திங்கள், 28 ஜூன், 2021

செத்தும் கொடை கொடுத்த வள்ளல் ஆய்வறிஞர் குமரி மைந்தன் : மகாராசன்


செத்தும் கொடை கொடுத்த வள்ளல்களைப் பற்றிப் படித்திருக்கிறேன். எம் வாழ்வில் முதன்முதலாக நேற்றுதான் அதை அனுபவித்திருக்கிறேன். 

*

வாழ்ந்து கொண்டிருக்கிற காலத்திலேயே கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியாத, இயலாத, கூடாத மனிதர்கள் பேரளவுக்கு நிரம்பிய இந்தச் சமூக அமைப்பில், தமது இறப்புக்குப் பிறகும், தாம் கொடுத்திருந்த வாக்கைக் காப்பாற்ற வேண்டுமெனப் பிள்ளைகளிடம் சொல்லி வைத்துச் சென்றிருக்கிற ஒரு மகத்தான மனிதரை நினைக்க நினைக்க, அன்னாரைக் குறித்த பெருமித உணர்வுப் பெருக்கு மேலிட்டுக்கொண்டே வருகின்றது. 

வாழ்கின்ற காலம் முழுமையும் தமிழ்ச் சமூகம் குறித்த அக்கறைப்பாடுகளுடன் ஆய்வுப் பணிகளையும் சமூகப் பணிகளையும் மேற்கொண்டு வந்த ஆய்வறிஞர் குமரி மைந்தன் அவர்கள், கடந்த 3.6.2021இல் மறைந்துவிட்டார். ஆனாலும், தமது மறைவுக்குப் பின்பாகவும் தாம் சேர்த்து வைத்திருந்த அறிவுச் செல்வம் மற்றவர்களுக்கும் பயன்படவேண்டும் என்றே நினைத்திருந்தார். அதற்குண்டான ஏற்பாடுகளையும் செய்துவிட்டே போயிருக்கிறார். 

முகநூலில் நிறைய புதிய கருத்துகள், விவாதங்கள், தரவுகள், செய்திகள் என அவரது கண்ணோட்டங்களைப் பகிர்ந்து கொண்டே இருப்பார். அவரது கருத்துகளில் சிற்சில விவாதத்திற்கு உரியவை என்றாலும், தமிழ்ச் சமூக அக்கறையோடு வெளிப்படும் அக்கருத்துகள் தமிழ்த் தேசிய அரசியல் உரையாடல்களுக்கும் விவாதங்களுக்கும் ஒரு திறப்பை ஏற்படுத்தக் கூடியவையாகவே இருந்து வந்தன. எமது ஆய்வுக் கட்டுரைகளுக்கான தரவுகள் பல அன்னாரது பதிவுகளிலிருந்தும் எடுத்தாண்டிருக்கிறேன். பல்வேறு இதழ்கள், நூல்கள், தோழர்கள் மூலமாக அய்யாவைக் குறித்த அறிமுகம் இருந்தாலும், முகநூல் வழியாகவே அய்யாவுக்கும் எமக்குமான அறிமுகமும் நட்புறவும் கிடைத்தன. எமது எழுத்துச் செயல்பாடுகளையும் எம்மையும் குறித்து முகநூல் வாயிலாகவே அய்யாவும் அறிந்து வைத்திருந்தார். 

கடந்த சனவரி மாதத்தில், உலகத் தமிழ்க் கழகத்தின் ஆட்சிக்குழுக் கூட்ட நிகழ்வானது எமது நிமிர்வகத்தில் உள்ள செம்பச்சை நூலக அரங்கில் நடைபெற வேண்டுமென உலகத் தமிழ்க் கழகத் தலைவர் அய்யா நிலவழகன் அவர்கள் வழிகோலியிருந்தார். செம்பச்சை நூலகத்திற்கு வருகை தந்திருந்த அய்யா நிலவழகன் அவர்கள், நூலக அமைப்பாக்க முயற்சிகளைப் பார்த்துவிட்டு உளமகிழ்ந்து ஒரு சேதியைப் பகிர்ந்தார். 

குடும்பமே இணைந்து செய்திடும் உங்களது நூலகப் பணியும் நோக்கமும் வியக்க வைக்கிறது. எம்மிடமிருந்தும், எமக்குத் தெரிந்த நண்பர்களிடமிருந்தும் செம்பச்சை நூலகத்திற்கான உதவிகள் கண்டிப்பாகக் கிடைக்கும் தம்பி என்றார். அதன்படியே, ஒருநாள் இராசபாளையத்திலிருந்து குமரி மைந்தன் அய்யா அவர்களோடு உடன் இருந்து கொண்டு அழைத்தார் நிலவழகன் அய்யா அவர்கள். 

தம்பி, உங்ககிட்ட குமரி மைந்தன் அய்யா பேசணும்னு சொல்லுதாக என்றபடியே அவரிடம் செல்பேசியைக் கொடுத்தார். 

வணக்கம் தம்பி. உங்களப் பத்தி நிலவழகன் நிறைய சொன்னார். நீங்க வைத்திருக்கிற நூலகம் பத்தியும் சொன்னார். எம்மகிட்ட இருக்கிற புத்தகங்கள உங்க நூலகத்துக்குத் தாரேன். கூடிய விரைவா வந்து எடுத்துட்டுப் போங்கள் என்று மிக நிதானமாகப் பேசி வைத்துவிட்டார்.

இரண்டொரு வாரம் கழித்து குமரி மைந்தன் அய்யாவே அழைத்தார். வாரமுண்டு சொன்னீங்க தம்பி, எப்ப வருவீங்க என்று கேட்டார். தேர்தல் பணி ஒதுக்கீடு செய்திருப்பதால், தேர்தல் முடிந்தவுடனே வருகிறேன் அய்யா என்று சொல்லி வைத்திருந்தேன். தேர்தல் முடிந்திருந்த தருவாயில், ஒருநாள் கிளம்பி வருகிறேன் அய்யா என்று சொன்னபோது, நேற்றுதான் மகன் வீட்டுக்கு வந்தேன் தம்பி. இராசபாளையம் வந்தவுடன் அழைக்கிறேன் என்றார். அதேபோல, ஓரிரு வாரம் கழித்து வந்தவுடன் அழைத்தார். ஊரடங்கு காரணமாய் சரக்கு வாகனத்தில் போய்வர முடியாத சூழலில் இருந்தேன். அன்னாரும் தாம் உயிருடன் இருக்கும்போதே தமது நூல்களை எல்லாம் செம்பச்சை நூலகத்திற்குக் கொடுத்துவிட வேண்டும் என்றிருந்தார். அதை நிறைவேற்றாமலே, காலம் அவரை அழைத்துக்கொண்டது. அன்னாரது மறைவு எமக்குப் பெருந்துயரைத் தந்தது. அவர் அழைக்கும் போதெல்லாம் நாம் போய் வர முடியாமல் போயிற்றே என்ற குற்றவுணர்வும் ஏமாற்றமும் கவ்விக் கொண்டிருந்தன. 

நேற்று, இராசபாளையத்திலிருந்து நிலவழகன் அய்யா பேசினார். தம்பி, குமரி மைந்தன் அய்யாவோட புத்தகங்கள வண்டியில ஏத்திக்கிட்டு, அவரோட பையன் வாராரு. இன்னும் ரெண்டு மணி நேரத்துல ஒங்க ஊருக்கு வந்து சேர்ந்துருவாங்க என்ற செய்தியைச் சொன்னவுடன், எம்மால் என்ன செய்வதென்றும் சொல்வதென்றும் தெரியவில்லை. 

சொன்னவாறே, ஒரு குட்டியானை சரக்கு வாகனம் 20க்கும் மேற்பட்ட பெரிய பெரிய அட்டைப்பெட்டிகளுடன் வீடு வந்து சேர்ந்தது. கூடவே, குமரி மைந்தன் அய்யாவின் மகனும் வந்திருந்தார். 

அய்யாவின் மகனார் திரு செல்வம் அவர்களுடன் நானும் குடும்பத்தாரும் அறிமுகமாகிக் கொண்டோம். அய்யாவின் மறைவு குறித்த இரங்கலைப் பகிர்ந்து கொண்டிருந்தபோது, அவரது கடைசி ஆச இதுவாத்தான் இருக்கும். தங்கிட்ட இருக்கிற புத்தகங்கள தேனில இருக்கிற தம்பிகிட்ட கொண்டுபோய் சேக்கணும். வாரமுண்டு சொல்லி இருக்கார். அதுக்குள்ள, தனக்கு ஏதாவது ஆச்சென்றால், அந்தப் புத்தகங்கள நீ கொண்டுபோய் சேத்திடுனு சாகப் போறதுக்கு முன்னால சொல்லி இருந்தார். அப்பாவோட கடைசி ஆசய நிறைவேத்திட்டேன் என்று கண்கள் கசியச் சொன்னபோது, எமது கண்களும் கசிந்துவிட்டன. 

கிட்டத்தட்ட முக்கால் நூற்றாண்டாகத் தாம் சேர்த்து வைத்திருந்த பல்லாயிரக் கணக்கிலான தமிழ் நூல்கள், ஆங்கில நூல்கள், பல்வேறு இதழ்கள், அவரது காலம் முழுவதற்கும் எழுதிய ஆய்வுக் கட்டுரைகள், நாட்குறிப்பேடுகள், ஆய்வுக் குறிப்புகள், பலருக்கும் எழுதிய கடிதங்கள், அய்யாவுக்கு வந்திருந்த கடிதங்கள், தமிழ்ச் சமூகம், அரசியல், பண்பாடு, பொருளியல் பற்றிய ஆவணங்கள், அய்யாவே மொழிபெயர்த்த கட்டுரைகள், கலைச்சொல்லாக்கங்கள், அய்யா எழுதிய நூல்கள் என, அய்யாவிடம் இருந்த அறிவுக் களஞ்சியம் யாவற்றையும் செம்பச்சை நூலகத்திற்குக் கொண்டுவந்து சேர்த்துவிட்டார் திரு செல்வம் அவர்கள். 

அய்யாவோட ஆத்மாவக் கொண்டுவந்து கொடுத்திருக்கீங்க. எமது காலத்திற்குப் பிறகும் எமது பிள்ளைகள் அதைப் பாதுகாப்பாங்க. அய்யாவோட மறைவுக்குப் பிறகும், அய்யாவின் புகழை இந்த நூல்கள் காலங்காலமாய்ப் பல தலைமுறைக்கும் பேசும் என்று அவரது கைகளைப் பற்றியவாறு சொன்னபோது, அவரது கண்களில் இருந்து வந்த அந்த நம்பிக்கை ஒளியை எம்மால் உணர முடிந்தது. அப்பாவின் கடைசி ஆசையை நிறைவேற்றியதாய் மனநிறைவோடு விடைபெற்றுச் சென்றிருக்கும் திரு செல்வம் அவர்களது இந்த உதவியும் கொடையும் எம் வாழ்வில் மறக்க முடியாதவை. 

ஒரு மனிதர், வாக்குக் கொடுத்ததை இறப்புக்குப் பின்பும் நிறைவேற்றி இருப்பதையும், ஒரு தகப்பனின் கடைசி ஆசையை அவரது மகனார் நிறைவேற்றி இருப்பதும், செத்தும் கொடை கொடுத்த வள்ளல்கள் பட்டியலில் குமரி மைந்தன் அய்யா அவர்களையும் சேர்த்திட வைத்திருக்கின்றன. அவ்வகையில், செம்பச்சை நூலகத்திற்கு நூல்கள் கொடை அளித்த குமரி மைந்தன் அய்யாவின் புகழ் நீடு வாழும். 

குமரி மைந்தன் அய்யாவின் கொடை நூல்களால் செம்பச்சை நூலகம் இன்னும் பல சிறப்புகளைப் பெற்றிருக்கிறது. மிக மிகப் பழமையான முக்கியமான பல நூல்கள், இதழ்கள், கட்டுரைகள், ஆய்வுகள் என மறுபதிப்பு செய்ய வேண்டிய நூல்கள் நிறைய இருக்கின்றன. கல்வியாளர்கள், ஆய்வாளர்கள், ஆய்வு மாணவர்களுக்குரிய பல்வேறு ஆய்வுப் பொருண்மைகளுக்கான தரவுகள் அய்யாவின் நூல் சேகரிப்பில் இருக்கின்றன. பதிப்பாளர்கள், ஆய்வு மாணவர்கள் இவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம். குமரி மைந்தன் அய்யா அவர்கள் எழுதிய ஆய்வுக் கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள் பலவும் அச்சு நூலாக்கம் செய்யாமல் கையெழுத்துப் படிகளாகவும் ஒளியச்சுப் படிகளாகவும் நிறைய இருக்கின்றன. அய்யாவின் ஆய்வுகளை நூல் பதிப்பு செய்து வெளியிட வேண்டியவை நிறைய இருக்கின்றன. பதிப்பாளர்கள் முன்வந்தால், செம்பச்சை நூலகம் உதவிடக் காத்திருக்கிறது. 

செம்பச்சை நூலகத்திற்கு நூல்களைக் கொடையளித்த குமரி மைந்தன் அய்யாவின் பேருள்ளத்தை நன்றியுடன் எப்போதும் நினைவுகூறும் செம்பச்சை நூலகம்.

அய்யாவின் கொடை நூல்களைக் கொண்டுவந்து சேர்த்து அறம் செய்திருக்கும் திரு செல்வம் அவர்களுக்கும் அன்னாரது குடும்பத்தாருக்கும் என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறது செம்பச்சை நூலகம். இவற்றை ஆற்றுப்படுத்திய நிலவழகன் அய்யாவின் பங்களிப்புக்கும் மிகுந்த நன்றியுடைத்தவர் ஆவோம்.

*

தமிழகப் பொதுப்பணித் துறையில் பொறியாளராகப் பணி செய்து, விருப்ப ஓய்வு பெற்றவர். தமது வாழ்நாளின் பெரும்பகுதியை வரலாற்று ஆய்வு மற்றும் எழுத்துப்பணியில் செலவு செய்தவர் அய்யா குமரி மைந்தன். 

கிட்டத்தட்ட அய்ம்பதாண்டு காலமாக மேற்கொண்டுவந்த அவரது ஆய்வு மற்றும் எழுத்துப் பணியில் இருபதுக்கும் மேற்பட்ட புத்தகங்களையும் சில மொழிப்பெயர்ப்புகளையும் நூல்களாக வெளியிட்டுள்ளார். 

தமது இறுதிக்காலம் வரை ஆராய்ச்சி, எழுத்து, முகநூல் விவாதங்கள் என மிக உயிர்ப்போடு செயல்பட்டு வந்தார். 

தொடக்கத்தில் திராவிடக் கருத்தியலிலும், பின்னர் தமிழ்த் தேசியச் சிந்தனைத் தளத்திலும் செயல்பட்டு வந்தார். சில அமைப்புகளையும் நடத்திய அன்னாரின் குறிக்கோள்களுள் முதன்மையானவை, தமிழக மக்களின் பொருளியல் உரிமைகளை மீட்பது, சாதியம் உள்ளிட்ட காலத்துக்கு ஒவ்வாத மாந்தத் தன்மையற்ற பண்பாட்டுக் கூறுகளை உடைத்தெறிந்து, உண்மையான மக்களாட்சிப் பண்புகளை நிலைநிறுத்துவது, குமரிக் கண்டம் தொடங்கி தமிழக மக்களிடம் மறைந்து கிடக்கும் பண்டைய வரலாறுகளை மீட்பது போன்ற கருத்தியல் தளங்களில் தீவிரமாக இயங்கியவர். 

மொழி ஞாயிறு பாவாணரின் குமரிக்கண்டக் கொள்கைகளை மெய்ப்பிக்கும் தரவுகளைத் தந்தவராகவும், மக்களின் தற்சார்புப் பொருளாதாரத்தை வலியுறுத்திய பொதுவுடைமையாளராகவும் திகழ்ந்தவர். பஃறுளி முதல் வையை வரை, விளைப்பு உறவுகளும் குமுக உறவுகளும், தமிழகச் சமூக வரலாறு, நலிந்துவரும் நாட்டுப்புறம், சாதிகள் ஒழிய..., குணாவின் திராவிடத்தால் வீழ்ந்தோம் பற்றிய குறிப்புகள், மார்க்சியம் ஒரு பட்டறிவுப் பார்வை, இந்திய வரலாற்றில் புராணங்கள்-இலக்கியங்கள்-வானியல், தமிழகத் தேசிய அரசியல், தேசியம் வெல்லும், சோசலிச நடப்பியமும் இன்றைய இலக்கிய நிகழ்முறையும், பாழ்பட்டுக் கிடக்கும் தமிழகக் கடற்கரை, இராமர் பாலப் பூச்சாண்டி போன்ற நூல்களை எழுதி தமிழக மக்கள் பொருளியல் கழகம் மூலம் வெளியிட்டவர். 

தமிழ் மொழி-இனம்-பண்பாடு மீட்சிக்கான விழிப்புணர்வையும், வெளிச்சத்தையும் காட்டியவர் அய்யா குமரி மைந்தன் ஆவார். அவரது மறைவிற்கு எமது ஆழ்ந்த இரங்கலையும், வீர வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு, செம்பச்சை நூலகத்திற்குப் பல்லாயிரக் கணக்கில் நூல்களைக் கொடையளித்துள்ள அறப்பண்புக்கும் புகழ் வணக்கத்தையும் நன்றிப் பெருக்கையும் தளுகையாகப் படைக்கிறோம். 

நன்றியுடன்..

முனைவர் ஏர் மகாராசன்,

அம்சம்,

அங்கவை யாழிசை, 

அகரன் தமிழீழன்

#செம்பச்சை_நூலகம்

#நிமிர்வகம்

28.06.2021

*

#குமரிமைந்தன் அய்யா புகழ் 

நீடு வாழ்க.

வெள்ளி, 25 ஜூன், 2021

சொல்லேர் உழவின் முன்னத்தி ஏர்



சிறு வயதுக் காலங்களில், வயக்காட்டில் அப்பா உழும்போதெல்லாம் உழவுச் சாலுக்குப் பின்னாலே ததக்குப் பொதக்கென போய்க்கொண்டே இருப்பேன். அந்த மேழியைப் பிடித்து ஒரு சாலடித்து வரவேண்டும் என்ற ஆசை இருக்கும் அப்போது.

மூனு நாலு சால் சுத்தி வந்ததுக்கப்புறமா, மேழி மேல கைய வைக்கச் சொல்லி அழுத்திப் பிடித்துக் கொண்டு கூடவே வருவார் அப்பா.

காலம் பூரா இப்படியே ஏரப் பிடிச்சி உழுதுக்கிட்டுத் திரியனும்னு நெனைக்காத தம்பி. நிலமே கதினு வம்படியா கெடக்கிறது எங்க காலத்தோட போகட்டும். மழ தண்ணி இல்ல; நாம வெள்ளாம செஞ்சத வரவு செலவு பாத்து விக்க முடியல; நம்மகிட்ட அடிமாட்டு விலைக்கு வாங்கிட்டுப் போயி விக்கிறவன் காசு பணம்னு சம்பாதிக்கிறான். நாமதான் ஒழச்சு ஒழச்சு ஒன்னுமில்லாமக் கெடக்கொம். ஊருக்குச் சோறு போடுறம்னு நாமதான் பெருமையா நெனைக்கிறோம். ஒரு பயலும் நம்மள மதிக்கவும் மாட்டான். உழுகனும்னு ஆச இருந்தா, போயி படிச்சி ஆளாகி, நாலு பேரு படிக்கிற மாதிரி நீயும் எதாவது எழுது. ஒன்னோட எழுத்த இந்த ஒலகம் படிக்கிற மாதிரி எழுது. அதுவும் உழவுதான் தம்பி என்று அப்பா சொல்லிக்கொண்டே வந்த அந்தச் சொற்கள்தான் என் சொல்லேர் எழுத்துகளுக்கான முன்னத்தி ஏர்.

வில்லேர் உழவு மரபின் மேழி பிடித்த கைகளால், சொல்லேர் உழவு மரபில் பயணிக்கிறேன். நிலம் சார்ந்த பண்பாட்டு மரபுகளையும் அடையாளங்களையும் சொல்லேர் எழுத்துழவாய் உழுது போகும் என் ஆய்வுகள், நிலம் பற்றியும் நிலத்தில் தவித்த-தவிக்கும் மக்களைப் பற்றியும் கிளரிக்கொண்டேதான் இருக்கும்.

ஏர் மகாராசன்

25.06.2021

வெள்ளி, 11 ஜூன், 2021

சுளுந்தீ நூலுக்கான எதிர்ப்பரசியல் - அம்பலமாகும் உள்ளடி வேலைகள் : மகாராசன்.




இந்த நிலத்தில் வந்து குடியேறிய வேற்றினத்தவர்களின் ஆக்கிரமிப்பை எதிர்த்து நின்ற பூர்வக்குடித் தமிழர்களை, அதிகாரத்தின் பலத்தால் குல நீக்கம் - குல விலக்கம் செய்து, கொத்துக் கொத்தாகப் படுகொலை செய்து, அவர்களிடமிருந்த பெருவாரியான உழவு நிலங்களை வலுக்கட்டாயமாகப் பறித்துக்கொண்ட வரலாற்று நிகழ்வுப் போக்கும்கூட பாசிசம்தான்; காலனியம்தான்; நவ பிரம்மதேயம்தான். இந்தப் பின்புலத்தைக் குறித்து யாரேனும் பேச முனைந்தால், அது இனவாதம்; பாசிசம் என்று முத்திரை குத்தி ஒதுக்குவதும் தனிமைப்படுத்துவதும் காயடிப்பதுமாக இருந்து வந்த நுண் அரசியல், இப்போது வெளிப்படையான பகிரங்க அரசியலாகவும் மிகத் தீவிரமாக முன்னெழுந்து வருகின்றது. இந்தச் சூழ்நிலையில், இந்த மண்ணின் பூர்வக்குடித் தமிழர்கள் எவ்வாறு வஞ்சிக்கப்பட்டார்கள்; நிலங்களை எவ்வாறு இழந்தார்கள்; அதிகாரத்தை எப்படி இழந்தார்கள்; தற்சார்பான வாழ்வை எவ்வாறு கட்டமைத்திருந்தார்கள்; பூர்வ அடையாள மரபுகளையும் அறிவையும் எப்படி இழந்தார்கள்; வந்து குடியேறியவர்களின் ஆக்கிரமிப்புக்கு எதிராக எப்படிப் போராடினார்கள்; வந்து குடியேறியவர்கள் யார் யார்; அவர்களின் ஆக்கிரமிப்பும் அதிகாரமும் என்ன சாதக பாதகங்களை உருவாக்கின. அவர்களின் நவ பிரம்மதேயங்களின் கட்டமைப்பு என்ன என்பதைக் குறித்தெல்லாம் புனைவின் வழியான வரலாற்றை மிக விரிவாக ஆழமாக நேர்மையாகப் பேசிய ஒரே நூல் இரா.முத்துநாகு எழுதிய சுளுந்தீ நூல் மட்டுமே. 

ஒரு பெரிய நூல் மக்கள் இலக்கியமாக வாசிக்கப்பட்டும் அறிமுகப்படுத்தப்பட்டும் கொண்டாடப்பட்ட நூல் சுளுந்தீயாக மட்டுமே இருக்க முடியும். மிகக் குறுகிய காலத்திற்குள் 5 பதிப்புகளைக் கண்டிருக்கும் இந்த நூல், பெருவாரி வாசகர்கள், ஆய்வாளர்கள், படைப்பாளிகள் போன்றோரால் பாராட்டையும் பெற்றிருக்கிறது. பெருவாரி மக்கள் வாசிப்புக்கு உள்ளான பேரிலக்கியமாகக் கொண்டாடப்பட்டிருப்பதே சுளுந்தீ நூலுக்கான மிகப்பெரிய அங்கீகாரம்; விருதும்கூட.

சுளுந்தீ நூலின் முக்கியத்துவத்தைப் படித்தறிந்த பலரும் உயரிய விருதுக்குரிய நூலாகப் பரிந்துரைக்கவும் செய்திருக்கின்றனர். அண்மையில், இலக்கியத்திற்கான இந்திய அரசின் உயரிய விருதுக்கான தெரிவுக் குழுவில் இருந்த பலரும், அவர்கள் பரிந்துரைத்த இறுதிப்பட்டியலில் சுளுந்தீ நூலையும் தெரிவு செய்திருக்கிறார்கள். இதற்கிடையில், சுளுந்தீ நூலானது பூர்வக் குடித் தமிழர்களின் அரசியலைப் பேசுகிறது என்றும், வந்து குடியேறிய வேற்றினத்தவர்களின் அதிகார அரசியலை அம்பலப்படுத்துகிறது எனவும், பிராமணர்களைக் கொச்சைப்படுத்துகிறது எனவும் கூறி, வேற்றினத்தவர்களும் பிராமணர்களும் ஒன்றுகூடி சுளுந்தீ நூலுக்கான எதிர்ப்பரசியலை மிகக் கமுக்கமாக நிறைவேற்றி இருக்கிறார்கள். சுளுந்தீ நூலை விருதுக்கான இறுதிப் பட்டியலுக்குப் பரிந்துரைத்திருந்த சூழலில், ஒரு வேளை, சுளுந்தீ நூல் விருதுக்குரிய நூலாகத் தெரிவு செய்து அறிவிக்கப்பட்டுவிட்டால், சுளுந்தீ முன்வைத்திருக்கும் அரசியல் இன்னும் அதிகமாகப் பேசவும் விவாதிக்கப்படவும் கூடும்; அது, வந்து குடியேறியவர்களின் அதிகாரச் சூழ்ச்சி அம்பலப்பட்டுப்போகும் என்பதறிந்து பதைபதைத்துப்போன வேற்றின- பிராமணக் கூட்டத்தின் அறிவுசீவிகள் பலரும் சுளுந்தீக்கான நுண் எதிர்ப்பை அரங்கேற்றி இருக்கிறார்கள். தெரிவுக் குழுவினரால் இறுதிப்பட்டியல் தயாரிக்கப்பட்டு அனுப்பப்பட்ட பின்னரும்கூட, சுளுந்தீ நூலை விருதுக்கு மட்டுமல்ல; இறுதிப்பட்டியலில்கூட இடம்பெறாத வகையில் மறு பட்டியல் தயாரிக்க வைத்திருக்கிறார்கள். பூர்வக்குடித் தமிழர்கள் மீது மட்டுமல்ல; பூர்வக்குடித் தமிழர்களின் வரலாற்றின் மீதும் வெறுப்பையும் காழ்ப்பையும் பகையும் கொண்ட வேற்றின பிராமண அறிவுசீவிகளால் உள்ளடி வேலைகள் பார்க்கப்பட்டு சுளுந்தீ நூலை ஒதுக்கலுக்கு உள்ளாக்கி இருக்கிறார்கள். சுளுந்தீ நூலுக்கு விருது கொடுக்காததைப் பற்றியோ அல்லது வேறு வேறு நூல்களுக்கு விருதுகள் கொடுப்பதை/கொடுத்ததைப் பற்றியோ எவ்வித வருத்தமும் காழ்ப்பும் இல்லை. ஏதாவது ஒரு நூலுக்கே விருதும் வழங்கப்பட முடியும். விருதுக்குரிய தகுதியான நூலுக்குத்தான் வழங்கி இருக்க முடியும் அல்லது ஒரு நூலின் பேரைச்சொல்லி அந்தப் படைப்பாளியைக் கவுரவிக்க விருது அளித்திருக்க முடியும். பாவேந்தர், புரட்சிக் கவிஞர் என்றெல்லாம் கவிதைத்திறனுக்காகப் பாராட்டப் பெற்ற பாரதிதாசனுக்கு, கவிதை நூலுக்காக சாகித்ய அகாதமி விருது கொடுக்கப்படவில்லை. அவர் எழுதிய பிசிராந்தையார் எனும் நாடக நூலுக்கே விருது கொடுத்தார்கள். இப்படி நிறைய சான்றுகள் உண்டு. ஒவ்வோர் ஆண்டும் ஒரு படைப்பாளிக்கே விருதளிக்க இயலும் என்பதால், யாராவது ஒருவர் அந்த விருதைப் பெறுவதில் மகிழ்ச்சிதான். அதேவேளையில், சுளுந்தீ நூலை விருதுக்கான இறுதிச்சுற்றுக்குப் பரிந்துரைத்து அனுப்பப்பட்ட பட்டியலை நிராகரிக்கச் செய்து, வேறு ஒரு பட்டியலை தெரிவுக் குழுவினருக்கு அப்பாற்பட்ட இன்னொரு குழுவினர் தயாரிக்கச் செய்து, அதில் சுளுந்தீ இடம்பெறாமல் பார்த்துக்கொண்டார்கள் எனில், அவர்களது தமிழர் விரோத அரசியலின் வன்மம் மிகக்கொடூரமாகவேதான் இருக்கும். தமிழர் விரோத அரசியலை உள்ளீடாகக் கொண்டிருக்கும் வேற்றின-பிராமணக் கூட்டின் சதிவேலைகள் சுளுந்தீ நூலுக்கான எதிர்ப்பரசியலைச் செய்திருக்கிறது. தமிழர் விரோத சக்திகள் சுளுந்தீ நூலை எதிர்க்கிறது எனில், சுளுந்தீ நூல் தமிழர் அரசியலையே உள்ளீடாகக் கொண்டிருக்கிறது என்றே பொருள். அந்தவகையில், சுளுந்தீ நூலை தமிழர் விரோத சக்திகள் எதிர்த்தாலும், தமிழர்கள் ஆதரிக்கவே செய்வார்கள்; கொண்டாடவே செய்வார்கள். இதை காலமும் களமும் வரலாற்றில் நிகழ்த்திக் காட்டும். 

ஏர் மகாராசன்