருவிகளாக பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

எனவே, இன்றைய சமூகத்தின் எல்லாத் துறையிலும் தங்கள் கால் பதிக்கவும் சாதிக்கவும் வந்துவிட்ட பெண்களுக்கு எதிராகவும், சாமானியப் பெண்ணுக்கு எதிராகவும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள கருத்து ரீதியான - கலாசார ரீதியான - உடல் ரீதியான வன்முறை, நாம் பார்த்த வகையில் வரலாற்றுவழி வந்ததால், இந்த மதத்தை - அதன் ஆணிவேரை அசைக்காமல், இதற்கு எதிரான வலுவான மாற்றுக் கலாச்சாரக் கருத்துத் தளத்தை - சனநாயகப் பண்பாட்டை வளர்க்காமல், தனித் தனி நபர்களைச் சாடுவதும் சாத்தியமற்ற ஒன்று.

எல்லா மதங்களுமே தம்மளவில் மாறுபட்டுக் கொண்டாலும், பெண்களை ஒடுக்குவதில் மட்டும் ஐக்கியப்பட்டுக் கொண்டுள்ளன. இவற்றுள் சில மதங்கள் சில சீர்திருத்தங்களைக் குறைந்த அளவேனும் தம்முள் கொண்டுள்ளன. அதே வேளையில், வேறு சில மதங்கள் மிகக் கடுமையான ஒழுக்க விதிகளைப் பெண் மேல் திணித்து வருகின்றன. ஒடுக்கப்பட்டுக் கிடப்பவர்களுக்குக் குறைந்த அளவிலேனும் இளைப்பாறுதல் தருகிற வகையில் சில சீர்திருத்தங்களைச் சில மதங்கள் நடைமுறைப்படுத்துகையில், அவற்றை அடிப்படை மதவாதிகள் தமக்கு எதிரான நடவடிக்கையாகவே கருதுகின்றனர். இதனால் அவர்களுக்குள்ளும் மதங்களின் மோதலாக வலுக்கத் தொடங்குகின்றன.

ஒட்டுமொத்த சமூகத்தையே பழமை வாதத்துக்குள் தள்ளுவதைத்தான் எல்லா மதங்களும் நோக்கமாகக் கொண்டிருக்கின்றன. 

நவீன சமூகமானது மதங்களைக் குறித்த புரிதலை உள்வாங்கிக்கொள்ளவும் வேண்டும். மதங்களோ, வழிபாட்டு முறைகளோ, வழிபடு தெய்வங்களோ, மத வழிப்பட்ட நூல்களோ யாதாயினும், அவை ஒரு காலத்திய சமூக மனிதர்களின் நம்பிக்கை அல்லது கற்பிதம் அல்லது வாழ்முறை அவ்வளவே. ஆயினும், அவற்றை முற்றாகவே நிராகரிப்பதோ அல்லது அப்படியே கொண்டாடுவதோ அவரவர் தனிப்பட்ட உரிமைதான் என்றாலும், சக மனிதரை, சக மனிதருள் பாதியான பெண்ணை ஒடுக்கவோ, இழிவுபடுத்தவோ, அடிமைப்படுத்தவோ, இரண்டாம்தர உயிரியாகப் பாவிப்பதற்கோ எந்த மதத்திற்கும் அல்லது மதவாதிகளுக்கும் அல்லது மத நூல்களுக்கும் உரிமை இல்லைதான் என்பதை நவீன சமூகம் உணரத் தொடங்கி இருக்கிறது. இது ஒருபுறமிருக்க, நாட்டுப்புற வழிபாட்டு மரபில் பெண்களின் புழங்கு வெளி பற்றியும் மீளாய்வு செய்யவும் வேண்டி இருக்கிறது. 

எதுவாயினும், ஏற்பனவற்றை ஏற்றும், எதிர்ப்பனவற்றை எதிர்த்தும் பயணிப்பதே நவீன சமூகத்தின் படிப்பினையாகும்.

மகாராசன் எழுதிய 'தமிழ் நிலமும் புது வன்குடியாதிக்க எதிர் மரபும்' எனும் நூலில் இருந்து...


ஏர் மகாராசன்
03.11.2020.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக