வியாழன், 31 டிசம்பர், 2015

மரபின் ஈரத்தில் முளைத்த நவீனப் பெண் பச்சையங்கள்


கனிமொழியின் அகத்திணைக் கவிதைகளை முன்வைத்து..
                                                                       

       மண்ணில் தூவப்பட்ட ஒரு விதையைப்போல இன்றைய நவீனக் கவிதை பல திசைவழிகளில் வேர்களாய்க் கிளை பரப்பிக் கொண்டிருக்கிறது.  மண்ணைக் கிளர்த்தி வேர்கள் பரவிக்கொண்டிருந்தாலும்,  அவ்வேர்களின் பயணிப்பில் மேலெழுந்த கிளைகளின் இடுக்கில் கூடுகள் சமைத்து வாழ்க்கையில் நீந்தும் குருவிகளின் மனப்பக்குவம் சிறகடித்துப் பறக்கும். இவ்வுணர்வு வாசகருக்குள்ளும் சென்று சேர்வதற்கு இன்றைய நவீனக் கவிதைகள் நிழல் எடுத்துப் போர்த்துகின்றன. 
   இன்றைய நவீனக் கவிதைகளின் வழிப்போக்குகள் பல வெளிகளைக் கொண்டிருக்கும் வேளையில், பெண் எழுத்துகள் தமிழ்க் கவிதைச் சூழலில் கவனிப்பைப் பெற்று வருகின்றன.  இன்றைய பெண் கவிகளால் மொழியப்படும் எழுத்துகள் புதிய உணர்வோட்டங்களையும் – நிகழ்காலத்தின் இயங்கு ஆற்றலையும் தந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில், தொடர்ச்சியாகவோ அல்லது சில இடைவெளிகளை நிரப்பிக் கொண்டோ எழுத்துத் தளத்தில் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருப்பவர் கனிமொழி.
       தான் வாழும் இச்சமூகத்தாலோ அல்லது தன்னுடைய சொந்த அனுபவங்களாலோ பெறப்படுகிற உணர்வுகள் உள்ளக்கிடங்கில் அமிழ்ந்து கிடந்து மொழியைத் துணை சேர்த்துக்கொண்டு புறத்தே வந்து விழுகின்றபோது கவிதை பிறக்கிறது.  அந்தவகையிலே, நவீன வாழ்க்கையின் நடப்பியல் பின்புலங்களைத் தோள் பிடித்துக்கொண்டு அகத்தில் ஏற்படுகிற உணர்வுகளின் புனைவுகளை ‘அகத்திணை  கவிதைத் தொகுப்பின்வழி வெளிக்கொணர்ந்துள்ளார் கனிமொழி.
       தமிழின் சங்ககாலக் கவிதைகளைத் ‘திணை இலக்கியம் என வகைப்படுத்தித் தொகுத்திருக்கும் பாங்கு மிகச் சிறப்பானது. ‘திணை என்பது வாழ்க்கை சார்ந்த ஒழுக்கம் / வாழ்க்கை நெறி எனச் சொல்லப்படுகிறது.  இதனையே இலக்கியத்திற்கான கோட்பாடுகளாகத் தொல்காப்பியம் முன்வைக்கிறது.  இத்தகையக் கோட்பாட்டு வரையறைக்குள் நின்று கொண்டுதான் சங்க காலத்திய இலக்கியங்கள் எழுந்துள்ளன.  அவ்வகையிலே, ‘அகத்திணை மற்றும் ‘புறத்திணை என்ற இரு பகுப்புகளைக் கொண்டிருப்பன சங்க காலக் கவிதைகள்.  இவற்றுள் புறத்திணைக் கவிதைகளைக் காட்டிலும் அகத்திணைக் கவிதைகளே அதிகம். 
   நாடக உரையாடல் பாங்கில் அமைந்திருக்கும் அகத்திணைக் கவிதைகளின் குறிப்பான தன்மை  ‘சுட்டி ஒருவர் பெயர் கொளப் பெறாஅர் என்பதாகும்.  அதாவது, கவிதையை வாசிக்கிற ஒருவர் இந்தக் கவிதை இன்னாருடைய அனுபவம்; இன்னாரைப் பற்றியது என்பதான தரவுகளைப் பெற்றுவிடக் கூடாது.  மாறாக, கவிதையில் பதியம் போட்ட உணர்வுகளை வாசகரும் உள்வாங்கி அசைபோட்டுக் கொள்கிற வாய்ப்பைப் பெற்றுக் கொள்ளமுடியும்.  இதையே ‘அகப்பொருள் மரபு என்கிறார்கள்.
   அகப்பொருள் மரபில் கவிதைகளைப் பின்னுகிறபோது பல்வேறு உத்திகளைப் படைப்பாளர்கள் கையாண்டுள்ளனர்.  அகப்பொருள் மரபிற்கெனச் சில இலக்கிய உத்திகளை இலக்கண நூலாகிய தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.  சங்ககால அகத்திணைக் கவிதைகள் வேறு வேறு பொருள்கோடலுக்கும் வழிவகுப்பதாக ‘அகப்பொருள் உத்திகள் அமைந்திருக்கின்றன.  அவற்றுள் ‘உள்ளுறை மற்றும் ‘இறைச்சி ஆகியன குறிப்பிடத்தக்கவை.
   ‘உள்ளுறுத்து இதனோடு ஒத்துப் பொருள் முடிக
எனச் சொல்வது உள்ளுறை உத்தி.  அதேபோல,
   ‘இறைச்சிதானே பொருட் புறத்ததுவே’. 
அதாவது, கவிதையின் நேரடிப் பொருள் என ஒன்று இருக்கும். அக்கவிதைவழிப் பெற்றுக்கொள்கிற மறைபொருள் வேறொன்றாக அமைந்திருக்கும்.  பொதுவாகவே சில சொற்கள் மேலோட்டமான பொருளையும் (Surface meaning) உள்ளீடான பொருளையும் (Deep Meaning) கொண்டிருப்பதைப் பார்க்கலாம். அகத்திணைக் கவிதைகள் பெரும்பாலும் வேறொன்றைச் சொல்லி, குறிப்பானதை விளக்கி நிற்கும் நுட்பம் கொண்டவை.  இந்த இலக்கிய நுட்பத்திற்குத் துணை செய்யும் வகையிலே ‘முதற்பொருள் எனப்பெறும் ‘நிலங்களும் பொழுதுகளும் கவிதையில் பயின்று வரும். அதேபோல, நிலத்திலே காணலாகும்  உயிர் மற்றும் உயிரற்ற பொருட்களும் பரவி நிற்கும். இதைக் ‘ கருப்பொருள்  என்கிறார்கள்.  ஆக, முதற்பொருளும் கருப்பொருளும் இணைந்த ‘இயற்கைப் பின்னணி அத்திணைக் கவிதைகளுக்கு உயிர் கொடுப்பதாக அமைந்திருக்கிறது. 
   இயற்கைப் பின்னணி மூலமாகக் கவிதை செதுக்கி, மனிதர்க்கு உரித்தான செய்தியைச் சொல்கிறபோது ‘உரிப்பொருள் என்றாகிறது.  ஆகக்கூடி,  சங்க காலத்திய அகத்திணைக் கவிதைகள் யாவும் அய்ந்துவகை உரிப்பொருள்களைத் தன்வயம் கொண்டிருக்கின்றன. அக்கவிதைகள் கட்டியெழுப்பிய சொல்லாடல்களைக் கடந்து ஊடிழையாடிப் பார்க்கும்போது கவிதையின் நேரடிப் பொருளிலிருந்து வேறொன்றைப் புரிந்து கொள்ள முடியும்.
   மேற்சொன்ன குறிப்புகள் கனிமொழியின் ‘அகத்திணைக் கவிதைகளைப் புரிந்து கொள்ளத் துணை செய்யும். சங்க இலக்கியத்தின் ‘இறைச்சிப்பொருள் கனிமொழியின் ‘ஆயத்தமின்றி கவிதையில் அமைந்திருப்பதாகப் படுகிறது.
       குளிர்காலத்திற்காக / மொசு மொசுவென்று ஓடி
       உணவு சேகரித்தது எலி. / இன்னும் இரண்டு வாரத்தில் /
       குட்டிகள் சொந்தப்பாட்டையில் / கிளம்பி விடும்.
       கிடங்கு நிரம்பிக்கொண்டிருந்தது / குளிர்காற்று வீசத் தொடங்கி விட்டது
       அவகாசம் அதிகமில்லை. / விசுக்கென்று ஒரு ராத்திரி
       எலியைக் கொத்திக்கொண்டு போனது / ஆந்தை.
       விடை பெறுதலின்றி / பிரிவின் முத்தமோ / இறுதி ஸ்பரிசமோ
       எதுவும் இல்லாது / முடிந்துபோனது கதை.
       உச்சிக் கிளையில் / வாயில் தொங்கும் வாலோடு / ஆந்தை.
இந்தக் கவிதை ஏதோ ஒரு எலியின் முடிந்துபோன வாழ்வைச் சொல்வதாக இருந்தாலும், மனித வாழ்வின் தீர்மானிக்க முடியாத நிமிடப் பொழுதுகளைக் கண்முன் கொண்டு வருகிறது எனலாம்.  இக்கவிதையில் கையாளப்பட்டிருக்கும் ‘ஆந்தை என்கிற சொல் குறியீட்டுப் பொருளை உணர்த்தி நிற்கிறது. கிராமம் சார்ந்த மனிதர்களின் மரபுசார்ந்த நம்பிக்கையாகவும் – மரணம் நிகழப் போவதின் அறிகுறியாகவும் ‘ஆந்தையைக் கருதுகிறார்கள். வர்க்கம் – சாதி – பாலினம் – வயது போன்ற மேலடுக்கானாலும் சரி, கீழடுக்கானாலும் சரி, மனிதர்களால் தடுத்து நிறுத்த முடியாத ஒன்று மரணம்.  ஒரு எலியின் கதையினைச் சொல்லி மனித வாழ்வியலைப் பொருத்திப் பார்க்கத் தூண்டும் இக்கவிதை மரபின் நுட்பம் கொண்டது.
   சங்க காலத்தியக் கவிதைகள் முன்வைக்கும் புணர்தல் – பிரிதல் – இருத்தல் – இரங்கல் – ஊடல்  எனும் உரிப்பொருட்கள் யாவும் ஒத்த அன்பினுள் வயப்பட்டவர்களின் உணர்வு வெளிப்பாடாக அமைந்திருப்பன.  ஆனால், தற்காலத்திய நவீன வாழ்க்கைச் சூழலோ ஒருமித்த மனங்களைக் கொண்டிருக்கும் தயாரிப்புகளையும் அதற்கான அவகாசங்களையும் தர மறுத்துக் கொண்டிருக்கிறது.   ஆனாலும், அதற்கான தேடல் இன்னொரு பக்கம் இருந்து கொண்டுதானிருக்கிறது.
   பெரும்பாலான மனிதர்களின் வாழ்க்கைமுறை மனம் என்பதைப் பற்றிக் கவலை கொள்ளாமலே வெறுமனே எந்திரங்களோடு ஓடவேண்டிய நிர்பந்தத்தில் தள்ளப்பட்டிருக்கிறது. சமூகத்தின் புற நெருக்கடிகளால் விரும்பியோ விரும்பாமலோ வாழ்ந்து கொண்டிருப்பதின் கசப்புணர்வு எல்லோருக்குள்ளும் புதையுண்டு கிடக்கத்தான் செய்கின்றது.   
       மரம் விழுந்து /  இடி விழுந்து / வண்டி ஏறி / கடல் கொண்டு
       அகால முடிவுகள் என்ற செய்திகளோடு / விடியும் நாள்களை
       வாழவும் முடியவில்லை / வாழாதிருக்கவும் முடியவில்லை.
நவீன வாழ்க்கை தரும் அவதிகள் எல்லோருக்குமானது.
       காலப் பெருவெளியில் / மிதந்து வந்த / ஒற்றைக் கதிர் /
       நம்மைப் பிணைத்திருந்தது.
என்கிற இலயிப்புகள் எல்லாம் துண்டு துண்டாய்ப் போவதற்குப் பல வழிகளைச் செதுக்கி வைத்திருக்கிறது நவீன காலத்தின் வாழ்க்கை.
   ஒருவருக்கு நேற்றைப் பற்றிய நினைவுகளும், இன்னொருவருக்கு நாளையைப் பற்றிய கவலைகளுமாய் நிரம்பிய இலயிப்புகளைப்  பிரித்து வைத்திருக்கும் வன்மத்தை நிகழ்காலம் பயிலத் தந்திருக்கிறது.  வெற்றுத்தாள் என எழுதப்பட்ட ஒருவரின் மவுனத்திற்கு முன்னால்,
       என்ன சொல்லி என்ன / என்ன எழுதி என்ன
       நான் சொல்ல வருவதைத் தவிர / எல்லாம் புரிகிறது உனக்கு
என்கிறபோது, அவரவர் பிம்பங்கள் அவரவர்களை அச்சுறுத்தி நிற்பதை உணர்த்தி நிற்கிறது.  இருவருக்குமிடையேயான மவுனங்கள் நிகழ்கிறபோது,
       அகன்று கொண்டே போகிறது / எப்போதும்போல் இடைவெளி
       நட்சத்திரப் புள்ளியாய் வானில் நீ
எனத் தனியாய்த் தவித்து நிற்கிறபோதும்,
       தேனீர்க்கடை மேசையில் / ஒடுங்கியபடிக் கிடந்த
       உன் கைகளைப் பற்றி / உன்னிடம் ஏதாவது / பேசியிருக்கலாம்.
என்பதும், தனிமையில் ஊற்றெடுக்கும் ஏக்கப் பெருமூச்சின் வெளிப்பாடுகள்தான்.
       ஒரு பிறழ்ந்த தருணத்தின் / தவறிய கணங்களில்
       சிதறுண்டு போனது / நம் உலகம்.
       தொலைந்துபோன / சில கணங்களைத் / தேடிக் கொண்டிருக்கிறேன்
       கரைந்துபோன / நம் காதலை / நியாயப்படுத்த.
ஆகக்கூடி, சொல்லாதுபோன வார்த்தைகளின் வெளிப்பாட்டில் உள்ளாறாமல் நீண்டு கொண்டிருக்கிறது வாழ்ககை. இப்படியாகவே தனிப் பிம்பத்தின் மீதே நியாயம் கற்பித்து, அகத்தினை ஆற்றாமைக்கு அழைத்துச் சென்று காத்திருப்புக்கான நியாயத்தைத் தேடிக் கொண்டிருக்கிறது தனிவெளி.
   பெண்ணின் அகம் எப்பேர்ப்பட்ட வெளியினை எதிர் பார்க்கிறது என்பதற்கான உள்மனக் கிளர்வுகளை வெகு இலகுவாக நெகிழ்த்திச் செல்கின்றன கனிமொழியின் கவிதைகள்.  பழைய அகவய உணர்வுகளிலிருந்து சுவாசம் பெற்று – நவீனத்தின் பாதிப்புக்குள்ளாகி வாழ்க்கையே வெறித்துப்போன சூழலில், பழைய வாழ்க்கையின் ‘அகத்திணையைச் செழுமைப்படுத்த இயலாமல் புழுக்கத்திற்கு உள்ளாகிப்போன நவீனப் பெண் வாழ்க்கையின் தள ஊடாட்டங்கள் கொடூரமானவை.
   இன்றைய நவீன வாழ்க்கை தந்த அழுத்தங்களினால் பெண்ணின் மனம் நசுக்குண்டு கிடந்தாலும், புற உலகம் சுமத்தியிருக்கும் அதிகார வலைகளை அறுத்து எறிவதற்கான முயற்சிகள் இன்றைய பெண் எழுத்துகளில் வெளிப்படுகின்றன.
   சமூகத்தில் நிலவுகிற மதிப்பீடுகள் – பண்பாடுகள் – சடங்குகள் – கலாச்சாரக் கூறுகள் யாவும் பெண்ணை முன் நிறுத்தியே கட்டமைக்கப்பட்ட புனைவுகள். இத்தகையப் புனைவுகளுக்குப் ‘புனிதம்  கற்பித்து,  அதையே சமூகத்தின் ‘பொது அறமாக முன் வைத்திருக்கிறது அதிகார மய்யம்.  ஆண்மயப்படுத்தப்பட்ட இவ் அறங்களுக்குப் பலியாகிக் கிடப்பது பெண்தான்.  வாழ்க்கை வெளியில் ‘பெண் என்பவள் வெறும் பண்டம்  எனும் அநீதி,  ‘திருமணம் எனும் சடங்கில் வெளிப்படை.  இதுபோன்ற சடங்குகள் யாவும் பெண்களின் உடலை மய்யமிட்டவை; பொருளை மய்யமிட்டவை. ‘அறம் 1 என்ற கவிதையில் கனிமொழி இதைச் சொல்கிறார்.
       பீடத்தின் மீது / அமர்ந்திருந்தவனுக்கு முன்னால்
       அவர்கள் அழைத்து வரப்பட்டார்கள் / கைகள் இணைத்துக் கட்டப்பட்டன
       கூட்டம் / ஆரவாரித்தது / கட்டுகள் இறுகின.
       ஆயிரமாயிரம் / ஆண்டுகளாய் / இப்பீடத்தின் முன் / இது நிகழ்த்தப்படுகிறது
       இவர்களுக்குப் பின்னால் / வரிசையில் பலர் / காத்திருந்தனர்.
       இருவர் தலைகளும் / சிதைக்கப்பட்டன / தலைகள் இருந்த  இடத்தில்
       கிரீடங்கள் வைக்கப்பட்டன / பீடத்தில் இருந்தவன் / அட்சதை தூவினான்
       அடுத்த கரங்கள் / பிணைக்கப்பட்டன / சமூகம் / சுழன்றது.
இதுதான் அறம் என வலியுறுத்தப்பட்ட நீதிகள் யாவும் பெண்ணைப் பலிகடாக்களாக ஆக்குவதை ‘அறம் 2 கவிதை எடுத்துச் சொல்கிறது.
       அறிமுகம் கூட இல்லாத / ஓர் உடலுக்குள் புகுத்தப்பட்டேன்
       தலையில் / கையில் / உடலெங்கும் பாரங்கள் / ஏற்றப்பட்டன.
       நடுங்கும் என் கைகளைப் பிடித்து / யாரோ அழைத்துச் சென்றார்கள்.
நிலவுகிற சமூக அமைப்பில் குடும்ப நிறுவனம் என்பது அதிகார மய்யங்களின் – குறிப்பாக ஆண் அதிகாரத்தின் கூறாகவே இருந்து வருகிறது.  தாய்வழிச் சமூக அமைப்பிலிருந்து தந்தைவழிச் சமூகம் உருவாகி நிலைத்திருப்பதற்கான காரணிகளை இதுபோன்ற சடங்குகள் நினைவூட்டுகின்றன.
   ஆண் உயர்வானவன் என்றும், பெண் தாழ்வானவள் என்றும் சமூகம் கட்டமைத்திருக்கும் அதிகார வலையானது நுண் அளவுகளிலும் கவனமாக இறுக்கம் கொண்டிருக்கிறது.  குறிப்பாக,  பெண் என்பவள் ஆண்களின் பாலியல் நுகர்வுகளுக்குத் தீனிபோடக் கூடியவள் என்பதான கருத்தியல்தான் சமூகத்தின் எல்லா மட்டங்களிலும் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது.  பாலியல் என்பது ஆண் மூலமாகவே தூண்டப்படுதல் என்பதாக, அதிகாரப்படுத்தப்பட்ட இல்ல வெளியில் பெண்ணின் அடையாளம் நால்வகையிலும் வேலியாகிக் கிடக்கிறது.
   பெண் தனக்கான கிளர்த்தலில் இருந்து துவங்காமலும் முடிவடையாமலும் நிகழும் புணர்தல் இயல்பானதாய் இருப்பதில்லை.
       சாப்பாட்டுக் கடைக் / கண்ணாடித் தொட்டியில் / நியான் விளக்கு
       தோலில் பளபளக்க / சாஸ்வதமாய்ப் புணரும் / சாம்பல் தவளைகள்.
பாலியல் குறித்தான பார்வையை மிக எளிதாக உணர்த்திச் செல்கிறது கவிதை.
   புவிப்பரப்பில் பெரும்பாலான சுழற்சிகள் பாலியல் வேட்டையை முன்னிறுத்தி நகர்ந்தவைதான்.  பாலியல் வேட்டைக்காக ஆணுக்கான தண்டனையை நீதிச் சட்டகம் வழங்கி விடலாம். ஆனால்,  சமூகம் வைத்திருக்கும் கற்புக் கோட்பாட்டில் பெண்ணுக்கோ வழுதான். வழுவைத் தூக்கிச் சுமந்துகொண்டேதான் பெண் வாழவேண்டியிருக்கிறது.  பெண் பிணங்கினாலும் பாலியல் வேட்டைதான்;  இணங்கினாலும் பாலியல் வேட்டைதான்.
       என் காத்திருப்பை / அறிந்தவன்போல் வந்தாய்.
       காரணங்களோ / மன்னிப்புகளோ எதுவுமற்று
       தயக்கங்களின்றி / என்னைத் தழுவினாய்.
       தனிமையின் ரணங்கள் / வெடித்து வழிந்தன. . .  
       உயிர் கசிந்துருகும் வேளையில் / மறைந்து போனாய். . .
       பிறகு நீ எப்போதும் வரவே இல்லை.
பெண்ணைப் பண்டமாக்கி ருசிப்பதற்கான அத்தனை கூறுகளையும் ஆண் அதிகாரம் உருவாக்கி வைத்திருக்கிறது என்பதை இக்கவிதை முன் வைக்கிறது.  அதுமட்டுமல்ல, பண்ட ருசிப்பில் பெண்ணுக்கு உண்டாகும் மாதவிலக்கு ஒரு பிரச்சினையாகிப் போகிறது.  பெண்ணை ஒரு பொருளாக மட்டுமே குறுக்கிப் பார்ப்பதின் வெளிப்பாடாகத்தான்,  பெண் உடலில் இருந்து வெளியாகும் குருதியைத் ‘தீட்டு எனப் பார்ப்பது.
   கால மாற்றத்தில் எல்லாமே மாறுகின்றன அல்லது மாற்றப்படுகின்றன.  ஆனால், மாதவிலக்கு என்பதைத்  தீட்டு எனப் பறைசாற்றுவது பெண்ணை ஒடுக்கி வைக்கிற அதிகாரக் குரல்தான்.
       எந்நாடு போனாலும் / தென்னாடு உடைய சிவனுக்கு
       மாதவிலக்குள்ள பெண்கள் மட்டும் / ஆவதே இல்லை.
என, அதிகார அமைப்பின் நிகழ்த்துச் சட்டகத்தைப் பெண் வலியோடு முன்வைக்கிறபோது, பெண்மொழியாய்க் கவிதை உணர்வு கொள்கிறது.
       சட்டங்கள் அவ்வப்போது / ஏறும் மாறும்.
       என் விலாசங்களைக் கூட / உங்கள் பஞ்சாயத்துகளே / தீர்மானிக்கின்றன.
பெண்ணுக்கான அடையாளங்கள் மறைக்கப்பட்டு – பெண்ணின் சுயங்கள் யாவும் காணடிக்கப்பட்ட அதிகார வன்மத்தை அடையாளப்படுத்துகிறது கவிதை. இச்சமூகம் பெண் மீது நிகழ்த்தியிருக்கும் வடுக்களை – நிகழ்த்தப்படுவதின் மூலமாக உண்டாகிற காயங்களைக் கவிதைவழி முன்வைப்பதில் கவனம் செலுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
   அகத்திணைக் கூறுகள் கொண்ட கவிதைகள் ஒருபுறமிருக்க, அரசியல் அதிகார அமைப்பின் அச்சுறுத்தல்கள் – வாழ்க்கை தரும் கோர விகாரங்கள் போன்ற புறவயக் கூறுகளைக் கொண்ட கவிதைகளும் நவீன ‘அகத்திணை யில் உண்டு.
       தோண்டிக் கொண்டிருக்கின்றான் / ஆழ்ந்த அகண்ட / தேடல் அது. . .
       அவனது கிடங்குகள் / நிறைந்திருக்கின்றன / குருதி தோய்ந்த கத்திகளால்
       வெடித்துச் சிதறிய உறைகளால் / சதைத் துண்டுகளால்
       கண்ணாடிக் குடுவையில் மிதக்கும் / விழிகளால் / நகல்களால்
       மனிதக் கழிவுகளால். . . . . . . . . . .
       எதிரிகளின் பட்டியல் / முடிவற்று நீள்கிறது
       வியூக வலைகள் பின்னப்படுகின்றன / தளவாடங்கள் தினமும்
       புதுப்பிக்கப்படுகின்றன / வாள்கள் பளபளக்கின்றன
       மவுனமாய்க் கடக்கிறது காலம்.
அதிகாரமயத்தின் கோர முகங்களுக்குள் நிறைந்திருக்கும் மேலாதிக்கக் கொடுநெறி அரசியலை நுண் அலகுகளால் அம்பலப்படுத்துகிறது மேற்காண் கவிதை.  வரலாற்று நெடுகிலும் நிகழ்த்தப்பட்ட போர்கள், பெண்ணுடல் மீது ஆணால் நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்முறைகள், நிகழ்காலத்திய சாதி மத வெறியாட்டங்கள், பேரினவாத ஒடுக்குமுறைகள், சின்னஞ்சிறிய தேசிய இனங்களை ‘உலகநீதி  என்ற பெயரால் சிதைக்கும் ஏகாதிபத்தியங்கள், இயற்கையினைச் சுரண்டும் பண முதலைகள் போன்றவற்றின் கோரத் தாண்டவத்தை ஒரே கவிதையின்வழி சொல்லியிருப்பது கவிதைக்கான கனத்தைக் கூட்டியிருக்கிறது.
   ‘அகத்திணை என்பது சங்க காலத்தியத் திணை இலக்கியப் பாடுபொருள் மரபுக் களனாக இருந்தாலும், அதன் நீட்சி காலம் நெடுகிலும் பாடப்பட்ட கவிதைகளில் படர்ந்திருக்கிறது. சங்க காலத்தில் வெகுவாகக் கையாளப்பட்ட இம்மரபைப் புதுப்பித்துச் சிறப்பித்தவர்கள்,  பக்திக் கவிதைகள் பாடிய ஆழ்வார் நாயன்மார்கள்தான். இத்தகைய அகத்திணை மரபுகளை நவீனக் கவிதைத் தளத்தில் இயங்கும் பெண் படைப்பாளிகளும் தத்தம் படைப்புச் சாயலில் வெளிப்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில், மரபை உள்வாங்கியிருப்பதன் வெளிப்பாடாகக் கனிமொழியின் ‘அகத்திணை அமைந்திருக்கிறது.
   நடுத்தர வர்க்கத்தின் வாழ்நிலை தந்திட்ட வெறுமையும் விரக்தியும் சாயாது ஆட்டங்காணும் இருப்பின் வலிகளையும்,  நவீன வாழ்க்கை கற்பிக்கும் உணர்வோட்டங்களையும் பழைய மரபின் சாயலோடு வெளிப்படுத்த முனைந்திருக்கும் நவீனப் பெண் பச்சையங்களாக முளைத்து நிழல் தருவதாகக் கனிமொழியின் ‘அகத்திணை முகம் காட்டியுள்ளது.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக