வியாழன், 27 ஜூன், 2024

சொற்களை விளைவிக்கும் கவிதை சம்சாரி - மு. மகேந்திர பாபு


பண்பாட்டு ஆய்வாளரும், எழுத்தாளரும், ஆசிரியருமான 'ஏர்' மகாராசன் அவர்களின் சமீபத்திய படைப்பு 'நிலத்தில் முளைத்த சொற்கள்' என்ற தலைப்பிலான புதுக்கவிதை நூல். 

கடந்தாண்டில் வெளியான அவரது 'மாணவர்கள் சமூக உதிரிகளாகும் பேராபத்து' என்ற ஆய்வு நூல் பலராலும் பாராட்டையும், வரவேற்பையும் பெற்றது. இவ்வாண்டில் அவரது மனவயலில் விளைந்து மிகச்சிறந்த அறுவடையைத் தந்து கொண்டிருக்கிறது 'நிலத்தில் முளைத்த சொற்கள்' நூல். மொத்தம் 55 கவிதைகள் இத்தொகுப்பில் உள்ளன.


ஒவ்வொரு கவிதையும் மண்ணையும், மக்களையும் பாடுபொருளாகக் கொண்டு, நம் பண்பாட்டினைப் பறைசாற்றுகின்றன. பல புதுமையான சொல்லாடல்கள் நம் சிந்தைக்கு விருந்தாக அமைகின்றன. 


'மண்மீட்டிய வேர்களின் இசை' என்ற அவருடைய ஒரு பதத்தை மட்டும் வைத்துக்கொண்டு ஒரு நாள் முழுவதும் யோசித்துக்கொண்டிருந்தேன் என அணிந்துரையில் அகமகிழ்ந்து எழுதியிருக்கிறார் பாடலாசிரியர் யுகபாரதி.


இவரது கவிதைகள் வெவ்வேறு பாடுபொருட்களையும் கருப்பொருட்களையும் கொண்டிருக்கின்றன என்றாலும், எல்லாக் கவிதைகளும் ஏதோ ஒரு வகையில் நிலத்தைத்தான் திரும்பத் திரும்ப நினைவுபடுத்திக் கொண்டே இருக்கின்றன என்கிறார் பேரா.முனைவர்.அரங்க மல்லிகா அவர்கள்.


இத்தொகுப்பிலுள்ள ஒவ்வொரு கவிதைகளும் நம் மனதை அசைத்துப் பார்க்கின்றன. ஆறாவது கவிதையாக இடம்பெற்றுள்ள கவிதையின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் நம்மை வசப்படுத்துகின்றன.


"நீரிலே நீந்தி நீந்தித் திரிந்து

ஈர வாழ்வில் துடுப்பசைத்து

மிதந்த மீன்கள்

கரை மணலில் புரண்டு புரண்டு

நிலத்தைப் பூசிக்கொண்டு

மீத வாழ்வின் பேறு பெற்று

வாய் திறந்து மாண்டு போயின."


"செங்குளத்து நீரில் 

நீந்தித் திரிந்த மீன்கள் 

சுள்ளென்ற வெயில் பொழுதினில் கரையில் துள்ளி விழுந்து, நிலத்தைப் பூசிக்கொண்டு 

மீத வாழ்வின் பேறுபெற்று வாய்திறந்து மாண்டு போயின" என்ற வார்த்தைகளில் கவிஞர் நம்மைத் தம் வசமாக்குகிறார். கரையில் விழுந்த மீன் சுவாசிக்க இயலாது இறப்பதைத் தற்குறிப்பேற்றமாக்கிப் படைத்திருப்பது பாராட்டிற்குரியது.


வேளாண்குடிகளின் அவல நிலையை அழகாகப் படம்பிடித்துக் காட்டுகிறது ஒரு கவிதை.

"நிலத்தோடு 

தோய்ந்தும் தேய்ந்தும்

உழைப்புத் தடங்களால்

புடம்போட்ட பாதங்கள்

வெறும் பாதங்கள் அல்ல.


உழுகுடிப் பாதங்களின் கொப்புளங்கள்

நிலமெனும் ஆத்மாக்களின்

அழுகைத் துளிகள்".

வேளாண் தொழில் செய்து உலகைக் காக்கும் கடவுளாக உள்ள மக்களின் பாதங்களை இந்தளவிற்கு எந்தக் கவிஞனும் படைத்திருப்பானா எனத்தெரியவில்லை. அவர்களின் அவலங்களை உணர்ந்தவர்களால் மட்டுமே இவ்வாறு எழுத முடியும். மகாராசன் அதை அனுபவித்தவர் என்பதால், கவிதை முழுவதும் விவசாயிகளின் வேதனையைப் படரவிட்டிருக்கிறார்.


"நிழலடியில் 

சிந்திப் பரவிக் கிடந்தன 

புங்கையின் பூக்கோலங்கள்".

வார்த்தைகளின் அணிவகுப்பு அவ்வளவு நேர்த்தியாக, காட்சிப்படுத்துகிறது நம் மனதில் கவிதையை.


சம்சாரி வாழ்க்கையைச் சொல்லும் இக்கவிதை  கண்களை ஈரமாக்குகிறது.

"ஊருக்குச் சோறு போட

உழைத்த சனமெல்லாம்

ஒரு வாய்ச்சோற்றுக்கும்

ஊரிடம் கையேந்தி நின்றபோது

உக்கிப் போனது நிலம்.


சம்சாரிகளாய்ப் பிறந்ததின் வலி

சாவிலும் கொடிது"

இயற்கையின் அற்புதப் படைப்புகளான மலையை,பறவைகளை, ஆறுகளை, புயல் மழையின் சேதத்தைப் பாடுபொருளாக்கிச் செல்கின்றன சில கவிதைகள். தமிழ்க்குடியை, காப்பியத்தைத் தொட்டுச் செல்கின்றன சில கவிதைகள். கவிதை நெடுகிலும் வேளாண்குடிகளின் வாழ்க்கை விரிந்து கிடந்து வலியை நமக்கு உணர்த்துகின்றது.


இத்தொகுப்பில் என்னை மிகவும் ஈர்த்த கவிதை ஒன்று. அதன் சொல்லாடல்களில் சொக்கிப்போனேன். குறி சொல்லும் குடுகுடுப்பைக்காரனின் பேச்சை இம்மியளவும் மாறாது அப்படியே படைத்துள்ளார் கவிஞர். தன் இளம்பருவத்தில் கண்ட அந்தக் காட்சியும் வார்த்தைகளும் அவரது மனதில் பசுமரத்தாணியாக அமர்ந்துள்ளது. இதோ அவரின் வார்த்தைகள்...


"காடு வெளஞ்சிருக்கு;

வீடு நெறஞ்சிருக்கு.

மக்களப் பெத்த மகராசிக்கு

மனசுல கொறயில்ல.

சாமி காக்காட்டியும்

பூமி காப்பாத்தும்.

செத்துப்போன பெண்புள்ள

சாமியாட்டம் துணையிருக்கா.

மவராசனா ஓம்புள்ள இருந்தாலும்

ஒன்னோட மருவாதய விட்டுத்தரமாட்ட.

ஆக்கித்தான் போடுவ

அடுத்த வசுறு பசியாத்த.

ஒன்னோட கை நனைக்க

ஒரு வாசலும் மிதிக்க மாட்ட.

ஒக்காந்து சோறு திங்க

ஓம்புள்ள அழைச்சாலும்

ஒரு போதும் போகமாட்ட... "

என நீளும் இந்தக் கவிதையின் சொல்லாடல்கள் நம்மை யாமத்துக்கே அழைத்துச் செல்கிறது. நாய்களின் குரைப்பொலிகளுடன் ஊடாக குறிகாரனின் குடுகுடுப்பைச் சத்தமும் செவிப்பறையில் ஒலிக்கிறது.


கவிதைகளும் அதற்கான ஓவியங்களும், முன்னட்டை ஓவியமும் புத்தகத்தை நம் நெஞ்சோடு சேர்த்தணைக்கச் செய்கின்றன. 'நிலத்தில் முளைத்த சொற்கள்' ஒவ்வொன்றும் நம் நெஞ்சில் மாற்றத்தைத் தூண்டச் செய்கின்றன. அதுதானே படைப்பாளனின் வெற்றி. அந்த வகையில் கவிஞர் மகராசனின் 'நிலத்தில் முளைத்த சொற்கள்' கவிதை நூல் மிகப்பெரிய வெற்றியைக் கண்டுள்ளது. சொற்களை விளைவிக்கும் கவிதை சம்சாரி இன்னும் பல படைப்புகள் தர வாழ்த்துகள்.


கட்டுரையாளர்

மு.மகேந்திர பாபு, 

தமிழாசிரியர், மதுரை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக