முனைவர் மகாராசன் கவிதைகளுக்குள் நாம் பயணிப்பதென்பது, சங்க இலக்கியத்தில் கூறப்பட்டிருக்கும் ஐந்தினைகளுக்குள் ஓர் இன்பச் சுற்றுலா சென்று வருவதற்கு ஒப்பானதாக இருக்கிறது. தொகுப்பிலுள்ள கவிதைகளை வாசித்து முடித்ததும், ஓர் அற்புதமான பரவச உணர்வு நம்மை வந்து தொற்றிக் கொள்கிறது.
கவிதையின் பாடுபொருள் எதுவாக இருந்த போதிலும், அவருக்கான சொல் இந்த நிலத்தில் இருந்துதான் முளைத்தெழுந்து வரவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் கவிஞர்.
இந்த மண்ணையும் மரபையும் அதில் முளைத்தெழுந்து வந்த தொல்குடிகளையும் பாடுவதற்கே இந்தக் கவிதை நூலை இவர் இயற்றியிருப்பார் போலும்.
ஐந்தினைகளின் முதற் பொருளான நிலமும் பொழுதும் ஒவ்வொரு கவிதைக்குள்ளும் உயிர்த்துடிப்போடு செயல்பட்டுக்கொண்டிருப்பதை நாம் உணர முடிகிறது. கருப்பொருள்கள் நம்மோடு வந்து அளவளாவி விட்டுச் செல்கின்றன. உரிப்பொருள்களான உணர்வுகள் நம்மை வந்து எட்டுகின்றன.
கவிஞர் மகாராசனின் கவிதைகள் நேரடியாக விவரிக்கும் தன்மை கொண்டவை. பெரிய பெரிய படிமங்களோ, குறியீடுகளோ, உத்திகளோ இல்லை. ஆனால், உள்ளே உயிர்ப்பு இருக்கிறது. அவரே கூறுவது போல
பிள்ளைத் தாய்ச்சியாய்
உயிர்த்தலைச் சுமக்கின்றன
நிலம் கோதிய சொற்கள்".
நிலம் கோதிய சொற்கள்தான் அவருடையவை. வாழ்வினின் வலியைச் சொல்லும்போதும் மனிதர்களின் பாடுகளைச் சொல்லும் போதும், அவர்களின் காதலைச் சொல்லும்போதும், களிப்பை, துக்கத்தை இப்படி எதைப்பற்றிப் பாடும்போதும் மண்ணில் முளைத்தெழுந்த சொற்கள்தான் அவரிடம் வருகின்றன.
இம் மண்ணின் மைந்தர்களை, தொல்குடிகளை நாகரிக மனிதர்கள் வஞ்சிக்கிறார்கள்; சமூகம் வஞ்சிக்கிறது. கடைசியில் தெய்வமும் அவர்களைக் கைவிட்டு விடுகிறது. மண்ணுக்கும் மனிதர்களுக்குமான தொப்புள் கொடி உறவு தந்திரமாகத் துண்டிக்கப்பட்டு விட்டது.
ஒளிந்திருக்கும் தெய்வம்
எப்போதும் போலவே வெளிவருவதாய் திட்டம் இல்லை
இப்போதும்"
என்ற வரிகளில் ஒளிந்திருக்கும் ஆதங்கமும், இந்தச் சமூகத்தின் அவலமும் நம் மனதைக் கனக்கச் செய்கின்றன.
சில நல்ல வளமான கற்பனைகள் இந்தக் கவிதைத் தொகுப்பில் ஆங்காங்கே காணக் கிடைக்கின்றன. இயற்கையை மீறிய ஒரு இன்னிசைக் கலைஞன் இப்புவியில் இல்லை என்பதைக் கீழே கொடுத்திருக்கும் வரிகள் அற்புதமாகப் பதிவு செய்கின்றன.
வேர்கள் இசைத்ததில்
கிளைகள் தலையாட்டி
பூக்களைத் தூவிச் சிரிக்கின்றன
காட்டுச் செடிகள்".
நமக்கு முந்தைய மனிதர்களும் ஒரு காலத்தில் இப்படி காட்டுச் செடிகளாகத்தான் இருந்திருப்பார்கள் என்ற ஏக்கத்தை இவ்வரிகள் நம் இதயத்தில் விதைக்கின்றன. அது உண்மைதான்.
இப்போதுள்ள மனிதன்தான் முற்றிலும் இயற்கையுடனான அவனது உறவைத் துண்டித்துக் கொள்ளத் துடித்துக் கொண்டிருக்கிறான்.
மேவிய நிலத்தில்
சுற்றித்திரிந்த அவனுக்கு
கையூண்டு பிடிமண்கூடச் சொந்தமில்லை".
இவ்வாறுதான் இந்த மண்ணின் மூத்த குடிகளை இந்த அரசாங்கமும், பெரு முதலாளிகளும் வைத்திருக்கிறார்கள்.
அந்த அப்பாவி மனிதனோ பதிலுக்கு எதிர்ப்பைக்கூடத் தெரிவிக்க முடியாதவனாக இருக்கிறான். அவனுக்கு இயற்கை அன்னை அதைக் கற்றுக் கொடுக்கவில்லை.
சாவினைத் தந்த போதும்
பசி நிரம்பிய அவனது கண்களில்
அன்பின் ஒளிதான் கசிந்தது"
என்று சொல்லும்போது, இயற்கை தான் அவனுக்கு உயிரைத் திருப்பிக் கொடுக்கிறது என்பது தெரிகிறது.
ஒத்தடச் சொற்களால்
தணிந்து போகின்றன வலிகள்".
இப்படிப்பட்ட வாழ்க்கையைத்தான் அதிமேதாவித்தனமான அறிவியல் நமக்குத் தந்ததா என்று நினைக்கும்போது கோபம் வருகிறது.
ஈரவாழ்வில் துடுப்பசைத்து
மிதந்த மீன்கள்
கரை மணலில் புரண்டு புரண்டு
நிலத்தைப்பூசிக்கொண்டு
மீத வாழ்வின் பேறு பெற்று
வாய்திறந்து மாண்டு போயின".
இப்படித்தான் மனிதனும் ஆத்மார்த்த வாழ்க்கையிலிருந்து துண்டிக்கப்பட்டு கரையில் துடி துடிக்கும் மீனைப்போலவே மாண்டு போய்க் கொண்டிருக்கிறான்.
கவித்துவம் நிரம்பிய வரிகள் இந்த நூலில் ஏராளமாகக் காணக் கிடைக்கின்றன.
அணைக்கும் வித்தைகளை
மெதுவாய் சொல்லிக்கொண்டிருந்தது
இருட்டில் பெய்த சிறுமழை".
இயற்கையின் வழக்கமான சிறுநிகழ்வை இவர் படம் பிடித்த விதமே அலாதியானது. அதுவே இதை மிகப் பெரிய படிமமாக மாற்றியிருக்கிறது எனலாம். எத்தனை எத்தனை உணர்வுகளைத் தருகின்றன இவ்வரிகள் என்று பாருங்கள்.
அரூபத்தை ரூபமாகக் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகின்றன.
வெக்கைப் பொழுதின் புழுக்கத்தில்
ஒருக்களித்துப் படுத்திருந்தது
யாருமற்ற தனிமை".
இவ்வாறு இந்தக் கவிதைத் தொகுப்பின் நெடுகவும் ஆங்காங்கே உணர்வும் உயிர்ப்பும் கொண்ட கவிதைகளை எடுத்துக் காட்டிக் கொண்டே செல்லலாம்.
அழகியல் என்பது கண நேரக் காட்சிகளாக விரிந்து போகின்றவை என்று நினைத்து நிலத்தை மறந்த மனிதர்களுக்கு மத்தியில், இவருக்கோ நிலம் என்பது ஆதி அந்தமாக விளங்குகிறது. வார்த்தைகள் யாவும் மண்ணோடும் மரங்களோடும் ஒட்டி உறவாடியேதான் கவிதைக்குள் வருகின்றன.
பூ மணத்தில் மயங்கி முயங்கி
நிழலை அள்ளிப்
பருகிக் கொண்டது
உச்சி வெயில்".
இப்படி இவரால் வெயிலைக்கூடப் பாட முடிகிறது. அதனால்தான்
மனதை உலர்த்திக்கொண்டு
நெருஞ்சிப்பூவாய்
கண் சிமிட்டுகிறது
நம்மைப்பற்றிய கவிதையொன்று" என்று எழுதுகிறார்.
நிலத்தை இழந்த இனத்தின் வலியும், நிலத்திலிருந்து துண்டித்து விடப்பட்ட சம்சாரியின் வலியும் அளவிட முடியாத வேதனையுடன் இந்தத் தொகுப்பு முழுவதும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.
சிரித்திருந்த பேரினத்திற்கு
தாய்மடிகள் இரண்டிருந்தன"
என்ற கவிதை, ஆரம்பத்திலேயே எந்த நிலத்தைப் பற்றி பாடுகிறது என்பதை யாவரும் உணர்ந்து கொள்ளலாம். முடிவில் முத்தாய்ப்பாக
கால்தடம் பதியக் காத்திருக்கிறது
ஒரு நிலம்"
என்று முடிகிறது.
மண்ணை இழந்தவர்களின் வலி ஒவ்வொரு வார்த்தையிலும் உள்ளே காணக்கிடைக்கிறது உண்மைதான்.
அகதி வாழ்வின் வலியை
இங்குள்ள சனங்களெல்லாம்
கூடும் வீடும் இழந்து
இப்போதுதான் உணர்ந்து பார்க்கிறது"
என்ற விரக்தி ஒரு புறம்,
"தாயகக் கனவு சுமந்த இனத்தை
கொத்துக் கொத்தாய் பறிகொடுத்த
நிலம் எனும் தாயவள் வலியை
எம் தாய்களே அறிவர்"
என்ற வேதனை மறுபுறம்,
"சம்சாரிகளாய்ப் பிறந்ததன் வலி சாவிலும் கொடியது"
என்ற அவலம் ஒரு புறம் என, ஆசிரியர் வழி நெடுகிலும் ஒரு இனம் எப்படி மண்ணிலிருந்து அதிகார வர்க்கத்தாலும், அரசியல்வாதிகளாலும், கார்ப்பரேட்டுகளாலும் துண்டிக்கப்பட்டது என்பதை வலியோடு பதிவு செய்திருக்கிறார்.
அள்ளிக் கொடுத்த கைகளெல்லாம்
பருக்கைகளுக்காக் கையேந்தி நிற்கிறது"
என்ற தாளாத சோகம் இப்போது இந்த இனத்தின் வீழ்ச்சியாய்க் கண்முன்னே சித்தரிக்கப்படுகிறது.
இப்படித்தான் இந்தக் கவிதைத் தொகுதி முழுக்க மண்ணில் முளைத்தெழுந்த கவிதைகள் வயலில் விளைந்த நாற்றுக்களாக எங்கும் பரவி நிற்கின்றன.
எடுத்தியம்புவது என்றால், ஏறத்தாழ எல்லா வரிகளையும் பேச வேண்டும். அதை கவிஞரின் வரிகளிலேயே சொல்வதானால்
முளைகட்டிய விதைச் சொற்கள்
வெண்முகம் காட்டிச் சிரித்தன"
இந்தக் கவிதைத் தொகுப்பை முழுவதும் வாசித்து முடிக்கும் போது இப்படி ஏராளமான முளை கட்டிய விதைச் சொற்கள் நம் இதயத்திற்குள்ளும் முளைக்க ஆரம்பித்து விடுகின்றன.
கவிஞருக்கு என் அன்பார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கவிஞர் தங்கேஸ்வரன்,
தலைமை ஆசிரியர்,
அரசு மேல்நிலைப்பள்ளி,
தேனி மாவட்டம்
***
நிலத்தில் முளைத்த சொற்கள்,
மகாராசன்
யாப்பு வெளியீடு,
பக்கங்கள் - 112,
விலை: ரூ100/-
(அஞ்சல் செலவு உட்பட).
புத்தகம் தேவைக்கு
பேச : 9080514506