மகாராசன் ‘சொல் நிலம்’ (ஏர் வெளியீடு, 2017) கவிதைத் தொகுப்பினை அடுத்து ‘நிலத்தில் முளைத்த சொற்கள்’ (யாப்பு வெளியீடு, 2024) எனும் கவிதைத் தொகுப்பைத் தந்துள்ளார். கருத்துலகிற்குப் பல நூல்களைத் தந்தவர், இதன்வழியாகப் படைப்புலகத்திற்குள் தன்னைத் தடம் பதித்துள்ளார். இவரின் இரு வேறு தொகுப்புகளின் பொருண்மை ஒன்றாக இருப்பினும் கவிதைகளின் மொழிதல் மாற்றம் பெற்றிருக்கிறது என்றே கூறவேண்டும்.
நிலமும் நிலம்சார்ந்த நிமித்தமும் என்று கூறுமளவிற்கு இவ்விரு தொகுப்புகளும் ஐந்து திணை உரிப்பொருள்களுக்கு அப்பால் நிலம் சார்ந்த புது உரிப்பொருளில் அமைந்துள்ளது. நிலமும் நிலத்தைச் சுற்றிச் சுழலும் வாழ்வியலை மட்டுமே தனக்கான படைப்பு வெளியாகக் கொண்டிருப்பதை இவரின் இவ்விரு படைப்பாக்கங்களின் வழி அவதானிக்கலாம்.
தமிழில் புதுக்கவிதை மரபில் வானம்பாடிக்கவிஞர்களின் கவிதை மரபு எல்லோருக்கும் புரியக் கூடிய எளிமையான தன்மையைப் பெற்று இருப்பதோடு கவிதைகள் முற்போக்குச் சிந்தனையைத் தாங்கியுள்ளன. இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் உருவான நவீன கவிதை மரபு எல்லோருக்கும் புரியாத பூடகத் தன்மையைக் கொண்டிருப்பதோடு மாற்று மொழிதலை கொண்டிருக்கிறது.
நவீன கவிதை மரபில் இருண்மை எனும் குணநிலையைத் தன்னகத்தே கொண்டிருப்பதால் பல வாசிப்பிற்குட்படுத்தும் போது தான் அதன் பொருள்கொள்ளல் சாத்தியமாகிறது. அவ்வகையில் இருந்து மகாராசனின் கவிதைத்தளம் வேறுபடுகிறது. நிலத்தில் முளைத்த சொற்கள் கவிதைகள் யாவும் மரபிலிருந்து உருவாகி இருண்மைகளற்று மொழிதலைக் கொண்டிருக்கின்றன. ஓர் இலக்கியப் படைப்பாளி தம் படைப்பில் கலை நுணுக்கங்களையும், ரசனைகளையும் வெளிப்படுத்துவதோடு சமூக வாழ்வியலையும் தம் படைப்பில் வெளிப்படுத்த வேண்டும்.
அந்தவகையில், மகாராசன் நவீனக் கவிதை மரபில் நிலம், நிலம் சார்ந்த பருப்பொருளைக் கவிதையாக்கம் செய்ததில் புதுச்செல்நெறியில் பயணிக்க முனைகிறார்.
தொன்மை, பழமை என்று கூறப்படும் தொன்மத்தைக் கட்டவிழ்ப்பதும், கட்டுடைப்பதும், கட்டியெழுப்புவதுமான நிலையைத் தமிழ்க் கவிதைகளில் காணமுடியும்.
வானம்பாடிக் கவிஞர்கள் பெரும்பாலோர்த் தொன்மத்தை மறுவிசாரணை செய்தார்கள். எழுத்து இதழ் காலக் கவிஞர்கள் தொன்மத்தோடு பயணித்துத் தொன்மத்தைக் கட்டுடைப்பும் கட்டவிழ்ப்பும் செய்தார்கள். நவீன கவிஞர்கள் தொன்மத்தைக் கட்டுடைத்து மறு உருவாக்கம் செய்ததோடு புதுத் தொன்மத்தைத் தேடினார்கள்; பூர்வாங்கத்தைக் கவிதை வழி மொழிந்தார்கள்; தமக்கான தொன்மம் இவையெனக் கவிதைகளில் முன்வைத்தார்கள்.
ஆதித்தாயின் தொன்மத்தைத் தேடுவதாய் நிலத்தில் முளைத்த சொற்கள் கவிதைகளாய் வெளிப்பட்டுள்ளன. தாயிக்கும், நிலத்திற்கும், மொழிக்கும், மக்களுக்கும் தொடர்பிருப்பதைக் கவிதைகளில் காணலாம்.
"உயிர்த்தலைச் சுமக்கின்றன / நிலம் கோதிய சொற்கள்' (ப.23) தொன்மங்களின் பூச்சுகள் கரைய /உயிர் வழியும் கண்களால் / கதைகள் ஒட்டி நிற்கின்றன" (ப.26) எனும் வரிகள் வளமைக்கானதாக அமைந்துள்ளன. “ஆழப் புதைந்திருக்கும் வேர்களை/ இறுகப் பற்றியது ஈரமண் / மண் மீட்டிய வேர்கள் இசை” (ப.28), பசப்பூறிய பூசனத்தின் ஈரத்தில் (ப.25), பச்சையம் போர்த்திய நிலமும் கந்தல் துணியாய் போயின (ப.49) வெறுமை மண்டி இருக்கும் வாழ்நிலத்தில்(ப.86) /ஈரமாய் பூத்து சிரிக்கின்றன/ நிலத்தில் கவிழ்ந்திருந்த வானம் (ப.87)/ காடும் மலையும் மேவிய நிலத்தில் (ப.29). / கசிந்து வழிந்த சொற்கள்/ உள் காயங்களின் வலியில்/ அணத்திக் கொண்டிருக்கிறது. (ப.31) தேர்ந்த வடிவ மொழிதலைக் கொண்டுள்ளன இக்கவிதைகள்.
கவிதைச்செல்நெறியில் மரபிலிருந்து விடுபடுதலும் மரபிலிருந்து புதுப்பித்துக் கொள்ளலும் மரபினை உடைத்தலும் நிகழ்கின்றது. இவை வடிவ, கருத்து ரீதியாக நிகழ்கின்றன.
வேளாண்மைச் சடங்குகளின் தொடர்பாட்டினையும் சடங்கிற்கும் நிலத்திற்குமான உறவு நிலையில் கவிதை நிகழ்த்துதல்களின் பரிணாமங்களை விவரிக்கிறது. சடங்கில் இருந்து நிகழ்த்தலுக்கும், சடங்கிலிருந்து வேளாண்மைக்கும், சடங்கிலிருந்து வேளாண் உற்பத்திக்கும், உற்பத்தியிருந்து மனித உறவிற்குமானத் தொடர்பாட்டினைப் பல கவிதைள் காட்சிகளாக விரிகின்றன.
வேளாண் சடங்கிலிருந்து வளமை வழியாக இன்பமும், இயற்தைச்சீற்றத்தின் வழி ஏற்படும் துன்பமும், துன்பவலியில் இருந்து உருவான படைப்பின் சொற்கள் ஆழ வேரூன்றி வெளிப்பட்டுள்ளன. நீரின்றித் தவிக்கும் திணைமாறியப் பறவைகளின் யாருமற்ற தனிமையில் முளைத்த சொற்களாய்ப் பதியம் இடுகிறார் மகாராசன்.
மனப்பறவை வானத்தில் வட்டமிட்டுக் கொண்டு இருக்கிறது என்றும் பூமியின் வறட்சியை ஆள் அரவமற்ற தனிமையில் வலசை தடங்களின் கதைகள் யாவும் கண்ணீர்கள் தூவிய பாதையாய் காட்சிப்படுத்தும் சொற்கள் என்றும் ஒரு பறவையின்வெளி வானத்தில் வலிகளோடு சிறகடித்துப் பறந்து, திரிவதைப் போல் துயரமொழி கவிதையில் வெளிப்பட்டுள்ளது.
ஓர் இலக்கியப் படைப்பாளி படைப்பின் வழியாக சமூகத்திற்கு ஏதோ ஒன்றை, சொல்ல நினைக்கும் தன்மை, படைப்பாளியின் சமூக அக்கறையைக் காட்டுகிறது. ஒரு படைப்பாளி மொழிதல் வழியாக இலக்கண மரபினைக் காட்டுவதோடு தொன்மையின் பருப்பொருளை உருவாக்குவது மட்டுமல்லாது கலை, இலக்கிய கொள்கைகளையும், உலகியலை நன்கு தெரிந்திருக்க வேண்டும். படைப்பாளியின் அழகியல், அனுபவம், விருப்பம், நுண்மை இவை படைப்பில் வெளிபடுவதன் மூலம் அப்படைப்பை வாசிக்கும் வாசகர் படைப்பாளியின் ரசனையோடும், அனுபவத்தோடும், வாழ்வியலோடும் தன் நினைவைப் பொருத்திப் பார்க்கிறார்.
அந்தவகையில் நிலத்தில் முளைத்த சொற்கள் தமிழ் நில அடையாளத்தை முன்வைக்கிறது. பேரினவாதத்தின் பிடியில் சிக்குண்டு, தமிழ் ஈழநிலம் மீண்டெழ முடியாமல் போன கதைபேசி, நம்பிக்கைக்கான விதைப்பினை சொற்களாக, குறியீடாக, தொன்மமாக விதைத்துள்ளது நிலத்தில் முளைத்த சொற்கள் தொகுப்பு.
“ பூர்வத்தின் வேர் நுனி மணத்து / தாய் நிலத்து மண்ணைப் பூசிக்கொண்டு / பேருரு அடையாளத்தில் / மினுத்திருந்தது இவ்வினம்./அயல்நிலப் பருந்துகளின் கொத்தல்களிலிருந்து/குஞ்சுகளைக் காக்க/மூர்க்கமாய்ப் போராடின/ இரு தாய்க்கோழிகள். “தப்பிய புலிகளின்/ கால்த்தடம் பதியக் காத்திருக்கிறது/ ஒரு நிலம்”(பக்.51-52) பேரினவாத்தின் அழிவிலிருந்து தனக்கான தமிழ் ஈழம் புத்துயிர் பெற்றிருக்கிறது என மொழிகிறது கவிதை.
காலம், களம்
எல்லா நிகழ்வியத்திற்கும் காலம், களம் (Time, Space) முக்கியத்துவம் பெறும் என்பதே தொல்காப்பியம் வழிப்பெற்ற கவிதைக் கொள்கையாகும். காலம், களம் கூறுமிடத்து அவை ஒன்றோடு ஒன்று தொடர்புடைய கருத்துகளாகும். அவ்வவ்காலமே படைப்பின் வழிக் களத்தைத்தேர்வு செய்துகொள்வது நியதியாகும். கவிதையின் பொருள் சார்ந்து அணுகும் போது களம் முக்கியத்துவம் பெறுகிறது. அந்த வகையில் கவிதைக்கான களம் என்பது ஒரு படைப்பாளி உருவாக்கிய படைப்பின் ஒட்டுமொத்த வெளிப்பாட்டினை அணுகுவதும், கவிதையின் மேல்நிலை, கீழ்நிலை, கிடைநிலை, புதைநிலை என்கிற தன்மையில் அணுகுவதும் கவிதையைப் புரிந்து கொள்ளுதல் சார்ந்ததாக அமைகிறது.
வாசகரின் புரிதல் கொள்கை எனும் சிந்தனையும் இலக்கியக் கொள்கையாக உருவான பின்னணியில் தான் கவிதைக்களம், கவிதை அர்த்த தளம் என்பது முற்றிலும் வாசகர் சார்ந்ததாக அமைகின்றது. கவிதை வாசிப்பவரே கவிதைக்கான முழுபொருளைப் பெறுகிறார். ஆழ்ந்த வாசிப்பின் வழியாகக் கவிதையில் அமைந்த தொனிப்பொருளை இனங்காணமுடிகிறது.
அந்தவகையில் நிலத்தில் முளைத்த சொற்கள் எனும் கவிதைத் தொகுப்பு, வாசகரின் மனவெளியில் எளிமையாகப் பயணிக்கிறது. இக்கவிதைகள் யாவும் வேளாண் பண்பாட்டின் நீட்சியைப் பதிவுசெய்துள்ளன.
ஒவ்வொரு சொல்லுடனும் வாழ்வின் ஆதார உணர்ச்சிகளும் அவ்வுணர்ச்சிகளை உருவாக்கும் நினைவுகளில் காலவிரிவும் கலந்துள்ளது. அவற்றைக் கவிதைகளில் திறனுடன் பயன்படுத்தமுடியும். சரியாக அமைந்த ஒரு சொல் உணர்வுகளைப் பற்றியெரியச் செய்யமுடியும். மகாராசன் அதைக் கவிதைகளில் சிறப்பாகச் செய்திருக்கிறார்.
தமிழ்க் கவிதை மரபின் மைய ஓட்டத்தில் இருந்து முற்றிலும் விலகிய தனித்துவம் கொண்ட கவிஞர்கள் அடையாளம் காணலாம். நகுலன், அபி, பசுவய்யா, கலாப்ரியா, சுகுமாறன், மனுஷ்யபுத்தின், கல்யாண்ஜி, தேவதேவன், பிரம்மராசன், விக்ரமாதித்யன் முதலானவர்களின் கவிதை மொழியும் , வாழ்வின் இருத்தலும், உவமை அமைப்பும், பேசுபொருளும், தமிழின் மொத்தப் புதுக்கவிதைப் பரப்பிற்குள் புதுப்புதுக் கோணங்களைக் கொண்டவைகளாகும். இவர்களின் கவிதைகள் வடிவழகியல் சார்ந்த தத்துவப் பின்புலத்தைக் கொண்டிருக்கின்றன. ஆனால் இன்குலாப், தணிகைச்செல்வன், பழமலய், அறிவுமதி முதலானவர்களின் கவிதைகள் கருத்தழகியலில் மையங்கொண்டிருக்கின்றன.
மகாராசனின் ‘நிலத்தில் முளைத்த சொற்கள்’ தொகுப்பு, நிலம் குறித்த அழகியலாக வெளிப்பட்டுள்ளது. மேலும் நிலமற்ற தினக்கூலிகளின் துன்பக்கதையைப் பேசி விரிகிறது. நிலமிழந்த விவசாயிகளின் வலிகள் நிறைந்த வார்த்தைகள் கவிதைகளில் காணலாம். வாழ்வதற்காகப் போராடுவதும், போராடுவதற்காக வாழ்வதுமான வாழ்வியலை நிலம் என்பது அடையாளமாகக் கவிதைகளில் இடம்பெறுகிறது. கவிதையில் செம்புலப் பெயல் நீராகிப்போன செவல்காடு அன்போடு கலந்திருக்கிறது.
(நிலத்தில் முளைத்த சொற்கள், யாப்பு வெளியீடு, மே2024, விலை : ரூ.100)
முனைவர் ம.கருணாநிதி
தமிழ் - உதவிப் பேராசிரியர்,
திருப்பத்தூர் - 635601,
பேச 9500643148
karunanidhi@shctpt.edu
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக