“நான்கு கால்களில் நடந்து கொண்டிருந்த விலங்கு மனிதன், பரிணாமத்தில் பின்னாலிருக்கும் இரண்டு கால்களில் நடக்க ஆரம்பிக்கும் போது, நடக்கப் பயன்படாத முன் இரண்டு கால்களும் கையாகி சைகை எனும் புதுச் செயலைச் செய்யப் பயன்படுகிறது.
தொடர் பரிணாமம் நேரான முதுகிலிருந்து மூச்சுக் குழல் வழி ஒலியை எழுப்ப உதவுகிறது. நாளடைவில் அந்த ஒலிக்கு ஒலிவடிவம் கிடைத்து பேச்சாகியது. அந்தப் பேச்சு ஒரு நாள் சித்திரத்தையும் சித்திரம் ஒரு நாள் எழுத்தாகவும் ஆனது.”
இது தான் மனிதன் கண்டடைந்த முதல் மொழியின் எழுத்து வரலாறு. இதைதான் இந்நூலின் ஆசிரியர் மகாராசன், "சமூகத்தில் மொழியின் தோற்றம் என்பது தற்செயல் நிகழ்வல்ல” என்று தொடங்குகிறார்.
உழைப்பும் பேச்சும்தான் மனிதப் புலன்களின் வளர்ச்சிக்கும், மூளையின் படிப்படியான வளர்ச்சிக்கும் காரணமாக அமைந்திருக்கின்றன என்கிறார் மகாராசன். இதில் எனக்கு முழு உடன்பாடு. கணிணி மயமான இன்றைய காலத்திலும் இவ்விரு செயல்களே அடுத்தடுத்த பரிணாமங்களைத் தீர்மானிக்கின்றன.
திரு.ஜமாலன் அவர்களின் கூற்றுடன் ஒன்றுபட்டு, பேச்சொலிகளை முறைப்படுத்தும்போது மொழி பிறக்கிறது என்கிறார்.
ஆதி நிலைமைகளில், ஒவ்வொரு சமூகமும், அது எவ்வளவு சிறியதாக இருந்தாலும், தனக்கென ஒரு சொந்த மொழியையோ அல்லது குல வழக்கையோ கொண்டிருக்கிறது. இவ்வாறு, மனம் வெளிப்படுத்தும் எண்ணங்கள் அனைத்தையும் பேசிவந்த மனித இனம், அவற்றில் சிலவற்றை நிதானமாகச் சிந்தித்துப் பேசும்போது, அங்கு எழுத்து எனும் செயற்பாட்டிற்கான தேவை பிறக்கிறது.
முதலில் சித்திரம், பின் குறியீடு அதன் தொடர்ச்சியாக எழுத்து பிறந்துள்ளது. இதனை ஆசிரியர் மிக விரிவாக ஆராய்ந்து இந்நூலைப் படைத்திருக்கிறார்.
மகாராசன் தன் கடும் உழைப்பை இந்த நூலிற்குக் கொடுத்திருக்கிறார் என்பதற்குச் சான்று, அவர் இந்நூலின் இறுதியில் ஆறு பக்கங்களில் பட்டியலிட்டிருக்கும் பார்வை நூல்களே சாட்சி. மொத்தம் 56 நூல்களை வாசித்துள்ளார். கூடுதலாக 16 வலைத்தளக் கட்டுரைகள் மற்றும் நண்பர்கள் பட்டியல்.
புத்தகத்தின் நடுப்பகுதியாக, கிட்டத்தட்ட 40 பக்கங்களுக்கும் மேல், தமிழின் ஒட்டுமொத்த எழுத்து வரலாற்றையும் ஆய்வுக்குட்படுத்துகிறார். இந்தப்பகுதி என் போன்ற நபர்களுக்குப் புதிய தளம். மொழியியலில் போதிய அனுபவம் கொண்டோர் விரிவாக இது குறித்து விவாதித்தால் நலம்.
இறுதிப்பகுதியில் பேசியிருக்கும் பிள்ளையார் அரசியல் ஒரு புது அறிமுகம். சில சமயங்களில் மகாராசன் அந்தப்பகுதியைக் கையாண்டுள்ள விதம் கம்பி மேல் நடப்பதற்கு ஒப்பாக உள்ளது. மிகச்சரியாக ஆ.சிவசுப்பிரமணியன் அவர்களின் கருத்துகளைக் கையாண்டுள்ளார். கடைசியாகக் கொடுக்கப்பட்டுள்ள எழுத்துகளின் அட்டவணை மற்றும் குறியீடுகள் எல்லாம் ஒரு ஒப்புமை நோக்கிலான ஆய்வுக்கான தொடக்கமாக கருதலாம். ஏனெனில், மொழியியல், தொல்லியல், மானிடவியல் எனத் தனித்தனியாக உள்ள ஆய்வுகளையும் ஆவணங்களையும் ஒப்பீடு செய்து ஒரு comparative study ஐ மகாராசன் செய்துள்ளார்.
இதில் சிறப்பு என்னவென்றால், என்போன்ற துறைசாரா நபர்களுக்கும் புரியும் வண்ணம் நூல் அமைந்ததே. ஆய்வாளர்களும் ஆய்வு மாணவர்களும் வாசிப்புக்குட்படுத்தி இதன் சரிதவறுகளை விவாதித்தால் சிறப்பாக இருக்கும்.
என்னளவில், இந்நூல் தமிழ் மொழியியல் ஆய்வுலகிற்கு ஓர் நல்வரவு.
தமிழர் எழுத்துப் பண்பாட்டு மரபு-
மகாராசன்
ஆதிப்பதிப்பகம்
விலை-ரூ.120
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக