திங்கள், 5 ஜூலை, 2021

விதைத்திருக்கிறேன்; முளைத்திருக்கிறது : மகாராசன்


விதைத்துக் கொண்டே இருங்கள். முளைத்தால் மரமாகட்டும்; இல்லையேல், மண்ணுக்கு உரமாகட்டும் என்பார் அய்யா நம்மாழ்வார். எமது கற்பித்தல் பணியில் தொடர்ந்தும் விடாமலும் விதைத்துக்கொண்டேதான் இருக்கிறேன். தேனி மாவட்டத்தில் தனியார் பதின்மப் (மெட்ரிக்) பள்ளிகளில் பணிபுரியும் முதுகலைத் தமிழாசிரியர்களுக்குப் புதிய தமிழ்ப்பாடநூல் தொடர்பாகப் பயிற்சியளிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆசிரியர்களிடமும் எப்போதும்போல விதைத்துவிட்டு வந்தேன். அவர்களிடமும் அது முளைத்துக் கொண்டிருப்பது அறிந்து நெகிழ்கிறேன்; மகிழ்கிறேன்.

அந்த ஆசிரிய நண்பர்களின் பதிவு வருமாறு: 

தேனியில் ஒரு பள்ளியில் புதிய பாடப் புத்தகத்திற்கான புத்தாக்கப் பயிற்சி நடந்தது. மற்றவர்களுக்கு எப்படியென்று தெரியவில்லை. எமக்கு ஒரு திருப்புமுனையாக இருந்தது. முதுகலை ஆசிரியர் தேர்வுக்குக்குத் தாங்கள் வழங்கிய வழிகாட்டுதல் வழியில் பயணித்துக் கொண்டிருப்போருக்கு, உங்கள் ஒவ்வொரு சொல்லின் பயன் எவ்வளவு என்று உணர்ந்து கொள்ளமுடியும். நான் உணர்கிறேன்; பயணிக்கிறேன். அதன் பயனை ஓராண்டில் என்னால் உணர முடிந்தது. 

என்னிடம் பெரும்பாலான நண்பர்கள் கேட்கும் கேள்வி இதுதான். நீங்கள் எப்படி தூய தமிழில் தொடர்ந்து பேசுகிறீர்கள் என்று. (குறிப்பாகத் தமிழ் ஆசிரியர்கள்) அவர்களிடம் நான் சொல்லும் பதில், மரியாதைக்குரிய மகாராசன் ஐயா நீங்கள்தான் என்பதை மார்தட்டிச் சொல்வேன். உங்களின் அன்றைய ஒருநாள் வகுப்பு நிறைய மாற்றங்களை உருவாக்கின. 

புத்தக வாசிப்பு ஆர்வம், நூல்கள் சேகரிப்பு, தேர்வுகளுக்குத் தயாராகும் முறை, மூலநூல் வாசிப்பு இன்றுவரை தொடர்கிறது. இதுவரை தங்களுடைய இல்லத்தில் நான்கு, ஐந்து முறை சந்தித்திருக்கிறேன். அப்பொழுது செம்பச்சை நூலகத்தைக் காணும் வாய்ப்பு கிட்டியது. அப்பொழுதும் தாங்கள் கடந்து வந்த பாதைகள், விடாமுயற்சிகள், வெற்றிக்கான வழிகாட்டுதல் அனைத்தும் கல்வெட்டுப் போல் மனதில் இன்றும் அழிக்க முடியாதவை. 

முன்பெல்லாம் வாழ்க்கையில் வெற்றி பெற்றுவிடலாமா என ஐயம் தொற்றிக்கொண்டே இருக்கும். ஆனால், இப்பொழுதெல்லாம் அப்படி இல்லை ஐயா. நூறு விழுக்காடு வெற்றி பெறுவோம் எனும் நம்பிக்கை உள்ளது. பெரும் மகிழ்ச்சி ஐயா, நன்றி.

திரு.பிரபு,

முதுகலைத் தமிழாசிரியர்,

வல்லி வரதராஜ் பதின்மப் பள்ளி, தேனி.

*

அந்த வகுப்பில் நானும் கலந்துகொண்டேன் என்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இப்படியொரு பதிவு அந்த வகுப்பில் கலந்து கொண்ட அனைவருக்கும் மகிழ்ச்சியைக் கொடுக்கும். அது மட்டுமின்றி, என்னைப்போன்ற அனைவருக்கும் மறக்கமுடியாத மறுக்கவும் முடியாத அருமையான நினைவுகளை பகிர்ந்து கொண்ட பிரபு ஐயா அவர்களுக்கும், தூங்கும் புலியைப் பறை கொண்டு எழுப்புவோம்; தூய தமிழரை தமிழ்கொண்டு எழுப்புவோம் என்ற வரிகளுக்கு இணங்க, தமிழோடு இரண்டறக் கலந்துள்ள மகாராசன் ஐயா அவர்களுக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துகள். தொடர்ந்து வழிகாட்டுங்கள் என்றும் உங்கள் வழியில் நாங்கள்.

திருமதி தனலட்சுமி,

துணை முதல்வர்,

பத்மா ராமசாமி பதின்மப் பள்ளி, தேனி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக