பிரொகோவில் நடைபெற்ற டாக்டர்கள் காங்கிரசில் கருச் சிதைவுகள் பிரச்சினை குறித்து மிகுந்த அக்கறை செலுத்தப்பட்டு, ஒரு நீண்ட விவாதமும் நடைபெற்றது. லிச்குஸ், தாம் சமர்ப்பித்த அறிக்கையில், தற்கால நாகரிக நாடுகள் எனப்படுவனவற்றில் உள்ள கருவை அழிக்கின்ற மிக மிகப் பரவலான நடைமுறை சம்பந்தமான புள்ளி விவரங்களை மேற்கோள் காட்டினார்.
நியூயார்க்கில் ஓராண்டில் 80,000 கருச்சிதைவுகள் நடத்தப் பெற்றன. பிரான்சில் ஒவ்வொரு மாதமும் 36,000 வரை நடைபெறுகின்றன. செயின்ட் பிட்டர்ஸ் பர்க்கில் கருச் சிதைவுகளின் சதவீதம் ஐந்தாண்டுகளில் இரண்டு மடங்குக்கும் அதிகமாகியுள்ளது. பிரொகோவ் டாக்டர்கள் காங்கிரஸ் ஏற்றுக்கொண்ட ஒரு தீர்மானத்தில், செயற்கையாகக் கருச் சிதைவு செய்து கொண்டதற்காக ஓர் அன்னையின் மீது எத்தகைய கிரிமினல் வழக்கும் தொடுக்கக் கூடாதென்றும், ‘ஆதாய நோக்கங்களுக்காக’ அறுவை சிகிச்சை செய்யப்பட்டால் அது சம்பந்தப்பட்ட டாக்டர்கள் மீதுதான் வழக்குத் தொடர வேண்டுமென்றும் கூறப்பட்டுள்ளது.
விவாதத்தின் போது, கருச் சிதைப்புகளை தண்டனைக்குரிய குற்றமாக்கக் கூடாதென்று பெரும்பான்மையோர் ஒத்துக் கொண்டனர். நவீன மால்த்தூசிய வாதம் (கருத்தடை சாதனங்களைப் பயன்படுத்துவது) எனப்படும் பிரச்சினை இயற்கையாக விவாதிக்கப்பட்டது; பிரச்சினையின் சமூகக்கூறு குறித்தும் விவாதிக்கப்பட்டது.
உதாரணமாக, திரு. விக்தோர்சிக் பேசுகையில், ருஸ்கோயிஸ்லோவோ பத்திரிகையில் வெளியான ஒரு செய்தியின்படி, “கருத்தடைச் சாதனங்களை உபயோகிக்கும் நடவடிக்கைகள் வரவேற்கப்பட வேண்டும்” என்று கூறினார். திரு. அஷ்ட்ராகான், கரவொலியின் பேரொலிக்கிடையில் கீழ்வருமாறு குறிப்பிட்டார்:
“குழந்தைகளைப் பெற்றெடுக்கும்படித் தாய்மார்களை வலியுறுத்தி ஏற்றுக்கொள்ளச் செய்யவேண்டும். அப்பொழுதுதான் கல்விநிலையங்களில் அவர்களை முடமாக்க முடியும். அவர்களுக்காகப் பங்கு பிரித்துக் கொடுக்க முடியும்; அவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் நிலைமைக்குப் போகும்படி செய்ய முடியும்.”
இந்த செய்தி உண்மையெனில், திரு. அஷ்ட்ரகானுடைய இந்த வியப்புரைக்கு பேரொலி தரும் கரகோஷத்துடன் கூடிய வரவேற்பு கிடைத்ததென்பது உண்மையெனில், அது எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை. கூட்டத்தினரில் பண்பாடற்ற மனப்பாங்கு உடைய பூர்ஷுவா, நடுத்தர குட்டி- பூர்ஷுவாவினர் இருந்தனர். அவர்களிடமிருந்து மிகவும் இழிந்த மிதவாதத்தைத் தவிர வேறு எதை எதிர்பார்க்க முடியும்?
எனினும், தொழிலாளி வர்க்கக் கண்ணோட்டத்திலிருந்து பார்க்கும் போது, மேலே குறிப்பிட்ட திரு. அஷ்ட்ரகானின் சொற்றொடரைவிட “சமூக நவீனபாணி மால்த்தஸ்-வாதத்தின்” முற்ற முழு பிற்போக்குத் தன்மை, அவலட்சணம் இவை குறித்த அதிகப் பொருத்தமான வார்த்தையைக் கண்டுபிடிப்பது எளிதல்ல.
“குழந்தைகளைப் பெறுங்கள்; ஏனெனில் அப்பொழுதுதான் அவற்றை முடமாக்க முடியும்...” அதற்காக மட்டுமா? நமது தலைமுறையை முடமாக்கி, நாசமடையச் செய்யும் இன்றைய வாழ்க்கை நிலைமைகளை நாம் எதிர்த்துப் போராடி வருவதை விடவும் மேம்பட்ட முறையிலும் அதிக உணர்வுபூர்வமாகவும் ஒற்றுமையாகவும், உறுதியாகவும் அவர்கள் போராடுவதற்காக, என்றும் ஏன் இருக்கக்கூடாது?
இதுதான். பொதுவாக விவசாயி, கைவினைஞர், அறிவாளி, குட்டி பூர்ஷுவா இவர்களின் மனோநிலையைத் தொழிலாளியின் மனோ நிலையிலிருந்து வேறுபடுத்திக்காட்டும் தீவிர வித்தியாசமாகும். தன் அழிவை நோக்கி விரைவதாகவும் வாழ்க்கை முன்னிலும் கஷ்டமானதாக வருகிறது என்றும், உயிர் வாழ்வதற்கான போராட்டம் முன்னெப்போதையும் விடக் கொடியதாகி வருகிறது என்றும் தனது நிலைமையும், தன் குடும்பத்தின் நிலைமையும் மேலும் மேலும் மோசமாகி வருகிறதென்றும் குட்டி பூர்ஷுவா காண்கிறான், உணர்கிறான். இதுமறுக்க முடியாத உண்மையாகும். குட்டி பூர்ஷுவா இதை எதிர்த்துக் கண்டனம் தெரிவிக்கிறான்?
ஆனால் அவன் எவ்வாறு இதற்கு எதிர்ப்பைத் தெரிவிக்கிறான்.
நம்பிக்கைக்கு இடமின்றி அழிந்து வருகிற, தனது வருங்காலத்தைப் பற்றி பீதியடைகின்ற, மனச் சோர்வுக்கு கோழையாக உள்ள ஒரு வர்க்கத்தின் பிரதிநிதியென்ற முறையில் அவன் எதிர்ப்புத் தெரிவிக்கிறான். எதுவும் செய்ய முடியாது... நமது வேதனைகளையும், கடின உழைப்பையும், நம் வறுமையையும், நம் அவமானத்தையும் அனுபவிப்பதற்கு நமக்குக் குழந்தைகள் குறைவாயிருந்திருந்தால் - இவ்வாறு தான் குட்டி பூர்ஷுவா புலம்புகிறான்.
வர்க்க உணர்வுள்ள தொழிலாளி இத்தகைய கண்ணோட்டத்தைக் கொண்டிருக்கவில்லை. அத்தகைய புலம்பல்கள் எவ்வளவு உண்மையானதாகவும், இதய பூர்வமானதாகவும் இருந்த போதிலும், அவற்றால் தனது உணர்வு மழுங்கடிக்கப்படுவதற்கு அவன் அனுமதிக்க மாட்டான். ஆம், தொழிலாளர்களும், பெருமளவிலான சிறு உடைமையாளர்களுமாகிய நாம் சகிக்க முடியாத ஒடுக்குமுறையும் துன்பமும் நிறைந்த வாழ்க்கையை நடத்தி வருகிறோம். நமது தந்தையர்களுக்கு இருந்ததைக் காட்டிலும் நமது தலைமுறைக்கு வாழ்க்கை அதிகக் கடினமாயிருக்கிறது.
ஆனால் ஓர் அம்சத்தில் நாம் நமது தந்தையர்களை விடவும் அதிர்ஷ்டசாலிகளாயிருக்கிறோம். போராடுவதற்கு நாம் கற்றுக் கொள்ளத் தொடங்கியுள்ளோம், வேகமாகக் கற்றுக்கொண்டு வருகிறோம். நமது தந்தையர்களில் சிறந்தவர்கள் போராடியது போன்று தனி நபர்களாகப் போராடுவதற்கல்ல, பூர்ஷுவா பேச்சாளர்களின் கோஷங்களுக்காக அல்ல. அவை உணர்வில் நமக்கு அன்னியமானவை - மாறாக, நமது கோஷங்களுக்காக, நமது குழந்தைகள் நம்மைக் காட்டிலும் நன்றாகப் போராடுவார்கள்; அவர்கள் வெற்றிவாகை சூடுவர்.
தொழிலாளி வர்க்கம் அழிந்து வரவில்லை, அது வளர்ந்து வருகிறது. மேலும் வலுவடைந்து வருகிறது; துணிவு பெற்று வருகிறது; தன்னை உறுதிப்படுத்திக் கொண்டு வருகிறது; தனக்குத்தானே போதனை பெற்று வருகிறது; போராட்டத்தில் புடமிடப்பட்டு வருகிறது. பண்ணயடிமைத்தனம், முதலாளித்துவம், சிறு உற்பத்தி இவை சம்பந்தமாக நாம் நம்பிக்கையற்றவர்களாக இருக்கிறோம்; ஆனால் தொழிலாளி வர்க்க இயக்கம், அதனுடைய குறிக்கோள்கள் இவற்றைப் பொறுத்தமட்டிலும் நாம் உறுதியான நம்பிக்கையுள்ளவர்களாயிருக்கிறோம். நாம் ஒரு புதிய மாளிகைக்காக ஏற்கனவே அஸ்திவாரமிட்டு வருகிறோம். நமது குழந்தைகள் அதைக் கட்டி முடிப்பார்கள். நாம் நிபந்தனையின்றி நவீன மால்த்தூசிய வாதத்திற்குப் பகைவர்களாயிருப்பதற்கு அதுதான் காரணம், அது ஒன்றே தான் காரணம்.
இந்த வாதம் உணர்ச்சியற்ற, தற்பெருமை கொள்ளும் குட்டி பூர்ஷுவா தம்பதிகளுக்குத்தான் பொருத்தமானது.
“நாம் எப்படியோ சமாளித்துக் கொள்வதற்குக்கு கடவுள் அருள் புரிவாராக! நமக்குக் குழந்தைகள் இல்லாவிட்டால் மிகவும் நல்லதே” என்று பீதி நிறைந்த குரலில் அவர்கள் கிசுகிசுத்துக் கொள்கிறார்கள்.
இது, கருச் சிதைவுக்கு எதிரான சகல சட்டங்களும் நிபந்தனையின்றி ரத்து செய்யப்பட வேண்டும் என்று கோருவதினின்றோ, அல்லது கருத்தடை நடவடிக்கைகள் குறித்த மருத்துவ வெளியீடுகளை வினியோகம் செய்வது முதலியவற்றுக்கு எதிரான அனைத்துச் சட்டங்களையும் நிபந்தனையின்றி ரத்து செய்யவேண்டும் என்று கோருவதினின்றோ, எவ்வகையிலும் நம்மைத் தடுப்பதில்லை என்பது சொல்லாமலே விளங்கும். இத்தகைய சட்டங்கள் ஆளும் வர்க்கங்களின் பாசாங்குத் தனத்தைத் தவிர வேறொன்றுமல்ல.
இந்த சட்டங்கள் முதலாளித்துவத்தின் புண்களை வேகமாகத் தொற்றிப் பரவுகிற, கேடு விளைவிக்கும் புண்களாகத்தான் மாற்றுகின்றன. இவை ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மிகவும் வேதனை தருபவையாகும். மருத்துவப் பிரச்சாரத்திற்கு சுதந்திரமும் பிரஜைகளின், ஆண்கள் பெண்களின் சாதாரண ஜனநாயக உரிமைகள் பாதுகாப்பும் என்பது ஒன்று.
நவீன மால்த்தூசிய வாதம் என்பது முற்றிலும் வேறானதாகும். வர்க்க உணர்வுள்ள தொழிலாளர்கள் எப்போதும் அந்தப் பிற்போக்கான, கோழைத்தனமான தத்துவத்தை நவீன சமுதாயத்தில் மிகவும் முற்போக்கான, மிகவும் பலம் வாய்ந்த வர்க்கத்தின் மீது, மாபெரும் மாற்றங்களுக்கு மிகவும் தயாராயுள்ள வர்க்கத்தின் மீது சுமத்துவதற்கான முயற்சிகளை எதிர்த்து மிகவும் உறுதியான போராட்டம் நடத்துவார்கள்.
- லெனின்
(பிராவ்தா, இதழ் 137, ஜூன் 16, 1913)
தண்ணீர்த் தத்துவமும்
காதலற்ற முத்தங்களும்,
ஆசிரியர்கள்:
லெனின் & கிளாரா ஜெட்கின்.
தொகுப்பாசிரியர்: மகாராசன்.
இரண்டாம் பதிப்பு, மார்ச்சு 2022,
யாப்பு வெளியீடு, சென்னை.
பக்கங்கள்: 170
விலை: உரூ 170/-
சலுகை விலையில்: உரூ100/-
அஞ்சல் செலவு: உரூ 20/-
தொடர்புக்கு:
செந்தில் வரதவேல்,
பேச : 90805 14506
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக