வேளாண்மை சார்ந்த வளமைச் சடங்குகளுள் விதைப்புச் சடங்கும் நடவுச் சடங்கும் மிக முக்கியமானவை. பெரும்பாலும், விதைப்புச் சடங்கானது உழவுச் சடங்கோடு சேர்ந்தே நிகழ்த்தப்படுகிறது. விதைப்புச் சடங்கு, வித்துகளோடு தொடர்புடையது. நடவுச் சடங்கு, பயிர்களோடு தொடர்புடையது. விதைப்பும் நடவும் வேளாண்மையோடு தொடர்புடையவை. மருத நில வயல் பகுதிகளில் நெல் வேளாண்மையே முதன்மையானதாகும்.
நிலத்தைப் பொருத்தும் நீரைப் பொருத்தும் நெல் வேளாண்மையில் விதைப்பும் உண்டு; நடவும் உண்டு. எனினும், உழவு மரபினர் நெல் வேளாண்மையில் நாற்று நடவு முறையையே பெரும்பாலும் பின்பற்றுகின்றனர். நாற்றாங்காலில் முளை கட்டிய நெல் விதைகள் பாவி, நெல் விதைகள் நாற்றாக முளைத்த பிறகு, நாற்றாகப் பறித்து, அந்நெல் நாற்றை நடவு வயலில் நடுவதையே நடுகை அல்லது நடவு எனக் குறிப்பர் உழவு மரபினர்.
உழவுத் தொழில் மரபையும், அதன் நுட்பத்தையும், வேளாண் உற்பத்திக் கருவிகளையும், உழவுத் தொழில் செயல்பாடுகளையும், உழவுத் தொழில் மரபினரான வேளாளர்களைக் குறித்தும் விரிவாக எடுத்துரைக்கும் ஏர் எழுபது நூலானது, நெல் நாற்றைக் குறித்தும், உழத்தியர்களின் நடவுப் பாங்கைக் குறித்தும் விவரித்திருக்கிறது. இவ்விடங்களில் எல்லாம், உழவுத் தொழில் மரபினரை வேளாளர் என்றே பதிவு செய்திருக்கிறார் கம்பர்.
ஏறு வளர்த்திடும் முகிலும் இசை வளர்க்கும் என உரைப்பின்
ஆறு வளர்த்திடுவது சென்று அலை கடலைத் தானன்றோ!
வேறு வளர்ப்பன கிடப்ப வேளாளர் விளை வயலின்
நாறு வளர்த்திடல் அன்றி ஞாலம் உயிர் வளராதே!
என்கிறார் கம்பர். அதாவது, உழவுத் தொழில் மரபினர்களான வேளாளர்களது உழைப்பினாலும் முயற்சியினாலும் விளைவு பெருகும். வயல்களில் உள்ள நெல் நாற்றுகள் செழிப்பாக வளர்ந்தால்தான், உலகில் உள்ள உயிர்கள் யாவுமே நிலைத்து வளரும் என்பதை அப்பாடல் வலியுறுத்துகிறது.
நெல் நாற்றுகளைப் பறித்து நடவு வயலில் நடுகின்ற நிகழ்வைக் குறிக்கும் கம்பர், போர்முனையைக் காட்டிலும் மேலானது என்கிறார். நாற்று நடுகின்ற வயல் களத்தை நடவு முனை எனப் புலப்படுத்தும் வகையில்,
உலகத்தில் பகடுழக்கும் ஓங்குமுடித் திறல்வேந்தர்
அலறத்திண் பகடுழக்கும் அதுவுமொரு முனையாமோ?
உலகத்தில் பகடுழக்கும் உயர்முடிகொள் வேளாளர்
சிலவர் உழச் சிலவர் நடும் அவையன்றோ திருமுனையே!
என்கிறார் கம்பர்.
அதாவது, உலகத்திலே ஏறுபோல உலாவும் புகழ்பெற்ற முடியினரான ஆற்றலுடைய அரசர்கள், போர்க் களத்தின் இடத்தே பகைவர்கள் அலறியோடுமாறு யானைகொண்டு போரிட்டுக் கலக்கும் போர்முனையும் நல்வாழ்வுக்கு ஏற்றவொரு முனையாகுமோ? ஆகாது. உலகில் கடாக்கள் உழுதலையுடைய - உயரிய நாற்று முடிகளைக் கொள்ளுகின்ற வேளாளர் சிலர் உழவும், சிலர் நடவுமாக வயல் முனையின்கண் விளங்குகின்றனரே, அவையன்றோ உண்மையான வெற்றி முனையாகும்.
போர் முனை பகையொழித்து வெற்றி தரும். எனினும், அதனால் உயிர்கட்கு அழிவேயன்றி வளர்ச்சியேதும் இல்லை. அது பற்றியே, போர் முனை வெற்றியினும் விளை பொருள் மிகுத்தலே ஒரு நாட்டின் வாழ்வுக்கு இன்பம் தருவது என்பது இது. பகை, நொதுமலுக்கேயன்றிப் பகை கொண்டு எழுபவர்க்கும் துயர் விளைக்கும். உழவு எவர்க்குமே இன்ப வாழ்வு தரும் என, அப்பாடலுக்குப் பொருளுரைக்கிறார் புலியூர் கேசிகன். உழவுத் தொழில் மரபினரான வேளாளர்களது உழவுக் களமும் நடவுக் களமுமே திருக்களமாகும் எனும் வகையில் நடவு முனை அமைந்திருக்கிறது.
உழுது, தொளி புரட்டி, பரம்படித்துச் சமன் செய்யப்பட்ட வயலில் விளம்பப்பட்டிருக்கும் நாற்று முடிகளை எடுத்து நடுகின்ற வேளாள உழத்திகளின் நடவுக் கைப்பக்குவம் - நடவுக் கைப்பாங்கு குறித்து எடுத்துரைக்கும் கம்பர்,
செய்ப்பாங்கு படக் கிடந்த செழுஞ்சாலி நன்நாற்றைக்
கைப்பாங்கு பகுத்துநடக் கற்றாரே கற்றாரே
என்கிறார். அதாவது, வயலின் பல பகுதிகளிலும் விளம்பப்பட்ட நாற்று முடிகளை அப்படியே பற்றி நடுவதற்கு இயலாது. ஒரு முடியை எடுத்தவுடன் ஒரு சிறு பகுதியைத் தம் கைக் கொள்ளுமளவு எடுத்து வைத்துக் கொண்டே நாற்று நடுவர்.
இவ்வாறு, இடக்கையில் கையளவு நாற்று எடுத்துக் கொண்டு, இடக்கையிலுள்ள நாற்றுப் பிடியிலிருந்து சிறுசிறு நாற்றாய் வலக்கையால் பிரித்து, நெல் நாற்றின் தூர்ப் பகுதியைத் தொளியில் ஊன்றி நடுவதே நடுகையாகும். சீரான இடைவெளியோடு நடுகையிடும் நடவு நுட்பமே கைப்பக்குவம் அல்லது கைப்பாங்கு என்பர் உழத்தியர்கள்.
நாற்று நடும் கைப்பாங்கைக் கொண்ட உழத்தியர்களே பயன் தரும் கல்வியைக் கற்றவர்கள் ஆவர் எனும் பொருளில்தான் கம்பர் அவ்வாறு பாடியிருக்கிறார். அதாவது, நெல் நாற்றைக் கைப்பாடம் பெறப் பகுத்து நடுவதற்குக் கற்ற உழத்தியர்களே உண்மையாகப் பயன் தரும் கல்வியினைக் கற்றவர் ஆவர் என்கிறார் அவர்.
நெல் நாற்றை நடுகின்ற போது நெருங்கவும் நடக்கூடாது; கலந்தும் நடக் கூடாது. நடுகையானது சீரான இடைவெளியோடு இருத்தல் வேண்டும். இதுவே உழத்திகளின் நடவுக் கைப்பாங்கு ஆகும். இவ்வாறு கைப்பாங்குடன் நெல் நடவு செய்யும் உழத்தியர்களைக் குறித்துப் பள்ளு நூல்கள் அனைத்தும் பதிவு செய்திருக்கின்றன. உழத்திகளின் நடுகை நுட்பம் பற்றி எடுத்துரைக்கும் வையாபுரிப் பள்ளு நூல் பாடலானது,
நாற்றை எடுத்து உங்கள் நெற்றி வைத்து
நாலு திசைகளை நோக்கி வாழ்த்திப்
போற்றித் துதித்து நிரை வகுத்துப்
புகழ்ந்து குரவை முழக்கிப் பயிர்
சற்றே நெருங்காமல் அணியணியாய்
இடையில் கலந்து போகாமல் மெல்ல
மாற்றியே நண்டது ஊடே போகாமல்
வளமாய் நடுங்கடி பள்ளீரே
எனப் பதிவு செய்திருக்கிறது.
நெல் வேளாண்மையின் ஓர் அங்கமாக இருக்கும் நடவுச் செயல்பாடும்கூட, வளமைச் சடங்காக வேளாண் மரபில் நிகழ்த்தப்பட்டு வருவதைக் காண முடிகிறது. இத்தகைய நடவுச் சடங்கானது, வேளாண் நிலத்தில் நடவு செய்யும் நெல்நாற்று முடியை இந்திர அடையாளத்தோடுதான் புலப்படுத்துகிறது.
பள்ளுப் பிரபந்தம் எனப்படும் பள்ளு இலக்கியத்தின் உள்ளடக்கப் பொருண்மை குறித்து எடுத்துரைக்கும் தியாகராசக் கவிராயர்,
இந்திரத் தெய்வதம் போற்றி எக்காலும்
சிந்தை இன்புற்று இகழ்தரும் தகைத்தாய்
உள்ளி ஆன்றோர்கள் உரைக்கும் பிரபந்தம்
என்றுரைக்கிறார். அதாவது, இந்திரனையே வழிபடு தெய்வமாகக் கொண்டிருக்கும் வேளாண்மை உழவுத் தொழில் மரபினரைப் பற்றிய சிற்றிலக்கிய வகையே பள்ளு இலக்கியங்களாகும் என்கிறார் அவர். அவ்வகையில், வேளாண்மைத் தொழில் மரபோடு ஒன்றிப்போனதாக இந்திரன் அடையாளம் அமைந்திருக்கின்றது.
மள்ளர் எனும் உழவர்கள் இந்திரனைத் தொழுது, வயலை உழுது, சேற்றைப் பரம்படித்துச் சமன்செய்து, வெண்முளை கட்டிய நெல்மணிகளை நாற்றங்காலில் தெளித்து, பின்பு நாற்றங்காலில் உள்ள நீரை முறையாக வடித்ததாகக் கூறும்போது,
பழுதின் மள்ளர் பயிற்றி வலாரியைத்
தொழுது வெண்முளை தூவித் தெளித்தபின்
முழுது நீரைக் கவிழ்ப்பர் முறைமையால்
என விநாயகப் புராணம் கூறுகிறது. இந்திரனைக் குறிக்கும் வேறு பெயரான வலாரி என்னும் சொல்லால் குறிப்பதோடு, நெல் விதைப்பு முறையையும் புலப்படுத்துகிறது அப்பாடல்.
உழவர்களின் வழக்காற்று மரபில், நடுகை தொடங்குவதற்கு முன்பாக நெல் நாற்று முடியைக் குலவையிட்டு வணங்கிய பிறகே நடத் தொடங்குவர் உழத்தியர்கள். மருத நில உழத்தியர்கள் இந்திரனை வணங்கிய பின்பே நாற்று நடுவர் என்பதை,
உழுத சால்மிக ஊறித் தெளிந்த சேறு
இழுது செய்யினுள் இந்திரத் தெய்வதம்
தொழுது நாறு நடுவார் தொகுதியே
பழுதில் காவிரி நாட்டின் பரப்பெலாம்
என்கிறது பெரிய புராணம். உழத்தியர்கள் வணங்கும் முதல் நாற்று முடியை, இந்திர முடி என வழங்கும் உழவர் வழக்காற்று மரபும் இங்கு ஒப்பத்தக்கது ஆகும்.
மேலும், கி.பி 12ஆம் நூற்றாண்டு சீவலமாற பாண்டிய மன்னன், தான் எழுதிய சங்கர நாராயணசாமி கோயில் புராணத்தில், மள்ளர்கள் ஒரு நல்ல நாளில் இந்திரக் கடவுளைத் தொழுது, எருதுகளை ஏரில் பூட்டி உழுது, நாற்றங்காலில் நெல் விதைத்தனர் என்பதை,
ஏர்தரு மூரியேறும் இருங்கடா ஆவினமுங் கட்டிக்
கூர்நுனிக் கொழுக்கள் ஆழ உழவற உழுது கோட்கள்
சீர்தரு நாளில் வானோர்க்கு இறைவனாந் தெய்வம் போற்றிக்
கார்நிற மள்ளர் சாலி முளைத்தனர் களிப்பால்
என்று குறிப்பிடுகிறார். வானோர்க் கோமான் இந்திரனையே, வானோர்க்கு இறைவனாம் தெய்வம் என்கிறது அப்பாடல்.
திருமகள் வாணி சசி முதலான தேவியர் பள்ளியராகி
இருகையில் அணிந்த குருகினந் தெழிப்ப விட்டிடை வருந்த வார்செவியின்
மருவிய தோடு நாலவார் கூந்தன் மல்கிய தோளின் வீழ்ந்தலைய
உருகெழு பச்சைப் பள்ளியோடு அயர்ந்திட்டு ஒண்முடி நாறு நட்டனரால்
எனக் கூறும் பேரூர்ப் புராணப் பாடலானது, உழவுத் தொழில் மரபினரான பள்ளியர் உழத்திகளோடு பெண் தெய்வங்களாகக் குறிக்கப்படும் இலக்குமி, சரசுவதி, இந்திராணி போன்றோரும் நடவு செய்ததாகக் கூறுகின்றது. அதாவது, செல்வ மகள், கல்வி மகள், மண் மகள் என யாவராக இருப்பினும், உழத்தியர்களின் நடுகைத் திறம் அறிந்தவர்களாகவும், அவர்வழி மரபினராகவும் இருந்ததாக அப்பாடல் சுட்டுகிறது.
மேற்சுட்டிய பேரூர்ப் புராணத்தின் பாட்டுடைத் தலைவராகக் குறிக்கப்படும் பட்டீசுவரர் கோயிலில்தான், வேளாண்மை உழவுத் தொழிலின் அங்கங்கள் யாவும் சடங்கியல் வழிபாட்டு மரபுகளாக இன்னும் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. கோயம்புத்தூர் அருகே பேரூரில் அமைந்துள்ள பட்டீசுவரர் கோயிலில் நடைபெற்றுவரும் சடங்குகளுள், நெல் நாற்று நடவுச் சடங்கு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
கி.பி 18ஆம் நூற்றாண்டில் கச்சியப்ப முனிவரால் எழுதப்பட்ட நூல் பேரூர்ப் புராணம் ஆகும். இந்நூலில் உள்ள பள்ளுப் படலப் பகுதியானது, சிவன், பார்வதி, முருகன், விநாயகர் மற்றுமுள்ள தேவர்கள் யாவரும் உழவுத் தொழில் மரபினராக - மள்ளர்களாக - பள்ளர்களாக வயலில் இறங்கி உழவுத் தொழில் செய்ததாக மிக விரிவாக எடுத்துரைக்கின்றது.
இதன் கதைச் சுருக்கத்தை எடுத்துரைக்கும் தே.ஞானசேகரன், கொங்கு நாட்டிற்குச் சுந்தரர் மூன்றாவது முறையாக வருகை தந்தபோது பேரூருக்கு வருகை புரிந்தார். அச்சமயம் பேரூரில் குடியிருக்கும் பட்டீசுவரர், அருகிலிருக்கும் வயலில் மள்ளராக - பள்ளராக மாறி வேலை செய்கின்றார். பார்வதி தேவியார் பள்ளியாக மாறி கழனியிலே நாற்று நடுகிறார். விநாயகனும் முருகனும் மள்ளச் சிறார்களாக மாறி வயலில் விளையாடுகின்றனர்.
திருமால், பிரமன், இந்திரன் முதலிய தேவர்கள் நுகம், கலப்பை, மேழி, கொழுவு, வார், தார்க்கோல், எருது, விதைகள், நாற்று ஆகிய அனைத்து உழவுக் கருவிகள், இடுபொருட்களுடன் வந்தனர். இலக்குமி, சரசுவதி, இந்திராணி முதலிய தேவ மகளிர் மள்ளத்தியர்களாக மாறி, பச்சை நாயகி உமாதேவியோடு வயலில் நாற்று நட்டனர்.
இவ்வாறு, இவர்கள் கழனியிலே வேலை செய்வது தெரியாது கோயிலுக்குள் சென்ற சுந்தரர், சிவபெருமானை அங்கே காணப் பெறாமல் வினவ, நந்தி கடைக்கண் காட்ட, வயலில் வந்து சுவாமியையும் அம்மையையும் கண்டு வணங்கினார். இதுவே திருப்பேரூர்ப் புராணம் தரும் செய்தி என விவரிக்கிறார்.
இலக்கியத்தில் அவ்வாறு மிகையாகவோ புனைவாகவோ பதிவு செய்திருப்பதாகக் கருதுவது ஒருபுறம் இருந்தாலும், பேரூர் பட்டீசுவரர் கோயிலில் நடைபெறும் வழிபாட்டுச் சடங்குகள், பேரூர்ப் புராணம் மேற்குறித்தவாறு எடுத்துரைத்த உழவுத் தொழில் மரபையும் வரலாற்றையுமே சடங்கியல் வடிவில் புலப்படுத்திக் கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
பேரூர் பட்டீசுவரர் கோயிலில் நடந்து வரும் நாற்று நடவுச் சடங்குத் திருவிழாவானது, உழவுத் தொழில் மரபினரையும், அவர்களின் வேளாண்மை உற்பத்தி நடவடிக்கையையும் சமூக முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக அடையாளப்படுத்தி வருகின்றது. இதைக் குறித்து விவரிக்கும் கோவைக்கிழாரின் கருத்தும் ஒப்புநோக்கத்தக்கது.
சுந்தரர் கொங்கு நாட்டிற்கு வந்த காலம் கி.பி 850 ஆகும். அக்காலத்திலிருந்தே பள்ளர்களும் கோயில் விழாக்களில் கலந்து கொண்டிருப்பார்கள் என்று ஐதீகத்திலிருந்து நாம் ஊகிக்க முடியும். இந்த நாளிலும் அத்திருவிழாவைக் கொண்டாடுவதற்காக அமைந்த நாற்று நடவு, அவர்கள் கலந்து கொள்வது போல வேறு தளங்களில் நாம் பார்க்க முடியாது என்பார் கோவைக்கிழார். பன்னெடுங்காலமாகவே அங்கு நெல் நாற்று நடவுச் சடங்கு நடைபெற்று வருவதை இலக்கிய மரபிலும் மட்டுமல்லாமல், வழிபடு பண்பாட்டு மரபிலும் காண முடிகிறது.
ஆனி எனும் ஆடவை மாதத்தில் நடைபெறும் நாற்று நடவுத் திருவிழாவை, ஆனி திருமஞ்சனப் பொன்னேர் நாற்று நடவுத் திருவிழா, சித்திரமேழிப் பொன்னேர் விழா, ஆனி உற்சவம், நாற்று வெள்ளி, இந்திர விழா, நாற்று நடவு உற்சவம், ஆனி உற்சவ நாற்று நடவுத் திருவிழா, இந்திர விழா என்னும் பொன்னேர் பூட்டும் விழா எனப் பல பெயர்களால் அப்பகுதி மக்கள் குறிக்கின்றனர். வழிபாட்டுச் சடங்காகவும் வளமைச் சடங்காகவும் நடைபெற்று வருகிற நாற்று நடவுச் சடங்கானது, உழவுத் தொழில் மரபினரின் வேளாண் பண்பாட்டு அடையாளச் சடங்காகவும் நடைபெற்று வருகின்றது.
இந்நடவுச் சடங்கானது, இரண்டு வகையான சடங்கியல் தன்மைகளையும் நோக்கங்களையும் புலப்படுத்துகிறது. இதுகுறித்துக் கூறும் தே.ஞானசேகரன், இவ்விழா இரண்டு விழாவினைத் தன்னுள் கொண்டிருக்கிறது. ஒன்று, இந்திர விழா. மற்றொன்று, மள்ளராக மாறிய சிவபெருமானின் புராணக் கதையை மறுபடியும் நடித்துக் காட்டும் விழா என, அங்கு நடைபெறும் சடங்குகளை இருவேறாகப் பிரித்துக் காட்டுகிறார்.
பேரூர்ப் புராணம் கூறுகிற கதையாடல்களின்படி, சிவன் உள்ளிட்ட தெய்வங்கள் யாவும் உழவுத் தொழில் புரிந்ததன் மேன்மையை - உழவுத்தொழில் செயல்பாடுகளைப் போலச்செய்தல் சடங்கியலாக நிகழ்த்திக் காட்டப்படுகிறது. கோயிலுக்கும் - தொன்மக் கதையாடலுக்கும் - வேளாண்மைக்கும் - வேளாண் மரபினருக்குமான பிணைப்பை இத்தகையப் போலச்செய்தல் சடங்கு வலுப்படுத்திக்கொண்டே வந்திருக்கிறது.
பட்டீசுவரர் கோயில் வளாகத்திற்கு முன்புள்ள தேவேந்திரர் சமூக மடத்தில் நடைபெறும் நாற்று நடவுச் சடங்கானது, இந்திர வழிபாட்டின் நீட்சியாக நடைபெறும் வளமைச் சடங்காகவும் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. ஆனி மாதத்தில் நடைபெறும் இவ் வளமைச் சடங்கின் முதல் நாளில், நாற்றங்காலில் நெல் விதை பாவுதல் சடங்கு நடைபெறுகிறது. இதை நாற்று விடுதல் என்றழைக்கின்றனர். ஓரிரு வாரத்திற்குள் நடுவதற்குப் பக்குவமான வளர்ச்சியை அடைந்த பிறகு, ஏற்கனவே குறிக்கப்பட்ட ஒரு நாளில் நாற்று நடவுச் சடங்கு நிகழ்த்தப்படுகிறது.
நாற்றுக் கழனிக்கு வருகின்றவர்கள், நெல் நாற்றை இந்திரன் முடி என்பதாக வணங்குவர் என்பதாகக் கூறும் தே.ஞானசேகரன், பெண்கள் நாற்றுக் கழனியைச் சுற்றி நின்று கும்மியடிக்கின்றனர். இவ்வாறு கும்மியடிக்கும்போது, ஒரு சின்னப் பெண்ணை அமரச் செய்து, அப்பெண்ணைச் சுற்றி இந்திர விழாப் பாடலைப் பாடிக் கும்மியடிக்கின்றனர். இக்கும்மியடிக்கும் சடங்கு, பல குழுவாக மடத்தின் பல பகுதிகளில் நடைபெறுகின்றன. இங்கு பாடப்படும் பாடல்களை உழத்திப்பாட்டு என்றும், இந்திர விழாப் பாடல்கள் என்றும் கும்மியடிப்போர் கூறுவதாகப் பதிவு செய்கிறார்.
நாற்றுப் பறித்தல் சடங்கின்போதும், நாற்று நடவுச் சடங்கின்போதும் வேளாண் மரபினரின் உழத்தியர்களால் பாடப்படும் கும்மிப் பாடல்கள், இந்திர அடையாளத்தையும் - வேளாண் மரபின் பண்பாட்டு நீட்சியையும் எடுத்துரைக்கும் வகையில் அமைந்திருக்கின்றன.
சந்திரரே சூரியரே சாமி பகவானே
இந்திரனை நோக்கி எடுத்தேன் இளமுடியை
இளமுடியும் வாடாம என் குரல் மங்காம
தேவேந்திர மார்கள் எல்லாம் சேரக் குலவை இடுங்கள்
தேவேந்திர ராசனுக்கு…
யானையின்னா யானை ஐராவதத்து யானை
குட்டி மத யானை கொம்பு இரண்டும் பொன் யானை
குண்டு குழியைக் கண்டால் குலுங்குமாம் அந்த யானை.
பள்ளன் படுகையைக் கண்டால் பதுங்குமாம் அந்த யானை.
நம்ம செந்நெல்லுக்கு நீர் போக்கி
தேவேந்திரப் பெண்கள் சேரக் குலவையிடுங்கள்
என, நாற்று நடவுச் சடங்கில் பாடப்படும் இதுபோன்ற கும்மிப் பாடல்களிலும், உழவுத் தொழில் சார்ந்த இதுபோன்ற சடங்குப் பாடல்களிலும் வேளாண்மை உழவுத் தொழில் மரபினரின் இந்திர வழிபாட்டு மரபின் நீட்சியைக் காண முடிகிறது.
பொருள் சார்ந்த உற்பத்தியில் ஈடுபடும் ஒவ்வொரு தொழில் மரபினரும், தத்தமது தொழில் மரபுகளை உற்பத்திச் செயல்பாட்டு நிலையிலும், சடங்கியல் போன்ற பண்பாட்டு நிலையிலும் தக்கவைத்து வந்திருக்கின்றனர். அத்தகையத் தொழில் மரபுகளைத் தக்க வைத்ததில் - தக்க வைப்பதில் போதாமைகளையும் இயலாமைகளையும் கடந்து, ஒருசில தொழில் மரபினரே உற்பத்திச் செயல்பாட்டு நிலையிலும் பண்பாட்டு நிலையிலும் தத்தமது அடையாளங்களைத் தக்க வைத்திருக்கின்றனர்.
தத்தமது தொழில் மரபுகளை அறிவூட்டலாகவும் மகிழ்வூட்டலாகவும் கூட்டுணர்வையும் கூட்டுழைப்பையும் வலியுறுத்துவதாகவும்தான், பண்பாட்டுச் சடங்கியல் வகைமைகளையும் வெளிகளையும் உருவாக்கி வந்திருக்கின்றனர் தமிழ் முன்னோர்.
அவ்வகையில், வேளாண்மை உற்பத்தியில் ஈடுபட்டு வந்திருக்கும் - ஈடுபட்டு வருகின்ற உழவுத் தொழில் மரபினர், வேளாண்மை சார்ந்த உற்பத்திச் செயல்பாடுகளைத் தொழில் நிலையிலும் பண்பாட்டு நிலையிலும் புலப்படுத்தியே வந்திருக்கின்றனர். தமிழர் மரபில் புலப்படுகிற பெரும்பாலான பண்பாட்டு நடத்தைகளும் சடங்கியல் கூறுகளும் உற்பத்தி சார்ந்த கூட்டுச் செயல்பாடுகளை - கூட்டு வாழ்வியலை - கூட்டு உணர்வை வெளிப்படுத்தும் விதமாகவே அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
மகாராசன் எழுதிய வேளாண் மரபின் தமிழ் அடையாளம் எனும் நூலில் இருந்து...
*
வேளாண் மரபின் தமிழ் அடையாளம்,
மகாராசன்,
யாப்பு வெளியீடு, சென்னை-76
விலை: ரூ.250
தொடர்புக்கு:
செந்தில் வரதவேல்
9080514506.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக