சனி, 2 செப்டம்பர், 2023

அம்மாவை வரைதல் - மகாராசன்


அன்பின் உயிர் முடிச்சை 
மொழியின் ஒலித்திரளை விதைத்தவள்.
உலகைப் போர்த்தும் கதிர் போல ஒளியாய் நுழைந்தவள்.

தன்னில் பாதியைத் 
தந்தவன் இருந்தாலும் 
தன்னையே ஈந்து 
தன்னைக் கரைப்பவள்.

அய்ம்பூத வேர்கள் படர்ந்த 
அற்புத உலகம் காண 
அய்ம்புலன்கள் செதுக்கிய 
உயிரதிசயம்.

மருவிலா எண்ணம் தோய்த்து 
கருவில் வண்ணம் தீட்டிய 
உயிர்த் தூரிகை.

கருவாய்த் தங்கி 
உருவாய் முழுதாகி 
மகவாய்ப் பிறந்து 
முலை முட்டிப் பால் சுவைத்து,
மார்பில் தூங்கி மடியில் புரண்டு
தோளில் அமர்ந்து 
வாழ்வைச் சேர்த்தழைக்க வாய்த 
பெரு வரம்.

யாராக இருக்க முடியும் 
அம்மாவைத் தவிர.
*
கூதலில் ஒடுங்கும் 
என்னுடல் போர்த்திய 
உனது கவுச்சி மணத்த 
சேலைத் துணியே 
உலகமெனக் கிடந்தது 
தவழ் மனம்.

இடுப்பில் எனைச் சுமந்து 
வெங்கு வெங்கென்று 
கால் பொசுங்க நடக்கையில், 
முகத்தில் வழியும் உழைநீரை 
நாக்கின் நுனி தேக்கியதில் 
உப்புக் கரித்த பாலென 
வியர்வை நீர் ஆனது. 
அதுதான் தாய்ச் சுவையெனத் தவழ்ந்தது பால் மனம்.

ஒனக்காகத் தானப்பா 
உசுர வச்சிருக்கேன்னு 
சொல்லும் போதெல்லாம், 
ஓயாம இதயே சொல்லாதவென 
ஓங்கி நான் கத்தும் போது, 
பொசுக்கென அழுது 
பொலபொலன்னு சிந்தும் கண்ணீரெல்லாம் பொய்யென நினைத்தது விடலை மனம்.

இழுத்துக்கிட்டுக் கெடக்காம பொட்டுன்னு சாகணும்னு 
ஓஞ்சோட்டுக் கெழவிகளிடம் 
சொல்லி வைத்தாய், 
உயிர் மாய்க்கும் காலமும் தெரிந்திருந்தாய்.

என்னாதான் வாங்கியாந்தாலும், வெத்தல பாக்கும் போயலப்பொட்டணமும் 
அப்பனுக்குத் தெரியாம 
நாந் தருகையில, 
உசுரயே அள்ளிக் கொடுத்தாப்போல 
முகமெல்லாம் சிரிச்சு நிக்கும்.

அப்பன் கிட்ட காசு வாங்க கண்டதல்லாத்தையும் 
காதுல வாங்கணும்.
அஞ்சோ பத்தோ அதையும் வாங்கி அப்பன விட்டு நகர்ந்தப் பின்னே, வழியனுப்பும் சாக்கில் 
கூடவே நீ வருவாய்.
வரும் போதே 
சிறுவாட்டுக் காசெடுத்து 
கை பிடித்து உள் நுழைப்பாய். 
அந்தக் காசெல்லாம் 
சுருக்குப் பை வாசம் வீசும். 
அது தானம்மா 
உன் உயிர் வாசம்.

ஒரு நாள் விழுந்தாய்,
பேச்சும் மூச்சுமற்றுப் 
படுக்கையில் கிடந்தாய். 
பாவி மகன் பக்கத்தில் இல்லை.

சாவுக்கு வருவானோ 
பெத்த மகன்னு 
சாக மறுத்தாய் 
எனை நினைத்து.

ஓம்புள்ள வந்திருக்கேன்னு 
ஓங்காதில் நானழுத போது 
கண் திறந்து பார்த்தாய். 
உடலில் கிடந்த உயிரை 
கண்ணீராய் என் மேல் வடித்து நீயடங்கிப் போனாய்.

இரவில் ஒழுகும் 
மழை நீர் போல 
மனம் அழுகின்றது இன்னும் 
உசுரப் புடுச்சி வச்சிருந்த 
உனை நினைத்து.

இன்னும் கொஞ்ச காலம்
இருந்திருக்கலாம் அம்மா.

ஆனாலும்,
எப்போதும் 
நினைவில் வாழ்கிறாய் அம்மா.

என் சோலையம்மாளுக்கு
நினைவஞ்சலி.

ஏர் மகாராசன்
02.09.2023

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக