சனி, 9 மார்ச், 2019

எழுத்தின் மீதான வருணப் பேதங்களும் தமிழின் தனித்த மரபும்: மகாராசன்


மனிதர்களைப் பாலினப் பாகுபாடுகளாக வகைப்படுத்தியதைப்போல எழுத்துகளையும் பாலினப் பாகுபாடு செய்துள்ள பாட்டியல் நூல்கள், வருணப் பொருத்தம் எனும் பெயரில் தமிழ் எழுத்துகளை நான்கு வருணங்களாகவும் பாகுபாடு செய்துள்ளன.

தொழில் நிமித்தமாக நிலவியிருந்த சமூக வேறுபாடுகளின் மீது பிறப்பின் அடிப்படையிலான பாகுபாடுகளாகக் கற்பிதம் செய்து,  பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் எனும் நால் வருணங்களாக முன்மொழிந்த வருணக் கற்பிதங்கள்போல எழுத்துகளுக்கும் வருணப் பாகுபாடுகளைக் கற்பித்துள்ளன பாட்டியல் நூல்கள்.

மறையோர், அரசர், வணிகர், சூத்திரர் என எழுத்துகளை நால் வருணங்களாக / சாதிகளாக அவை வரிசைப்படுத்திக் கொள்கின்றன.

ஒழியா உயிரனைத்தும் ஒற்று முதலாறும்
அழியா மறையோர்க்காம் என்பர்;- மொழியும்
அடைவே ஓராறும் அரசர்க்காம் என்பர்
படையாத சாதிகளின் பண்பு

என்கிறது வெண்பாப் பாட்டியல்.

இதனையே, அந்தண சாதிக்குரிய எழுத்துகள்; அரச சாதிக்குரிய எழுத்துகள் என வருணப்படுத்துகிறது பன்னிரு பாட்டியல்.

நறுமலர்த் திசைமுகன் ஈசன் நாரணன்
அறுமுகன் படைத்தன அந்தணர் சாதி;
இந்திரன் வெங்கதிர் சந்திரன் படைத்தன
துன்னரும் சிறப்பின் மன்னவர் சாதி

என்கிறது அது. அதாவது, அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ ஆகிய உயிர் பன்னிரண்டு எழுத்துகளும், ஒற்று முதல் ஆறும் என்கிற க், ங், ச், ஞ், ட், ண் ஆகிய மெய் எழுத்துகளும் மறையோர் / அந்தணர் / பார்ப்பனர் சாதி எழுத்துகளாகவும், கூறப்படுகிறது. மெய்யெழுத்துகளான த், ந், ப், ம், ய், ர் ஆகியன அரசர் /  மன்னர் / சத்திரியர் எழுத்துகளாகவும் கூறப்படுகிறது.

வணிக சாதிக்குரிய எழுத்துகள், சூத்திர சாதிக்குரிய எழுத்துகள் எனப் பாகுபடுத்தும்போது,

பண்பார் வணிகர்க்காம் பாங்கில் லவறனக்கள்
மண்பாவும் சூத்திரர்க்காம் மற்றையவை- நண்பால்
அரன் அரிசேய் மால் கதிர் கூற்றாய் மழை பொன் மெய்க்கும்
பிரமன் படைப்புயிர்க்குப் பேசு

என்கிறது வெண்பாப் பாட்டியல்.

இதையே, பன்னிரு பாட்டியல் கூறும்போது

திருமிகு நிதிக்கோன் வருணன் படைத்தன
அணி மிகு சிறப்பின் வணிகர் சாதி;
கூற்றுவன் படைத்தன கூற்றன இரண்டும்
ஏத்திய மரபின் சூத்திர சாதி

என்கிறது. அதாவது, ல், வ், ற், ன் என்னும் நான்கு மெய்யும் வணிகர் /  வைசிய சாதி எழுத்துகளாகவும், ழ், ள் என்னும் இரண்டும் சூத்திர சாதி எழுத்துகளாகவும் பாகுபடுத்தப்படுகிறது. இதையே,

பன்னீர் உயிரும் முன்னொற்று ஆறும்
மன்னிய அந்தணர் வருணமாகும்;
தநபமயர எனச் சாற்றிய ஆறும்
மன மகிழ் அரசர் வருணமாகும்;
லவறன என்னும் நான்கு புள்ளியும்
இவர்தரு வணிகர்க்கு எய்தும் என்ப;
ழ ள எனும் இரண்டும் வளமையர்க்காகும்

என்கிறது இலக்கண விளக்கப் பாட்டியல் நூல்.
தமிழ் எழுத்துகள் குறித்தும், அவற்றின் ஒலி மற்றும் வரிவடிவங்கள் குறித்தும், அவற்றின் வகைப்பாடுகள் குறித்தும் தமிழ் இலக்கண இலக்கிய மரபில் உள்ள விவரிப்புகள் காரண காரிய இயல்புகளைக் கொண்டிருப்பவை; மொழியின் இயங்கியல் தன்மையின் இயல்போடு பொருந்திப் போகின்றவை. தமிழ் எழுத்துகளின் ஒலி வடிவங்கள், வரிவடிவங்கள், அவற்றுக்கான பெயர்கள், வேறு வேறான காலங்களில் வேறு வேறான நிலைகளை அடைந்த எழுத்துகளின் பரிணாம வளர்ச்சிகள், தமிழ் எழுத்துகளைக் குறிக்கும் பல்வேறு பெயர்கள், எழுத்து வகைகள், தமிழ் நெடுங்கணக்கில் எழுத்துகளின் பெயர், வகை, தொகை, விரிகள் எனச் சொல்லப்படுகின்றவை அனைத்தும் மொழியியல் எனும் அறிவுப் புலமாய் வடிவமைந்திருப்பவை; பிற்காலத்திய மொழியியல் கோட்பாடுகளுக்கெல்லாம் அடித்தளமாக அமைந்திருப்பவை.

மேலும், தமிழர் வாழ்வியல், தமிழர் பரவிய நிலத்தியல், வரலாற்றியல், தொல்லியல், பண்பாட்டியலோடு ஓர் உயிர்ப்பான உறவையும் அடையாளத்தையும் கொண்டிருப்பதாகவே தமிழ் எழுத்து மரபு இயங்கி வந்திருக்கிறது. இத்தகைய எழுத்து மரபின் வாயிலாகவே, தமிழரின் அறிவு மரபு காலந்தோறும் தம்மைப் புதுப்பித்துக் கொண்டே வந்திருக்கிறது. தமிழரின் எழுத்து மரபு பற்றிய விவரிப்புகளுக்குள் தமிழின் தனித்த பண்பாட்டுத் தன்மை பொதிந்திருப்பதைக் காண முடியும். அதாவது, தமிழ் மக்களின் பேச்சு வழக்காறுகளாலும் எழுத்து வழக்காறுகளாலும்தான் தமிழ் செழிப்படைந்து வந்திருக்கிறது.

தமிழர்கள் பல்வேறு இனக் குழுக்களாகவும், குலங்களாகவும், தொழில் மரபினராகவும், சமயத்தவர்களாகவும், சாதியினராகவும், வட்டாரத்தினராகவும் இருப்பினும், அத்தகைய அடையாளங்களோ சார்புத் தன்மையையோ தமிழின் எழுத்து மரபில் இல்லை. அதிகார மய்யங்களால் தமிழ் அரவணைக்கப்பட்டிருந்தாலும், ஒதுக்கல்களுக்கு உள்ளாக்கப்பட்டிருந்தாலும், அதிகாரச் சார்பின்றியும் துணையின்றியும்தான் தமிழால் தனித்து இயங்க முடிந்திருக்கிறது. வலியோருக்கு மட்டுமின்றி எளியோருக்கும் தமிழ் எழுத்துகள் ஓர் அறிவாயுதமாய்ப் பயன்பட்டு வந்திருக்கின்றன. அவ்வகையில், தமிழ் எழுத்து மரபிற்கு அரசதிகாரம் /  சமயம் / சாதி / வர்க்கம் /  பாலினம் /  வட்டாரம் சார்ந்த எவ்வகைச் சார்புத் தன்மைகளும் கிடையாது எனலாம்.

ஓவியங்கள், குறியீடுகள், ஒலி வடிவங்கள், வரிவடிவங்கள் என்பதன் நீட்சியாகவே எழுத்து என்கிற மரபும் ஒரு மொழியின் இயங்குதலுக்கு அடிப்படை. தமிழி, வட்டெழுத்து என வளர்ச்சி அல்லது மாற்ற நிலைகளை அடைந்து வந்த தமிழ் எழுத்து மரபில், பிற மொழி / சமயம் /  பண்பாடு /  அதிகார நுழைவுகளாலும் படையெடுப்புகளாலும் ஆட்சி மாற்றங்களாலும் கிரந்தம் என்கிற எழுத்துமுறை திரிபுகளை ஏற்படுத்தியது. கிரந்தம் செல்வாக்கு பெற்ற அதே இடைக்காலத்தில்தான், தமிழ் எழுத்துகள் குறித்த விவரிப்புகளில் திரிபுநிலைகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன.

தமிழ் எழுத்துகளின் ஒலி, வரிவடிவங்களின் காரண காரிய இயல்புகளுக்கு மாறாகவும் புறம்பாகவும் கற்பிதங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. தமிழின் எழுத்து மரபுக்கு முரணான கற்பிதங்கள் பாட்டியல் உள்ளிட்ட பிற்காலத்திய இலக்கணங்கள் வாயிலாகப் புகுத்தப்பட்டிருக்கின்றன.

குறிப்பாக, இடைக்காலத்தில் அரசதிகாரத் துணையுடன் செல்வாக்கு செலுத்திய சாதி / சமய / பாலின / வர்க்கப் பாகுபாடுகளையும் ஏற்றத் தாழ்வுகளையும் எழுத்துகளின் வழியாகப் பரவலாக்கம் செய்வதோடு மட்டுமல்லாமல், தமிழ் எழுத்துகளுக்கும் அத்தகையச் சாதி /  சமய / பாலின /  வர்க்கச் சாயல்களையும் அடையாளங்களையும் புகுத்த முனைந்திருப்பதின் வெளிப்பாடே பாட்டியல் உள்ளிட்ட இடைக்கால இலக்கண நூல்களின் உருவாக்கமாகும்.

அதாவது, தனித்ததோர் எழுத்து மரபாய்த் தமிழ் இருப்பதிலிருந்து, அதற்குச் சார்புத் தன்மையை உருவாக்குவதே அந்நூல்களின் பெருநோக்கமாய் இருந்திருக்கிறது. ஆயினும், தமிழ் எழுத்துகள் பற்றிய அத்தகையக் கற்பிதங்கள் தமிழ் எழுத்து மரபில் சிதைவுகளை ஏற்படுத்த முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மகாராசன் எழுதிய
தமிழர் எழுத்துப் பண்பாட்டு மரபு
நூலில் இருந்து...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக