தமிழ்ச்சமூகச் சூழலில் கவனிக்கத் தவறிய பகுதிகளைக் கோர்வையாகக் கோர்த்து, "பண்பாட்டு அழகியலும் அரசியலும்" என்ற பெயரில் ஆவணமாகப் பதிவு செய்துள்ளார் மகாராசன்.
தமிழர் பண்பாட்டு அடையாளங்களில் மறைந்திருக்கும் வழக்காறுகள் மற்றும் வாழ்வியலைப் படம்பிடித்துக் காட்டுகிறது இந்நூல். தமிழ்ச் சமூகத்தில் மறுக்கப்படும் சமூகங்களின் பண்பாடு, வாழ்வியல், அரசியல் பற்றி விரிவாகப் பேசுகிறது இந்நூல்.
பண்பாடு என்பது ஒழுங்கு வடிவம் பெற்ற நிலையைக் குறிக்கும். பண்பாடுகள் பெரும்பாலும் வழமையான நிகழ்வுகளை உள்ளடக்கித் தோன்றியிருக்க வேண்டும், தமிழ்ச் சமூகத்தில் உழவு, ஏறு தழுவல் போன்ற பண்பாட்டு அடையாளங்கள் நிலம் சாந்து தான் இயங்குகின்றன.
பண்பாட்டு அழகியல் என்ற சொல்லின் கருப்பொருள் நிலம், நிலம் சார்ந்த மக்களின் வாழ்வியலைப் பேசுகின்ற அதே வேளையில், அப்பண்பாட்டு ஒடுக்குமுறைக்கு ஆட்பட்ட நிகழ்வுகளையும் பேசுகிறது. பண்பாடு என்ற சொல், பொருள் ஒழுங்கு வடிவம் பெற்ற நிலையைத்தான் குறிக்கிறது. அந்த ஒழுங்கு நிலை இயல்பாகவே அமையபெற்றது.
தமிழர் பண்பாட்டு அடையாளங்களில் மறைந்திருக்கும் வழக்காறுகள் மற்றும் வாழ்வியல், கலை, இலக்கியம், அரசியல் பற்றிப் பேசுகிறது. சடங்குகள் என்பவை பெரும்பாலும் வைதீக மரபைச் சார்நதவை என்று பொதுவெளியில் கட்டமைப்பு செய்யப்பட்டுள்ளது. அதனை மறுக்கும் வகையில் சடங்குகள் தமிழ் மரபைச் சார்ந்த ஒரு ஒழுங்கு வடிவம் பெற்ற பழக்க முறை என்று வரலாற்று அடிப்படையில் நிறுவுகிறது இந்நூல்.
ஏறு தழுவல் என்பது பெரும்பாலும் மாடு பிடி விளையாட்டு என்று கருதப்பட்டாலும், அதன் கருப்பொருள் மாடுகள், மாந்தர்கள் இடையே உள்ள
அன்புபிணைப்பைக் காட்டுகிறது. முல்லை நிலத்தில் உழவும், ஏறு தழுவல் தோன்றி இருந்தாலும், முழுமையும் ஒழுங்கு வடிவம் பெற்றது மருத நிலத்தில் என்கிறது தமிழ்.
எருதுகளின் வகைப்பாட்டுப் பட்டியல், பண்பு இயல்புகளைப் பள்ளு இலக்கியங்கள் வழியே நிறுவுகிறார் மகாராசன். மேலும், பள்ளு இலக்கியங்கள் பேசும் அரசியலையும் பதிவு செய்துள்ளார்.
தமிழர்களின் அறம் சார்ந்த பண்டிகைக் குறியீடாக உள்ள அறுவடைத் திருநாள் எனப்படும் பொங்கல் திருநாள் உணர்த்தும் சடங்குகளின் மெய்பாடுகளைப் பேசுகிறது. நிலம், உழவு, எருது, சூழலியல் பற்றி அரசியல் பார்வைகள் பற்றிய பதிவுகளை ஆவணப்படுத்தியுள்ளது இந்நூல்.
கலை மற்றும் இலக்கியத் தளங்கள் ஒற்றைச் சார்பு நிலை கொண்டிருந்த சூழலில், எளிய மக்களின் கலை மற்றும் இலக்கியக் குறிப்புகள் பொதுவெளியில் பேசும் பொருளாக மாற வேண்டும் என்று கூறுகிறது இந்நூல்.
ஐவகை நிலங்களின் இயல்புநிலை வளர்ச்சி என்ற பெயரில் ஆள்வினைஞர்களின் பொறுப்பற்ற தன்மை, சுரண்டல்களையும், சூழலியல் சீர்கேட்டை எதிர்க்க மனமில்லாமல் வாழும் அடிமை நிலைக் கூட்டத்தையும் பற்றியும் விவரிக்கிறது.
கடல் சார்ந்தது வாழும் தமிழர்கள் நேர்கொள்ளும் இயற்கைப் பேரிடர் நிகழ்வின் போது சமய நிறுவனங்கள் மற்றும் அரசுகளின் பாராமுகத்தையும் வலியோடு பதிவு செய்கிறது.
பெண்மொழி மதிப்பீடு மற்றும் ஆண் ஆதிக்கப் போக்குகளையும்,.பெண்ணியம் சார்ந்த இயங்கும் அமைப்புகளின் பொறுப்பற்ற தன்மையும் பட்டியலிடுகிறது. பெண்களின் அரசியல் எழுச்சி மாற்றத்தில் ஆண்கள் பங்களிப்பு உள்ளது என்பதை வரலாற்றுச் சான்றுகளோடு நிறுவுகிறது இந்நூல்.
கற்பித்தல் செயல்பாட்டில் அதிகார அரசியல் நுழைவு காரணமாக மாணவச் சமூகம் நேர்கொள்ளும் சிக்கல்களையும், பிற்போக்கு எண்ணங்களை விதைக்கும் கல்விமுறைகளையும் கடிந்துரைக்கும் இந்நூல், தமிழர்களின் பண்பாட்டு அரசியலை உரக்கப் பேசியிருக்கிறது.
மகாராசன்,
ஆதி பதிப்பகம் வெளியீடு,
விலை உரூ 120/-
தொடர்புக்கு:
தில்லை முரளி
9994880005.
அஞ்சலில் நூல் பெற:
செந்தில் வரதவேல்
9080514506.
செ. தமிழ்நேயன்,
மருந்தாளுநர், சென்னை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக