திங்கள், 2 செப்டம்பர், 2024

மொழியில் வழியும் நிலத்தாயின் பசுங்கரங்கள் - கவிஞர் இளையவன் சிவா


நிறைய ஆய்வு நூல்கள், கட்டுரை நூல்கள், உரைநூல், தொகுப்பு நூல்கள்  எனத் தமிழின் பல்வேறு தளங்களில் இயங்கி வரும் மகாராசன் அவர்கள், ஏர் இதழை நடத்தியவர். பெண்மொழி குறித்த ஆய்வில் முனைவர் பட்டம் பெற்றவர். தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக நாடகத்துறையில் நாடகக் கலைச்சொல் களஞ்சிய அகராதி உருவாக்கத்தில் திட்டத் தகைமையராகப் பணியாற்றியவர்.

தமிழ்ச் சமூகம், மொழி, கலை, இலக்கியம், வரலாறு, பண்பாடு, கல்வி தொடர்பாகப் பல்வேறு நூல்களை எழுதி இருக்கிறார். 


அறிவுச் செயல்பாடுகளுக்கு உதவும் வகையில் செம்பச்சை நூலகம் ஒன்றை உருவாக்கி இருக்கிறார். மக்கள் தமிழ் ஆய்வரண் மற்றும் வேளாண் மக்கள் ஆய்வுகள் வட்டம் வழியாகச் சமூகப் பண்பாட்டியல் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்.  இவரது இரண்டாவது கவிதைத் தொகுப்பு ‘நிலத்தில் முளைத்த சொற்கள்’.


‘அவரவர் ஆதி 

அவரவர் உயிருக்குள் 

அவரவர் வழித்துணை 

அவரவர் எண்ணத்தில் 

அவரவர் தாயும் 

அவரவர் நிலமும் 

ஒன்றென எண்ணும் 

உள்ளம் வாய்த்திடில் 

அவரவர் பண்பாடு 

அடுத்தடுத்துச் சிறப்பாகும்’

என்பதையே ஆதாரமாக்கும் கவிதையுடன் ஆரம்பிக்கிறது இந்த நூல். 


‘நிலமிலந்து போனால் 

பலமிழந்து போகும் 

பலமிழந்து போனால் 

இனம் அழிந்து போகும் 

ஆதலால் மானுடனே 

தாய் நிலத்தைக்

காதலிக்கக் கற்றுக்கொள்.’

நிலமும், நிலத்தின் வழியே நீளும் உறவும், உறவுகளின் நகருதலில் விளையும் சொற்களுமே எல்லாவற்றின் ஆதி என எழுந்து நிற்கிறது.  


மனிதன் தனித்துவமானவன் அல்ல. கூட்டு வாழ்க்கையில் எல்லா நிலையிலும் அவன் சார்ந்து வாழ்வது நிலத்தையும் நிலத்தில் முளைத்திடும் நம்பிக்கையையும் அல்லவா.  தன்னை நிறைத்துக் காற்றின் வெளியில் மண்ணைச் சுவாசிக்கும் ஆதிக் குடிகளின் பண்புகளைத் தனக்குள் வைத்திருக்கும் மனிதன் நாகரீகத்தை ஏந்தத் தொடங்கிய போதும் தொன்மங்களின் தன்மைகள் வழிகாட்ட வந்து நிற்பதை உணர முடிந்தவனாகி விடுகிறான். 


உழன்றும் உழவே தலை என்ற ஐயனின் வாய்ப்பாட்டில் இன்றைக்கு நிறையப் பேருக்கு ஐயம் நிறைந்து விடுகிறது. இதுவே அவரவர் மண்ணை வெற்று நிலம் என்று நம்ப வைத்து விடுகிறது. நிலம் நம்மைத் தாங்கும் உயிர்ப் பை என்பதை உணராத தலைமுறையினருக்கு மண்ணும் கல்லுமே நிலம் ஆகி விடுகிறது.


ஆதிமனிதன் தன்னையே ஒப்படைத்து நிலத்தைச் சீராக்கி அதிலேயே தன் ஆயுளையும் வளர்த்துக் கொண்டு சந்ததிகளை நீட்டித்தல் என்பது நிலம் அவனுக்கு வழங்கிய கொடை என்பதை இன்றைய மனிதர்களுக்கு உணர்த்துதல் காலத்தின் கட்டாயம் ஆகி விடுகிறது. 


உழுதவனின் பாடுகள் உரைக்க முடியாத சூழலில் வானம் பொய்த்துப் பயிரைக் கருக்குகிறது. ஆளும் அதிகார வர்க்கமும் வாழ்வை நகர விடாமல் இருட்டுக்குள் தள்ளுகிறது. இயற்கையின் சீற்றமும் புயலும் மழையும்  மொத்தமாக வேரோடு பிடுங்கி எறிகிறது. காடுகளும் மேடுகளும் தரிசுகளாகத் திரிவதை எந்த உழவனாலும் சகித்துக் கொள்ள முடியாமல் சவலைப் பிள்ளையின் மீது கரிசனம் காட்டும் தாய்மையைப் போல நிலத்திலேயே கதி எனக் கிடக்கிறான் உழவன்.  


இயற்கையை ரசித்து அதன் வாழ்வியலை வழிகாட்டுதலையே உழவுக்கான வழி என்று ஏந்தி நடந்திடும் உழவனின் பாடுகளைச் சொற்கள் எங்கும் எடுத்துச் சென்று மனங்களுக்குள் விதைக்கத் தொடங்குகின்றன. அதுவே 

"கருப்பம் கொண்ட 

பிள்ளைத் தாய்ச்சியாய் 

உயிர்த்தலைச் சுமக்கின்றன 

நிலம் கோதிய சொற்கள்" 

என நிலத்தையே தனக்கான ஆதித் தாயாகக் கவிஞரை வணங்க வைக்கிறது. 


தமிழ் மொழி, தமிழின் பண்பாட்டுச் சித்திரங்கள், அதன் வழியான நாகரீக அசைவுகள், தமிழ் ஈழம் எனத் தன்னை முழுமைக்கும் தமிழுக்குள் ஒப்புக்கொண்டு, சமுதாயத்தில் பண்பாட்டின் அடுத்த நகர்தலைத் தமிழுக்கானதாக மாற்றிக்கொள்ளத் துடிக்கின்றன இதில் முளைத்திருக்கும் எழுத்துப் பயிர்களும், அவை விளைத்திடும் கருத்துக் கதிர்களும்.


இறை வழிபாடுகள் தொடங்கியதன் வரலாற்றை ஆய்வு செய்கையில், மனிதனின் பயமும் அச்சமும் அவநம்பிக்கையும் புற வாழ்வின் நெருக்குதல்களில் இருந்து அவனைப் பாதுகாத்துக்கொள்ள ஏதோ ஒன்றை நாடிச் செல்லத் தூண்டுகின்றன. அதுவே அவர்களுக்கு ஒற்றைக் கல்லையும் தெய்வமென வணங்கும் உயிர்த்தன்மையைக் கொடுத்தன. 


நதிகளும் நாகரீகங்களும் வளர்த்துவிட்ட நற்பொழுதில்தான், குடிசைகளில் இருப்பினும் கடவுளை கட்டடம் கட்டி, கோபுரத்தில் அமர்த்தி, கருவறைக்குள் வைத்து வணங்கிடத் துடித்திட்ட கரங்களின் முயற்சியில் நம்பிக்கைகள் பலித்தன. ஆயினும், மண்ணும் மண்ணைச் சார்ந்த மனிதர்களும் தங்களுக்கான வாழ்வை வாழ முடியாது. 


இயற்கையோ இடர்பாடுகளோ இடையூறுகள் தந்து நிலத்தை நஞ்சாக்கி விட்டபின், ஆலயங்கள் கவனிப்பாரற்று இருண்டு போகின்றன. புஞ்சையும் நஞ்சையும் புழுதியும் பறிபோன பின்னே எல்லாத் திசைகளையும் வெறித்துப் பார்க்க மட்டுமே முடிகிறது இழந்தவன் பாடு. வழக்கம் போலவே கண்களை மூடி இன்னும் தியானிக்கும் கடவுளுக்கு எப்போதுதான் இளைத்தவன் பாடு தென்படக்கூடும் என உரத்துக் கேட்கிறது எழுதப்படாத எனதூர்த் தல புராண வரலாறு.

"கருவறைக்குள் 

ஒளிந்திருக்கும் தெய்வம் 

எப்போதும் போலவே 

வெளிவருவதாய்த் திட்டம் இல்லை இப்போதும்.

எழுதப்படாமலே போனது 

எனதூர்த் தல புராணம்.""


நிலம் தன்னை உயிர்பிக்க மேனியில் முளைத்திடும் மரங்களின் பசுமையை நீட்டித்து விடுகிறது. வானத்தின் கருணை தலை நீட்டாத போதும் மேகத்தின் பார்வை நிலத்தைக் கவனிக்காது போயினும், வேர்களை நீட்டி வெறுமையைப் புறந்தள்ளும் செடிகளின் உயிர்த்தல் இயற்கையின் தனிச்சிறப்பான பின், உழவனின் மனதிலும் இறுகப்பற்றி இருக்கும் ஈரத்தை எடுத்துக் கொள்ளும் நிலமே உயிர்களின் இசையை மீட்டெடுக்கிறது. 


தன்னை உயிர்பிக்கும் நிலத்தில் இருந்தே தனக்கான சொற்களை ஏற்றுக் கொண்ட கவிஞரின் சிந்தனைகளிலும் மண்ணும் மண்ணைச் சார்ந்த மக்களின் பாடுகளுமே பூத்து நிற்கின்றன.


தன்னிடமிருந்து நிலம் பறிக்கப்பட்ட நாளில் மிச்சமிருந்த நம்பிக்கையை இழந்துவிட்டவனுக்கு யாசிப்பதில் மனமில்லை. நிலத்தைக் கடவுளாக்கி தன்னைத் தந்து உயிர்ப்பித்தவனுக்குப் பறிபோனது நிலம் மட்டுமல்ல; கொஞ்சம் மிச்சம் இருக்கும் நிலத்தின் மீதான கருணையுமே.


ஆயினும், மேன்மக்களாகவே இருந்தவனிடத்தில் இன்னும் மிச்சம் இருக்கிறது அன்பின் ஒளி.  இரக்கமற்றவனையும் தன்னைத் துரத்தி விட்டவனையும் கருணையால் பார்த்திட சூழலையும் நேசிக்கும் ஒருவனால் மட்டுமே முடிகிறது. 


நிலத்தை நேசித்து வாழும் பறவைகளின் அசைவுகளுக்குள் மனதை ஒட்ட வைத்துக்கொண்டு தனிமைப் பொழுதுகளைத் தாவிப் பறந்திடும் கவிதை வானத்தில் வழிநடத்தும் மூதாதையர்களது கால் தடங்களையும் தேடிப் போகிறது கவிஞரின் சொற்கள்.

‘வலிக்க வலிக்க 

சாவினைத் தந்த போதும் 

பசி நிரப்பிய அவளது கண்களில் 

அன்பின் ஒளிதான் கசிந்தது’


அகவெளியில் மருண்டு கிடக்கும் மனதின் ஆற்றாமைகளைத் தன்னை நீட்டி வாங்கிக்கொண்டு இளைப்பாறவிடும் சொற்களுக்குத் தாயின் தாலாட்டைப் போல், தென்றலின் தீண்டலைப் போல், பால் பொழியும் நிலவின் குளிர்ச்சியைப் போல், பொக்கை வாயால் புன்னகைக்கும் மழலையைப் போல பெருமனது வாய்த்து விடுகிறது.    


நின்று நிதானித்து வினவிப் போகாத மனித  மனங்கள் பெருகிவிட்ட விரைவுச் சூழலில் அவரவர் வலிகளை ஆற்றிடும் வல்லமை சொற்களுக்கு உண்டு என ஆறுதல் கூறுகிறது பின்வரும் வரிகள். 

‘தனித்திருந்த பாடுகளை அணைத்துக்கொண்டு 

இளைப்பாற இடம் கொடுத்தன 

பால் நிறத் தாள்கள்.

மடியில் கிடத்தி 

நீவிக் கொடுத்த ஆத்தாளாய் 

ஒத்தடம் கொடுத்து 

சொற்கோடுகளை வரையவிட்டு 

வேடிக்கை பார்க்கின்றன 

அச்சேறிய பழுப்புத் தாள்கள்.

குவிந்து கிடக்கும் 

ஒத்தடச் சொற்களால் 

தணிந்து போகின்றன வலிகள்.’


தூண்டிலில் சிக்கிக்கொண்ட மண்புழுவைப் போலவே ஆசைகளில் சிக்கிக் கொண்டு தன்னைத்தானே மாட்டிக் கொண்ட மனிதனின் வாழ்வு கரையில் துடிக்கும் மீனின் பாட்டை ஒத்திருக்கிறது. முட்டி மோதி உயிர் மூச்சைத் தேடும் வாழ்வின் மீதான தீராத ஏக்கமும் மனிதனை ஓட வைக்கிறது; துடிக்க வைக்கிறது; இயங்க வைக்கிறது. 


ஆசைப் புழுக்களின் அசைவுகள் இல்லை என்றால் மனிதனும் மாண்டு போன மீனின் மனநிலைக்கு மாறி விடுவான்.

"நீரிலே நீந்தி நீந்தித் திரிந்து 

ஈர வாழ்வில் துடிப்பசைத்து 

மிதந்த மீன்கள்,

கரை மணலில் புரண்டு புரண்டு 

நிலத்தைப் பூசிக்கொண்டு 

மீத வாழ்வின் பேறு பெற்று 

வாய் திறந்து மாண்டு போயின.

உயிர்க்கொலைப் பழியிலிருந்து 

தப்பிப் பிழைத்த நினைப்பில் 

தக்கையில் தொங்கிக் கிடந்தது 

மண்புழு கோர்த்த தூண்டில் முள்."


வாசிக்க மறந்து நேசிக்க மறந்து இனத்தின் பெயரால் காவு கொடுக்கப்பட்டு இனத்தாலேயே காட்டிக் கொடுக்கப்பட்டு மொழியின் வலிமையைப் பறைசாற்றாமல் மௌனத்தின் மீது மக்களுக்குக் கல்லறையில் எழுப்பி விட்ட இனத்தின் மிச்சத்தையும் கொன்றுவிட்ட ஆதிக்கத்தை என்ன செய்து அடக்கி விட முடியும்? இனத்தின் பசியும் நிலத்தின் வலியும் நிரப்பி வழியும் பெருந்தாகத்தில் பாலச்சந்திரனின் கண்களைப் போலக் காத்திருக்கும் எல்லோரது விழிகளும் மூடித்தானே கிடந்தன. பசித்த கண்களை அப்படியே கல்லறைக்கு அனுப்பி விட்ட மனப்பாங்கை கேள்வி எனச் சாட்டை வீசுகிறது பாலச்சந்திரனின் கண்கள்.


மனிதக் காலடிகள் படாத பூமியின் எத்தனையோ நிலங்கள் இன்னும் இயற்கையைச் சுமந்தபடி உலாவிக் கொண்டிருக்கின்றன. ஆணவமும் பொறாமையும் வன்முறையின் வடிவமும் பழிவாங்குதலின் வெறியும் விளைந்து கிடக்கும் மனிதனின் கால் தடங்கள் நிலத்தை முட்டுகையில் அசைந்து கொண்டது இயற்கை. 


இயற்கையின் மேனி நரம்புகளை அதிரடியாக அறுத்து எறிந்து விட்டு இசையைத் தேடிய பயணத்தில் இளைப்பாறத் திணறும் மனிதனை நில மங்கை எண்ணி எண்ணி வருந்துகிறாள். 


பெருநகரத்தின் வியப்புக்குள் தனக்கான வாழ்வை மீட்ட முடியாத கண்ணகியின் அவலத்தை வார்த்தைகளின் வலி சுமந்து விடுவதில்லை. கணவருடன் நடத்திடாத இல்லறத்தை எண்ணி தாலாட்டு கேட்காத மனத்தொட்டிலுக்குள் தன்னையே ஆட்டிக் கொண்டவளுக்கு அணையாத தீ எழுந்தபின் எதைக் கொண்டும் ஆற்ற முடியவில்லை அவளது நெருப்பை  என்பதை 'காலத்தடங்களின் கங்குகள்' இன்னும் சுமந்து அலைகின்றன என முடியும் கவிஞரின் எண்ணத்தில் மேடை போடுகிறது பிறரின் மீதான பேரன்பு. 


மனிதனை நேராக்கி வாழ்ந்திடவும் வளர்த்திடவும் விதைகள் தூவிய வனத்தின் அடிமடியில் கை வைக்கும் பேராசை வளர்ந்த பின்னே, இயற்கையும் செழிப்பும் பசுமையும்  பண்பாடுகளும் காணாமல் போய்விடுகின்றன. 


தன் தலையில் தானே மணலை அல்ல; சேற்றை வாரி இறைத்துக்கொண்ட மனிதனின் கொடுமைக்கு இயற்கையும் வனமுமே முற்றுப்புள்ளி வைக்கத் துவங்கி விட்டன. ஆயினும் தவறைத் திருத்திட தன் மகனைக் காவு கொண்ட இயற்கைக்குள்ளும் முளைத்து விடுகிறது தாய்மையின் பேரன்பு என்பதையே  "பித்துப் பிடித்து அலையும் வனத்தாய்ச்சி" கவிதை உரக்கச் சொல்கிறது.


வாழ்தல் என்பதன் அர்த்தம் என்ன? கனவுகளை ஈடேற்றலா?

காலத்தின் நகர்தலா? 

பிள்ளைகள் வளர்ச்சியா? 

பெருஞ்செல்வம் ஈட்டலா? 

திட்டமிடுதலின் தேவைகளில் நொடிக்கொருதரம் திசை மாறும் மனப் பறவையின்  வாழ்க்கை 

காலத்தில் கரைதல் அன்றி வேறென்ன?


காதலைச் சொல்லும் சொற்களிலும் மண்ணில் புரண்டு எழுந்து ஒட்டிக்கொண்ட புழுதியின் வாசம் நிரம்பி விடுகிறது. இயற்கையின் மீதான நேசம் உயிர்களின் மீதான பாசமுமே  காதலென மலர்ந்து, சொற்களுக்குள் சுக ராகம் மீட்டிக் கொள்கின்றன.  பூக்களும் பூக்கள் நிமித்தமும் மழையும் மழை நிமித்தமும் நினைவுத்த தடங்களில் அலையென மோதிக் கொண்டிருக்கும் காதலை மீள் உருவாக்கம் செய்து விடுகின்றன கவிஞரின் காதல் சொற்கள்.


உழவனை வணங்காத வாழ்வை உயிர் எனச் செப்புதல் கூடாது என்ற வள்ளுவனின் வாக்கியம், வேகமான அவசர யுகத்தில் இன்றைக்கு யாருக்கும் நினைவில் வருவதில்லை. உயிர்ச்சாமிகளென உலவும் உழுகுடிப் பாதங்களை மதிக்காதவர்கள் ஒருபோதும் நிம்மதி அடையப் போவதில்லை. 


காலச்சக்கரத்தின் சுழற்சிச் சமநிலை சரியாகும் போது செம்பாதங்களை வெண்பாதங்களின் கைகள் தொழும் என்பதை விளக்கும் கவிஞரின் உழைப்பு உழைப்பின் உயிரோட்டத்தை அறிவுறுத்திச் செல்கிறது. 

"நிலத்தில் இந்தப் பாதங்கள் 

நாளை இறங்கவும் மறுக்கும்போது 

வெண் பாதங்களின் கைகளும் தொழும்"

என்று முடிகிறது.


கவிதைத் தொகுப்பின் மொத்த வரிகளையும் உள்ளடக்கி ஆகச்சிறந்த கவிதை என ஓடிக் கிடக்கும் பேரன்பை இக்கவிதை முழுவதும் பரப்பி நிற்கிறது.

"சொல்லளந்து  போட்டவனுக்கும் 

நெல்லளந்து போடுறது தானப்பா சம்சாரிக வாழ்க்க".

என்ற உலகத்திற்கான பெருங்கருணையை விதைத்து நிற்கும் பெண்ணின் மனசு தான் நூல் முழுக்க அலை பாய்கிறது.


உயிரின் அடிப்படை வாழ்வை நாசமாக்கி, உயர் குடும்பத்தை உலாவ விடும் அதிகாரத்தின் கரங்கள் இன்னும் நீளுமானால், உணவுக்கும் உடைக்கும் நீருக்கும் காற்றுக்கும் தேடியலைந்தே செத்துப் போகும் உலகம் என்பதை இக்கவிதையின் வழி அறச்சீற்றமெனச் சாபமிடுகிறது கவிஞரின் ஆற்றாமை.

"வயலைப் பாழ்படுத்தி 

பயிர்களைச் சாகடித்துதான் 

விளக்கெரிய வேண்டுமெனில் 

வயிறு எரிந்து சாபமிடும் 

உழவர்கள் தூற்றிய மண்ணில் 

எல்லாம் எரிந்து சாம்பலாகி 

நாசமாய்ப் போகட்டும்".


அன்பில்லாத வாழ்வும் புரிதல் இல்லாத இல்லறமும் நம்பிக்கை துறந்த நட்பும் எப்போதும் இழப்புகளையே பிரசவிக்கின்றன. 

"உதடுகள் குவித்துப் பருகிய 

காதலற்ற முத்தங்களால் 

கசங்கிக் கிடக்கின்றன 

எச்சில் கோப்பைகள்".



உழவின் வரலாற்றை, உழவனின் ஓயாத உழைப்பை, வியர்வைத் துளிகளின் விளைச்சலை  கலப்பையில் கைப்பிடித்த காய்ப்புகளுடனும் கழனியில் வேரூன்றிப் போன கால்களுடனும் உணவை விளைவிக்கிறது நிலத்தின் பொறுமை என்பதை ஒளிக்காட்டி என இறைத்துச் செல்கிறது இந்த வரிகள்.


"கிழக்கத்தி மூலையில் 

ஒளித் துகள்களை 

விதையாய்ப் பாவிக்கொண்டு 

வெளிர் வானத்தில் நடந்து வரும் 

சூரிய மேனியின் மினுப்பில் 

வெளிச்சப் பூச்சை அப்பிக் கொண்டு 

ஒயில் முகம் காட்டுகிறது 

நஞ்சை நிலம்"

மனிதர்களின் மீதான நிலத்தின் தாய்மையை விதைத்துச் செல்லும் இந்த வரிகளே போதும் மனிதர்களை எல்லா துன்பத்திலிருந்தும் விட்டு விடுதலை ஆக்கிட.


"உழவு நிலத்தின் 

ஈரப்பாலை உறிஞ்சிக் குடித்து முளைகட்டிய விதைச் சொற்கள் வெண்முகம் காட்டிச் சிரித்தன.

வாழ்தலின் பேரின்பத்தை 

மணக்க மணக்கப் பாடியது 

பூப்பெய்திய காடு".


நூலின் அட்டைப்பட ஓவியம் வெகு அருமை. மிகச் சிறப்பானதொரு கட்டமைப்பில் ஓவியம் நூலின் முழுப்பாட்டையும் எடுத்துக் கூறுகிறது. அதேபோல் உள்பக்கங்களில் உள்ள கோட்டோவியங்களும் கவிஞரின் பாடுபொருட்களைப் பறைசாற்றி நிற்கின்றன.


உயிர்த்தலைச் சுமக்கும் நிலம் கோதிய சொற்கள்,

நெய் கசிந்த மாடக்குழிகள், 

மண் மீட்டிய வேர்களின் இசை, பாலச்சந்திரனின் கண்கள், 

இருட்டில் பெய்த சிறு மழை, காலத்தடங்களின் கங்குகள், 

மன்றாட அலையும் வனத்தாய்ச்சி, தன்னைத் தொலைத்த மனப்பறவை, பழுப்பேறிய நாட்குறிப்பின் நினைவுகள், உழுகுடிப் பாதங்களின் கொப்புளங்கள், கசப்பாய் முளைத்த கனவுகள், உக்கிப் போனது நிலம்,

சம்சாரிகளாய்ப் பிறந்ததன் வலி சாவிலும் கொடிது, நீர் முலைத் தாய்ச்சிகள், 

வழக்குச் சொல்லிலை, 

பெரு முதலைகளின் வைப்பாள்கள், 

வானம்  பாவிய துளி விதைகள்,

துரோகப் பருந்து, ஊழிப் பாம்பு,

கடல் தாய்ச்சி,  முளைகட்டிய விதைச்சொற்கள், 

களவு பூ  என்ற சொற்சித்திரங்களில் பூத்திருக்கும் இந்த கிராமத்து பசும்பூ நம் நினைவுகளில் எப்போதும் ஈரத்தையும் மண்ணின் பிசுபிசுப்பையும் ஒட்ட வைத்துக் கொண்டே இருக்கின்றது. 


தனது படைப்புகளை உருவாக்கும் அழகியலிலும் அரசியலிலும் மிகத் தெளிவான சொற்களையும் பொருத்தமான கருத்துக்களையும் பிணைத்திடும் கவிஞரின் பாங்கில் கலை மீதான பெருமதிப்பும் பேரின்பமும் விளைந்து நிற்கிறது. 


தமிழ்ச் சமூகம் மறந்து போன கால வெள்ளத்தின் ஓட்டத்தில் மறைந்து போன வேளாண் மரபைப் பற்றிய தரவுகளையும் பண்பாட்டு அசைவுகளையும் மீளுருவாக்கம் செய்து, இலக்கியத்தின் வழி தமிழ் அடையாளத்தை மீட்டெடுக்கும் போராளியாக தனது கடுமையான உழைப்பாலும் தொடர்ச்சியான செயல்பாடுகளாலும் முன்னிற்பவரின் எழுத்தும் அவற்றையே எதிரொலிக்கின்றன.   


உழுகுடிக்குள் நம்மை உட்புகுத்தி, வயல் பாத்திக்குள் நம்மை உழைக்க வைத்து, சொற்கதிர்களால் மனப் பசிக்கு உணவிட்டு, நகரச் சந்துகளுக்குள் கிராமத்தின் புழுதியைப் பரப்பி இருக்கிறது நிலம் உருவாக்கிய சொற்களின் தொகுப்பு.

*

கட்டுரையாளர் :

கவிஞர் இளையவன் சிவா,

ஆசிரியர்,

பொள்ளாச்சி இலக்கிய வட்டம்.

*


நிலத்தில் முளைத்த சொற்கள்,

மகாராசன்,

யாப்பு வெளியீடு,

பக்கங்கள் - 112, 

விலை: ரூ100/- 

(அஞ்சல் செலவு உட்பட).

புத்தகம் தேவைக்கு 

பேச : 9080514506

*
நன்றி:
நடுகல் இதழ், செப்டம்பர் 2024.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக