வெள்ளி, 17 ஜூன், 2022

சமத்துவக் குரலெடுக்கும் முனீசுவரன்களைக் கொண்டாடுவோம் : மகாராசன்

மானுட சமத்துவத்தையும் தன்மான உணர்வையும் மாணவர்களிடம் வளர்த்தெடுப்பதும் கல்விச் செயல்பாட்டின் ஓர் அங்கம்தான்.  

சாதியக் காழ்ப்பும், சாதிய வன்மமும், சாதிய ஏற்றத்தாழ்வும், சாதிய வக்கிரங்களும், சாதிய வன்முறையும் ஒடுக்குமுறையும் நிரம்பி வழியும் ஓர் சமூக அமைப்பிலிருந்தேதான் ஆசிரியர்களும் உருவாகி வந்திருக்கிறார்கள். ஆயினும், சாதிய அழுக்குகள் நிறைந்த மனிதர்களிடமிருந்தும் பணியாளர்களிடமிருந்தும் வேறுபட்ட ஒரு பணியும் பொறுப்பும் கடமையும் தமக்கு இருக்கின்றன என்பதைப் பெரும்பாலான ஆசிரியர்கள் உணரவும் இல்லை; அவ்வாறு உணர்வதற்கான அல்லது உணர்த்துவதற்கான அகப்புறச் சூழல்களும் அவர்களுக்கு வழங்கப்படவில்லை. 

அவர்கள் பயின்ற கல்வியும், இப்போது அவர்கள் பயிற்றுவிக்கிற கல்வியும் சமூக சமத்துவத்திற்கான உணர்வுகளையும் எண்ணங்களையும் அறிவையும் வழங்கத் தவறியிருக்கின்றன எனில், கல்வியமைப்பிலும் சாதிய அழுக்குகள் படிந்திருக்கின்ற என்றே பொருள்.

ஆசிரியர்கள், பேராசிரியர்கள் என, கல்வி அமைப்பில் இருக்கும் பெரும்பாலோரிடத்தில் சாதிய அழுக்கு இன்னும் ஒட்டிக்கொண்டேதான் இருக்கிறது. சாதியப் பாகுபாட்டையும் சாதியக் கண்ணோட்டத்தையும் சிலர் வெளிப்படுத்துவார்கள்; சிலர் உள்ளுக்குள் வைத்திருப்பார்கள்; சிலர் ஒத்துப்போவார்கள்; சிலர் ஒதுங்கிப் போவார்கள்; சிலர் மவுனமாக இருப்பார்கள். சாதியப் பாகுபாட்டிற்கு எதிராக இருந்த - இருக்கும் மிகச்சில ஆசிரியர்களையும் நான் பார்த்திருக்கிறேன். அதேவேளையில், சாதியப் பாகுபாட்டுக் கண்ணோட்டங்களைக் கொண்டிருந்த/கொண்டிருக்கும் ஆசிரியர்களையும், சாதிய வன்மத்தை மாணவர்களிடம் விதைத்த/விதைக்கும் ஆசிரியர்களையும், அதையெல்லாம் கண்டும் காணாமலும் போன/போகும் ஆசிரியர்களையும் எனது கால் நூற்றாண்டுகால கல்வி அனுபவங்களில் பார்த்துக்கொண்டும் எதிர்கொண்டும்தான் வருகிறேன். 

அதேவேளையில், நேர்மையும், அறிவும், கற்பித்தல் திறனும், மாணவர்கள் மீதான அக்கறையும் கொண்டிருக்கும் ஓர் ஆசிரியரைக் குறித்து என்னதான் அவர் சாதியைக் குறித்து மாணவர்களிடம் சொன்னாலும் விதைத்தாலும், அதையெல்லாம் காதில் வாங்காமல் அந்த ஆசிரியரிடம் நெருக்கமும் பெருமதிப்பும் கொண்டிருந்த/கொண்டிருக்கும் மாணவர்களையும் கண்கூடாகக் கண்டிருக்கிறேன்.

சாதியப் பாகுபாடும், சாதியக் கண்ணோட்டங்களும் ஆசிரியர்களிடம் மட்டுமல்ல; ஆசிரியர் சங்கங்களிலும்- சங்கவாதிகளிடமும் பரவிக் கிடக்கிறது என்பதும் மிகக் கசப்பான அனுபவங்கள் நிரம்ப உண்டு.

இதற்கெல்லாம் என்ன காரணம்? ஆசிரியர்களிடமும் பாடப்புத்தக அறிவு மட்டும்தான் போய்ச் சேர்ந்திருக்கிறது. சமூக சமத்துவத்திற்கான சமூக அறிவும் சமூகக் கல்வியும் அவர்களுக்குப் போய்ச் சேரவில்லை. சமத்துவத்திற்கான சமூகக் கல்வியை ஆசிரியர்கள் பெறுவதற்கான கல்வியமைப்பும் அதற்கான வாய்ப்புகளும் இன்னும் உருவாக்கப்படவில்லை; அதற்கான உரையாடல்களை வளர்த்தெடுப்பதற்கான களங்களும் சனநாயகத் தன்மையோடு இயங்கவுமில்லை.

இன்னும் கூட, இட ஒதுக்கீடு என்பதைப் பெரும்பாலான ஆசிரியர்கள் தப்பும் தவறுமாகவும் அரைகுறையாகவுமே புரிந்துவைத்திருக்கின்றனர். அதாவது, பி.சி; எம்.பி.சி; எஸ்.சி; எஸ்.டி எனும் இடஒதுக்கீட்டுப் பிரிவுகளில் உள்ள பெரும்பாலோர், எஸ்.சி தரப்பினருக்கு மட்டும்தான் இடஒதுக்கீடு இருப்பதுபோல நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். அதிலும், எஸ்.சி எனில் இழிவானது; தாழ்வானது என்கிற தப்பெண்ணத்தையும் கொண்டிருக்கிறார்கள். அதனால்தான், எஸ்.சி என்பதைத் தாழ்வாகவும் இழிவாகவும் கருதுகிற சமூகத் தப்பெண்ணங்களுக்கு எதிராகத் தம்மை எஸ்.சி இல்லை; எஸ்.சி பட்டியலில் இருந்து மாற்றி வேறு பட்டியலில் சேர்த்திடுங்கள் என்கிற குரல்கள் வெளிவருவதன் பின்புலமும் இதுவாகத்தான் இருக்க முடியும்.

சாதியத்தைக் கரைக்கும் சமூகக் கல்வியும், தமிழர்கள் ஓர்மை எண்ணங்களும், சாதியவாதிகளைத் தனிமைப்படுத்தும் போக்குகளும் இன்னும் வளர்த்தெடுக்கப்பட வேண்டும்.

ஆயினும், அவர்களும் சமம்தானே டீச்சர் எனும் முனீசுவரன் குரல்களும், நாங்களும் சமம்தானே டீச்சர் எனும் முனீசுவரன்கள் குரல்களும் ஒலித்துக்கொண்டேதான் இருக்கும்.

நாம், சமத்துவக் குரலெடுக்கும் இருதரப்பு முனீசுவரன்களையும் கொண்டாடுவோம்; அவர்கள் பக்கமே நிற்போம்.

ஏர் மகாராசன் 

17.06.2022

4 கருத்துகள்:

  1. பெயரில்லா17/6/22, AM 10:53

    அருமை மகாராசன்

    பதிலளிநீக்கு
  2. பெயரில்லா17/6/22, PM 12:03


    ஐயா நல்ல பதிவு

    பதிலளிநீக்கு
  3. பெயரில்லா17/6/22, PM 12:14

    சாதி வெறி என்னும் பித்து பிடித்து பதவி ஆசைக்காக திரிகிற மனிதமிருகங்களை களையெடுப்பதே தேசத்தின் ஒற்றுமையும்,வளர்ச்சியும் கூட......

    பதிலளிநீக்கு