திங்கள், 4 மார்ச், 2019

குலசாமி வழிபாட்டு மரபும் வரலாற்று வழக்காறுகளும்: புரிதலும் போதாமைகளும் :- மகாராசன்



குலசாமி வழிபாடுகள் நிறுவனப்படுத்தப்பட்ட ஆரியப் பெருந்தெய்வ வழிபாட்டு மரபுகளைப் போன்றதல்ல. ஆரியப் பெருந்தெய்வ வழிபாட்டு மரபுகளில் இருந்து வேறுபட்ட எதிர்மரபையும் மாற்று மரபையும் கொண்டிருக்கக் கூடியவை.
குலசாமி வழிபாட்டு மரபுகளைத் தெய்வ வழிபாடு என்பதாக மட்டும் சுருக்கிப் பார்க்கப்படுகிறது. குலசாமிகள் என்பவைதான் இந்த உலகத்தையும் உயிரினங்களையும் படைத்ததாகக் குலசாமி வழிபாட்டினர் கருதுவதில்லை. முன்னொரு காலத்தில் தம் குழுவுக்கோ கூட்டத்திற்கோ குலத்திற்கோ அல்லது இந்தச் சமூகத்திற்கோ ஏதாவது ஒரு வகையில் சமூகப் பங்களிப்பை வழங்கியவர்களாகவே கருதப்படுகிறார்கள்.
அவர்களது சமூகப் பங்களிப்பை மதித்து நினைவஞ்சலி செலுத்தும் எளிய வழிபாட்டுச் சடங்குதான் குலசாமி வழிபாட்டு மரபில் பொதிந்து கிடக்கிறது. சமூகப் பங்களிப்பு செய்த முன்னோர், மூத்தோர், நீத்தார் என்போரைச் சிறப்பிக்கும் வகையில் நிகழ்த்தப்பட்ட நடுகல் வழிபாட்டு மரபின்  நீட்சிதான் குல சாமி வழிபாட்டு மரபும்.
குலசாமி வழிபாட்டு மரபில் பல குலங்களின் கூட்டிணைவு உள்ளடங்கி இருக்கிறது என்பதையும் காண முடியும். குலசாமி வழிபாடு தெய்வ வழிபாடு என்பதைக் காட்டிலும், பூர்வீக நிலத்தோடு பூர்வீக மக்களுக்கிருக்கும் உயிர்ப்பான உறவைப் புதுப்பித்துக் கொள்ளும் ஒரு வகைச் சடங்கு முறை அதற்குள் இருக்கிறது. இன்னும் குறிப்பாக உற்று நோக்கினால், ஒவ்வொரு குலசாமி வழிபாட்டு வழக்காற்றுக்குள்ளும் அந்தந்த வட்டாரத்தின் - குலத்தின் வரலாறும் சடங்கு மரபாய் மாறிக் கிடக்கிறது. இந்த வரலாற்றையும் வழக்காறுகளையும் போகிற போக்கில் உதறித் தள்ளிவிட முடியாது.
குலசாமி வழிபாட்டு மரபைக் கொச்சைப்பொருள் முதல்வாதக் கண்ணோட்டத்தில் அணுகுவதை விடுத்து, வரலாற்றுப் பொருள் முதல்வாத அடிப்படையில் பண்பாட்டு நடத்தைகளை ஆராய்வது தான் இப்போதைய தேவை.  குலசாமி வழிபாட்டு மரபு ஒன்றும் பிற்போக்கானது - தீங்கானது என்ற பொத்தாம் பொதுவான முடிவுக்கு வருதல் என்பதும் ஆரியத்திற்குத் துணை செய்யும் கருதுகோளே ஆகும். ஏனெனில், குலசாமி வழிபாட்டு மரபை ஆரியமும் இழிவானது என்றே முன்மொழிகிறது. பகுத்தறிவுவாதம் எனும் பேரில் குலசாமி வழிபாட்டு மரபுகளைக் கொச்சைப்படுத்துவதும் ஆரியத்தை வலுப்படுத்தவே துணை செய்யும். குலசாமி வழிபாட்டு மரபு போன்ற மக்களின் வழக்காற்று மரபுகளைப் பிற்போக்கானது என ஒதுக்கி வைத்ததன் - வைப்பதன் விளைவாகவே, அவற்றையெல்லாம் ஆரிய மரபு தமதாக்கிக் கொண்டிருக்கிறது என்பதும் கவனிக்க வேண்டிய ஒன்றாகும்.

மக்கள் வழக்காறுகள் உழைப்பிலிருந்தும் உற்பத்தியிலிருந்தும் உருவாகி நிற்பவை. குலசாமி வழிபாட்டு மரபில் இருக்கும் மக்கள் வழக்காற்றுக்குள் இருக்கும் வரலாற்றையும் சமூகப் பண்பாட்டியலையும் வரலாற்றுப் பொருள் முதல்வாதக் கண்ணோட்டத்தில் அணுகவேண்டிய தேவை இப்போது அதிகரித்திருக்கிறது.
பண்பாட்டு எடுத்துரைப்பில் இன்னும் போதாமைகள் இருக்கின்றன. பண்பாட்டுப் புரிதலிலும் அத்தகையப் போதாமைகளே நீடிக்கின்றன. மக்களையும் சமூகத்தையும் இன்னும் படிப்பதின் மூலமே இதைச் சரி செய்திட முடியும்.
ஏர் மகாராசன்
ஓவியம்:
ஓவியர் மருது

2 கருத்துகள்:

  1. அய்யா இதைத் தான் நாங்கள் மறுக்கிறோம்

    பதிலளிநீக்கு
  2. பகுத்தறிவாதம் கொச்சைப்படுத்துகின்றது என்பதற்கு பதிலாக மூடநம்பிக்கையை எதிர்க்கின்றது என்று காண வேண்டும் குலதெய்வ வழிபாட்டில் பலியிடல் என்பதை விட இறைச்சி உணவிகளை வழிபாட்டில் வைக்கலாம் என்றும் எளிய சடங்குகள் மூலம் போற்றுதல் நினைவு கூர்தல் ஓன்றாக விழா நடத்துதல் என கடவுள் நம்பிக்கையுடைய பார்ப்பனர் அல்லாதவர்கள் ஜனநாயகப்படுத்தவேண்டும் . ஆரியமய சடங்குகளை அனுமதிக்காத உணர்வும் வேண்டும் சாதிய கண்ணோட்டத்துடன் தொழிலாளிகளை சமூகஊழியம் செய்ய அழைப்பதும் நிகழ்வுகளில் இடமளிக்ககூடாது

    பதிலளிநீக்கு