ஞாயிறு, 13 ஆகஸ்ட், 2023

மேல்சாதி - உயர்சாதி - ஆதிக்க சாதி : சொல்லாடல்களும் பொருண்மைப் பிழைகளும் :- மகாராசன்


தமிழ்ச் சமூகத்தில் சாதி பற்றிய பேச்சுகளும் உரையாடல்களும் விவாதங்களும் வரும்போதெல்லாம், முரண்பட்ட சாதி நிலைமைகளைச் சுட்டும்போது மேல்சாதி என்றும், உயர்சாதி என்றும், ஆதிக்க சாதி என்றும் குறிப்பிடுகிற பெருவழக்கம் பொதுப் புத்தியாகப் படிந்திருக்கிறது. இவ்வாறு சுட்டுவதும் எழுதுவதும் பேசுவதும் பிற்போக்கான கருத்தியல் கண்ணோட்டத்தைக் கொண்டிருப்பதாகும்.

சாதி என்பதில், தாழ்ந்த சாதி அல்லது ஒடுங்கிய சாதி எனக் குறிப்பதும் சுட்டுவதும் மிகப் பிழையானதும் பிற்போக்கானதுமாகும். ஏனெனில், பிறப்பில் தாழ்வான அல்லது தாழ்ந்த அல்லது ஒடுங்கிய சாதி என எதுவுமில்லை. அதேவேளை, இன்ன இன்ன சாதியில் பிறந்தவர்கள் எனும் ஒரே காரணத்திற்காகவே, மற்றபிற சாதியினரால் தாழ்த்தி நடத்தப்பட்டனர்; ஒடுக்கப்பட்டனர். அதனால், தாழ்த்தப்பட்ட சாதியினர் அல்லது ஒடுக்கப்பட்ட சாதியினர் எனும் சொல்லாடல்கள் புழக்கத்தில் பரவின.

அதேவேளை, பிறப்பிலேயே உயர்சாதியாக யாரும் பிறப்பதும் இல்லை. பிறப்பில் தம்மை உயர்சாதியாக / மேல்சாதியாகப் பாவித்துக் கொண்டவர்களும், உயர்சாதியாக / மேல்சாதியாக நினைத்துக் கொண்டவர்களும்தான் உண்டே தவிர, உயர்சாதியாகவே / மேல்சாதியாகவே யாரும் பிறந்ததில்லை; பிறக்கப்போவதுமில்லை. 

இந்நிலையில், சாதி முரண்களையும், மோதல்களையும், பாகுபாடுகளையும் பேசும்போதும் எழுதும்போதெல்லாம் பல தரப்பினரும் மேல் சாதி / உயர்சாதி / ஆதிக்க சாதி எனும் சொல்லாடல்களைத்தான் பயன்படுத்துகின்றனர். 

மேல் சாதியினர் / உயர்சாதியினர்/ ஆதிக்க சாதியினர் எனும் சொல்லாடல்களைப் பயன்படுத்தும்போது, பிறப்பிலேயே ஒரு தரப்பினர் மேல் சாதியாக / உயர்சாதியாக / ஆதிக்க சாதியாகப் பிறந்திருக்கிறார்கள் எனும் கற்பிதம் உண்மையானது என நம்புவதும்; அதுவே இயல்பானது என்பது போன்ற சமூகத் தோற்றத்தைக் கருத்தியல் ரீதியாக மனித சமூக மூளைக்குள்ளும் சமூகப் படிமங்களுக்குள்ளும் பதிய வைக்கின்றன; அவ்வாறுதான் பதிந்தும் இருக்கின்றன.

மேல் சாதி / உயர்சாதி / ஆதிக்க சாதி எனும் சொல்லாடல்கள் கட்டமைத்திருக்கும் கற்பிதம் உண்மையானது; இயல்பானது என்பதான பொதுப் புத்திச் சட்டகத்தை ஏற்படுத்தி வைத்திருக்கின்றன. மற்ற பிற சாதியினரை ஒடுக்குவதில் குறியாய் இருக்கும் ஒருசில சாதியினர் தம்மை உயர்சாதி / மேல்சாதி / ஆதிக்க சாதி எனப் பகட்டாய்ப் பீற்றிக் கொள்வதும், தாட்டியம் செய்வதும், அவ்வாறு அடையாளப்படுத்திக் கொள்வதிலும் இதுபோன்ற சொல்லாடல்களைப் பயன்படுத்திக்கொள்வதுண்டு. 

சாதி ஆதிக்கவாதிகள் அவ்வாறுதான் பயன்படுத்துவார்கள். அவர்களது நோக்கில் அவ்வாறான சொல்லாடல்கள் அவர்களுக்கு ஏற்புடையதாகக் கருதப்படுகின்றன. மேலும், இதே சொல்லாடல்களைத்தான் சமூகத்தின் பொதுவாக்கப்பட்ட சொல்லாடல்களாகப் பொது சமூகத்தினர் மட்டுமின்றி ஏகத்துக்கும் எல்லோரும் பயன்படுத்தும் சொல்லாடல்களாக ஆக்கப்பட்டிருக்கின்றன. 

இத்தகையச் சொல்லாடல்கள் ஏற்படுத்துகிற உளவியல், பண்பாடு, அறிவுத் தாக்கத்தின் காரணமாகத்தான் மேல்சாதி / உயர்சாதி/ ஆதிக்க சாதி எனும் சொல்லாடல்களைச் சமூக மாற்றம் குறித்தும் சாதிய எதிர்ப்பும் பேசுகிற சனநாயகச் சக்திகள்கூட தெரிந்தோ தெரியாமலோ பயன்படுத்தி வருகின்றனர். இத்தகையச் சொல்லாடல்களைப் பயன்படுத்துவதும் புழங்குவதும் ஆதிக்க மனநிலையும் அதிகாரமும் நிரம்பிய சாதியினரின் கற்பிதங்களை ஏதோ ஒரு வகையில் ஏற்றுக்கொள்வதாகும்.

தாழ்ந்த சாதி எனும் சொல் வழக்கு தவறானது என்பதைப் போலவே, மேல்சாதி / உயர்சாதி / ஆதிக்க சாதி எனும் சொல் வழக்குகளும் தவறானவை; பிழையானவை; பிற்போக்கானவையாகும். 

தாழ்ந்த சாதி எனத் தொடக்கத்தில் குறிக்கப்பட்டாலும், அதில் உள்ள சமூகப் பொருண்மைப் பிழை உணர்த்தப்பட்ட பிறகு 'தாழ்த்தப்பட்ட சாதி அல்லது ஒடுக்கப்பட்ட சாதி' எனச் சொல்லாடல் சரிசெய்யப்பட்டது. அதாவது, குறிப்பிட்ட சாதியினர் அவர்களாகத் தாழ்த்திக் கொள்ளவில்லை; அவர்களாக ஒடுங்கிக்கொள்ளவில்லை. மாறாக, மற்றவர்களால் தாழ்த்தப்பட்டனர்; மற்றவர்களால் ஒடுக்கப்பட்டனர். ஆகையால்தான், தாழ்த்தப்பட்ட சாதியினர் அல்லது ஒடுக்கப்பட்ட சாதியினர் எனக் குறிப்பது சரியான சொல்லாடல்களாகக் கருதப்பட்டன. 

இதே நோக்கில் பார்க்கும்போது, குறிப்பிட்ட சாதியினர் ஆதிக்கம் செய்வதை, உயர்வடைவதை மற்ற சாதியினரின் துணையால் நடந்திருக்க முடியாது; அப்படி நடக்கவும் கிடையாது. 

இந்நிலையில், குறிப்பிட்ட சாதியினர் தம்மை சமூகப் பொருளாதாரப் பண்பாட்டுத் தரநிலைகளிலும், சாதி பற்றிய கற்பிதங்களிலும் உயர்த்திக் கொண்டனர். உயர்த்திக் கொள்வதற்கான பல்வேறு வேலைகளை, தந்திரங்களை, சூழ்ச்சிகளைச் செய்திருக்கின்றனர். இத்தகையச் சாதிய உயர்வாக்கம் அல்லது மேல்நிலையாக்கம்தான் ஆதிக்க மனநிலையையும் அதிகாரத்தையும் பெறுவதற்குத் துணை நின்றிருக்கிறது. 

இவ்வாறான ஆதிக்க மனநிலையும் அதிகாரமும்தான் பிற சாதியினரைத் தாழ்த்தவும் ஒடுக்கவும் முனைப்பு காட்டியுள்ளன. அதாவது, சாதிய மேட்டிமைப் பகட்டும் சாதித் தாட்டியத் திமிரும் பிற சாதியினரைத் தாழ்த்துவதிலும் ஒடுக்குவதிலும் குறியாய் இருந்து வந்திருக்கின்றன. 

மற்றபடி, அந்தந்தச் சாதியினர் எவரும் பிறப்பிலேயே உயர்ந்த சாதியும் கிடையாது; ஆதிக்க சாதியும் கிடையாது; மேல் சாதியும் கிடையாது. 

பிறகெப்படி, அவர்களைக் குறிப்பது? 

உயர்த்திக்கொண்ட சாதி வெறியினர் / உயர்த்திக் கொண்ட சாதியினர் / ஒடுக்கும் சாதியினர் /ஆதிக்கம் செய்யும் சாதிகள் என்பதுதான் இப்போதைய சூழலில் சரியான சொல்லாடல்களாக இருக்கும். பிற்காலங்களில் அல்லது இப்போதேகூட சரியான பொருண்மை கொண்ட சொல்லாடல்கள் முன்மொழியக் கூடும்.

உயர்த்திக் கொண்ட சாதிகள் / ஆதிக்கம் செய்யும் சாதிகள் / ஒடுக்கும் சாதிகள் எனக் குறிக்கும்போதுதான், செயற்கையாய் உயர்த்திக்கொண்ட சாதிதான் அது; பிறப்பிலேயே அது உயர்வான சாதி கிடையாது; பிற சாதியினர் மீது ஆதிக்கம் செய்வதும் ஒடுக்குவதும் செயற்கையானது; ஆதிக்கத்தாலும் அதிகாரத்தாலும் அது நடக்கிறது எனும் பொருள்படுகிறது. 

இங்கு, தாழ்த்தப்பட்ட அல்லது ஒடுக்கப்பட்ட சாதிகள்தான் உண்டே ஒழிய, தாழ்ந்த சாதிகள் கிடையாது; ஒடுங்கிய சாதிகள் என எதுவும் கிடையாது. அதேபோல, உயர்த்திக்கொண்ட சாதிகள்தான் / ஆதிக்கம் செய்யும் சாதிகள்தான் உண்டே தவிர, பிறப்பிலேயே உயர்சாதிகளோ ஆதிக்க சாதிகளோ மேல்சாதிகளோ எதுவும் கிடையாது. 

அதேபோலத்தான், இடைநிலைச் சாதிகள் எனும் சொல்லாடலும் புழங்கப்படுகிறது. மேல் சாதிகள் என்பதான பகுப்பும், கீழ் சாதிகள் என்பதான பகுப்பும் உண்மையானது; இயல்பானது என்பதாக ஒத்துக் கொள்ளும் நிலையில்தான், அதற்கிடைப்பட்ட நிலையில் உள்ள சாதிகள் இடைநிலைச் சாதிகள் என்பதாக ஒத்துக்கொள்ளும் வெளிப்பாடே இடைநிலைச் சாதிகள் எனக் குறிப்பதுமாகும். மேல்சாதிகள் என்பதும், உயர்சாதிகள் என்பதும், கீழ்சாதிகள் என்பதும் உண்மையில்லை; சரியானதுமில்லை. அவ்வாறு சுட்டுவதும் பிழையானது. அதுபோலத்தான் இடைநிலைச் சாதிகள் எனச் சுட்டுவதும் பிழையானதுமாகும்.

ஏனெனில், பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும் என்பதுதான் தமிழர் மரபு. அதுதான் உண்மையும் கூட. 

ஆகையால், உயர்சாதி / மேல்சாதி / ஆதிக்க சாதி / இடைநிலைச் சாதி எனும் சொல்லாடல்களைப் புறக்கணிப்பதும், அவ்வாறான சொல்லாடல்கள் புழங்குவதைத் தவிர்த்தலும்தான் சமூக சமத்துவக் கண்ணோட்டமாகும்.

இந்தக் கட்டுரையில் முன்மொழியப்பட்டிருக்கும் சொல்லாடல்களும் கருத்தாடல்களும் முடிந்த முடிபுகள் கிடையாது. சமூக சமத்துவத்துக்கான உரையாடல் முன்னெடுப்பு அவ்வளவே. இதுபோன்ற உரையாடல்கள் நிரம்ப வரும்போதுதான் சரியான சொல்லாடல்களையும் கருத்தாடல்களையும் பெறமுடியும்.


கட்டுரையாளர்:

முனைவர் ஏர் மகாராசன்,

சமூகப் பண்பாட்டியல் ஆய்வாளர்.

மக்கள் தமிழ் ஆய்வரண்,

தமிழ்நாடு.

தொடர்புக்கு:

maharasan1978@gmail.com




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக