சனி, 15 செப்டம்பர், 2018

விடுதலைக் கருத்தியலும் எதிர் மரபும்:- கார்த்திகேயன்

"தமிழ் நிலமும் புது வன்குடியாதிக்க எதிர் மரபும்" என்ற மகாராசனின் கட்டுரைத் தொகுப்பு நூலை (தோழமை வெளியீடு) வாசித்தேன். நூல் பல்வேறு தருணங்களில் எழுதப்பட்ட 10 கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுப்பு.

விளிம்புநிலை மக்களின் கலகக் குரல் தாங்கிய விடுதலைக் கருத்தியலை எதிர்மரபாகக் கொண்டு வாசிப்பை நிகழ்த்துகிறது. வன்குடியாதிக்க முதலாளித்துவமும் இந்தியத் தரகு முதலாளித்துவமும் இந்திய தமிழக மக்களை எப்படிச் சுரண்டுகிறது என்பது கட்டுரைகளின் உட்கிடக்கை.

இந்திய தேசியம் என்பது ஒரு பெருங்கதையாடல் என்பதனையும் அது எப்படி மொழிவாரித் தேசியங்களை தேக்கநிலைக்கு உட்படுத்தி மீளவிடாதபடி முடக்குகிறது  என்பதையும் தமிழகச் சூழலில் போதிய சன்றாதாரங்களுடன் விவரிக்கிறது.

இந்திய தேசம் என்ற கருத்தியல் இந்து தேசமாகவும் பார்ப்பனியக் கலாச்சாரமே இந்தியக் கலாச்சாரம் என்ற கோணத்தில் அன்றைய அறிவுஜீவிகளால் முன்வைக்கப்பட்டு தொடர்ந்து பரப்பப்பட்டு அவை புனிதப் படுத்தப்பட்டதையும் தெளிவான சான்றாதாரங்களோடு விளக்க முயல்கிறது. 

பின்னைக் காலனித்துவம் மார்க்சியப் பின்புலத்தில் எளிமையாக விளக்கம் பெற்றுள்ளது. பின்காலனியம் என்ற சொல்லுக்கு மாற்றுச் சொல்லாக புது வன்குடியாதிக்கம் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார்.

முல்லைப் பெரியாரணையின் மீதான நூலாசிரியரின் வரலாற்றியல் பார்வையிலான வாசிப்பில் பொதுவுடைமைக் கட்சிகளில் தரகுமுதலாளித்தனப் பாங்கு உள்ளார்ந்து இயக்கம் பெற்றுள்ளதை சுட்டிக்காட்டுகிறார்.

கட்டுரைகளில் பேசுபொருளாகியுள்ள இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான சிங்கள பெளத்த - இந்திய நாட்டின் கூட்டு வல்லாதிக்க நடத்தைகள்மீது வெளிச்சம் பாய்ச்சுகிற எழுத்துகள் ஊன்றி கவனங்கொள்ளப்பட வேண்டியவைகளாக இருக்கின்றன.

ஆசிரியரின் எளிமையனான மொழிநடை வாசிப்பை இலகுவாக்குகிறது. இந்தியச் சூழலில் பின் காலனியத்தை உள்காலனியம் வெளிக்காலனியம் என ந.முத்துமோகனும் ஹெச்.ஜி. ரசூலும்  வகைப்படுத்துவர். இந்தியச் சமூகத்தின் மீதான இந்த இரட்டைக் காலனிய ஒடுக்குமுறைகளையும் பிரதி பேசுபொருளாக்கியிருந்தாலும்  பின்னைக் காலனியக் கோட்பாட்டின் விரிவான பார்வையில் கட்டுரைகளில் வாசிக்கப்பட்ட பொருண்மைகள் நோக்கப்படவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக