மாமன்னன் திரைப்படத்தை முன்வைத்துச் சில குறிப்புகள்.
தமிழ்ச் சமூகத்தில் சில பல கலைப்படைப்புகள் அல்லது திரைப்படங்கள் முன்வைத்த அரசியலைக் காட்டிலும், அத்திரைப்படங்கள் ஏற்படுத்திய சமூக விளைவுகள், பாதிப்புகள், மாற்றங்கள், சீர்திருத்த முயற்சிகள் குறித்துப் பல்வேறு கோணங்களில் கவனிக்கத்தக்கவை; விவாதிக்கத்தக்கவை.
சாதிப் பின்புலங்களை முன்வைத்து வெளிவந்த கலைப்படைப்புகள் அல்லது திரைப்படங்கள் முன்வைத்த உள்ளீடான அரசியல் ஒருபுறமிருந்தாலும், அந்த மாதிரியான படங்களை முன்வைத்து அல்லது அந்த மாதிரியான படங்களால் மேலெழுப்பப்பட்ட புறவயமான சமூக மற்றும் அரசியல் விளைவுகள் வேறுவேறாக வார்ப்பாக்கப்பட்டிருக்கின்றன.
அதாவது, ஏதேனும் ஒரு சமூகத்தைப் பின்புலமாகக் கொண்டு, அந்தச் சமூகத்திற்குள்ளான நிகழ்வுகளையோ நடத்தைகளையோ விமர்சனப்பூர்வமாக ஒரு திரைப்படமோ அல்லது வேறு ஒரு கலைப்படைப்போ பேசியிருந்தாலும்கூட, அது பேசியிருக்கும் அல்லது முன்வைத்திருக்கும் விமர்சனங்கள் என்பதையெல்லாம் தாண்டி, குறிப்பிட்ட அந்தத் திரைப்படம் அல்லது அந்தக் கலைப் படைப்பு, தங்கள் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவாய் - அடையாளப்படுத்துவதாய் - பெருமைப்படுத்துவதாய்த்தான் அந்தந்த சமூகங்களால் புரிந்துகொள்ளப்பட்டிருக்கின்றன.
குறிப்பாக, தங்கள் சமூகத்தின் மேட்டிமையையும் பகட்டையும் தாட்டியத்தையும் பகிரங்கப்படுத்திக் கொள்வதற்காகப் பெருந்தீணியாக அது போன்ற படங்கள் அல்லது படைப்புகள் தெரிந்தோ தெரியாமலோ செயலாற்றியிருக்கின்றன. அதிலும் குறிப்பாக, சாதியப் பகட்டும் மேட்டிமையும் தாட்டியமும் கொம்புசீவி விடப்பட்டதில் அத்தகையத் திரைப்படங்களைத் தமதாக்கிக் கொண்டனர் உயர்த்திக்கொண்ட பல தரப்பினரும்.
உண்மையிலேயே, அந்தத் திரைப்படங்கள் தங்கள் மீதான விமர்சனத்தை முன்வைத்திருப்பதாக அந்தத் தரப்பினர் உணர்ந்திருந்தாலோ அல்லது உள்வாங்கியிருந்தாலோ, அந்தத் திரைப்படங்களைப் பகட்டாகவும் தாட்டியமாகவும் கொண்டாடியிருக்க மாட்டார்கள். அதையெல்லாம் - அந்த விமர்சனங்களையெல்லாம் விளங்கிக்கொள்ளாமல்தான் இன்னும்கூட அதைப் போன்ற படங்களைத் தங்கள் சமூகத்தின் பண்பாட்டு அடையாளப் படங்களாகத் தூக்கி வைத்துக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.
மேட்டிமைப் பகட்டும் தாட்டியத் திமிரோடும் அந்தந்தத் திரைப்படங்களைத் தூக்கிக்கொண்டாடியபோது ஏற்பட்ட சமூகப் பதற்றங்கள், பாதிப்புகள் யாவும் சமூக - பொருளாதார - அரசியல் மற்றும் பண்பாட்டு ஒடுக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட மற்ற சமூகங்களுக்குத்தான் ஏற்பட்டன. அந்த மாதிரியான திரைப்படங்களைப் பெருமைப்படத் தூக்கிக்கொண்டாடிய சமூகங்களைக் காட்டிலும், அவற்றுக்கு அப்பாற்பட்ட மற்ற சமூகங்கள் அடைந்த சமூகத் துயரங்களும் அனுபவங்களும் வேறுவேறானவை; முற்றிலும் தலைகீழானவையாகவே இருந்திருக்கின்றன.
இந்நிலையில், அகவயமாகவும் புறவயமாகவும், நல்லபடியாகவும் கெட்டபடியாகவும் ஒரு படம் தமக்கு ஏற்படுத்திய தாக்கம் குறித்து, படைப்பாளி எனும் நிலையிலிருந்தும், பாதிக்கப்பட்டதான தரப்பிலிருந்துமாய் ஒருவர் பேசுகிறார் எனில், அதில் உள்ள நியாயமான சமூக உணர்வுகளைப் புரிந்துகொள்ளாமல் அல்லது புரிந்துகொள்ள முற்படாமல், குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிராகப் பேசியதாகப் புரிந்து கொண்டு, அதை எதிர்ப்பதும் மறுப்பதுமான விவாதங்கள்தான் மிக அதிகளவில் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த எதிர்ப்பிலும் மறுப்பிலும் சாதிய மேட்டிமைக் காழ்ப்பும் வன்மங்களும்தான் அதே தாட்டியத்தோடு தாண்டவமாடுகின்றன.
நாம் விவாதிக்க வேண்டியதும், மறு பரிசீலனை செய்ய வேண்டியதும், சுயவிமர்சனமாய்ப் பார்க்க வேண்டியதும் யாதெனில், ஒரு கலைப்படைப்பு ஏற்படுத்திய சமூக விளைவுகள் குறித்துதான். ஆனால், அந்தக் கலைப்படைப்பு ஏற்படுத்திய சமூக விளைவுகள் குறித்து யாரும் விவாதிப்பதில்லை.
ஒரு கலைப்படைப்பு ஏற்படுத்திய அல்லது ஏற்படுத்தும் சமூக விளைவுகளை நேர்மையோடும் சுய விமர்சனத்தோடும் அணுகுவதே சமூக சனநாயக மாண்பு. மாறாக, சாதிய மேட்டிமையின் மீதும் பகட்டின் மீதும் தாட்டியத்தின் மீதும் அடுத்தவர் அல்லது மற்றவர் கைவைத்துவிட்டதாய்ப் பதற்றமடைவதும், தங்கள் சமூகத்தின் மீது வைக்கப்பட்ட விமர்சனமாகவும் எதிர்ப்பாகவும் புரிந்துகொண்டு, அதே மேட்டிமைத்தனத்தோடும் தாட்டியத்தோடும் சமூக ஊடகங்களில் விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள் பலரும். சமூக மாற்றம் குறித்துப் பேசக்கூடிய பெரும்பாலோர், தத்தமது சமூகப் பற்றுதலை உள்ளுக்குள் வைத்து மறைத்துக்கொண்டுதான் பொத்தாம் பொதுவாகப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். சுயசாதி விமர்சனத்தோடு இது குறித்துப் பேசுபவர்கள் அரிதாகிப் போனார்கள்.
இது ஒருபுறமிருக்க, மற்றவர்களின் மேட்டிமையாலும் தாட்டியத்தாலும் பாதிக்கப்பட்டவர்களும், அந்த மேட்டிமையையும் தாட்டியத்தையும் எதிர்கொண்டு எதிர்ப்பவர்களும், கலைப்படைப்பு ஏற்படுத்திய சமூக விளைவுகளின் அனுபவங்களைத்தான் பேசமுடியும்; பேசுவார்கள். சமத்துவ வேண்டலுக்கான இத்தகையப் பேச்சுகள் யாவும், சமூக அனுபவங்களின் துயரையும் கசப்பான காயங்களையும் காலம் பல கடந்தாலும் சுமந்துகொண்டேதான் இருக்கும். இந்தப் பேச்சுகளில் நிறைகுறை பல இருக்கலாம். சரி தவறுகள் இருக்கலாம். ஆயினும், சமூகப் பகையுணர்ச்சியோ அல்லது சமூகப் பழிவாங்கலோ ஏதுமற்றவை. அதேவேளை, அத்தகையப் பேச்சுகளை மறுப்பதும் எதிர்ப்பதும் நிராகரிப்பதும்தான் சமூக மேட்டிமையும் தாட்டியமும் கொண்டதாகும். கூடவே, பெரும்பாலான கலைப் படைப்புகளையும் படைப்பாளர்களையும் சாதிய மேட்டிமையும் தாட்டியமும் தன்வயப்படுத்தியிருப்பதும்கூட இங்கு கவனிக்கத்தக்கதாகும்.
இந்நிலையில், மாமன்னன் திரைப்படத்தை முன்வைத்து, அதன் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் மாரி செல்வராசு அவர்கள் முன்வைத்த பேச்சுகள், தமிழ்ச் சமூகத்தில் கொதிநிலைப் பேசு பொருளாகச் சமூக ஊடகங்களிலும் அரசியல் சமூக வெளிகளிலும் மிகத் தீவிரமாகப் பரவலாகியதுடன், கடுமையான எதிர்ப்புணர்வையும் எதிர்கொள்ள நேரிட்டது. மாமன்னன் திரைப்படம் வெளிவருவதற்கு முன்பாகவே, அந்தப் படம் கடுமையான எதிர்ப்புகளைச் சந்திக்க நேர்ந்தது. அந்த எதிர்ப்புகள் யாவும் பெரும்பாலும் காழ்ப்புணர்வின் அடிப்படையிலான ஊகங்களின் அடிப்படையிலேதான் இருந்தன என்பதுதான் அவற்றின் பலவீனமாகவும் அமைத்து போயின.
பாதிக்கப்பட்டவர்களின் அனுபவக் குரலைக் காதுகொடுத்துக் கேளாமல், வெறுமனே கலைப் படைப்புகளின் புனிதப் பூச்சுகளைச் சமூகப் பூச்சாக முன்வைக்கும் பலரின் பேச்சுகளில் சாதிய மேட்டிமையும் தாட்டியமும் எச்சமாய் இன்னும் ஒட்டிக்கிடப்பதுதான் சமூகத்தின் பேரவலம். இந்த அவலம், மாமன்னன் படத்தை முன்வைத்தும் நடந்து முடிந்திருக்கிறது.
இன்னும் சாதியம் குறித்துப் புரிந்துகொள்ளாமல்தான், சமூகம் குறித்த விவாதங்கள் நீண்டுகொண்டிருக்கின்றன.
***
தோழர் மாரி செல்வராசு அவர்களின் திரைப்படங்களைப் பார்க்கும் முன்பாகவே, அவரது எழுத்துகளும் பேச்சுகளும் எமக்கு அறிமுகம் ஆகியிருந்தன. தமது படைப்புகளின் வழியும் பேச்சுகளின் வழியும் மானுட சமத்துவத்துக்கான வேட்கையை உள்ளீடாகப் புலப்படுத்திக்கொண்டிருக்கும் மாரி செல்வராசு அவர்களின் பேச்சுக்கும் படைப்புக்கும் எதிரான சாதிய வன்மங்களையெல்லாம் எதிர்கொண்டு, தமது குரலை மாமன்னன் திரைப்படத்தின் வாயிலாகவும் வெளிப்படுத்தியிருக்கிறார்.
பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய திரைப்படங்களின் மூலம் ஒடுக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட சமூக வலியையும், ஒடுக்குதலுக்கு எதிரான சமூக உணர்வையும் கலைப்படைப்பின் பேசுபொருள் உள்ளீடாகப் படைப்பாக்கியிருந்தார் மாரி செல்வராசு. இந்த வரிசையில் மாமன்னன் திரைப்படத்தையும் அதேவகைப்பட்ட சமூக உரையாடலுக்கு உகந்த வகையில் படைப்பாக்கியிருக்கிறார் அவர்.
உயர்த்திக் கொண்ட சாதிய மேட்டிமையின் தாட்டியத்தையும் அதன் கோரத்தையும், அவற்றைக் காலங்காலமாக எதிர்கொண்டு வருகிற ஒடுக்கப்பட்ட பல்வேறு சமூகங்களின் வலியையும், பொது சமூகப் பார்வைக்கும் உரையாடலுக்கும் ஒரு திரைப்படத்தின் வாயிலாகக் கடத்தியிருக்கிறது மாமன்னன்.
சாதிய மேட்டிமையின் அதிகாரம் நோக்கிய நகர்வுகளும், அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள சாதிய மேட்டிமையின் நகர்வுகளும் பல சமூகங்களைக் காவு வாங்கியிருக்கின்றன. அந்த வகையில், அதிகாரத்தாலும் சாதியத்தாலும் காவு வாங்கப்பட்ட ஒடுக்கப்பட்ட சமூக மனதின் அனுபவப்பாடுகளின் சிற்சில பகுதிகளைப் பொது சமூக மனதின் பார்வைக்கும் பரிசீலனைக்கும் கொண்டு வந்திருக்கிறது மாமன்னன்.
சாதிய மேட்டிமைக்கு எதிரான ஓர் எதிர் மரபின் கலை வெளிப்பாடுதான் மாமன்னன் படமும்கூட.
தமிழ்த் திரைப்படங்களில் தோற்றத்தாலும் பண்பாலும் நடத்தையாலும் தம்மைத் தரவிறக்கம் செய்துகொண்டு, கோமாளி வேடமேற்று நடித்திருந்த திரு வடிவேலு அவர்களை, மாமன்னன் திரைப்படத்தில் கோமான் எனும் மாமன்னனாக வேடமேற்று நடிக்க வைத்திருப்பதும்கூட, அதிகார மரபுகளின் கலை வடிவங்கள் கட்டமைத்திருந்த அதிகாரப் போக்கிற்கான எதிர்ச்செயல்பாடுதான்.
தமிழ் நாடக மரபில் கோமாளிக் கூத்தென அழைக்கப்பட்ட நாடக நிகழ்த்துக்கலை வடிவமும், அக்கலை வடிவத்தை நிகழ்த்திக் காட்டும் கோமாளி நாடகா்களும் பொழுது போக்கிலான கேளிக்கைச் செயன்மைகளை, செய்கைகளை மேற்கொள்ளும் அல்லது வெளிக்காட்டும் அதேவேளையில், அந்தந்தக் காலகட்டங்களில் நிலவிய, நிலவுகிற சமூக அமைப்பில் காணலாகும் அதிகார வழிப்பட்ட செயன்மைகளை - கற்பிதங்களை - கட்டமைப்புகளை - புனிதங்களை - மனிதா்களை - மனித நடத்தைகளை - மனித மனக்கோலத்தைப் பகடி செய்து எள்ளலுக்கு உள்ளாக்குவதன் வாயிலாக அதிகாரக் கட்டமைப்பிற்கு எதிரான கருத்தியல் கூறுகளை உள்ளீடாக வெளிப்படுத்தவும் செய்திருக்கின்றனா்.
அதிகார வெளிக்கு அப்பாற்பட்ட வெளியிலிருக்கும் அதிகாரமற்றவா்களின் - எளிய மக்களின் - ஒடுக்கப்பட்ட மக்களின் - விளிம்பு நிலை மக்களின் குரலையே கோமாளிகளின் பகடிக்குரல், வசைக்குரல், கேலிக்குரல் வெளிப்படுத்தியிருக்கின்றன.
அதிகாரவெளி சார்ந்த புனைவுகள் அனைத்தையும் போகிற போக்கில் மிக இலகுவாகக் கட்டவிழ்ப்புச் செய்யும் போக்கு கோமாளிகளின் செய்கைகளுக்குள்ளும் குரலுக்குள்ளும் அடங்கியிருக்கிறது. இந்தப் போக்கானது வெவ்வேறு காலகட்டங்களின் வெவ்வேறு நிகழ்த்துக் கலை வடிவங்களில் பங்கெடுக்கும் பல்வேறு காலகட்டத்தைச் சார்ந்த கோமாளி நாடகா்களிடம் வெளிப்பட்டே வந்திருப்பதும், அதிகாரம் இழந்திட்ட தரப்பினரின் மனசாட்சியாய் - அதிகாரத்திற்கு எதிரான மரபாய் ”கோமாளிகள்” எல்லாக் காலத்திலும் உருவெடுத்திருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அந்தவகையில், வெள்ளந்தியாய், ஒன்னும் தெரியாத அல்லது விவரம் தெரியாத அப்பாவியாய் இருக்க நேர்ந்த ஒரு சமூக மனதை, சுய மரியாதைக்கான வேட்கையோடு வெளிக் கிளம்பும் வீரியம் மிக்க எதிர்ப்புணவு விதையாய் மாமன்னனை உருப்படுத்தியிருக்கிறார் மாரி செல்வராசு. அதாவது, காலங்காலமாக நகைச்சுவைப் பாத்திரமேற்று நடித்து வந்த ஒரு திரைக் கோமாளியை, அசுரத்தனமான கோமாளியாய்க் காண்பிக்கிறது மாமன்னன்.
இங்கிருக்கும் அரசியலமைப்புச் சட்டங்களின் குறைந்தபட்ட வாய்ப்புகளைப் பயன்படுத்தி, பாராளுமன்ற - சட்டமன்ற - உள்ளாட்சி அதிகாரங்களில் பங்கெடுக்கும் வாய்ப்புகளையும் உரிமைகளையும் ஒடுக்கப்பட்ட தரப்பினர் பெறுவதற்கு நேர்ந்தாலும், அந்த அதிகாரத்தின் வழியான செயல்பாடுகளை முன்னெடுப்பதற்கோ, பொது சமூக அங்கீகரிப்போ, சுய மரியாதைக்கான மதிப்பளிப்போ எதுவாயினும், அது சாதி பார்த்தே கிடைக்கப்பெறுகின்றன. உயர்த்திக்கொண்ட மேட்டிமைச் சாதியினருக்கு ஒருவகையான சமூக மரியாதையும் பிரதிநிதித்துவப் பங்கேற்புக் குவிப்பும் ஏராளம் வழங்கப்படுகின்றன. அதேவேளை, பொது சமூக மனதின் பொதுப் புத்தியில் கற்பிதமாகிப் படிந்து கிடக்கும் சாதியச் சமூகக் கண்ணோட்டங்கள் சில பல சமூகத்தினரைக் கீழ்ச்சாதிகளாகவே இன்னும் பாவித்துக்கொண்டிருக்கின்றன. கீழ்ச்சாதியென ஒதுக்குதலுக்கும் ஒடுக்குதலுக்கும் உள்ளாக்கப்பட்டவர்கள் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ளவோ அல்லது பிரதிநிதித்துவம் கோருவதோ அல்லது சுய மரியாதை வேண்டுதலோ கூடாது என்பதைத்தான் அதிகாரத்தோடு உறவாடிக்கிடக்கும் உயர்த்திக்கொண்ட சாதிய மனதின் உள்ளீடாக இருந்து கொண்டிருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, உயர்த்திக்கொண்ட சாதியினரிடமும் அதிகாரத் தரப்பினரிடமும் சுய மரியாதை ஏதுமற்று நிற்கும் அவலம்தான் இந்தியச் சமூகம் முழுமையிலும் இன்னும் பரவிக் கிடக்கிறது. அதிகாரத்தோடு பிணைந்திருக்கிற சாதியத்தால் இந்த அவலம் எப்படி நடக்கிறது? இதன் சமூக வலி என்ன? இந்த அவலம் ஏன் மாறவேண்டும்? எப்படி மாறவேண்டும்? மாறினால் என்னவாகும்? என்பதைத்தான் ஒரு கலைப்படைப்புக்கு உண்டான தொனியில் மாமன்னனில் சொல்ல முற்பட்டிருக்றார் இயக்குநர். இதுவுமே, உயர்த்திக்கொண்ட சாதிய அதிகாரத்திற்கு எதிரான ஓர் எதிர் மரபின் குறியீட்டு வெளிப்பாடுதான்.
அந்தவகையில், மானுட சமத்துவத்திற்கான வேட்கையையும், அதை அடைவதற்கான தேடலையும் விதைத்திருக்கிறது மாமன்னன் திரைப்படம். இப்படம் முன்வைத்திருக்கும் வழிமுறைகளிலும் தீர்வுகளிலும் முடிவுகளிலும் மாறுபட்ட கருத்துகள் இருக்கின்றன. ஓர் கலைப் படைப்பாக முழுமை அடைந்திருக்க வேண்டிய இப்படம், அது முழுமை பெறுவதற்குள்ளாகவே வழக்கமான தமிழ்த் திரைப்படங்களின் சாயல்களைப் போர்த்திக் கொண்டிருப்பதில் விமர்சனங்கள் இருக்கத்தான் செய்கின்றன.
ஆயினும், அதிகாரத்தோடு பிணைந்திருக்கிற சாதிய மேட்டிமையின் தாட்டியத்தையும், ஒடுக்கப்பட்ட சமூகங்களின் நூற்றாண்டுகால வலியையும் வேட்கையையும் பொது சமூகத்தின் சுய பரிசீலனைக்கு உட்படுத்தியிருப்பதில் குறிப்பிடத்தக்க கலைப் படைப்பாகவும் உருப்பெற்றிருக்கிறது மாமன்னன் திரைப்படம்.
ஒடுக்கப்பட்ட சமூகங்களின் சுய மரியாதைக் குரலுக்கான நியாயங்களை ஆதரிக்க வேண்டியதன் அவசியத்தையும் இப்படம் வலியுறுத்தியிருக்கிறது. படம் குறித்தான நிறை குறைகள் நிறையவே இருப்பினும், மனித சமத்துவக் குரலை உரக்கப் பேசியிருக்கும் இந்தப் படத்தை வரவேற்பதும் ஆதரிப்பதும் நமது சமூகக் கடமையாகும். மாரி செல்வராசு மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள். பாராட்டுகள்.
***
மாமன்னன், மண்ணுவாக ஆக்கப்பட்டதன் - இருந்துவிட்டதன் பின்புலத்தைப் படம் ஓரிடத்தில் பதிவு செய்திருக்கும். மண்ணுகள் மாமன்னன்களாக ஆக வேண்டியதன் அவசியத்தைப் படம் வலியுறுத்தும். மாமன்னன், அதிவீரா, லீலா போன்ற பெயர்கள் கதை மாந்தர்களின் பெயர்களாக வருகின்றன. இந்தப் பெயர்கள் எல்லாம் எதிர் அதிகார மரபின் கலைப் படைப்பில் புழங்குவன. மாரி செல்வராசுவும் எதிர் அதிகார மரபைச் சார்ந்தவர்தான்.
மகாராசன் என்பதற்கு மாமன்னன் என்பது பொருள். மகாராசன் எனும் எனது பெயரும் மாமன்னன் என்பதே.
சாதிய மேட்டிமையின் தாட்டியத்திற்கு, கலை வடிவிலான எதிர் அதிகார மரபைக் காண்பித்திருக்கும் மாமன்னன் படத்தைப் போலவே, நான் பிறந்த போதே எதிர் அதிகார மரபை எமக்குள் விதைத்திருக்கிறார் எனது அப்பா நாராயணன்.
மாமன்னன் படம் பார்த்த பிறகு, எனது அப்பாவின் எதிர் அதிகாரச் செயல்பாடுகள்தான் எனது நினைவுகளில் வந்து வந்து போயின. எனது அப்பாவைக் குறித்து நான் எழுதியிருந்த நினைவுக் குறிப்பை இவ்விடத்தில் பகிர்வதும்கூடப் பொருத்தமாய்த்தான் இருக்கும் எனக் கருதுகிறேன்.அது வருமாறு:
பஞ்சமும் வறுமையும் பல உயிர்களைக் காவு வாங்கிக் கொண்டிருந்த காலத்தில், எனக்கு முன்பாகப் பிறந்திருந்த அண்ணன்களையும் அக்காக்களையும் இழந்து பரிதவித்துக் கொண்டிருந்த ஒரு இக்கட்டான சூழலில், என் அம்மாவுக்கு ஒன்பதாவது பிள்ளையாகப் பிறந்திருக்கிறேன்.
மூன்று பெண் பிள்ளைகள் எஞ்சியிருந்தாலும், ஆணொன்று வேண்டுமென வரமிருந்தும் தவமிருந்தும் என்னைப் பெற்றதாக அம்மா அடிக்கடி சொல்வார். இந்தப் பிள்ளையாவது உசுரோட நெலைச்சு நிக்கனும்னா, மூக்குத்தி குத்தி பிச்சைன்னு பேரு வைங்கன்னு ஊரே சொல்லுச்சாம்.
பேருக்கும் உசுருக்கும் என்ன தொடுப்பு இருக்கு? பேருக்கும் மானத்துக்கும் தானே தொடுப்பு இருக்குன்னு நெனச்சிருக்காரு அப்பா. பெயரில் என்ன இருக்குன்னு சாதி சனமே கேட்டப்போ, ஒரு மனுசரோட அவமானத்துக்கும் மரியாதைக்கும் அந்த மனுசரோட பேருங்கூடத்தான் காரணமா இருக்கும்னு சொல்லி, எனக்கு மகாராசன் என்றே பெயர் வைத்தவர் என் அப்பா தான்.
வீரக்குடும்பன் என்கிற என் தாத்தாவின் பெயரை மறக்கடித்து, பம்பையன் என்றே பட்டப்பெயரிட்டு அழைத்து வந்திருக்கிறது சாதியச் சமூகம். தன்னோட பெயரை இந்தச் சமூகம் உச்சரிக்க மறுத்ததால், வேறொரு பெயராலேயே வாழ்ந்து மடிந்து போன தாத்தாவின் சோகங்கள் அப்பாவுக்கும் தெரிந்திருக்கிறது. அதனால் தான் என்னவோ, பிச்சை என்ற பெயரை மறுத்து, மகாராசன் எனப் பெயர் வைத்திருக்கிறார் அப்பா.
உயர்த்திக் கொண்ட மேட்டிமைச் சமூகப் பெயர் வழக்குகள் சமூக மதிப்பையும், உழைக்கும் எளிய மக்களின் பெயர் வழக்குகள் சமூக இழிவையும் தரும்படியாக இருந்த ஒரு சமூக அமைப்பில், எளிய குடும்பத்தில் பிறந்த எனக்கு மகாராசன் எனப் பெயர் வைத்திருப்பதை எதிர் அதிகார மரபின் தன்மான அடையாளமாகத் தான் பார்க்கிறேன்.
இது போன்ற எதிர் அதிகார மரபின் விதைகளை என்னுள் விதைத்திருக்கிறார் என் அப்பா. என் வாழ்விலும் எழுத்திலும் புலப்படுகிற எதிர் அதிகார மரபை முதலில் என் அப்பாவிடமிருந்தே பெற்றிருக்கிறேன்.
என்னுள் விரிந்திருக்கும் ஆளுமைகளுக்குத் தன்மான நீர் பாய்ச்சி வளப்படுத்திய என் அப்பா தான் என் முதல் ஆசானாய், முன் மாதிரி நாயகராய் இன்னும் இருந்து கொண்டிருக்கிறார்.
நினைவுகளில் வாழ்கிற அவரது வாழ்க்கைப் பாடுகளே எனது முதல் பாடங்கள்.
மகாராசன் எனும் மாமன்னனாகிய எமது எழுத்துச் செயல்பாடுகளும் எதிர் அதிகார மரபின் விளைச்சல்கள்தான். மானுட சமத்துவத்துக்கான இந்த மரபு இன்னும் நீளும்; இன்னும் ஆழ உழுதிடும்.
**
தொடர்புக்கு: maharasan1978@gmail.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக