ஞாயிறு, 8 மார்ச், 2020

அப்பாவைக் குறித்து அம்மா வரைந்த சித்திரம்: மகாராசன்.

ஒரு தகப்பன் தருகிற எந்தக் கதகதப்பையும் அனுபவிக்காமலேயே, என் தகப்பனிடமிருந்து வெகுதூரம் விலகியே இருந்தது எனது குழந்தைப் பருவம். ஒரு தகப்பனைக் குறித்த எதிர்மறை எண்ணங்கள் அப்போது வெகுவாகக் கூடியிருந்தது. அம்மாவின் ஒற்றை அரவணைப்போடு இருந்திருந்தாலும், பெரும்பாலும் தனித்தலையும் சிறுவனாகவே அந்தக் காலம் இருந்தது. யாருமற்றுத் தனித்து விடப்பட்டதைப் போன்ற உணர்வுகள் அவ்வப்போது என்னை அழச் செய்துவிடும்.

வீட்டுக்கும் காட்டுக்கும் தனியாக அலைந்து திரியும் போதெல்லாம் என் அப்பாவைப் பற்றிய கோபங்கள் அதிகரித்துக் கொண்டே இருந்தன. அப்பாவை எந்த வகையிலாவது பழிவாங்க வேண்டும் என்கிற உணர்வு கனன்று கொண்டே இருந்தது அந்த வயதுகளில்.

பல பிள்ளைகள் பிறந்திருந்தாலும், நான் பிறந்ததற்குப் பிறகு, ஒரு கணவராய் என் அம்மாவோடு துணையிருக்காமல் போனது எனக்குள் ஒரு பாதிப்பை ஏற்படுத்தி இருந்தது. ஆனாலும், என் அப்பாவைக் குறித்து எந்த வருத்தங்களையும் ஒருநாளும் என்னிடம் பேசியதில்லை என் அம்மா.

அம்மாவின் ஆகப் பெரும்பகுதி நினைப்பெல்லாம் கொஞ்சம் நிலமும், அதில் வெள்ளாமைப் பாடுகளும், எம்மை ஆளாக்குவதுமாகத்தான் இருந்தது. பெற்ற தகப்பனின் அரவணைப்புக்கு ஏங்கியிருந்த என்னைக் குறித்து, எதுவும் வெளியில் சொல்லாமலேயே பல நாட்கள் அழுது கொண்டே இருப்பார் அம்மா. 'ஏம்மா அழுகிற?' என்கிறபோதெல்லாம், 'ஒன்னும் இல்லப்பா' என்றபடியே கண்களைத் துடைத்துக் கொள்வார்.

வயக்காட்டுக் குடிசையிலேயே சின்னம்மாவோடு குடித்தனம் நடத்திய அப்பாவோடு எந்தச் சண்டையும் சச்சரவும் போட்டதில்லை அம்மா. அப்பாவோடும் சின்னம்மாவோடும் அம்மா பேசிக்கொள்ளவே மாட்டார். எதுவாக இருந்தாலும் சாடை மாடையாகவே மூவரும் பேசிக்கொள்வார்கள். ஆனாலும், அம்மாவும் அப்பாவும் சின்னம்மாவும் ஒரே வயக்காட்டில் ஒன்றாகத்தான் சம்சாரி வேலைகளைப் பார்த்து வந்தார்கள்.

மூவரையும் ஒருசேரப் பார்க்கும்போதெல்லாம் கோபம் கோபமாய் வரும். ஒருநாள், வெள்ளாமை வேலை வெட்டிகளைக் குறித்து அவர்கள் சாடை மாடையாய்ப் பேசிக்கொண்டிருந்தபோது, வெறி கொண்டவனாய் எழுந்து போய், மேய்ந்து கொண்டிருந்த உழவு மாடுகளைச் சாட்டைக் குச்சியால் மாற்றி மாற்றி அடித்துவிட்டு, அவற்றின் தலைகளை நீவி விட்டுக் கொண்டிருந்தேன். விறுவிறுவென்று என்னிடம் வந்தார் அப்பா. 'வாயில்லா சீவனப் போட்டு ஏண்டா அடிக்கிற? ஒனக்கு யாரு மேல கோவமா இருக்கோ அவனப் போட்டு அடி' என்று, கீழே கிடந்த தார்க்குச்சியை எடுத்துக் கையில் திணித்துவிட்டு அங்கேயே நின்றிருந்தார். அழுகையும் கோபமுமாகத் தார்க்குச்சியை வீசியெறிந்துவிட்டு விருட்டென அங்கிருந்து வந்துவிட்டேன்.

அன்றிலிருந்து எனக்கும் அப்பாவுக்குமான இடைவெளி அதிகரித்துக் கொண்டே இருந்தது என்றுதான் வெகுநாட்களாக நினைத்திருந்தேன். ஒரு நாள், நான் வெறுத்து ஒதுக்கும் முதல் ஆளாகவே இருந்த அப்பாவைக் குறித்த பேச்சை எடுத்தார் அம்மா.

'ஏண்டா தம்பி, ஙொப்பன எதிரியாவே பாக்குற? பாவம்டா அந்தாளு. ஒன்னயவே நெனச்சு உக்கிப்போய்க் கிடக்கான். நீ பள்ளிக்கோடத்துக்குப் போனதுக்குப் பின்னால நெதமும் வீட்டுக்கு வந்து, தம்பி போய்ட்டானா? சாப்டுப் போனானான்னு கேட்டுட்டுப் போறான் மனுசன். காசுகீசுனு கேட்டான்னா கொடுளான்னு அப்பப்ப காசு பணத்த கொடுத்துட்டுப் போறான். நீ நெனைக்கிற மாதிரி, ஙொப்பன் கெட்டவனில்ல. ஏதோ ஒரு விதி வசத்தால கெட்டுப் போனான் அம்புட்டுத்தேன்' என்று குரல் கம்மியபடி சொல்லி முடித்தார்.

'ஒன்னயவும் என்னயவும் தனியா விட்டுப்புட்டுப் போன அந்த மனுசனப் பத்தியே நெனச்சுக்கிட்டு இருந்தாக்கா, ஒன்னால நிம்மதியாவே இருக்க முடியாது தம்பி. ஙொப்பன் மேல இருந்த கோபத்த மட்டுமே நாளெல்லாம் சுமந்துக்கிட்டு இருந்திருந்தா, ஒன்னயவும் அக்காமார்களயும் வளத்து ஆளாக்கி இருக்க முடியுமா தம்பி?

ஙொப்பன் மேல இருக்குற கோவத்தையெல்லாம் ஒம் படிப்புல காட்டு. ஙொப்பன மாதிரி ஆகாம, வைராக்கியமா படிச்சு பெரிய ஆளா வந்து காட்டு. ஒன்னயப் படிக்க வச்சு, பெரிய ஆளா ஆக்கணும்னுதான் அந்தாளும் காடு கழனின்னு ஒழச்சு சாகுறான். ஒன்னய, இந்தச் சுத்து வட்டத்துலயே எவனும் படிக்காத பெரிய படிப்ப படிக்க வச்சுப் பாக்கணும்னு கங்கணம் கட்டியிருக்கான். என்னிக்கி, படிப்பு வரல, படிக்க மாட்டேன்னு சொல்றியோ, அன்னிக்கே செத்துப்போவான்டா அந்த மனுசன். நீயும் படிக்கலாட்டி, நானும் உசுர வச்சுக்க மாட்டேன் ஆமா. ஒன்னோட படிப்புக்காகத் தானப்பா, வாழ்ந்து முடிச்ச நாங்க ஒழச்சு வேகுறோம். ஒன்னோட கோவமெல்லாம் உண்மயா இருந்தா, நாஞ் சொன்னது பூராவும் உண்மதான். இதப் புரிஞ்சுக்கிறவன்தான்டா எம் புள்ள.

மறுவாட்டியும் சொல்றேன், ஙொப்பன் தப்பு பண்ணிட்டான்தான். ஆனா, தப்பான மனுசன் கெடயாது பாத்துக்கோ' எங்கிட்ட சொல்லனும்னு நெனச்சிருந்த அத்தனயவும் ஒரே பேச்சுல சொல்லி முடிச்சிட்டா அம்மா.

பதின்மப் பருவ வயதில், அப்பாவைக் குறித்து என் மனச் சுவரில் கிறுக்கி வைத்திருந்த அத்தனை அசிங்கங்களையும் அழித்துவிட்டு, என் அப்பாவைப் பற்றிய அழகிய சித்திரம் ஒன்றை வரைந்து விட்டார் அம்மா.

எத்தனை கோப தாபங்கள், ஏமாற்றங்கள், அழுகைகள், இழப்புகள், தவிப்புகள் என அத்தனையும் இருந்தாலும், எதை விதைக்க வேண்டுமோ அதை மட்டுமே என்னிடம் விதைத்திருக்கிறார்.

என்னில் கலந்திருக்கும் அம்மாவைப் போலவே, அப்பாவும் கலந்தே இருக்கிறார் இப்போதும்.

அப்பாவைக் குறித்து அம்மா வரைந்த அழகிய சித்திரத்தைப் போலவே, நானும் அப்பாவைப் பற்றிய நிறைய அழகிய சித்திரங்களை வரைந்து கொண்டு தான் இருக்கிறேன்.

அம்மாவைப் போலவே
அப்பாவும் நினைவுகளில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்.

நினைவுகளுடன்
ஏர் மகாராசன்
08.03.2020.

நன்றி:
எழுத்தோவியம்
ஓவியர் Palani Nithiyan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக