அந்தந்தக் காலகட்டத்தில் சாத்தியப்பட்ட பாடுகளத்திற்குள்ளும் பெண்ணின் குரலைப் பதிவு செய்யும் முயற்சிகள் பெண் கவிஞர்களிடம் இருந்திருக்கின்றன. இந்த வரிசையில் செங்கோட்டை ஆவுடையக்காளின் குரலும் தமிழ் இலக்கியப் பதிவில் குறிப்பிடத்தக்க ஒரு பதிவாக அமைந்திருக்கிறது.
இதுவரையிலான மற்ற பெண் கவிஞர்களிடம் பெண்நிலை சார்ந்த இலக்கியச் செறிவு மட்டும் காணப்படுகின்றது. ஆவுடையக்காளிடமோ இலக்கியச் செறிவோடு தத்துவச் செறிவும் காணப்படுகிறது. தத்துவ நோக்கில் ஆவுடையக்காள் எழுதிய கவிதைகள் 'செங்கோட்டை ஸ்ரீஆவுடையக்காள் பாடல் திரட்டு' எனும் நூலாக வெளிவந்திருக்கிறது. ஆயினும், இந்நூல் பற்றிய குறிப்புகள் பெரும்பாலான தத்துவ மற்றும் இலக்கிய வரலாற்று நூல்களில் காணப்படவில்லை.
தமிழ்ப் பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள 'வாழ்வியல் களஞ்சியம்' இரண்டாம் தொகுதியில் 'ஆவுடையம்மாள்' எனும் தலைப்பில் சிறு குறிப்பு மட்டுமே காணப்படுகின்றது. ஆவுடையக்காள் பற்றியும், அவர் கவிதைகள் குறித்தும் விரிவான முறையில் அமைந்த கட்டுரை சு.வேங்கடராமன் எழுதிய 'அறியப்படாத தமிழ் இலக்கிய வரலாறு' எனும் நூலில் உள்ளது.
தத்துவச் செறிவுமிக்க ஆவுடையக்காளின் கவிதைகளில் பெண்நிலை சார்ந்த வெளிப்பாடுகளும் காணப்படுகின்றன. தத்துவத் துறையினுள் பெண்ணாக நுழைந்து பெண்நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருக்கும் பாங்கை அவரின் கவிதைகளின்வழி அறிய முடிகின்றது.
செங்கோட்டையில் அந்தணர் குடும்பத்தில் பிறந்தவர் ஆவுடையக்காள். தமிழ்நாட்டின் நெல்லை மாவட்டம் தென்காசிக்கு அருகில் உள்ள கிபி.17ஆம் நூற்றாண்டுக் காலகட்டத்தில் பிறந்த இவருக்கு, அன்றை அந்தண சமூக வழக்கப்படி குழந்தைப் பருவத்திலேயே மணம் செய்விக்கப்பட்டிருக்கிறது. ஆவுடையக்காள் குழந்தைப் பருவமாய் இருக்கிறபோதே விதவை ஆகிறார். பருவம் எழுதிய பின்னர் விதவைக் கோலம் கட்டாயமாகப் பூணப்பட்டிருக்கிறது. இளம் பருவத்திலேயே விதவைக் கோலம் பூண்டது ஆவுடையக்காளுக்குப் பெரும் துயரை ஏற்படுத்தி இருக்கிறது. ஆவுடையக்காளின் விதவைநிலை குறித்து 'ஆவிடையம்மாள் சரித்திரம்' கூறும்போது, பெற்றோரால் பாலியத்தில் விவாகம் அடைந்த அவளது பர்த்தா பரகதி அடையவே தன் கிரியை நினைத்து நினைத்து ஆறாத் துயரம் அடைந்து, பின் ஒருவாறு தன் விவேகத்தால் தேர்ந்து, உலகை வெறுத்து, ஒன்றிலும் பற்றுதலும் இன்றி இருந்தாள் என்கிறது.
ஆக, அன்றைய காலத்தின் சமூகச் சடங்குகளாலும், குலம் கோத்திரங்களாலும், தமது வாழ்வு பறிக்கப்பட்டதை எண்ணி எண்ணித் துன்பத்தில் உழன்று தவிக்கும் பெண்களுள் ஆவுடையக்காளும் ஒருவராக இருந்திருக்கிறார் என அறிய முடிகிறது.
அக்காலத்தியச் சமூகத்தின் பொதுத்தளத்தில் ஓரங்கட்டப்பட்ட வாழ்நிலைக்குத் தள்ளப்பட்டவர்களாய்ப் பெண்கள் இருந்தனர். அத்தகையச் சூழலில், பெண்கள் விதவையாக்கப்படும்போது முழுவதுமான அந்நியப்பட்ட வாழ்நிலைக்கு ஆட்படவேண்டியிருந்தது. உயிர் வாழும் ஒவ்வொரு நொடிப்பொழுதும் சித்திரவதைகளை அனுபவிக்க வேண்டிய கொடுமைகள் விதவையாக்கப்பட்ட பெண்களுக்கு நேர்ந்திருக்கிறது.
உடலை வருத்தியும் மனதை அடக்கியும் எவ்வித இன்ப துன்பங்களையும் பகிர்ந்து கொள்ளவும் முடியாமல் தவித்த பெண்கள், தங்களுக்கான வடிகாலாய்த் தேர்ந்தெடுத்தது பக்திக்களம்தான். இப்பக்தி நிலையின் வழியாக உலகியல் துன்பங்களை மறப்பதற்கான மடைமாற்றுத் தளமாகக் கைக்கொண்டவர்களில் ஆவுடையக்காளும் ஒருவர் எனலாம்.
தத்துவநிலை சார்ந்து தமது கருத்துகளை வெளிப்படுத்தும் ஆவுடையக்காள், அதனுள்ளும் பெண்நிலை சார்ந்த கருத்துகளையும் வெளிப்படுத்தி உள்ளார் என்பது மிக முக்கியமான ஒன்றாகும். ஆண்வழிச் சமூக முறைமைகள் பெண்ணைக் குறித்துப் பல்வேறு கருத்தியல்களை உருவாக்கியும் நடைமுறைப்படுத்தியும் வருகின்றன. அத்தகையக் கருத்தியல்களில் 'தீட்டு' என்பதும் ஒன்று.
பெண் தீட்டானவர்; பெண்ணுடல் தீட்டானது என்பதான கற்பிதங்கள் பெண்ணைப் பல்வேறு தளங்களில் விலக்கி வைத்திருக்கின்றன. இந்நிலையில், தீட்டுக்கு எதிரான கலகக் குரலைத் தமது கவிதைகள் மூலம் வெளிப்படுத்துகிறார் அக்காள்.
பெண்ணுக்கென்று வரையறுக்கப்பட்ட வெளிகளில்தான் பெண்கள் நடமாடவேண்டும்; மற்ற வெளிகளில் பெண்கள் நடமாடக் கூடாது; அவ்வாறு பெண்கள் நடமாடிவிட்டால் அவை தீட்டுக்கு ஆளாகிவிடும் என்பதான கருத்து நிலைக்கு எதிராகக் குரல் எழுப்புகிறார் அக்காள்.
எச்சில் எச்சிலென்று
புலம்புகிறாய்;
மானிடர்கள் எச்சில்
இல்லாத இடமில்லை.
சில்லெச்சில் மூர்த்திகையில்;
ஈஎச்சில் தேனல்லவோ!
என்றைக்கும் உண்ணும்
தாய்முலை எச்சிலன்றோ!
மச்சமெச்சில் நீரில்வந்து
முழுகும் மறையோர்கள் எச்சில்.
பச்சைக்கிளி கோதும்
பழம் எச்சிலன்றோ!
தேரை எச்சில் தேங்காய்
சிறுபூனை எச்சில்;
தேசமெல்லாமே
எச்சிலென்று அறிவேன்.
எச்சிலுந்தன்
வாயும் உடலும் ஆகமாயிருக்கையிலே
பாதம் எச்சில் என்று
அலம்ப சுத்தமாச்சோ? (ஆ.பா.தி.ப90)
என்ற ஆவேசமான குரலை வெளிப்படுத்துகிறார் அக்காள்.
மேலும், பெண்ணும் ஆணும் ஒன்றுதான். சக்தியும் சிவனும் ஒன்றான வடிவில் இருக்க, பெண் எப்படி தனியே தீட்டானவராக இருக்க முடியும் என்ற கேள்வியை அக்காள் எழுப்புகிறார். அதை,
சாஸ்திரமாய்
கோத்திரமாய்
ஜாதிவர்ணாசிரமுமாய்
ஸத்பாத்திரமும்
தீட்டல்லவோ அறியாள்.
சக்தி சிவமே
சராசரமாய் நிற்கையிலே
எதுவும் கர்ம மூடருக்கு
இருட்டாச்சே (ஆ.பா.தி.ப91) என்ற கவிதையில் வெளிப்படுத்துகிறார்.
தீட்டு என்பதை, சாத்திரங்களும் சம்பிரதாயங்களும் வர்ணாசிரம தர்மங்களுந்தான் ஏற்படுத்தியவை. மனிதர்கள்தான் தீட்டு என்பதை நடைமுறைப்படுத்தி வருகிறார்கள். பெண்ணும் ஆணும் கடவுளாய் அமைந்திருப்பதை அறியாத மூடர்களே தீட்டை நடைமுறைப்படுத்துகிறார்கள் என்கிறார் ஆவுடையக்காள்.
பெண்ணின் உடலில் நிகழும் இயற்கை மாற்றங்களான குருதிப்போக்கு நிகழ்வையும் தீட்டு என்றுதான் ஆண்வழிச் சமூகம் கருதி வைத்திருக்கின்றது. பெண்ணின் குருதிக் கசிவைத் தீட்டென்று சொல்லும் சமூகம், காயம்பட்ட ஆண்களின் குருதிக் கசிவைத் தீட்டென்று உரைப்பதில்லை.
மனித உற்பத்தி நிகழ வேண்டுமானால் பெண்ணுக்குக் குருதிக் கசிவு ஏற்பட்டாக வேண்டும். பெண்ணின் அக்குருதிதான் காமத்தை, குழந்தையை உண்டு பண்ணக் கூடியது என்ற பெண்நிலை சார்ந்த பதிவை ஆவுடையக்காளின் கவிதையில் காணமுடிகின்றது. அதை,
முந்தின தீட்டெடுத்து
முத்தமிடும் தொட்டிலிலே,
கர்த்தனோடு சூத்திரத்தைக் காணார்.
காமத்தீட்டுரைந்து
கைக்குழந்தையாயிருந்து
ஆமையைப்போல முழுக
சுத்தியாச்சோ (ஆ.பா.தி.ப91)
என வெளிப்படுத்துகிறார்.
மேலும், மாதந்தோறும் நிகழும் குருதிப்போக்கு நாட்களில் துயரமும் அவலமும் பெண்ணுக்குத்தான். ஆனால். பெண்ணைத் தீட்டென்று விலக்கி வைத்திருக்கும் ஆண்களிடம் காணப்படுகிற 'அகத்தீட்டு' போய்விடவில்லை. இதைப் பெண்நிலை சார்ந்த ஓர் எதிர்ப்புக் குரலாகவே வெளிப்படுத்துகிறார் அக்காள்.
தீட்டென்று மூன்று நாள்
வீட்டைவிட்டு விலக்கித் திரிந்துவிட்டு சித்கனத்தை மறந்து மதியிழந்து
நாலாநாள் உதயத்தில் நன்றாயுடல் முழுகி நடுவீட்டில் வந்திருப்பாய்
நான் சுசி என்றுரைத்து.
தீட்டென்றும்
பெண்ணினுடைய தேகத்துக்குள்ளிருக்க தேகமேல் முழுகிவிட்டால்
தீட்டோடிப் போமோ?
ஆசார மாச்சுதென்று ஐந்தாநாள் முழுகி அகத்திலுள்ள பொருள்தொடுவாய் அகத்தீட்டுப் போச்சோ (ஆ.பா.தி.ப145) என, தீட்டுக்கு எதிரான பதிவைத் தமது கவிதைவழி வெளிப்படுத்துகிறார். ஆவுடையக்காள்.
தத்துவ நிலைப்பாட்டினுள்ளும் பெண்நிலை சார்ந்து வெளிப்படும் ஆவுடையக்காளின் குரல் 'தீட்டு'க்கு எதிரான முரணைக் கொண்டிருக்கிறது. 'தமிழ் இலக்கிய மரபில் இப்படியான பெண்மொழியையும் பெண்ணின் மாதவிலக்கு - அது தீட்டு என்பதை எதிர்த்துப் பெண் எழுப்பும் கலகக் குரலையும் ஆவுடையக்காள் பாட்டில்தான் முதன்முதலாகக் கேட்கிறோம்' என்பது குறிப்பிடத்தக்கது.
மகாராசன் எழுதிய 'தமிழில் பெண்மொழி மரபு' நூலில் இருந்து...
மிக அற்புதமான விளக்கம்
பதிலளிநீக்குஅவசியம் நூலை வாங்கி வாசிக்கிறேன்
நன்றிகள் அண்ணா 🙏
செம்ம
பதிலளிநீக்குசிறப்பு..பாரி
பதிலளிநீக்கு