ஆளும் உடைமை
வா்க்கத்தின் அதிகாரக் கூா் நகங்கள் பரவியிருக்கும் இப் பொதுவெளிச் சமூக அமைப்பில், வாழ்தலின் இருப்பிற்காக ஏதோ ஒருவகையில் போராடிக்கொண்டேதான் இருக்க வேண்டியிருக்கிறது. அதிகார
அமைப்புகளின் எல்லைகளுக்குட்பட்ட மனித வெளியை
அடிமைகளின் கூடாரமாகவே அவை வடிவமைத்துக் கொண்டிருக்கின்றன.
திறந்தவெளிச் சிறைச்சாலைகளில் உலாவித் திரியும் நிராயுதபாணிகளாகவும், அதிகார மட்டங்களின் சுரண்டலுக்கான சேவகா்களாகவும் இங்குள்ள மனிதா்கள் மாற்றப்பட
வேண்டும் என்பதில் மிகத் தீவிரமாகச் செயலாற்றுகின்றன அதிகாரத்தைத் தம்மகத்தே குவித்துக்கொண்டுள்ள முதலாம் உலக நாடுகள்.
உலக நாடுகள் அனைத்தின் மீதான அதிகாரத்தைச் செலுத்தத் துடித்துக்கொண்டிருக்கும் ஏகாதிபத்திய நாடுகளின் கொடுங்கரங்களால், மூன்றாம் உலக நாடுகளின் அரசியல், பொருளியல், நிலவியல், வாழ்வியல், பண்பாட்டியல், மொழி போன்ற
அனைத்துக் கூறுகளும் சிதைவுகளுக்கு உள்ளாகி வருகின்றன. மூன்றாம் உலக நாடுகள் மீதான சுரண்டலையும் அந்நாடுகள் மீதான அதிகாரத்தையும் நிலை நாட்டுவதற்கென உருவாக்கப்பட்ட உலகமயக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதில் ஏகாதிபத்திய நாடுகள் முனைப்பு காட்டி வருகின்றன. ஏகாதிபத்தியங்களின் உலகமயக் கொள்கைகளை மூன்றாம் உலகநாடுகளும், அந்நாடுகளில் உள்ள தேசிய இனங்களும் ஏற்றுக் கொள்ளச் செய்வதற்கான நிர்பந்தங்களை அவை ஏற்படுத்துகின்றன.
ஏகாதிபத்திய நாடுகளின் சுய இலாபத்திற்காகவும் சுரண்டலுக்காகவும் உருவாக்கப்பட்ட உலக வங்கி (World Bank), உலக வா்த்தக அமைப்பு (WTO), சா்வதேச நிதி ஆணையம்
(IMF) போன்ற பண்னாட்டு நிதி நிறுவனங்களின் மூலமும், பொருளாதாரத் தடை, ஆக்கிரமிப்பு, போர் போன்ற நடவடிக்கைகளாலும் இவ்வுலகமயக் கொள்கை மூன்றாம் உலக நாடுகள் மீது புகுத்தப்படுகின்றது.
மூன்றாம் உலக நாடுகள் அனைத்தும் ஏகாதிபத்திய நாடுகளின் அதிகாரத்திற்கு உட்பட்டும் அடிபணிந்தும் இருப்பதோடு மட்டுமல்லாமல், ஏகாதிபத்திய நாடுகளின் சுரண்டலுக்கான திறந்தவெளிச் சந்தையாகவும் மூன்றாம் உலக நாடுகள் மாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
ஏகாதிபத்திய நாடுகளின் பன்னாட்டு நிறுவனங்களின் உலகமயக் கொள்கைகளால் பெரும்பாலான மூன்றாம் உலக நாடுகள் புது வன்குடியாதிக்கக் களங்களாக (புதுக் காலனியம்) மாறி வருகின்றன.
மூன்றாம் உலக நாடுகள் புது வன்குடியாதிக்கத்திற்கு உட்பட்ட நாடுகளாக மாற்றப்பட்டாலும், இதற்கு எதிரான
போக்குகளும் போராட்டங்களும் மூன்றாம் உலக நாடுகளில் உள்ள பெருவாரியான மக்களிடம் காணப்படுகின்றன.
ஏகாதிபத்தியங்களின் புது வன்குடியாதிக்க நடைமுறைகளால் மூன்றாம் உலக நாடுகளின் இயற்கை வளங்கள், உற்பத்தி நடவடிக்கைகள், உணவு ஆதாரங்கள், பண்பாட்டுக் கூறுகள், சுய அடையாளங்கள், அரசியல் கூறுகள், வாழ்வியல் முறைகள், அந்தந்த தேசிய இனங்களின் மரபுகளும் வோ்களும் அழிவுக்கும் திரிபுகளுக்கும் உள்ளாகி வருகின்றன. அதேவேளையில், தத்தமது இருப்புகளையும் அடையாளங்களையும் காத்துக் கொள்வதற்கும் மீட்டுக் கொள்வதற்கும் போராடிக் கொண்டேதான் இருக்கின்றன.
புது வன்குடியாக்கத்திற்கு எதிரான போராட்ட உணா்வும் பங்களிப்பும் ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஏதாவது ஒருவகையில் வெளிப்பட்டுக்
கொண்டிருப்பவை. புது வன்குடியாதிக்க எல்லைக்குள் இருத்தி வைக்கப்பட்டிருக்கும் மனிதா்களின் எதிர்ப்பு வடிவங்கள் பல
வகைப்பட்டவை. ஒவ்வொரு மனிதரும் தாம் சார்ந்த - தமக்குத் தெரிந்த - தம்மோடு உறவாடிக் கிடக்கிற கூறுகளின் வழியேயும் புது வன்குடியாதிக்கத்திற்கு எதிரான உணா்வை
வெளிப்படுத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள். நிலவுகிற அதிகார அமைப்பில் வாழ நிர்பந்திக்கப்பட்ட அதேசமயத்தில், வாழ்வையும் பொழுதையும் தமக்கு இலகுவான கலைக்கென்று ஒப்பளித்துக்கொண்ட ஒவ்வொரு கலைஞரும் புது
வன்குடியாதிக்கத்திற்கு எதிரான கூறுகளைத் தமது கலைகளின் வழியாகவும் வெளிப்படுத்தக் கூடும். தமது கலை வடிவங்களையே போராட்டங்களுக்கு உதவக் கூடிய
கருவிகளுள் ஒன்றாக ஆக்கவும் முடியும்.
எண்ணெய் வளச் சுரண்டலுக்காகவே ஈராக்
நாட்டின்
மீது வலுக்கட்டாயமாகப் போர் தொடுத்து, அமெரிக்க இராணுவப் படைகளால் ஈராக் மண் முழுவதும் ஆக்கிரமிக்கப்பட்டது. அங்குள்ள இலட்சக்கணக்கான ஈராக்
மக்களைக் கொன்றொழித்தும், எஞ்சியுள்ள ஈராக்கியா்களை வதை முகாம்களில் அடைத்து வைத்தும் வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டது அமெரிக்கப் படை.
மேலும், ஈராக் பெண்களை அடிமைச் சிறைச்சாலைகளில் அடைத்து வைத்து ஆக்கிரமிப்புப் படை வெறியா்களால் வன்புணர்ச்சி செய்யப்பட்டது. ஈராக் மக்கள் அனைவரையும் ஈராக் மண்ணிலேயே அகதிகளாக்கியதோடு, ஈராக்
மண்ணின் அடையாளங்கள் யாவும் முற்றாகச் சிதைக்கப்பட்டன.
தம் இனத்தின் எச்சங்களையும் பாரம்பரியத் தடயங்களையும் அடைகாத்துப் பாதுகாத்து வந்த ஈராக்
மக்களின் பாக்தாத் அருங்காட்சியகத்தின் துகள்களைக்கூட எரித்துச் சாம்பலாக்கின ஆக்கிரமிப்புப் படைகள்.
அமெரிக்காவின் ஈராக் ஆக்கிரமிப்புப் போர் நடவடிக்கைகளால் அமெரிக்காவின் மீதான
எதிர்ப்புணா்வு ஈராக் நாட்டுக் குழந்தைகளிடத்தும் காணப்பட்டது. சுவா்களில் ”அமெரிக்கா” என்றும் ”புஷ்” என்றும் கிறுக்கப்பட்ட எழுத்துகளின் மீது மூத்திரத்தைப் பீய்ச்சி அடித்ததன் மூலமும் தமது எதிர்ப்புணா்வைக் காட்டினா். (அமெரிக்க புஷ் ஈராக் வந்தபோது தனது புதைகால் செருப்பை புஷ் மீது வீசிய
முண்டாசின் எதிர்ப்புணா்வும் இங்கு நினைவு
கூறத்தக்கது)
ஈராக் மட்டுமல்லாமல், மூன்றாம் உலக நாடுகள் அனைத்தையும் உலகமய நடவடிக்கைகள் மூலம் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் அமெரிக்கா போன்ற ஏகாதிபத்திய நாடுகளின் மீதான
எதிர்ப்புணா்வு நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது.
ஈராக் நாட்டின் பாக்தாத் அருங்காட்சியகம் அமெரிக்கப் படைகளால் அழிக்கப்பட்டபோது கலைகளை மட்டுமல்லாமல் மனிதத்தை நேசிக்கக்கூடிய கலைஞர்களிடத்தும் பெரும்
கொதிப்பு இருந்தது. பழமை மிக்க – பாரம்பரியச் சுவடுகள் நிறைந்த பாக்தாத் அருங்காட்சியகம் அழிக்கப்பட்ட அந்தநாளின் இரவு முழுவதும் தனது அம்மா,
அக்கா, தங்கை உடுத்திய பழைய
சேலை, தாவணி, பாவாடைத் துணிகளைக்கொண்டு நிறைய பொம்மைகளைச் செய்தவா்
முருக
பூபதி என்னும் நாடகக்காரர். ஒரு பொம்மையை அழித்தால் பலநுாறு பொம்மைகளை உருவாக்குவேன் என வெளிப்பட்ட உணா்வு, அமெரிக்க எதிர்ப்பால் மட்டும் வந்ததல்ல; மக்களையும் மண்ணையும் கலைகளையும் நேசித்ததாலும் வெளிப்பட்ட உணா்வாகும்.
முருக பூபதியின் பெரும்பாலான நாடகங்கள் மண் சார்ந்த அடையாளங்களையும் ஆதிமக்களின் தொன்மக் கூறுகளையும் மீள் உருவாக்கம் செய்யும் தன்மை
கொண்டவை.
நகரத்தின் சாயல் படாத கிராமங்களுக்குள்ளும், கட்டடங்கள் முளைக்காத காடுகளுக்குள்ளும் நாடகங்களை நிகழ்த்துவதன் மூலம்
நாடகத்திற்கான களம் – பார்வையாளர் தளம் – நாடக உணர்வோட்டம் என அனைத்துமே கிராமத்து மண் சார்ந்த கூறுகளுள் ஒன்றோடு ஒன்றாக
ஆகிப்போகின்றன.
அந்தவகையில் முருக பூபதியின் நாடகங்கள் சூழலியல் அரங்க
அழகியலைக் கொண்டவை.
மண்சார்ந்த கூறுகளையும் – மண்ணில் உழலும் மக்களின் வாழ்வியல் பதிவுகளையும் வெளிப்படுத்துவதற்கு ஏதுவாக மண்ணோடும் மக்களோடும் உறவாடிக் கிடக்கிற மொழிப் பதிவுகளையும், சடங்கியல் ஆட்டமுறைகளையும் மிக நுட்பமாகவும் குறீயீடுகள் வழியாகவும் வெளிப்படுத்தும் பாங்கில் முருக
பூபதியின் நாடகப் பாணி அமைந்திருக்கின்றது.
முருக பூபதியின் பனுவல் மற்றும் நெறியாளுகையில் நிகழ்த்தப்பட்ட அவரின் நாடகம்
”குற்றம் பற்றிய உடல்”. ”மணல்மகுடி” தயாரிப்பில் உருவாக்கப்பட்ட இந்நாடகம், புரிசையில் நடந்த கண்ணப்பத் தம்பிரான் நினைவுநாள் விழாவில் அரங்கேற்றப்பட்டு, பின்பு மதுரையிலும் நிகழ்த்தப்பட்டது.
நாடகத்திற்கு எனத் தனி மேடையோ, பெரிய
அளவிலான அரங்கப் பொருட்களோ எதுவும் இல்லை. வெறும் மணற்பரப்பே நாடக நிலமாக மடி விரித்துக் கிடக்கிறது. நாடக நிலத்தில் சுரக்குடுவைகள் மட்டுமே பரவிக் கிடக்கிறது. அச் சுரக்குடுவைகளை மண்ணில் உரசியபடியே நிலமெங்கும் கோலமிடுகிறார்கள் நாடகர்கள்.
விதைகளின் உரசல், பூச்சிகள், வண்டுகளின் ஓசைகள் நாடகர்கள் குரல் வழியாக வெளிப்பட்டன. நிலத்தில் முளைத்த பயிர்ச்செடிகள் துவண்டு துவண்டு விழுவதும், அவைகளைத் துாக்கிப் பார்ப்பதுமான படிமங்கள் நாடகர்கள்
உடல்மொழி வழியாக வெளிப்படுத்தப்படுகின்றது.
நாடக நிலம் சாம்பல் நிறத்தில்
மவுனித்துக்
கிடக்கையில், அப் பெரும் மவுனத்தைக் கிழித்தபடியே வந்த ஒப்பாரிப் பாடல் நாடக நிலமெங்கும் பரவுகிறது.
”வாங்கடா மக்கா வரிசையாய் என்பிறகே
தண்ணீா் என்று
சொல்லித் தவிக்குது என்குழந்தெ...
அன்னமென்று சொல்லி அலையுது பாலரெல்லாம்
தண்ணீா்த் தவளைபோலத் தானாக
மிதந்தலைந்தோம்
பச்சைக்கிளிபோல பறக்கிறோம் பாழ்கிணற்றில்
தாலி பறிகொடுத்தேன்....... கூரை பறிகொடுத்தேன்
கணவனைப் பறிகொடுத்துத் தனிவழி
நின்றலஞ்சோம்
தாமரைக் கிள்ளியல்லோ மாவிலையும் கிள்ளி வந்தேன்
அழுகையொலி நிற்கவில்லை யார் மனசும் சுகமாயில்லை
வோ்முடிக்கும் கூந்தலிலே விறகெடுக்க என்விதியே..
எனப்
பாடியபடியே ஒருவா் முன்செல்ல, மற்றவா்கள் அவரைப்
பின்தொடர்ந்து செல்கின்றனா். நட்டப்பட்ட வேளாண்மை (விவசாய)த் தொழிலால் மோசமாக்கப்பட்ட உழவர்களின் அழுகையும் மரண ஓலமும்தான் நாடகத்தின் உயிர் என்பதை அந்த ஒப்பாரிப் பாடல் உணா்த்தியது.
புது வன்குடி ஆதிக்க நடைமுறைகளின் கொடூர நெருக்கடிகளால் பாதிக்கப்பட்டிருக்கும் இரு தரப்பினரைப் பற்றிய
சித்திரமாக நாடகம் விரிகின்றது. வேளாண்மைத் தொழிலோடு மட்டுமே தங்கள்
வாழ்வியலைப் பிணைத்திருந்த சம்சாரிகளின் தற்போதைய நொருங்கிப்போன வாழ்வியலையும், வேளாண் சிற்றூர் (கிராம)ப் புறங்களுக்குச் சென்று நாடகம்
நிகழ்த்திக்
காட்டும் நாடோடிக் கூத்தாடிகளின் களைந்துபோன வாழ்வியலையும் கண்ணீரும் கம்பலையுமாக விவரித்துச் செல்கிறது நாடகம்.
சிற்றூர்ப்புறங்கள் சார்ந்த மக்களுக்கும் அம்மக்களை நம்பிய கலைஞா்களுக்குமான உறவில்
நேசிப்பும் நெருக்கமும் இருந்தன. அறுவடைக்
காலத்தில் நாடகம் நிகழ்த்திக் காட்டும் நடிகா்களுக்கு அம் மக்கள் தந்த
பரிசுகள் ஏராளம். காட்டுக்கீரைகளையும், வறண்ட நிலங்களில் விளைகிற கனி வகைகளையும் தானியங்களையும் கொண்டுவந்து நடிகா்களுக்குக் கொடுப்பார்கள். ”சிலா் எங்க முகத்தையே பார்த்துவிட்டு, எங்கள் கண்ணுக்குள்ள மலா்களும் செடிகளும் விருச்சங்களும் அசையுதுண்ணு சொல்லி அதெத் தொட்டுற மாட்டமா-ன்னு எங்களைச் சுத்திச்சுத்தி வருவாங்க.... அந்த ஊா் குழந்தைகளிட்ட கோமாளி வேசம் போட்டு வருவேன்னு சொல்லிட்டு வந்தேன். எனக்காகப் பனையோலைக் காத்தாடியெல்லாம் செஞ்சு
வச்சிருப்பாங்க....”
என விரியும் நடிகா்களின் வாழ்ப்பாடுகள்
(அனுபவங்கள்) பசுமை நிறைந்த சொற்களைக் கொண்டவை.
நடிகா்களைத் தங்கள் வீட்டில் உள்ள ஒருவராகவே பார்ப்பதுமான வாஞ்சைக் குணம் தொல்குடிகளிடமும் வேளாண் சம்சாரிகளிடமும் இருந்து வந்தது. ”எனக்குப் பிடிச்ச பெண் வேசம் கட்டும்போது என் அழகைக்
கண்டு விவசாயி எல்லாம் ஏமாந்து என் ரெட்டைச் சடைக்குக் கத்தாழைப் பூக்களையும், பெயா் தெரியாத காட்டு மலா்களையும் கொண்டு வந்து தருவாங்க. சுயமரணம் செய்த பெண்களோட உடுப்புக்களையெல்லாம் உடுத்தி நடித்துப் பாடினேன். அப்போ என்ன அவங்க
வீட்டுப் பொண்ணாத்தான் பார்ப்பாங்க...”
இப்படியான வாழ்ப்பாடுகள் நடிகா்கள் எல்லோருக்கும் ஏற்பட்டதுண்டு. கலைஞா்களுக்கும் எளிய மக்களுக்குமான இந்த உயிர்ப்பான உறவு தொடர்ந்து நீடிக்க முடியவில்லை.
புவிச் சூடேற்றத்தால் பருவமழை தவறிப்போனது. விளைநிலங்கள் வறண்டுபோயின. ஊருக்கு உணவு அளித்த உழவுக்குடிகள் வறட்சிக்கும் பட்டினிக்கும் உள்ளாகிக் கிடக்கின்றார்கள். சிற்றூர்ப்புறங்கள் மாறிப்போயின. சம்சாரிகளின் வாழ்வும் வறண்டு கிடக்கின்றது. இந்த நிலைமையில், விடிகாலையின் கதிரொளிபோல வந்த குழந்தைகளுக்கு வைக்கோல் பொம்மைகளைச் செஞ்சு கொடுக்கும் நடிகா்களிடம், ”அந்த பொம்மைகளுக்குக் கண்கள் வைக்க எங்களிடம் தானியங்கள் இல்லையே?..... நாங்க யார்ட்டபோயி கேட்போம்.... கேட்டாங்க.... துார ஊருக்குப் போன எங்க பொம்மைகள் கண் திறக்க தானியங்கள் கொண்டு வருவீா்களா? தானியம் வச்சிருக்கீங்களா......? விதைநெல் இருந்தா கொடுங்களேன்.... ”
நடிகா்களுக்குத் தானியங்களைப் பரிசாகக் கொடுத்த அந்த நிலத்தின் குழந்தைகள் தானியங்களைத் தேடியலையும் அவலம் நடிகா்களின் குரல்
வழியே நீண்டுகொண்டே இருக்கிறது. வனப்போடும் செழிப்போடும் இருந்த எளிய
மக்களின் வாழ்வியல் உருமாறிப் போனதையும், நடிகா்களின் கலை வாழ்வும் வறண்டு போனதையும் நடிகா்களின் வாழ்ப்பாடுகள் சோகக் கதைகளை நிரப்பி வெளிப்படுத்துகின்றன.
நாடக நிலமெங்கும் ஆன்மாக்களின் அழுகையாலும், தொலைந்துபோன வாழ்வையும் உறவுகளையும் மண்ணையும் விதைகளையும் நினைத்த ஒப்பாரிகளாலும் நிரம்புகின்றது. உயிருடன் உலாவிக் கொண்டிருக்கும் நடிகா்களின் ஆன்மாவும் நொடித்துப்போன வேளாண்மைத் தொழிலால் இனி வாழவே முடியாது எனக் கருதித் தற்கொலை செய்து கொண்ட சம்சாரிகளின் ஆன்மாக்களும் மாறி
மாறி உருவெடுத்து,
தற்கொலைச் சாவுகளின் பின்னணியை விவரிக்கின்றன.
உடலில் கசியும் தீநீரை நிலத்தில் சிந்தியபடியும் உரத்த
குரலில் கூவியபடியும் கொல்லப்பட்ட வேளாண் சம்சாரிகளின் ஆன்மாக்களை உசுப்பி எழுப்புகிறது நாடகம். நடிகா்களின் குரலும் உடலும்
ஒத்திசைந்து நாடக நிலத்தை இடுகாட்டு
(மயான) வெளியாக மாற்றி விடுகின்றன.
வயல்
நிலத்தில் விதைகளோடு விதைகளாகப் புதைக்கப்பட்ட வேளாண் சம்சாரிகளின் ஆன்மாக்களைத் தேடும் நடிகனின் ஆன்மா
”எங்க ஊா்ல மரித்த
விவசாயிகளெல்லாம் வயல் நிலத்துக்கு அடியிலதான் துாங்கிக்கிட்டு இருக்காங்க...” எங்க ஊரு தானியங்களுக்குள்ள எங்க முன்னோர்களோட மூச்சு இருக்கு...” எனத் தேடியலைவதைக் காட்சிப்படுத்துகின்றது நாடகம்.
தற்கொலை செய்துகொண்ட வேளாண் சம்சாரிகளின் ஆன்மாக்கள் திரும்பவும் மண்ணைச் சுற்றிச் சுற்றியே அலைகின்றன. அவை, மரபார்ந்த வேளாண்தொழில் அழிந்து கொண்டிருப்பதை நினைத்துக் கவலை கொள்கின்றன. தொலைந்துபோன விதைகளைக் கண்டிடத் துடிக்கின்றன. நவீனம் என்ற பெயரில் திணிக்கப்பட்டுள்ள வேளாண்தொழில் பாதிப்புகளைக் கதைகதையாய்ச் சொல்லித் திரிகின்றன. அந்தவகையில், செத்துப்போன சம்சாரிகளின் ஆன்மாக்களை மறு உருவாக்கம் செய்கின்றது நாடகம்.
தெலுங்கானா, மாமில்லா கொண்டபள்ளி, விதா்பா மட்டுமல்ல; புது வன்குடியாக்கக் களமாக
மாற்றப்பட்டிருக்கும் இந்திய ஒன்றிய
நிமெங்கும் உள்ள வேளாண் குடிகள் தற்கொலைக்குத் துாண்டப்பட்டிருக்கிறார்கள் அல்லது முடமாக்கப்பட்டிருக்கிறார்கள். இந்திய ஒன்றியத்தில் 1997 முதல் 2007 வரை 1 ½
இலட்சத்திற்கும் மேற்பட்ட வேளாண்தொழில் சார்ந்த சம்சாரிகள் தற்கொலையில் மட்டுமே செத்துப்போயிருக்கிறார்கள். இந்நாள் வரையிலான கணக்கில் இந்த எண்ணிக்கை பல இலட்சங்களைத் தொட்டுள்ளன. இந்த எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கின்றது. தற்கொலையால் செத்துப்போன சம்சாரிகளின் மனைவிமார்கள் விதவைகளாக ஆக்கப்பட்டிருக்கிறார்கள்.
அவா்களின் பிள்ளைகள் அனாதைகளாக அலைந்து கொண்டிருக்கிறார்கள்.
நிலத்தை நினைத்தும், மனைவி மக்களை நினைத்தும் செத்துப்போன சம்சாரிகளின் ஆன்மாக்கள் அழுது
புலம்புகின்றன.
“என் தேசத்தின் துயர வாக்குகளை உன்னிடம் அனுப்புகிறேன். கொண்டு
செல்லேன். நில அறைகளுக்குள் அறுவடைக்கான குலவைகளோடு காத்திருப்போரிடம் அது சென்றடையட்டும்..... என ஆற்றிடம் கெஞ்சுகிறது ஓா் ஆன்மா. “எம் மகளுக்கு நான் எதுவுமே செய்யல. என்ன செய்யுறதுன்னே தெரியல.... என் மகளோட நானும் போயிட்டேன். பாவம் என் மகனும் மனைவியும் சுடுகாட்டுலேயே அலையறாங்க....” என இன்னொரு ஆன்மா அழுது
தீா்க்கிறது.
“எங்க ஊா்ல ஆயிரக்கணக்கான விவசாய
விதவைப் பெண்கள் இருக்காங்க. ஆடுமாடுக வித்த பிறகும் தொழுவத்த சுத்தி கைகோர்த்து அழுவுறாங்க....”
எனவும், எங்க உண்ணாவிரதத்தால “எங்க ஊரு தானியக் கதிருகளெல்லாம் ரொம்ப
வாடிப்போச்சுன்னு அப்பத்தா வந்து
சொல்லிட்டுப் போனா...” எனவும் அடுத்தடுத்த ஆன்மாக்கள் புலம்பித் தவிக்கின்றன. இது மட்டுமல்ல, ”எங்க கோவணத்த உருவிக்கிட்டு டஜன் கணக்குல அடி வெளுத்துட்டான். பத்து நாளா எங்களால உட்காரவே முடியல. ரொம்ப வலிக்குது... அடிக்கும்போது 2 பேரு கைய இறுக்கிப் பிடிச்சுக்கிட்டாங்க.
ஒருத்தன் சவுக்கால, இன்னொருவன் லத்தியால....”
கடனைத் திருப்பிக்கட்ட முடியாமல் வலுக்கட்டாயமாகச் சிறையில் தள்ளப்பட் சம்சாரிகள் மீது நிகழ்ந்த வன்முறைகள் ஆன்மாக்களின் குரல்வழி வெளிப்படுகின்றன.
ஒப்பாரிகளைப் பாடிக்கொண்டு நாடக நிலத்தில் உலவித் திரியும் ஆன்மாக்கள் ஒவ்வொருவரின் கழுத்திலும் நீண்ட மரக்கட்டைகள் கயிற்றில் கட்டப்பட்டு அதை இழுத்துத் திரிவதைப் போன்ற காட்சியில், நடிகா்களின் உடல்மொழியும் அழுகையால் தேய்ந்து போன குரலும் முடமாக்கப்பட்ட சம்சாரிகளின் வாழ்வியலைக் குறியீடாய் வெளிப்படுத்தின.
கொத்துக் கொத்தாக வேளாண் சம்சாரிகள் தற்கொலை செய்து கொள்வதற்கும், ஊர்ப்புறங்களைவிட்டு - உழவுத்
தொழிலைவிட்டு நகரங்களுக்குப் புலம் பெயா்வதற்கும், ஒருவேளைச் சோற்றுக்குக்கூட வழியில்லாமல் வெறும் உதிரி மனிதர்களாக மாற்றப்படுவதற்கும் என்ன காரணம்
?
1960-களின் இறுதிவாக்கில் இந்தியாவில் புகுத்தப்பட்ட பசுமைப் புரட்சி என்னும் மோசடித் திட்டமானது, பன்னாட்டு உர நிறுவனங்கள், உழவுந்து நிறுவனங்கள், விதை மற்றும் பூச்சி
மருந்து நிறுவனங்களின் வணிகச் சந்தைக்காகவும் இலாப வேட்டைக்காகவும் உலக வங்கியின் திணிப்பின்படி புகுத்தப்பட்டது. மரபார்ந்த வேளாண் முறைகள் பின்னுக்குத் தள்ளப்பட்டு, நவீன வேளாண் முறைகள் புகுத்தப்பட்டன.
நீா் ஆதார அமைப்புகளான ஏரிகள், கண்மாய்கள், குளங்கள், ஆறுகள்
போன்றவற்றைப் பராமரிப்பதைக் கைவிட்டுவிட்டு, ஒவ்வொரு சம்சாரியும் தனித் தனியாகப் புதிய கிணறுகளை வெட்டிக் கொள்வதற்கும் ஆழ்துளைக் கிணறுகளைப் போடுவதற்கும் ஊக்கமளித்தது அரசு. இதன் விளைவு, நிலத்தடி நீா் வெகுவாக உறிஞ்சப்பட்டது. நீா்மட்டம் குறைந்து கிணறுகள் வறண்டன. நிலத்தடி நீரும்
உப்பாகிப்போனது. இது ஒருபுறமிருக்க, பசுமைப் புரட்சி என்னும் நவீன வேளாண் முறைகளால் அதிகளவு உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் ஏராளமாக மண்ணில் கொட்டப்பட்டன. வேதிப்பொருட்கள் அதிகளவு மண்ணில் கலந்து தண்ணீா் வளமும் நஞ்சாக்கப்பட்டது. பல்லுயிர் வகைகளும் அழிக்கப்பட்டன. மண் வளமும் கெட்டுப்போனது.
காலங்காலமாக வேளாண்மைக்குப் பயன்பட்டு வந்த பாரம்பரிய விதைகளைப் புறக்கணித்துவிட்டு, பன்னாட்டு விதை நிறுவனங்களான மாண்சாண்டோ, டொ்மினேட்டா் போன்ற
விதைகளைப் பயன்படுத்தியதன் மூலமும் ஒட்டுமொத்த வேளாண் நிலங்களும் மலட்டுத்தன்மை கொண்டவையாக மாறிப்போயின.
தற்போது மரபணுப் பசுமைப் புரட்சி என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்படும் பி.ட்டி விதைகளாலும் பாரம்பரிய வேளாண்
முறைகளும் பாரம்பரிய விதைகளும் நம்மிடமிருந்து அந்நியப்படுத்தப்படுகின்றன. நவீன வேளாண்மை (விவசாய) முறைகள் என்னும் மோசடி வலைக்குள் இந்திய ஒன்றிய வேளாண் சம்சாரிகள் முடக்கப்பட்டுள்ளனா். இந்த வேளாண்
முறைகளால் விளைச்சலும் இல்லை; வருமானமும் இல்லை; உணவுக்கான சேமிப்பும் இல்லை. கடன்பட்டாவது விளைச்சலைக் கண்டுவிடத் துடிக்கும் சம்சாரிகளுக்கு மேலும்
மேலும் கடன்சுமைகளே கூடின. கடன் தொல்லையிலிருந்தும் சுமையிலிருந்தும் மீளமுடியாமல் தவித்த சம்சாரிகளுக்குத் தெரிந்த ஒரே தீா்வாகத் தற்கொலையை மட்டுமே தோ்ந்தெடுத்துக் கொள்கிறார்கள்.
1990களில் இருந்து ஏகாதிபத்தியங்களால் புகுத்தப்பட்ட உலகமயம் என்னும் சுரண்டல் முறைகளும் – அச்சுரண்டலுக்கு வழிவகுத்துக் கொடுக்கும் தரகு முதலாளித்துவ அரசமைப்பும் அதிகாரமும்தான் இந்த மண்ணின் அடையாளத்தையும் உழவுக் குடிகளின் வாழ்வையும் அழித்துக் கொண்டிருக்கின்றன.
இன்னும் உயிருடன் இருந்து கொண்டிருக்கும் உழவுக் குடிகளின் விளை நிலங்கள் நகர விரிவாக்கத்திற்காகவும், சிறப்புப் பொருளாதாரத் திட்டங்களுக்காகவும், தரகு முதலாளிகளின் சுரண்டல் தொழிற்சாலைகளுக்காகவும், உடைமை வா்க்கத்தினரின் உல்லாச
ஆடம்பர மாளிகைகளுக்காகவும் பறிக்கப்படுகின்றன.
இந்நாட்டு வேளாண்மைத் துறையிலிருந்து வேளாண் குடிகளைப் படிப்படியாக அந்நியப்படுத்தி, இந்நாட்டு உணவு உற்பத்தி நடவடிக்கையை முற்றாக நிறுத்திவிடுவதன் மூலம், இந்நாட்டு மக்கள் தங்கள் உணவுத்
தேவைக்கு ஏகாதிபத்தியங்களிடம் கையேந்தி நிற்க வேண்டிய நிலைக்குத் தள்ளிக் கொண்டிருக்கின்றன
உலகமய நடைமுறைகள். வேறுவகையில் சொல்வதானால் புதிய வகைப்பட்ட அடிமைகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறது புது வன்குடியாதிக்கக் களமாய் உருமாறிப்போன இந்திய ஒன்றிய அதிகாரம்.இந்நிலையில், அழிக்கப்படும் வேளாண்மைத் தொழிலையும் – வேளாண் குடிகளையும் - நஞ்சாக்கப்படும் நிலத்தையும் - தொலைக்கப்படும் விதைகளையும் - பாரம்பரியத்தையும் மீட்டெடுக்க வேண்டும் என்ற குரல் நாடக நிலமெங்கும் ஒலிக்கின்றது.
இந்நாடகத்தில் பங்குபெறும் நடிகா்கள் வெளிப்படுத்தும் முரண்நிலை உடல்மொழி குறிப்பிடத்தக்கது. நாடகத்தில் வரும் ஊனமில்லாத நடிகா்கள் முடமாக்கப்பட்டவா்களைப்போல உடலால் பேசுகின்றர். ஆனால், உடலால் ஊனப்பட்ட நடிகரும் பார்வை இழந்த
நடிகரும் முடமாக்கப்பட்ட வேளாண் சம்சாரிகளை உயிர்த்தெழச் செய்கின்றனா். அவா்களின் உடல்மொழியும் குரல்மொழியும் நாடக நிலத்திற்கு ஆற்றலைப் பாய்ச்சிக் கொண்டே இருந்தன.
உடம்புக்குள் விதையிருக்கு... கண்ணுக்குள் விதையிருக்கு....
உதிரமெல்லாம் தவசமாம்.... எங்கபொண்ணு
கூந்தலெல்லாம் தானியமாம்.......
தொழஞ்ச விதை...... திருடுபோன விதை.....
எங்க ஞாபக நிலத்தில் திரும்ப முளைக்குதம்மா......
என்ற பாடலைப் பாடிக்கொண்டே நாடக நிலத்தில் நுழையும் உடல் ஊனப்பட்ட நடிகர் உடலெங்கும் சலங்கை கட்டி ஊா்ந்து ஊா்ந்து வந்து சாமியாடியைப்போல உடல்துாக்கிப் பாடும்
காட்சியில் உயிர் நிரம்பி வழிந்தது.
ஊசிபோல வாக்கெடுத்து ஊரெல்லாம் சுத்தி
வாரேன்
கத்திபோல வாக்கெடுத்து காடெல்லாம் கத்தி வந்தேன்
எஞ்சொல்லுக்கு நிழலுண்டு.... எஞ்சொல்லெடுத்துப் போக வாங்க
என அழைக்கும் போதும்,
குதிரைவாலி, கேப்பைத்தினை, தோரை,
தோப்பு, வரகு, பனிவரகு, குள்ளகார், பொழிக்கருப்பு, துாயமல்லி, இறையான், குறுவை, கப்பக்கார், ஐவனம், சாலி, செந்நெல்லு, வெந்நெல்லு, முடந்தை, சீரகச்சம்பா, தங்கச்சம்பா, பொன்னிவாரா, கம்பு,
சோளம்..... போன்ற இந்த மண்ணில் புதையுண்டு போன விதைகளை மீட்டெடுத்துப் பாடும்போதும் புதையுண்டுபோன சம்சாரிகளின் ஆன்மாக்கள் மறுஉயிர்ப்பு கொள்கின்றன.
உடலால் மட்டுமே ஊனப்பட்ட வேளாண் சம்சாரி, மனதால் ஊனப்படுத்தப்பட்ட – நொடித்துப்போன வேளாண் சம்சாரிகளை உசுப்பேற்றி விடுகிறார். அவா்களை நிலமெங்கும் உழுதுவரச் சொல்லி, உழுத நிலத்தில் விதைகளைத் துாவ விதைப் பைகளைத் தருகிறார். வேளாண் சம்சாரிகள் தங்களின் நிலமெங்கும் மீண்டும் உழுகிறார்கள். முடங்கிக் கிடந்த வேளாண் சம்சாரிகளின் மனங்கள் சிறகு விரித்துப் பறக்க,
அவா்களின் கைகளில் சொளகு
இறக்கைகள் மாட்டி விடுகிறார் உடல் ஊனமுற்ற சம்சாரி. செத்துப்போன சம்சாரிகளின் ஆன்மாக்கள் பறவைகளைப்போல நிலமெங்கும் சுற்றித் திரிவதைக் குறியீடாய் உணா்த்தி நின்றது நாடகம்.
இந்தக் காட்சியில் நாடக நிலமெங்கும் தங்கள் உடல்களால் உழுவதைப்போன்ற உடல்மொழி நாடக நிலத்தை வேளாண்
உழவு நிலமாக மாற்றிப்போட்டது.
உழுதுவிட்ட நடிகா்களின் உடம்பிலிருந்து கசிந்த
வியா்வையும் வாசமும் நாடக நிலத்தைச் சூடேற்றிப் போட்டன.
இந்நாடகப் போக்கின் ஓரிடத்தில் பெண்ணுக்கும் நிலத்துக்குமான உறவு குறித்த காட்சி முதன்மையானது. நிலத்திற்கும் பெண்ணுக்கும் இயற்கை சார்ந்த பிணைப்பு உண்டு. உயிர்களை மறுஉற்பத்தி செய்யும் ஆற்றல் நிலத்திற்கும் பெண்ணிற்கும் இருப்பதால், பெண்ணையும் நிலத்தையும் இணைத்தே பார்க்கும் மரபு தொல்பழங்குடிச் சமூக அமைப்பில் காணப்பட்டதுண்டு.
அம்மரபை மீட்டுருவாக்கம் செய்திருக்கிறது இந்நாடகம்.
நாடக நிலத்தில் ஒரு பெண் கால்களை அகல விரித்தபடி படுத்திருக்க, கையில்
மணியுடன் தானிய வகைகளைப் பாடலாகப் பாடி நுழையும் நாளிமணிக்காரன், தன் இடுப்பில் எழும்பு வாத்தியமும் தானியப் பைகளும் கட்டியுள்ளார். தன் இடுப்பில் உள்ள எழும்பு வாத்தியம் உறுவி, படுத்திருக்கும் பெண்ணின் உடலைச் சுற்றி உழுவதைப் போன்று கோடுகள் கிழித்து வந்து, அப்பெண்ணின் பிறப்புறுப்பு வாசலில் தவசங்களிட்டு தானியங்களைக் குவித்துச் செல்கிறார். பெண்ணின் உடலில் இருந்து தானியங்கள் முளைக்கின்றன. நாடக நிலம் பெண்ணாகவும், நடிகா்கள் அந்நிலத்தில் முளைத்த பயிர்களாகவும் வெளிப்பட்ட குறியீடுகள் தாய்வழிச் சமூக அமைப்பை அடையாளப்படுத்துவதாக அமைந்திருக்கின்றன.
சிந்து வெளியில் கண்டெடுக்கப்பட்ட சுடுமணல் சிற்பங்கள் சில, பெண்ணின் வயிற்றிலிருந்து செடி கொடிகள் முளைப்பதைப் போன்ற
உருவத்துடன் காணப்படுகின்றன.
நிலத்திற்கும் பெண்ணிற்குமான உறவு பண்பாட்டு எச்சங்களாக வெளிப்பட்டிருக்கின்றன. அந்தப் பண்பாட்டு எச்சத்தையே நாடகம் மீட்டுருவாக்கம் செய்திருக்கிறது.
மண்ணுக்குள் புதைக்கப்பட்ட வேளாண் சம்சாரிகளின் எழும்புக் கூடுகளையும் புதைந்துபோன விதைகளையும் தோண்டியெடுக்கும்போது ”புத்தா்” உருவச் சிலையொன்றை நடிகா்கள் கண்டடைகிறார்கள். நாடகத்தில் வெளிப்படும் பவுத்த அடையாளம் என்பதும் மிக முதன்மையானது.
வேளாண்மைத்
தொழிலை இழிதொழிலாகவும் – வேளாண் சம்சாரிகளை இழிபிறவினா்களாகவும் பார்ப்பனியம் பார்த்து வந்த சூழலில், வேளாண்மையை மேலான தொழிலாகவும், சம்சாரிகளை மனிதா்களாகவும் பார்த்தது பவுத்தம்.
அதனாலேயே பெரும்பாலான சம்சாரிகள் பவுத்த
அடையாளத்தைத் தழுவினார்கள். தற்கொலையில் மடிந்துபோன பவுத்தா்களையும் – பவுத்த
அடையாளத்தையும் மீட்டுருவாக்கம் செய்யும் வகையில்தான் ”புத்தா்
சிலை” விதையாகக் கண்டறியப்படுகிறது. இதை ஒரு குறியீட்டு வடிவில் வெளிப்படுத்தியிருக்கிறது நாடகம்.
இந்நாடகத்தில் வெளிப்பட்ட நடிகா்களின் உடல், குரல் மொழிகள் துடிப்பான ஆற்றலை வெளிப்படுத்தியிருக்கின்றன.. நடிகா்கள் மட்டுமல்ல, நாடக நிலத்தையே உயிர்கொள்ளச் செய்யும் வகையில் நாடக
ஒளியமைப்பும் இசையும் நாடகத்தோடு ஒத்திசைந்து வெளிப்பட்டன. மஞ்சள் ஒளி விதைகளையும், சாம்பல் ஒளி சுடுகாட்டையும், பச்சை ஒளி விளைநிலத்தையும், சிவப்பு ஒளி மரண ஓலங்களையும் வெளிப்படுத்துவதற்கு உகந்த வகையில் பயன்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது. நாடகத்தின் ஊடே ஒப்பாரியுடன் பயணிக்கும் டிஜிருடு இசை நாடக ஓட்டத்தின் உணா்வோடு ஒன்றச் செய்யும் வகையில் உடன் வந்ததும் குறிப்பிடத்தக்கதாகும்.
நாடகத்தில் பங்கேற்ற கலைஞா்கள் யாவரும் சம்சாரிகளின் ஆன்மாக்களாகவே மாறிப் போனார்கள். தற்கொலை செய்து கொண்ட சம்சாரிகள் மறு உயிர்கொண்டு வந்ததைப் போன்ற உணா்வோட்டத்தைப் பார்வையாளா்களிடம் ஏற்படுத்திவிட்டது இந்நாடகம். நடிகன், நாடகம், நிகழ்விடம் இம்மூன்றுக்குமான உறவில் உயிர்த்தெழும் ஆற்றலைப் பார்வையாளருக்குள்ளும் உட்செலுத்தும் முருகபூபதியின் நாடகங்களுள் ”குற்றம் பற்றிய உடல்”
எனும் இந்நாடகமும் சிறப்பான பங்களிப்பைச் செய்திருக்கிறது. ஊர்ப்புறங்கள் தோறும் இந்நாடகம் நிகழ்த்தப்பட வேண்டும். அதற்கான வாய்ப்புகளை நாம் உருவாக்க வேண்டும். அது நமது கடமையும் கூட.
நன்றி
: அடவி இதழ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக