ஞாயிறு, 11 ஜனவரி, 2026

ஏர் இதழ் நோக்கமும் இலக்கும்: முன்னத்தி ஏர் - தலையங்கம் - மகாராசன்




அறமும் மறமும் நிறைவாகக் கொண்டிருந்த தமிழ்ப் பேரினத்தின் வாழ்வுப் பாடுகளும், வரலாற்றுத் தடங்களும், பண்பாட்டு நடத்தைகளும்,  இலக்கியம், இலக்கணம் உள்ளிட்ட மொழிவழிப் புலப்பாடுகளும், இசை, கூத்து உள்ளிட்ட நிகழ்த்துக் கலை வடிவங்களும், ஓவியம், சிலை, கட்டடம் உள்ளிட்ட நுண்கலை வடிவங்களும், இன்னபிற ஆக்கங்கள் பலவும் தொன்மையும் அழகியலும் பட்டறிவும் சார்ந்த உயிர்ப்பைக் கொண்டிருந்தவை. இத்தகைய மரபுத் தொடர்ச்சியைத்தான் அறிவுச் செயல்பாடாகக் கருதி, பயின்றும் பயிற்றுவித்தும் வந்திருக்கிறது தமிழ் இனம். 

தமிழ் நிலத்தின் சூழலியல் அமைவுகள் பன்முகம் கொண்டிருப்பதைப் போலவே, பல்வேறு நிலச் சூழல்களில் வாழ்ந்த தமிழ் இனத்தின் வாழ்வியல் கோலங்கள், உற்பத்தித் தொழிற்பாடுகள், பட்டறிவுப் புலப்பாடுகள், பண்பாட்டு வழக்காறுகள் யாவும் பன்மைத் தன்மை கொண்டிருக்கக் கூடியவை. திணை நிலங்கள் வேறுவேறாக இருந்தாலும், வாழ்க்கைப்பாடுகளும் தொழிற்பாடுகளும் பண்பாட்டு வழக்காறுகளும் வேறு வேறாக இருந்தாலும், வேறு வேறு தொழிற் குலங்களாக - தொழிற்குடிகளாக இருந்தாலும், எல்லோரையும் - எல்லாவற்றையும் இணைத்த - இணைக்கும் ஆறாவது புலனாக இருந்ததும் இருப்பதும் மொழிதான்; அது தமிழ்தான். 

அதனால்தான், தமிழ் இனத்தின் அறிவுச் செயல்பாடுகள் யாவும் பன்மைத்துவ அழகியலும் அறமும் அரசியலும் கொண்டதாய் வடிவமைந்து வந்திருக்கின்றன. அதாவது, பன்மைத்துவ அறிவு மரபுதான் தமிழினத்தின் தனித்துவ மரபாகக் காலந்தோறும் நீட்சி அடைந்து வந்திருக்கிறது. அத்தகையத் தனித்துவ மரபுதான் பன்முகத் திணை மரபாகத் தமிழில் முகம் காட்டியிருக்கிறது. அவ்வகையில், குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை எனும் திணைகள் பன்முக அறிவு மரபின் பன்முகக் குறியீடுகளாகும். 

பல்வேறு திணை நிலங்களுக்குள்ளும், திணைசார்ந்த தொழில் குலங்களுக்குள்ளும் அறிவுச் செயல்பாட்டுப் பகிர்வுகள், உரையாடல்கள், அரங்கேற்றங்கள், வெளியீடுகள், ஆவணப்படுத்தல்கள், நிகழ்த்தல்கள், ஆக்கங்கள் போன்றவை காலந்தோறும் நடந்திருக்கின்றன. இத்தகையப் பகிர்தலும் ஆவணப்படுத்தலும்தான் தமிழ் மரபைச் செழுமைப்படுத்தியிருக்கின்றன.

இலக்கியங்கள், இலக்கணங்கள், கலை வடிவங்கள், புழங்கு பொருட்கள், வாய்மொழி வழக்காறுகள், பண்பாட்டு நடத்தைகள் போன்றவற்றின் மூலமாக வெளிப்பட்டிருந்த அறிவுச் செயல்பாடுகள் யாவும் பன்மைத்துவங்களை அடையாளப்படுத்தியிருப்பதோடு, பன்மைத்துவ உரையாடல் வெளிகளையும் அதற்கான வாய்ப்புகளையும் உள்ளீடாகக் கொண்டிருந்தன. அதேவேளையில், பன்முக உரையாடல்களாக இருப்பினும் - பன்முகக் குரல்களாய் வெளிப்பட்டிருந்தாலும், தமிழ் எனும் அடையாள வேர்களில் இருந்தே எழும்பியிருக்கின்றன; தமிழ் என்னும் பேரடையாளத்தையே முன்னிலைப்படுத்தி இருக்கின்றன. அவ்வகையில், பன்மைத்துவ மரபுகளின் கூட்டிணைவாகத் தமிழ் மரபின் தனித்துவம் உயிர்ப்படைந்து வந்திருக்கிறது. அதுதான், தமிழ் அறிவுச் செயல்பாட்டு மரபாய்ப் பரிணமித்திருக்கிறது.

தமிழ் அடையாளத்தின் தனித்துவ வேர்களும், தமிழ் அறிவுச் செயல்பாடுகளின் மரபுத் தொடர்ச்சியும் கால மாற்றத்திற்கு ஏற்பப் புதுமையும் நீட்சியும் பெற்றிருந்த நெடிய வரலாற்றையும் இருப்பையும் தக்க வைத்திருந்தன. இத்தகையத் தமிழ் அடையாள வேர்களின் - தமிழ் அறிவுச் செயல்பாடுகளின் தனித்துவ மரபானது, மானுடம் முழுமைக்குமான - மானுடம் வாழும் நிலப்பரப்பு முழுமைக்குமான - உலக உயிரினங்கள் முழுமைக்குமான வாழ்வறத்தையே பண்பாட்டு அடையாளமாகக் கொண்டிருந்தது. தமிழின் இத்தகையத் தனித்துவ மரபின் வேர்களும் விதைகளும் பல்கிப் பெருகி வளர்ந்திருக்க வேண்டியவை; இன்னும் வாழ்ந்திருக்க வேண்டியவை. ஆனால், அப்படியான சூழல் தமிழ் நிலத்திற்குள் நெடுங்காலமாய் வாய்த்திருக்கவில்லை.

அயலகத்தாரின் படையெடுப்புகளாலும், ஆட்சி அதிகாரப் பறிப்புகளாலும், நிலப் பறிமுதல்களாலும், அயலினக் குடியேற்றங்களாலும், அயலகப் பண்பாட்டுத் திணிப்புகளாலும் தமிழ் இனமும் நிலமும் வளமும், ஆட்சி அதிகாரக் கட்டமைப்புகளும், மொழி உள்ளிட்ட கலை இலக்கியப் பண்பாட்டு அடையாள மரபுகள் யாவும் கொடுந்தாக்குதல்களுக்கு உள்ளாக நேரிட்டிருக்கின்றன. ஆயினும், தமிழ் அடையாள வேர்கள் தமது தனித்துவத்தை இழந்து விடாமல் ஓர் எதிர் மரபைத் தம்மகத்தே வைத்துக்கொண்டு செயலாற்றிக் கொண்டேதான் வந்திருக்கின்றன. 

தமிழ் அடையாளத்தின் இத்தகைய எதிர் மரபு, பன்னெடுங்காலமாய் நீடித்து வந்திருக்கின்றது. தமிழ் அடையாளங்களைச் சிதைப்பதிலும், திரிப்பதிலும், தன்வயப்படுத்துவதிலும், அழிப்பதிலும், மறைப்பதிலும், மறப்பதிலும் பல்வேறு அயலக மரபுகள் மற்றும் அதிகார அமைப்புகள் தீவிரமாய்ச் செயல்பட்டிருப்பது, நிகழ்காலம் வரையிலும் நீண்டிருக்கிறது. ஆயினும், தமிழ் அடையாள வேர்களின் தனித்துவத்தைப் பேணும் எதிர் மரபுச் செயல்பாடுகள், எல்லாக் காலத்திலும் மட்டுமல்லாது நிகழ்காலம் வரையிலும் உடனிருந்தே வந்து கொண்டிருக்கிறது. கூடவே, கால மாற்றங்களுக்கும் வாழ்வியல் மாற்றங்களுக்கும் ஏற்ப மாற்று மரபுகளை உருவாக்கிக்கொண்டும், நிகழ்காலப் புதுமைகளை ஏற்றுக்கொண்டும் செழுமைப்பட்டு வந்திருக்கிறது தமிழ் அடையாளம். அவ்வகையில், மரபும், எதிர் மரபும், மாற்று மரபும், புது மரபும் உள்ளடக்கிய செயல்பாட்டு மரபுதான் தமிழ் அடையாளத்தின் அறிவுச் செயல்பாட்டு மரபாகும்.

இத்தகையத் தமிழ் அடையாள அறிவுச் செயல்பாட்டு மரபை உள்ளார்ந்த உயிர்ப்போடும் உண்மையான வேட்கையோடும் உயரிய நோக்கத்தோடும் புலப்படுத்தும் அறிவுச் செயல்பாடுகளுள் இதழ்வழி உரையாடல்களை முன்னெடுப்பதும் ஒன்றாகும். கொஞ்ச காலத்திற்கு முன்பு ஏர் இதழும் அத்தகைய முன்னெடுப்பைத் தொடங்கி, சிறிது காலம் ஆக்கப்பூர்வமாக வெளிவந்திருந்தது. ஆனாலும், பல்வேறு அக மற்றும் புறக்காரணிகளால் தொடர்ச்சியாக ஏர் இதழைக் கொண்டுவர முடியாமல் போயிற்று.

நிகழ்காலத் தமிழ்ச் சமூகத்தின் போக்குகள் நவீனத்தை உள்வாங்கிக் கொண்டிருக்கின்றன. ஆயினும், நவீன வகைப்பட்ட அறிவியல் தொழில்நுட்ப வசதிகள், மெய்நிகர் சமூக ஊடகங்களின் பெருக்கங்கள் போன்றவை சமூக உரையாடல் வெளிகளைப் பரவலாக்கிக் கொண்டிருந்தாலும், சிற்றிதழ்கள் எனும் மாற்று இதழ்கள் முன்னெடுத்திருந்த உரையாடல் மரபும், அச்சு இதழ் வடிவத்திலான செயல்பாட்டு மரபும் நிகழ்காலத்திற்கும் உரிய தேவையாக இருந்துகொண்டிருக்கின்றன. 

தமிழ் அடையாளத்தின் குரலை, இருப்பை, வாழ்வை, தொன்மையை, நிலத்தை, வளத்தை, வரலாற்றை, அரசியலை, அதிகாரத்தை, வாதத்தை, உரிமையை, அறிவு மரபை, இன்னும் இது போன்ற பிறவற்றைப் பேசுவதற்கும் எழுதுவதற்கும் உரையாடுவதற்கும் ஆய்வு செய்வதற்கும் இதழ்கள் வழியான தேவைகள் நிறைய இருக்கின்றன. கலை, இலக்கியம் மட்டுமல்லாமல், சமூகத்தின் மீதான வாசிப்பும் விவாதமுமான கருத்தாடல் பகிர்வுகள் மாற்று இதழ்களின் வழியாகவும் நடத்தப்பட்டிருக்கின்றன. 

குறிப்பாக, சமூகப் பொது நீரோட்டத்தில் மாற்று உரையாடல்களையும் விரிவான மதிப்பாய்வுகளையும் முன்வைக்க வேண்டிய தேவை இன்னும் இருக்கவேதான் செய்கிறது. ஆயினும், இதழ்கள் வழியிலான அத்தகைய முன்னெடுப்புகள் குறைவாக உள்ள நிகழ்காலச் சூழலில், குறிப்பாக, அச்சு இதழ்கள் வழியிலான முயற்சிகள் மிகமிகக் குறைவாக இருக்கும் சூழலில், ஓர் இதழ் வழியாகச் சமூக உரையாடல்களையும் ஆய்வுகளையும் படைப்பாக்கங்களையும் முன்னெடுக்கும்  வகையில்தான் ஏர் இதழ் மீளவும் வெளிவருகிறது. 

நவீனகாலப் பயணத்தில்  வாசிப்பதற்கும் காண்பதற்கும் மின்னிதழ்கள், மெய்நிகர் மற்றும் சமூக ஊடக வடிவங்கள் முன்வந்துவிட்ட போதிலும், அச்சு இதழுக்கான தேவைகள் இன்னும் குறைந்துவிடவில்லை. அதனாலேயே, அச்சு இதழ் வடிவத்திலேயே பன்முக உரையாடல் முன்னெடுப்புகளை உள்ளடக்கமாகக்கொண்டு புதுப் பொலிவுடன் அரையாண்டு இதழாக  வெளிவருகிறது ஏர் இதழ். 

தமிழ் அடையாளத்  தடத்திலிருந்து ஏர் இதழ் சற்றும் விலகியதில்லை. தீவிர இலக்கிய மரபை மட்டுமே பேசும் இதழாக என்றுமே  முகம் காட்டியதுமில்லை.   தமிழ் நிலத்தின் - தமிழ் இனத்தின் பண்பாட்டு அரசியலைத்தான் உள்ளீடாகக்கொண்டு வெளிவந்திருந்தது. பல்லாண்டுகள் கழித்து மீளவும் புதியதாய் வெளிவரும் ஏர் இதழானது, தொடர்ந்து அந்தத் தடத்திலேயும் களத்திலேயும்தான் எழுத்துழவை மேற்கொண்டு வெளிவருகிறது.  

அகமாகவும் புறமாகவும் தமிழ்ச் சமூகம் இன்று பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. சாதிய மேலாதிக்கமும் ஆரிய மதவாத மேலாதிக்கமும் மட்டுப்படாமல் மேலெழுந்து கொண்டிருப்பதோடு, அலை அலையாகப் பரவி மிகப்பெரும் சமூகத் தாக்குதல்களைத் தொடுத்துக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக, ஆரிய மதவாத மேலாதிக்க அரசியல் போக்கைத் தமிழகத்தில் நிலைநிறுத்தவும், அதற்குத் துணை நிற்கும் சாதிய மேலாதிக்கத்தைத் தக்க வைக்கவுமான முயற்சிகள் தீவிரம் அடைந்துள்ளன. அதேவேளையில், ஒடுக்குண்ட உழைக்கும் சமூகங்கள் சாதிய வன்மத்திற்குப் பலியாகி உருக்குலைந்து கிடக்கின்றன. 

அதுமட்டுமல்லாமல், அரசு மற்றும் சமூக நிறுவனக் கொலைகளும், கூலிப்படுகொலைகளும், பாலியல் வல்லுறவுகளும், சாதி ஆணவப் படுகொலைகளுமாய்த் தலைவிரித்தாடுகின்றன. மேலும், பள்ளி கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் வரை மாணவத் தலைமுறைகளிடம் நுழைந்திருக்கும் குடி மற்றும் போதைக் கலாச்சார நடத்தைகள், அவர்களைச் சமூக உதிரிகளாய் மாற்றிக் கொண்டிருக்கின்றன.  

இவை ஒருபுறம் இருக்க, தமிழ் நிலத்தின் அடையாள அழிப்பு திட்டமிட்டு நிறைவேற்றப்படுவதையும் கவலையோடு முன்வைக்க வேண்டியிருக்கிறது. வட இந்தியப் பகுதியிலிருந்து பெருவாரியான மக்கள் உதிரித் தொழிலாளர்களாகப் பல இலட்சக்கணக்கில் தமிழ்நாட்டிற்குள் குடியமர்த்தப்படுகிறார்கள். இந்தியாவின் வடகிழக்குப் பகுதிகளில் இருப்பதைப் போன்ற உள்நுழைவு அனுமதிச் சீட்டு ஏதுமின்றி தமிழ்நாட்டிற்குள் பெருவாரியாக உள்நுழைந்து கொண்டிருக்கிறார்கள். 

தமிழ்நாட்டின் பெரும்பாலான பெரு மற்றும் சிறு நகரங்கள் வட இந்தியத் தொழிலாளர்கள் நிரம்பி வழியும் நகரங்களாக  மாறிக்கொண்டிருக்கின்றன. பிழைப்புரிமை மற்றும் வாழ்வுரிமையோடு வாக்குரிமை நோக்கியும் அவர்கள் மெல்ல நகர்ந்து கொண்டிருக்கிறார்கள். இத்தகையப் போக்குகள் தொடருமானால், இன்னும் பத்தாண்டுகளுக்குள் தமிழ் நிலப்பரப்பின் ஆட்சி அதிகாரத்தைத் தன்வயமாக்கும் பேராபத்து நிகழத் தொடங்கும்.  தமிழ்ச் சமூகத்தின் வாழ்நிலம் மற்றும் பண்பாட்டுப் பரப்புகளை இந்தியமயமாக்கும் வெளிப்பாடுதான் இத்தகைய வடவர் குடியேற்றங்களாகும்.

இது மட்டுமல்லாமல், தமிழ்நாட்டில் நிலவிய - நிலவுகிற ஆட்சி அதிகாரக் கட்டமைப்புகள் யாவும் தமிழ் நிலத்தின் இயற்கை வளங்கள் சூறையாடப்படுதல், தமிழ் இனத்தின் உரிமைகள் பறிபோதல், தமிழ்ப் பண்பாட்டு அடையாளங்கள் சிதைக்கப்படுதல், தமிழரின் தொன்மை அடையாளங்கள் மறைக்கப்படுதல் குறித்தெல்லாம் அக்கறைப்பட்டதாக - அக்கறைப்படுவதாகத் தெரியவில்லை.  மாறாக, தமிழ் நிலத்தின் மீதும் இனத்தின் மீதும், பண்பாட்டு அடையாளங்கள் மீதும் திணிக்கப்பட்ட ஆரியமயமாக்கலைப் போல - இந்தியமயமாக்கலைப் போல,  திராவிடமயமாக்கமும் இங்கு தீவிரமாக நிகழ்ந்து கொண்டிருக்கிறது. 

இந்தச் சூழ்நிலையில்தான், மாற்றத்திற்கான எழுத்துழவு எனும் நோக்கக் குரலை உள்ளீடாகக்கொண்டு, தமிழ் அறிவுச் செயல்பாட்டு மரபின் தொடர்ச்சியாக ஏர் இதழ் வெளிவருகிறது. குறிப்பாக, மிக மிக முக்கியமான பாடுபொருள்கள்  அடங்கிய படைப்புகளுடன் வெளிவருகிறது ஏர் இதழ். நேர்காணல், கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள், மொழிபெயர்ப்புகள், நூல் மதிப்புரைகள் போன்ற மொழிசார் வடிவங்கள் மூலம் தமிழ்ச் சமூகத்திற்கான அறிவுசார் உரையாடலை - எழுத்துழவை இந்த இதழ் வழியாக முன்வைத்திருக்கிறது ஏர். 

ஏர் இதழை மீண்டும் அச்சு வடிவில் கொண்டுவருவதற்கான அறிவிப்பையும் வேண்டுகோளையும் மனதார வரவேற்றனர் தமிழ்ச் சமூக உறவுகள். அவ்வகையில், பல தரப்பினரின் பங்களிப்போடுதான் ஏர் இதழ் உருவாக்கம் நிகழ்ந்திருக்கிறது. 

தமிழ் நெடுங்கணக்கு எனும் எழுத்தியல் மரபில் அகரம் எனும் எழுத்தே முதல் எழுத்தாகும். னகரம் எனும் எழுத்தே இறுதி எழுத்தாகும். இதனை, ‘எழுத்தெனப் படுப அகர முதல் னகர இறுவாய்’ என்கிறது தொல்காப்பியம். தமிழ் மறையாம் திருக்குறளில் ஓரிடத்தில்கூட தமிழ் எனும் சொற்பதம் இடம்பெற்றிருக்கவில்லை. ஆயினும், திருக்குறள் தமிழ் மரபின் பின்புலத்திலிருந்து உருவான நூல் என்பதை உள்ளார்ந்து முன்வைத்திருக்கிறார் வள்ளுவர்.  

திருக்குறளின் முதற் குறள் அகரத்தில்தான் தொடங்குகிறது. இறுதிக்குறள் னகரத்தில்தான் முடிகிறது. அவ்வகையில், அகர முதலாய் னகர இறுவாய் என்பதே தமிழ் மரபின் உள்ளீடு ஆகும். தமிழ் மரபின் உள்ளீட்டின் வாயிலாகப் புலப்படும் எழுத்து மரபை - அறிவு மரபை - உரையாடல் மரபை - படைப்பாக்க மரபை இதழ் வழியாகப் புலப்படுத்த முனைந்திருக்கும் ஏர் இதழ், அகரத்தையும் னகரத்தையும் உள்ளீடாகக் கொண்ட ஓவியத்தை முகப்பாகக் கொண்டு வெளிவருவதில் பெருமை கொள்கிறது. 

படைப்புகளை வழங்கியும், ஒப்புதல் கொடுத்தும், உதவிகள் செய்தும் ஏர் இதழ் வெளிவருவதற்குப் பலரும் உதவியிருக்கிறார்கள். தமிழ் மரபின் தனித்துவ இதழாய் வெளிவந்திருக்கும் ஏர் இதழுக்குத் துணை நிற்கும் அனைவருக்கும் பேரன்பும் நன்றியும்தான் கைம்மாறு ஆகும். 

தமிழ் உறவுகளின் வரவேற்பும் வழிகாட்டலும் பங்கேற்பும்தான் ஏர் இதழை இன்னும் வளப்படுத்தும் என நம்புகிறேன்.  

தோழமையுடன்                                                                                      

மகாராசன்

 

**

ஏர் இதழ்.

மாற்றத்திற்கான எழுத்துழவாக..

அரையாண்டு இதழாக இப்போது வெளிவருகிறது..

தமிழ் அறிவுச் செயல்பாட்டு மரபின் தொடர்ச்சியாக, மிக மிக முக்கியமான பாடுபொருள்கள்  அடங்கிய படைப்புகளுடன் தற்போது முதல் பருவத்தின் இதழாக (சூலை- திசம்பர் 2025) வெளிவருகிறது ஏர் இதழ். 

நேர்காணல், கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள், மொழிபெயர்ப்புகள், நூல் மதிப்புரைகள் போன்ற மொழிசார் வடிவங்கள் மூலம் தமிழ்ச் சமூகத்திற்கான அறிவுசார் உரையாடல்களை முன்னெடுத்திருக்கிறது ஏர் இதழ்.

இதழ் உள்ளடக்கம்:

முன்னத்தி ஏர்.

- மகாராசன்

வாழ்த்துச் சொற்கள்.

- பாவலர்கள் காசி ஆனந்தன் மற்றும் அறிவுமதி.


படைப்புகள் நிலத்தின் ஆன்மாவைப் பிரதிபலிக்க வேண்டும்: சோ.தர்மன் நேர்காணல்.

- பா.ச.அரிபாபு.


தமிழகப் பள்ளிக்கூடங்கள்: அதிகாரம் - கண்டிப்பு - தண்டனை.

- பூவிதழ் உமேஷ்.


தமிழ் ஓலைச்சுவடிகள்: திட்டமிட்ட அழிப்பு எதற்காக?

- நாக.இளங்கோவன்.


கள்: தடை நீக்குவதற்கான போராட்டங்களும் அதன் மீதான விமர்சனங்களும்.

- லிங்கம் தேவா.


‌தமிழரின் பூர்வீகப் பகுதிகளைத் தன்னாட்சி (யூனியன்) பிரதேசமாக

மாற்ற வேண்டும்.

- ச.பென்னிகுயிக் பாலசிங்கம்.


கல்வியில் போதாமைகள்: பெற்றோர்கள்-குழந்தைகள்- பள்ளிகள்-ஆசிரியர்கள்.

- சு.உமா மகேஸ்வரி.


பஞ்சமி நிலம்: 

ஒரு வரலாற்றுப் பார்வை.

- குணா


வெள்ளாமை - சிறுகதை

- மு.மகேந்திர பாபு.


மரபுவழி உற்பத்தியும் மேய்ச்சல் தொழிலும்.

- கதிர்நம்பி.


ஈழ நிலமும் தாய்மன நினைவுகளும்.

- மகாராசன்.


சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் உருவாகக் குரல் உயர்த்துவோம்.

- அருண் முத்துநாயகம்.


நாவிதர் சமூக வாழ்வும் ஆற்றுநீர்ப் போக்கும்.

- மு.அம்சம்.


கங்கும் நெருப்பும்: வழக்காறுகளும் பதிவுகளும்.

- மா.ச.இளங்கோமணி.


கிடை இதழ் - அறிமுகம்.

- வெற்றிச்செல்வன்.


கண்ணாமூச்சி - சிறுகதை

- தங்கேஸ்.


அபூர்வமான நிலவியலும் அதிசயமான மானுடரும்.

- சா.தேவதாஸ்.


செம்பச்சை நூலகம் - அறிமுகம்.

- மகாராசன் - அம்சம்.


சில்லறைக் காசுகள் - சிறுகதை.

- அய்யனார் ஈடாடி.


குமரிக்கண்டத் தமிழரின் தொன்ம வரலாறு.

- மு.களஞ்சியம்.


‌‌ஓ மேற்குக் காற்றே உனக்கொரு பாடல் - ஷெல்லி கவிதை மொழிபெயர்ப்பு.

- தங்கேஸ்.


‌எங்கள் ஊர்த் தோட்டங்களில் வேலிகள் இருந்தன: சூழலியல் பண்பாடும் வாழ்வியல் பின்புலமும்.

- சு.வேணுகோபால்.


தமிழ்த் திரைப்படங்களில் நிலக் காட்சிகள்.

- ச.தயாளன்.


‌ஆண் பெண் சமத்துவம் சாத்தியமே.

- அமரந்த்தா.


குமார் அம்பாயிரம்: திணை நிலத்தின் மேய்ச்சல்காரன்.

- யவனிகா ஸ்ரீராம்.


கு.அழகிரிசாமியின் சிறுகதைகளில் விளிம்புநிலை மனிதர்கள்.

- ந.இரத்தினக்குமார்.


பண்பாடுகளை மறுவாசிப்புச் செய்யும் பெண் தொன்மங்கள்.

- இரா.வெங்கடேசன்.


தமிழ்ப்பேழை: ஒருங்கிணைந்த மின்னகராதியின் எதிர்காலவியல்.

- தமிழ்ப்பரிதி மாரி.


வர்மப் பொன்னூசி: சித்த மருத்துவத் தொன்மையும் மடைமாற்றமும்.

- அருள் அமுதன்.


பழங்குடிகளின் நாளை மற்றுமொரு நாளே!

- டி.தருமராஜ்.


தஞ்சைப் பெரியகோவில்: நுட்பமும் மொழியும்.

- மா.மாரிராஜன்.


திராவிடம் குறித்த மீளாய்வுக் கருத்தாடல்கள் - நூல் பரிந்துரை.

- சீமான்.

‌கவிதைகள்:

சி.மோகன் | தீபச்செல்வன் |  வெய்யில் | கூடல்தாரிக் | பித்தன் கனவன் | செ.தமிழ்நேயன் ‌| கோமதி | இளையவன் சிவா | அரங்க மல்லிகா | மகாராசன் | சாத்தன் குன்றன் | நெகிழன் | இராசரத்தினம் கேசுதன்.


முதன்மை ஆசிரியர்:
மகாராசன்.

ஆசிரியர் குழு:
பா.ச.அரிபாபு, 
தமிழப்பரிதி மாரி, 
அய்யனார் ஈடாடி, 
மு.மகேந்திர பாபு, 
அ.ம.அங்கவை யாழிசை, செ.தமிழ்நேயன்.

பதிப்பாளர்:
அ.ம.அங்கவை யாழிசை.

வடிவமைப்பு:
நெகிழன்.
முகப்போவியம்:
இயல்.
இதழ் அளவு 18X24 செ.மீ
(டபுள் கிரவுன்),
பக்கங்கள் 224,
விலை உரூ 300/-
இதழ் பெற :
செந்தில் வரதவேல்,
யாப்பு வெளியீடு,
பேச: 9080514506

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக