புதன், 4 மே, 2022

கல்வியை மாசுபடுத்தும் ஒலி மாசுபாடு: மகாராசன்

கொரானா பெருந்தொற்றுக் காலங்களில் நாட்டு மக்களின் வாழ்வியல், தொழில், பண்பாட்டு நடத்தைகள் பெரும் முடக்கத்திற்கும் நெருக்கடிக்கும் ஆளாகின. இதில் இளைய தலைமுறையின் எதிர்காலத்தோடு தொடர்புடைய கல்விச் செயல்பாடுகள் முற்றாகவே முடங்கிப் போயிருந்தன. பேரிடர்க் கால முடக்கத்திற்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், மாணவர் ஆசிரியர் உறவிலும், கற்றல் கற்பித்தல் நாட்டத்திலும் மிகப்பெரும் பின்னடைவுகள் ஏற்பட்டிருக்கின்றன. 

பெரும்பான்மை மாணவர்கள் நெறிபிறழ் நடத்தைகளோடும் அலட்சிய மனப்போக்கோடும்தான் வகுப்பறைகளுக்குள் இருந்தார்கள். இரண்டாண்டுகள் வீட்டிலிருக்கும்போது செல்பேசிப் பயன்பாடுகளில் மாணவர்கள் மூழ்கிப் போனதால் படிப்பில் முழுமையாகக் கவனத்தைச் செலுத்த முடியாமல் மாணவர்கள் தடுமாறுவதை அன்றாடம் காணமுடிந்தது. 

மிகக் குறுகிய காலகட்டத்திற்குள் அதிகமான பாடங்களை நடத்தி முடித்து, பல கட்டத் திருப்புதல் தேர்வுகளை நடத்தி, மாணவர்களின் விடைத்தாள்கள் திருத்தி முடித்து, இந்த வாரத்தில் செய்முறைத் தேர்வுகளும் நடத்தி முடிக்கப்பட்டிருக்கின்றன. 

கற்றல் கற்பித்தலில் பல நெருக்கடிகளையும் இடர்ப்பாடுகளையும் தாண்டியும் கடந்தும்தான் 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களைப் பொதுத்தேர்வு எழுதுவதற்குத் தயார்படுத்தியுள்ளனர் பள்ளி ஆசிரியர்கள்.

வரும் மே 5 ஆம் தேதியிலிருந்து 10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத்தேர்வுகள் நடைபெற உள்ளன. இதுமட்டுமல்லாமல், 1 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளி ஆண்டுத் தேர்வுகளும் இதே காலகட்டத்தில் தொடங்குகின்றன.

கடந்த 2 ஆண்டுகளாகப் கொரோனா கால நெருக்கடிகளையும், கற்றல் பின்னடைவுகளையும், கவனச் சிதறல்களையும் எதிர்கொண்டு வந்த பள்ளி மாணவர்கள், இந்தக் கல்வி ஆண்டுக்கான கற்றல் அடைவுகளுக்கான பொதுத்தேர்வுகளையும்/ஆண்டுத் தேர்வுகளையும் எழுதவுள்ளனர்.

இந்நிலையில்தான், மாணவர்கள் தேர்வு எழுதப் போகும் இதே காலகட்டத்தில்தான், தமிழ்நாட்டின் பெரும்பாலான ஊர்களில் ஊர்த் திருவிழாக்களும், கோயில் வழிபாட்டுத் திருவிழாக்களும் நடைபெற்று வருகின்றன.

இரண்டு ஆண்டுகளாக முடக்கத்தில் இருந்த சமூகப் பண்பாட்டு நடத்தைகள் யாவும், கொரோனா பேரிடர்க் காலத் தளர்வுகளுக்குப் பின்பு, இந்த ஆண்டுதான் மிகப்பெரிய அளவில் சமூகப் பண்பாட்டுக் கூடுகைக்கான சமூகக் களமாகத் திருவிழாக் களங்கள் மும்முரமாகத் தயார்படுத்தப்படுகின்றன.

இந்தத் திருவிழாக் காலங்கள், மனிதத் திரளின் பண்பாட்டு நடத்தைகளை உயிர்ப்பிக்கும் காலம்தான் என்றாலும், அத்தகையத் திருவிழாக் காலங்களில் அளவுக்கதிகமாகவும், அதிக சத்தங்களோடும் பயன்படுத்தப்படுகிற ஒலிபெருக்கிப் பயன்பாடுகள் மாணவர்களின் கவனச் சிதறலை ஏற்படுத்தும் மிக முக்கியக் காரணிகளுள் ஒன்றாகவும் இருக்கிறது.

கூம்புக் குழாய் ஒலிபெருக்கிகள் பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது என்றாலும், அத்தகையத் தடைகளையும் மீறித்தான் கூம்புக் குழாய் ஒலிபெருக்கிகளும், ஒலிபெருக்கிப் பெட்டிகளும் ஊர் முழுக்கக் கட்டப்படுகின்றன. நகர்ப்புறங்களில் இதுபோன்று கட்டப்படுவது குறைவுதான் என்றாலும், நகரங்கள் தவிர்த்த எல்லா ஊர்களிலும் இவ்வாறுதான் ஒலிபெருக்கிகள் கட்டப்படுகின்றன. 

காலை 5 மணி முதல் இரவு 10 மணிக்கும் மேலாகக் கூட அதிக சத்தத்துடன் காதுகள் கிழிய ஒலிபெருக்கிகளில் பாடல்கள் ஒலிபரப்பு செய்யப்படுவது எல்லா ஊர்களிலும் வழமையாகிக் கொண்டிருக்கிறது.

ஊர்த் திருவிழாக்கள் பெரும்பாலும் கோயில் வழிபாட்டோடு தொடர்புடையது என்றாலும், தெய்வ வழிபாட்டை அடிப்படை நோக்கமாகக் கொண்டிருந்த ஊர்த் திருவிழாக்கள் யாவும், இப்போது ஊர்த் தலைக்கட்டுகள்/சாதிகள்/ பங்காளிகள்/வகையறாக்களின் கவுரவத்தையும் ஆடம்பரத்தையும் பகட்டையும் பெருமிதத்தையும் காட்டிக்கொள்ளும் வகையில் மாறிப்போயிருக்கின்றன.

வண்ண வண்ண அலங்கார மின் விளக்குத் தோரணங்கள், மின்விளக்கு வரிசைகள், மின்கம்பங்கள் தோறும் ஒலிபெருக்கிகள் என, திருவிழா நிகழ்வை அறிவிக்கும் கருவிகளாய்ப் பயன்படுத்தப்படுகின்றன. இதோடு, தாரை தப்பட்டை, பட்டாசு வெடிகள் எனப் பலவும் சேர்ந்து கொண்டுள்ளன.

இந்தத் திருவிழாக்கள் மகிழ்வையும் கொண்டாட்டத்தையும் தருகின்றன என்றாலும், திருவிழாக்களில் பயன்படுத்தப்படுகிற ஒலிபெருக்கிகளும் பட்டாசு வெடிகளும் மாணவர்களின் நிகழ்காலக் கல்வியையும் எதிர்கால வாழ்வையும் சீர்குலைக்கும் தன்மையைக் கொண்டிருக்கின்றன என்பதை அந்தந்த ஊர் மக்களும், அரசும், காவல்துறையும், உள்ளாட்சிப் பிரதிநிதிகளும், சமூக ஆர்வலர்களும் இன்னும் உணர்ந்ததாகத் தெரியவில்லை.

இது பள்ளி மாணவர்களின் தேர்வுக்காலம். எல்லாக் கல்வி ஆண்டிலும் மார்ச்சு மாதத்தில் பொதுத்தேர்வுகள் நடந்து முடிந்துவிடும். இந்தக் கல்வி ஆண்டில் மட்டும்தான் தாமதமாகப் பள்ளிகள் திறக்கப்பட்டதால், மே மாதத்தில் பொதுத் தேர்வுகள் நடக்க உள்ளன. 

வழக்கம் போல எல்லா ஊர்களிலும் இது திருவிழாக் காலம்தான். இந்த ஆண்டு இது தேர்வுக்காலம் என்பதால், திருவிழாக்களே நடத்தக்கூடாது என்று கூறவும் கூடாது. அது மக்களின் பண்பாட்டு மனநிலைக்கு எதிரானதாக அமைந்துவிடக்கூடும். அதேவேளையில், திருவிழாக் காலத்தில் மாணவர்களின் தேர்வுக்காலமும் வருவதால், திருவிழா சமூக நடத்தைகளில்-திருவிழா நடைமுறைகளில் சில பல கட்டுப்பாடுகளையும் ஒழுங்குமுறைகளையும் கொண்டுவருவது மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு நல்லது.

ஓர் ஊர்த் திருவிழா என்பது குறைந்தது 4 நாட்களாவது நடைபெறுகின்றது. இந்த நான்கு நாட்களும் நாள் முழுக்க ஒலிபரப்பாகும் ஒலிபெருக்கிச் சத்தங்கள், தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களின் கவனத்தைச் சிதறடித்துச் சீர்குலைத்துப் படிப்பதற்குத் தடங்கல்களை ஏற்படுத்தக் கூடியவை என்பதை மாணவர்களின் கூற்றிலிருந்தே அறிந்து கொள்ள முடியும்.

அரசு பொதுத்தேர்வு எழுதவிருக்கும் 10,11,12ஆம் வகுப்பு  மாணவர்களுக்கு அண்மையில் இரண்டு திருப்புதல் தேர்வுகள் நடந்து முடிந்தன. அவ்விடைத்தாள்களைத் திருத்தியபோது, மிக நன்றாகப் படிக்கும் மாணவர்கள்கூட நன்றாகவும் முழுமையாகவும் தேர்வுகளைச் சரிவர எழுதியிருக்கவில்லை என்பதைக் காணமுடிந்தது. 

விடைத்தாள்களை மாணவர்களுக்கு வழங்கும்போது, ஏன் சரிவர விடைகள் எழுதவில்லை என அவர்களிடம் கேட்டபோது, பெரும்பாலான மாணவர்கள் சொன்ன ஒரே பதில், "படிக்க முடியலங்க அய்யா" என்பதுதான்.

ஏன்? என அவர்களிடம் கேட்டபோது,

"ஊர்ல திருவிழாங்கய்யா. மூனு நாளா ஒரே பாட்டுச் சத்தமா இருந்துச்சுங்கய்யா. படிக்கனும்னு புத்தகத்தத் திறந்து படிக்க முயற்சி செஞ்சாக்கூட படிப்புல கவனத்த செலுத்த முடியலங்கய்யா. அமைதியான சூழலே இல்லாம என்னேரமும் பாட்டுச் சத்தமா அலறிக்கிட்டு இருந்ததால, அந்தச் சத்தத்தத் தவிர வேற எதுக்குள்ளயும் கவனத்தச் செலுத்த முடியலங்கய்யா. ஒரே இரைச்சலும் சத்தமாவும் இருந்ததால, படிக்கிறதுல எங்களால கவனத்த செலுத்த முடியலங்கய்யா. எங்களால என்ன செய்யுறதுன்னே தெரியலங்க அய்யா" என்று வேதனையோடு கூறினார்கள்.

ஏற்கெனவே, கொரானா காலத்தில் கற்றலில் நாட்டமில்லாமல் - கற்பித்தல் கற்றலில் தொடர்ச்சி இல்லாமல் இருந்த மாணவர்கள் இப்போதுதான் படிப்பு வட்டத்திற்குள் வந்திருக்கிறார்கள்.

இரண்டு ஆண்டுகளாய் பொதுத்தேர்வு/ஆண்டுத் தேர்வு எதையும் எழுதவில்லை; எதிர்கொள்ளவும் இல்லை. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் மிகக் குறுகிய காலத்திற்குள் பொதுத்தேர்வு - ஆண்டுத் தேர்வு எனும் தேர்வு அனுபவத்தை எதிர்கொள்ள இருக்கின்றனர். 

இந்தச் சூழ்நிலையில், பொதுத்தேர்வு/ஆண்டுத் தேர்வு எழுதவிருக்கும் மாணவர்களின் படிப்புக்கு இடையூறாக- கவனச் சிதறல் ஏற்படுத்தும் கருவியாக இருக்கும் ஒலிபெருக்கிகளை, மாணவர்களின் தேர்வுக்காலமாக வந்திருக்கும் இந்தக் காலத்தில் மட்டுமாவது, ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தாமல் அல்லது அதிக அளவு சப்தங்களோடு அலறவிடாமல் மிகக் குறைவான நேரங்களில் மட்டும் ஒலிபரப்பு செய்து திருவிழாக்களைக் கொண்டாட முன்வருவதற்கு அனைத்துத் தரப்பினரும் முன்வரவேண்டும்.

ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தாமல் திருவிழாக்களைக் கொண்டாடுவது ஒன்றும் தெய்வக் குற்றமாக ஆகிவிடாது. எந்தத் தெய்வமும் ஒலிபெருக்கிகளை ஊர் முழுக்க அலரவிட்டுத்தான் கொண்டாட வேண்டும் என்று சொல்லியதாகவும் இல்லை. ஒலிபெருக்கிகள் இல்லாமல்தான் பன்னெடுங்காலமாகத் திருவிழாக்களும் கொண்டாடப்பட்டும் வந்திருக்கின்றன.

ஆகையால், திருவிழாக் காலங்களில் மாணவர்களின் தேர்வுக் காலமும் வருவதால், மாணவர்களின் கல்வியையும் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு, மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவும் வகையில், அவர்களின் படிப்பில் கவனச் சிதறலையும் இடையூறையும் ஒலி மாசுகளையும் ஏற்படுத்தாத வகையில், ஒலிபெருக்கி இல்லா திருவிழாக்கள் கொண்டாடுவதுதான் சாலச்சிறந்ததாக இருக்கும்.

திருவிழாக் காலங்களில் பயன்படுத்தப்படும் ஒலிபெருக்கிகளின் ஒலி மாசு, தேர்வுக்குப் படிக்கும் மாணவர்களின் தேர்வுக்காலத்தை மாசுபடுத்தக்கூடியதாகும்.

ஆகவே, மாணவர்களின் தேர்வுக்காலத்தையும், மாணவர்களின் எதிர்காலக் கல்வி வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு, தேர்வுகளுக்குப் படிக்கும் மாணவர்களின் படிப்புக்கு இடையூறு ஏற்படுத்தும் திருவிழாக் கால ஒலிப்பெருக்கிப் பயன்பாட்டை தேர்வுக்காலம் முடியும் வரையிலும் நிறுத்திவைக்கவும்- ஒலிபெருக்கிப் பயன்பாட்டைத் தடைசெய்யவும்கூடச் செய்யலாம். அல்லது, ஒலி அளவைக் குறைத்து, கூம்புக்குழாய் ஒலிபெருக்கிகளைத் தவிர்த்து, ஊர் முழுக்க ஒலிபெருக்கிகள் கட்டாமல், மிகக் குறைவான எண்ணிக்கையில் மட்டும் ஒலிபெருக்கிகள் அமைத்து, நாள்முழுக்க ஒலிபெருக்கிகளை அலறவிடாமல், குறிப்பிட்ட நேரம் மட்டுமே ஒலிபெருக்கியைப் பயன்படுத்தும்படியாக நடவடிக்கை எடுப்பது அவசியமாகும். 

குறிப்பாக, திருவிழாக் காலங்களில் ஒலிபெருக்கிப் பயன்பாடுகள் குறித்த வழிகாட்டும் நெறிமுறைகள் உருவாக்கப்பட்டு அதைப் பின்பற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்துத் தரப்பினரும் முன்வரவேண்டும். 

மேம்போக்காகப் பார்த்தால், ஒலிபெருக்கிகளின் ஒலி மாசு மிகச் சாதாரணமானதாகத் தெரியலாம். ஆனால், இது ஏற்படுத்தும் பாதிப்புகள் மிக அதிகமானவை. அப்பாதிப்புகள் உடனடியாகத் தெரிவதுமில்லை. கல்வியில் நாட்டமில்லாத தலைமுறை உருவாகிக்கொண்டிருப்பதற்கு இந்த ஒலிபெருக்கி மாசும் ஒரு காரணம் என்பது பலருக்கும் தெரிவதில்லை. ஆயினும் அதுதான் உண்மையும் கூட.

ஆகவே, கல்வியாளர்கள், கல்வித்துறையினர், அரசு நிர்வாகிகள், காவல்துறையினர், உள்ளாட்சி அமைப்பினர், பொதுமக்கள், தன்னார்வலர்கள் அனைவரும் மாணவர்களின் தேர்வுக் காலத்தை, படிப்புக்கு உகந்த காலமாக உருவாக்கித் தருவதற்கு முன்வர வேண்டும். 

மாணவர்களின் இந்தத் தேர்வுக் காலத்தை ஒலிபெருக்கி மாசு இல்லாத காலமாக ஆக்கித் தருவதற்கு உண்டான நடவடிக்கைகளைச் செய்து தரவேண்டும் என்பதே மாணவர்கள் ஆசிரியர் தரப்பிலிருந்து முன்வைக்கும் ஒற்றைக் கோரிக்கையாகும்.

ஏர் மகாராசன் 

01.05.2022

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக