வியாழன், 15 அக்டோபர், 2020

தமிழர் அரசியலைச் சிதைக்கும் குறுக்குச் சால் அரசியல்: மகாராசன்

தமிழர் ஒற்றுமை குறித்தோ, தமிழ்த் தேசிய இனத்தின் உரிமைகள் குறித்தோ, தமிழர் அடையாளம் குறித்தோ, ஈழ ஆதரவு குறித்தோ தமிழ்ச் சமூகத்தின் பேசுபொருளாக ஆகும்போதெல்லாம், 

இதைப் பேசுபொருளாக்கும் தமிழ்த் தேசியர்கள் மீதும், தமிழ்த் தேசிய மற்றும் ஈழ ஆதரவாளர்கள் மீதும், தமிழர் ஓர்மை பேசுவோர் மீதும் பல்வேறு அவதூறுகளும் குற்றச்சாட்டுகளும் வைக்கப்படுவதுண்டு.

தமிழர்களுக்கான அரசியலைப் பேசுபொருளாகக் கொண்டிருப்போரெல்லாம், ஒடுக்கப்பட்ட சாதி மக்களுக்கு எதிரானவர்கள் என்பதைப்போலவும், ஒடுக்கப்பட்ட சாதி மக்களின் மீது நிகழ்த்தப்படுகிற பல்வேறு சமூகக் கொடுமைகளுக்கும் அவலங்களுக்கும் தமிழர் தேசிய அரசியலைப் பேசுவோர்தான் காரணம் என்பதைப்போலவும் கருதிக் கொண்டு, தமிழர் அரசியலுக்கு எதிரான - தமிழர் ஓர்மைக்கு எதிரான மடைமாற்ற நுண்ணரசியலைப் பலதரப்பினரும் முன்னெடுக்கின்றனர். அந்தவகையில்தான், தமிழர் பிரச்சினைகளைப் பேசும்போதெல்லாம், ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளைக் குறித்துப் பேசாமல், கண்டுகொள்ளாமல், போராடாமல் தமிழர் பிரச்சினைகளைப் பேசுவது ஏன்? என்பதான கேள்விகளை முன்வைக்கின்றனர்.

இந்தக் கேள்விகள் அனைத்தும் நியாயமானவைதான். ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளும் பேசுபொருளாக ஆக்கப்பட வேண்டும் தான். ஒடுக்கப்பட்ட மக்களின் பக்கம் நிற்க வேண்டும் தான். சாதியாதிக்க சக்திகளை மற்றும் சுரண்டும் வர்க்கத்தை எதிர்க்க வேண்டும் தான். இதில் துளியளவும் மாற்றுக் கருத்தில்லை. தமிழர் அரசியல் பேசுகிற இயக்கங்களும் நபர்களும் இதையெல்லாம் கணக்கில் கொள்ள வேண்டும். இந்தக் குறைபாடும் இயலாமையும் சரிசெய்யப்பட வேண்டும்.

அதேவேளையில், தமிழர் அரசியல் பேசுவோரின் இந்தக் குறைபாடுகள் ஒடுக்கப்பட்ட சாதி மக்களுக்கு எதிரான ஒரு நிலைப்பாடும் அரசியல் போக்கும் அல்ல.

ஆனால், தமிழர் பிரச்சினைகள் தமிழ்ச் சமூகத்தின் பேசுபொருளாக முன்னெடுக்கப்படுகிறபோது ஒடுக்கப்பட்ட சாதி மக்களுக்கு எதிரான கிளர்ச்சிபோல பாவிப்பது சரியல்ல.

ஒடுக்கப்பட்ட சாதி மக்களின் மீது நிகழ்த்தப்படுகிற சமூகக் கொடுமைகளுக்கும் சுரண்டல்களுக்கும் சாதியாதிக்கவாதிகளும், அவர்கள் நிரம்பியிருக்கும் சமூக அமைப்புகளும், அவர்கள் ஆக்கிரமித்திருக்கும் அரசியல் மற்றும் அதிகார நிறுவனங்களும்தான் காரணம்.

ஆனால், அரசியலிலும் அதிகாரத்திலும் பங்குபெறாவிட்டாலும் தமிழர் நலன்களையும் தமிழ்நாட்டு நலன்களையும் கருத்தில் கொண்டு தமிழர் அனைவருக்குமான பிரச்சினைகளுக்காகக் குரல் கொடுக்கிற - போராடுகிற போதெல்லாம் அதிலிருந்து விலகியும் வேறுபட்டும் நின்றுகொண்டிருப்பது பிரித்தாளும் சூழ்ச்சிக்குப் பலியாவதே ஆகும்.

தமிழ்த் தேசிய எழுச்சியும் தமிழர் அடையாள எழுச்சியும் வரும்போது மட்டுமே தமிழர் ஒற்றுமை பற்றிய கேள்விகள் வருகின்றன.

ஆனால், திராவிட ஒற்றுமை, இந்திய ஒற்றுமை, பாட்டாளி ஒற்றுமை, தலித் ஒற்றுமை பற்றிய அரசியல் பேசும்போதோ, திராவிடர், இந்தியர், தலித், பாட்டாளி என்கிற அடையாள அரசியல் பேசும்போதோ எந்தக் கேள்விகளும் முன்வைக்கப்படுவதில்லை.

தமிழர் அடையாள அரசியலைக் கேள்விக்குட்படுத்தும் பலரும், திராவிடர், இந்தியர், பாட்டாளி, தலித் அடையாள அரசியலைக் கேள்விக்குட்படுத்துவதில்லை; கேட்கவும் மாட்டார்கள்.

ஏனெனில், ஒடுக்கப்பட்ட சாதியினர் நலன்களைக் காட்டிலும், தமிழர் அரசியலை - தமிழர் அடையாளத்தை - தமிழர் ஒற்றுமையைச் சிதைப்பதுதான் முதன்மையான நோக்கம். இதுவே குறுக்குச் சால் அரசியல் என்பது.

ஏர் மகாராசன்

மக்கள் தமிழ் ஆய்வரண்.

15.10.2020.

2 கருத்துகள்:

  1. இது ஏதோ நேர்மையான நடைமுறைபோல் காட்சிப்பிழையானது.தமிழர் ஓர்மை இன்றய தமிழ்தேசியம் பேசும் சறுபிள்ளை வெள்ளாமை யாரும். இந்தியத்தை எதிர்கும் நேரத்தில் திராவிடம் என்ற சொல்லை தவறாக பயன்படுத்தும் தவறை செய்து திராவிட இயக்க தோழர்களையும்,உழைப்பையும் வரலாற்றுண்மைகளை படிக்காமல் தமிழீழம்,தமிழ்நாடு இடையே உள்ள நிலவியல் அரசியல் நிலைப்பாடு அறியாமல் பார்ப்பன வட இந்திய அரசு மேலதிகார வர்க்க சூதுக்குள் சிக்கி தமிழ் சங்கிகளாக இருப்பது தமிழின துரோகத்தின் முடியும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழினத் துரோகங்கள் வரலாற்றின் பக்கங்களில் பதிந்திருக்கிறது. திராவிட அரசியலின் வகிபாகம் பற்றியதல்ல இப்பதிவு. தமிழ்த் தேசிய அரசியல் முன் வைக்கப்படும் விமர்சனங்கள் திராவிட அரசியல் மீது வைக்கப்படுவதில்லை ஏன் என்பதைக் குறித்தானதே இது. நன்றி தங்கள் பின்னூட்டத்திற்கு

      நீக்கு