முந்தைய ஏர் இதழைப் பெரும் நம்பிக்கையோடு தமிழ்ச் சமூகத்திற்குக் கையளித்தோம். எமது நம்பிக்கை வீண் போகவில்லை. ஆழப் பெருங்கடலில் எழுந்து வரும் அலைகளைப்போலப் பல்வேறு உரையாடல்களைப் பேசுபொருட்களாக ஏர் இதழ் எழுப்பியிருந்தது. ஒற்றைத் தன்மையான - ஒரு போக்குத் தன்மையான உரையாடல் அல்லது கருத்தாடல் தொனியை ஏர் இதழ் நிராகரித்திருந்தது. பன்மைத் தன்மையிலான பன்முக உரையாடல்களை உருவாக்குவதும் பரவலாக்குவதும் பகிர்வதுமான அறிவு மரபைத்தான் ஏர் இதழ் ஏற்றுக்கொண்டிருக்கிறது.
இதழ் வெளியான மிகக் குறுகிய காலத்தில், மிகப்பெரிய வரவேற்பை ஏர் இதழ் பெற்றிருக்கிறது. பல்வேறு தரப்பினரும் ஏர் இதழுக்கான ஆதரவைத் தந்துகொண்டிருக்கிறார்கள். இதழ் குறித்து வெளிவந்த விமர்சனக் குறிப்புகள் ஏர் மீதான நம்பிக்கைப் பலத்தை அதிகப்படுத்தியிருக்கிறது. குறிப்பாக, புதிய வாசகப் பரப்பை ஏர் இதழ் உருவாக்கியிருக்கிறது. மாற்று இதழ் வரலாற்றில் இத்தகைய முன்னெடுப்பு பெரிய சாதனைதான். இதழ் குறித்து நேர்மையோடும் அக்கறையோடும் முன் வைத்த நிறை குறை சார்ந்த விமர்சனங்கள் இதழைப் பக்குவப்படுத்தவும் செய்திருக்கின்றன.
அதேவேளையில், தமிழ்ச் சூழலில் முற்போக்கு முகங்கள் என்பதாக அறியப்படும் பல தரப்பினரும் ஏர் இதழ் குறித்து மௌனம் காத்தார்கள். மௌனம்தான் அவர்களது மொழியெனில், அவர்களோடு உரையாட ஏதுமில்லை. அவர்களைப் பற்றிய எண்ணங்களும் எமக்கில்லை. ஏனெனில், அவர்கள் எமது இலக்கில்லை; அவர்களுக்கான உரையாடலும் எம்மிடமில்லை. ஆயினும், ஏர் இதழ் முன்வைக்கும் உரையாடல்களைக் கவனிக்காமல் கடந்துபோக அவர்களுக்கு வாய்ப்பில்லை.
இது ஒருபுறமிருக்க, 'ஏர்' இதழ் குறித்து விமர்சனம் எனும் பெயரிலான அவதூறுகளும் வசைபாடல்களும் வக்கிர உணர்வோடு வெளிப்படவும் செய்தன. இத்தகைய அவதூறு விமர்சனங்கள் யாவும் சாதி அடிப்படையிலான காழ்ப்பும் வன்மமும் நிரம்பியவை. ஏர் இதழ் முன்னெடுக்கும் அறிவுச் செயல்பாட்டு மரபின் மீதான ஒவ்வாமை உணர்வும் எதிர்ப்புணர்வும்தான் அவர்களை இப்படியெல்லாம் எழுத வைக்கிறது.
சாதி, அதிகாரம் போன்றவற்றின் அருகிலிருப்பவர்கள் அல்லது அவற்றை அண்டிப் பிழைப்பவர்கள் இப்படித்தான் எழுதுவார்கள். கூரான - சரியான - நேரான எதுவொன்றையும் எதிர்கொள்ளும் திராணியற்றவர்கள், அவற்றுக்கெல்லாம் பொதுவெளியில் சாதி அடையாளத்தைப் பூசி, தனிமைப்படுத்தும் உள்ளடி வேலைகளைச் செய்வார்கள். அப்படியான அவதூறுகளையும் ஒதுக்கல்களையும் ஏர் இதழும் நேர்கொள்ள நேரிட்டது. ஏர் இதழ் மீதான வக்கிர வசைமொழிப் பதிவுகளைக் குறித்துப் பெரும்பாலோர் மவுனம்தான் காத்தார்கள்.
உண்மையும் நேர்மையும் இல்லாத இம்மாதிரியான அவதூறுகளுக்கான எமது எதிர்வினைப் பதில் என்பது, ஏர் இதழை அடுத்தடுத்து இன்னும் செறிவாக - இன்னும் கூடுதலாக - இன்னும் வலிமையாகக் கொண்டுவருவதில்தான் இருக்கிறது. அப்படித்தான் இந்த இதழும் வந்திருக்கிறது. வயல் காடுகளில் ஏர் உழும் காளை மாடுகளைப் பார்த்து, பொதி சுமக்கும் கழுதைகள் கத்துகின்றன. பொதி கழுதைகள் கத்தட்டும் என, ஏர் மாடுகள் கொம்புகளைச் சிலுப்பியபடி அதன் போக்கில் உழுதுகொண்டிருக்கும்; கடந்து கொண்டிருக்கும். அதுபோலத்தான், ஏர் இதழும் அதன் எழுத்துழவைத் தொடர்ந்திருக்கிறது. ஒரு வேலையைச் செய்து கொண்டிருக்கும்போது அதற்கான நேர்மறை எதிர்மறை விமர்சனங்கள் வரத்தான் செய்யும். ஏர் இதழுக்கு வந்ததையும் அப்படித்தான் எடுத்துக்கொண்டு பயணிக்கிறோம்.
அதேவேளையில், ஏர் இதழுக்குக் கிடைத்திருக்கும் ஆதரவும் பாராட்டும் மிகப்பெரியதாக இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது ஆகும். நேர்மையோடும் அறத்தோடும் பங்காற்றும் பெரும்பாலோர் ஏர் இதழுக்குப் பெருந்துணையாய் இருக்கிறார்கள். எமது பொறுப்பையும் பேருழைப்பையும் புரிந்துகொண்டு தோள் கொடுத்து வழிகாட்டிக் கொண்டிருக்கிறார்கள். இதழ் உருவாக்கத்தில் பங்கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் பேருதவியினால்தான், தமிழர் அறிவுச் செயல்பாட்டு மரபில் ஏற்பட்டிருக்கும் இடைவெளியை இட்டு நிரப்பும் பெரும் பணியை ஏர் இதழால் செய்திட முடிந்திருக்கிறது.
ஏர் இதழின் நோக்கமும் இலக்கும் மிகத்தெளிவானவை. தமிழ் நிலத்திலிருந்து - தமிழ் நிலத்திற்கான - தமிழ் அறிவு மரபின் பூர்வத்திற்கும் நவீனத்திற்குமான பன்முக உரையாடல் வெளியை உருவாக்குவதும் வளப்படுத்துவதுமான எழுத்துழவுதான் ஏர் இதழ்.
தமிழ் நிலத்தின் இனம், வரலாறு, மொழி, பண்பாடு, கலை, இலக்கியம், அரசியல், அறிவியல், கல்வி, இயற்கைவளம், இறையாண்மை போன்றவை குறித்துப் பரந்துபட்ட பன்முகப் பார்வையிலான உரையாடல்களை உரக்கப் பேச வேண்டும்; பேச வைக்க வேண்டும் என்பதே ஏர் இதழின் நிலைப்பாடு ஆகும். அவ்வகையான பேசுபொருட்களைத்தான் இவ்விதழில் வெளிவந்திருக்கும் நேர்காணல், கட்டுரைகள், கதைகள், கவிதைகள், ஓவியங்கள் புலப்படுத்தியிருக்கின்றன. அந்தவகையில், இந்த இதழை இன்னும் கூடுதலான பொறுப்புணர்வோடு தமிழ்ச் சமூகத்திற்குக் கையளித்திருக்கிறோம்.
ஏர் இதழ் ஆழ அகல நீளவும் உழுதிடும். மாற்றத்திற்கான எழுத்துழவில் இணைந்திருங்கள்; அறிவு விளைச்சல் அறுவடை செய்து நுகருங்கள். கடந்த இதழைப் போலவே - இன்னும் கூடுதலாகவே இந்த இதழ் பேசும் என்று நம்புகிறோம்.
தோழமையுடன்
மகாராசன்.
மாற்றத்திற்கான எழுத்துழவாக.. அறுவடைப் பருவத்தில் அரையாண்டு இதழாக வெளிவருகிறது.
தமிழ் அறிவுச் செயல்பாட்டு மரபின் தொடர்ச்சியாக, மிக மிக முக்கியமான பாடுபொருள்கள் அடங்கிய படைப்புகளுடன் சனவரி - சூலை, 2026 பருவத்தின் இதழாக வெளிவருகிறது ஏர் இதழ்.
நேர்காணல், கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள், மொழிபெயர்ப்புகள், நூல் மதிப்புரைகள் போன்ற மொழிசார் வடிவங்கள் மூலம் தமிழ்ச் சமூகத்திற்கான அறிவுசார் உரையாடல்களை முன்னெடுத்திருக்கிறது ஏர் இதழ்.
இதழ் உள்ளடக்கம்:
முன்னத்தி ஏர்.
மகாராசன்
வாழ்த்துச் சொற்கள்.
பாவலர்கள் காசி ஆனந்தன் மற்றும் அறிவுமதி.
மனிதம் மறுக்கப்படும்போது, அதை உரக்கப் பேச வேண்டும்: எழுத்தாளர் ச.பாலமுருகன் நேர்காணல்.
பா.ச.அரிபாபு
வரலாற்று நோக்கில் தமிழ்நாடு ஐக்கிய அரசு.
வேல்கடம்பன்
தமிழர்கள் இறையாண்மை இழந்த ஏதிலிகளாக மாற்றப்பட்டதன் வரலாறு.
கருத்துரையாடல்: ஓவியர் இராமச்சந்திரன்,
கேளுரையாடல்: தயாளன் சண்முகா
பாவ மன்னிப்பு குறித்த உளவியல் சித்திரங்கள்.
மணி செந்தில்
கீழடி: தொல்லியல் அகழாய்வு அரசியல்.
நாக.இளங்கோவன்
சாம்பல் - சிறுகதை.
சோ.தர்மன்
சிலப்பதிகாரத்தின் முடிவுறாத பக்கங்கள்: கொற்றவையை முன் வைத்து.
சு.வேணுகோபால்
நீர் மேலாண்மையின் பொற்காலம்: சோழர் கால நீரியல் கட்டமைப்பு.
மா.மாரிராஜன்
வில்லியம் வேர்ட்ஸ்வொர்த் கவிதைகள் - மொழிபெயர்ப்பு.
தமிழாக்கம்: தங்கேஸ்
ஈழத் திரைப்படங்கள்: மக்களைத் திரளாக்குவதற்குரிய மகத்தான ஆயுதம்.
ஞானதாஸ்
தவலியாட்டம் - சிறுகதை.
நாக.சரவணன்
சித்த மருத்துவம்: தத்துவம் - இலக்கியம் - அறிவியல் - அரசியல்.
ரேவதி சுயம்புலிங்கம்
மெய்ப்பொருள் - புனைவு அத்தியாயம்.
ரமேஷ் பிரேதன்
சரண்குமார் லிம்பாலே கவிதைகள் - மொழிபெயர்ப்பு.
தமிழாக்கம்: வசந்த தீபன்
உயிரியல் பன்மைத்துவமும் சமூகச் சூழலியல் பண்பாடும்: அகநானூறு சுரக்கும் கவித்துவம்.
ஆ.தனஞ்செயன்
வரிப்பணம் - சிறுகதை.
வசந்தி முனீஸ்
நினைவுகளில் இசைக்கும் வகுப்பறைச் சத்தங்கள்.
இளையவன் சிவா
அம்மணி அம்மாள்: கோவில் கோபுரம் எழுப்புவித்த பெண் ஆளுமை.
ம.இலட்சுமி
சீனு ராமசாமி கவிதைகளில் உயிர்மநேயப் படிமங்கள்.
அய்யனார் ஈடாடி
ரமேஷ் பிரேதன்: எழுத்தின் மூலம் உயிர்ப்பை வைத்துக்கொண்டிருந்த மகத்தான படைப்பாளி.
இளங்கோ
சிதைந்த மனம் - சிறுகதை.
முகிலன் பாரதி
முதுவான்கள்: கேரளத்தில் வாழும் ஆதித் தமிழ்க் குடிகள்.
ச.பென்னிகுயிக் பாலசிங்கம்
இந்தியக் காவல் வன்முறையின் வேர்களைத் தேடிய பயணம்.
விசாகன்
ஈழப் போராட்டமும் இஸ்லாமியர்களும்.
பரணி கிருஷ்ணரஜனி
சிலை செய்: வரலாற்றை உயிர்ப்பிக்கும் சிற்பக் கலை.
பா.அசோக்
புழங்குபொருள் பண்பாட்டின் உயர்நிலையும் இழிநிலையும்.
பே.சக்திவேல்
மகமை: சொல்லாக்கமும் பொருளாக்கமும்.
மா.ச.இளங்கோமணி
வெடிமலர்க் காதல் - சிறுகதை.
வ.கீரா
தொண்டை மண்டல நாணயவியல் கழகம், புதுச்சேரி வரலாற்றுச் சங்கம் - அறிமுகம்.
மாலதி இராமலிங்கம்
மேய்ச்சலியம்: சமூகக் கோட்பாட்டு முன்வரைவு.
கதிர்நம்பி
மீட்பர் - புனைவுப் பத்தி.
ரமேஷ் பிரேதன்
கவிதைகள்:
இளையவன் சிவா I சீனு ராமசாமி I மனோஜ்குமார் I வி.அம்பிகா | இ.கேசுதன் I ம.நிவேதா I அ.ம.அகரன் தமிழீழன் I பெரணமல்லூர் சேகரன் | ராணி கணேஷ் I பாலா சயந்தன் | மாலதி இராமலிங்கம் I மகாராசன் | இயற்கை I நெகிழன் I
கு.தமிழ்வேந்தன் | தீபச்செல்வன் I சி.மோகன்.
ஓவியங்கள்:
இராமச்சந்திரன், தமிழ்ப்பித்தன், மருது, முகிலன், புகழேந்தி, கார்த்திகேயன், வீரசந்தானம், பொன்வண்ணன், அமுதன் பச்சைமுத்து, சுந்தரன் முருகேசன், தமிழ்ச்செழியன், ம.இராமமூர்த்தி, இரவி பேலட், வேல்கடம்பன், நெகிழன்.
முதன்மை ஆசிரியர்:
மகாராசன்,
ஆசிரியர் குழு:
பா.ச.அரிபாபு, அய்யனார் ஈடாடி, மு.மகேந்திர பாபு, அ.ம.அங்கவை யாழிசை, செ.தமிழ்நேயன், தமிழ்ப்பரிதி மாரி.
பதிப்பாளர்:
அ.ம.அங்கவை யாழிசை,
வடிவமைப்பு:
நெகிழன்.
முகப்போவியம்:
இராமச்சந்திரன்
ஏர் இதழ்,
அளவு 18X24 (டபுள் கிரவுன்),
பக்கங்கள் 292,
விலை உரூ 300/-
இதழ் விற்பனை:
செந்தில் வரதவேல்,
யாப்பு வெளியீடு,
பேச: 9080514506.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக