சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சோ.தர்மன் அவர்களின் வாழ்த்துரையுடன் அண்மையில் வெளிவந்திருக்கிறது வேளாண் மரபின் தமிழ் அடையாளம் எனும் நூல்.
”வேளாண் மக்கள் ஆய்வுகள்”, ”வேளாண் மக்களியம்” என்னும் கருத்தியல் செயல்பாடுகளை முன்னெடுத்து வரும் மகாராசன் எழுதிய இந்நூல், இன்றைய சமூகச் சூழலில் மிகவும் முக்கியமானதாக அமைந்திருக்கிறது என நான் நம்புகிறேன்.
இன்றைய நகரமயச் சூழலில் வேளாண் தொழில் மற்றும் வேளாண்தொழிலில் ஈடுபடும் மக்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள், வேளாண் தொழிலில் நீர் ஆதாரங்களாக விளங்கும் கண்மாய், ஏரிகள் போன்றவை சாக்கடைகளாக மாற்றப்படும் அவலம், கண்மாய், ஏரிகளைப் பராமரித்த வேளாண் மக்களை, வேளாண் நிலங்களிருந்தும், நீர்நிலைப் பராமரிப்பிலிருந்தும் அப்புறப்படுத்தப்பட்ட வரலாற்றுச் செயல்பாடுகளையும் பொருத்திப் பார்க்கும் சமூகக் கண்ணோட்டத்தை இந்நூல் தந்திருக்கிறது.
வேளாண்மையின் தோற்றத்தையும் தனிச் சிறப்பையும் முதல் கட்டுரையில் விளக்கியுள்ள நூலாசிரியர், காட்டாண்டியாக வாழ்ந்த மனிதன், நாடோடிச் சமூகத்திலிருந்து வேட்டை என்கிற செயலில் இருந்து விவசாயம் மூலம் எவ்வாறு தன்னுடைய உணவுத் தேவையைப் பூர்த்தி செய்து கொண்டான் என்பதையும், வேளாண்மை ஒரு பண்பாட்டு மறுமலர்ச்சியையும் மேம்பட்ட நாகரிகத்தையும் உருவாக்கியது என்பதையும் விளக்கியுள்ளார்.
தமிழ் இலக்கியம் கூறும் ஐந்திணைகளில் வாழ்ந்த மக்களும் அவரவர் வாழ்வியலோடு வாழ்ந்து வந்தாலும், உணவு உற்பத்தி முறையைக் கையாண்டு வந்தாலும், மருதநிலத்தில் வாழ்ந்த மக்கள்தான் திருந்திய வேளாண்மையை மேற்கொண்டதன் மூலமாக நாகரீக வளர்ச்சி, பண்பாட்டு வளர்ச்சி, அரசு உருவாக்கம் எனப் படிப்படியாகச் சமூகம் மாறி வந்ததை இந்நூலில் விளக்குவது மிகச்சிறப்பாக இருக்கிறது. மேலும், வேளாண் தொழில் செய்த மக்கள்தான் குடும்ப உருவாக்கம், நகர உருவாக்கம் மற்றும் பிற சமூக மக்களின் தொழில் உருவாக்கத்திற்கும் கூட்டு வாழ்க்கை முறைக்கும் ஆணிவேராக இருந்துள்ளனர் என்பதை வரலாற்றுப்பூர்வமாக விளக்கியுள்ளார்.
ஐவகை நிலங்களிலும் வாழ்ந்த மக்கள் வாழ்வியலையும், அதாவது, ஒவ்வொரு நிலத்தின் வாழ்வியலிலும் உணவு உற்பத்தி முறையையும், அதனோடு அமைந்த வாழ்க்கை நடத்தை முறைகளையும் தெளிவாக இலக்கியச் சான்றுகளின் துணையுடன் சிறப்பாக எடுத்துரைக்கிறார் மகாராசன். அதுமட்டுமின்றி, மருதம் - வேளாண் பெருக்கத்தின் நிலவளம் எனும் தலைப்பில் அமைந்த கட்டுரையில், ஒவ்வொரு நிலத்தின் விவசாயத்திற்கு ஏற்ற தன்மையையும், அதன் பெயர்களின் காரண காரியங்களையும் தெளிவாகப் புலப்படுத்தப்பட்டுள்ளது.
வேளாண்மை தான் ஒரு தேசிய இனத்திற்கும் நாட்டிற்குமான வாழ்விற்கும் முன்னேற்றத்திற்கும் அடிப்படையாக அமைகிறது என, உலகப் பொதுமறையான திருக்குறளில் வழியாகச் சான்று காட்டுவது கூடுதல் சிறப்பாக உள்ளது.
வேளாண் மரபும் அறிவும் எனும் தலைப்பிலான கட்டுரையில், தமிழ் நிலத்தின் வேளாண் மக்களின் வாழ்வியல், வேளாண்மை, வேளாண் தொழில்நுட்பம், வேளாண்மை சார்ந்த வாழ்வியல் மற்றும் பண்பாட்டு மரபு, அம்மக்களின் குடிப்பெயர் போன்ற அனைத்து செயல்பாடுகளையும், அவற்றை உயிரோட்டமாகப் பொதிந்து வைத்துள்ள பள்ளு இலக்கியத் தவுகள், நாட்டுப்புறவியல் வழக்காறுகள், பண்டைக்கால இலக்கண இலக்கியங்கள் உள்ளிட்ட ஏராளமான தரவுகளோடு ஆய்வுப்பூர்வமாக ஆசிரியர் பதிவு செய்துள்ளார்.
நெல் வகைகள் எனும் தலைப்பில் அமைந்த சான்றாதாரங்கள், நெல்விடு தூது, பள்ளு இலக்கியம், பழனி செப்புப்பட்டயம் போன்ற சான்றுகளின் துணையுடன் வருங்கால சந்ததிகள் அறியும் வண்ணம் எடுத்துரைத்துள்ளது இந்நூல். நெல் வகைகளின் பெயர்களும், அவர்களின் பருவநிலைகளும், காலத்திற்கேற்றவாறு பயிரிடப்படும் சூழல் போன்றவற்றை நமக்கு அறியக் கிடைக்கும் புதுமையான தகவல்களாகத் தந்திருக்கிறார் நூலாசிரியர். மேலும், வேளாண் தொழில் செய்யும் ஆண்கள், பெண்கள் மற்றும் வேளாண் குலத்தாரின் சிறப்புப் பெயருடன் அழைக்கப்பெறும் பெயர்கள், மக்களின் வாழ்வியல் பண்பாடு சார்ந்து அமைந்தவையே என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளார்.
வேளாண்மை, உற்பத்திச் சடங்குகள், தெய்வ வழிபாடு இம்மூன்றும் பண்பாட்டு நாகரிக வாழ்வின் அங்கமாக அமைந்திருக்கின்றன.
சடங்கியல் வழிபாடுகள், கொடை விழா போன்ற நிகழ்வுகளின் மூலம் காணக் கிடைக்கும் - காணக் கிடைக்கின்ற தரவுகள் எவ்வாறு வேளாண்மையோடு தொடர்புடையதாக அமைந்திருக்கின்றன என்பதை ஆசிரியர் விரிவாக விளக்கியுள்ளார்.
நீரின் அவசியம், நீர் மேலாண்மையின் முக்கியத்துவம், விவசாயத்திற்கு நீரின் இன்றியமையாமை, மழை நீரை எவ்வாறு தேக்கிவைத்து வேளாண்மை செய்தனர் என்பதைக் குறித்த செய்திகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.
மழைநீர் தற்செயலாகக் கடலை அடைவது ஒருபுறமிருந்தாலும், மழைநீரைச் செயற்கையாக ஒரு இடத்தில் தேக்கி வைத்து வேளாண்மை செய்வது ஒரு வேளாண் தொழில் நுட்பத்தின் முக்கியக் கூறாகும். இதனை மிக நுட்பமாக விவரித்திருக்கிறது இந்நூல்.
தெய்வ வடிவ உருவாக்கம் மக்களிடையே எவ்வாறு ஏற்பட்டிருக்கக் கூடும் என்ற கருத்தாக்கம் குறிப்பிடத்தக்க ஒன்றாக அமைகின்றது. அதாவது, மனிதன் தான் வாழும் நிலம், தட்பவெட்ப நிலையில் குளங்கள் அமைவதைப் போல, தெய்வங்கள் என்பவையும் நிலம் சார்ந்த மக்களின் தொழில் நுட்பத்துடன் தோன்றியிருக்கும். மருத நிலத் தெய்வமாக - வேளாண் மக்களின் வழிபடு தெய்வமாக மழையைக் குறித்திருப்பதைத் தக்க சான்றுகளுடன் இந்நூல் எடுத்துரைத்துள்ளது.
அதாவது, மழைத் தெய்வமே வேந்தன் என்றும், விண்ணுலக வேந்தனே இந்திரன் என்றும், அத்தகைய மழைத் தெய்வமே இந்திரன் என்றும் இந்நூல் விரிவான ஆய்வை முன்வைத்து விவரித்திருக்கிறது. மேலும், தமிழர்களின் இந்திர வழிபாடு என்பது, ஆரியர்களிடம் இருக்கும் வழிபாட்டு மரபிலிருந்து வேறுபட்டிருப்பது என்பதையும், தமிழரான வேளாண் குடிகளின் இந்திர வழிபாடு குறித்தும் மிக விரிவாக இந்நூல் விளக்கியுள்ளது.
வேளாண் மக்களின் வாழ்வியலோடு இயைந்தும் இணைந்தும் உழவுத் தொழிலுக்குத் துணை நின்ற அனைத்து உயிரினங்களுக்கும் நன்றி பாராட்டி மகிழும் திருவிழாக்கள், சடங்குகள் குறித்தும், மழைச்சோறு எடுத்தல், போகிப்பண்டிகை போன்றவை நீர் ஆதாரங்களுடனும் விளைநிலங்களுடனும் தொடர்புடைய பாவனைச் சடங்குகள் என்பதைத் தக்க தரவுகளுடன் விளக்கியுள்ளார் மகாராசன்.
மழைவளம், நிலவளம் கருதிய உழவுச் சடங்கு, பயிர் வளம் கருதிய நடவுச் சடங்கு போலவே, உற்பத்தி மூலம் உணவு வழங்கிய அறுவடைச் சடங்கு மற்றும் சூரியன், மழை கால்நடைகள் போன்றவற்றுக்கும், வேளாண் உற்பத்தியில் ஈடுபட்ட - ஈடுபடுகின்ற உழவர்களுக்கும் மதிப்பும் வாழ்த்தும் வணங்குதலுமான நன்றி உணர்வையும் வெளிப்படுத்துவதே தைப்பொங்கல் எனும் பண்பாடாக விளங்குவதைக் காணலாம்.
உழவுத் தொழில் உற்பத்தியின் ஒரு பகுதியை அறுவடை விழாவாகக் கொண்டாடும் வேளாண் உற்பத்திச் சமூகத்தின் நிகழ்த்து வடிவமாய் - பண்பாட்டு வழக்கமாய் தமிழ் சமூகத்தில் பன்னெடுங்காலமாய் நிகழ்ந்து வருவதைப் பல தரவுகளுடன் விவரிக்கிறது இந்நூல்.
வேளாண்மை தொடர்புடைய சடங்கியல் கூறுகள், வேளாண் மக்களோடு இன்றும் உயிரோட்டமாகத் திகழ்வதை வரலாற்று நோக்குடனும் சமகால நாட்டுப்புற மக்களின் வாழ்வியலோடும் இந்நூல் வெளிப்படுத்துகிறது.
வேளாண் மரபினரின் உற்பத்திச் செயல்பாடுகளும், சடங்கியல் வழிபாட்டு முறைகளும், வாழ்க்கை முறைகளும் தனித்துவமான பண்பாட்டு மரபைக் கொண்டுள்ளன என்பதை விளக்கப்படுத்தும் இந்நூல், வேளாண் மக்களைக் குறித்து வெளிவந்திருக்கும் நூல்களில் தனித்துவம் வாய்ந்த ஒன்றாக அமைந்திருக்கிறது என்பதற்கு இந்த நூலின் சான்றாதாரங்களே நிதர்சனம் ஆகிறது.
*
கட்டுரையாளர்:
ப.இளங்கோ,
முனைவர் பட்ட ஆய்வாளர்,
நாட்டுப்புறவியல் துறை,
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்,
மதுரை.
*
வேளாண் மரபின் தமிழ் அடையாளம்,
மகாராசன்,
யாப்பு வெளியீடு, சென்னை-76
விலை: ரூ.250
தொடர்புக்கு: 9080514506.