திங்கள், 29 செப்டம்பர், 2025

இரமேசு பிரேதன்: இனிமையும் நீர்மையும் வலியும் சுமந்த தமிழ் - மகாராசன்


எழுத்தாளர் இரமேசு பிரேதன், செப்தம்பர் 27இல் காலமாகி விட்டார். ஆய்வு, புனைவு, கவிதை, நாடகம் எனப் பன்முகப் படைப்பாளியாக முகம் காட்டியவர். நான் ஆய்வு மாணவராக இருந்தபோது, அண்ணன் பூமிச்செல்வம் அவர்கள்தான் அவரது நூல்களையெல்லாம் எமக்கு அறிமுகப்படுத்தி வாசிக்கச் சொல்வார். அப்போதிலிருந்து இப்போதுவரை இரமேசு பிரேதன் அவர்களின் எழுத்துகள் எமது வாசிப்புக்குள்ளும் ஆய்வுகளுக்குள்ளும் மொழிப் புலப்பாட்டுக்குள்ளும் ஊடுபாவியிருக்கின்றன. 

ஈ-ழ*ம் குறித்தும்,    பு*லி-க*ள் குறித்தும், தே*சி-ய*த்      த*லை-வ*ர் குறித்தும் பெரு மதிப்பையும் பேரன்பையும் வெளிப்படையாக அறிவித்துக் கொண்டதோடு, தம் எழுத்துகளிலும் அதைப் பதிவு செய்திருப்பார். அதன் பின்புதான் அவர் மீதும் அவரது எழுத்துகள் மீதும் எமக்குப் பெருமதிப்பும் நெருக்கமும்  ஏற்பட்டன.

அண்மையில் வெளிவந்த எமது நூல்களையும், புதியதாக வந்த ஏர் இதழையும் அனுப்பி வைத்திருந்தேன். நூல்களையும் ஏர் இதழையும் பார்த்துவிட்டுப் பெரு மகிழ்ச்சியோடு அழைத்துப் பேசினார். “தமிழர் நிலம், அவர்தம் பண்பாடு குறித்து ஆய்வுத் தரவுகளோடு செறிவான கட்டுரைகள் அடங்கிய இதழ். ஆண்டுக்கு ஈரிதழ் என்பதைக் காலாண்டிதழாகக் கொண்டுவரலாம். ஆசிரியர் குழுவிற்குப் பாராட்டும் வாழ்த்தும்” எனப் பதிவு செய்து, ஏர் இதழ் நோக்கத்தையும் இலக்கையும் கொண்ட பதிவைப் பகிர்ந்திருந்தார். 

எமது நூல்கள் அனைத்தையும் பார்த்துவிட்டு மகிழ்ந்தார்; மனதார வாழ்த்தினார். நான் தொகுத்திருந்த ‘திராவிடம் குறித்த மீளாய்வு கருத்தாடல்கள்’ எனும் புத்தகத்தைத் தற்போது படிப்பதற்காக எடுத்து வைத்திருப்பதாகக் கூறினார். 

எங்கள் இருவருக்குமான உரையாடலில் அவர் தோழர் என்றுதான் எம்மை அழைப்பார். நான் அண்ணா என்றுதான் அவரை அழைப்பேன். பொருளாதார உதவி ஏதும் எம்மிடம் அவர் கேட்டதில்லை. ஆயினும், எம்மால் இயன்ற உதவியை அவருக்கு அனுப்பி வைத்திருந்தேன். தம்பியின் சின்னதாய் ஒரு கைமாறு. தமிழில் நீங்கள் இன்னும் எழுத வேண்டும். தம்பி எப்போதும் துணை நிற்பேன் என்ற பதிவை மட்டும் அனுப்பியிருந்தேன். என்ன சொல்வது என்றே தெரியவில்லை மிக்க நன்றி தோழர் என்கிற அன்புச் செய்தியை அனுப்பியிருந்தார். 

விசுணுபுரம் இலக்கிய விருது அறிவிக்கப்பட்டவுடன் அவரது எழுத்துக்கள் பரவலாகக் கவனிக்கத் தொடங்கியது நடந்து கொண்டிருந்தது. மதுரை புத்தகக் கண்காட்சியில் அண்மையில் வெளிவந்திருந்த அவருடைய புத்தகங்களை யாவரும் பதிப்பக அரங்கில் வாங்கி வந்திருந்தேன். முகநூலில் அவரது பதிவுகள், நேர்காணல்கள் போன்றவற்றை அவ்வப்போது பகிர்ந்து வந்திருந்தேன். 

இனிமையும் நீர்மையும் தமிழ் எனலாகும் என்கிறது பிங்கல நிகண்டு. இரமேசு பிரேதனின் சொற்கள் யாவும் மரபும் நவீனமும் கலந்த இனிமையும் நீர்மையும் கொண்டிருப்பவை. அதேபோல, தனிப்பட்ட தம் வாழ்விலிருந்தும், தனித்துவிடப்பட்ட தனிமையிலிருந்தும், நோவுகளைச் சுமந்து கொண்டிருந்த உடலிலிருந்தும் வலிகளையும் வேதனைகளையும் அனுபவித்துக் கொண்டிருந்தவர். அந்த வலிமிகு நுண் உணர்வுகளையும் தம் எழுத்துகளில் பதிவு செய்திருப்பார். அதனாலேயே அவரது தமிழ் இனிமையும் நீர்மையும் வலியும் கலந்த நவீனத் தன்மையோடு முகம் காட்டியிருக்கின்றன. 

அடுத்த ஏர் இதழக்குக் கதையோ கவிதையோ அல்லது கட்டுரையோ ஏதாவது ஒன்று தர வேண்டும் அண்ணா என்று கேட்டிருந்தேன். கேட்ட மறுநாளே இரண்டு சிறுகதை அத்தியாயங்களை மின்னஞ்சலில் அனுப்பி வைத்திருந்தார். இரண்டு அத்தியாயங்களையும் படித்து முடித்து விட்டேன் அண்ணா. நாவாய்ச் சொற்களில் மிதந்து மிதந்து, கடலுக்குள் நுழைந்து மிதந்து, கழு மரங்களின் கொலைக்களம் தாண்டி, மொழியின் வாசம் நுகர்ந்தேன். தமிழ்ச் சோறு மணக்கிறது. மிக மிக அருமை அண்ணா எனப் பதில் போட்டிருந்தேன். இதயக் குறியைப் பதிலாக அனுப்பி இருந்தார். அனேகமாக அவர் கடைசியாக எழுதி அனுப்பியது ஏர் இதழுக்கானதாகத்தான் இருக்கும். ஏர் இதழில் அவரது கதைகளை வெளியிடுவதில் பெருமிதம் கொள்ள நினைத்திருந்த வேளையில், அவரைப் பற்றிய நினைவஞ்சலிக் கட்டுரையும் வெளியிட வைத்திருக்கிறது காலம். 

தமிழ்,
தனது இன்னொரு மகனை
இழந்திருக்கிறது.

வலி மிகுந்த 
இந்த வாழ்விலிருந்தும்
இந்த உலகத்திலிருந்தும்
விடுதலை அடைந்திருக்கும்
நவீனத் தமிழ் எழுத்தாளர்
இரமேசு பிரேதன்
காலத்தில் கரைந்திருக்கிறார்.
ஆயினும்,
நவீனத் தமிழின் 
காலத்தில் நிலைத்திருப்பார்.

இரமேசு பிரேதன் மறைவுக்குப்
புகழ்வணக்க அஞ்சலி.

மகாராசன்,
ஏர் இதழ் ஆசிரியர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக