பூமி என்ற ஒரு கோளில் மலைகள், காடுகள், கடல்கள் ஆகியன மூன்றும் பல்லாயிரம் ஆண்டுகளாக உருவாகி நிலைபெற்று உருமாற்றம் பெற்றதும், ஒரு செல் உயிரியிலிருந்து பரிணாம வளர்ச்சி நிலைகளை அடைந்து அடைந்து, ஆறறிவு பெற்ற வளர்ச்சியுடைய முழுமையை அடைந்தது மனித இனம். தம்மைச் சூழ்ந்திருக்கும் புற உலகையும் வாழ்வையும் ஆளுமை செய்கிற சமூக உயிரியாகவும் பரிணமித்தது மனித இனம்தான். அதனால்தான், உயர்ந்த பண்புள்ள விலங்கு என மனித இனம் குறிக்கப்படுகிறது.
இயற்கையானது மூன்று நிலங்களை உருவாக்கி வைத்திருந்தது. அந்நிலங்களில் வாழ்ந்த தாவரங்களையும் விலங்குகளையும் மட்டுமல்லாது, சூழல், பொழுது போன்ற இன்னும் பிறவற்றையும் கையாளப் பழகிக்கொள்கிறது மனித இனம். இந்தப் பழக்கத்திலும் உழைப்பிலும்தான் வேளாண்மை செய்வதைக் கற்றுக் கொள்கிறது. அந்த வேளாண்மைக்கு உகந்த புதிய நிலத்தை உருவாக்கிக் கொள்கிறது. அதாவது, அடர்ந்த மலை மற்றும் வன நிலப் பகுதிகளை வேளாண்மைக்கான நிலமாக மாற்றி, உழவு நிலத்திற்கேற்ற மண்ணாக மாற்றி, வேள் எனும் நிலத்தை ஆளும் தொழிலால் வேளாண்மை செய்து தன்னிறைவு காண்கின்றது.
ஒரு நிலத்தை வேளாண்மைக்கு ஏற்றதான நிலமாக மாற்றுவதைப் ‘பண்படுத்துதல்’ என்பர். நிலத்தைப் பண்படுத்தினால் மட்டுமே வேளாண்மை செழித்தோங்கும். ஒரு நிலத்தை ஆழ அகல உழுது, விதை விதைத்து, நடவு செய்து, நீர் பாய்ச்சி, களையெடுத்து, அறுவடை செய்து, கதிர் அடித்து, நெல் குவித்து, அவித்து, அரிசியாக மாற்றுவர். இத்தகைய நெல் உற்பத்தியில் நீண்ட கால உழைப்பு மட்டுமே பொதிந்திருக்கவில்லை. இது தனி மனிதர் மட்டும் சார்ந்ததில்லை. தொழில்சார் குழு மனிதர்களின் பங்கேற்பும் கூட்டுழைப்பும் மட்டுமல்ல; பழக்கத்தாலும் உழைப்பாலும் பயில்முறை அனுபவங்களாலும் பெற்றிருந்த தொழில்நுட்ப நுணுக்கங்களின் அறிவும்தான் அதைச் சாத்தியமாக்கியது. நெல் மட்டுமல்ல; வேளாண்மை உற்பத்தியின் - இதர உணவுப் பயிர் உற்பத்தியின் அனைத்து நிலைகளும் நிலத்தைப் பண்படுத்துவதால் உருவாகி நின்றவை ஆகும்.
நிலத்தைப் பக்குவப்படுத்திப் பண்படுத்தும் - ஒழுங்கமைக்கும் பண்பால் வேளாண்மை வளர்ந்தோங்கி வந்திருக்கிறது. அதேபோல, மனித வாழ்வில் பக்குவப்பட்டும் பண்பட்டும் ஒழுங்கமைந்தும் வந்திருக்கும் பண்பைப் ‘பண்பாடு’ எனக் குறிப்பர். இந்தப் பண்பாடு, மனிதப் புலன்களினாலும், மனித உழைப்பினாலும், மனிதக் கூட்டிணைவினாலும் பண்பட்டும் பக்குவப்பட்டும் ஒழுங்கமைந்தும் வடிவமைந்து வந்திருப்பதாகும். அதனால்தான், சங்க காலக் கலித்தொகைப் பாடலானது, ‘பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகுதல்’ என்கிறது.
பாடு எனில், பாடுபடுதல் - உழைத்தல் - உற்பத்தி செய்தல் - உருவாக்குதல் என்பது பொருள். மனித வாழ்வின் அடிப்படை நியதியும் இதுதான். அவ்வகையில், மனிதர்களின் பாடறிந்து ஒழுகிய - பாடறிந்து ஒழுகும் மனிதப் பண்பே பண்பாடாக மலர்ந்திருக்கிறது. இத்தகையப் பண்பாட்டுப் புலப்பாடுதான் பண்பாட்டறிவு, பட்டறிவு ஆகும். இவ்வாறமைந்த ‘பண்பாட்டறிவு’ மொழி, கலை, இலக்கியம், நடத்தை, தொழில், வழக்காறு, வழிபாடு, சடங்குகள் போன்ற யாவற்றிலும் படிந்திருக்கிறது.
ஒழுங்கு வடிவமைக்கப்பட்ட நிலத்தோடு இயைந்த மனித வாழ்வின் கூறாக இருந்தது வேளாண்மை மட்டுமல்ல; மனித சமூகப் பண்பாடும்தான். இந்நிலையில், பண்பட்டு வந்திருக்கும் மனித சமூகம், தமது பண்பாட்டறிவைத் தொடர்ந்து புழங்குவதாலும், அடுத்தடுத்த தலைமுறைகளுக்குப் பகிர்ந்தளிப்பதாலும் சமூக மதிப்பளிக்கப்பட்டுப் பேணப்படுகின்றன. அதாவது, மனித இன உயிரியல் பண்பறிவும், மனித சமூகப் பண்பாட்டறிவும் காலம், தலைமுறை கடந்தும் தொடர்ந்து வருவது அல்லது தொடரச் செய்யும் நோக்கில் பின்பற்றப்பட்டும் ஏற்றுக்கொள்ளப்பட்டதுமான மரபார்ந்த நியதிகள் ‘மரபு’களாய் முகம் கொள்கின்றன.
ஒழுங்கமைந்த இசை வடிவத்தைப் ‘பண்’ எனும் சொல்லால் சுட்டுவது வழக்கம். பண்பட்டிருக்கும் அல்லது பண்படுத்தும் இசைமைத் தன்மையின் வடிவம்தான் பண் என்பதாகும். இந்தப் பொருண்மையில் நோக்கும்போது, மனித வாழ்வியலின் ஒழுங்கமைந்த நியதிகள் பண்பாட்டு இசைமைத் தன்மையும் அறிவும் ஒருங்கே கொண்டிருப்பதாகும்.
மரபார்ந்த உயிரியல் பண்புகளும், மரபார்ந்த சமூகப் பண்புகளும் பண்பாட்டு மரபுகளாய்ச் சமூகத்தில் தம் இருப்பைக் காட்டியிருக்கின்றன; காட்டிக்கொண்டிருக்கின்றன. அதாவது, மரபு என்பது பண்பட்ட சமூகம் தொடர்ந்து புழக்கத்தில் பயன்படுத்தி வரும் அறிவாகும். இத்தகையப் பண்பாட்டறிவு மனித சமூகத்தோடு தொடர்புடையதாகும்.
மனிதர்கள் கண்டுபிடித்ததில் ஆகச் சிறந்தது மொழிதான். மொழிதான் மனிதரின் சமூக வாழ்வுக்கு முதலில் தேவைப்பட்டது. சமூக வரலாற்றுப் பின்புலத்தோடு அணுகும்போது மொழி என்பது மனித வாழ்வியலில் முதன்மையான கருவியாகத் திகழ்ந்திருக்கிறது. இத்தகைய மொழியின் மூலமாகவே மனித வாழ்வியலின் பொருண்மைகள் பல்வேறு வடிவங்களில் உருவாக்கப்பட்டிருக்கின்றன. ‘எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே’ என்கிறது தொல்காப்பியம். இந்தப் பின்புலத்தில் நோக்கும்போது, ஒவ்வொரு பண்பாட்டு அசைவுக்குப் பின்பும் ஒரு பொருண்மை இருக்கிறது என்பதையும் அறிய முடியும்.
இந்தப் பண்பாட்டுப் பொருண்மைகள் மரபார்ந்து நின்று மரபாய் நிலைத்திருக்கின்றன. கால மாற்றத்தில் மரபுகள் பல மறைந்திருக்கின்றன. வாழ்வு மாற்றத்திற்கு ஏற்ப மரபுகளும் மாற்று மரபாய் மாறியிருக்கின்றன. மனித வாழ்வின் இருப்பையும் அடையாளத்தையும் தற்காத்துக்கொள்ளும்போதும், ஆதிக்கத்திற்கும் அடக்குமுறைக்கும் எதிராகக் கிளர்ந்தெழும்போதும் உருவாக்கப்படும் எதிர்நிலை அல்லது எதிர்ப்பு நிலை வடிவங்களைப் போல, பண்பாட்டு வடிவங்களும் எதிர் மரபுகளாய் உருவாகி நின்றிருக்கின்றன. மனித சமூக வாழ்வு பன்முகம் கொண்டது. அவ்வகையில், பண்பாடு என்பதும் பன்முகத்தைக் கொண்டிருப்பதாகும். மனித சமூக வாழ்வின் அனைத்துப் புலப்பாடுகளிலும் பண்பாட்டுத் தன்மை உள்ளடங்கி இருக்கிறது.
தமிழ்ச் சமூகமானது தமது மொழி, கலை, இலக்கியம், இலக்கணம், வழக்காறுகள், பொருட்கள் போன்ற யாவற்றிலும் பண்பாட்டுத் தன்மையை வெளிப்படுத்தி வந்திருப்பதை அறிய முடியும். இந்நிலையில், தமிழ்ச் சமூகத்தின் புலப்பாடுகளுக்குப் பண்பாட்டு நோக்கிலான எடுத்துரைப்புகளைத் தமது எழுத்துகளின் மூலமாகத் தொடர்ந்து முன்வைத்துக் கொண்டிருப்பவர் மகாராசன் ஆவார்.
மகாராசன் அவர்களது எழுத்துகளின் மையமே நிலம்தான். நிலம்தான் எல்லாவற்றுக்குமான உறவுப் பாலாமாகத் திகழ்கிறது. நிலமும், நிலம் சார்ந்த மனித வாழ்வும், மொழியும், கலையும், இலக்கியமும், பண்பாடும்தான் அவரது எழுத்துகளில் தொடர்ந்து உரையாடிக் கொண்டேயிருக்கின்றன. இவ்வுரையாடல்கள் தமிழ்ச் சமூக வரலாற்றின் பண்பாட்டு அசைவியக்கங்கள் மீதான புதிய பொருண்மைகளைத் தந்துகொண்டிருக்கின்றன.
தமிழ்ப் பண்பாட்டியலின் மரபுகளையும், மாற்று மரபுகளையும், எதிர் மரபுகளையும் புரிந்துகொள்வதற்குத் துணை நிற்கின்றன. அவ்வரிசையில், மகாராசனின் மற்றுமொரு நூல்தான் ‘தமிழ்ப் பண்பாட்டியல்: மரபு - மாற்று மரபு - எதிர் மரபு’ எனும் இந்நூலாகும்.
இந்த நூலிலுள்ள இருபத்தியொரு கட்டுரைகள் மொழி, வேளாண்மை, இலக்கியம், கலைகள், கல்வி, மருத்துவம், வழிபாடுகள், வழக்காறுகள், அரசியல் போக்குகள், மனித ஆளுமைகள், நூல்கள், பெயர் அடையாளங்கள் மற்றும் இதழ் சார்ந்து வெவ்வேறு பொருண்மைகளில் எழுதப்பட்டுள்ளன. எனினும், எல்லாக் கட்டுரைகளும் தமிழ்ப் பண்பாட்டியலின் வெவ்வேறு பொருண்மை முகங்களை அடையாளப்படுத்துவதில் ஒன்றிணைகின்றன. தமிழ்ப் பண்பாட்டியல் பொருண்மைகளில் காணப்படுகிற மரபுகளையும், மாற்று மரபுகளையும், எதிர் மரபுகளையும் எல்லாக் கட்டுரைகளும் அதனதன் தளத்தில் எடுத்துரைக்கின்றன.
தமிழர் மரபில் மீளும் பண்பாட்டு வரலாற்றுக்கான தரவுகளை இந்நூல் வழியாகத் தந்திருப்பதோடு, தமிழ்ப் பண்பாட்டியல் சார்ந்த புதிய கண்ணோட்டங்களையும் பொருள்கோடல்களையும் முன்வைத்திருக்கும் ஆய்வாளர் மகாராசன் அவர்களுக்கு வாழ்த்துகள்.
கு. தமிழ் வேந்தன்,
கவிஞர் மற்றும் ஆய்வாளர்.
*
மகாராசன்,
பக்கங்கள் 192,
முதல் பதிப்பு, திசம்பர் 2025,
விலை: உரூ 200/-
யாப்பு வெளியீடு, சென்னை.
பேச: 90805 14506.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக