சனி, 14 மார்ச், 2026

மொழியின் இயங்குதலும் சேவைத் தளங்களும்: மொழியைப் பழித்ததற்கான மறுப்புரையாடல் - மகாராசன்


மனித சமூகம் தோன்றியதிலிருந்து மொழியும் சமூகத்தினுாடாகவே உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறது. அதனால்தான் மொழியைப் பற்றிய குறிப்புகள் சமூகத்தைப் பற்றியதாகவும் அமைந்து விடுகின்றன. மொழியின் துணையின்றி எந்தவொரு சமூகமும் அடுத்த கட்டத்திற்கு நகரமுடியாது. சமூகத்தின் எண்ணப் பதிவுகளையும், வாழ்வியல் முறைகளையும், பண்பாட்டு நடத்தைகளையும் மொழியில் பதிவுறுத்துவதன் வாயிலாகச் சமூகத்தினுடைய வரலாற்றுப் பதிவு நிகழ்ந்துவிடுகின்றது. அதேபோல, சமூகக் கட்டுமானத்திற்கு இணங்கிச் செல்லும் மனிதர்களைத் தயாரிக்கும் வகையில் கருத்தியல்கள் உருவாக்கப்படுகின்றன. அவ்வகையில், மனிதர்களை எழுதிச் செல்லும் மொழியானது, மனிதர்களுக்கும் எழுதி வைத்துக்கொள்ளப் பயன்படுகின்றது. மேலும், கடந்த காலச் சமூகத்தின் எச்சமாகவும் நிகழ்காலச் சமூகத்தின் இருப்பாகவும் அமைந்து மொழி இயக்கம் கொள்ளும் கருவியாகவும் இருக்கிறது.

இன்றைய சமூகம், பல்வேறு காலகட்டங்களை - பல்வேறு வளர்ச்சிக் கட்டங்களை - பல்வேறு சமூக அமைப்புகளைக் கடந்து வந்திருக்கிறது. நீண்ட நெடிய வரலாற்றுப் பாரம்பரியத்தை இச்சமூகம் கொண்டிருக்கிறது. அதேபோல மொழிக்கும் இத்தகைய நெடிய வரலாறு உண்டு. சமூகமானது உயிர் வாழ்கிற எல்லா மனிதர்களுக்கும் பொதுவானதுதான். என்றாலும், சமூகத்தை நிர்வகிக்கும் அதிகாரமும் ஆளுகையும் எல்லோருக்கும் உரித்தானவையாக அமைந்திருக்கவில்லை. உடைமை வர்க்கமும் உயர்த்திக்கொண்ட சாதிப்பிரிவினரும், ஆண்களுமே சமூக அதிகாரமும் ஆதிக்கமும் நிரம்பியவர்களாக உள்ளனர். சமூக நிறுவனங்கள் யாவும் இப்பிரிவினருக்குச் சேவகம் செய்வதையே நோக்கமாகக் கொண்டவை; சேவகம் செய்வதற்காக அமைக்கப்பட்டவை. 

இந்நிலையில், மொழியும் ஒரு நிறுவன அமைப்பைப் போன்று செயல்படும் தன்மை கொண்டதாக அமைந்திருக்கிறது. இதன் காரணமாகவே எல்லோருக்கும் பயன்படும் மொழியை அதிகாரப் பிரிவினர் தம் வயப்படுத்திக் கொள்கின்றனர். பிற சமூக நிறுவனங்களைப் போலவே மொழியையும் அதிகாரப் பிரிவினர் பயன்படுத்திக் கொள்கின்றனர். இதன் விளைவாகவே, அதிகாரப் பிரிவினரின் சிந்தனைகளையும், அதிகார நிறுவனங்களின் கருத்தியல்களையும் மொழி தன்னகத்தே கொண்டிருப்பது தவிர்க்க முடியாததாகிப் போகிறது. அதனாலேயே, பயன்பாட்டளவில் அதிகாரப் பிரிவினருக்கே மொழியின் சேவை அமைந்திருக்கிறது என்பதாகத் தோற்றம் கொள்கிறது. அதிகாரப் பிரிவினரின் அதிகாரமானது அல்லது அதிகார வழிப்பட்ட கருத்தியலானது மொழி வழியாகச் சமூகம் முழுமைக்கும் உட்செலுத்தப்படுகின்றது. இவ்வாறான நிலையில், அதிகாரம் செலுத்தும் உடைமை வர்க்கம் போல - உயர்த்திக்கொண்ட சாதிகளைப்போல - ஆதிக்க மனநிலை கொண்ட ஆண்களைப் போல மொழியும் அமைந்திருக்கிறது என்ற கருத்துக்கள் தோன்றுகின்றன. இதனால், மொழியை உடைமை வர்க்க மொழி / உயர் சாதிய மொழி / ஆண்மொழி என்றெல்லாம் அடையாளப்படுத்திச் சொல்லும் நிலை ஏற்பட்டிருக்கிறது. 

மொழியை இவ்வாறு குறிப்பிடுவது சரிதானா? உண்மையிலேயே மொழி அவ்வாறுதான் அமைந்திருக்கிறதா? என்றெல்லாம் ஆய்வுக்கு உட்படுத்திப் பார்க்க வேண்டியுள்ளது. மொழியை உடைமை வர்க்க மொழி / உயர்சாதிய மொழி / ஆண்மொழி என்றெல்லாம் அடையாளப்படுத்திச் சொல்லும் இந்நிலையானது சமூக விமர்சனத்தோடு தொடர்புடையதாகும். 

சமூகத்தில் காணலாகும் ஒழுங்கு முறைகள், பண்பாட்டு நடத்தை முறைகள், வாழ்வியல் நிலைகள், கலைகள், இலக்கியங்கள், இலக்கணங்கள், குடும்ப முறைகள், தத்துவங்கள், கல்வி, சமூகக் கட்டுதிட்டங்கள், நீதி, நிர்வாகம், சமயம், சாதி போன்ற அனைத்தும் ஆளும் அதிகாரப் பிரிவினருக்கானவையாக ஆக்கி வைத்திருக்கின்றன. அவை அனைத்தும் ஆளும் அதிகாரப் பிரிவினரின் கருவிகளாக அமைந்திருக்கின்றன. 

ஆகவே, இந்தப் பின்புலங்களில் பங்காற்றும் மொழியும் ஆளும் அதிகாரப் பிரிவினரைச் சார்ந்ததாகவே இருக்கின்றன. ஒரு மொழியில் உடைமை வர்க்கத்தின் அதிகாரக் கருத்துகளும், சாதியாதிக்கக் கருத்துகளும், ஆணாதிக்கக் கருத்துகளும், மதவாதக் கருத்துகளும், பிற்போக்கான மூட நம்பிக்கைக் கருத்துகளும், பழமைவாதக் கருத்துகளும் உள் பொதிந்து கிடக்கின்றன. இதன் காரணமாகவே மொழியானது உடைமை வர்க்க மொழியாக / உயர்த்திக்கொண்ட சாதிய மொழியாக / ஆண்மொழியாக / மதவாத மொழியாக / மூட நம்பிக்கை மொழியாக / காட்டுமிராண்டி மொழியாக அமைந்திருக்கிறது என்கிற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. இதன் தொடர்ச்சியாகவே மொழியைப் பழிக்கும் போக்கும் - மொழியை நிராகரிக்கும் போக்கும் - மொழியை இழிவுபடுத்தும் போக்கும் - மொழியைப் பகடி செய்யும் போக்கும் பல தரப்பினரால் முன் வைக்கப்படுகின்றன. 

சமூகத்தில் காணலாகும் பெரும்பாலான பண்பாட்டுக் கூறுகளும் நிறுவனங்களும் ஆளும் அதிகாரப் பிரிவினைச் சார்ந்தவையாகக் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. அவை ஆதிக்கத்தை / சாதி ஆதிக்கத்தனத்தை / ஆணாதிக்கத்தை வெளிப்படுத்தக் கூடியவைதான். ஆனால், மொழியின் பயன்பாடு என்பது பண்பாட்டு நிறுவனக் கூறுகளிலிருந்து வேறுபட்டு அமைந்திருக்கக் கூடிய ஒன்றாகும். பண்பாட்டு நிறுவனக் கூறுகளுக்கும் மொழிக்கும் இடையிலான வேறுபாட்டு நிலையைப் பார்க்காமல், மற்ற பண்பாட்டு நிறுவனக் கூறுகளைப் போலவே மொழியையும் உயர் வர்க்க மொழியாக /உயர்த்திக்கொண்ட சாதிய மொழியாக / ஆண் மொழித்தன்மை கொண்டதாக / பழமைவாத மொழியாக / மூட நம்பிக்கை மொழியாக / பிற்போக்கு மொழியாக / காட்டுமிராண்டி மொழியாகப் பார்ப்பது, மொழியின் சேவைத் தளங்கள் குறித்தப் புரிதல் குறைபாட்டால் வருவதாகும். 

ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் சமூகத்தில் நிலவுகிற பொருளாதார உற்பத்தி சார்ந்த அரசியல் நடவடிக்கைகளே பண்பாட்டு நிறுவனக் கூறுகளாக அமைகின்றன. இப்பண்பாட்டு நிறுவனக் கூறுகள் உற்பத்தியைக் கட்டுக்குள் வைத்திருக்கும் அதிகாரப் பிரிவினருக்கே சேவகம் செய்யும். இப்பண்பாட்டு நிறுவனக் கூறுகளைப் போன்று மொழியும் அதிகாரப் பிரிவினருக்குச் சேவகம் செய்யும் தன்மை கொண்டதாக இருப்பினும், பண்பாட்டு நிறுவனக் கூறுகளிலிருந்து மொழியானது வேறுபட்டு நிற்கக் கூடியதாகும். 

குறிப்பிட்ட காலகட்டத்தில் ஒரு சமூகத்தின் பண்பாட்டு நிறுவனக் கூறுகளாக அமைந்திருப்பவை காலங்காலமாகத் தொடர்ந்து வரக்கூடியவை அல்ல. வேறொரு உற்பத்தி முறை சார்ந்த புதிய சமூக அமைப்பு தோன்றும்போது, ஏற்கனவே இருந்த பழைய பண்பாட்டு நிறுவனக் கூறுகள் மறைந்தோ மாற்றம் பெற்றோ அல்லது முற்றிலும் புதியதாகவோ அமையும் தன்மை கொண்டவை. ஆனால், மொழியானது தொடர்ந்து வந்துகொண்டே இருக்கிறது. பழைய சமூக அமைப்பில் இருந்த மொழியானது புதிய சமூக அமைப்பிற்கும் வந்துகொண்டிருக்கிறது. அதாவது,"சமூக வளர்ச்சியின் ஒவ்வொரு புதிய படியிலும் கலாச்சாரம் உள்ளடக்கத்தில் மாறுகிறது. அதே நேரத்தில் மொழியானது பல்வேறு காலகட்டங்களிலும் அடிப்படையில் எவ்வித மாற்றமுமின்றிப் பழைய கலாச்சாரத்தைப் போலவே புதிய கலாச்சாரத்திற்கும் சேவை செய்கிறது"1 அதாவது, மொழியானது குறிப்பிட்ட வர்க்கத்தாலோ / உயர்த்திக் கொண்ட சாதிப் பிரிவினராலோ / ஆண்களாலோ மட்டும் உருவாக்கப்பட்டதல்ல. மொழியானது ஆளும் அதிகாரப் பிரிவினரால் மட்டுமே உருவாக்கப்படவுமில்லை. மாறாக, மொழியானது சமூகத்தில் காலங்காலமாக வாழ்ந்து வருகிற ஒட்டுமொத்த மனிதர்களால் உருவாக்கப்பட்டதாகும். 

ஒட்டுமொத்த மனிதர் என்பதற்குள் உடைமை மற்றும் உழைக்கும் வர்க்க மனிதர்களும், உயர்த்திக் கொண்ட மற்றும் ஒடுக்கப்பட்ட சாதிகள் சார்ந்த மனிதர்களும், பல்வேறு வட்டார மனிதர்களும், பெண்களும் ஆண்களும், எல்லா வகைப்பட்ட மதத்தவர்களும், பிற்போக்குவாதிகளும், முற்போக்குவாதிகளும் என எல்லாத் தரப்பினரும் உள்ளடங்குவர். அவ்வகையில், ஆளும் அதிகாரப் பிரிவினர் மட்டுமே மொழியைப் பயன்படுத்துவதில்லை. உடைமை இழந்தவர்களும், ஒடுக்குண்ட சாதி மக்களும், பெண்களும், சீர்திருத்தம் மற்றும் புரட்சிகர சக்திகளும் மொழியைப் பயன்படுத்தவே செய்கின்றனர். அவர்களிடமும் மொழி புழக்கத்தில் இருக்கின்றது. இருப்பினும் பொது சமூக வெளியில் அங்கீகரிக்கப்படவில்லை. எனினும், அவர்களுக்கும் மொழி பயன்படவே செய்கின்றது. அவர்களும் மொழியின் மூலமாகவே தமது கருத்தியில் மற்றும் பண்பாட்டுக் கட்டமைப்புச் செயல்பாடுகளை முன்னெடுக்கவும் செய்கின்றனர். 

இந்நிலையில், "மொழி என்பது ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக உருவாக்கப்பட்டதல்ல. மாறாக, சமூகம் முழுவதின், சமூகத்திலுள்ள வர்க்கங்கள் அனைத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக உருவாக்கப்பட்டதாகும். இதன் காரணமாகவே மொழி சமூகத்தின் எல்லா உறுப்பினர்களுக்கும் பொதுவானதாக - சமூகத்தின் பொது மொழியாக - அனைத்து மக்களுக்கும் பொது மொழியாக - தனி மொழியாக உருவாக்கப்பட்டது. எனவே மக்களுக்கிடையே தொடர்பு ஏற்படுத்தும் கருவி என்ற வகையில் மொழியின் செயல்பாடானது, ஒரு வர்க்கத்திற்குச் சேவை செய்து மற்ற வர்க்கங்களை ஒதுக்கி வைக்காமல், அச்சமூகம் முழுமைக்கும் சமமாக, சமூகத்திலுள்ள அனைத்து வர்க்கங்களுக்கும் சமமாகவே பயன்படுகிறது. 

ஒரு மொழி அழுகிப்போன பழைய அமைப்பிற்கும், அதே நேரத்தில் உருவாகிவரும் புதிய அமைப்பிற்கும், பழைய புதிய அடிப்படை அமைப்பிற்கும், சுரண்டுபவனுக்கும் சுரண்டப்படுபவனுக்கும் சமமாகவே சேவை செய்கிறது"2 எனும் ஜே.வி. ஸ்டாலின் முன்வைத்திருக்கும் கருத்து நோக்கத்தக்கது ஆகும். 

இவ்விடத்தில்தான், மொழிக்கும் பண்பாட்டு நிறுவனக் கூறுகளுக்கும் இடையிலான வேறுபாடு அடங்கியிருக்கிறது எனலாம். சமூகத்தில் காணலாகும் பண்பாட்டு நிறுவனக் கூறுகள் அதிகாரப் பிரிவினருக்கு வெளிப்படையாகவே சேவை செய்வன. மொழியானது அப்படிப்பட்டதல்ல. அதிகாரப் பிரிவினருக்கும் சேவை செய்யும்; அதிகாரம் இழந்தவர்களுக்கும் சேவை செய்யும். ஆண்களுக்கும் சேவை செய்யும்; பெண்களுக்கும் சேவை செய்யும். பிற்போக்குவாதிகளுக்கும் சேவை செய்யும்; முற்போக்குவாதிகளுக்கும் சேவை செய்யும். 

இவ்வாறான நிலையில் அனைத்துப் பிரிவினருக்கும் சேவையாற்றும் தன்மையை மொழி கொண்டிருப்பதால், மொழியை அதிகாரப் பிரிவினர் கூடுதலாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர். அதாவது, அதிகாரப் பிரிவினரின் சிறப்பு வழக்காறுகளையும், நடத்தை முறைகளையும், ஒழுங்கு முறைகளையும், கருத்தியல்களையும், பண்பாட்டுக் கூறுகளையும், தங்களுக்கேயுரிய முறைகளையும், தங்களது சொந்த விருப்பு வெறுப்பு சார்ந்த சொல்லாடல்களையும், அர்த்தங்களையும் மொழியின் மீது திணிக்கின்றனர். இத்திணிப்பின் மூலம் உருவான மொழியின் துணையோடு கலை இலக்கிய இலக்கணங்களை உருவாக்குகிறார்கள். இம்மாதிரியான செயல்பாடுகளுக்கு எழுத்து மரபையே பெரும்பாலும் பின்பற்றுகிறார்கள். எழுத்து மரபில் வெளிவரும் அனைத்துமே ஆவணமாகின்றன. அதிகாரப் பிரிவினரால் உருவாக்கப்பட்ட இத்தகைய ஆவணங்கள் ஒட்டுமொத்தச் சமூக ஆவணமாக முன்னிருத்தப்படுகின்றன. இவ்வகையில்தான் அதிகாரப் பிரிவினர் சமூகக் கட்டுமானத்திற்கு உகந்தவாறு மொழியைப் பயன்படுத்துகின்றனர். இதனால் மொழியானது அதிகாரப் பிரிவினரின் மொழியாகத் தோன்றுகிறது. 

மேலும், மொழியானது உடைமை வர்க்க மொழி / உயர் சாதிய மொழி / ஆணாதிக்க மொழி என அடையாளப்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு காலகட்டத்திலும் நிலவுகிற சமூகச் சூழல் அமைவுகளைப் பொறுத்தே - அதன் தேவைகளைப் பொறுத்தே மொழியின் இயக்கமும் அமைந்திருக்கிறது. சமூகத்தின் எல்லா மட்டங்களிலும் அதிகாரப் பிரிவினரின் ஆளுகை இருப்பதனால், மொழித் தளத்திலும் அவ்வாளுகையின் பாதிப்புகள் இருக்கின்றன. அதனால் மொழிக்கூறுகளும் அதிகாரப் பிரிவினரை நோக்கியதாக அமைந்திருக்கின்றன. அவ்வகையில் உடைமை வர்க்கம் - உயர்த்திக் கொண்ட சாதிகள் - ஆண்கள் என்ற முக்கூட்டுத் தன்மையில் அமைந்த அதிகாரப் பிரிவினருக்குச் சார்பான வகையில் மொழிக் கூறுகள் அமைந்திருக்கின்றன. 

எனினும், மொழியின் எல்லாக் கூறுகளுமே அதிகாரப் பிரிவினரின் சார்பாக அமைந்திருக்கவில்லை. அதிகாரம் சார்ந்த தரப்பினர் அல்லது அவ்வகைப்பட்ட மனிதர்கள் பொதுவாய்ப் பயன்படுத்தும் சொற்களோ அவற்றின் பொருண்மைகளோ மட்டுமே ஒரு மொழியில் சேகரமாய்ப் பதிவாகியிருக்கவில்லை. அவ்வாறான “குறிப்பிட்ட சொற்களும், வெளிப்பாடுகளும், சொற்பொருள் வேறுபாடுகளும் மொழியில் மிகச் சிலவேயாகும். அவை ஒட்டு மொத்த மொழியியல் கூறுகளில் ஒரு சதவீதத்திற்கும் குறைவானதேயாகும். எனவே மீதமுள்ள ஏராளமான சொற்களும், வெளிப்பாடுகளும், அவற்றின் சொற்பொருள்களும் சமூகத்தின் அனைத்து வர்க்கங்களுக்கும் பொதுவானவை"3 என்ற நிலையில் அமைந்திருக்கின்றன. அந்தவகையில், மொழியானது வர்க்கம் கடந்து, சாதி கடந்து, பாலினம் கடந்து, வட்டாரம் கடந்து பயன்படும் இயல்பு கொண்டதாக அமைந்திருக்கிறது எனலாம். 

காலங்காலமாய் உழைத்துப் போடுதலையே தலைவிதியாகக் கொள்ளுமாறு வலியுறுத்திய ஒரு பண்பாட்டுக் கருத்தியல் மொழியிலே வெளிப்பட்டிருக்கிறது. பிறப்பின் அடிப்படையிலான சாதிய ஏற்றத்தாழ்வுக் கருத்தியல் மொழியாலேதான் கற்பிதம் செய்யப்பட்டிருக்கிறது. ஆணுக்குப் பெண் அடிமை எனும் பாலின ஒடுக்குமுறை மொழி வழியே நிகழ்த்தப்பட்டிருக்கிறது. இவ்வாறான அதிகாரப் பிரிவினரின் தேவைகளுக்கு ஏற்பவும் இசைந்தும் மொழி உதவுவதைப் போலவே, உழைக்கும் வர்க்கத்தினர்க்கும், ஒடுக்குண்ட சாதி மக்களுக்கும், பெண்களுக்கும் பயன்படும் வகையிலும் அவர்களுக்கான விடுதலைக் கருத்தியலையும் - உரிமை மீட்புக் கருத்தியலையும் - அதிகார எதிர்ப்புக் கருத்தியலையும் முன்னெடுத்துச் செல்வதற்கான பண்பாட்டு ஆயுதமாகவும் மொழி அமைந்திருக்கிறது. 

அதாவது, உழைக்கும் வர்க்கத்தின் - ஒடுக்குண்ட சாதி மக்களின் - பெண்களின் வாழ்வியலும் சிந்தனைகளும் நடத்தைகளும் மொழித் துணையோடு நிகழக்கூடியவைதான். மேலும், அம்மக்களின் விடுதலைச் சிந்தனைகள், செயல்பாடுகள், போராட்டங்கள், அவற்றுக்கான தத்துவங்கள், திட்டங்கள், வழிமுறைகள், அனுபவப் பகிர்வுகள் போன்றவையும் மொழி வழியாகவே வெளிப்படுகின்றன. இந்நிலையில், மொழியானது குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டுமின்றி எல்லாப் பிரிவினருக்கும் சேவை செய்யக் கூடியதாகவே அமைந்திருக்கிறது. சமூகத்தின் அக மற்றும் புறவயத் தேவையை ஒட்டியே மொழியின் இயக்கம் அமைந்திருக்கிறது. ஆகவே, மொழியை உடைமை வர்க்க மொழி / ஆண்மொழி | உயர்சாதிய மொழி / பிற்போக்கு மொழி / காட்டுமிராண்டி மொழி என அடையாளப்படுத்தி ஒதுக்க முடியாது. 

மொழியின் சில கூறுகள் உடைமை வர்க்கம் சார்ந்த - சாதி ஆதிக்கம் சார்ந்த / ஆணாதிக்கம் சார்ந்த - பிற்போக்கு சார்ந்த - பழமைவாதம் சார்ந்ததாக இருக்கின்றன என்பதற்காகவே ஒட்டுமொத்த மொழியினையும் முற்றாகப் புறந்தள்ளிவிட முடியாது; புறந்தள்ளவும் கூடாது. மொழியை எந்தப் பிரிவினர் கருவியாகக் கொள்கின்றனரோ, அந்தப் பிரிவினரை நோக்கியதாகவும் மொழியின் இயக்கம் நகரும். சமூகத்தில் வர்க்க விடுதலை இயக்கங்கள் வளர்ச்சியடையும்போது அவற்றுக்கும் மொழி பயன்படும். சாதி ஆதிக்க ஒழிப்பு இயக்கங்கள் தீவிரமடையும்போது அவற்றுக்கும் மொழி பயன்படும். பெண் விடுதலை இயக்கங்கள் கூர்மையடையும்போது அவற்றுக்கும் மொழி பயன்படும். அறிவியல் தொழில்நுட்ப மாறுதல்கள் ஏற்படும்போது அவற்றுக்கும் மொழி பயன்படும். 

ஆக, ஆதிக்கம் செலுத்தவும் மொழி பயன்படுகிறது. விடுதலை பெறுவதற்குக்கும் மொழி பயன்படுகிறது. மூடத்தனத்தை வலியுறுத்தவும் மொழி பயன்படுகிறது; அறிவியலைப் பரவலாக்கவும் மொழி பயன்படுகிறது. சமூகத்தில் எவை தீவிரம் கொள்கின்றனவோ அவற்றுக்கெல்லாம் மொழி பயன்படவே செய்யும். அவ்வகையில், மொழியானது எல்லா மட்டங்களிலும் எல்லாக் காலங்களிலும் சேவை செய்யக் கூடியதாக அமைந்திருக்கிறது. 

அதாவது, சமூகத்தின் தேவையை ஒட்டித்தான் மொழியானது தன் பங்களிப்பை நிறைவாகச் செய்யும் தன்மையை இயல்பாகக் கொண்டு அதன் சேவைத் தளத்தைப் பரந்து விரிந்தளவிலே அமைத்துக் கொண்டுள்ளது எனலாம். சமூகம் அகத்திலும் புறத்திலும் மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்கிறது. அந்தவகையில், சமூகம் மாறிக்கொண்டே இருக்கிறது. சமூகத்தின் தேவைகளைப் பொருத்துப் பழையன கழிதலும் புதியன புகுதலுமாய் எல்லா வகை மாற்றங்களையும் உள்ளிழுத்துக் கொள்வதன் வாயிலாகச் சமூகம் தன்னைப் புதுப்பித்துக் கொள்கிறது. 

சமூகத்தோடு பிணைந்துள்ள மொழியும் காலந்தோறும் புதுப்பித்துக்கொள்ளும் தன்மையைப் பெற்றிருக்கிறது. அவ்வகையில், "மொழியில் சமூக மாற்றங்களுக்கு ஏற்பத் தோன்றும் மாற்றங்களைப் புதுமையாக்கம் எனலாம்"4. இப்புதுமையாக்கம் சமூகத்தின் தேவைகளுக்கு ஏற்ப ஏற்படுகின்ற மாற்றமாகவே அமைந்திருக்கின்றது. 

கால மாற்றத்தினாலும், சமூகம் தந்திட்ட படிப்பினைகளாலும், சமூகம் குறித்த ஆய்வுகள் அதனதன் ஆழம் தேடிச் செல்கின்றன. கடந்து வந்த சமூக நிலைமைகள் குறித்தும், அமையப் போகிற சமூக அமைப்பு குறித்தும் பலவகைச் சிந்தனைகள் தோன்றிய வண்ணம் உள்ளன. மய்யம் நோக்கிய விளிம்புகளின் நகர்வு வேகம் காட்டத் தொடங்கியுள்ளன. ஆண் - சாதிய வர்க்க முக்கூட்டு ஆதிக்கக் கூறுகளைத் தகர்த்து, அதிகார மய்யத்திலிருந்து விடுதலை பெறுவதை இலக்காகக்கொண்ட சமூக மாற்றுச் சிந்தனைகள் எல்லாக் காலத்திலும் உரத்து எழும்பியிருக்கின்றன; இப்போதும் எழும்புகின்றன. அதாவது, ஒரு சமூகப் புரட்சி இச்சமூகத்திற்குள்ளேயிருந்து இயக்கம் கொள்வதும், சமூக மாற்றச் செயல்பாடுகளின் தொடக்கமாக, சமூகத்தில் நிலவுகிற அனைத்துப் பண்பாட்டு நிறுவனக் கூறுகளின் மீதும் கட்டவிழ்த்துப் பார்ப்பதும், அதேவேளையில், தேவைப்படும் தருவாயில் மறைந்து போனவற்றைத் தேடிக் கண்டடைந்து மீட்டுருவாக்கம் செய்தோ அல்லது புதியனவற்றைக் கட்டமைத்தோ மாற்றத்தை முன் வைக்கிற சிந்தனைகள் வெளிப்படுத்தப்படுகின்றன. 

இத்தகைய கட்டவிழ்ப்பும் கட்டமைப்பும் சார்ந்த செயல்பாடுகள் மொழித் தளத்திலும் நிகழ்ந்து வந்திருக்கின்றன. சமூகத்தில் மாற்றமோ புரட்சியோ நிகழும்போது மொழியிலும் மாற்றமோ புரட்சியோ நிகழும். மேலும், "ஒரு சமூகப் புரட்சி என்பது, சில மொழி நியதிகளுக்கு எதிரான புரட்சியுமாகவே அமைந்து விடுகிறது"5. மொழிக்கு எதிரான புரட்சியாக அது அமைவதில்லை. அதாவது, ஒரு சமூகப் புரட்சியில் அச்சமூக அமைப்பின் அடிக்கட்டுமானம் எனப்பெறும் பொருளியல் உற்பத்திமுறையும் அதன் மேல் கட்டுமானக் கூறுகளும் தூக்கியெறியப்பட்டு, புதியதோர் உற்பத்தி முறையும் அதன் மேல்கட்டுமானக் கூறுகளும் அமையும். ஆனால், மொழியானது முழுவதுமாகத் தூக்கியெறியப்பட்டு புதிய மொழி என்ற ஒன்று உருவாவதில்லை. மாறாக, பழைய சமூக அமைப்பில் இருந்த மொழியே புதிய சமூக அமைப்பிலும் தொடர்கின்றது. 

ஒரு மொழி இன்னொரு மொழியாக மாறுவதில்லை. ஆனால், புதிய சமூக அமைப்பிற்கு ஏற்ப மொழியில் மாற்றங்கள் நிகழ்கின்றன. மொழியின் சொற்தொகுதியிலும் அமைப்பிலும் தொடர்ந்து மாற்றங்கள் ஏற்படுகின்றன. "தொழில், விவசாயம், வாணிபம், போக்குவரத்து, தொழில் நுட்பம், விஞ்ஞானம் போன்றவற்றின் தொடர்ந்த வளர்ச்சியானது, அதன் சொற்தொகுதியை அவற்றின் செயல்பாட்டிற்குத் தேவையான புதிய சொற்களுடனும் வெளிப்பாடுகளுடனும் புதுப்பித்துக்கொள்ளும்படி மொழியை நிர்ப்பந்திக்கிறது. எனவே, மொழியானது இந்தத் தேவைகளை நேரடியாகப் பிரிதிபலித்து அதன் சொற்தொகுதியைப் புதிய சொற்களால் புதுப்பித்துக் கொள்வதுடன் அதன் இலக்கண அமைப்பையும் சீரமைத்துக் கொள்கிறது"6. இவ்வாறு மொழியானது காலந்தோறும் தன்னைப் புதுப்பித்துக்கொள்ளும் தகவமைப்பைப் பெற்றிருக்கிறது எனலாம். 

மொழியானது சமூக மனிதர்களுக்கிடையில் உறவாடவும் உற்பத்தி செய்யவுமான ஒரு கருவியாகக் கொள்ளும்போது, மொழியைக் கையாள்பவர்களின் திறமைகளைப் பொறுத்துப் புதியனவற்றையும் உற்பத்தி செய்யும். இன்றைய சூழலில் மாற்றுச் சிந்தனை ஆய்வுகள் மொழியின் மீதும் மாற்றங்களை முன் வைக்கின்றன. அவ்வகையில், அதிகாரப் பிரிவினரான உடைமை வர்க்க - சாதி ஆதிக்க - ஆண் மய்யமிட்ட மொழிக் கூறுகளை மாற்றி நிகர் மொழியாக மாற்றும் நடவடிக்கைகள் காலந்தோறும் தொடர்ந்திருக்கின்றன. 

இன்றைய நிலையில், தேசிய இன விடுதலைச் சிந்தனைகளும், பொதுவுடைமைச் சிந்தனைகளும், பெண் விடுதலைச் சிந்தனைகளும், மண் விடுதலைச் சிந்தனைகளும் மொழி வழியிலான கருத்தியல் மாற்றத்தைக் கோருகின்றன; மொழியிலும் மாற்றத்தைக் கோருகின்றன. எனினும், "இருக்கின்ற மொழிகளை அழித்துப் புதிய ஒன்றைத் தோற்றுவிப்பதன் மூலம் மொழிகள் வளர்வதில்லை. மாறாக, இருக்கும் மொழிகளின் அடிப்படை அம்சங்களைத் திருத்துவதன் மூலமும் விரிவுபடுத்துவதன் மூலமுமே மொழிகள் வளர்க்கப்படுகின்றன. 

ஒரு குறிப்பிட்ட தன்மையிலிருந்து மற்றொன்றுக்கு மொழி மாறிச் செல்வதென்பது, திடீரென்று குண்டுவெடிப்பது போல் ஒரே அடியில் பழையதை அழித்துப் புதியதை உருவாக்குவதாக அமைவதில்லை. மாறாக, புதிய தன்மையின், புதிய மொழியியல் அமைப்பின் கூறுகளைப் படிப்படியாக - தொடர்ச்சியாக நீண்ட காலப்போக்கில் பெற்றுக்கொண்டு, பழைய தன்மையின் கூறுகளைப் படிப்படியாக அழிய விடுவதன் மூலமே இந்த மாற்றம் நிகழ்கிறது"7. அவ்வகையில், மொழியின் மாற்றம் என்பது திடீர்ப் பாய்ச்சலாகவோ, வழக்கிலுள்ள மொழி திடீரென்று மறைந்து ஒரு புதிய மொழி திடீரென்று தோன்றுவதோ இல்லை. மாறாக, காலப்போக்கில் மொழியில் மாற்றம்தான் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. 

ஒரு சமூகம் நிலைத்திருக்கும் வரையிலும் மொழியும் நிலைத்து நின்று, சமூகத் தோற்றப்பாடுகளுள் ஒன்றாக விளங்கும் தன்மையைப் பெற்றிருக்கிறது. "சமுதாய வாழ்வுக்கு அறிகுறியாக உள்ள மொழியே, அந்தச் சமுதாய வளர்ச்சிக்கும் காரணமாக உள்ளது. சமுதாயத்தால் வளர்ந்து சமுதாயத்தால் வளர்த்து வருவது மொழி என்கிறார் பிரதர் கூட் எனும் மொழி அறிஞர்”8. அவ்வகையில், சமூக வளர்ச்சிக்கேற்றவாறும் தேவைக்கேற்றவாறும்தான் மொழியில் மாற்றங்கள் ஏற்படுகின்றன எனலாம். 

மொழியானது வர்க்க - சாதி - பாலின வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு அனைத்துப் பிரிவினருக்கும் சேவை செய்யக்கூடியதாக அமைந்துள்ள நிலையில், புதிய சமூக அமைப்புகளுக்கு ஏற்பவும் மொழியில் புதுமையாக்கம் நிகழ்கிறது. எத்தகையச் சமூக மாற்றத்திற்கும் மொழியானது எப்போதும் தயார் நிலையிலே இருந்துகொண்டிருக்கும். அதனால்தான், "மொழி புரட்சிகர சமூகத்தின் ஒரு பகுதி, அது புரட்சியைப் பிரிதிபலிக்க மட்டும் செய்யவில்லை. அதனுடன் உறவாடக் கூடியதாகவும் உள்ளது"9 என்றார் மார்க்ஸ். இந்நிலையில், மொழியின் வகிபாகத்தையும், அதன் சேவைத் தளங்களையும் வரலாற்றுப் பொருள்முதல்வாத இயங்கியல் கண்ணோட்டத்தில் அணுகும்போது, மொழியைப் பழித்தல் எனும் போக்குகள் தவறானவை என்பதும், மொழியைப் பழித்தல் எனும் கருத்தாடல்கள் கொச்சைப் பொருள்முதல்வாதங்கள் என்பதும் தெளிவாகும். 

சமூகத்தில் மொழியின் வகிபாகம் குறித்தும், அதன் வரலாற்றுப் பின்புலம் குறித்தும், அதன் இயங்குதளம் மற்றும் சேவைத் தளங்கள் குறித்தும் வரலாற்றுப் பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தில் வெளிவந்த கருத்தாடல்களும் உரையாடல்களும் மிக முக்கியமானவை. இரசியப் புரட்சியாளர் ஜே.வி.ஸ்டாலின் எழுதிய ‘மார்க்சியமும் மொழியியல் பிரச்சினைகளும்’ எனும் நூலும், ‘மார்க்சியமும் தேசிய இனப்பிரச்சினைகளும்’ எனும் நூலும் அத்தகையக் கண்ணோட்டத்தில் முன்வைத்த நூல்களாகும். 

புரட்சிகரத் தத்துவத்தை முன்வைத்திருக்கும் மார்க்சியக் கோட்பாடானது, மொழியைப் புரட்சிகர ஆயுதமாகவே கருதுகிறது; அவ்வாறே கையாண்டிருக்கிறது. தேசிய இன விடுதலை எனும் கோட்பாட்டையும் போராட்டத்தையும் முன்மொழியும் மார்க்சியமானது, மொழி என்பதைத் தவிர்க்க முடியாத - தவிர்க்கக் கூடாத அங்கமாகவே கருதியிருக்கிறது. மார்க்சியக் கோட்பாட்டின் அடிப்படையில் ஒரு தேசம் என்பது, 1. ஒரு பொதுவான மொழி, 2. அம்மொழி வழங்கும் நிலவியல் எல்லைகள், 3. அந்நிலப் பரப்பில் நடைபெறக் கூடிய உற்பத்தி முறைகளால் ஏற்படும் பொருளியல் வாழ்வு, 4. அப்பொருளியல் வாழ்வில் காணப்படும் பொதுமைப் பண்பாட்டுக் கூறுகள், 5. அப்பண்பாட்டுக் கூறுகளை வழக்கப்படுத்திக்கொள்கிற மன இயல்பைக் கொண்ட மக்கள் சமூகம் என இவை அனைத்தையும் பெற்றிருக்க வேண்டும் என்பது தெளிவாகும். 

மேற்குறித்த வரையறையின்படி நோக்கும்போது, வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறும் நல் உலக நிலப்பரப்பில் நிலையான மக்கள் சமூகம் என்பதாகத் தமிழ் இனம் வாழ்ந்திருக்கிறது. அவ்வகையில், நிலையான மக்கள் சமூகத்தின் பொதுவான மொழியாகத் தமிழ் மொழி அமைந்திருக்கிறது. ஆதி காலம் முதற்கொண்டு இப்போது வரையிலும் வாழ்ந்து வந்த நிலையான மக்கள் சமூகத்தின் வாழ்நிலப் பரப்பு சிற்சில மாற்றங்களைக் கொண்டிருந்தாலும், நிலையான மக்கள் சமூகத்தின் பெருநிலப்பரப்பாகத் தமிழ்நாடு அமைந்திருக்கிறது. தமிழ்நாட்டு நிலப்பரப்பில் மக்களின் பொருளாதார வாழ்வு மற்றும் உற்பத்திச் செயல்பாடுகள் ஐந்திணை வகைப்பாடாய் நடைபெற்று வந்திருக்கிறது. 

ஐந்திணைத் தொழில்பாடுகளும் வாழ்க்கை முறைகளும் தமிழ் நிலத்தின் பொருளாதார உற்பத்திச் செயல்பாட்டிற்கான இணைவைக் கொண்டிருக்கின்றன. ஐந்திணைச் சூழலில் - தமிழ் நிலப்பரப்பில் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிருக்கும் தமிழர்கள் தங்களுக்குள் ஒத்திசைவான மன இயல்பையும் பண்பாட்டு ஒருங்கிணைப்பையும் கொண்டவர்களாக இருந்து வருகின்றனர். 

ஒரு தேசிய இனத்திற்கான - ஒரு தேசத்திற்கான அத்தனை வரையறைகளும் ஒருங்காகவும் முழுமையாகவும் பெற்றதாகப் பன்னெடுங்காலமாக வரலாற்றுவழியில் நிலைத்திருக்கக் கூடிய வல்லமையைத் தமிழ்த் தேசிய இனம் பெற்றிருக்கிறது; தமிழ்த் தேசமும் பெற்றிருக்கிறது. தேசிய இனம் - தேசம் என்பதற்கான இத்தகையத் தகுதிப்பாட்டிற்கு மொழியின் வகிபாகம்தான் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

அவ்வகையில், தமிழ்த் தேசிய இனத்தின் அக அடையாளமாகவும் புறக் கருவியாகவும் திகழும் தமிழ் மொழியின் அமைப்பு, தோற்றம், வளர்ச்சி, வகிபாகம், இலக்கிய இலக்கண உருவாக்கம், வாய்மொழி மற்றும் எழுத்து மொழி மரபுகள், பாடுபொருள்கள், கருத்தியல் உருவாக்கம் எனப் பல நிலைகளில் உறவாடிக் கிடக்கிறது. இத்தகையத் தமிழ் மொழியானது மரபின் அடையாளங்கள் அழிந்து போகாமலும், காலம் மற்றும் சமூக மாற்றத்திற்கு ஏற்பப் புதியதை ஏற்றும் வடிவமைந்து வந்து கொண்டிருப்பதாகும். 

தமிழின் வரலாற்றுச் சிறப்பையும், மொழியியல் கட்டமைப்பையும், பொருண்மைச் செறிவையும் பல்வேறு தரப்பினர் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு விதமாக எடுத்துரைத்து வந்திருக்கின்றனர். ஆனாலும், தமிழ் நீச பாஷை என்றும், தமிழ் ஐந்தெழுந்தால் ஆன ஒரு பாடை என்றும், தமிழ் காட்டுமிராண்டி மொழி என்றும், தமிழ்ச் சனியன் என்றும் தமிழைத் தாழ்த்தியும் பழித்தும் பகடி செய்தும் பல்வேறு வகைப்பட்ட உரையாடல் முன்வைப்புகளும் வந்திருக்கின்றன. தமிழைப் பழித்தும் இழித்தும் முன் வைக்கப்பட்டிருக்கும் இதுபோன்ற கருத்தாடல்கள், தமிழ்த் தேசிய இனத்தின் பண்பாட்டு அடையாளத்தை அவமதிப்பதாகும்; இழிவுபடுத்துவதாகும். 

தமிழ்த் தேசிய இனத்தின் பேரடையாளமான தமிழ் மொழியைப் பழித்தும் இழித்தும் வெளிவந்த கருத்தாடல்களை எதிர்த்தும் மறுத்தும் பல்வேறு எதிர்வினைகள் வெளிவந்திருக்கின்றன. தமிழ் காட்டுமிராண்டி மொழி எனும் கருத்தைப் பெரியார் ஈ.வெ.ரா அவர்கள் முன்வைத்தபோது, அவரது கருத்துக்குப் பல்வேறு எதிர்வினைகள் வெளிவந்திருக்கின்றன. அவற்றுள் குறிப்பிடத்தக்க ஒன்று, பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் எதிர்வினையாகும். 

1967ஆம் ஆண்டில் வெளிவந்த தென்மொழி இதழ்களில் பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்கள் எழுதிய ‘பெரியாரின் தமிழ் ஆராய்ச்சி’ எனும் கட்டுரையும், ‘தமிழ் ஒரு காட்டுமிராண்டி மொழியே!’ எனும் கட்டுரையும், பெரியார் ஈ.வெ.ரா அவர்கள் முன் வைத்த கருத்துகளுக்கு எதிர்வினையாக வந்திருப்பவை ஆகும். 

பெரியார் ஈ.வெ.ரா அவர்களைச் சமூகச் சீர்திருத்தவாதியாக ஏற்றுக்கொள்ளும் பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்கள், மொழி குறித்து - தமிழைக் குறித்துப் பெரியார் ஈ.வெ.ரா அவர்கள் முன் வைத்த கருத்துகளை எதிர்த்திருக்கிறார்; மறுத்திருக்கிறார்; நிராகரித்திருக்கிறார் என்பதும் கவனிக்கத்தக்கது ஆகும். இவ்விடத்தில் கவனிக்க வேண்டிய ஒன்று, பெரியார் ஈ.வெ.ரா எனும் தனி மனிதரைத் தாக்குவதோ எதிர்ப்பதோ மறுப்பதோ பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் நோக்கமும் அல்ல. மாறாக, பெரியார் ஈ.வெ.ரா அவர்கள் முன் வைத்திருந்த மொழி குறித்த அந்தக் கருத்தையே மறுத்திருந்தார். 

பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்கள் தமது இரண்டு கட்டுரைகளின் வாயிலாக முன்வைத்திருந்த மறுப்புரையாடல்கள் இன்றைய காலகட்டத்தின் மொழி குறித்த உரையாடல்களுக்குத் தேவையானவை; இன்னும் பக்குவமான புரிதல்களை ஏற்படுத்தக் கூடியவை. இந்நிலையில்தான், பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்கள் எழுதிய அவ்விரு கட்டுரைகளும் குறுநூல் வடிவில் மீள வெளிவருகின்றன. 

இந்நூல் வெளிவருவதன் நோக்கம், மொழி குறித்தத் தப்பெண்ணங்களை நீக்குவதும், மொழியைப் பழித்ததற்கான மறுப்பும்தான். அவ்வகையில், பெரியார் ஈ.வெ.ரா அவர்கள், மொழி குறித்து முன் வைத்திருந்த அந்தக் கருத்திற்கான மறுப்புரையாடல்தான் இந்நூல். 

குறிப்புகள்:
ஜே.வி.ஸ்டாலின், மார்க்கியமும் மொழியியல் பிரச்சினைகளும், ப.25.
மேலது, பக்.4,5.
மேலது, ப.52.
எல்.இராமமூர்த்தி (க.ஆ), பெண்ணியமும் மொழி நிரணயவாதமும், பக்தவத்சல பாரதி, இரா.சம்பத் (ப.ஆ), பெண்ணிய ஆய்வுகள், பக்.19,20.
கா.சிவத்தம்பி, இலக்கணமும் சமூக உறவுகளும், ப. xi
ஜே.வி.ஸ்டாலின், மு.கூ.நூ., பக்.9.10.
மேலது, பக். 32,33
மு.வரதராசன், மொழி வரலாறு, ப.1.
ஜமாலன், மொழியும் நிலமும், ப.194.

பார்வை நூல்கள்:
ஜே.வி.ஸ்டாலின், மார்க்கியமும் மொழியியல் தேசிய இனப் பிரச்சினைகளும், மகாராசன் (தொ.ஆ), முதல் பதிப்பு, 2022, யாப்பு வெளியீடு, சென்னை.
மகாராசன், மொழி இயங்கியல், முதல் பதிப்பு, 2008, தோழமை வெளியீடு, சென்னை.
மகாராசன், தமிழ்ப் பண்பாட்டியல்: மரபு - மாற்று மரபு - எதிர் மரபு, முதல் பதிப்பு, 2025, யாப்பு வெளியீடு, சென்னை.

(முன்னுரை, தமிழ் ஒரு காட்டுமிராண்டி மொழியும் பெரியாரின் தமிழ் ஆராய்ச்சியும் :மொழியைப் பழித்ததற்கான மறுப்புரையாடல், பாவலரேறு பெருஞ்சித்திரனார் கட்டுரைகள், தொகுப்பாசிரியர் : மகாராசன், முதல் பதிப்பு: சனவரி 2026, யாப்பு வெளியீடு, சென்னை.)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக