தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித் துறையால் வடிவமைக்கப்பட்ட ஒன்பதாம் வகுப்பிற்கான புதிய தமிழ்ப் பாடத்திட்டத்தில் ஏறு தழுவுதல் குறித்த கட்டுரை ஒன்று இடம்பெற்றுள்ளது.
ஒன்பதாம் வகுப்பு பயிலும் எனது மகள், அக்கட்டுரையைப் படித்து விட்டு, 'அப்பா, இது நீங்க எழுதின ஏறு தழுவுதல் புத்தகத்துல எழுதியிருக்கிற செய்திகளா இருக்கு. நீங்களா இந்தக் கட்டுரைய எழுதினீங்க? என்று கேட்டார். நானும் அந்தக் கட்டுரையைப் படித்துப் பார்த்தேன்.
நான் எழுதிய 'ஏறு தழுவுதல்: வேளாண் உற்பத்தியின் நிகழ்த்துப் பண்பாடும் வரலாறும்' என்ற நூலில் விவரிக்கப்பட்ட செய்திகளே அந்தக் கட்டுரையில் நான்கு பக்க அளவில் சுருக்கிச் சொல்லப்பட்டுள்ளன. எனது நூலில் உள்ள சில பல பத்திகளும் கூட அப்படியே இடம்பெற்றுள்ளன. இளந்தலைமுறை ஏறு தழுவுதல் பண்பாட்டை அறிந்து கொள்ள வேண்டும் என்கிற பொது நோக்கில் இந்தக் கட்டுரை பாடப்புத்தகத்தில் கொண்டு வந்திருப்பது பாராட்டுக்கும் மகிழ்ச்சிக்கும் உரியது தான். ஆயினும், அந்தக் கட்டுரையில் ஓரிடத்தில் கூட எனது நூலின் பெயரோ அல்லது எனது பெயரோ இடம் பெற்றிருக்கவில்லை. எனது நூல் என்றில்லாவிட்டாலும், அந்தக் கட்டுரைக்கான தரவுகள் எந்த நூலில் இருந்து எடுத்தாளப்பட்டுள்ளன என்கிற குறிப்புகளாவது இடம் பெற்றிருக்க வேண்டும்.
பாடத்திட்ட உள்ளடக்கம், வடிவமைப்பு போன்றவை மேம்பட்ட நோக்குகளோடு அமைந்திருக்கிற நிலையில், ஒரு கட்டுரைத் தரவுக்கான பார்வை நூல்கள் எவையெனக் குறிப்பிடாமல் இருப்பது ஆய்வு முறையியலைக் கேள்விக்கு உள்ளாக்கக் கூடும். இந்தக் குறைபாட்டை மறுபதிப்பு செய்கிற போது சரி செய்திட வேண்டியது பாடத்திட்ட வல்லுநர்களின் கடமையாகும். குறைந்தளவு, பார்வை நூலாகக் கூடக் குறிப்பிடலாம்.
ஏறு தழுவுதல் பண்பாடு பன்னெடுங்காலமாய் நிகழ்த்தப்பட்டு வந்து கொண்டிருந்தாலும், அந் நிகழ்த்துப் பண்பாட்டைக் குறித்துச் சொல்லிக் கொள்ளும்படியாகத் தமிழில் நூல்கள் வெளிவந்திருக்கவில்லை. இந்தச் சூழலில் தான், தோழர் பாவெல் பாரதி அவர்கள் தொகுத்தளித்த ஏறு தழுவுதல் - சல்லிக்கட்டு : தொன்மை பண்பாடு அரசியல் எனும் தொகுப்பு நூல் கருத்துப் பட்டறைப் பதிப்பக முயற்சியால் வெளிவந்தது.
அதே வேளையில், ஏறு தழுவுதல் பண்பாட்டைக் குறித்து வரலாற்றுப் பொருள் முதல்வாத அடிப்படையில் விளக்கப்படுத்தும் நூல் தமிழில் வெளிவந்திராத சூழலில், அத்தகையக் கண்ணோட்டத்தில் நான் எழுதிய நூலே ஏறு தழுவுதல்: வேளாண் உற்பத்தியின் நிகழ்த்துப் பண்பாடும் வரலாறும் என்கிற நூலாகும்.
ஏறு தழுவுதல் பண்பாட்டுக்கு இந்திய அரசு தடை விதித்திருந்த நிலையில், அப்பண்பாட்டைக் குறித்து மிகையாகவும் எதிர்மறையாகவும் கருத்து வாதங்கள் நடந்துகொண்டிருந்த நிலையில், அப் பண்பாட்டின் தோற்றம் குறித்தும், மனித சமூக உற்பத்தியில் அப்பண்பாட்டின் வகிபாகம் குறித்தும், நிலத்தோடு அப் பண்பாட்டிற்கு உள்ள தொடர்பு குறித்தும், குறிஞ்சி முல்லை மருதம் பாலை என்கிற நானிலம் சார்ந்த மக்களோடு அப் பண்பாட்டின் உறவு நிலைகள் குறித்தும் விளக்கப்படுத்தி வெளிவந்த நூலே அதுவாகும்.
2017 சனவரியில் நடைபெற்ற ஏறு தழுவுதல் பண்பாட்டு மீட்சிக்கான போராட்டத்தில் இந்நூலின் பகுதிகள் சமூக வலைத்தளங்களில் தீவிர வாசிப்புக்கு உதவியாக அமைந்தன. இந்நூல் அதே காலகட்டத்தில் அடவி பதிப்பகத்தால் அச்சு நூலாகவும் வெளிக்கொண்டு வரப்பட்டது.
ஏறு தழுவுதல் குறித்து வெளிவந்திருக்கும் நூல்களுள் நான் எழுதியதும், பாவெல் பாரதி தொகுத்த நூலும் மிக முக்கியமானவை.
ஆகவே, பாடத்திட்ட வல்லுநர்களும், பாடப்பகுதி எழுதக்கூடியவர்களும் கட்டுரைக்கான தரவுகளுக்கு உதவிய நூல்களைப் பற்றிய குறிப்புகள் தரப்படுதல் வேண்டும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இது, அக்கட்டுரைக்கான உரிமை கோரலோ, பாடத் திட்டக் குழு மீதான விமர்சனமோ அல்ல. ஏறு தழுவுதல் பண்பாட்டைக் குறித்து இளந்தலைமுறை மாணவர்களின் அதிகப்படியான தேடலுக்கு உதவுக் கூடும் என்பதாலேயே.
பிற்குறிப்பு:
தமிழ்ப்பாட நூலுக்கு ஏறு தழுவுதல் பற்றிய கட்டுரையை எழுதிக் கொடுத்த ஆய்வறிஞர் இரெங்கையா முருகன் அவர்கள், நான் எழுதிய ஏறுதழுவுதல் நூலை அடிப்படையாக வைத்தே அந்தக் கட்டுரை எழுதியதாகவும், அந்தக் கட்டுரையில் எனது நூலைத்தான் பார்வை நூலாகக் குறிப்பிட்டதாகவும் தகவலைப் பகிர்ந்திருந்தார். கடைசியில், கட்டுரை எழுதிய அவரது பெயரும் இல்லை; நூலாசிரியர் எமது பெயரும் இல்லை. பாடநூல் வல்லுநர்களிடம் இதுபற்றிய முறையீட்டை முன்வைத்தாலும், எந்த மாற்றங்களும் நடைபெறவில்லை.
ஏர் மகாராசன்