செவ்வாய், 31 ஜனவரி, 2023

சோ.தர்மனின் சூல் - நிறைசூலியும் நீர்ப்பாய்ச்சிகளின் அறமும் கொலையுண்ட வரலாறு : அ.ம.அங்கவை யாழிசை

என் தாத்தா சோ.தர்மன் அவர்கள் எழுதிய 'சூல்' எனும் கதை நூலை அண்மையில் படித்து முடித்தேன். இந்நூலைப் படித்ததில் பேத்தியான எனக்குப் பெருமிதம்தான். இதனைப் படித்து முடிக்க வெகு நாட்கள் ஆகிவிட்டன. நூலின் பல பக்கங்களை ஒருமுறைக்குப் பலமுறை வாசித்தேன். அதில் உள்ள அறிவியல் கருத்துக்களையும், அனுபவத் தத்துவங்களையும், அதில் வந்து போகும் சம்சாரிகளின் வாழ்வியல் அறங்களையும் என் மூளைக்குக் கொண்டு செல்லும் முயற்சியாக அந்தத் தகவல்களைக் குறித்து வைத்தும் எழுதி வைத்தும் வந்தேன்.

பக்கங்கள் செல்லச் செல்ல இப்படி எழுதி வந்தால் முழுப் புத்தகத்தையும் அப்படியே எழுத நேரிடும் என்றுதான் தோன்றியது. அந்தளவுக்கு நிறைய மனிதர்களும், நிறைய தகவல்களும், நிறையக் கதைகளும் சூல் நூலில் நிரம்பிக் கிடக்கின்றன. சூல் என்பது நீர் நிலைகளை மையமாகக் கொண்டது என்பதால், 'நீர் சூழ்ந்த நிலப்பரப்பு' என்பது போன்ற பொருள் கொண்டது என்றுதான் வாசிக்கும் முன்புவரை நினைத்திருந்தேன். பிறகு, அடிக்கடி கண்மாயை 'நிறைசூல் கர்ப்பினி'யாக விவரிப்பதை வைத்து இதன் மெய்யான பொருளை விளங்கிக் கொண்டேன். 

முழுக்க முழுக்கக் கண்மாயை மையமாகக் கொண்ட கதைதான் சூல். அந்தக் காலத்தில் மொத்த ஊரும் வெள்ளாமையும் கண்மாயைச் சார்ந்திருந்தன. அந்தப் பின்புலமும் வாழ்வும்தான் சூல் காட்டும் பேருலகம்.


இதில் வரும் பல குறிப்புகள் எனக்கு ஆச்சரியமானதாகவும் மிகவும் புதியதாகவும் இருந்தன. ஆண் பனை, பெண் பனை வேறுபாடுகள், பறவைகள், விலங்குகளின் செயல்பாடுகளை வைத்து மழை அறிகுறி அறிதல், மழையைப் போதும் என வழியனுப்பும் வழிபாடு என மிகப் பல விடயங்கள் கிடைத்தன. அன்றைக்கு மக்கள் என்னென்னவெல்லாம் தெரிந்து வைத்திருந்தனர் என்பதை நினைக்கையில் வியப்பாய் இருக்கிறது.


இந்தக் கதையில் இடம்பெறும் அந்த ஊரில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒரு கதை இருந்திருக்கிறது. அந்த மனிதர்கள் பல கதைகளைச் சுமப்பவர்களாக இருந்திருக்கிறார்கள். இன்றைய மனிதர்களைப்போல அன்றைய மனிதர்கள் எவரும் வெறுமையாக இல்லை. எல்லோரும் ஏதோ ஒரு கதையைச் சுமந்து கொண்டு நிறைந்திருந்தார்கள். உருளைக்குடி கண்மாயைப்போல அதைச் சார்ந்து இருந்த மக்களின் மனதும் விசாலமானதாய் இருந்திருக்கிறது. அந்தக் கண்மாய்த் தண்ணீரின் தூய்மையைப்போல மக்களின் மனதும் இருந்திருப்பதைப் பிரதிபலிப்பதாய் இருந்தது சூல் நூல்.


உருளைக்குடியில் வாழ்ந்த சம்சாரி மக்கள், தங்களைச் சுற்றியிருந்த ஒவ்வொன்றிற்கும் ஒரு கதையை உருவாக்கி வைத்திருந்தனர் அல்லது கதையாகச் சொல்லி வந்தனர். நாம் வணங்கும் பல தெய்வங்கள் விண்ணிலிருந்து பிறந்தவை அல்ல; நம்மோடு நம் மண்ணில் வாழ்ந்து மடிந்தவர்கள் என்பதற்கான முன்னோர் வழிபாட்டை உணர்த்தும் பல கதைகள் நூல் முழுவதிலும் வந்தன. காகத்திற்கு ஏன் கோனப் பார்வை என்பதற்குக்கூட ஒரு கதை சொல்வார்கள். இதுபோன்ற கற்பனைத் திறனின் உச்சங்களைப் பல கிளைக் கதைகளில் காணமுடிந்தது. 


அந்தக் காலத்தில் பல நம்பிக்கைகளையும் விதிமுறைகளையும் முறையாகவும் பரம்பரை பரம்பரையாகவும் பின்பற்றி இருக்கிறார்கள். இக்கால வழக்கின்படி அவற்றை மூடநம்பிக்கை என்பார்கள். இந்த மூடநம்பிக்கைகள்தான், அந்தக் கால மக்களைப் பல மூடத்தனமான காரியங்களைச் செய்ய விடாமல் தடுத்திருக்கின்றன என்பதையும், நாம் கவனிக்கத் தவறியிருக்கிறோம் என்பதையும் இந்நூல் சுட்டிச் செல்கிறது. 


நம் மண்ணில் எங்கும் ஆக்கிரமித்துள்ள சீமைக் கருவேல மரங்கள், ஜிலேபிக் கெண்டை மீன்கள் இவற்றை ஆங்கிலேயர்கள்தான் நம் மண்ணில் விதைத்துச் சென்றதாக எண்ணினேன். ஆனால் சுதந்திரத்திற்கு பிறகு வந்த அரசாங்கம்தான் இம்மண்ணை பாழாக்கிட அந்த நிலத்தின் சம்சாரிகளையே நட வைத்தது என்பது எனக்குப் புதிய செய்தி.


உருளைக்குடி மக்களின் ஒளிவு மறைவு இல்லாத வாழ்க்கை மிக அழகாக வர்ணிக்கப்பட்டுள்ளது. எதார்த்தத்தைக்கூட மறைத்தும் மறந்தும் வாழ்பவர்களுக்கு மத்தியில் இருந்தால் அந்த வாழ்க்கை அழகாய்த்தானே தெரியும். கதையில் வரும் உறவுக்காரர்களின் கேலிப் பேச்சுகள் எனக்கு மிகப் புதியதாக இருந்தன. என் அப்பாவிடமும் அம்மாவிடமும் நான் பலமுறை கேட்ட கேள்வி, இப்படி எல்லாம் கூடவா வெளிப்படையாப் பேசுவாங்க என்பதுதான். ஏனெனில், அவர்களின் பேச்சுக்கள் அவ்வளவும் வெளிப்படையாகவே இருந்தன.


கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளுக்கு முந்தையப் பழமையான கிராமத்து வழக்காறுகள் என்பதால், நூலில் வரும் பல சொற்களின் பொருள்கள் எனக்கு முதலில் புலப்படவில்லை. கதைக்குள் போகப் போகத்தான் அவற்றின் பொருள் புரிந்தன. கதையில் அவர்கள் பேசும் வசவுச் சொற்கள் நான் இதுவரை கேள்விப்படாதவை. நான் கவனித்த மட்டும், கதையில் 'அம்மா' என்ற சொல் வந்ததாக எனக்கு நினைவில்லை. ஒன்று அஞ்ஞா அல்லது ஆத்தா. இவைதான் அம்மாவைக் குறித்த சொற்கள். அம்மா எனும் சொல் வரவே இல்லை. அப்பா என்பதற்கும் ஐயா அல்லது அப்பன் என்றுதான் வந்துள்ளன. மேலும், இந்த நூலின் வாயிலாகப் பழைய சொலவடைகள் எனக்குப் புதிதாக அறிமுகம் ஆயின.


அக்காலத்தில் கொடுக்கப்பட்ட தண்டனைகளும் சிந்திக்க வைக்கும்படி இருந்தன. ஒரு மாதத்திற்குக் கோவில் பகுதியைச் சுத்தம் செய்வது, கோவிலுக்கு விளக்குப் போடுவது என்று சமூக நெறிமுறைகளைச் சார்ந்தே இருந்திருக்கின்றன. குற்றத்திற்குத் தண்டனையும் குற்றவாளிக்கு மன்னிப்பும் முறையாக வழங்கப்பட்டிருக்கின்றன என்பதையும் நூல் விவரித்திருக்கிறது. 


நூலை முழுவதும் படித்து முடித்ததற்குப் பின்பாக, எனக்கு இப்போது சூல் நாவல் என்றால் முதலில் நினைவிற்கு வருவது, கொப்புலாயி பாட்டியும் அவளின் வெகுளித்தனமும்தான். அவளுடைய வாழ்க்கை அத்தியாயத்தின் கடைசியில் அவள் கூறுவது என்னைப் பிரமிக்க வைத்தது. காட்டுப்பூச்சிப் பயல் பட்டணத்திற்குச் சென்று வந்ததைக் கூறும்போது 'துட்டு கொடுத்தால் சாப்பாடு கிடைக்கும்' என்று சொன்னது, கொப்புலாயி பாட்டியை மிகவும் பாதித்தது. 'துட்டு வாங்கிட்டு சோறு போடுற ஊர் விளங்குமா? அந்த ஊர்ல மனுஷங்க எப்படி வாழ்றாங்க? அந்த ஊருக்கு என்ன பாவம் கிட்டுமோ? என்று புலம்பித் தீர்ப்பார்.


அந்தக் காலத்தில் வழிப்போக்கர்கள் கேட்டால் அன்னம் இடுவார்கள் என்பது தெரியும். ஆனால், அன்னத்திற்குக் காசு வாங்கக் கூடாது; அது பாவம் என்பது எனக்குத் தெரியாது. எவ்வளவு பெரிய விடயம் இது. ஊருக்குள் சாமியார்கள், பண்டாரங்கள் என யார் வந்தாலும், அவர்கள் தெருவில் வந்து கையேந்தக்கூடாது என்றும், அவர்களுக்கு ஆனதை அந்த ஊர் இளவட்டங்களே எல்லோர் வீட்டிலும் சென்று வாங்கி வந்து கொடுப்பார்கள் என்பதும் எனக்கு மேலும் புதிய விடயம். அவர்களை அன்னத்திற்காகக் கையேந்தவிடும் ஊர் விளங்காது என்பது அவர்களது நம்பிக்கை. அன்று வாழ்ந்த எல்லோரும் ஊருக்குக் கட்டுப்பட்டு வாழ்ந்தார்கள். இல்லையென்றால் பாவத்திற்குக் கட்டுப்படுவார்கள் என்ற நம்பிக்கை அவர்களிடம் இருந்தது. அந்த நம்பிக்கையெல்லாம் இப்போது காணாமல் போய்விட்டன.


முந்தையக் காலத்தில்தான் சாதிச் சண்டைகள் அதிகமாக இருந்தது அல்லது இருந்திருக்கும் என்று நான்கூட எண்ணினேன். ஆனால், கதையில் பல சமூகங்களுக்குள் உள்ள புரிதலும் ஒற்றுமையும் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அப்படி இருந்தவர்களைப் பிரித்துப் பகையாக்கியது யாரோ? எதுவோ?


கதையில் மாடுகளைக் கொன்று மாமிசம் உண்டவன், அப்பாவத்தின் பலனாக ஒரு கால்நடையைப் போலவே நடக்க நேரிடும். விரோதம் காரணமாக ஊர்க் கண்மாயை உடைத்தவன் பிள்ளை ஊமையாகப் பிறக்கும். இப்படிப் பல நம்பிக்கைகள் உண்மையில் அப்படியே நடந்திருக்கின்றன. எப்போதும் சிரிக்கும் கண்மாயை ஊமையாக்கியவன் பரம்பரையில் ஊமைப் பிள்ளை பிறக்கும். இது போன்ற பாவங்கள் ஜென்ம பாவங்கள் என்றும், தலைமுறையாகத் தொடரும் என்றும் நம்பினார்கள். ஆனால் இந்தப் பாவத்தைப் பற்றி ஊரில் யாருக்கும் தெரியாது. இந்தப் பாவத்திற்குப் பரிகாரங்களாக அவர்கள்  சொன்னதெல்லாம், மரங்கள் வளர்ப்பது; ஆடு மாடுகள் பராமரிப்பது; கண்மாயைப் பராமரிப்பது என, இயற்கையை இணைத்துப் பயனூட்டும் வகையிலேயே அமைந்துள்ளது. கதையில் வரும் குப்பாண்டிச் சாமியும் குஞ்சான் சாமியும் எதிர்காலத்தைப் பற்றி, அதாவது இன்றைய நிலையை அப்படியே கூறும்போது வினோதமாக இருக்கும்.


ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் நிலத்திற்கும் நீர்நிலைகளுக்கும் ஏற்படாத அவல நிலை, நம் நாட்டவரின் ஆட்சியின்போதுதான் ஏற்பட்டுள்ளது என்பது வெட்கித் தலைகுனிய வைத்தது. ஆங்கிலேயர்கள் மக்களை அடிமைப்படுத்தினார்கள். அவர்களுக்குப் பிறகு வந்த நம் நாட்டு அரசியல்வாதிகளால் மண் முழுதும் அடிமையானது. ஆங்கிலேயர்கள்தான் நம் வளத்தை எல்லாம் சுரண்டினார்கள் என்று மட்டும் தெரிந்திருந்தேன். ஆனால், மண்ணின் வளங்களைக் காக்க, அந்த வளத்தைப் பற்றி நன்கு தெரிந்த பரம்பரை அறிவு கொண்டவர்களிடம்தான் அதை ஒப்படைத்து இருக்கிறார்கள் என்பதை இந்நூலில்தான் முதன்முதலாக அறிந்துகொண்டேன். 


கண்மாய்களைக் காக்கவும், வயல்களுக்கு அந்த நீரைப் பாய்ச்சவும் என நியமிக்கப்பட்டவர்கள்தான் நீராணிக்கர்கள் ஆவார்கள். கதையில் நீர்ப்பாய்ச்சிக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும். நீர்ப்பாய்ச்சியும் ஊர்க் குடும்பனும்தான் ஊரின் முதன்மைத் தலைகள். இப்போது அதன் பொறுப்பை ஏற்று இருக்கும் பொதுப்பணித்துறையில் உள்ளவர்களுக்கு, சூழலியல் சார்ந்த அடிப்படை அறிவுகூட இல்லாததன் காரணமாகத்தான், மண்ணும் தன் அடிப்படைக் குணத்தை இழந்து வருகிறது. பட்டறிவைவிட, பரம்பரை அறிவு முக்கியமானது. அது அனுபவங்களின் கோர்வை. 


ஆங்கிலேயர்கள் சென்ற பின்பு, அதாவது, சுதந்திரத்திற்குப் பிறகான அரசியல் மாற்றங்களுக்குப் பிறகு, உருளைக்குடியின் பஞ்சாயத்துத் தலைவர் ஊரில் உள்ள புறம்போக்கு நிலத்தைத் தனதாக்கிக் கொள்வது நடக்கும். அந்த வயலுக்குக் கண்மாய் நீரைப் பாய்ச்சிட வேண்டுமென்று நீர்ப்பாய்ச்சியிடம் ஆணையிடும்போது, 'முறை மாற்றி வாய்க்காலில் கண்மாய் நீர் செல்வதை அனுமதிக்க மாட்டேன்' என்பார். அப்படி என்றால், மடைச் சாவியைக் கொடுத்துவிட்டுச் செல்லுமாறு பஞ்சாயத்துத் தலைவர் கேட்பார். 'அய்யனாரப்பன் முன்பு ராசா தொட்டுக் கொடுத்த சாவி இது. இது எங்கிட்ட வாரதுக்கு முன்னாடி, எங்கப்பன் எப்படி அய்யனார்ட்ட ஒப்படச்சாரோ, அங்கயே நானும் ஒப்படைக்கிறேன்' என்று கூறுவார்.  உருளைக்குடியின் கடைசி நீர்ப்பாய்ச்சியான அவர், மடைச்சாவியைக் கோயிலின் முன்பு வைத்து விட்டு வரும் காட்சி உணர்ச்சிப்பூர்வமாக விவரிக்கப்பட்டிருக்கும். 


நிலத்தையும் நீரையும் கட்டிக்காத்த நீர்ப்பாய்ச்சிகளின் அறம் இதுதான். மிகவும் பலம் பொருந்திய காளையின் மூக்கணாங்கயிறு அவர் கையை விட்டுச் சென்றதாகவும், சரியான கைகளிடம் போய்ச் சேரவில்லை என்றால், அந்தக் காளை மாடு ஊர் நிலத்தை நாசமாக்கிவிடும் என்று கண்மாயைக் காளையாகவும், மடைச்சாவியை அதன் மூக்கணாங்கயிறாகவும் வர்ணிக்கப்பட்டிருக்கும்.


முன்பெல்லாம் கண்மாய்களில் குடிமராமத்துப் பணிகளை அந்தந்த ஊர் மக்களே செய்து வந்திருக்கிறார்கள். குடிமராமத்துப் பணிகள் நடக்கும் காட்சியை மிக அழகாகக் கூறியிருப்பார் நூலாசிரியர்.


ஆங்கிலேயர்களிடமிருந்து நாடு சுதந்திரமடைந்த பிறகு, நாட்டில் இருந்த கண்மாய்கள் அனைத்தும் பொதுப்பணித்துறையின்கீழ் சென்றன. இதனால், முன்பு போல ஊர் கூடி மராமத்துப் பணிகள் செய்ய முடியாமல் போனது. மராமத்துப் பணிகள் செய்திடப் பல பேரிடம் போய்க் கேட்டும், சாக்குப் போக்குச் சொல்லி வந்தனர் அரசியல்வாதிகள். பல வருடங்கள் ஆகியும் மராமத்துப் பணி நடக்காததால் கண்மாய்கள் மேடேரிப்  போயின. இதனால் வருடத்தின் பாதியிலேயே கிணறுகள் வற்றிப்போயின. கண்மாய்களில் இருந்து வயல்களுக்குக் கரம்பை மண்  எடுக்கவும் தடை. நம் ஊர்க் கண்மாயில் இருந்து நம் வயலுக்கு நாம் மண்ணெடுக்க முடியாது என்றால், எங்கு போவது? கண்மாய் அரசாங்கத்துக்கு உரியது என்றால், அரசாங்கம் யாருக்காக? என்ற கேள்வி எழுவது தவிர்க்க முடியாதது. 


குடிமராமத்துப் பணிகள் நடக்காத காரணத்தினாலேயே கண்மாய்களும் வயல்களும் தன் பொழிவை இழந்து போன துயர வரலாற்றைப் பேசும் சூல் நூலானது, நிறை சூலி கொலையுண்ட பெருவலியைப் பதிவு செய்திருக்கிறது. சூல் நூலானது, நீர்நிலை சார்ந்த நிலங்களையும், அந்நிலம் சார்ந்த சம்சாரி மனிதர்களையும், அம்மனிதர்களின் வாழ்வியல் பண்பாடுகளையும் மிக விரிவாகவே ஆவணப்படுத்தியிருப்பதாகவே உணர்கிறேன். 


பெருவாழ்வைத் தந்த நிறைசூலியும், நீர் அறத்தைக் காத்துவந்த நீர்ப்பாய்ச்சிகளும் இப்போது கொலையுண்டு போயிருப்பதை உணர்த்துகிறது இந்நூல். இதன் வலி நிகழ்காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் பெரும் பாதிப்பைத் தரத்தான் போகிறது.


சாகித்ய அகாடமி விருது பெற்ற சோ.தர்மன் தாத்தாவின் இந்த நூலைப் படித்ததில் பெருமை அடைகிறேன்.


கட்டுரையாளர்:

அ.ம.அங்கவை யாழிசை,

இளநிலை சித்த மருத்துவ மாணவி.

31.01.2023

வெள்ளி, 27 ஜனவரி, 2023

தீட்டுக்கு எதிரான முதல் பெண் கலகக்குரல் : மகாராசன்






தமிழ் இலக்கியப் பரப்பில் காலுான்றிய பெரும்பாலான பெண் கவிஞர்கள் இலக்கியத்தின் வழியாகப் பெண்நிலை சார்ந்த கூறுகளை வெளிப்படுத்தியுள்ளனர். பெண்நிலை சார்ந்த அக்கவிதைகள் எதிர்ச்சிந்தனை மரபையும் மாற்றுச் சிந்தனை மரபையும் உள்ளடக்கி வைத்திருக்கின்றன. 

அந்தந்தக் காலகட்டத்தில் சாத்தியப்பட்ட பாடுகளத்திற்குள்ளும் பெண்ணின் குரலைப் பதிவு செய்யும் முயற்சிகள் பெண் கவிஞர்களிடம் இருந்திருக்கின்றன. இந்த வரிசையில் செங்கோட்டை ஆவுடையக்காளின் குரலும் தமிழ் இலக்கியப் பதிவில் குறிப்பிடத்தக்க ஒரு பதிவாக அமைந்திருக்கிறது.


இதுவரையிலான மற்ற பெண் கவிஞர்களிடம் பெண்நிலை சார்ந்த இலக்கியச் செறிவு மட்டும் காணப்படுகின்றது. ஆவுடையக்காளிடமோ இலக்கியச் செறிவோடு தத்துவச் செறிவும் காணப்படுகிறது. தத்துவ நோக்கில் ஆவுடையக்காள் எழுதிய கவிதைகள் 'செங்கோட்டை ஸ்ரீஆவுடையக்காள் பாடல் திரட்டு' எனும் நூலாக வெளிவந்திருக்கிறது. ஆயினும், இந்நூல் பற்றிய குறிப்புகள் பெரும்பாலான தத்துவ மற்றும் இலக்கிய வரலாற்று நூல்களில் காணப்படவில்லை.


தமிழ்ப் பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள 'வாழ்வியல் களஞ்சியம்' இரண்டாம் தொகுதியில் 'ஆவுடையம்மாள்' எனும் தலைப்பில் சிறு குறிப்பு மட்டுமே காணப்படுகின்றது. ஆவுடையக்காள் பற்றியும், அவர் கவிதைகள் குறித்தும் விரிவான முறையில் அமைந்த கட்டுரை சு.வேங்கடராமன் எழுதிய 'அறியப்படாத தமிழ் இலக்கிய வரலாறு' எனும் நூலில் உள்ளது. 


தத்துவச் செறிவுமிக்க ஆவுடையக்காளின் கவிதைகளில் பெண்நிலை சார்ந்த வெளிப்பாடுகளும் காணப்படுகின்றன. தத்துவத் துறையினுள் பெண்ணாக நுழைந்து பெண்நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருக்கும் பாங்கை அவரின் கவிதைகளின்வழி அறிய முடிகின்றது.


செங்கோட்டையில் அந்தணர் குடும்பத்தில் பிறந்தவர் ஆவுடையக்காள். தமிழ்நாட்டின் நெல்லை மாவட்டம் தென்காசிக்கு அருகில் உள்ள கிபி.17ஆம் நூற்றாண்டுக் காலகட்டத்தில் பிறந்த இவருக்கு, அன்றை அந்தண சமூக வழக்கப்படி குழந்தைப் பருவத்திலேயே மணம் செய்விக்கப்பட்டிருக்கிறது. ஆவுடையக்காள் குழந்தைப் பருவமாய் இருக்கிறபோதே விதவை ஆகிறார். பருவம் எழுதிய பின்னர் விதவைக் கோலம் கட்டாயமாகப் பூணப்பட்டிருக்கிறது. இளம் பருவத்திலேயே விதவைக் கோலம் பூண்டது ஆவுடையக்காளுக்குப் பெரும் துயரை ஏற்படுத்தி இருக்கிறது. ஆவுடையக்காளின் விதவைநிலை குறித்து 'ஆவிடையம்மாள் சரித்திரம்' கூறும்போது, பெற்றோரால் பாலியத்தில் விவாகம் அடைந்த அவளது பர்த்தா பரகதி அடையவே தன் கிரியை நினைத்து நினைத்து ஆறாத் துயரம் அடைந்து, பின் ஒருவாறு தன் விவேகத்தால் தேர்ந்து, உலகை வெறுத்து, ஒன்றிலும் பற்றுதலும் இன்றி இருந்தாள் என்கிறது.


ஆக, அன்றைய காலத்தின் சமூகச் சடங்குகளாலும், குலம் கோத்திரங்களாலும், தமது வாழ்வு பறிக்கப்பட்டதை எண்ணி எண்ணித் துன்பத்தில் உழன்று தவிக்கும் பெண்களுள் ஆவுடையக்காளும் ஒருவராக இருந்திருக்கிறார் என அறிய முடிகிறது.


அக்காலத்தியச் சமூகத்தின் பொதுத்தளத்தில் ஓரங்கட்டப்பட்ட வாழ்நிலைக்குத் தள்ளப்பட்டவர்களாய்ப் பெண்கள் இருந்தனர். அத்தகையச் சூழலில், பெண்கள் விதவையாக்கப்படும்போது முழுவதுமான அந்நியப்பட்ட வாழ்நிலைக்கு ஆட்படவேண்டியிருந்தது. உயிர் வாழும் ஒவ்வொரு நொடிப்பொழுதும் சித்திரவதைகளை அனுபவிக்க வேண்டிய கொடுமைகள் விதவையாக்கப்பட்ட பெண்களுக்கு நேர்ந்திருக்கிறது.


உடலை வருத்தியும் மனதை அடக்கியும் எவ்வித இன்ப துன்பங்களையும் பகிர்ந்து கொள்ளவும் முடியாமல் தவித்த பெண்கள், தங்களுக்கான வடிகாலாய்த் தேர்ந்தெடுத்தது பக்திக்களம்தான். இப்பக்தி நிலையின் வழியாக உலகியல் துன்பங்களை மறப்பதற்கான மடைமாற்றுத் தளமாகக் கைக்கொண்டவர்களில் ஆவுடையக்காளும் ஒருவர் எனலாம்.


தத்துவநிலை சார்ந்து தமது கருத்துகளை வெளிப்படுத்தும் ஆவுடையக்காள், அதனுள்ளும் பெண்நிலை சார்ந்த கருத்துகளையும் வெளிப்படுத்தி உள்ளார் என்பது மிக முக்கியமான ஒன்றாகும். ஆண்வழிச் சமூக முறைமைகள் பெண்ணைக் குறித்துப் பல்வேறு கருத்தியல்களை உருவாக்கியும் நடைமுறைப்படுத்தியும் வருகின்றன. அத்தகையக் கருத்தியல்களில் 'தீட்டு' என்பதும் ஒன்று. 


பெண் தீட்டானவர்; பெண்ணுடல் தீட்டானது என்பதான கற்பிதங்கள் பெண்ணைப் பல்வேறு தளங்களில் விலக்கி வைத்திருக்கின்றன. இந்நிலையில், தீட்டுக்கு எதிரான கலகக் குரலைத் தமது கவிதைகள் மூலம் வெளிப்படுத்துகிறார் அக்காள்.


பெண்ணுக்கென்று வரையறுக்கப்பட்ட வெளிகளில்தான் பெண்கள் நடமாடவேண்டும்; மற்ற வெளிகளில் பெண்கள் நடமாடக் கூடாது; அவ்வாறு பெண்கள் நடமாடிவிட்டால் அவை தீட்டுக்கு ஆளாகிவிடும் என்பதான கருத்து நிலைக்கு எதிராகக் குரல் எழுப்புகிறார் அக்காள்.


எச்சில் எச்சிலென்று

புலம்புகிறாய்;

மானிடர்கள் எச்சில்

இல்லாத இடமில்லை.

சில்லெச்சில் மூர்த்திகையில்;

ஈஎச்சில் தேனல்லவோ!

என்றைக்கும் உண்ணும்

தாய்முலை எச்சிலன்றோ!

மச்சமெச்சில் நீரில்வந்து

முழுகும் மறையோர்கள் எச்சில்.

பச்சைக்கிளி கோதும்

பழம் எச்சிலன்றோ!

தேரை எச்சில் தேங்காய்

சிறுபூனை எச்சில்;

தேசமெல்லாமே

எச்சிலென்று அறிவேன்.

எச்சிலுந்தன்

வாயும் உடலும் ஆகமாயிருக்கையிலே

பாதம் எச்சில் என்று

அலம்ப சுத்தமாச்சோ? (ஆ.பா.தி.ப90)

என்ற ஆவேசமான குரலை வெளிப்படுத்துகிறார் அக்காள். 


மேலும், பெண்ணும் ஆணும் ஒன்றுதான். சக்தியும் சிவனும் ஒன்றான வடிவில் இருக்க, பெண் எப்படி தனியே தீட்டானவராக இருக்க முடியும் என்ற கேள்வியை அக்காள் எழுப்புகிறார். அதை,

சாஸ்திரமாய்

கோத்திரமாய்

ஜாதிவர்ணாசிரமுமாய்

ஸத்பாத்திரமும்

தீட்டல்லவோ அறியாள்.

சக்தி சிவமே

சராசரமாய் நிற்கையிலே

எதுவும் கர்ம மூடருக்கு

இருட்டாச்சே (ஆ.பா.தி.ப91) என்ற கவிதையில் வெளிப்படுத்துகிறார். 


தீட்டு என்பதை, சாத்திரங்களும் சம்பிரதாயங்களும் வர்ணாசிரம தர்மங்களுந்தான் ஏற்படுத்தியவை. மனிதர்கள்தான் தீட்டு என்பதை நடைமுறைப்படுத்தி வருகிறார்கள். பெண்ணும் ஆணும் கடவுளாய் அமைந்திருப்பதை அறியாத மூடர்களே தீட்டை நடைமுறைப்படுத்துகிறார்கள் என்கிறார் ஆவுடையக்காள்.


பெண்ணின் உடலில் நிகழும் இயற்கை மாற்றங்களான குருதிப்போக்கு நிகழ்வையும் தீட்டு என்றுதான் ஆண்வழிச் சமூகம் கருதி வைத்திருக்கின்றது. பெண்ணின் குருதிக் கசிவைத் தீட்டென்று சொல்லும் சமூகம், காயம்பட்ட ஆண்களின் குருதிக் கசிவைத் தீட்டென்று உரைப்பதில்லை. 


மனித உற்பத்தி நிகழ வேண்டுமானால் பெண்ணுக்குக் குருதிக் கசிவு ஏற்பட்டாக வேண்டும். பெண்ணின் அக்குருதிதான் காமத்தை, குழந்தையை உண்டு பண்ணக் கூடியது என்ற பெண்நிலை சார்ந்த பதிவை ஆவுடையக்காளின் கவிதையில் காணமுடிகின்றது. அதை,

முந்தின தீட்டெடுத்து

முத்தமிடும் தொட்டிலிலே,

கர்த்தனோடு சூத்திரத்தைக் காணார். 

காமத்தீட்டுரைந்து

கைக்குழந்தையாயிருந்து

ஆமையைப்போல முழுக

சுத்தியாச்சோ (ஆ.பா.தி.ப91)

என வெளிப்படுத்துகிறார். 


மேலும், மாதந்தோறும் நிகழும் குருதிப்போக்கு நாட்களில் துயரமும் அவலமும் பெண்ணுக்குத்தான். ஆனால். பெண்ணைத் தீட்டென்று விலக்கி வைத்திருக்கும் ஆண்களிடம் காணப்படுகிற 'அகத்தீட்டு' போய்விடவில்லை. இதைப் பெண்நிலை சார்ந்த ஓர் எதிர்ப்புக் குரலாகவே வெளிப்படுத்துகிறார் அக்காள்.


தீட்டென்று மூன்று நாள்

வீட்டைவிட்டு விலக்கித் திரிந்துவிட்டு சித்கனத்தை மறந்து மதியிழந்து

நாலாநாள் உதயத்தில் நன்றாயுடல் முழுகி நடுவீட்டில் வந்திருப்பாய்

நான் சுசி என்றுரைத்து.

தீட்டென்றும்

பெண்ணினுடைய தேகத்துக்குள்ளிருக்க தேகமேல் முழுகிவிட்டால்

தீட்டோடிப் போமோ?

ஆசார மாச்சுதென்று ஐந்தாநாள் முழுகி அகத்திலுள்ள பொருள்தொடுவாய் அகத்தீட்டுப் போச்சோ (ஆ.பா.தி.ப145) என, தீட்டுக்கு எதிரான பதிவைத் தமது கவிதைவழி வெளிப்படுத்துகிறார். ஆவுடையக்காள். 


தத்துவ நிலைப்பாட்டினுள்ளும் பெண்நிலை சார்ந்து வெளிப்படும் ஆவுடையக்காளின் குரல் 'தீட்டு'க்கு எதிரான முரணைக் கொண்டிருக்கிறது. 'தமிழ் இலக்கிய மரபில் இப்படியான பெண்மொழியையும் பெண்ணின் மாதவிலக்கு - அது தீட்டு என்பதை எதிர்த்துப் பெண் எழுப்பும் கலகக் குரலையும் ஆவுடையக்காள் பாட்டில்தான் முதன்முதலாகக் கேட்கிறோம்' என்பது குறிப்பிடத்தக்கது.


மகாராசன் எழுதிய 'தமிழில் பெண்மொழி மரபு' நூலில் இருந்து...


செவ்வாய், 17 ஜனவரி, 2023

திரைமொழியில் நவீன ஏகலைவன்: மகாராசன்


அன்பு நண்பர் அருண் பகத் அவர்களின் உருவாக்கத்தில் மலர்ந்த ஏகலைவன் எனும் குறும்படத்தை அண்மையில் பார்த்தேன். 

இந்தியச் சமூக அமைப்பில் பல்வேறு சாதிகள் குலங்களாகவும் குடிகளாகவும் தொழில் அடிப்படையிலும் வட்டார அடிப்படையிலும் பரவிக் கிடக்கிறார்கள். இந்த வேறுபாடுகளின் மீது பிறப்பின் அடிப்படையில் பாகுபாடுகளைக் கற்பிதங்களை உருவாக்கி சாதிய ஏற்றத்தாழ்வுகளையும், அதற்கேற்ப வாழ்வியல் படிநிலைகளையும் உருவாக்கி வந்திருப்பதைச் சமூக வரலாறு எடுத்துரைக்கின்றது. இத்தகையச் சாதியப் பாகுபாட்டுக் கற்பிதங்கள் இன்றைய சமூக வாழ்வின் அனைத்து மட்டங்களிலும் அனைத்து மனித மனங்கள் வரையிலும் ஊடுருவிக் கிடக்கின்றன.

சாதியக் கற்பிதங்களின் பாகுபாட்டு நுண் உணர்வுகள் நவீன சமூக வாழ்வின் அடியாழத்தில் இன்னமும் படிந்திருப்பதைக் கலைப்படைப்புகளின் ஊடே வெளிப்படுத்தும் பெருமுயற்சியாகவும், அதேசமயத்தில், சாதியப் பாகுபாட்டு நுண் உணர்வுக்கு எதிரான சமத்துவ உணர்வைப் புலப்படுத்தவும் வளப்படுத்தவுமான உணர்வெழுச்சியைத் தரக்கூடியதாகவும் ஏகலைவன் படம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

திறமைகள் பல இருப்பினும், பிறப்பின் அடிப்படையில் அதற்கான தகுதிகள் இருப்பதாகத்தான் உயர்த்திக்கொண்ட சாதிய மனங்கள் நம்பிக்கிடக்கின்றன. ஒருவேளை, அந்தத் தகுதியை மீறி திறமைகள் வெளிப்படும்போது, அதைத் தம்மால் மூலம்தான் பெற்றுக்கொண்டதாகவும், அதற்குரிய குருதட்சணையை ஏதோ ஒருவகையில் கேட்கும் நோக்கில் பலி வாங்குவதையும், குரு தட்சணையாகத் தம் திறமையின் அங்கத்தைப் பலிகொடுப்பதையும்தான் ஏகலைவன் தொன்மம் படிந்திருக்கிறது. 

ஏகலைவன் குறும்படமோ, பழைய காலத்து ஏகலைவனைப்போல குருதட்சணையாகப் பலியாகாமல், திரும்பியெழும் திருப்பிச் செய்யும் சமத்துவத்தோழமை விதைக்கும் ஏகலைவனை முன்னிறுத்துகிறது. 

இருவேறு வர்க்க சமூக வாழ்வியல் பின்புலங்களைச் சார்ந்த இளைஞர்கள் இன்றைய மட்டைப் பந்தாட்ட விளையாட்டில் போட்டிபோடுவதையும், அதற்குள் இருக்கும் திறமை, நிராகரிப்பு, பலிவாங்கல் போன்றவற்றையும் பின்புலமாகக் கொண்டு ஏகலைவன் படம் ஒரு சேதியை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறது. அது, பிறப்பின் அடிப்படையில் தகுதிகள் தீர்மானிக்கப்படுவதில்லை; ஏகலைவன் வாரிசுகள் ஏகலைவனைப்போலவே பலியாக வேண்டியதில்லை என்பதுதான்.

மனதுக்கு மிக நெருக்கமாக இருக்கிறது படம். ஒரு தொன்மத்தை நவீனப் படைப்பாக்கும்போது அதன் சம காலத்தியக் குரலைப் பேசவேண்டும். அதை நவீனப் பூர்வமாகவும் கலைப்பூர்வமாகவும் மிக அழகியலோடு நவீன ஏகலைவனைத் தந்திருக்கிறார்கள் படக்குழுவினர். 

இதில் வருகிற அன்பின் அனுபவங்கள் பல வடிவங்களில் எமக்கும் நேர்ந்ததுண்டு. மிகச்சிறப்பான கலை முயற்சி. வாழ்த்துகள். பாராட்டுகள். நன்றி.

குறும்பட இணைப்பு:

https://m.youtube.com/watch?v=yZR_UlYxGeY&si=EnSIkaIECMiOmarE

தோழமையுடன்

ஏர் மகாராசன்

ஞாயிறு, 1 ஜனவரி, 2023

தமிழ் நாள்காட்டிகள் அன்பளிப்பாய் வழங்கல்


செம்பச்சை நூலகம், மக்கள் தமிழ் ஆய்வரண், வேளாண் மக்கள் ஆய்வுகள் வட்டம் சார்பாக ஆண்டுதோறும் தமிழ் நாள்காட்டிகளை அன்பளிப்பாக வழங்கி வருகிறோம்.

தமிழர் மரபில் நெடுங்காலமாய்ப் புழக்கத்தில் இருந்து வந்த தமிழ் எண்களை மீளவும் வழக்கத்தில் கொண்டுவரவும், தமிழ் நாள்காட்டி மரபை இளைய தலைமுறைக்கு அறிமுகப்படுத்தவும்தான் இந்த முயற்சி. தமிழுக்குச் செய்கின்ற சிறு கைம்மாறுதான் இது.

ஒவ்வோர் ஆண்டும் நாங்கள் வெளியிடும் இந்தத் தமிழ் நாள்காட்டிகளை அன்பளிப்பாகப் பெற்றுக்கொள்வதற்கு, தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் தொடர்பு கொண்டு வருகிறார்கள். 

செம்பச்சை நூலகத்திற்கு நேரில் வருவோருக்கும், தமிழ் நாள்காட்டிகள் வேண்டுவோருக்கும், தமிழ் நாள்காட்டிகள் அன்பளிப்பாகவே வழங்கப்படும். 

எனினும், வெளியூர் அன்பர்கள் அஞ்சல் செலவை மட்டும் ஏற்றுக்கொள்ளும்படி வேண்டுகிறோம். அஞ்சல் செலவை அனுப்பி வைக்கும் அன்பர்களுக்கு, தமிழ் நாள்காட்டிகள் அன்பளிப்பாக அஞ்சலில் அனுப்பி வைக்கப்படும்.

தமிழ் நாள்காட்டிகள் வேண்டுவோருக்கு, அஞ்சலில் அனுப்பி வைக்கும் பெரும்பணியை மனமுவந்து ஏற்றிருக்கிறது யாப்பு வெளியீடு.

அஞ்சலில் வேண்டுவோருக்கு இரண்டு தமிழ் நாள்காட்டிகள் அன்பளிப்பாக அனுப்பி வைக்கப்படும். இதற்கான அஞ்சல் அனுப்புகைச் செலவு உரூ 40/- மட்டும் செலுத்தினால் போதுமானது. கூடுதலாக நாள்காட்டிகள் வேண்டுவோர் அதற்குரிய செலவுத் தொகையை மட்டும் ஏற்றுக்கொள்ளல் வேண்டும். 

தமிழ் நாள்காட்டிகள் அஞ்சலில் பெறவும், சென்னை வட்டார அன்பர்கள் நேரில் பெறவும் தொடர்பு கொள்க:

திரு. செந்தில் வரதவேல்,

யாப்பு வெளியீடு, சென்னை.

பேச: 90805 14506.

*

தோழமையுடன்

ஏர் மகாராசன் 

செம்பச்சை நூலகம்,

மக்கள்தமிழ் ஆய்வரண்,

வேளாண் மக்கள் ஆய்வுகள் வட்டம்.

01.01.2023