நிலத்தில் முளைத்த சொற்கள். நிலத்தில் பயிர்கள் தானே முளைக்கும். ஆனால் நிலத்திற்கென்றே சில சொற்களும் இருக்கத்தானே செய்கின்றன. அவை நிலம் சார்ந்த - உழவு சார்ந்த - உயிர் சார்ந்த சொற்கள். அப்படியானால் நிலத்தில் முளைத்த சொற்கள் யாவுமே நிலத்தை மையப்படுத்திதானே இருக்கும். ஆம் நிலம் சார்ந்த, மண்மணம் கமழும் கவிதைகள் தாம் இந்த ஐம்பத்தி ஐந்து கவிதைகளும். நிலத்தை இப்படியெல்லாம் உருவகப்படுத்தி கவிதை எழுத முடியுமா என்று ஆச்சர்யமாய் இருக்கிறது. உயிரை உணரும் தருணத்தில் வரும் மறு உயிர்த்தலை, மரித்துக் கொண்டிருக்கையில் திடீரென மீட்கப்படுவதை உணர்ந்தால்தான் அறியமுடியும். அப்படித்தான் இவர்தம் கவிதைகளை வாசித்து உணரவேண்டும். ஒவ்வொரு கவிதையையும் மீண்டும் மீண்டும் வாசிக்கத்தூண்டும் சொற்றொடர் கொண்டு தேர்ந்த சிற்பியின் கைப்பக்குவத்தில் வடித்துள்ளார். கருப்பம் கொண்ட பிள்ளைத்தாச்சியாய் உயிர்த்தலைச் சுமக்கின்றன நிலம் கோதிய மகாராசன் அய்யாவின் கவிதைகள்.
எழுதப்படாமலே போனது எனதூர்த் தலபுராணம் என்னும் சொற்களின் வேதனை நம்மையும் அசைக்கிறது. இப்படித்தான் எத்தனையோ கோவில்களும் சாமிகளும் நம்மைச் சுற்றிக் கவனிக்கப்படாமலும், களவு போய்க்கொண்டுமிருக்கின்றன. சாமி சப்பரம் ஏறி சுற்றி வரும்பொழுதாவது பார்க்கட்டும் தரிசாய்ப் போன நிலங்களையும், கண்ணீர் வறண்ட விவசாயியின் கண்களையும். முகமற்ற குறிகள் புணர்ந்து கிடந்த கருவறை என்பதைச் சிவன் கோவில் என்றே புரிந்து கொள்கிறேன். வளர்பிறையும் தேய்பிறையும் காலத்தில் கடப்பதை கருநாகம் சட்டை உரிப்பதில் அறியத்தருவதாய்க் கூறிச்செல்கிறார். பாம்புகள் சட்டை உரிக்கக் காலமுண்டா எனத் தெரியவில்லை. நாகமாணிக்கம் குறித்த பல்வேறு கதைகளைப் போல, பாம்பு உரித்த சட்டையை கண்ணால் காணும் வரை அதுவும் பொய்யாய் இருக்குமென்றே நினைத்திருந்தேன். தட்டான், பாம்பு, கெண்டை, நத்தை, தவளை என சிற்றுயிர்களோடு சேர்ந்தது தானே நிலம் சார்ந்த கிராம வாழ்க்கை. கவிதையின் உயிர்கள் எல்லாமே எனது பால்யத்தை ஞாபக்ப்படுத்துவதாய் இருந்தது.
‘மண்மீட்டிய வேர்களின் இசை...’ என்ன அழகான கற்பனை. மண்ணை நிலப்பெண்ணின் விரல்களாய் உருவகித்து, வீணையின் நரம்புகளென நீண்டு கிடக்கும் வேர்களை மீட்டுவதான கற்பனை இசை நம் செவிகளுக்குள்ளும் கேட்கத் துவங்குகிறது. ‘நனைந்து பசப்படித்த நிலம்’ இப்படியான சொல்லாடல்கள் தலை சாய்ந்து கிடக்கும் கதிர்களைப் போல பக்கங்கள் எங்கிலும் காணக்கிடைக்கின்றன. ஒன்றை ஒன்றாய் உருவகிப்பதும், அது பொருந்திப் போவதும், அதனை வாசகன் ஒவ்வொரு அர்த்தம் செய்து உணர்வதும், புதிய கோணத்தை யாரேனும் கண்டு கூறுவதும் கவிஞனுக்கு மகிழ்ச்சியான விஷயம் தானே.
மதுவைப்பற்றிய கவிதை மதுவின் பாவப்பட்ட முகத்தையும் கலங்கமற்ற கண்களையும் மீள் உருவாக்கம் செய்கிறது. மது, பாலச்சந்திரன் என சமூகத்தில் நடந்த கொடுமைகளைக் கவிதைகளின் வாயிலாகத் தட்டிக்கேட்கிறார். நல்ல கவிஞர் தன் சுக துக்கங்களை, தன் மன உணர்வுகளைக் கவிதைகளில் தான் பெரும்பாலும் வடிப்பார். அப்படி எழுதப்படும் எல்லாக் கவிதைகளையும் நாம் வாசிப்புக்கு வைப்பதில்லை. சிலநேரம் மனம்முண்டி எழுதியவற்றை முகநூலில் பகிரவோ, நண்பர்களுக்கு அனுப்பவோ செய்வோம். கவிஞரானவர் உணர்ச்சிகள் நிறைந்தவர். உடனே எதிர்வினையாற்றக் கூடியவர். அப்படித்தான் கவிஞர்.மகாராசனும் சமூகத்தில் நடந்த அக்கிரமங்களைக் கேள்வியெழுப்பிச் செல்கிறார். எல்லாமும் நிலம் சார்ந்தே திடமாய்ப் பரந்து நிற்கிறது.
நேற்றுதான் “செவ்வாய்க்கிழமை மதியத் தூக்கம்” என்ற திரு.சுகுமாரனது மொழியாக்கக் கதையை, விமலாதித்த மாமல்லன் அய்யா எழுதிய புனைவு என்னும் புதிர்ப் புத்தகத்தில் வாசித்தேன். அதிலும் அப்படித்தான், திருடன் என நம்பி சுடப்பட்ட மகனின் கல்லறைக்கு வரும் தாய் தன் மகன் குற்றவாளி இல்லை எனத் தீர்க்கமாய்க் கூறுவாள். அப்படியான சூழ்நிலையில் யாரோ செய்கின்ற செயலுக்கான / தவறுக்கான குற்றவுணர்ச்சி நம்மையும் பற்றிக்கொள்கிறது. நாமும் அதே மனித இனம் தானே. சமூகப்பொறுப்பு கொண்ட யாருக்குமே இந்த எண்ணம் வரத்தான் செய்யும். செய்யாத தவறுக்கு, தவறான புரிதலில் தண்டிக்கப்படும் ஆத்மாக்களை கடவுள் வேற்றுலகத்தில் என்ன சொல்லி வரவேற்பார்? ஒருவேளை இத்தனை மோசமான மனிதருக்கிடையே நீ இருக்கவேண்டாம் என்று கூறுவாரோ என்னவோ.
ஐந்தாவது கவிதையை, சுய ஆற்றுப்படுத்துதலைக் கவிதையின் வாயிலாகக் கண்டுக்கொள்ளும் தனியனின் சொற்களாய்ப் பார்க்கிறேன். மனிதர்களும் சிலநேரங்களில் நிலத்தில் துள்ளி விழுந்த மீனைப்போல மாண்டு போகின்றனர். மீன் நினைத்திருக்கக் கூடும் மறுபக்கம் பெருங்குளமொன்று இருக்கிறதென்று அக்கரைப்பச்சையென நம்பும் மனிதனைப்போல.
மலைத்தாய்ச்சி, வனத்தாள், வனத்தாய்ச்சி, மரத்தாய்ச்சி, நீர்முலைத்தாய்ச்சி, நீர்ப்பால்தாய்ச்சி, கடல்தாய்ச்சி, மலையாள் இப்படியான வார்த்தைகளை இன்றுதான் வாசிக்கின்றேன். பிள்ளைத்தாய்ச்சி போல வனத்தாய்ச்சியும், மலைத்தாய்ச்சியும் மரங்களோடு, மிருகங்களோடும் மனிதர்களையும் வரித்துக் கொள்கிறார்கள். சமயத்தில் கொல்கிறார்கள். அதைத்தான் இயற்கை அளிக்கும் தண்டனையாகக் கூறுகிறார் கவிஞர். காலத்தில் கரைதலும் வாழ்வின் நிமித்தமானது. நல்லதொரு சொல்லாடல். அப்படித்தான் வாழ்க்கை தன் பயணத்தைத் தொடர்கிறது எல்லோருக்குமாய்.
விவசாயி நிலத்தில் இறங்க மறுத்தால் வெண்பாதங்களின் கைகள் தொழுதாலே பற்றும் என்று சாடுவதுடன், உழைப்பாளியின் வேதனையைக் கொப்பளங்களின் வழியே அறியத் தருகிறார். கவிதையின் மென்சோகத்தைத் தாண்டி, நினைவின் இடுக்கு, அடை காக்கும் மவுனம், நினைவுக் காலடி, முளைத்த கனவுகள் இப்படியான வார்த்தை அடுக்குகளில் லயிக்கின்றது மனம்.
பதினேழாவது கவிதை அத்தனை அழகு. கூடாக்காதலின் நினைவின் பெட்டகமென விரியும் ஒற்றையடிப்பாதையில் ஒட்டிக்கொள்ளும் நாயுருவி முள் குத்தி வலிப்பதில்லை. நெருஞ்சி முள்ளை மட்டுமே பார்த்துப் பழகிய கண்களுக்கு காதலின் நினைவுகள் நெருஞ்சிப் பூவைப் போல அழகாய் தெரிகிறது.
வாழ்விழந்த விவசாயிகளின் வலியையும், வேதனையையும், கண்ணீர்க்கதையையும் நிலத்தில் முளைத்த சொற்களைக்கொண்டு தூவிச்செல்கிறார் ஏர் மகாராசன் அய்யா. மகிழ்ச்சியும், செல்வமும், செழிப்புமாக அவை தளைக்கட்டும் அவர்தம் வாழ்வில் என்ற வேண்டுதலைத் தவிர வேறு என்ன செய்யமுடியும் என்ற சிந்தனையை விதைக்கிறது அவரது சொற்கள். நிலத்தாளின் தொப்புள் உறவை எப்படி முறிக்க முடியும்? உணவளிக்கும் நிலமுடையான் கையேந்தும் அவலம் இனியாவது நிகழாமல் இருக்க வேண்டும். மறைமுகமாய்ச் சொன்னாலும் மறைக்கமுடியாத சரித்திரத்தின் மிச்சமென எஞ்சி நிற்கிறது விதைப்பிற்குக் காத்திருக்கும் நிலம்.
புயலைக்குறித்த கவிதை வயநாடு நிலச்சரிவையும் அம்மக்களின் நிலையையும் ஒத்திருப்பது சோர்வை அளிக்கிறது. இயற்கை அன்னையின் கோபத்துக்கு இரையாகும் பிஞ்சுகளுக்கு என்ன சொல்லி வழியனுப்புவோம்? சிலநேரம் மற்றவர் துன்பத்தை உணர்த்த ஒரு துன்பத்தைத் தருகிறாளோ என்று கவிதையின் வாயிலாக எண்ண வைக்கிறார். மனிதனால் வீடும் கூடும் இழந்தவர்களின் வலியை இயற்கை நமக்கு எப்பொழுதாவது உணர்த்திச்செல்கிறது. உணர்தல் முக்கியம். நாடற்றவர்களின் வலியை வீடற்றவர்கள் உணரக்கூடும் தானே! அகதிகளாய் வாழும் மக்களின் அவலநிலையை அவர்தம் வாழ்க்கையை கவிதைகளின் வரிகளில் பதிந்திருக்கிறார். சொந்த நாட்டில் இருந்து விரட்டப்படுவதும், இனப்படுகொலையும் இன்றும் ஏதோ ஒரு இடத்தில் நடந்து கொண்டே தான் இருக்கிறது. அண்டைய நாடுகளில் நடப்பதை கண்பொத்தி கடந்து போய்விடலாம், வெகுநாள் வேண்டியிராது அப்படி ஒரு துன்பத்தை எதிர்கொள்ள.
இந்திரர் அமிழ்தமே தான் இந்த மழை… ஒவ்வொன்றுக்கும் ஒரு வாசம் இருக்கிறது இல்லையா? நெற்பயிரோ, காய்ந்த ஓலையோ, தான்தோன்றிப் புற்களோ அவற்றிக்கான மணம், நெடுநாள் ஊடல் என்று குறிப்பிட்டு கார்காலமழையை, மழைதரும் மண்வாசனையை எல்லா வரிகளிலும் புகுத்தியிருக்கிறார். குளுமையை சொற்களில் பரப்பி ஜில்லிட வைக்க நிலத்தில் முளைத்திருந்தால் தானே முடியும்.
இருபத்தி ஏழாவது கவிதை கிராமங்களில் இன்றும் எங்காவது நடமாடிக்கொண்டிருக்கும் குடுகுடுப்பைக்காரனையும், கிராமத்தில் வாழும் குடும்பச்சியையும் குறித்தது, பின் நிலத்தையும். எல்லாக் கவிதைகளிலும் நிலத்தின் தொடுகை இல்லாமல் இல்லை. நிலம் சார்ந்தே எல்லாமிருக்கிறது. தரிசாய்ப் போன நிலத்தினை எண்ணி மாண்டு மண்ணுக்குள் போனவளும் கண்ணீர் வடிப்பாள் என்கிறார். விதைத்த நிலத்தை வெற்றிடமாய்ப் பார்க்கும் கொடுமை யாருக்கும் வரவேண்டாம். மறந்துபோன குடுகுடுப்பைக்காரனை நினைவுபடுத்துகிறது இந்தக்கவிதை. பெரிய மீசையுடன் முண்டாசு கட்டிக்கொண்டு வீட்டுவாசலுக்கு வந்து குறி சொல்வான். நல்லகாலம் பொறக்குது என்று சக்கம்மா வாக்கு சொல்பவனின் சொற்களை உள்ளிருந்தே கேட்டுக்கொண்டிருப்பார்கள். யாரும் அவன் முன்னர் வருவதில்லை. பெரும்பாலும் என்ன சொல்வானோ என்ற பயத்தோடே தான் கேட்பார்கள். மனோரீதியாக அவன் சொல்வது மனதைப் பாதிக்கும் என்றே நினைக்கின்றேன். ஒருமுறை பக்கத்து வீட்டில் முன் நின்று அங்கு ஒரு உயிர் பிரியப்போவதாகக் குறி சொல்லிச் சென்றான் ராப்பாடி. எதிர்வீட்டுப்பெண்ணும் அதைக் கேட்டு என்ன நடக்குமோ என்று தன் கவலையைப் பகிர்ந்தாள். மூன்றாம் நாளில் அந்த வீட்டில் முடியாமல் கிடந்த பாட்டி மரித்துப் போயிருந்தாள். இப்படியான சம்பவங்கள் போதுமாயிருந்தது அவன் மீதான பயத்தை நீட்டிக்க. ராப்பாடியும் குடுகுடுப்பைக்காரனும் ஒன்றில்லை என்றே நினைக்கின்றேன். ராப்பாடி சுடுகாட்டில் உருண்டு சாம்பலைப் பூசிக்கொண்டு அலைபவன். நடுராத்திரியில் தெருக்களில் அலைந்து பாடிவிட்டு , வாக்கு சொல்பவன். மண்டையோடுகளை மாலையாக்கி அணிபவன். காலையில் அரிசி வாங்க வருவான். மேலும் மாட்டோடு வருபவனையும் குடுகுடுப்பைக்காரன் என்றே சொல்வோம். பூம்பூம் மாட்டுக்காரன் குறி சொல்வதில்லை. நல்ல வார்த்தைகள் கூறி பாடல்கள் பாடி நேர்மறை எண்ணங்களை விதைக்கின்றான். மாடும் அவன் சொல்லும் நல்வாக்குக்குத் தலையை ஆட்டி ஆமோதிக்கும். இந்தக் கவிதை மறந்து போன ராப்பாடியை ஞாபகப்படுத்துவதாய் இருக்கிறது.
இருபத்தி எட்டாவது கவிதையில், வேனிற்காலமும் அம்மை நோயுமென நிலத்தின் வெம்மை சார்ந்த நோயினை வேம்பு மரத்தாய்ச்சி எப்படித் தீர்க்கிறாள் என்று சொல்லும் போதே பயந்து முடங்கிக் கிடந்த மனித இனமென நவீன வியாதியான ஒட்டுவாரொட்டி கொரோனாவை ஞாபகப்படுத்தி முடிக்கிறார்.
காதல் காமம் கொண்டும் கவிதை எழுதத் தவறவில்லை மகாராசன் அய்யா. காமமெனும் பெருந்தீயை அடக்கிக் காத்திருக்கும் பெண்ணைப் போல நிலமகள் ஏர் பதியக் காத்திருக்கிறாள் என்று சித்தரிக்கிறார். பசி, தாகம் போன்ற உணர்வு தானே காமமும். அதனை நிலத்திற்குக் கடத்தி, உழப்படாத நிலத்தின் தாகத்தை இறுதி வரிகளில் புரியத் தருகிறார். கைசேராமல் போகும் பொருந்தாக்காதலின் நினைவுகளைப் பெருந்திணைச் சொற்கள் மழையில் கரைவதாய் உருவகித்துக் கூறுகிறார்.
“ நீ உதிர்த்துவிட்டுப் போன
மென்னகைப் பூக்களை
காயம்படாமல் கூட்டியள்ளி
மனச்சுருக்குப் பையில்
முடிந்து வைத்திருப்பதை
தெரிந்தும் வைத்திருந்தாய் “
மறைகாலத்தின் களவுப்பூ இந்த கவிதையில் வரும் இந்த வரிகள் தான் எத்தனை அழகு. இருவர் மட்டுமே அறிந்த உணர்ச்சி. அது ஈர்ப்பாகவும் இருக்கலாம், காதலாகவும் இருக்கலாம், ஆசையாகவும் இருக்கலாம். கூடாக்காதலின் வலியைக் கூட இதமான உணர்வாக வெளிப்படுத்தியிருக்கிறார். எத்தனையோ முறைப்பெண்கள் ஆசைப்பட்ட கல்யாணம் கைசேராமல் காணும் இடத்தில் கிண்டல் பேசியும், கண்களால் நலம் விசாரித்தும் மனதை ஆற்றிக் கொள்கிறார்கள். தனக்கு பேசிய மாப்பிள்ளை என்ற பெருமூச்சில் ஒளிந்திருக்கும், கொட்டிவிடமுடியாத மீள்காதல். இந்தக் களவுப் பூ வாடுவதுமில்லை, கசங்குவதுமில்லை. அப்படியே பூத்த தினத்தின் மணத்தோடும், குணத்தோடும் பூஞ்சிரிப்போடு வளைய வருகிறது.
கால்த்தடம் மறைந்த ஒற்றையடிப்பாதையின் வழி மறைந்தாலும் பாதை அங்கேயே தான் இருக்கும் நம் மூதாதையர்களின் கால் படிந்த மண்ணோடு. நாம் செய்யவேண்டியதெல்லாம் அடர்ந்த செடிகளை அகற்றிப் பாதையை கண்டுகொள்வது மட்டுமே… மனப்பறவை உதிர்க்கும் இறகுகளென நினைவுகள் உதிரத்துவங்கும் காலத்திலும் வாழ்தலின் நிமித்தமானது வேடிக்கை மட்டுமே பார்க்க வைக்கிறது. விளைநிலங்களைச் கொல்லும் அரசியல்வாதிகளையும் அவர்தம் உறவுகளையும் சாடுகிறார் கவிஞர்.
மலையாளின் குருதி கலந்த ஆற்றின் ஈரத்தில் கருவுரும் வயல் என்ற ஒப்பீடு எத்தனை அர்த்தகரமானது. தேன்சிட்டின் வாயிலாக வாழ்தலின் பக்குவத்தைச் சொல்லும் கவிஞர், வேர்களுக்கும் இலைகளுக்குமான காதலின் அத்தாட்சியாய் மலர்களை வர்ணிக்கிறார். இறகின் கனமும் பூவின் மணமும் அரும்பிடும் வாழ்க்கை இனிதுதான். கணமற்ற இறகுகள் பறப்பதற்கு ஏதுவானது. தன் வாழ்நாள் எல்லாம் வாசம் மட்டுமே பரப்பி, தேன் பகிர்ந்து, அழகாய் அரும்பிச் சிரிக்கும் வாழ்க்கை யாருக்குத்தான் பிடிக்காது?!
கவிஞர் ஏர் மகாராசனின் நிலத்தில் முளைத்த சொற்கள் களவு போன காணியை, இழவு காணும் குடும்பனை, வற்றிப் போன நதியினை, தரிசாய்க் கிடக்கும் பூமியினை, வறுமை, பசி, துக்கம், கண்ணீர் அத்தனையும் சட்டம் போட்டுக் காண்பித்தாலும் பூமியின் காதலை, காமத்தை, பேறுகாலத்தை, செழிப்பை, அழகை, அத்தியாவசத்தையும் சொல்லிடத் தவறவில்லை. சொந்தமண்ணைத் துறக்கும் அவலம் இனி யாருக்கும் வராது இருக்கட்டும்.
துரோகத்தின் நிழல் எந்த பொழுதிலும் படியாது இருக்கட்டும்.
ஒரு கவிதையில் வரும் வரிகளான, நினைக்க நீயில்லை; தலைதட்டவும் ஆத்தாளுமில்லை. இதில் தலைதட்ட ஆத்தாளுமில்லை என்றிருந்தால் இன்னும் பொருத்தமாக இருந்திருக்கும் என்று எண்ணினேன். மொழிப்பெயர்ப்பு செய்ய வேண்டிய முக்கிய கவிதைகள்தாம் இந்நூல். கொஞ்சம் கடினமான பணியாக இருக்கலாம். கவிஞர் கண்டுபிடித்த புதிய அம்மைகளை எந்தப் பெயர் கொண்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பார்கள் என்று அறிய ஆவலாய் இருக்கிறேன். கட்டுரை, ஆய்வு என்று களமாடிக்கொண்டிருக்கும் ஏர் மகாராசன் அய்யா கவிஞராகவும் மிளிர்கிறார். இன்னும் இன்னும் கவிதைகள் இயற்றுங்கள். மறைந்து போன சொற்களை மீள் உருவாக்கம் செய்யுங்கள். புதிய சொற்களை உங்கள் அறிவு நிலத்தில் இருந்து அறுவடை செய்யவும், அந்நெல்மணிகளை எல்லோரும் உண்டு களிக்கவும் புதிதாய் எழுதிக்கொண்டே இருங்கள். கவிதைநிலம் மிகச்செழிப்பாக இருக்கிறது. வார்த்தைத் தேர்வுகள் அழகு.
வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். நன்றி!
*
நிலத்தில் முளைத்த சொற்கள், மகாராசன், முதல் பதிப்பு,மே2024, யாப்பு வெளியீடு, சென்னை, பக்கங்கள் - 112, விலை: ரூ100/- புத்தகம் தேவைக்குப் பேச : 9080514506
*
கட்டுரையாளர் : கவிஞர் ராணி கணேஷ், துணை ஆசிரியர், தமிழ்வெளி இதழ். பப்புவா நியு கினியா.
பப்புவா நியு கினி இந்திய சங்கத்தின் துணைத்தலைவர். பப்புவா நியு கினி தமிழ்ச்சங்கத்தின் நிறுவனர்களில் ஒருவர். கதை, கவிதை, புத்தக மற்றும் திரைப்பட விமர்சனங்களை எழுதி வருபவர்.
நன்றி : காற்றுவெளி இதழ், மார்கழி 2024, இலண்டன் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக