புதன், 30 டிசம்பர், 2015

பெண் கதைகள் கட்டவிழ்க்கும் ஆணுலகம்

உமா மகேசுவரியின் மரப்பாச்சி கதைகளை முன் வைத்து
                                         
       தமிழ் இலக்கியத் தளத்தின் வடிவமும் உள்ளடக்கமும் காலந்தோறும் மாறியிருக்கின்றன; மாற்றம் பெற்றும் வருகின்றன.  அத்தகைய வடிவ-உள்ளடக்க மாற்றத்திற்கான சூழல்களைச் சமூகமே உருவாக்கித் தருகின்றது.  சமூகத்தில் நிலவுகின்ற கருத்தியலை அப்படியே பதிவு செய்தோ – மறுத்தோ – எதிர்த்தோ – மாற்றியோ இலக்கியமாக்கும் முயற்சிகள் வெற்றியடைவதும் தோல்வி அடைவதும் இயல்பாய் ஆகிவிட்ட ஒன்றுதான். 
   பாடுபொருள்களுக்கான எல்லைகளை வகுத்துக் கொண்டிருந்த தமிழ் இலக்கியத் தளம் என்பது சமகாலத்தில் விரிவடைந்திருக்கிறது.  புனைவுகளின் கோர்வைகள் மட்டுமே இலக்கியமாகாமல், மனித வாழ்வின் எதார்த்தங்கள் அதன் போக்கில் இயல்பான மொழியால் இலக்கியமாக உருக்கொள்ளும் நிலை தற்காலத்தில் ஏற்பட்டிருக்கிறது.  எதார்த்தப் படைப்புகளின் ஊடாகக் கலகத் தன்மையினையும், தனக்கான அடையாளத்தை வெளிப்படுத்தும் முயற்சிகளையும் பார்க்க முடிகின்றது.  இத்தகையப் போக்குகள் ஒடுக்குண்டு கிடந்து நிமிர்ந்தெழும் பெண் எழுத்துக்களிலும் வெளிப்பட்டு வருவதைக் கவனிக்கலாம்.
       தமிழ் இலக்கியப் பரப்பைப் பெரும்பாலும் ஆண்களே ஆக்கிரமிப்பு செய்திருந்த நிலை தற்போது மாறியிருக்கிறது.  பெண்களும் தங்களின் அறிவுத் தேடல்களை – வாழ்க்கை அனுபவங்களை மொழிப்படுத்தி வருகிறார்கள்.  ஆண் மொழிகிற எழுத்துகளிலிருந்து பெண் மொழிகிற எழுத்துகள் வேறுபட்டிருக்கின்றன. பெண் மொழிக்கான உலகம் ஆணுக்கான உலகத்திலிருந்து வேறுபடுகின்றது.  பெண் மொழியானது ஆண் உலகத்திடம் சமரசத் தன்மை கொண்டோ – புனைவுத் தன்மை கொண்டோ அணுகாமல், ஆண்மொழி கட்டமைத்து வைத்திருக்கிற ஆதிக்கக் கூறுகளை எதிர்த்துக் கலகக் குரலாய் வடிவம் கொண்டு வெளிக் கிளம்பியிருக்கிறது.  பெண்ணில் உண்டாகிற ரணங்கள், வேதனைகள், அழுகைகள், அவற்றால் ஏற்படுகிற மவுனங்கள், தனிமை, வெறுமை என எல்லாமே குருதியோடும் வியர்வையோடும் இழைந்து இழைந்து, பருப்பொருளாய் – பருப்பொருளில் இருந்து வெளிக்கிளம்பும் நுண்பொருளாய்ப் பெண் உலகம் மாறுகிறது.  அவ்வகையில், அடர்த்தியாய்ப் பரவிக் கிடக்கும் ஆணின் மொழிக்குள் ஊடுறுவி இலகுவான பெண்மொழியால் ஆணுலகத்தைக் கட்டவிழ்ப்பு செய்கின்றன  உமா மகேசுவரியின் மரப்பாச்சி சிறுகதைகள்.
       அழியாச் சோகங்களையும், பிழிந்து சக்கையாகிப்போன கனவுகளையும், விம்மிக் கொண்டிருக்கும் மவுனங்களையும் சேர்த்து, குருதியினையும் வியர்வையினையும் அடுத்தடுத்தத் தலைமுறைகளுக்குப் பெண்கள் வழியாக எடுத்துச் செல்லப்படுவதை மரப்பாச்சி கதைகள் மிக நேர்த்தியாகச் சொல்கின்றன. மரப்பாச்சி கதைகளின் மொழியாக்கம் பெண் பேச்சில் அமைந்திருக்கிறது.  வரலாற்றின் துணையோடும் பெண்ணியத்தோடும் அல்லாமல், எதார்த்தமான உலகை இயல்பான பெண் பேச்சில் அம்பலப்படுத்தும் வகையில் கதை சொல்லல் முறை நிகழ்த்தப்பட்டிருக்கிறது.
       தொடக்க கால ஆதிப்பொதுவுடைமைச் சமூகத்திற்குப் பிறகு, குறிப்பாகத் தாய்வழிச் சமூகத்திற்குப் பிறகான தந்தைவழிச் சமூகம் முதற்கொண்டு  முதலாளித்துவச் சமூகம் வரைக்குமான வரலாற்றுக் கட்டமைப்புப் பின்புலத்தில் ஆணின் ஆதிக்கம் நிலவி வருகின்றது.  நிலத்தோடு பெண்ணைத் தொடர்புபடுத்திப் பார்க்கின்ற ஆணின் கருத்தியலில் பெண் என்பவர் உடைமைப் பொருளாக – உற்பத்திப் பொருளாக – நுகர்வுப் பொருளாகவே இருந்து வருகிறார். இதனால், பெண்ணின் உடல் மீது நிகழ்த்தப்படும் காயங்களால் வடுவாகிப்போன பின்பும்கூட,  அதனை மீண்டும் மீண்டும் கிளருவதன் மூலம் ஏற்படும் ரணங்களால் உண்டாகிற பெண்ணின் வலிமொழியால் கதையாக்கம் செய்யப்பட்டிருக்கிறது.
      சமூக அமைப்புகளுக்குள்ளும் – இலக்கியத் தளத்துள்ளும் பெண்ணின் உணர்வுகள் அழுத்தமாகப் பதியாத நிலையில், மரப்பாச்சி கதைகள் முழுவதும் பெண்ணின் உணர்வுகளையே மிக அழுத்தமாகப் பதிவு செய்கின்றன.  இதுவரையில் நாம் கண்ட பெண் புனைவுகள் என்ற தளத்திலிருந்து விலகி, உண்மைகளைப் புரிய வைக்கின்ற தளமாக விரிந்திருப்பது மரப்பாச்சி கதைகளுக்குக் கூடுதல் பலமாக அமைந்திருக்கிறது. பெண்ணின் அடையாளத்தையே அழித்துவிட்ட பெருஞ்சோகத்தின் முனகல் மரப்பாச்சியில் கேட்கிறது.  மொழியால் கட்டமைக்கப்பட்ட கதைகளாக அல்லாமல்,  உணர்வுகளால் கட்டமைக்கப்பட்ட கதை மொழியானது பெண்ணின் மொழியாக மரப்பாச்சியில் படிந்திருக்கிறது.
       தாய் தந்தையிடமிருந்து கிடைக்க வேண்டிய பாசம் – அன்பு – அரவணைப்பு போன்றவற்றின் போதாமை பெண்ணைத் தனிமைப்படுத்துகின்றது.  உயிருள்ள மனிதர்களிடமிருந்து எழவேண்டிய உணர்வுப் பரிமாற்றங்களைப் பெறமுடியாத நிலையில், மரப்பாச்சிப் பொம்மை உயிருள்ளதாக ஆகி விடுகின்றது. பெண் தனக்கு வேண்டிய உலகத்தை மரப்பாச்சியில் நிர்மாணித்துக் கொள்கிறார்.  பெண் எதை விரும்புகிறாரோ அதனை மரப்பாச்சியால் தர முடிவதற்குக் காரணம், மரப்பாச்சிக்கு உயிர் இருப்பதாக எண்ணிக் கொள்வதனால்தான்.  மரப்பாச்சியிடம் ஒரு பெண் தன்னுடைய உள்ளத்து / உடல் கிளர்ச்சிகளைப் பகிர்ந்து கொள்கிறார். பெண்ணில் ஏற்படக்கூடிய உடற்கூறு மாற்றங்களையும், அதனால் உண்டாகிற மன உணர்வுகளையும் யாரிடமும் வெளிக்காட்டவோ  சொல்லவோ விரும்பாத நிலையில், பெண்ணின் மன எல்லைக்குள் வந்துபோகிற உரிமை மரப்பாச்சிக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. மரப்பாச்சிகதை இதைப் புலப்படுத்தும்.
       “நான் யார்? பெரியவளா, சின்னவளா, நீயே சொல் அனு கேட்கையில்            
       மரப்பாச்சி மவுனமாய் விழிக்கும்.  “எனக்கு யாரிருக்கா? நான் தனி.          
       அனுவின் முறையிடல்களை அது அக்கறையோடு கேட்கும்.  சுடுகாயைத்
       தரையில் உரசி அதன் கன்னத்தில் அவள் வைத்தால் “ஆ, பொசுக்குதே
       என்று முகத்தைக் கோணும்.  அவள் நிர்மாணிக்கிற பள்ளிகளில்
       மாணவியாக, தொட்டில்களில் பிள்ளையாக, சிலநேரம் அம்மாவாக,  
       கனவுலக தேவதையாக எந்த நேரமும் அனுவோடிருக்கும்.  (ப.8)
குழந்தைப் பருவத்திலிருந்து மேடேறி, பூப்படையும் பருவம் நோக்கி நகரும் பெண்ணின் தனிமை நிலையில் தனக்குரிய வடிகாலாகவும் மரப்பாச்சி அமைகின்றது.
       அனு கட்டில் ஓரத்தில் சுருண்டிருப்பாள். மேஜையில் இருக்கும்     
       மரப்பாச்சியின் கண்கள் அவளைத் தாலாட்டும் மெல்லிய வலைகளைப்
       பின்னுகின்றன.  அதன் முலைகளை உதிர்த்து மார்பெங்கும் திடீரென மயிர்
       அடர்ந்திருக்கிறது.  வளைந்த இடுப்பு நேராகி  உடல் திடம் அடைந்து
       வளைந்த மீசையோடு அது பெற்ற ஆண் வடிவம் விசித்திரமாயும்
       விருப்பத்திற்குரியதாகவும் இருக்கிறது.  அது மெதுவாக நகர்ந்து அவள்
       படுக்கையின் அருகில் வந்தது.  அதன் நீண்ட நிழல் கட்டிலில் குவிந்து
       அனுவை அருந்தியது.  (ப.10)
தனக்கான தோழியாகவும் – அதேவேளையில், கிளர்ச்சிகளை ஏற்படுத்தும் ஆணாகவும் மரப்பாச்சி மாறி மாறிக் கொள்கிறது.  அதனால்தான், முலைகள் கொண்ட மரப்பாச்சிப் பொம்மை மீசை முளைத்து ஆணின் வடிவம் கொள்கிறது.  இந்த ஆண், எதார்த்த உலகில் உள்ள மற்ற ஆண்களைப்போல அல்லாமல், தன்னைத் தாங்கிக் கொள்கிற ஆணாக -  தான் விரும்பும் உலகத்தைப் படைத்துத் தரும் ஆணாகவே பெண் கற்பனை செய்து கொள்கிறார்.
       ஆணுக்குள் எளிதாக ஊடாட்டம் நிகழ்த்த நினைக்கிற பெண்ணின் ஏக்கங்கள் கனவுகளாகி – கனவுகள் பிரம்மையாகி நிகழும் தளத்தில் ‘மலையேற்றம் கதை அமைந்திருக்கிறது.  கனவின் சாயலாய் உளவியல் கூறுகளைக் கொண்ட ஆண் பற்றிய புனைவுகள் கட்டமைக்கப்படுகின்றன. 
மலை தீர்மானங்களின் திரளாகத் தொலைவில் எழும்பியிருந்தது.  அதன் திடம்; கம்பீரம்; இறுக்கம்; உறைந்த மவுனம்;  உதிராக் கடினம் எல்லாமும் அதை எட்ட முடியுமென்ற நம்புதலை ஏற்படுத்துவதாயில்லை.  ஆனால் மலையின் அழைப்பு பகிரங்கமாகவும், உரத்தும் கேட்டது.
      அதன் நீல விளிம்புகள் நிறுத்தாமல் சபலமேற்படுத்துவனவாக       
      ஒளிர்ந்தன.(ப.85)   
ஒரு மலையை இரு பெண்கள் அடைகிறார்கள்.  தாங்கள் நுழையக்கூடிய – சுதந்திரமாய்த் திரியக்கூடிய இடமாய் மலை அமைந்திருப்பதாக உணர்கிறார்கள்.  மலை எதார்த்த உலகின் ஆணைப்போல அல்லாமல் தன் ஆணவத்தை அழித்துக் கொள்வதாகவும், எளிதாய் ஊடாட்டம் நிகழ்வதாகவும் கருதிக்கொண்டு மலையேறுகிறார்கள்.  மலை பெண்ணைப் பார்த்துக் கேலியாய்ச் சிரிப்பதாகவும்,  ஊடாட்டம் நிகழ்த்தி முன்னேறிக் கொண்டிருக்கும் பெண்களிடம் தன்னைக் கொஞ்சம் கொஞ்சமாக ஒப்புவிக்கும் இடத்திற்கு வருவதாகவும் மலை அமைந்து போகிறது பெண்ணின் மனதில்.
எந்தப் பற்றுதலையும் நிரந்தரமாய்க் கொள்ளாமல்,  குவிந்து கூர்ந்த உச்சியையே இலக்காகக் கருதி ஏற்றம், ஏற்றம், ஏற்றம் ................ உயர உயரக் காற்றின் உந்து சக்தி என்னுள் புகுந்தது.  ஆடை கலைத்து,  தோலைத் திறந்து சதைகளைக் காற்று தீண்டத் தீண்ட,  உடல் எடையிழந்து இறகாகி இழைந்தது.  துவக்கச் சிரமங்கள் முற்றிலும் விலகி, என் உடல் வசமிழந்து சுழன்றும், மேலே பறந்தும் மேலேறுவதை ஆச்சர்யமுடன் பார்த்தேன் . . . . . . . . . .  அறிந்தேயிராத அதீத உடலின்பத்தின் உச்ச நிலைபோல் தொடை நரம்புகள் தொய்ந்து தெறிக்க,  மெல்லிய தசையிடுக்குகள் விண்விண்ணென அதிர்ந்தன.  கூம்பி விரிந்து உடல் மையம் சிலிர்த்துத் துடித்தது.  (ப.88)
இங்கே, மலைச்சிகரம் ஆணாக ஆகலாம்.  மலையில் நீர் அருந்துகிறார்கள்.  அந்த மலையேற்றம் சுலபமாக அமையாவிட்டாலும், இறுதியில் தன்னை ஒப்புவித்துக் கொள்ளும் மனநிலை ஏற்பட்டிருப்பதைக் காணலாம். 
      பெண் மனம் தேடும் ஆண் பற்றிய நீள் ஓட்டத்தினை ‘மரணத்தடம் கதையிலும் காணமுடியும். மரணம் என்ற ஒன்றுக்குள் கரைந்து போய்விட்டால் ஒன்றும் இல்லை.  அந்த ஒன்றும் இல்லாத சுகத்தைத் தருகின்ற மரணத்தை ஆணாகப் புனைந்து கொள்ளும் பெண்ணின் மன நிகழ்வு இக்கதையில் பதிவு செய்யப்படுகிறது.
          அவள் உள்ளே நுழைந்தபோது அங்கே யாரும் இருப்பதாகத்  
       தெரியவில்லை. ஆனால் திடுமென உயிர் பெற்ற மின் பிம்பம் போல் அந்த
       மூலையில் அவன் தோன்றுகிறான்.  நீண்ட நெடுங்காலமாக அவளுக்காகக்
       காத்துக் களைத்த முகம்.  குழந்தையின் கண்கள், இளைஞனின் திடமான
       மேனி, முதிர்ந்த புன்னகை,  வயதுகளுக்கு அப்பாற்பட்டன போலும். 
       அத்தனை வயதையும் ஒட்டுமொத்தமாகக் கலந்து குவித்தவன் போலும்
       தோற்றம் தருகிறான்.  (ப.93)

எதிர்பாராத ஒரு கனத்தில் அவளை இழுத்து தன்னோடு தழுவிக் கொள்கிறான்.  அகன்ற தோள்களும் அவள் உடல்மேல் குவிந்த கைகளும் சேர்ந்து அவனது அணைப்பிற்கு ஒரு ஏணைத் தன்மையைத் தருகின்றன.  எந்தப் புதிய சுமையும்,  எந்தச் சிறிய நெருடலையும்,  எந்த மெல்லிய உறுத்தலையும் ஏற்படுத்தாத அந்தத் தழுவலின் அமைதிக்குள்ளிருந்து ஒரு உறைந்த போதை அவள் நாளங்களில் நிறையத் துவங்கிய நேரம்.  அவள் அவனுடைய உடைகளைத் தீவிரமாக வெறுக்கிறாள்.  இறுகிய தோல் போன்ற பிய்த்தெறிய முடியாத உடைகள்: மென்மையான உள்ளங்களையும், அலையாடும் முகத்தையும் தவிர மற்றெல்லாவற்றையும் முற்றிலுமாக மறைக்கின்றன.  அவை...................
குறுகியதும்,  நீண்டதுமான முத்தங்கள்: திறப்புகளற்ற அவள் ஆடைகளோடேயே அவளுடலின் வளைவுகளில் ஏறி இறக்கும் ஈரமற்ற தூரிகை போன்ற அவன் விரல்கள்.  காம இலக்கற்ற விரல்கள் என்று அவற்றை எண்ணிக் கொள்வது பிடிக்காமல் பிடித்திருக்கிறது.  ஆக்கிரமிப்பின் வெளிகளற்ற, ஆனால் அதை நோக்கி அணு அணுவாய்,  அனுசரனையாய் அவனை முன்னகர்த்துகிற விரல்கள்........... குளிர்கோர்த்த குகையின் சுவர்கள் தனது வளைவுகளை இழந்து, தட்டையாகி மிருதுவான படுக்கையாக அவர்களிருவரையும் உள்வாங்கின.
என நீளும் இக்கதையில் வரும் நிகழ்வுகளும் உரையாடல்களும் எதார்த்த வாழ்வில் உலவித் திரியும் ஆணோடு அல்ல.  மன வெளியில் வந்து போகும் ஆண்,  பெண் வரைந்து கொண்ட ஆணாகத் திகழ்கிறார்.
       பெண்ணின் மனதுக்குள் நிகழும் பிரம்மை என்ற உணர்வு நிலையில் மரணம்கூட ஆணாகத்தான் இருக்கிறது.  அதுதான் பெண்களின் உலகத்தை மறுதலிக்காத ஆணாகத் திகழ்கிறது.  எந்தப் புதிய சுமைகளையும் – எந்தச் சிறிய நெருடல்களையும் – எந்த மெல்லிய உறுத்தல்களையும் ஏற்படுத்தாத ஆணின் தழுவல்களையே பெண் மனம் எதிர்பார்க்கிறது.  அத்தகைய ஆணிடம் மட்டுமே பெண் தன்னை ஒப்படைத்துக் கொள்கிறார்.  வெறுமனே எந்திரத் தன்மையோடு நிகழ்ந்திராத பாலியல் நிகழ்வையே பெண் விரும்புகிறார்.
ஒரேயொரு முறை புரண்டு விழித்துக் கொள்ளுங்களேன்.  உடம்புக்கென்ன என்று ஒரு வார்த்தை கேளுங்களேன். (ப.97)
எனத் தன் கணவரிடம் எதிர்பார்ப்புகளைக் குவிக்கும்போது,  அது ஏமாற்றம் தருகையில், பெண்ணின் மனம் ஆறுதல் அடைய அலைந்தோடும்போது தனிமை  வெளியே பெண்ணைத் தேற்றுகிறது.
நீ மூட்டும் அடுப்பு நெருப்பில்,  நீராடும் நதியலைகளில், நடக்கின்ற நிலத்தின் அடியாழங்களில், உன் தலைமேல் கவிந்த ஆகாயப் பரப்பில்,  இப்போது உன் சுவாசக் குழலுக்குள் புக மறுக்கும் காற்றணுவில்........  எங்கும், எதிலும்,  எப்போதும் உன்னோடிருக்கிறேன். உன்னை உற்றுக் கவனிக்கிறேன்.  தழுவத் தவிக்கிறேன்.  (ப.96)
எனப் பிரம்மையில் தோன்றும் ஆணின் வார்த்தைகளிடத்தில் – பெண்ணுக்கு ஆறுதலாய்த் தோன்றும் ஆணிடத்திலே மட்டும்தான் தன்னை முழுமையாக ஒப்படைக்கிறார் பெண்.  இவ்வாறாக,  மரப்பாச்சியும் மலையும் மரணமும் பெண்மொழி தேடும் / விரும்பும் ஆண்களாகின்றன.
       மரப்பாச்சி கதைகள் இருவேறு ஆணுலகத்தைக் கட்டவிழ்ப்பு செய்கின்றன.  வாழும் எதார்த்த உலகில் பெண் எதிர் கொள்ளும் ஆணுலகத்தின் முக மூடிகளைக் கட்டவிழ்ப்பு செய்வதாகவும்,  ஒரு பெண் மனம் எதிர்பார்க்கும் ஆணைப் பற்றிய எண்ண ஓட்டங்களை மனதின் புதைநிலையிலிருந்து கட்டவிழ்ப்பு செய்து காட்டுவதாகவும் அமைந்திருக்கின்றன.
“அப்பா, இந்தக் கதையில அந்த ராஜா என்று அனு எதையாவது கேட்டால்,
“பெரிய மனுஷிபோல் என்ன கேள்வி நை, நைனு, சும்மா இரு (ப.8)
பெண் குழந்தை என்பதனாலே பெண்ணின் ஆக்கத்திறன் மறுதலிக்கப்படுகிறது அப்பா என்கிற ஆணின் மூலமாக.
அனு தான் தனியாக இல்லாததை உணர்ந்தாள்.  உடல் மீது நூறு விழிகள் மொய்த்து உறுத்தின.  அனிச்சையாக ஓடத் தொடங்கியபோது எதன் மீதோ மோத, கடினமான கைகள் அவளை இறுக்கின. கரிய நரை முடியடர்ந்த நெஞ்சில் அவள் முகம் நெருக்கப்படுகிறது.  கொட்டும் முத்தங்கள் கன்னத்தில், உதட்டில், கழுத்தில், அவளுள் தளிர் விடுகிற அல்லது விதையே ஊன்றாத எதையோ தேடுகிற விரல்களின் தடவல்,  மாறாக அதை நசுக்கிச் சிதைக்கிறது.  சிறிய மார்பகங்கள் கசக்கப்பட்டபோது  அவள் கதறிவிட்டாள்.  காய்ந்த கீற்றுப் படுக்கை மீது அனுவின் உடல் சாய்க்கப்பட்ட போது,  அவள் நினைவின்மையின் பாதாளத்துள் சரிந்தாள், கனமாக அவள் மேல் அழுத்தும் மாமாவின் உடல்,  அத்தை ஓடி வரவும் மாமா அவசரமாக விலகினார். (பக்.13)
பருவமடையாத – பருவமடையப்போகிற பெண்ணின் மீது, திருமணமான – அத்தையின் கணவரென உறவுமுறை கொண்டவரால் நிகழ்த்தப்படும் பாலியல் வன்முறைத் தீண்டல்கள் மாமா என்கிற ஆணின் மூலமாக நடைபெறுகிறது.
என் சட்டைப் பாக்கெட்டிலிருந்து ஐநூறு ரூபாய் எடுத்தியா?  நீ எடுக்காம எங்கேடி போவும்?  புதுப் புடவைன்னு முனகிட்டு இருந்தியே,  அதுக்காகத் திருடினியா? (ப.27)
மனைவியின் மீதுள்ள கணவனின் அதிகாரம் பெண்ணைத் திருடியாய்ப் பார்க்கச் சொல்கிறது.
மச்சான் குளியலறைக் கதவை அறையும் படீர் சத்தம்.  நீர்த்துளிகள் சொட்டும் தலைமுடி. எந்தக் குளியலாலும் கழுவ முடியாத குரோதம் தொனிக்கும் கண்கள்.  அவர் சுற்றும் முற்றும் பார்த்தார்.  நான் சுவரோரம் ஒண்டிக் கொண்டேன்.  அழுக்குத் துணிகள் அமுக்கிய வாளிக்குள் துழாவினார். ஒரு சட்டையை உருவி, அதன் பையில் விரல் விட்டுத் தேடினார். அந்த ஐநூறு ரூபாய் நோட்டு அவர் கையிலிருந்தது.  அவர் இப்போது உள்ளே வரப் போகிறார். அக்காவைத் தொட்டு எழுப்பி,  அடித்ததற்காக அவளிடம் மன்னிப்பு கேட்டு.......  இல்லை, நான் நினைத்தது போல் அவர் ஒன்றும் செய்யவில்லை.  அந்த ஐநூறு ரூபாய் நோட்டை உள்ளங்கையில் சுருட்டிப் பதுக்கினார். தன் அறைக்குள் நுழைந்து கொண்டார்.  (ப.31)
தான் தவறிழைத்தவர் என்பதைக் காட்டிக் கொள்ளாத – மனைவியை அடித்துப் போட்டதற்கு வருத்தமோ மன்னிப்போ கேட்காத மிகக் குறுகலான புத்தியைக் கொண்ட கணவன் என்கிற ஆணுடன் சேர்ந்துதான் பெண் வாழ வேண்டியதிருக்கிறது.
       என்ன பண்ணுறே பாத்ரூமில்? எனக்கு லேட்டாகுது இட்லி எடுத்து  
       வைக்கிறயா?.............(39)
பம்பரமாய்ச் சுழன்று வீட்டில் உள்ள அனைத்து வேலைகளையும் செய்து கொண்டிருக்கும் மனைவியின் மீது கணவன் என்கிற ஆணின் மூலமாகத்தான் அதிகாரம் செலுத்தப்படுகிறது.
       உன் கணவரும் ஒரு சோதனை – லேசானதுதான் செய்துக் கட்டும்  (ப.47)
ஒரு பெண்ணுக்குத் திருமணமாகிவிட்டாலே கருக்கொள்ள வேண்டும்; குழந்தைகளைப் பெற்றுத் தர வேண்டும் என்ற சட்டங்கள் எழுதப்படாமலே நம் சமூகத்தில் நடைமுறைக்கு வந்திருக்கின்றன.  குழந்தையைப் பெற்றெடுக்காத பெண்களுக்கு நேர்கின்ற கொடுமைகள் வேறு யாராலும் அனுபவிக்க முடியாதவை.  ஒரு பெண் கருக் கொள்வதற்காக மருத்துவமனைகளில் செய்து கொள்ளும் மருத்துவச் சோதனைகள் பெண்ணின் உடலைச் சிதறு காயாக்கி விடுகின்றன.  எல்லாச் சோதனைகளும் முடிந்து இறுதிக்கட்டமாய் ஆணுக்குச் சோதனை. இப்படி, சமூக மதிப்பீடுகளே ஆணின் தனத்தோடு இருந்து கொண்டிருக்கின்றன.
       நீ ஏன் இப்ப வெளியே வந்தே? (ப.56)
பெண் நடமாட்டத்தின் எல்லைக் கோடுகளைத் தீர்மானிப்பது ஒரு ஆண்தான்.  பெண் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள்ளே இருக்க வேண்டும் என நினைப்பதும் ஓர் ஆண் தான்.
ஆம்பிளப் பிள்ளைன்னா கொஞ்சம் அப்படி இப்படித் தானிருப்பான். நாமதான் விட்டுப்பிடிக்கணும் (ப.70)
கட்டுப்பாடற்ற சுதந்திரம் ஆணுக்கு மட்டுமே உண்டு.  குறிப்பிட்ட வரையறைத் தளத்துக்குள் ஆண் இருக்க வேண்டிய அவசியமில்லை என நியதிகளை உருவாக்குவதும் ஆண்தான். அந்த உரிமைகளை வழங்குவதும் ஆண்தான்.  சமூகத்தின் எல்லாத் தளங்களிலும் ஆணின் ஆதிக்கம்தான் நிலவுகின்றது என்பதைப் பல கதைகள் சொல்கின்றன.
       எதார்த்த உலகில் பெண்ணைச் சக உயிரியாகப் பார்க்காமல், பாலியல் நுகர்வுப் பொருளாகப் பார்த்தல் – ஆணின் காம வேட்டைக்குப் பெண் பலியாதல் – பெண் என்பவர் பிற ஆண்களுடன் தொடர்போ உறவோ வைத்துக்கொள்ள அனுமதி மறுத்தல் – குடும்ப உறவுகள் பெண் மீது செலுத்தும் அதிகாரங்கள் – பண்பாடு என்ற பெயரில் பெண் மீது விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் – வீட்டு வேலைகள் அனைத்தையும் பெண்ணே செய்து முடித்தல் – வீடு என்ற குறுகிய வட்டத்துள்ளே பெண்ணை அடக்கி ஆளுதல் – நடத்தை முறைகளில் பெண் மீது ஏற்ற இறக்கம் காட்டுதல் – சொத்துக்களில் பெண்ணுக்கு உரிமை மறுத்தல் என நீளும் பெண்ணின் வாழ்வனுபவம் என்பது,  ஆணின் அதிகாரக் கரங்களின் கூர் நகங்களுக்குப் பலியாகிக் கிடக்கிறது.
      எதார்த்த உலகில் பெண் எதிர் கொள்ளும் ஆணுலகம் அதிகாரத்தைக் கொண்டதாகவும், பெண்ணை அங்கீகரிக்க மறுப்பதாகவும் அமைந்துவிட்ட நிலையில், ஆணைப் போலவே கனவுகளைச் சுமக்கிற – உணர்ச்சிகள் ஊற்றெடுக்கிற – உணர்வுகளை அடை காக்கிற – அறிவுத் தேடலைக் கொண்டிருக்கிற பெண் தனக்கான ஆணுலகத்தைக் கற்பனை செய்து பார்க்கிறார்.  எதார்த்த வாழ்க்கையில் எந்தவித மாற்றத்தையும் செய்துவிட முடியாது என்ற அவநம்பிக்கை என்பது பெண்ணை இயற்கையின் ஊடாகவும், பிரம்மைகளின் ஊடாகவும் பெண் வேண்டுகிற ஆணுலகத்திற்கு எடுத்துச் செல்கிறது. அதனால்தான், தன்னுடைய உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் இயல்பாகப் பகிர்ந்து கொள்ளும் ஆணுலகத்தை,  தான் காணுகின்ற மரப்பாச்சிகளிடமும் மலை முகடுகளிலும் இயற்கையின் அத்தனை உருவங்களிலும் மரணத்திலும் கூடக் காண்கிறார்.   இந்த வகையான ஆணுலகமே பெண் மனம் தேடும் ஆணுலகமாக மரப்பாச்சி சிறுகதைகளில் அமைந்திருக்கிறது.

                                                          நன்றி : கவிதாசரண் இதழ்



                         











கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக