வெள்ளி, 14 செப்டம்பர், 2018

ஏறு தழுவுதல்: பார்ப்பனியத்தை எதிர்க்கும் பண்பைத்தான் உள்ளும் புறமுமாகக் கொண்டிருக்கிறது :- ஆசைத்தம்பி

மதுரையில் புத்தகக் கண்காட்சியில் நுழைந்த பொழுது இராமனாய் எனது சீதையைத் தேடித் போனேன். ஆனால், திரும்பி வரும்பொழுது ஏகப்பட்ட காதலிகளோடு கோபியர் கண்ணனாய்த் திரும்ப வர வேண்டியதாயிற்று. மனதின் சஞ்சலத்தை வெற்றி கொள்ள இயலவில்லை. கருத்துப் பட்டறை பரமன் என்னைக் கண்டவுடன் ," உங்கள் ஏர் மகராசன் புத்தகம் ஏறு தழுவுதல் புத்தகம் இருக்கிறது என்று கையில் கொடுத்தார்.

புத்தகத்தின் அட்டைப் படமே திமிறி வரும் காளையாகத் தமிழ்ப் பண்பாடும், அதை ஏறு தழுவும் தமிழ் குடியும், ஏர் மகாராசனும்தான் தெரிந்தார்கள். அணிந்துரையில் நுழைந்த பொழுது முனைவர் முரளி ," ஒரு குழுவின் பண்பாட்டுச் செயல் பிறரின் வாழ்க்கையைப்  பாதிக்காதபோது , அக்குழுவின் பண்பாட்டுத் தளத்தில் புகுந்து அடக்குவது கொடுமையான மேலாதிக்கமாகும் " என, இந்தப் புத்தகத்தின் நோக்கத்தை ஒரு வரியில் கூறி ஏர் மகாராசனிடம் நம்மை ஒப்படைத்தார் .

மனிதனின் முதல் உணர்வு பசி. முதல் தேடல் உணவுக்கானது . முதல் உற்பத்தி விவசாயம் . முதல் செல்வம் மாடு . முதல் பண்பாடு உழவர் பண்பாடு  எனப் பெருமை பொங்க உழவர் மகன் ஏர் மகாராசன் பல்வேறு ஆதாரங்களுடன் எடுத்துரைக்கும்போது பிரமிப்புடன் அவர் கையைப் பிடித்துக் கொண்டு நூலினுள் நுழைந்தேன் .

வரலாறு ஓரளவு அறிந்தவன் நான் . நான் அறியாதது இன்னும் நிறைய உள்ளது என்பதை எடுத்துரைத்தது இந்தப் புத்தகம் .

வேட்டையாடுதலால் கிடைத்த அதிகளவிலான விலங்குகள் உபரியாய் இருந்த சூழ்நிலையில், விலங்குகளைப் பழக்கி அவன் எடுத்த முயற்சிகள்தான் கால்நடை வளர்ப்பு . முதலில் அவன் யானை, மான்களை வளர்ப்பு விலங்குகளாக எடுத்த முயற்சிகளைச் சங்க காலப் பாடல்களில் இருந்து எடுத்துக் காட்டினார் .

இனக் குழுக்களின் அடையாளமாகக் குறிஞ்சி, முல்லை , நெய்தல் , பாலை மக்கள் பல்வேறு பெயர்களால் அழைக்கப்பட்ட போது , மருத நிலத்தின் வேளாண் மக்கள் மட்டும்தான் உழவர், உழத்தி என்னும் பொதுப் பெயர்களில் அழைக்கப்பட்டதைச் சுட்டிக் காட்டினார் .

ஏர் பூட்டி உழுவதே பாவம் என்றார்கள் பார்ப்பனர்கள். பார்ப்பனர்கள் உழவுத் தொழில் செய்தல் பாவம் என்றது மனு சாஸ்திரம் . பசுவை அடையாளமாகக் காண்பார்கள் அவர்கள் . ஆனால் நாமோ காளை மாடுகளைத்தான் பண்பாட்டு அடையாளமாகக் காண்கிறோம் என்கிறார் அவர் . தமிழ் நாட்டு மரபும்  பார்ப்பனியத்தை எதிர்க்கும் , மறுக்கும் பண்பைத்தான்  உள்ளும் புறமும்  கொண்டிருந்தது என்பதை  அழுத்தந் திருத்தமாகப்  பதிவு  செய்திருக்கிறார்.

அறுவடைக் காலம் வரையில் ஓய்விலிருக்கும் காளைகள் தினவுடன் துள்ளலுடன் மிடுக்குடன்தான் இருக்கும் . அந்தத் தினவு வெளிப்பாடுகளை மிக அழகாக விவரித்துள்ள இந்த உழவுப் பேராசிரியர்  அந்தத் தினவையும் துள்ளல்களையும் மனிதர்களின் ஏறு தழுவல்கள் நிறைவு செய்கின்றன என்கிறார் . இதை அவர் மொழியிலேயே கேளுங்களேன்.

" மனிதர்களும் மாடுகளும் மாறி மாறி உழைக்கிறார்கள் .உழைத்துக் கொண்டே இருக்கிறார்கள் . அவர்கள் உழைப்பினால் உடலும் உள்ளமும் தேய்ந்து போகின்றன . சோர்ந்து போகின்றன . இந்தத் தேய்வையும் சோர்வையும் போக்கிக் கொள்ள மனிதர்களுக்கும் மாடுகளுக்கும் ஓய்வு தேவைப்பட்டது . அந்த ஓய்வு என்பது உணவோ உறக்கமோ அல்ல" . உள்ளம் மகிழும்படி , உற்சாகம் ஏற்படும்படியான பொழுது போக்குகள் . அந்தப் பொழுது போக்குகள்தான் மனிதக் காளைகளுக்கும் மிருகக் காளைகளுக்குமான ஏறு தழுவுதல் .

இந்த ஏறு தழுவுதல் என்பது சிந்து சமவெளி நாகரிகத்தில் இருந்திருக்கிறது என்பது அங்கு கண்டெடுக்கப்பட்டுள்ள கல் முத்திரையிலிருந்து தெரிகிறது . கி.மு. 1500 ஆம் காலத்தைச் சேர்ந்த பல்வேறு தடயங்கள் மூலம் ஏறு தழுவுதல்  3000-3500  ஆண்டுக்கான பண்பாடு என்கிறார்.

மாடுகளுக்கும் மனிதருக்கும் இடையே இருக்கும் அன்பை ,பரிவை,  பாசத்தை மாட்டுப்பொங்கலில் காணலாம் என்று அதை விவரிக்கும் நிகழ்ச்சிகள் மனம் நெகிழ வைப்பன.

இறுதியாக நிலவுடைமைச் சமூகத்தில் உழவர் மக்களின் நிலங்கள் பார்ப்பனர்களால் பறிக்கப்பட்ட அவலத்தையும், அவர்களையும் அவர்களின் பண்பாட்டு அடையாளங்களையும் இழிவு செய்யும் போக்கையும் சுட்டிக் காட்டுகிறார் .

இப்போதெல்லாம் கோயிலைப் பார்க்கும்போது அதன் அஸ்திவாரத்தில் புதையுண்ட உழவர் மக்களின் நிலங்களும் பண்பாடும்தான் தெரிகிறது.

மொத்தத்தில் வரலாற்றின் எந்தப் பக்கத்தைத் திருப்பினாலும் பார்ப்பனியத்தின் வஞ்சகமும் துரோகமும் தன்வசம் ஆதிக்கப்படுத்துதலுமே முன் நிற்கின்றன . அவற்றை எதிர்த்து நிற்கும் வீரனாகத் தமிழர் பண்பாடு மட்டும்தான் நிற்கிறது .

இறுதியாக, முரளியின் அணிந்துரையே இந்தப் புத்தகத்துக்கு முடிவுரையாக ஆகிறது . "ஒரு குழுவின் பண்பாட்டுச் செயல் பிறரின் வாழ்க்கையைப் பாதிக்காத போது , அக்குழுவின் பண்பாட்டுத் தளத்தில் புகுந்து அடக்குவது கொடுமையான மேலாதிக்கமாகும்” . இதை எல்லோரும் எப்போதும் நினைவில் வைத்துக் கொள்வது நலம்.

 உழவருக்காகவும் விவசாயத்திற்காகவும் குரல்கள் அதிகம் ஒலிக்கின்ற இந்த சமயத்தில், தமிழ்ப் பண்பாட்டுக்காகக் குரல் கொடுப்போர் அதை முற்றிலும் அறிந்து குரல் கொடுக்க இந்தப் புத்தகம் உதவும் . ஏனெனில், ஏதும் அறியாமல் ஒன்றுக்குக் குரல் கொடுத்தால்  அது நிலைக்காது என்பதை வரலாறு காட்டி இருக்கிறது .

வாழ்த்துக்கள் மகாராசன்.

திரு ஆசைத்தம்பி அய்யாவின் மதிப்புரை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக