வியாழன், 31 டிசம்பர், 2015

மரபின் ஈரத்தில் முளைத்த நவீனப் பெண் பச்சையங்கள்


கனிமொழியின் அகத்திணைக் கவிதைகளை முன்வைத்து..
                                                                       

       மண்ணில் தூவப்பட்ட ஒரு விதையைப்போல இன்றைய நவீனக் கவிதை பல திசைவழிகளில் வேர்களாய்க் கிளை பரப்பிக் கொண்டிருக்கிறது.  மண்ணைக் கிளர்த்தி வேர்கள் பரவிக்கொண்டிருந்தாலும்,  அவ்வேர்களின் பயணிப்பில் மேலெழுந்த கிளைகளின் இடுக்கில் கூடுகள் சமைத்து வாழ்க்கையில் நீந்தும் குருவிகளின் மனப்பக்குவம் சிறகடித்துப் பறக்கும். இவ்வுணர்வு வாசகருக்குள்ளும் சென்று சேர்வதற்கு இன்றைய நவீனக் கவிதைகள் நிழல் எடுத்துப் போர்த்துகின்றன. 
   இன்றைய நவீனக் கவிதைகளின் வழிப்போக்குகள் பல வெளிகளைக் கொண்டிருக்கும் வேளையில், பெண் எழுத்துகள் தமிழ்க் கவிதைச் சூழலில் கவனிப்பைப் பெற்று வருகின்றன.  இன்றைய பெண் கவிகளால் மொழியப்படும் எழுத்துகள் புதிய உணர்வோட்டங்களையும் – நிகழ்காலத்தின் இயங்கு ஆற்றலையும் தந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில், தொடர்ச்சியாகவோ அல்லது சில இடைவெளிகளை நிரப்பிக் கொண்டோ எழுத்துத் தளத்தில் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருப்பவர் கனிமொழி.
       தான் வாழும் இச்சமூகத்தாலோ அல்லது தன்னுடைய சொந்த அனுபவங்களாலோ பெறப்படுகிற உணர்வுகள் உள்ளக்கிடங்கில் அமிழ்ந்து கிடந்து மொழியைத் துணை சேர்த்துக்கொண்டு புறத்தே வந்து விழுகின்றபோது கவிதை பிறக்கிறது.  அந்தவகையிலே, நவீன வாழ்க்கையின் நடப்பியல் பின்புலங்களைத் தோள் பிடித்துக்கொண்டு அகத்தில் ஏற்படுகிற உணர்வுகளின் புனைவுகளை ‘அகத்திணை  கவிதைத் தொகுப்பின்வழி வெளிக்கொணர்ந்துள்ளார் கனிமொழி.
       தமிழின் சங்ககாலக் கவிதைகளைத் ‘திணை இலக்கியம் என வகைப்படுத்தித் தொகுத்திருக்கும் பாங்கு மிகச் சிறப்பானது. ‘திணை என்பது வாழ்க்கை சார்ந்த ஒழுக்கம் / வாழ்க்கை நெறி எனச் சொல்லப்படுகிறது.  இதனையே இலக்கியத்திற்கான கோட்பாடுகளாகத் தொல்காப்பியம் முன்வைக்கிறது.  இத்தகையக் கோட்பாட்டு வரையறைக்குள் நின்று கொண்டுதான் சங்க காலத்திய இலக்கியங்கள் எழுந்துள்ளன.  அவ்வகையிலே, ‘அகத்திணை மற்றும் ‘புறத்திணை என்ற இரு பகுப்புகளைக் கொண்டிருப்பன சங்க காலக் கவிதைகள்.  இவற்றுள் புறத்திணைக் கவிதைகளைக் காட்டிலும் அகத்திணைக் கவிதைகளே அதிகம். 
   நாடக உரையாடல் பாங்கில் அமைந்திருக்கும் அகத்திணைக் கவிதைகளின் குறிப்பான தன்மை  ‘சுட்டி ஒருவர் பெயர் கொளப் பெறாஅர் என்பதாகும்.  அதாவது, கவிதையை வாசிக்கிற ஒருவர் இந்தக் கவிதை இன்னாருடைய அனுபவம்; இன்னாரைப் பற்றியது என்பதான தரவுகளைப் பெற்றுவிடக் கூடாது.  மாறாக, கவிதையில் பதியம் போட்ட உணர்வுகளை வாசகரும் உள்வாங்கி அசைபோட்டுக் கொள்கிற வாய்ப்பைப் பெற்றுக் கொள்ளமுடியும்.  இதையே ‘அகப்பொருள் மரபு என்கிறார்கள்.
   அகப்பொருள் மரபில் கவிதைகளைப் பின்னுகிறபோது பல்வேறு உத்திகளைப் படைப்பாளர்கள் கையாண்டுள்ளனர்.  அகப்பொருள் மரபிற்கெனச் சில இலக்கிய உத்திகளை இலக்கண நூலாகிய தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.  சங்ககால அகத்திணைக் கவிதைகள் வேறு வேறு பொருள்கோடலுக்கும் வழிவகுப்பதாக ‘அகப்பொருள் உத்திகள் அமைந்திருக்கின்றன.  அவற்றுள் ‘உள்ளுறை மற்றும் ‘இறைச்சி ஆகியன குறிப்பிடத்தக்கவை.
   ‘உள்ளுறுத்து இதனோடு ஒத்துப் பொருள் முடிக
எனச் சொல்வது உள்ளுறை உத்தி.  அதேபோல,
   ‘இறைச்சிதானே பொருட் புறத்ததுவே’. 
அதாவது, கவிதையின் நேரடிப் பொருள் என ஒன்று இருக்கும். அக்கவிதைவழிப் பெற்றுக்கொள்கிற மறைபொருள் வேறொன்றாக அமைந்திருக்கும்.  பொதுவாகவே சில சொற்கள் மேலோட்டமான பொருளையும் (Surface meaning) உள்ளீடான பொருளையும் (Deep Meaning) கொண்டிருப்பதைப் பார்க்கலாம். அகத்திணைக் கவிதைகள் பெரும்பாலும் வேறொன்றைச் சொல்லி, குறிப்பானதை விளக்கி நிற்கும் நுட்பம் கொண்டவை.  இந்த இலக்கிய நுட்பத்திற்குத் துணை செய்யும் வகையிலே ‘முதற்பொருள் எனப்பெறும் ‘நிலங்களும் பொழுதுகளும் கவிதையில் பயின்று வரும். அதேபோல, நிலத்திலே காணலாகும்  உயிர் மற்றும் உயிரற்ற பொருட்களும் பரவி நிற்கும். இதைக் ‘ கருப்பொருள்  என்கிறார்கள்.  ஆக, முதற்பொருளும் கருப்பொருளும் இணைந்த ‘இயற்கைப் பின்னணி அத்திணைக் கவிதைகளுக்கு உயிர் கொடுப்பதாக அமைந்திருக்கிறது. 
   இயற்கைப் பின்னணி மூலமாகக் கவிதை செதுக்கி, மனிதர்க்கு உரித்தான செய்தியைச் சொல்கிறபோது ‘உரிப்பொருள் என்றாகிறது.  ஆகக்கூடி,  சங்க காலத்திய அகத்திணைக் கவிதைகள் யாவும் அய்ந்துவகை உரிப்பொருள்களைத் தன்வயம் கொண்டிருக்கின்றன. அக்கவிதைகள் கட்டியெழுப்பிய சொல்லாடல்களைக் கடந்து ஊடிழையாடிப் பார்க்கும்போது கவிதையின் நேரடிப் பொருளிலிருந்து வேறொன்றைப் புரிந்து கொள்ள முடியும்.
   மேற்சொன்ன குறிப்புகள் கனிமொழியின் ‘அகத்திணைக் கவிதைகளைப் புரிந்து கொள்ளத் துணை செய்யும். சங்க இலக்கியத்தின் ‘இறைச்சிப்பொருள் கனிமொழியின் ‘ஆயத்தமின்றி கவிதையில் அமைந்திருப்பதாகப் படுகிறது.
       குளிர்காலத்திற்காக / மொசு மொசுவென்று ஓடி
       உணவு சேகரித்தது எலி. / இன்னும் இரண்டு வாரத்தில் /
       குட்டிகள் சொந்தப்பாட்டையில் / கிளம்பி விடும்.
       கிடங்கு நிரம்பிக்கொண்டிருந்தது / குளிர்காற்று வீசத் தொடங்கி விட்டது
       அவகாசம் அதிகமில்லை. / விசுக்கென்று ஒரு ராத்திரி
       எலியைக் கொத்திக்கொண்டு போனது / ஆந்தை.
       விடை பெறுதலின்றி / பிரிவின் முத்தமோ / இறுதி ஸ்பரிசமோ
       எதுவும் இல்லாது / முடிந்துபோனது கதை.
       உச்சிக் கிளையில் / வாயில் தொங்கும் வாலோடு / ஆந்தை.
இந்தக் கவிதை ஏதோ ஒரு எலியின் முடிந்துபோன வாழ்வைச் சொல்வதாக இருந்தாலும், மனித வாழ்வின் தீர்மானிக்க முடியாத நிமிடப் பொழுதுகளைக் கண்முன் கொண்டு வருகிறது எனலாம்.  இக்கவிதையில் கையாளப்பட்டிருக்கும் ‘ஆந்தை என்கிற சொல் குறியீட்டுப் பொருளை உணர்த்தி நிற்கிறது. கிராமம் சார்ந்த மனிதர்களின் மரபுசார்ந்த நம்பிக்கையாகவும் – மரணம் நிகழப் போவதின் அறிகுறியாகவும் ‘ஆந்தையைக் கருதுகிறார்கள். வர்க்கம் – சாதி – பாலினம் – வயது போன்ற மேலடுக்கானாலும் சரி, கீழடுக்கானாலும் சரி, மனிதர்களால் தடுத்து நிறுத்த முடியாத ஒன்று மரணம்.  ஒரு எலியின் கதையினைச் சொல்லி மனித வாழ்வியலைப் பொருத்திப் பார்க்கத் தூண்டும் இக்கவிதை மரபின் நுட்பம் கொண்டது.
   சங்க காலத்தியக் கவிதைகள் முன்வைக்கும் புணர்தல் – பிரிதல் – இருத்தல் – இரங்கல் – ஊடல்  எனும் உரிப்பொருட்கள் யாவும் ஒத்த அன்பினுள் வயப்பட்டவர்களின் உணர்வு வெளிப்பாடாக அமைந்திருப்பன.  ஆனால், தற்காலத்திய நவீன வாழ்க்கைச் சூழலோ ஒருமித்த மனங்களைக் கொண்டிருக்கும் தயாரிப்புகளையும் அதற்கான அவகாசங்களையும் தர மறுத்துக் கொண்டிருக்கிறது.   ஆனாலும், அதற்கான தேடல் இன்னொரு பக்கம் இருந்து கொண்டுதானிருக்கிறது.
   பெரும்பாலான மனிதர்களின் வாழ்க்கைமுறை மனம் என்பதைப் பற்றிக் கவலை கொள்ளாமலே வெறுமனே எந்திரங்களோடு ஓடவேண்டிய நிர்பந்தத்தில் தள்ளப்பட்டிருக்கிறது. சமூகத்தின் புற நெருக்கடிகளால் விரும்பியோ விரும்பாமலோ வாழ்ந்து கொண்டிருப்பதின் கசப்புணர்வு எல்லோருக்குள்ளும் புதையுண்டு கிடக்கத்தான் செய்கின்றது.   
       மரம் விழுந்து /  இடி விழுந்து / வண்டி ஏறி / கடல் கொண்டு
       அகால முடிவுகள் என்ற செய்திகளோடு / விடியும் நாள்களை
       வாழவும் முடியவில்லை / வாழாதிருக்கவும் முடியவில்லை.
நவீன வாழ்க்கை தரும் அவதிகள் எல்லோருக்குமானது.
       காலப் பெருவெளியில் / மிதந்து வந்த / ஒற்றைக் கதிர் /
       நம்மைப் பிணைத்திருந்தது.
என்கிற இலயிப்புகள் எல்லாம் துண்டு துண்டாய்ப் போவதற்குப் பல வழிகளைச் செதுக்கி வைத்திருக்கிறது நவீன காலத்தின் வாழ்க்கை.
   ஒருவருக்கு நேற்றைப் பற்றிய நினைவுகளும், இன்னொருவருக்கு நாளையைப் பற்றிய கவலைகளுமாய் நிரம்பிய இலயிப்புகளைப்  பிரித்து வைத்திருக்கும் வன்மத்தை நிகழ்காலம் பயிலத் தந்திருக்கிறது.  வெற்றுத்தாள் என எழுதப்பட்ட ஒருவரின் மவுனத்திற்கு முன்னால்,
       என்ன சொல்லி என்ன / என்ன எழுதி என்ன
       நான் சொல்ல வருவதைத் தவிர / எல்லாம் புரிகிறது உனக்கு
என்கிறபோது, அவரவர் பிம்பங்கள் அவரவர்களை அச்சுறுத்தி நிற்பதை உணர்த்தி நிற்கிறது.  இருவருக்குமிடையேயான மவுனங்கள் நிகழ்கிறபோது,
       அகன்று கொண்டே போகிறது / எப்போதும்போல் இடைவெளி
       நட்சத்திரப் புள்ளியாய் வானில் நீ
எனத் தனியாய்த் தவித்து நிற்கிறபோதும்,
       தேனீர்க்கடை மேசையில் / ஒடுங்கியபடிக் கிடந்த
       உன் கைகளைப் பற்றி / உன்னிடம் ஏதாவது / பேசியிருக்கலாம்.
என்பதும், தனிமையில் ஊற்றெடுக்கும் ஏக்கப் பெருமூச்சின் வெளிப்பாடுகள்தான்.
       ஒரு பிறழ்ந்த தருணத்தின் / தவறிய கணங்களில்
       சிதறுண்டு போனது / நம் உலகம்.
       தொலைந்துபோன / சில கணங்களைத் / தேடிக் கொண்டிருக்கிறேன்
       கரைந்துபோன / நம் காதலை / நியாயப்படுத்த.
ஆகக்கூடி, சொல்லாதுபோன வார்த்தைகளின் வெளிப்பாட்டில் உள்ளாறாமல் நீண்டு கொண்டிருக்கிறது வாழ்ககை. இப்படியாகவே தனிப் பிம்பத்தின் மீதே நியாயம் கற்பித்து, அகத்தினை ஆற்றாமைக்கு அழைத்துச் சென்று காத்திருப்புக்கான நியாயத்தைத் தேடிக் கொண்டிருக்கிறது தனிவெளி.
   பெண்ணின் அகம் எப்பேர்ப்பட்ட வெளியினை எதிர் பார்க்கிறது என்பதற்கான உள்மனக் கிளர்வுகளை வெகு இலகுவாக நெகிழ்த்திச் செல்கின்றன கனிமொழியின் கவிதைகள்.  பழைய அகவய உணர்வுகளிலிருந்து சுவாசம் பெற்று – நவீனத்தின் பாதிப்புக்குள்ளாகி வாழ்க்கையே வெறித்துப்போன சூழலில், பழைய வாழ்க்கையின் ‘அகத்திணையைச் செழுமைப்படுத்த இயலாமல் புழுக்கத்திற்கு உள்ளாகிப்போன நவீனப் பெண் வாழ்க்கையின் தள ஊடாட்டங்கள் கொடூரமானவை.
   இன்றைய நவீன வாழ்க்கை தந்த அழுத்தங்களினால் பெண்ணின் மனம் நசுக்குண்டு கிடந்தாலும், புற உலகம் சுமத்தியிருக்கும் அதிகார வலைகளை அறுத்து எறிவதற்கான முயற்சிகள் இன்றைய பெண் எழுத்துகளில் வெளிப்படுகின்றன.
   சமூகத்தில் நிலவுகிற மதிப்பீடுகள் – பண்பாடுகள் – சடங்குகள் – கலாச்சாரக் கூறுகள் யாவும் பெண்ணை முன் நிறுத்தியே கட்டமைக்கப்பட்ட புனைவுகள். இத்தகையப் புனைவுகளுக்குப் ‘புனிதம்  கற்பித்து,  அதையே சமூகத்தின் ‘பொது அறமாக முன் வைத்திருக்கிறது அதிகார மய்யம்.  ஆண்மயப்படுத்தப்பட்ட இவ் அறங்களுக்குப் பலியாகிக் கிடப்பது பெண்தான்.  வாழ்க்கை வெளியில் ‘பெண் என்பவள் வெறும் பண்டம்  எனும் அநீதி,  ‘திருமணம் எனும் சடங்கில் வெளிப்படை.  இதுபோன்ற சடங்குகள் யாவும் பெண்களின் உடலை மய்யமிட்டவை; பொருளை மய்யமிட்டவை. ‘அறம் 1 என்ற கவிதையில் கனிமொழி இதைச் சொல்கிறார்.
       பீடத்தின் மீது / அமர்ந்திருந்தவனுக்கு முன்னால்
       அவர்கள் அழைத்து வரப்பட்டார்கள் / கைகள் இணைத்துக் கட்டப்பட்டன
       கூட்டம் / ஆரவாரித்தது / கட்டுகள் இறுகின.
       ஆயிரமாயிரம் / ஆண்டுகளாய் / இப்பீடத்தின் முன் / இது நிகழ்த்தப்படுகிறது
       இவர்களுக்குப் பின்னால் / வரிசையில் பலர் / காத்திருந்தனர்.
       இருவர் தலைகளும் / சிதைக்கப்பட்டன / தலைகள் இருந்த  இடத்தில்
       கிரீடங்கள் வைக்கப்பட்டன / பீடத்தில் இருந்தவன் / அட்சதை தூவினான்
       அடுத்த கரங்கள் / பிணைக்கப்பட்டன / சமூகம் / சுழன்றது.
இதுதான் அறம் என வலியுறுத்தப்பட்ட நீதிகள் யாவும் பெண்ணைப் பலிகடாக்களாக ஆக்குவதை ‘அறம் 2 கவிதை எடுத்துச் சொல்கிறது.
       அறிமுகம் கூட இல்லாத / ஓர் உடலுக்குள் புகுத்தப்பட்டேன்
       தலையில் / கையில் / உடலெங்கும் பாரங்கள் / ஏற்றப்பட்டன.
       நடுங்கும் என் கைகளைப் பிடித்து / யாரோ அழைத்துச் சென்றார்கள்.
நிலவுகிற சமூக அமைப்பில் குடும்ப நிறுவனம் என்பது அதிகார மய்யங்களின் – குறிப்பாக ஆண் அதிகாரத்தின் கூறாகவே இருந்து வருகிறது.  தாய்வழிச் சமூக அமைப்பிலிருந்து தந்தைவழிச் சமூகம் உருவாகி நிலைத்திருப்பதற்கான காரணிகளை இதுபோன்ற சடங்குகள் நினைவூட்டுகின்றன.
   ஆண் உயர்வானவன் என்றும், பெண் தாழ்வானவள் என்றும் சமூகம் கட்டமைத்திருக்கும் அதிகார வலையானது நுண் அளவுகளிலும் கவனமாக இறுக்கம் கொண்டிருக்கிறது.  குறிப்பாக,  பெண் என்பவள் ஆண்களின் பாலியல் நுகர்வுகளுக்குத் தீனிபோடக் கூடியவள் என்பதான கருத்தியல்தான் சமூகத்தின் எல்லா மட்டங்களிலும் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது.  பாலியல் என்பது ஆண் மூலமாகவே தூண்டப்படுதல் என்பதாக, அதிகாரப்படுத்தப்பட்ட இல்ல வெளியில் பெண்ணின் அடையாளம் நால்வகையிலும் வேலியாகிக் கிடக்கிறது.
   பெண் தனக்கான கிளர்த்தலில் இருந்து துவங்காமலும் முடிவடையாமலும் நிகழும் புணர்தல் இயல்பானதாய் இருப்பதில்லை.
       சாப்பாட்டுக் கடைக் / கண்ணாடித் தொட்டியில் / நியான் விளக்கு
       தோலில் பளபளக்க / சாஸ்வதமாய்ப் புணரும் / சாம்பல் தவளைகள்.
பாலியல் குறித்தான பார்வையை மிக எளிதாக உணர்த்திச் செல்கிறது கவிதை.
   புவிப்பரப்பில் பெரும்பாலான சுழற்சிகள் பாலியல் வேட்டையை முன்னிறுத்தி நகர்ந்தவைதான்.  பாலியல் வேட்டைக்காக ஆணுக்கான தண்டனையை நீதிச் சட்டகம் வழங்கி விடலாம். ஆனால்,  சமூகம் வைத்திருக்கும் கற்புக் கோட்பாட்டில் பெண்ணுக்கோ வழுதான். வழுவைத் தூக்கிச் சுமந்துகொண்டேதான் பெண் வாழவேண்டியிருக்கிறது.  பெண் பிணங்கினாலும் பாலியல் வேட்டைதான்;  இணங்கினாலும் பாலியல் வேட்டைதான்.
       என் காத்திருப்பை / அறிந்தவன்போல் வந்தாய்.
       காரணங்களோ / மன்னிப்புகளோ எதுவுமற்று
       தயக்கங்களின்றி / என்னைத் தழுவினாய்.
       தனிமையின் ரணங்கள் / வெடித்து வழிந்தன. . .  
       உயிர் கசிந்துருகும் வேளையில் / மறைந்து போனாய். . .
       பிறகு நீ எப்போதும் வரவே இல்லை.
பெண்ணைப் பண்டமாக்கி ருசிப்பதற்கான அத்தனை கூறுகளையும் ஆண் அதிகாரம் உருவாக்கி வைத்திருக்கிறது என்பதை இக்கவிதை முன் வைக்கிறது.  அதுமட்டுமல்ல, பண்ட ருசிப்பில் பெண்ணுக்கு உண்டாகும் மாதவிலக்கு ஒரு பிரச்சினையாகிப் போகிறது.  பெண்ணை ஒரு பொருளாக மட்டுமே குறுக்கிப் பார்ப்பதின் வெளிப்பாடாகத்தான்,  பெண் உடலில் இருந்து வெளியாகும் குருதியைத் ‘தீட்டு எனப் பார்ப்பது.
   கால மாற்றத்தில் எல்லாமே மாறுகின்றன அல்லது மாற்றப்படுகின்றன.  ஆனால், மாதவிலக்கு என்பதைத்  தீட்டு எனப் பறைசாற்றுவது பெண்ணை ஒடுக்கி வைக்கிற அதிகாரக் குரல்தான்.
       எந்நாடு போனாலும் / தென்னாடு உடைய சிவனுக்கு
       மாதவிலக்குள்ள பெண்கள் மட்டும் / ஆவதே இல்லை.
என, அதிகார அமைப்பின் நிகழ்த்துச் சட்டகத்தைப் பெண் வலியோடு முன்வைக்கிறபோது, பெண்மொழியாய்க் கவிதை உணர்வு கொள்கிறது.
       சட்டங்கள் அவ்வப்போது / ஏறும் மாறும்.
       என் விலாசங்களைக் கூட / உங்கள் பஞ்சாயத்துகளே / தீர்மானிக்கின்றன.
பெண்ணுக்கான அடையாளங்கள் மறைக்கப்பட்டு – பெண்ணின் சுயங்கள் யாவும் காணடிக்கப்பட்ட அதிகார வன்மத்தை அடையாளப்படுத்துகிறது கவிதை. இச்சமூகம் பெண் மீது நிகழ்த்தியிருக்கும் வடுக்களை – நிகழ்த்தப்படுவதின் மூலமாக உண்டாகிற காயங்களைக் கவிதைவழி முன்வைப்பதில் கவனம் செலுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
   அகத்திணைக் கூறுகள் கொண்ட கவிதைகள் ஒருபுறமிருக்க, அரசியல் அதிகார அமைப்பின் அச்சுறுத்தல்கள் – வாழ்க்கை தரும் கோர விகாரங்கள் போன்ற புறவயக் கூறுகளைக் கொண்ட கவிதைகளும் நவீன ‘அகத்திணை யில் உண்டு.
       தோண்டிக் கொண்டிருக்கின்றான் / ஆழ்ந்த அகண்ட / தேடல் அது. . .
       அவனது கிடங்குகள் / நிறைந்திருக்கின்றன / குருதி தோய்ந்த கத்திகளால்
       வெடித்துச் சிதறிய உறைகளால் / சதைத் துண்டுகளால்
       கண்ணாடிக் குடுவையில் மிதக்கும் / விழிகளால் / நகல்களால்
       மனிதக் கழிவுகளால். . . . . . . . . . .
       எதிரிகளின் பட்டியல் / முடிவற்று நீள்கிறது
       வியூக வலைகள் பின்னப்படுகின்றன / தளவாடங்கள் தினமும்
       புதுப்பிக்கப்படுகின்றன / வாள்கள் பளபளக்கின்றன
       மவுனமாய்க் கடக்கிறது காலம்.
அதிகாரமயத்தின் கோர முகங்களுக்குள் நிறைந்திருக்கும் மேலாதிக்கக் கொடுநெறி அரசியலை நுண் அலகுகளால் அம்பலப்படுத்துகிறது மேற்காண் கவிதை.  வரலாற்று நெடுகிலும் நிகழ்த்தப்பட்ட போர்கள், பெண்ணுடல் மீது ஆணால் நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்முறைகள், நிகழ்காலத்திய சாதி மத வெறியாட்டங்கள், பேரினவாத ஒடுக்குமுறைகள், சின்னஞ்சிறிய தேசிய இனங்களை ‘உலகநீதி  என்ற பெயரால் சிதைக்கும் ஏகாதிபத்தியங்கள், இயற்கையினைச் சுரண்டும் பண முதலைகள் போன்றவற்றின் கோரத் தாண்டவத்தை ஒரே கவிதையின்வழி சொல்லியிருப்பது கவிதைக்கான கனத்தைக் கூட்டியிருக்கிறது.
   ‘அகத்திணை என்பது சங்க காலத்தியத் திணை இலக்கியப் பாடுபொருள் மரபுக் களனாக இருந்தாலும், அதன் நீட்சி காலம் நெடுகிலும் பாடப்பட்ட கவிதைகளில் படர்ந்திருக்கிறது. சங்க காலத்தில் வெகுவாகக் கையாளப்பட்ட இம்மரபைப் புதுப்பித்துச் சிறப்பித்தவர்கள்,  பக்திக் கவிதைகள் பாடிய ஆழ்வார் நாயன்மார்கள்தான். இத்தகைய அகத்திணை மரபுகளை நவீனக் கவிதைத் தளத்தில் இயங்கும் பெண் படைப்பாளிகளும் தத்தம் படைப்புச் சாயலில் வெளிப்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில், மரபை உள்வாங்கியிருப்பதன் வெளிப்பாடாகக் கனிமொழியின் ‘அகத்திணை அமைந்திருக்கிறது.
   நடுத்தர வர்க்கத்தின் வாழ்நிலை தந்திட்ட வெறுமையும் விரக்தியும் சாயாது ஆட்டங்காணும் இருப்பின் வலிகளையும்,  நவீன வாழ்க்கை கற்பிக்கும் உணர்வோட்டங்களையும் பழைய மரபின் சாயலோடு வெளிப்படுத்த முனைந்திருக்கும் நவீனப் பெண் பச்சையங்களாக முளைத்து நிழல் தருவதாகக் கனிமொழியின் ‘அகத்திணை முகம் காட்டியுள்ளது.





புதன், 30 டிசம்பர், 2015

பெண் வெளியும் கவிதை மொழியும்

சல்மாவின் கவிதைகளை முன் வைத்து…
       சமூகத்தில்  பழையன கழிதலும் புதியன புகுதலும் இயல்பாய் ஆகிவிட்ட ஒன்று.  சமூக அமைப்புகளின் எல்லாக் கூறுகளும் மாற்றங்களைப் பெற்று வருகின்றன.  இலக்கியத் தளமும் தன்னைக் காலந்தோறும் புதுப்பித்துக் கொள்கிறது.  சமகாலத்தில் வெளிவருகின்ற இலக்கியப் பனுவல்கள் நவீனச் சிந்தனைகளையும் பன்முகப் பார்வைகளையும் தருவனவாக அமைந்திருக்கின்றன.  இதுவரையில் கண்டுகொள்ளப்படாத – வெளிக்கொணரப்படாத – புறக்கணிக்கப்பட்ட அனைத்துக் கூறுகளும் இலக்கியத் தளத்தினுள்ளும் பதிவு செய்யும் போக்கு அதிகமாகி வருகின்றது.
   இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலான தமிழ் இல்கிய வரலாற்றில் பெரும்பான்மையாக ஆண்களின் எழுத்தே ஓங்கி ஒலித்திருக்கிறது.  விதிவிலக்காக அல்லது தவிர்க்க முடியாத நிலையில் அவ்வையார், வெள்ளி வீதியார், காரைக்கால் அம்மையார், ஆண்டாள்,உத்திரகோச மங்கை, ஆவுடையக்காள் எனப் பெண் கவிஞர்கள் தங்கள் குரலை உரக்க வெளிப்படுத்தியிருந்தாலும்கூட,  ஆண் கவிஞர்களுக்கு இருந்த செல்வாக்கான இடம் என்பது பெண் கவிஞர்களுக்கு இல்லாமலே இருந்தது.  அந்தச்சூழல் தற்காலத்தில் மாறியிருக்கிறது.  பெண்கள் தங்களுக்கான அடையாளத்தைத் தேடியெடுக்கப் புறப்பட்டு விட்டார்கள்.  பெண்களை ஆண்கள் பார்த்து வந்த நிலை மாறி – பெண்கள் தங்களைத் தாங்களே பார்த்துக் கொள்ளும் நிலைக்கு வந்திருக்கிறார்கள்.   அவ்வாறு பெண்கள் மொழிப்படுத்துகின்ற எழுத்துகளைப் பெண்மொழி எழுத்துகள் எனலாம். 
     பெண்மொழி எழுத்துகள், ஆண்மொழி எழுத்துகளிலிருந்து பாடுபொருளில் மட்டும் அல்லாமல் உணர்வு நிலைகளிலும் வேறுபாடுகளைக் கொண்டிருக்கின்றன. பெண்ணைச் சுற்றி – பெண்ணின் மனதில் நிகழும் உணர்வுகளைத் தங்கள் மொழியிலேயே வெளிப்படுத்துகிறார்கள்.  அந்த வகையில், பெண்மொழித் தளத்தில் தீவிரமாக இயங்கி வருபவர் சல்மா.  இவருடைய ‘ஒரு மாலையும் இன்னொரு மாலையும்’ என்கிற கவிதைத் தொகுப்பு பெண் கவிதை மொழியில் இயங்கும் தன்மையைப் பெற்றிருக்கிறது எனலாம்.
       சல்மாவின் கவிதை வெளி என்பதே தனிமைதான்.  தனிமை வெளிக்குள் நிகழ்கின்ற உணர்வுகளே மொழியாகப் பதிவு செய்யப்படுகின்றன.  மனித உறவுகள் தந்த புறக்கணிப்புகளின் மூலம் நேர்ந்து விடுகின்ற வெறுமையான தனிமைக்குள் பெண் அடைந்து கொள்கிறபோது ஏற்படுகின்ற மனதின் பாய்ச்சல்கள், ஏதோ ஒருவகையான உறவைத் தேடித் தேடியே அலைவுறுகின்றன.
       எண்ணற்ற உயிர்களும், எண்ணற்ற மனித உறவுகளும் நிரம்பியிருக்கின்ற இந்த உலகத்தில் மிகக் கொடூரமான ஒன்று தனிமை.  தனிமையே வாழ்க்கையாகிப் போகும்போது தனிமை நிலையினையே தனக்கான உலகமாக ஆக்கிக்கொள்ளும் முயற்சிகள் இவரின் கவிதைகளில் தென்படுகின்றன.
         எனதிந்தத் தனிமையை / யாருமறியாத வண்ணம்
       என்னுள் ஒளித்து வைத்திருப்பதாய்
       நம்பிக் கொண்டிருந்த வேளையொன்றில் / நீ கேட்கிறாய்
       எப்போதும் ஏன் தனிமையிலிருக்கிறாய்  என்று.
 உனக்கு ஒரு பதிலை / உனக்காகவேனும்
 சொல்ல முடியாத நிலையில் / நானில்லை யென்றாலும்,
முடிவுறாத குழப்பத்தினூடே சொல்கிறேன்
         யாருமேயில்லாத இடத்தில் / தனியாகத்தானிருக்க முடியுமென்று.
       ......................
       என்னை மீறித் தீர்ந்து கொண்டிருக்கிறது / வாழ்க்கை.
       தீரவே தீராத தனிமையுடன் /
       நான் இங்கேதான் இருந்து வருகிறேன்.  (ப.56)
தனக்குள்ளே வசிக்க நேர்ந்துவிட்ட நீண்ட தனிமை – அதனால் ஏற்படுகின்ற எண்ண ஓட்டங்கள் கவிதையாகப் பதிவாகின்றது.  உலகில் தான் மட்டும் தனிமை நிலையில் இல்லை என்பதை உணர்ந்திருப்பதால், தன்னைப்போலவே தனிமையில் எதுவெல்லாம் இருக்கின்றதோ – அவற்றையெல்லாம் தன் வெளிக்குள் கொண்டு வருகிறார்.
         ஒற்றை மரத்தின் நிழலையும் /
       என்னோடு அழைத்துப்போக நினைக்கிறேன்.  
................... 
எப்போதும் யாராலும் விரும்ப இயலாத / கள்ளிச் செடிகள் மட்டும்தான்
நம் வாழ்க்கை முழுவதற்குமான / மலர்ச் செண்டுகளாய் அனுப்பப்படுகின்றன. (ப.11)
தன்னைப் போலவே தனிமை நிலையில் நின்று கொண்டிருக்கும் ஒற்றைத் தனி மரமும்,  நிலத்தின் எல்லைக் கோடுகளில் காத்துக் கிடக்கும் கள்ளிச் செடிகளும்தான் இவரின் பார்வைக்குப் படுகின்றன.
       கூடு தேடிச் செல்லும் / பறவைக் கூட்டம் / பொருட்படுத்துவதேயில்லை
எனது வீட்டுத் தோட்டத்தின் / ஒற்றை மரத்தினை.  (ப.44)
பறவைக் கூட்டத்தை மனித உறவுகளின் / மனிதக் கூட்டங்களின் குறியீடாகவும், ஒற்றை மரத்தினைத் தனிமை நிலையில் நிற்கும் தன்னையே குறியீடாகவும் ஆக்கிப் படிமப்படுத்தியிருக்கும் இக்கவிதையில், தம்மைப் புறக்கணிக்கும் மனித உறவுகளைச் சொல்கிறது.
       தனிமை நிகழ்வதற்குக் குடும்பப் பின்புலமோ அல்லது சூழலோ அல்லது சமூக வழக்காறுகளோ காரணமாக இருக்கலாம்.  இவருடைய கவிதைகளில் காணப்படும் தனிமை நிலைக்கான காரணம் பெண்ணுக்கும் ஆணுக்கும் இடையே நடைபெறும் புரிதலற்ற வாழ்க்கையாகக்கூட இருக்கலாம்.
       என்னைத் தழுவிச் செல்லும் / தென்றல் அறியும் எனது மென்மை.
       என்னைச் சிதைத்து அழிக்கும் / வாழ்க்கை அறியும் / எனது உறுதி.
நான் அணைத்து வளர்க்கும் / குழந்தை அறியும் / எனது நேசம்.
என்றாவது வரும் / மழை அறியும் / எனக்குள் இருக்கும் கவிதை.
பனி படர்ந்த / புற்கள் அறியும் / எனது காதல்.
எனது கவிதைகள் அறியும் / எனது பூகம்பங்கள் அறியும் /
என்னை எப்போதும் / அறிந்ததில்லை நீ
எனக்கு நேர்ந்த / எதையுமே. (ப.13)
பெண்ணுக்கும் ஆணுக்குமான உறவு என்பது வெறும் பாலியல் நுகர்வுகளைத் துய்த்துக் கொள்வதற்கும் – குழந்தைகளை உற்பத்தி செய்து கொள்வதற்கும் மட்டுமல்ல.  வாழ்க்கை பகிர்தலுக்கானது. பெண்ணுக்கும் ஆணுக்கும் ஏற்படுகின்ற உணர்வுகளை – கனவுகளை – அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்கான களம்தான் அது.   அந்தப் பகிர்தலையே எதிர்பார்க்கும் பெண்ணின் உணர்வாகக் கவிதை வெளிப்படுகிறது.
எனது இதயம் / நிரம்பி உள்ளது / உனதும் அப்படியே
உங்களதும் அப்படியே. . . . . . . .
ஏதொன்றினால் / இதயம் நிரம்பும் என்பதை / நானறிவேன்.
நீயும் அறிவாய் / யாவரும் அறிவோம் / நிரம்பிய இதயத்தைப்
பகிர்தலின்றி / வேறென்ன வேண்டும் / உனக்கும் எனக்கும்.  (ப.16)
என அறிதலும் புரிதலும் வாழ்க்கைக்கு அவசியம் என்கிறார். அறிதலோடும்  புரிதலோடும் நகர்கின்ற வாழ்க்கை எல்லோருக்கும் வாய்ப்பதில்லை.  பெண்ணைப் பற்றிய அறிதலையும் புரிதலையும் ஏற்படுத்திக் கொள்ளாத ஆண்களிடமிருந்து விலகிச் செல்லவே பெண் விரும்புகின்றாள்.
எண்ணற்ற ஜடப் பொருட்களுடனும் / ஒரு மனிதனோடும்
தொடரவியலா வாழ்க்கை / தொடர்கிறது அதே அறையில்.  (ப.21)
நிர்பந்தங்கள் ஏற்படுத்தும் வாழ்க்கையில் கசப்புகள் மேலோங்கிடும். தன்னை – தன் மனதைப் புரிந்து கொள்ளாத ஆண்களைப் பிற உயிரற்ற பொருட்களுடன் ஒப்பிடும் மனநிலையில் எழுந்தது இக்கவிதை.  சமூகத்தில் அதிகாரம் என்பது ஆணின் பிடிக்குள்ளே இருக்கிறது.  அதனால் அதிகாரத்தின் குறியீடாக ஆணுடலையும்,  அடிமைத்தனத்தின் குறியீடாகப் பெண்ணுடலையும் சமூக மனம் பதிவு செய்திருக்கிறது. ஆணுடலுக்கும் பெண்ணுடலுக்கும் இடையிலான முரண்பாடுகளை முன்வைக்கும் விதமாக,
குழந்தைகளைப் பெற்றதற்குப் பிந்தைய / இரவுகளில்
பழகிய நிர்வாணத்திற்கிடையில் / அதிருப்தியுற்றுத் தேடுகிறாய்
என் அழகின் களங்கமின்மையை.
பெருத்த உடலும் / பிரசவக் கோடுகள் நிரம்பிய வயிறும்
ரொம்பவும்தான் அருவருப்பூட்டுவதாய்ச் / சொல்கிறாய்.
இன்றும் இனியும் / எப்போதும் மாறுவதில்லை எனது உடலென்றும்
...................
உண்மைதான் / என் உடலைப் போலல்ல / உன்னுடையது
பறைசாற்றிக் கொள்வதில் / வெளிப்படையாக இருப்பதில் (ப.72)
என, ஆணுடலின் அதிகார முகத்தைக் கிழிக்கிறது.  ஆணுடல் செலுத்துகின்ற அதிகாரத்தில் தாக்குண்ட பெண்ணுடல்,  ஆணுடலின் மீதான சலிப்புகளையும் அச்சத்தையும் கொண்டிருக்கின்றது.  செயற்கையான – வலுக்கட்டாயமாக ஆணின் இச்சைகளை மட்டுமே தீர்க்கின்ற பாலியல் உறவு, பெண்ணை வெறும் நுகர்வுப் பண்டமாகவே கருதுகின்றது என்பதை அம்பலப்படுத்தும் வகையில்,
எந்தக் கதகதப்பையும் தருவதில்லை / நமது படுக்கை விரிப்புகள்
உடல்களுக்குகிடையேயான மர்மம் / தீர்ந்துவிட்ட பிறகும்
மிச்சமிருக்கும் பாவனைகளுடன் / நீளும் புணர்ச்சி  (ப.50),
இந்த அறையெங்கும் / இந்தப் படுக்கையெங்கும்
அத்துமீறி நுழைந்த கால்களின் / சுவடுகள்.(ப.30)
என ஆணின் பாலியல் நுகர்வு வெறியை – குணத்தை வெளிப்படுத்துகிறது.  அதிகாரம் உள்ளவை எல்லாம் அதிகாரமற்றவைகளை ஒடுக்கிக் கொண்டேயிருக்கும்.  பெண் அதிகாரம் இழந்தவர் – ஒடுக்குமுறைக்கு உள்ளாகியிருப்பவர்.  பெண் ஒடுக்குமுறைக்கு உள்ளாகின்ற முதல் நிலையே உடல்தான்.  பெண் உடலின் மீதே ஆணின் அதிகாரம் செலுத்தப்படுகிறது.  ஆக, ஒடுக்குமுறைக்கு உள்ளான பெண்,  அந்த ஒடுக்குமுறையிலிருந்து மீள்வதற்கு, ஒடுக்குமுறைக்கு உள்ளான உடலையே எதிர்ப்புக்கான களங்களில் ஒன்றாகப் பயன்படுத்துகிறார்.  இரண்டு உடல்களுக்கு இடையிலான அரசியலைப் பேசும்விதமாக,
உன்னிடமிருந்து / கலங்கலானதே எனினும் / சிறிது அன்பைப் பெற
உனது குழந்தையின் / தாய் என்னும் பொறுப்பை / நிறைவேற்ற
வெளியுலகில் இருந்து / சானிட்டரி நாப்கின்களையும்
கருத்தடைச் சாதனங்களையும் பெற
இன்னும் சிறு சிறு உதவிகள் வேண்டி.
முடியுமானால் உன்னைச் சிறிதளவு அதிகாரம் செய்ய
நான் சிறிதளவு அதிகாரத்தை / ஸ்திரப்படுத்திக் கொள்ள
எல்லா அறிதல்களுடனும் / விரிகிறதென் யோனி. (ப.23)
என, எந்திரமயமான பாலியலுக்கு மட்டுமல்ல யோனி;  உளவியல் சார்ந்த புரிதலுக்கும் சேர்த்துதான் என்ற கருத்தை முன் வைக்கிறது இக்கவிதை.
       பெண்ணைச் சுற்றி உருவாக்கப்பட்டுள்ள புனைவுகள் யாவும் பெண்ணைக் குறுகிய எல்லைக்குள்ளே வைத்திருக்கின்றன. பெண்களுக்கான உலகம் என்பதே வீட்டைச் சுற்றியிருக்கும்  மிகக் குறுகிய வெளிதான் என்று வரையறை செய்திருக்கின்றன.  பிறப்பிலிருந்து வளர்ப்பு வரைக்கும் நீளுகின்ற பெண் மீதான பார்வைகள் பெண்ணைக் கண்காணிப்பதிலும், கட்டுக்குள் வைத்திருக்கவும் விரும்புகின்றன.  வீட்டுச் சிறைக்குள் அடைபட்டுக் கிடக்கும் பெண்களுக்கு எப்போதாவது ஆறுதல் தருவது வெளியூருக்கோ / வேறு எங்கோ செல்ல நேர்ந்து விடுகிற பயணம்தான்.  அதனால்தான், பயணத்தைப் பெண்கள் விரும்புகிறார்கள். பயணத்தில்தான் இதுவரை கண்டிராதவற்றைக் காண முடிகிறது.  பரந்து விரிந்த வேற்று உலகத்திற்கு வந்ததைப் போன்ற உணர்வு ஏற்படுகின்றது.  சல்மாவின் கவிதைகளில் அதிகமானவை பயணம் குறித்தவை.
         பயணத்தில் / இந்தமுறை
வழக்கமான மரங்களின் நிழல் தவிர்த்து
கூட அழைத்துச் செல்கிறேன் / பாதையோரம் சயனித்திருக்கும்
கல்லறைகளில் சிலவற்றை.  (ப.25)
பயணத்தில் எதுவெல்லாமோ தெரிவதற்கு வாய்ப்பிருக்கிறது.   அவற்றைத் தவிர்த்துவிட்டு இக் கல்லறையை மட்டும் அழைத்துச் செல்வதற்கான காரணம்,  யாரும் செல்ல விரும்பாத – ஆள் நடமாட்டம் இல்லாத – தனியே இருக்கின்ற ஓரிடம் கல்லறைதான். தன்னைப் போலத் தனித்திருக்கும் கல்லறையை, வாழ்வின் முடிவை – வாழ்வின் அமைதியைக் குறிக்கின்ற குறியீடாக அக்கவிதை குறிக்கிறது.
       தொலைதூரப் பயணத்திற்குப் பின்
       திரும்பும் வீடு எதிர்கொண்டு  வரவேற்கிறது.
       சென்று வந்த நகரத்தின் / வன்முறையுடனும் சூழ்ச்சியுடனும் (ப.38).
         தொலைதூரப் பயணத்திலிருந்து / வீடு திரும்புவேனென்பதில்
       இல்லை ஏதொரு சந்தேகமும் / தவறாது துணை வந்து வீடு சேர்க்கும்
       என் துர்தேவதைகள்.  (ப.70)
வெளி உலகப் பயணம் தந்த சுகத்தினைப் பறித்துக் கொள்கிற வீட்டின் மீது ஏற்படுகின்ற சலிப்புகளையும் மேற்காண் கவிதைகளில் காணலாம்.
     இவ்வாறாக, சல்மாவின் கவிதைகள் தனிமை ஏற்படுத்தித் தந்த உணர்வுகளின் பதிவாக அமைந்திருக்கின்றன.  மனித உறவுகள் தந்த புறக்கணிப்பின் மூலம் நேர்ந்துவிட்ட தனிமையே அவருக்கான உலகமாகத் தென்படுகிறது.  பெண்ணுக்கும் ஆணுக்குமான உறவில் புரிதலை வேண்டி நிற்கின்றன. செயற்கையான உறவில் போலியாக வாழவேண்டியதன் நிர்பந்தத்தை வெளிப்படுத்துகின்றன.  வீட்டுச் சிறைக்குள் அடைபட்டுக் கிடக்காமல் ஆணைப்போல வெளி உலகத்தைப் பார்க்கத் துடிக்கிற மனதின் பதிவுகளாக அவரது கவிதைகள் அமைந்திருக்கின்றன. இன்னும் கூடுதலான வாசிப்புகளுக்கும் அனுபவங்களுக்கும் வாய்ப்பளிக்கிற வகையில் சல்மாவின் கவிதைகள் அமைந்திருக்கின்றன.
    சல்மாவின் கவிதைகள் புலப்படுத்தும் மொழியானது,சல்மாவின் தனிப்பட்ட வெளியை மட்டுமல்ல; நடுத்தர வாழ்நிலைப்பட்ட பெருவாரியான பெண்களின் வெளிகளைக் குறிப்பதாகவும் அமைந்திருக்கிறது.






பெண் கதைகள் கட்டவிழ்க்கும் ஆணுலகம்

உமா மகேசுவரியின் மரப்பாச்சி கதைகளை முன் வைத்து
                                         
       தமிழ் இலக்கியத் தளத்தின் வடிவமும் உள்ளடக்கமும் காலந்தோறும் மாறியிருக்கின்றன; மாற்றம் பெற்றும் வருகின்றன.  அத்தகைய வடிவ-உள்ளடக்க மாற்றத்திற்கான சூழல்களைச் சமூகமே உருவாக்கித் தருகின்றது.  சமூகத்தில் நிலவுகின்ற கருத்தியலை அப்படியே பதிவு செய்தோ – மறுத்தோ – எதிர்த்தோ – மாற்றியோ இலக்கியமாக்கும் முயற்சிகள் வெற்றியடைவதும் தோல்வி அடைவதும் இயல்பாய் ஆகிவிட்ட ஒன்றுதான். 
   பாடுபொருள்களுக்கான எல்லைகளை வகுத்துக் கொண்டிருந்த தமிழ் இலக்கியத் தளம் என்பது சமகாலத்தில் விரிவடைந்திருக்கிறது.  புனைவுகளின் கோர்வைகள் மட்டுமே இலக்கியமாகாமல், மனித வாழ்வின் எதார்த்தங்கள் அதன் போக்கில் இயல்பான மொழியால் இலக்கியமாக உருக்கொள்ளும் நிலை தற்காலத்தில் ஏற்பட்டிருக்கிறது.  எதார்த்தப் படைப்புகளின் ஊடாகக் கலகத் தன்மையினையும், தனக்கான அடையாளத்தை வெளிப்படுத்தும் முயற்சிகளையும் பார்க்க முடிகின்றது.  இத்தகையப் போக்குகள் ஒடுக்குண்டு கிடந்து நிமிர்ந்தெழும் பெண் எழுத்துக்களிலும் வெளிப்பட்டு வருவதைக் கவனிக்கலாம்.
       தமிழ் இலக்கியப் பரப்பைப் பெரும்பாலும் ஆண்களே ஆக்கிரமிப்பு செய்திருந்த நிலை தற்போது மாறியிருக்கிறது.  பெண்களும் தங்களின் அறிவுத் தேடல்களை – வாழ்க்கை அனுபவங்களை மொழிப்படுத்தி வருகிறார்கள்.  ஆண் மொழிகிற எழுத்துகளிலிருந்து பெண் மொழிகிற எழுத்துகள் வேறுபட்டிருக்கின்றன. பெண் மொழிக்கான உலகம் ஆணுக்கான உலகத்திலிருந்து வேறுபடுகின்றது.  பெண் மொழியானது ஆண் உலகத்திடம் சமரசத் தன்மை கொண்டோ – புனைவுத் தன்மை கொண்டோ அணுகாமல், ஆண்மொழி கட்டமைத்து வைத்திருக்கிற ஆதிக்கக் கூறுகளை எதிர்த்துக் கலகக் குரலாய் வடிவம் கொண்டு வெளிக் கிளம்பியிருக்கிறது.  பெண்ணில் உண்டாகிற ரணங்கள், வேதனைகள், அழுகைகள், அவற்றால் ஏற்படுகிற மவுனங்கள், தனிமை, வெறுமை என எல்லாமே குருதியோடும் வியர்வையோடும் இழைந்து இழைந்து, பருப்பொருளாய் – பருப்பொருளில் இருந்து வெளிக்கிளம்பும் நுண்பொருளாய்ப் பெண் உலகம் மாறுகிறது.  அவ்வகையில், அடர்த்தியாய்ப் பரவிக் கிடக்கும் ஆணின் மொழிக்குள் ஊடுறுவி இலகுவான பெண்மொழியால் ஆணுலகத்தைக் கட்டவிழ்ப்பு செய்கின்றன  உமா மகேசுவரியின் மரப்பாச்சி சிறுகதைகள்.
       அழியாச் சோகங்களையும், பிழிந்து சக்கையாகிப்போன கனவுகளையும், விம்மிக் கொண்டிருக்கும் மவுனங்களையும் சேர்த்து, குருதியினையும் வியர்வையினையும் அடுத்தடுத்தத் தலைமுறைகளுக்குப் பெண்கள் வழியாக எடுத்துச் செல்லப்படுவதை மரப்பாச்சி கதைகள் மிக நேர்த்தியாகச் சொல்கின்றன. மரப்பாச்சி கதைகளின் மொழியாக்கம் பெண் பேச்சில் அமைந்திருக்கிறது.  வரலாற்றின் துணையோடும் பெண்ணியத்தோடும் அல்லாமல், எதார்த்தமான உலகை இயல்பான பெண் பேச்சில் அம்பலப்படுத்தும் வகையில் கதை சொல்லல் முறை நிகழ்த்தப்பட்டிருக்கிறது.
       தொடக்க கால ஆதிப்பொதுவுடைமைச் சமூகத்திற்குப் பிறகு, குறிப்பாகத் தாய்வழிச் சமூகத்திற்குப் பிறகான தந்தைவழிச் சமூகம் முதற்கொண்டு  முதலாளித்துவச் சமூகம் வரைக்குமான வரலாற்றுக் கட்டமைப்புப் பின்புலத்தில் ஆணின் ஆதிக்கம் நிலவி வருகின்றது.  நிலத்தோடு பெண்ணைத் தொடர்புபடுத்திப் பார்க்கின்ற ஆணின் கருத்தியலில் பெண் என்பவர் உடைமைப் பொருளாக – உற்பத்திப் பொருளாக – நுகர்வுப் பொருளாகவே இருந்து வருகிறார். இதனால், பெண்ணின் உடல் மீது நிகழ்த்தப்படும் காயங்களால் வடுவாகிப்போன பின்பும்கூட,  அதனை மீண்டும் மீண்டும் கிளருவதன் மூலம் ஏற்படும் ரணங்களால் உண்டாகிற பெண்ணின் வலிமொழியால் கதையாக்கம் செய்யப்பட்டிருக்கிறது.
      சமூக அமைப்புகளுக்குள்ளும் – இலக்கியத் தளத்துள்ளும் பெண்ணின் உணர்வுகள் அழுத்தமாகப் பதியாத நிலையில், மரப்பாச்சி கதைகள் முழுவதும் பெண்ணின் உணர்வுகளையே மிக அழுத்தமாகப் பதிவு செய்கின்றன.  இதுவரையில் நாம் கண்ட பெண் புனைவுகள் என்ற தளத்திலிருந்து விலகி, உண்மைகளைப் புரிய வைக்கின்ற தளமாக விரிந்திருப்பது மரப்பாச்சி கதைகளுக்குக் கூடுதல் பலமாக அமைந்திருக்கிறது. பெண்ணின் அடையாளத்தையே அழித்துவிட்ட பெருஞ்சோகத்தின் முனகல் மரப்பாச்சியில் கேட்கிறது.  மொழியால் கட்டமைக்கப்பட்ட கதைகளாக அல்லாமல்,  உணர்வுகளால் கட்டமைக்கப்பட்ட கதை மொழியானது பெண்ணின் மொழியாக மரப்பாச்சியில் படிந்திருக்கிறது.
       தாய் தந்தையிடமிருந்து கிடைக்க வேண்டிய பாசம் – அன்பு – அரவணைப்பு போன்றவற்றின் போதாமை பெண்ணைத் தனிமைப்படுத்துகின்றது.  உயிருள்ள மனிதர்களிடமிருந்து எழவேண்டிய உணர்வுப் பரிமாற்றங்களைப் பெறமுடியாத நிலையில், மரப்பாச்சிப் பொம்மை உயிருள்ளதாக ஆகி விடுகின்றது. பெண் தனக்கு வேண்டிய உலகத்தை மரப்பாச்சியில் நிர்மாணித்துக் கொள்கிறார்.  பெண் எதை விரும்புகிறாரோ அதனை மரப்பாச்சியால் தர முடிவதற்குக் காரணம், மரப்பாச்சிக்கு உயிர் இருப்பதாக எண்ணிக் கொள்வதனால்தான்.  மரப்பாச்சியிடம் ஒரு பெண் தன்னுடைய உள்ளத்து / உடல் கிளர்ச்சிகளைப் பகிர்ந்து கொள்கிறார். பெண்ணில் ஏற்படக்கூடிய உடற்கூறு மாற்றங்களையும், அதனால் உண்டாகிற மன உணர்வுகளையும் யாரிடமும் வெளிக்காட்டவோ  சொல்லவோ விரும்பாத நிலையில், பெண்ணின் மன எல்லைக்குள் வந்துபோகிற உரிமை மரப்பாச்சிக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. மரப்பாச்சிகதை இதைப் புலப்படுத்தும்.
       “நான் யார்? பெரியவளா, சின்னவளா, நீயே சொல் அனு கேட்கையில்            
       மரப்பாச்சி மவுனமாய் விழிக்கும்.  “எனக்கு யாரிருக்கா? நான் தனி.          
       அனுவின் முறையிடல்களை அது அக்கறையோடு கேட்கும்.  சுடுகாயைத்
       தரையில் உரசி அதன் கன்னத்தில் அவள் வைத்தால் “ஆ, பொசுக்குதே
       என்று முகத்தைக் கோணும்.  அவள் நிர்மாணிக்கிற பள்ளிகளில்
       மாணவியாக, தொட்டில்களில் பிள்ளையாக, சிலநேரம் அம்மாவாக,  
       கனவுலக தேவதையாக எந்த நேரமும் அனுவோடிருக்கும்.  (ப.8)
குழந்தைப் பருவத்திலிருந்து மேடேறி, பூப்படையும் பருவம் நோக்கி நகரும் பெண்ணின் தனிமை நிலையில் தனக்குரிய வடிகாலாகவும் மரப்பாச்சி அமைகின்றது.
       அனு கட்டில் ஓரத்தில் சுருண்டிருப்பாள். மேஜையில் இருக்கும்     
       மரப்பாச்சியின் கண்கள் அவளைத் தாலாட்டும் மெல்லிய வலைகளைப்
       பின்னுகின்றன.  அதன் முலைகளை உதிர்த்து மார்பெங்கும் திடீரென மயிர்
       அடர்ந்திருக்கிறது.  வளைந்த இடுப்பு நேராகி  உடல் திடம் அடைந்து
       வளைந்த மீசையோடு அது பெற்ற ஆண் வடிவம் விசித்திரமாயும்
       விருப்பத்திற்குரியதாகவும் இருக்கிறது.  அது மெதுவாக நகர்ந்து அவள்
       படுக்கையின் அருகில் வந்தது.  அதன் நீண்ட நிழல் கட்டிலில் குவிந்து
       அனுவை அருந்தியது.  (ப.10)
தனக்கான தோழியாகவும் – அதேவேளையில், கிளர்ச்சிகளை ஏற்படுத்தும் ஆணாகவும் மரப்பாச்சி மாறி மாறிக் கொள்கிறது.  அதனால்தான், முலைகள் கொண்ட மரப்பாச்சிப் பொம்மை மீசை முளைத்து ஆணின் வடிவம் கொள்கிறது.  இந்த ஆண், எதார்த்த உலகில் உள்ள மற்ற ஆண்களைப்போல அல்லாமல், தன்னைத் தாங்கிக் கொள்கிற ஆணாக -  தான் விரும்பும் உலகத்தைப் படைத்துத் தரும் ஆணாகவே பெண் கற்பனை செய்து கொள்கிறார்.
       ஆணுக்குள் எளிதாக ஊடாட்டம் நிகழ்த்த நினைக்கிற பெண்ணின் ஏக்கங்கள் கனவுகளாகி – கனவுகள் பிரம்மையாகி நிகழும் தளத்தில் ‘மலையேற்றம் கதை அமைந்திருக்கிறது.  கனவின் சாயலாய் உளவியல் கூறுகளைக் கொண்ட ஆண் பற்றிய புனைவுகள் கட்டமைக்கப்படுகின்றன. 
மலை தீர்மானங்களின் திரளாகத் தொலைவில் எழும்பியிருந்தது.  அதன் திடம்; கம்பீரம்; இறுக்கம்; உறைந்த மவுனம்;  உதிராக் கடினம் எல்லாமும் அதை எட்ட முடியுமென்ற நம்புதலை ஏற்படுத்துவதாயில்லை.  ஆனால் மலையின் அழைப்பு பகிரங்கமாகவும், உரத்தும் கேட்டது.
      அதன் நீல விளிம்புகள் நிறுத்தாமல் சபலமேற்படுத்துவனவாக       
      ஒளிர்ந்தன.(ப.85)   
ஒரு மலையை இரு பெண்கள் அடைகிறார்கள்.  தாங்கள் நுழையக்கூடிய – சுதந்திரமாய்த் திரியக்கூடிய இடமாய் மலை அமைந்திருப்பதாக உணர்கிறார்கள்.  மலை எதார்த்த உலகின் ஆணைப்போல அல்லாமல் தன் ஆணவத்தை அழித்துக் கொள்வதாகவும், எளிதாய் ஊடாட்டம் நிகழ்வதாகவும் கருதிக்கொண்டு மலையேறுகிறார்கள்.  மலை பெண்ணைப் பார்த்துக் கேலியாய்ச் சிரிப்பதாகவும்,  ஊடாட்டம் நிகழ்த்தி முன்னேறிக் கொண்டிருக்கும் பெண்களிடம் தன்னைக் கொஞ்சம் கொஞ்சமாக ஒப்புவிக்கும் இடத்திற்கு வருவதாகவும் மலை அமைந்து போகிறது பெண்ணின் மனதில்.
எந்தப் பற்றுதலையும் நிரந்தரமாய்க் கொள்ளாமல்,  குவிந்து கூர்ந்த உச்சியையே இலக்காகக் கருதி ஏற்றம், ஏற்றம், ஏற்றம் ................ உயர உயரக் காற்றின் உந்து சக்தி என்னுள் புகுந்தது.  ஆடை கலைத்து,  தோலைத் திறந்து சதைகளைக் காற்று தீண்டத் தீண்ட,  உடல் எடையிழந்து இறகாகி இழைந்தது.  துவக்கச் சிரமங்கள் முற்றிலும் விலகி, என் உடல் வசமிழந்து சுழன்றும், மேலே பறந்தும் மேலேறுவதை ஆச்சர்யமுடன் பார்த்தேன் . . . . . . . . . .  அறிந்தேயிராத அதீத உடலின்பத்தின் உச்ச நிலைபோல் தொடை நரம்புகள் தொய்ந்து தெறிக்க,  மெல்லிய தசையிடுக்குகள் விண்விண்ணென அதிர்ந்தன.  கூம்பி விரிந்து உடல் மையம் சிலிர்த்துத் துடித்தது.  (ப.88)
இங்கே, மலைச்சிகரம் ஆணாக ஆகலாம்.  மலையில் நீர் அருந்துகிறார்கள்.  அந்த மலையேற்றம் சுலபமாக அமையாவிட்டாலும், இறுதியில் தன்னை ஒப்புவித்துக் கொள்ளும் மனநிலை ஏற்பட்டிருப்பதைக் காணலாம். 
      பெண் மனம் தேடும் ஆண் பற்றிய நீள் ஓட்டத்தினை ‘மரணத்தடம் கதையிலும் காணமுடியும். மரணம் என்ற ஒன்றுக்குள் கரைந்து போய்விட்டால் ஒன்றும் இல்லை.  அந்த ஒன்றும் இல்லாத சுகத்தைத் தருகின்ற மரணத்தை ஆணாகப் புனைந்து கொள்ளும் பெண்ணின் மன நிகழ்வு இக்கதையில் பதிவு செய்யப்படுகிறது.
          அவள் உள்ளே நுழைந்தபோது அங்கே யாரும் இருப்பதாகத்  
       தெரியவில்லை. ஆனால் திடுமென உயிர் பெற்ற மின் பிம்பம் போல் அந்த
       மூலையில் அவன் தோன்றுகிறான்.  நீண்ட நெடுங்காலமாக அவளுக்காகக்
       காத்துக் களைத்த முகம்.  குழந்தையின் கண்கள், இளைஞனின் திடமான
       மேனி, முதிர்ந்த புன்னகை,  வயதுகளுக்கு அப்பாற்பட்டன போலும். 
       அத்தனை வயதையும் ஒட்டுமொத்தமாகக் கலந்து குவித்தவன் போலும்
       தோற்றம் தருகிறான்.  (ப.93)

எதிர்பாராத ஒரு கனத்தில் அவளை இழுத்து தன்னோடு தழுவிக் கொள்கிறான்.  அகன்ற தோள்களும் அவள் உடல்மேல் குவிந்த கைகளும் சேர்ந்து அவனது அணைப்பிற்கு ஒரு ஏணைத் தன்மையைத் தருகின்றன.  எந்தப் புதிய சுமையும்,  எந்தச் சிறிய நெருடலையும்,  எந்த மெல்லிய உறுத்தலையும் ஏற்படுத்தாத அந்தத் தழுவலின் அமைதிக்குள்ளிருந்து ஒரு உறைந்த போதை அவள் நாளங்களில் நிறையத் துவங்கிய நேரம்.  அவள் அவனுடைய உடைகளைத் தீவிரமாக வெறுக்கிறாள்.  இறுகிய தோல் போன்ற பிய்த்தெறிய முடியாத உடைகள்: மென்மையான உள்ளங்களையும், அலையாடும் முகத்தையும் தவிர மற்றெல்லாவற்றையும் முற்றிலுமாக மறைக்கின்றன.  அவை...................
குறுகியதும்,  நீண்டதுமான முத்தங்கள்: திறப்புகளற்ற அவள் ஆடைகளோடேயே அவளுடலின் வளைவுகளில் ஏறி இறக்கும் ஈரமற்ற தூரிகை போன்ற அவன் விரல்கள்.  காம இலக்கற்ற விரல்கள் என்று அவற்றை எண்ணிக் கொள்வது பிடிக்காமல் பிடித்திருக்கிறது.  ஆக்கிரமிப்பின் வெளிகளற்ற, ஆனால் அதை நோக்கி அணு அணுவாய்,  அனுசரனையாய் அவனை முன்னகர்த்துகிற விரல்கள்........... குளிர்கோர்த்த குகையின் சுவர்கள் தனது வளைவுகளை இழந்து, தட்டையாகி மிருதுவான படுக்கையாக அவர்களிருவரையும் உள்வாங்கின.
என நீளும் இக்கதையில் வரும் நிகழ்வுகளும் உரையாடல்களும் எதார்த்த வாழ்வில் உலவித் திரியும் ஆணோடு அல்ல.  மன வெளியில் வந்து போகும் ஆண்,  பெண் வரைந்து கொண்ட ஆணாகத் திகழ்கிறார்.
       பெண்ணின் மனதுக்குள் நிகழும் பிரம்மை என்ற உணர்வு நிலையில் மரணம்கூட ஆணாகத்தான் இருக்கிறது.  அதுதான் பெண்களின் உலகத்தை மறுதலிக்காத ஆணாகத் திகழ்கிறது.  எந்தப் புதிய சுமைகளையும் – எந்தச் சிறிய நெருடல்களையும் – எந்த மெல்லிய உறுத்தல்களையும் ஏற்படுத்தாத ஆணின் தழுவல்களையே பெண் மனம் எதிர்பார்க்கிறது.  அத்தகைய ஆணிடம் மட்டுமே பெண் தன்னை ஒப்படைத்துக் கொள்கிறார்.  வெறுமனே எந்திரத் தன்மையோடு நிகழ்ந்திராத பாலியல் நிகழ்வையே பெண் விரும்புகிறார்.
ஒரேயொரு முறை புரண்டு விழித்துக் கொள்ளுங்களேன்.  உடம்புக்கென்ன என்று ஒரு வார்த்தை கேளுங்களேன். (ப.97)
எனத் தன் கணவரிடம் எதிர்பார்ப்புகளைக் குவிக்கும்போது,  அது ஏமாற்றம் தருகையில், பெண்ணின் மனம் ஆறுதல் அடைய அலைந்தோடும்போது தனிமை  வெளியே பெண்ணைத் தேற்றுகிறது.
நீ மூட்டும் அடுப்பு நெருப்பில்,  நீராடும் நதியலைகளில், நடக்கின்ற நிலத்தின் அடியாழங்களில், உன் தலைமேல் கவிந்த ஆகாயப் பரப்பில்,  இப்போது உன் சுவாசக் குழலுக்குள் புக மறுக்கும் காற்றணுவில்........  எங்கும், எதிலும்,  எப்போதும் உன்னோடிருக்கிறேன். உன்னை உற்றுக் கவனிக்கிறேன்.  தழுவத் தவிக்கிறேன்.  (ப.96)
எனப் பிரம்மையில் தோன்றும் ஆணின் வார்த்தைகளிடத்தில் – பெண்ணுக்கு ஆறுதலாய்த் தோன்றும் ஆணிடத்திலே மட்டும்தான் தன்னை முழுமையாக ஒப்படைக்கிறார் பெண்.  இவ்வாறாக,  மரப்பாச்சியும் மலையும் மரணமும் பெண்மொழி தேடும் / விரும்பும் ஆண்களாகின்றன.
       மரப்பாச்சி கதைகள் இருவேறு ஆணுலகத்தைக் கட்டவிழ்ப்பு செய்கின்றன.  வாழும் எதார்த்த உலகில் பெண் எதிர் கொள்ளும் ஆணுலகத்தின் முக மூடிகளைக் கட்டவிழ்ப்பு செய்வதாகவும்,  ஒரு பெண் மனம் எதிர்பார்க்கும் ஆணைப் பற்றிய எண்ண ஓட்டங்களை மனதின் புதைநிலையிலிருந்து கட்டவிழ்ப்பு செய்து காட்டுவதாகவும் அமைந்திருக்கின்றன.
“அப்பா, இந்தக் கதையில அந்த ராஜா என்று அனு எதையாவது கேட்டால்,
“பெரிய மனுஷிபோல் என்ன கேள்வி நை, நைனு, சும்மா இரு (ப.8)
பெண் குழந்தை என்பதனாலே பெண்ணின் ஆக்கத்திறன் மறுதலிக்கப்படுகிறது அப்பா என்கிற ஆணின் மூலமாக.
அனு தான் தனியாக இல்லாததை உணர்ந்தாள்.  உடல் மீது நூறு விழிகள் மொய்த்து உறுத்தின.  அனிச்சையாக ஓடத் தொடங்கியபோது எதன் மீதோ மோத, கடினமான கைகள் அவளை இறுக்கின. கரிய நரை முடியடர்ந்த நெஞ்சில் அவள் முகம் நெருக்கப்படுகிறது.  கொட்டும் முத்தங்கள் கன்னத்தில், உதட்டில், கழுத்தில், அவளுள் தளிர் விடுகிற அல்லது விதையே ஊன்றாத எதையோ தேடுகிற விரல்களின் தடவல்,  மாறாக அதை நசுக்கிச் சிதைக்கிறது.  சிறிய மார்பகங்கள் கசக்கப்பட்டபோது  அவள் கதறிவிட்டாள்.  காய்ந்த கீற்றுப் படுக்கை மீது அனுவின் உடல் சாய்க்கப்பட்ட போது,  அவள் நினைவின்மையின் பாதாளத்துள் சரிந்தாள், கனமாக அவள் மேல் அழுத்தும் மாமாவின் உடல்,  அத்தை ஓடி வரவும் மாமா அவசரமாக விலகினார். (பக்.13)
பருவமடையாத – பருவமடையப்போகிற பெண்ணின் மீது, திருமணமான – அத்தையின் கணவரென உறவுமுறை கொண்டவரால் நிகழ்த்தப்படும் பாலியல் வன்முறைத் தீண்டல்கள் மாமா என்கிற ஆணின் மூலமாக நடைபெறுகிறது.
என் சட்டைப் பாக்கெட்டிலிருந்து ஐநூறு ரூபாய் எடுத்தியா?  நீ எடுக்காம எங்கேடி போவும்?  புதுப் புடவைன்னு முனகிட்டு இருந்தியே,  அதுக்காகத் திருடினியா? (ப.27)
மனைவியின் மீதுள்ள கணவனின் அதிகாரம் பெண்ணைத் திருடியாய்ப் பார்க்கச் சொல்கிறது.
மச்சான் குளியலறைக் கதவை அறையும் படீர் சத்தம்.  நீர்த்துளிகள் சொட்டும் தலைமுடி. எந்தக் குளியலாலும் கழுவ முடியாத குரோதம் தொனிக்கும் கண்கள்.  அவர் சுற்றும் முற்றும் பார்த்தார்.  நான் சுவரோரம் ஒண்டிக் கொண்டேன்.  அழுக்குத் துணிகள் அமுக்கிய வாளிக்குள் துழாவினார். ஒரு சட்டையை உருவி, அதன் பையில் விரல் விட்டுத் தேடினார். அந்த ஐநூறு ரூபாய் நோட்டு அவர் கையிலிருந்தது.  அவர் இப்போது உள்ளே வரப் போகிறார். அக்காவைத் தொட்டு எழுப்பி,  அடித்ததற்காக அவளிடம் மன்னிப்பு கேட்டு.......  இல்லை, நான் நினைத்தது போல் அவர் ஒன்றும் செய்யவில்லை.  அந்த ஐநூறு ரூபாய் நோட்டை உள்ளங்கையில் சுருட்டிப் பதுக்கினார். தன் அறைக்குள் நுழைந்து கொண்டார்.  (ப.31)
தான் தவறிழைத்தவர் என்பதைக் காட்டிக் கொள்ளாத – மனைவியை அடித்துப் போட்டதற்கு வருத்தமோ மன்னிப்போ கேட்காத மிகக் குறுகலான புத்தியைக் கொண்ட கணவன் என்கிற ஆணுடன் சேர்ந்துதான் பெண் வாழ வேண்டியதிருக்கிறது.
       என்ன பண்ணுறே பாத்ரூமில்? எனக்கு லேட்டாகுது இட்லி எடுத்து  
       வைக்கிறயா?.............(39)
பம்பரமாய்ச் சுழன்று வீட்டில் உள்ள அனைத்து வேலைகளையும் செய்து கொண்டிருக்கும் மனைவியின் மீது கணவன் என்கிற ஆணின் மூலமாகத்தான் அதிகாரம் செலுத்தப்படுகிறது.
       உன் கணவரும் ஒரு சோதனை – லேசானதுதான் செய்துக் கட்டும்  (ப.47)
ஒரு பெண்ணுக்குத் திருமணமாகிவிட்டாலே கருக்கொள்ள வேண்டும்; குழந்தைகளைப் பெற்றுத் தர வேண்டும் என்ற சட்டங்கள் எழுதப்படாமலே நம் சமூகத்தில் நடைமுறைக்கு வந்திருக்கின்றன.  குழந்தையைப் பெற்றெடுக்காத பெண்களுக்கு நேர்கின்ற கொடுமைகள் வேறு யாராலும் அனுபவிக்க முடியாதவை.  ஒரு பெண் கருக் கொள்வதற்காக மருத்துவமனைகளில் செய்து கொள்ளும் மருத்துவச் சோதனைகள் பெண்ணின் உடலைச் சிதறு காயாக்கி விடுகின்றன.  எல்லாச் சோதனைகளும் முடிந்து இறுதிக்கட்டமாய் ஆணுக்குச் சோதனை. இப்படி, சமூக மதிப்பீடுகளே ஆணின் தனத்தோடு இருந்து கொண்டிருக்கின்றன.
       நீ ஏன் இப்ப வெளியே வந்தே? (ப.56)
பெண் நடமாட்டத்தின் எல்லைக் கோடுகளைத் தீர்மானிப்பது ஒரு ஆண்தான்.  பெண் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள்ளே இருக்க வேண்டும் என நினைப்பதும் ஓர் ஆண் தான்.
ஆம்பிளப் பிள்ளைன்னா கொஞ்சம் அப்படி இப்படித் தானிருப்பான். நாமதான் விட்டுப்பிடிக்கணும் (ப.70)
கட்டுப்பாடற்ற சுதந்திரம் ஆணுக்கு மட்டுமே உண்டு.  குறிப்பிட்ட வரையறைத் தளத்துக்குள் ஆண் இருக்க வேண்டிய அவசியமில்லை என நியதிகளை உருவாக்குவதும் ஆண்தான். அந்த உரிமைகளை வழங்குவதும் ஆண்தான்.  சமூகத்தின் எல்லாத் தளங்களிலும் ஆணின் ஆதிக்கம்தான் நிலவுகின்றது என்பதைப் பல கதைகள் சொல்கின்றன.
       எதார்த்த உலகில் பெண்ணைச் சக உயிரியாகப் பார்க்காமல், பாலியல் நுகர்வுப் பொருளாகப் பார்த்தல் – ஆணின் காம வேட்டைக்குப் பெண் பலியாதல் – பெண் என்பவர் பிற ஆண்களுடன் தொடர்போ உறவோ வைத்துக்கொள்ள அனுமதி மறுத்தல் – குடும்ப உறவுகள் பெண் மீது செலுத்தும் அதிகாரங்கள் – பண்பாடு என்ற பெயரில் பெண் மீது விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் – வீட்டு வேலைகள் அனைத்தையும் பெண்ணே செய்து முடித்தல் – வீடு என்ற குறுகிய வட்டத்துள்ளே பெண்ணை அடக்கி ஆளுதல் – நடத்தை முறைகளில் பெண் மீது ஏற்ற இறக்கம் காட்டுதல் – சொத்துக்களில் பெண்ணுக்கு உரிமை மறுத்தல் என நீளும் பெண்ணின் வாழ்வனுபவம் என்பது,  ஆணின் அதிகாரக் கரங்களின் கூர் நகங்களுக்குப் பலியாகிக் கிடக்கிறது.
      எதார்த்த உலகில் பெண் எதிர் கொள்ளும் ஆணுலகம் அதிகாரத்தைக் கொண்டதாகவும், பெண்ணை அங்கீகரிக்க மறுப்பதாகவும் அமைந்துவிட்ட நிலையில், ஆணைப் போலவே கனவுகளைச் சுமக்கிற – உணர்ச்சிகள் ஊற்றெடுக்கிற – உணர்வுகளை அடை காக்கிற – அறிவுத் தேடலைக் கொண்டிருக்கிற பெண் தனக்கான ஆணுலகத்தைக் கற்பனை செய்து பார்க்கிறார்.  எதார்த்த வாழ்க்கையில் எந்தவித மாற்றத்தையும் செய்துவிட முடியாது என்ற அவநம்பிக்கை என்பது பெண்ணை இயற்கையின் ஊடாகவும், பிரம்மைகளின் ஊடாகவும் பெண் வேண்டுகிற ஆணுலகத்திற்கு எடுத்துச் செல்கிறது. அதனால்தான், தன்னுடைய உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் இயல்பாகப் பகிர்ந்து கொள்ளும் ஆணுலகத்தை,  தான் காணுகின்ற மரப்பாச்சிகளிடமும் மலை முகடுகளிலும் இயற்கையின் அத்தனை உருவங்களிலும் மரணத்திலும் கூடக் காண்கிறார்.   இந்த வகையான ஆணுலகமே பெண் மனம் தேடும் ஆணுலகமாக மரப்பாச்சி சிறுகதைகளில் அமைந்திருக்கிறது.

                                                          நன்றி : கவிதாசரண் இதழ்